Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேர்மை ! தூய்மை! தாய்மை!- நிறைவுப் பகுதி 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2013 | , , ,

மண்ணில் என்ன  தோன்றக்கூடும் 
மழை இல்லாதபோது 
மனிதனோ மிருகமோ 
தாயில்லாமல் ஏது?

“பாலினை நினைந்தூட்டும் தாயினை” என்று தொடங்கும்  ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. பெற்ற பிள்ளைக்கு எப்போது பசிக்கும் என்று வாயில்லாத குழந்தை சொல்ல முடியாத தருணத்தை தானே உணர்ந்து பாலூட்ட ஓடிவருபவள் தாய் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே அந்த  வார்த்தைகள். 

பசியால் துடித்த தனது  குழந்தைகளின் வறுமையைக் காணச் சகிக்காத தாய் ஒருத்தி தான் பெற்ற ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசி எரிந்து கொன்றுவிட்டு தானும் தன் வாழ்வை  முடித்துக் கொண்டதாக நல்ல தங்காள் கதை சொல்கிறது.  பெண் பிள்ளை பிறந்தால் கள்ளிப் பாலை ஊற்றி சாகடித்ததாக சில கரிசல்காட்டுக் கருத்தம்மா காவியங்கள் சில காலத்துக்கு முன்பு ஊடகங்களில் ஒளிபரப்பாயின.

 உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக் 
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

இப்படி சில இயல்பான தாய்மைக்கு எதிர்மறையான தாய்களை  இக்காலம் சொல்லிக் காட்டுகிறது. குப்பைத் தொட்டிகளில் குழந்தைகள் என்கிற தலைப்புச் செய்திகள் வறுமைக்கு,  தாய்மையையும் வெல்லும் சக்தி உண்டென பறைசாற்றுகின்றன.  

அதே போல் ஒரு எதிர்மறையான தாயின் வரலாறு இதோ ஒரு வகை கெட்ட தாயானாலும் அவள் வார்த்தையின் வலிமையை  சுட்டிக் காட்டுவதற்காகவும் நல்லவையே வாழும் அல்லவைகள் அழியும் என்று நிலைநிறுத்தவும்  புகாரியிலே ஒரு வரலாறு சொல்லப் படுகிறது. 

பனூ இஸ்ராயில் சமுதாயத்தைச் சேர்ந்த ஜூரைஜ் என்ற ஒரு மனிதர் எந்நேரமும் இறைவனையே தொழுது கொண்டிருந்தார். அதிலேயே ஆனந்தம்  கண்டார். அப்படித் தொழுவதர்காகவே ஒரு ஆசிரமும் அமைத்து இருந்தார். ஒருநாள் தன் மகன் தொழுது கொண்டிருந்ததைப் பாரதத்  அவரது தாயார் ஜூரைஜை பெயர் சொல்லி அழைத்தார். ஆனால் தொழுகையில் இருந்த ஜூரைஜ் தன் தாய்க்கு பதில் கூற மறுத்துவிட்டார். “ நான் ஏன் தாய்க்கு பதில் அளிப்பதா அல்லது தொழுவதா?” என்று மனதிற்குள் கேள்வி எழுப்பிக் கொண்டார். பெற்ற தாயாகிய தான் அழைத்தும் பதில் அளிக்காத மகன் மீது தாய்க்குக் கோபம வந்தது. அந்தக் கோபத்தில் “ இறைவா! விபச்சாரி ஒருவளின் முகத்தில் இவன் விழிக்கிற வரை என்  மகனுக்கு நீ  மரணத்தைத் தாராதே !” என்று வேண்டினாள்; சாபமிட்டாள். 

ஒருநாள் ஜூரைஜ் தனது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் இவரை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்என்று கூறி உள்ளே  நுழைந்து அவருடன் தகாத உறவு கொள்ள அழைத்துப் பேச முயன்றாள் ; முனைந்தாள் .அவர் இணங்க மறுத்துவிட்டார். ஆகவே, அவள் ஊர் ஆடுமேய்ப்பவனிடம் சென்று அவனிடம் தன்னை ஒப்படைத்தாள். அதன் காரணமாக் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். 

இவ்விதம் பிறந்த குழந்தையை ஊரார் மத்தியில் கொண்டுவந்து பொய்யாக இந்தக் குழந்தை ஜூரைஜூக்குப் பிறந்தது என்று கூறினாள். இவளது இந்த பொய்யை உண்மை என்று நம்பிய மக்கள் வெகுண்டெழுந்து அவரது ஆசிரமத்தை தகர்த்து உடைத்து அவரை இழிவாகப் பேசினார்கள். 

இதன்பின் ஜூரைஜ் இதனை இறைவனிடம் முறையிடவேண்டுமென்று உளூச் செய்து தொழுதார். தொழுத கையோடு தனக்கு பிறந்ததாக பழி சொல்லப்பட்ட  பச்சிளங் குழந்தையிடம் வந்தார். குழந்தையை நோக்கி “ உண்மையில் நீ யாருடைய குழந்தை ? என்று கேட்டார். அந்தக் குழந்தை வாய் திறந்து பேசியது “ நான் ஒரு ஆடுமேய்ப்பவனுக்குப் பிறந்த குழந்தை. நீங்கள் என் தகப்பன் என்பது தவறு  ” என்று கூறியது. மக்கள் மனம் திருந்தினர். 

ஒரு இயல்புக்கு மாறான எதிர்மறையான தாய் இடும் சாபம் பலிக்காது என்பதற்கு இது உதாரணம். தாய்மை ஒரு மென்மையாக இருக்கும்வரைதான்  அதற்கு மேன்மை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. .( புகாரி பாகம் 3 / 2482 )          

சுலைமான் நபி அவர்களின் அரசவையிலே வந்த ஒரு வழக்கும் அதற்கான தீர்ப்பும் வரலாற்றின் ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.  

இரண்டு பெண்கள் ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்க்க  சுலைமான் நபி அவர்களிடம்  வருகிறார்கள். அவர்களில் ஒருத்தி சொல்கிறாள்: ‘இவளும் நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம், எனக்கு ஒரு மகன் பிறந்தான், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். ஆனால் ஒரு ராத்திரி அவளுடைய குழந்தை இறந்துவிட்டது. அதனால், நான் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் செத்த குழந்தையை என் பக்கத்தில் வைத்து விட்டு என்னுடைய குழந்தையை அவள் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான் தூங்கியெழுந்தபோது என் பக்கத்தில் செத்த குழந்தையைப் பார்த்தேன், பார்த்ததுமே அது என் குழந்தை அல்ல என்பது எனக்குத் தெரிந்தது’ என்கிறாள்.

உடனே இன்னொருத்தி: ‘இல்லை! இல்லை! உயிரோடுள்ள குழந்தை என்னுடையது, செத்த குழந்தைதான் அவளுடையது!’ என்று சொல்கிறாள். ஆனால் அந்த முதல் பெண்: ‘இல்லவே இல்லை! செத்த குழந்தை உன்னுடையது, உயிரோடுள்ள குழந்தை என்னுடையது!’ என்று சொல்கிறாள். இப்படியே அந்த இரு பெண்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நபி சுலைமான் என்ன செய்யப் போகிறார்? இரு தாய்களுக்குள் உரிமைப் போராட்டம். 

ஒரு கூர் வாளை கொண்டுவரச்  சொல்கிறார். அதைக் கொண்டு வந்ததும் ‘உயிரோடுள்ள குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக இந்தப் பெண்களிடம் கொடுத்துவிடு’ என்று சொல்கிறார்.

உடனடியாக அந்த உண்மையான தாய்,  ‘ஐயோ, வேண்டாம்! தயவுசெய்து குழந்தையைக் கொல்ல வேண்டாம். அவளுக்கே கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி அழுகிறாள். ஆனால் இன்னொருத்தியோ ,  ‘எங்கள் இரண்டு பேருக்குமே அந்தக் குழந்தையைக் கொடுக்க வேண்டாம்; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள்’ என்று தீர்ப்புக்கு சம்மதிக்கிறாள். 

அவர்கள் பேசி முடித்ததும்  சுலைமான் நபி   அவர்கள் பேசுகிறார்: ‘குழந்தையைக் கொல்லாதே! . அந்த முதல் பெண்ணிடம் கொடுத்துவிடு! . அவள்தான் அந்தக் குழந்தையின் உண்மையான தாய்’ என்று சொல்கிறார். உண்மையான தாய் குழந்தையின் மீது உயிரையே வைத்திருக்கிறாள், எங்கே யாரிடம்  இருந்தாலும் தன் குழந்தை உயிருடன் நலமுடன்  இருந்தால் போதுமென்று நினைக்கிறாள் உண்மையான தாய். அதனால் குழந்தையைக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக மற்றவளிடமே கொடுத்துவிடும்படி சொல்கிறாள்; இதை வைத்துத்தான் சுலைமான் நபி அவர்கள்  உண்மையான தாய் யார் என்பதைத் தெரிந்துகொள்கிறார். 

ஒரு உருவகக் கதை இருக்கிறது..

ஒரு தாயின் திருவயிற்றில் குடியிருந்த ஒரு குழந்தையிடம் நீ நாளை பூமியை தரிசிக்கப் போகிறாய் என்று இறைவன் சொன்னான். .

குழந்தை அழுதுகொண்டே கேட்டது. நான் எப்படி அவர்களோடு பேசுவேன்?

உனக்கு பேச்சைக் கற்பிப்பதற்காக ஒரு தேவதையை நான் ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறேன் என்றான் இறைவன். 

நான் எப்படி உங்களை வணங்குவேன்?

அந்த தேவதை உனக்குச் சொல்லித் தருவாள்.

நான் நல்லனவற்றை எப்படிக் கற்றுக் கொள்வேன் ?

அதையும் அந்த தேவதையே உனக்குக் கற்றுத் தருவாள்.

நான் துன்பப்படும்போது என்ன செய்வேன்?

அந்த தேவதை உன் அருகிருப்பாள். துன்பம் தீர்ப்பாள்.

நான் எப்படி அந்த தேவதையைக் கண்டு கொள்வேன்?

பூமியில் அந்த தேவதையின் பெயர் உம்மா /அம்மா.

ஒரு நல்ல வெயில் காலம். ஒருவன் வேலை தேடி நேர்காணலுக்குப் போய் களைத்துப்போய் வீட்டுக்கு வருகிறான். 

அப்பா கேட்கிறார் “வேலை கிடைத்ததா?”

தம்பி கேட்கிறான் “எவ்வளவு சம்பளம்?”

தங்கை கேட்கிறாள் “ட்ரான்ஸ்போர்ட் உண்டா?”

அக்கா கேட்கிறாள் “போனஸ் உண்டா?” 

வியர்வை வழியும் அவன் முகத்தை தனது புடவைத்தலைப்பால் துடைத்துவிட்டு அவனுக்கு குடிக்க குளிர்ந்த தண்ணீர் தந்து தாய் கேட்கிறாள் “சாப்பிட்டியா?”

சுகமான சுமையை 
இடம் மாற்றினாள் 
தாய்...
பிரசவத்துக்குப் பின் 
வயிற்றில் இருந்து 
இதயத்துக்கு. 

கட்டுரை நிறைவடைகிறது. தாய்மை நிறைவடையாது. மீண்டும் சிந்திப்போம்.; சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.   

முத்துப் பேட்டை P. பகுருதீன்.B.Sc.,

9 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Motherhood is an ideal symbol of selfless love.

It has no equivalent in the world.

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا‎ !!!

My Lord! bestow on them (parents) thy Mercy even as they cherished me in childhood.


Thanks and best regards,



B. Ahamed Ameen from Dubai.

http://www.dubaibuyer.blogspot.com




m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தாய்'மை' க்கு நிகரான பெண்'மை' வேறு எதுவுமில்லை !

sabeer.abushahruk said...

தாய்மையைப் பற்றி உயர்வான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொண்ட காக்கா அவர்களுக்கு நன்றியும் துஆவும்.

கண்ணியம் மிக்கது பெண்மை. எண்ணியும் பார்த்து எடையிடவியலாத புண்ணியம் மிக்கது பெண்மை. உன்னையும் என்னையும் உள்ளிலே சுமந்து உயிரிலே உணர்ந்து, ஈன்றெடுத்து, கணக்கிடவியலாத கூலித்தொகை கடனாய் நம்மீது நிலுவையில் நிற்க அதைத் தள்ளுபடி செய்த தியாகத்தின் திருவிளக்கு பெண்மை. விண்ணையும் மண்ணையும் உலகத்தில் படைத்தவன் தன்னையும் படைத்து தரணிக்கத் தரவிழைந்து தனக்குப் பதிலாக அன்னையைப் படைத்தான். அவன் தன் பண்புகளாம் கருணையையும் இரக்கத்தையும் அன்பையும் அருளையும் அவளுள் விதைத்தான்; அன்னையென அமைத்தான்.

ஆண் ஆணாகப் பிறந்து ஆணாக வளர்ந்து ஆணாகவே மரிக்கின்றான்; பெண்னோ பெண்ணாகப் பிறந்து பிறர்க்காக வாழ்ந்து, நிலவாக வளர்ந்து ஜொலித்தவள் பிறையெனவேத் தேய்ந்து, தாயாகத் திகழ்ந்து, சாகாமல் இருக்கின்றாள்; சிந்தையில் ஜொலிக்கின்றாள்.

எவர் மனத்திலாவது அவர்தம் அம்மா இறந்து விட்டிருக்கிறாளா? வேலை நிமித்தமோ வேறுவேறு தேவைக்கோ வீட்டை விட்டு வெளியேச் சென்றவனுக்கு வீடே மையப்புள்ளி என்பதுபோல, இறந்தாலும் இருந்தாலும் எல்லோருக்கும் மையப்புள்ளி அம்மா அல்லவா? இறக்காமல் இருக்கும் அம்மா நம் வழியெல்லாம் வாய்க்கும் வாச மலர்த் தோட்டமெனில் இறந்து நம் இதயத்தில் இருக்கும் அம்மா பாலைவனச் சோலை அல்லவா?

இறுதிப் படுக்கைக்குப் பின்னர் வாய்க்கும் இறுதி இருப்பிடத்தைப் போன்றது வாழ்க்கையும் அதன் வழிவகைகளும்; ஒற்றையானது; நெருக்கடியானது. அம்மா என்னும் உணர்வே நமக்கு எதையும் இலகுவாக்கித் தரும்.

அம்மா இறந்துவிட்டால், ஒரு மனிதனுக்காக இறைவனிடத்தில் யார் வேண்டினால் அது நிறைவேறும் சாத்திம் கூடுதலாக உள்ளதோ அவர் இறந்துவிட்டதாகவே அறியப்படுகிறது. உலகில் மனிதன் யாருக்குக் கூடுதலாகக் கடமைப்பட்டிருக்கிறான் என்றொரு கேள்வியை மனிதப்புனிதர் ரசூல் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அம்மாவுக்கு என்று பதில் தர, அடுத்தடுத்து யார்யாருக்கு என்று கேட்கப்பட்டபோதெல்லாம் மூன்று முறையும் அம்மாவுக்கே என்று சொன்னதாக நபிவழி அறிவிப்புகள் உள்ளன. ஒரு சமுதாயத்திற்கே நல்வழி காட்டியவரின் அறிவிப்பைவிட கூடுதலாக நான் ஒன்றும் சொல்லிவிடவியலாது அம்மாவின் சிறப்புகளை. அத்தகைய அம்மா, பெண்மை எனும் தன்மைக்குக் கிரீடம்; பெண்களின் வளர்ச்சிமாற்றங்களின் உச்சகட்டச் சிறப்பு; தியாகமெனும் பண்பை படம் வரைந்து பாகங்களைக் குறித்ததுபோல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நேரலை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாய் பற்றிய தலையாய கருத்துக்கள்.

Ebrahim Ansari said...

நண்பர் பகுருதீன் அவர்களின் என்றென்றும் நினைவில் நிற்கும் ஆக்கம். பாராட்டுக்கள். அடுத்தது என்ன? எப்போது?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பொய் இருக்க வாய்ப்பே இல்லாததால் தான் தாயுடன் மை சேர்ந்து என்றுமே அதனுடன் தாய்மையாக இருந்து வருகிறது.

வழியில் மழையில் நனைந்து வீடு வந்தடைந்த பள்ளிச்சிறுவனை பார்த்து வீட்டினர் அனைவரும் ஏசினர். ஆனால் பெற்றவளோ அந்த மழையைப்பார்த்து ஏசினாள்.

எங்கோ வாங்கிய‌ அடிக்கும், வ‌லிக்கும், இவ‌ளிட‌மே
எல்லாவ‌கை ம‌ருந்தும் இருக்கும்.

அவ‌ள் எப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ளாக‌ இருப்பினும் எப்ப‌டித்தான் இந்த‌
பிள்ளைகளுக்கு ம‌ன‌ம் வ‌ருகிற‌தோ அவ‌ளை த‌ண்டிக்க‌, வ‌ஞ்சிக்க‌???

அழ‌கிய உலக எடுத்துக்காட்டுக‌ளுட‌ன் இஸ்லாமிய‌ வ‌ர‌லாற்று சிற‌ப்பு மிக்க‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் இணைத்து இங்கு த‌ர‌ப்ப‌ட்ட‌தே இவ்வாக்க‌த்தின் த‌னிச்சிற‌ப்பு. வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ர‌ரே.....

Yasir said...

தாய்மை என்றொரு அழியாமையை அழகாக எடுத்துக் கூறி நினைவூட்டிய சகோ.முத்துப் பேட்டை P. பகுருதீன்.B.Sc., வாழ்த்துக்களுடன் துவாக்களும்..நிச்சயம் மற்றொரு ஆக்கத்திற்க்காக காத்திருப்போம்

Unknown said...

Dear brother Mr. Sabeer AbuShahruk,

Your feedback and additional thoughts about motherhood well complements this article.

I don't know if there is any article from you in addition to your usual exxcellent poetic lines.

Jazakkallah khairan.

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Ebrahim Ansari said...

நண்பர் பகுருதீன் அவர்களின் ஏற்புரை என் மூலமாக

அன்பார்ந்த அதிரை நிருபர் வலைதளத்தின் அதிரை சொந்தங்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னுடைய ஆக்கங்களுக்குத் தாங்கள் அனைவரும் தரும் ஊக்கத்துக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த புலவர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் போதுநோக்குடையோர்களும் பண்நூலாசிரியர்களும் உலவும் இந்த அமைப்பில் எனது ஆக்கங்களுக்கும் இடம் தந்துள்ள உங்களின் நெறியாளர் உட்பட அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

எனது நீண்ட கால நண்பர் அவர்களால் பெற்ற இந்த அறிமுகம் தொடர வல்ல அல்லாஹ் துணை இருப்பானாக!

வஸ்ஸலாம். ஜசக் அல்லாஹ்.

பகுருதீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு