Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பட்டப்பெயர்கள் 29

அதிரைநிருபர் பதிப்பகம் | May 07, 2014 | , , ,


சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பட்டப்பெயர் வைத்துக்கொள்வதில் ஒரு தனி இன்பம். நாளடைவில், பட்டப்பெயருக்கு உரியவர், வாலிபத்தையும் வயோதிகத்தையும் அடைந்த பின்னரும், அந்தப் பட்டப்பெயரே அவருக்குரிய nom de plume ஆகிவிட்டது.

கறுப்புச் சரக்கு, பூனைக் கண், புலிக் குட்டி, கீறிக் குட்டி, இடுப்புக் கட்டி, கஞ்சன், பொட்டியப்பா, சுண்டைக்கா, பிச்சம்மா, என்றெல்லாம் ஆகிவிட்டிருக்கும் பட்டப்பெயர்கள், பையன்கள் அவரவருக்குச் சிறு வயதில் சூட்டிக்கொண்டவை.  நாளடைவில், அவையே வீட்டுப் பெயர்களாகவும் ஆகிவிட்டதை நாம் அறிய முடிகின்றது.  இப்படி, விளையாட்டாக அழைத்துக்கொண்ட பட்டப்பெயர்கள், அவரவருக்குரிய அடையாளப் பெயர்களாக (Identity names) மாறிவிட்டிருப்பதை நாம் அறியலாம்.

“ஒருவரையொருவர் பட்டப்பெயர் கூறி அழைக்காதீர்” என்பது நபிமொழி. இந்த நபிமொழிக்குக் கட்டுப்பட்டு, தகவல் பரிமாற்றம் செய்ய முனையும்போது, என்னால் முடிந்த அளவுக்குப் பட்டப்பெயர் கூறாமல் ஆளைக் குறிப்பிட முயன்ற பலபோது, நான் தோல்வியையே தழுவியுள்ளேன்.  இறுதியில், வேறு வழியின்றி, பட்டப்பெயருடன் கூறியபோதுதான், “அப்பாடா, இதைச் சொல்லவா இந்தச் சுற்றி வளைப்பு?” என்ற எதிர்த் தரப்புக் கேள்வியுடன் தகவல் முற்றுப் பெறும்.
  •  நமதூர் ‘காழியார் தெரு’வைச் சேர்ந்தவர் மர்ஹூம் அஷ்ரப் அலி ஆலிம்.  சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனவர்.  அவருடைய தகப்பனாரும் ‘ஆலிம்சா’தான். அவர் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களிடத்தில் ஓர் அறியாமைக் கருத்து நிலவிற்று.  அதாவது, தொழுகையில் ‘தப்பத் யதா’ சூரத் ஓதக் கூடாதாம்!  காரணம், அந்த சூராவில் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூலஹபைச் சபித்து இறைவசனம் அமைந்துள்ளதாம்.  அதனால், நபியவர்கள்கூட, அந்த சூராவைத் தொழுகையில் ஓதுவதில்லையாம்.  இந்தப் பாமரத் தனமான கருத்தைக் கேள்வியுற்ற அந்த ஆலிம்சா, மடத் தனமான கருத்தை உடைத்தெறிவதற்காக, அடிக்கடித் தொழுகையில் அந்த சூராவையே ஓதுவாராம்.  நாளடைவில் அவருடைய சொந்தப் பெயர் மறைந்து, ‘தப்பத்யதா’ ஆலிம்சா என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டதாம்!
  • சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)வில் “மாலிக்கி யவ்மித் தீன்” என்ற வசனத்தை, “மலிக்கி யவ்மித் தீன்” என்று ஓதுவதும் தவறாகாது; பொருளும் மாறுபடாது.  இது கிராஅத்தின் இன்னொரு வகை.  இதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, நம்மூர் ஆலிம்சா ஒருவர், “மாலிக்கி” என்பதை “மலிக்கி” என்றே ஓதுவார்.  இது பையன்களுக்குப் புதுமையாக இருந்ததால், அந்த ஆலிம்சாவுக்குப் பையன்கள், “மலிக்கி ஆலிம்சா” என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
  • எங்கள் சிறு வயதில் மரைக்கா பள்ளியில் பெரும்பாலும் கோனா வீட்டு ஆலிம்சாவே இமாமாக நின்று தொழவைப்பார். அவர் ஓதுவது, முதல் வரிசையில் நிற்பவர்களுக்குக்கூட விளங்காது!  அப்படியான முணுமுணுப்பு ஓதலைக் கேட்டு, அந்த ஆலிம்சாவுக்கு, “முணுமுணு ஆலிம்சா” என்று பையன்கள் பேர் வைத்துவிட்டார்கள்.
  • சுமார் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இன்றுள்ள இயக்கங்களின் தெருமுனைப் பிரச்சாரமெல்லாம் வருவதற்கு முன், நமதூருக்கு பயான் செய்வதற்கு வெளியூரிலிருந்து ‘தெரு பயான் ஆலிம்சா’ ஒருவர் அடிக்கடி வருவார்.  பேச்சாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘ஸ்டைல்’ உண்டல்லவா?  அதுபோல் இவருக்கும் உண்டு.  ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக அழுத்தமாகவும் நீட்டியும் பேசுவார்.  ‘ரொம்ப மோசம்’ என்பதை, ‘ரொம்...ம்...ம்...ம்...ம்...ப மோசம்’ என்று அழுத்திக் கூறுவார்.  கிணற்றில் வாலியை விட்டுத் தண்ணீர் இறைப்பதை ஓர் இசையாகவே வெளிப்படுத்துவார்.  ‘பிசுமில்லா... பிசுமில்லா...  பிசுமில்லா... வாளியிலே தண்ணீர் அள்ளி...’ எனும்போது, அவர் முகத்தில் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கு கொப்பளித்து நிற்கும்.  ‘இன்றைக்கு அதெல்லாம் வரவரக் கொறஞ்சு போச்சு’ என்று சொல்வதை அவர் வாயிலாகக் கேட்பதற்கே கொடுத்துவைக்கணும்.  வரவர என்பதை நீட்டி, ‘வரவர வரவர வரவர வரவர வரவர வரவர வரவர ரொம்ப மோசமாப் போச்சு’ என்று rhythimical ஆக அவர் வெளிப்படுத்தும் பாங்கே தனி.  இறுதியில் சுருதி குறையும். அதனால், இந்த ஆலிம்சாவுக்கு, ‘வரவர ஆலிம்சா’ என்று பெயர் வைத்துவிட்டார்கள் நம் பையன்கள்.
  • எமது அண்டை வீட்டுச் சூழலில் குடும்பத் தலைவி ஒருவர் இருந்தார்.  மிக நல்ல பெண்மணி.  அவர் பேசும்போது மெதுவாகவே பேசுவார்.  பெண்களுக்குள்ளே ‘ஸலாம்’ கூறுவது அருகிப் போயிருந்த அந்தக் காலத்தில், அந்தப் பெண்மணி, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முகமன் கூறியே பேச்சைத் தொடங்குவார். அதனால், அந்தப் பெண்மணிக்கு நம் இளசுகள், அப்பெண்மணி கூறிய முகமனையே பட்டப் பெயராக்கி, “அஸ்ஸலாமு அலைக்கும்’ வந்துட்டுப் போனாஹ” என்று கூறித் தகவல் அறிவிப்புச் செய்வார்கள்.    
  • இலங்கை நண்பர் ஒருவர், ஒரு செய்தியைக் கூறினார்.  புத்தளம் என்ற ஊரில் ஒரு பள்ளிவாசலுக்கு ஆலிம்சா ஒருவர் வந்தாராம்.  தொழ வைத்து முடித்த அவருக்கு அந்தப் பள்ளியின் ‘கிப்லா’வைப் பற்றி ஒரு சந்தேகம்.  மனத்துள் ஒரு விதமான வஸ்வாஸ்!  தொழுகை முடிந்து எல்லாரும் போன பின்னர் அந்தப் பள்ளியின் தொழும் திசையான  ‘கிப்லா’வைக் கணிப்பின் மூலம் பரிசோதித்துப் பார்த்த வகையில், அது பிழையாக இருந்ததாம்.  அவர் சரியான ‘கிப்லா’வைக் கணித்து, நூல் கயிற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கட்டி வைத்துவிட்டுப் போய்விட்டாராம்.  அடுத்த வக்துக்குப் பள்ளியில் கூடிய மக்களுக்கு வியப்பு!  அங்கிருந்த ஒரு பொடியன், “யாரோ ஒரு கோன கிப்லா ஆலிம்சா’ வந்து கயிற்றைக் கட்டிவைத்துப் போனாராம்” என்றார். செய்தியைக் கேட்டவுடன், பொது மக்கள், ‘இத்தனை வருடங்கள் தொழுத தொழுகை எல்லாம் பாழ்!  இப்ப நாம தொழுவது எப்படி?  இந்தக் கோன கிப்லா பக்கமா?  அல்லது பழையபடியா?’ என்று திகைத்து நின்றார்களாம்.

இதனை வாசிக்கும் அன்பர்களிடமும் நிறைய இருக்குமே?  பரிமாறிக் கொள்ளுங்கள்.

அதிரை அஹ்மது

29 Responses So Far:

Aboobakkar, Can. said...

எனது தகப்பனார் மர்கூம் .ஹாபீஸ் .முஹம்மது அப்துல் காதர் அவர்களும் மர்கூம். மரியாதைக்குரிய நமதூர் அலி அலிம்சா அவர்களும் பெரும்பாலும் அசர் தொழுகைக்கு புதுப்பள்ளிக்கு (சாதுலியா ) ஒன்றாக செல்வார்கள். அப்போது அலி ஆலிம்ஷா அவர்கள் எனது வீட்டை தட்டி எனது வாப்பாவை கூப்பிடுவார்கள் அப்போது அலி ஆலிம்ஷா அவர்கள் தனது கைலியை முழங்காலுக்கு கீழ் சற்றே உயர்த்தி அணிதவண்ணம் வருவார்கள் அப்போது அவர்களை முழங்கால் வேட்டிஆலிம் என்று அங்கு இருந்த சிலர் அழைக்க அப்போது எனது தகப்பனாருக்கு வந்ததே கோபம் அதை என்னால் இன்று வரை மறக்கவே முடியாது .

Ebrahim Ansari said...

இதைப் படித்த உடன் எனக்குள் எழுந்தன இரு கேள்விகள்.

ஒருவரை இழிவு படுத்தவோ அல்லது எள்ளி நகையாடவோ அல்லாமல் அவரை அடையாளப்படுத்த பட்டபெயர்களை குறிப்பிடுவது தவறாகுமா?

இப்படிப் பட்டபெயர்களைக் கூறி அடையாளப்படுத்துவது எல்லா ஊர்களிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலேயே அதிகமென நினைக்கிறேன். பிற மதத்தவர்களில் இந்தப் பழக்கம் அதிகம் இல்லை என்பது எனது பார்வையில் ஏற்பட்ட கருத்து. இது சரியா?

//இதனை வாசிக்கும் அன்பர்களிடமும் நிறைய இருக்குமே? பரிமாறிக் கொள்ளுங்கள்.// பல பேர்கள் ஜமாய்க்கப் போகிறார்களென நினைக்கிறேன்.

என் பங்குக்கு

எனக்குத்தெரிந்த ஒரு ஊரில் ஒரு வீட்டுக்குப் பெயர் "நாவால் வீடு".

காரணம் கேட்டதில் அவர்களை யாரும் நிமிர்த்தவே முடியாதாம். ( இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டுகிறேன். ) இப்படித்தான் பெயர்கள் சூட்டப்பட்டிருக்க வேண்டும்.

சில பெயர்கள் வரலாற்றுத் தொடர்புடையவையாக இருக்கலாம்.

சுடுதண்ணி, தேங்காய்ப்பால், தேங்காய்க் கீத்து, மண்டையர், துவர்பாக்கு, சூப்பி, புளியாணம், தொத்த மரைக்கா, கோழிக்கால், சுண்டு, நண்டு, கெண்டைக் குடல், கொடுவா, மட்டி,சிவப்புத்தொப்பி, ஆகிய சில வீட்டுப் பெயர்களின் பின்னே ஒரு சரித்திரம் இருக்கலாம்.

மேலே கண்டுள்ள பெயர்களுடன் தொடர்புடைய சகோதரர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம். சும்மா சுட்டுதலே நோக்கம்.

வட ஆற்காடு/ வேலூர் மாவட்ட முஸ்லிம்களிடையே ஊர் பெயர்கள் பட்டப் பெயர்களாக இருக்கின்றன. மோட்டூர் என்கிற குடும்பம் வாணியம்பாடியில் பிரசித்தம். தஞ்சாவூர் என்கிற குடும்பம் பேரணாம்பட்டில் பிரசித்தம்.

adiraimansoor said...

காக்கா
இதையும் விட்டுவைக்கலையா சரி போவுது என் பங்கிற்கு ஒன்றை சொல்லிவிடுகின்றேன்

அதிரம்பட்டினத்திற்கும் அப்துல்கதர் ஆலிம்சாவுக்கும் தப்ல்லிக் இயக்கத்தை அறிமுகப்படுத்திவைத்ததே என்னை பெற்றெடுத்த தந்தை அவர்கள் அதை அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் இன்னும் என்னிடம் சொல்லுவார்கள்.
என் தந்தை அவர்கள் எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டு முன்றாவது இறையடி சேர்ந்துவிட்டார்கள்
அவர்கள் வாழ் நாளில் தொழுகாதவகளை தொழ அழைப்பதுதான் வேலை பாங்கு சொல்லிவிட்டால் ரோட்டில் பாள்ளிவாசலை விட்டு எதிர் திசையில் யாரையும் நடக்க விடமாட்டார்கள் கொத்துபிடியாக கூட்டிகிட்டுபோயி பள்ளிவாசலில் விட்டுவிடுவார்கள் இதனால் என்னுடைய தந்தைக்கு வைத்த பட்டப்பெயர் என்ன தெரியுமா மிக அருமையான பட்டப்பெயர் ''அல்லாஹ்வீட்டு போலீஸ்
இந்த அல்லாஹ் வீட்டு போலீஸ் ரோட்டில் நடந்து வருவதைப் பார்த்தாலே டேய் அல்லாஹ் வீட்டு போலீஸ் வர்ரார்டா என்று அவன் அவன் வாரி சுருட்டிக்கொண்டு துண்டை கானோம் துணியை காணோம் என்று ஓடிவிடுவார்கள் ஏனெனில்
அந்தக்காலத்தில் வாலிப வயதினர் பள்ளிவாசலுக்கு தொழ செல்வது மிகவும் கம்மி பள்ளிவாசலில் அதிகப்படியாக தொழ வருவது வயதானவர்கள்தான்

அல்ஹம்துலில்லாஹ் த்ப்லீக் இயக்கத்தினாலும்
அதைவிட தவ்ஹீது எழுச்சியினாலும் இன்று வாலிபர்களிடையே தொழுகையின் அவசியம் தெரிந்ததால் இன்று அல்லாஹ் வீட்டு போலீஸுக்கு அவசியப்படாது

adiraimansoor said...

சரி காக்கா எனக்கொரு சின்ன சந்தேகம்
போட்டிருகின்ற தலைப்புக்கும் அதை தொடர்ந்து வரும் கிஸ்மி பழத்திற்கும் முடிச்சி போட்டிருக்கின்றீர்களே
கிஸ்மிஸ் என்று யாருக்கும் பட்டப்பெயர் உண்டா

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

காக்கா
இன்னொரு சுவராசியமான கதையை சொல்லிவிடுகின்றேன். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஒரு முதியவருக்கு கிரிச்சான் என்று பட்டப் பெயர் இந்த பட்டப்பெயரை வைத்து அழைக்கும்போது அவருக்கு வருமே கோபம் துரத்திக்கொண்டு வருவர் பிடித்து அடிப்பதற்கு கையில் பிடிபட்டால் அவ்வளவுதான். நாங்கள் சிறு வயதாக இருக்கும்பொழுது இது ஒரு விளையாட்டாக நன்பர்களுடன் சேர்ந்து கொண்டு கிரிச்சான் என்று சொல்லிவிட்டு ஒளிந்து கொள்வது அவர் திரும்பி பார்த்துவிட்டு திட்டிவிட்டு போய்விடுவார்
ஒரு நாள் நான் இப்படி கிரிச்சான் என்று சத்தம் பொட்டுவிட்டு ஒளிந்து கொண்டேன் நான் ஓளிந்த இடத்தை பார்த்த அவர் நல்ல அரக்கல் செங்கள் ஒன்றை எடுத்து வைத்துகொண்டு எனக்கு எரிவதற்கு தயாராக நிற்கின்றார் அது எனக்கு தெரியாது மறுபடியும் கிரிச்சான் என்று கூப்பிடுவதற்க்காக தலையை மட்டும் நீட்டினேன் அவ்வளவுதான் அந்த அரக்கல் என் செவுலை பேர்த்தது. என் காதில் ரயில் ஓடியது கன்னத்தில் ரெத்தமும் ஓடியது
அதுக்கு அப்புரம் ம்ஹூம்
யாரையும் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவதை அதோடு மறந்தது
அறியாமையில் செய்த இந்த பாவத்தை அல்லாஹ் மன்னித்து அருள்வானாக ஆமீன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும் மச்சான்! நலமா? சரி விசயத்துக்கு வருவோம்!முள்ளை,முள்ளால் எடுக்கனும் .,சொல்லகேட்டிருக்கிறோம்.சொல்லை,சொல்லால் வெல்லலாம்.ஆனால்கல்லை(கரிங்கல்லை)அரக்கல்லால் அடித்தது கொஞ்சம் ஓவர்தான் பாவம் மச்சான் நீங்கள்!(எல்லாம் ஒரு நகைச்சுவைக்குதான் மன்னிக்கவும்).

இப்னு அப்துல் ரஜாக் said...

சாச்சாவுக்கு சரியான குசும்பு ! யார் மனத்தையும் நோகாது அருமையாக வரைந்துள்ளீர்கள்.
மார்க்க வரம்பு என்ன என்று அறியத் தந்தால்,ஜாக்கிரதையாக இருக்க இயலும்.
சிறு வயதில்,நான் நிறைய பேருக்கு பட்டப் பெயர் சூட்டியுள்ளேன்.அல்லாஹ்வுக்காக அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் இந்த தருணத்தில்.அல்லாஹ் மன்னிப்பான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு !!

கிளாஸிக் @ கலக்கல் !

ஏண்டா(ப்பா) இவ்வ்வ்வ்ளோ நாளா மவுனமா இருக்கே ?

Unknown said...

சகோதரர் மன்சூர் காக்கா சொன்னது தவறு..அல்லாஹ் வீட்டு போலீசு இருப்பதினால்தான் இன்றும்,ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலெல்லாம் கூட பெரிய இஜ்திமாக்களெல்லாம் நடை பெறுகிறது...அதன் பரக்கத்தால் கலிமாவை மறந்து வாழும் குறிப்பாக அரபு சகோதரர்கள் கூட தமது குடும்பத்தினருக்கும் கலிமா சொல்லிக்கொடுக்கக்கூடிய நிலமை உன்டாகிறது..இஜ்திமாவை வேடிக்கை பார்க்க வரும் மாற்று மத சகோதரர்களும் அதே இடத்தில் கலிமாவை மொழிகிறார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

Unknown said...

சென்ற மாதத்திற்கு முன்பு மனாருல் ஹுதா பத்திரிக்கையில் கூட தப்லீக் வேளையின் அவசியத்தைப்பற்றி பைத்துல் முகத்தஷ் இமாமின் பேட்டி வெளியாகியிருந்ததை சகோதரர்கள் படித்தால் புரியும்....

sheikdawoodmohamedfarook said...

//தலைப்புக்கும் 'கிஸ் மிஸ் ''பழத்திற்கும் என்ன சம்பந்தம்?//அதிரைமன்ஸூர் கே.ட்டது. என் யூகம்'எவனாவது ஒருவன் கல்லூரிக்கு செல்லும்இளம் பெண்களிடஇப்படிகேட்டிருக்கலாம் .அதனால் அவனுக்குஇந்தபட்டபெயர் வந்திருக்கும் .அதைஇப்படிமறைமுகமாகசொல்கிறார்களோ?ஆயிரம் வார்த்தைகளில்சொல்லா முடியாததை ஒருபடம்சொல்லி விடும்.

Aboobakkar, Can. said...

இன்றைய ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவர்களின் முன்னோர்களும் அவர்களின் பெயர்களும் இஸ்லாமியர்களே சுமார் 800 வருட பழைமையான ஒரு மிகப்பெரிய பள்ளிவாசல் இன்று அங்கெ ஒரு மியுசியமாக காட்சி அளிக்கிறது.இதற்கெல்லாம் காரணம் அங்கு தாவா பனி இல்லை.வட ஆபிரிக்காவின் மெராக்கோ ,அல்ஜீரிய ,லிபியா போன்ற நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு பரவிய இஸ்லாமின் அபார வளர்ச்சியால் முழு ஐரோப்பாவும் இஸ்லாத்தை தழுவிவிடும் என்று பயந்த ஐரோப்பியர்களுக்கு அங்கு தாவா பனி குறைந்ததால் அதுவே சாதகமாகிவிட்டது .நமக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடு என்னவென்றால் தற்போதைய தாவா பணியில் ஈடுபடுவோர் தொழு கின்றவர்களையே தொழ அழைப்பார்கள்.தவ்ஹீது வாதிகள் பிறமத்தவரின் சந்தேகத்தை விளக்கி அவர்களை நல்வழி படுத்துகின்றனர் .உலகில் இஸ்லாம் பரவ கருத்து வேறுபாடுகளை களைந்து செயல்படுவதே நலம் .

Unknown said...
This comment has been removed by the author.
இப்னு அப்துல் ரஜாக் said...

சகோதரர் மன்சூர் காக்கா சொன்னது தவறு..அல்லாஹ் வீட்டு போலீசு இருப்பதினால்தான் இன்றும்,ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலெல்லாம் கூட பெரிய இஜ்திமாக்களெல்லாம் நடை பெறுகிறது...அதன் பரக்கத்தால் கலிமாவை மறந்து வாழும் குறிப்பாக அரபு சகோதரர்கள் கூட தமது குடும்பத்தினருக்கும் கலிமா சொல்லிக்கொடுக்கக்கூடிய நிலமை உன்டாகிறது..இஜ்திமாவை வேடிக்கை பார்க்க வரும் மாற்று மத சகோதரர்களும் அதே இடத்தில் கலிமாவை மொழிகிறார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

சென்ற மாதத்திற்கு முன்பு மனாருல் ஹுதா பத்திரிக்கையில் கூட தப்லீக் வேளையின் அவசியத்தைப்பற்றி பைத்துல் முகத்தஷ் இமாமின் பேட்டி வெளியாகியிருந்ததை சகோதரர்கள் படித்தால் புரியும்....

சகோதரர் முஹம்மத் இப்ராஹிம் அவர்கள் சொன்னது மிக சரி,தப்ளீக் ஜமாத் சேவை இன்று அதிகம் தேவை.அதன் மூலம் நிறைய பேர் திருந்தி வருகிறார்கள்.அவர்களின் பணிவு,அடக்கம்,ஒழுக்கம்,தொழுகை பேணுதல்,மஷ்வாராவின் முக்கியத்துவம் எல்லாமும் போற்றத் தக்கது.
ஆனால் ஒன்று மட்டுமே நெருடல்,அது பித் அத் த்தைக் கைவிட வேண்டும்,அல்லாஹ் ரசூல் சொல்வது மட்டுமே மார்க்கம்,பெரியோர்களது வாழ்க்கை நடைமுறை மார்க்கம் அல்ல என்பதை உணர்தல்,குரான்,ஹதீஸ் மட்டுமே தஹ்லீமாக படிக்க வேண்டும் முதலியவை.
அல்லாஹ் அந்த இயக்கத்தை தவ்ஹீத் இயக்கமாக மாற்றுவானாக

Unknown said...

"யார் வந்துட்டுப் போனது?" - இது என் 'ஆத்துக்காரி'யின் கேள்வி. "ஒரு ட்டீ அல்லது ஜூஸ் கொடுக்காமல அரமணி நேரம் இருந்து பேசிவிட்டு சும்மாவா அனுப்பினீங்க?"

"மன்சூரு." - இது என் பதில். என்னவளின் கேள்வியும் என் பதிலும் நீண்டன.

"எந்த மன்சூரு?"

"அதான், நம்ம வீட்டுக்கு எதிர்த்த 'அஞ்சு முடுக்கு' வழியாகப் போய், காலியார் தெருவுக்குள் போகும் வழியில் முனையில் உள்ள வீடு."

"அப்டீன்னா, மேஸ்திரி வீடா?"

"இல்லம்மா. மொம்சாலியாக்கா மகன்."

"எந்த மொம்சாலியாக்கா?" எப்படியாவது அந்தப் பிள்ளையாண்டானின் பட்டப்பெயரைச் சொல்லாமல், அடையாளப் படுத்த வேண்டும் என்ற எனது திட்டுமுட்டு!

"ரஜியாவின் மாப்பிள்ளை."

"எந்த ரஜியா?"

"நாம சவூதியில் இருந்தப்போ ஹஜ்ஜுக்கு வந்துச்சே,?" எப்படியும் பட்டப்பெயரைக் கூறக் கூடாது என்ற என் நிலைபாட்டில் உறுதியுடன் நின்ற என் பிடிவாத எண்ணம் !

அவளும் விட்டபாடில்லை. "எந்த ரஜியா? எந்த மன்சூருங்க?"

நான் தளர்ந்து போனேன்! "இப்போ ரோட்லே குமிச்சு வச்சிருக்காங்கல்ல ?"

"ஆமா, அது கல்லு." என்னவள் கிட்டே நெருங்கிவிட்டாள் என்ற முடிவில் தொடர்ந்தேன். "அப்பாட! இப்போ புரிஞ்சிருப்பா நீ."

என் எதிர்பார்ப்பை முகத்தில் தேக்கி, அவளைப் பார்த்தேன். ஊஹூம், அவள் விட்டபாடில்லை.

"வெளியிலே மஞ்சக் கல்லுதானே குவிச்சு வச்சிருக்கானுவ!? அது யாரு மஞ்சக் கல்லு?"

"அதல்ல புள்ளே. இன்னொரு கல்லு" என்று அடையாளப் படுத்தினேன்.

"கறிங்கல்லா?" என்றவளிடம் தலையசைத்து ஆமோதித்தேன்.

"அப்பாடா! இதச் சொல்றத்துக்கா இவ்வளவு சுற்றி வளைப்பு? பட்டப் பேரைச் சொன்னால் முடிஞ்சுது!"

தம்பி மன்சூரு... கோவிச்சுக்காதீங்க.

பட்டப் பெயரைச் சொல்லக்கூடாது என்ற என் நிலைபாட்டில் நான் அடைந்தது வெற்றியா? தோல்வியா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.




sheikdawoodmohamedfarook said...

வலுத்தகுடும்பத்தினர் இளைத்த குடும்பத் தினருக்கு இழிவான-கொச்சையான பட்டப்பெயர்களை வைப்பதும் நாலுபேர் முன்னாடி அவர்களை அந்தப்பெயர் சொல்லி அழைத்து இழிவு படுத்திஇன்பம்இன்பம்காண்பதும்இவர்களின்வாடிக்கை! இவர்கள் Sadistகள்.பிறரைஇழிவுபடுத்தாமலும் துன்பபடுத் தாமலும் இவர்களால்தூங்கவே முடியாது! பட்டப்பெயர் வைப்பது ஒருவரை அடையாளம் காண்பதற்கே அன்றி அவர்களைஇழிவுபடுத்து வதற்க்கு அல்ல!கனிஇருக்ககாய்கவர்வதுஏனோ?
இது சம்பதமாக அந்தக்காலத்து பிரபல பணக்காரMulti ஹாஜியார் மகனோடுஎனக்கு ஒருமோதல். இவரும் ஒரு ஹாஜியார்தான்.[தொடரும் ]

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ahmed,

A socially responsible article on opposing naming and calling by bad names.

I had posted similar article in Adirai Nirubar few months back.
I would like to request all brothers and sisters to check it out and you may write your comments here or there too.
http://adirainirubar.blogspot.ae/2013/02/naming-and-calling-spiritually-and.html?m=1

Jazakkallah khair

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

தக்லீம் படிப்பது தொடர்பாக முன்பு ஒரு பதிவில் நான் ஒரு கருத்துத் தெரிவித்து இருந்தேன். மீண்டும் அதைப் பதிய நினைக்கிறேன்.

பல காலமாக தொடர்ந்து ஒரு சில குறிப்பிட்ட நூல்களையே படிக்கிறார்கள். உதாரணாமாக சஹாபாக்கள் சரிதை- அமல்களின் சிறப்புகள் போன்றவை. தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்கள் சொல்வது போல் இதுவே எங்கும் ஒரு வழக்கமாகப் போய்விட்டது. அதற்கு பதிலாக குர் ஆன் ஹதீஸ்களின் தர்ஜுமாக்களையும் படிக்கலாம்.

குறிப்பாக பஜ்ர் தொழுகையில் வழக்கமாக நீண்ட சூராக்கள் ஓதப்படுகின்றன. எத்தனை பேருக்கு அவ்விதம் ஓதப்படுவதின் அர்த்தம்- எதைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் என்பது தெரியும்? அவற்றின் பொருளை யும் உணரும்போது உண்மையான மார்க்க அறிவு ஏற்படும் .

ஆகவே குறைந்த பட்சம் பஜ்ர் தொழுகைக்குப் பின் வாசிக்கபப்டும் தக்லீமாவது , , அன்று தொழுகையில் ஓதப்பட்ட சூராக்களின் மொழியாக்கமாக இருந்தால் மிகுந்த பயன்பாடு விளையலாம் என்பது எனது மிகவும் பணிவான கருத்து.

தப்லீக் இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்தி வரும் பெருமகன்கள் இதைத் தங்களின் ஆலோசனையில் விவாதிப்பார்களானால் நலமாக இருக்கும்.

sheikdawoodmohamedfarook said...

[முன்தொடர்!ஹாஜியார் மகன் ஹாஜியாரோடு ஒருமோதல்தொடர்] ஒருநாள்இரவு ஏழுமணி ரயிலில்இதய மருத்துவத்துக்காக சென்னை புறப்பட்டேன்.ரயில்புறப்படும்நேரம். ஒருவர் ஏறி என் எதிர் பெஞ்சில் அமர்ந்தார்.அவர்யார் என்றுஎனக்கு தெரியும்.அவருக்குஎன்னை தெரியாது. என்னையே பார்த்த அவர்''உங்களுக்கு எந்த ஊர்?'' என்றார்.''அதிராம்பட்டினம்'' என்றேன் . 'எந்ததெருவு?'' என்றார். ''கடல்கரைதெரு!'' என்றேன். ''கடல்கரைதெருவில் யார்வீடு?"" என்றார்.விபரம் சொன்னேன்''.புரியவில்லை!'' என்றார். என்தாயாரின்பெயரைசொல்லி'' உங்கள் தாயாரிடம் கேளுங்கள்! சொல்வார்கள் என்றேன்!''
கடல்கரைதெருவைசார்ந்த ஒருபையன் வீட்டு கொச்சையான பட்டப்பெயரை சொல்லி அவனை தெரியுமா?" என்றார்! இந்தக்கொச்சையான பெயரை இவர் உச்சரித்ததும் எதிர் பெஞ்ச்மாற்றுமதக்காரர்கள் விழித்தார்கள்.என்னையும் அவரையும் மாறிமாறி பார்த்தார்கள்
.''எனக்குபுரியவில்லை! அவனுக்கு இதுதான் வாப்பா உம்மாஉட்ட பேரா?"என்றேன்.''இல்லை! இது பட்டபேறு! அவன் பேறு........''என்றார்.''நாங்கள் இப்படிதான் கூப்பிடுவோம்'' என்றார்.''உம்மாவும் வாப்பாவும் இட்ட அழகான இஸ்லாமிய பேரை பாழாக்கி நீங்களாகவே ஒருபேரை வைக்கிறீர்களே! ''இழிவான பட்டபெயர் வைத்து மனிதர்களை அழைக்காதீர்கள்''யென்று குரானிலோஹதிஸ்சிலோஉண்டே! அது உங்களுக்கு தெரியாதா?'' என்றேன்.''எல்லோரும் இப்படிதானே கூப்பிடுகிறார்கள்! அதில்என்ன தப்பு?''என்றார்.''இதேமாதிரி ஒரு பட்டப்பெயர் வைத்து உங்களை கூப்பிட்டால் கோபித்துகொள்ள மாட்டீகள் அல்லவா''?என்றேன் 'உங்கள் கம்பனியில் சோறு ஆக்கிகொடுத்து சம்பளம்வாங்குவதால் இந்தப்பெயர்! அவன் வாப்பாவும் எக்ஸ்போர்ட் எம்போர்ட் கம்பனி வைத்திருந்தால்''கம்! காக்க சிட்! டேய்! யாருடா அங்கே? காக்காக்கு நாக்காலி கொண்டாந்துபோடு''என்பீர்கள் என்றேன். குறிப்புஇது.பட்டப்பெயர் கட்டுரைக்காக எழுதிய பின்னூட்டமல்ல! சுமார் இரண்டுமாதங்களுக்கு மேலாகவே இதை ஒரு கட்டுரையாகவே அ நி.யில் எழுத வேண்டுமென்ற எண்ணம். அல்லாஹ் இப்பொழுது இதை நிறைவு செய்துவைத்தான்.எல்லாப்புகழும் அல்லாவுக்கே! அழகான பட்டப்பெயர்களை அடையாளத்துக்காக வைக்கலாமே!

Unknown said...

பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடுவது ப்ற்றி குர் ஆன், ஹதீஸில் என்ன விளக்கம் உள்ளது என்பதைத் தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.....

sheikdawoodmohamedfarook said...

//பட்டப்பெயர் பெயர்வைத்துஅழைப்பதைபற்றிகுரான்ஹதீஸில்என்னவிளக்கம் உள்ளது//சகோதரர்முஹமதுஇப்ராஹிம்கேட்டது// ''''ஒருவரையொருவர் பட்டபெயர் சொல்லிஅழைக்காதீர்கள்''என்றுநபிகள்நாயகம் கூறினார்கள்''யெனஇக்கட்டுரையில் அதிரைஅஹமத்காக்க எழுதிஇருக்கிறார்கள். திருக்குர்ஆன்தர்ஜமா.அத்தியாயம்49/ அல்ஹுஜரத்2:11 [கெட்டபட்டபெயர்களைகொண்டு[ஒருவருக்கொருவர்] அழைதுக்கொள்ளளாதீர்கள்.நம்பிக்கைகொண்டபின்னால்தீய பெயரா[ல்அழைப்பதா] னது மிககெட்டதான தாகும்.[இத்தகு தீமைகளைசெய்கின்ற]எவரொருவர்[பாவமன்னிப்புக்கோரி]மீளவில்லையோ,அத்கையோர்தாம் அநியாயக்காரர்கள்.// இதுதான் குரானின்நான்கண்டவிளக்கம்.அஸ்ஸலாமுஅலைக்கும்!

sabeer.abushahruk said...

இட்ட பெயர்களைவிட சில சமயம் பட்டப் பெயர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்குப் பிடித்துப் போய்விடுவதுண்டு.

உ.: ஜெயலலிதா – அம்மா: ராமதாஸ் - ஐயா; சூப்பர் ஸ்டார் – ரஜினி(“ஆகு பெயர்கள்”? அஹ்மது காக்காதான் சொல்ல வேண்டும்)

தொழிலாகு பெயர்கள் சிலருக்கு பெருமை; சிலருக்குச் சிறுமை.

உ.: டாக்டர், எஞ்ஜினியர், வக்கீல், கலெக்டர் - பெருமைக் குரியன
சிறுமைக்குரிய தொழில் என்று ஏதுமில்லை. இருப்பினும் சமூகத்தின் பார்வையில் சில உள்ளன.

கற்ற கல்வியினால், கிடைக்கும் வேலையினால், வகித்த பதவியினால் என்று பல்வேறு காரணப்பெயர்கள் இருப்பினும், சமயங்களில் தவறுதலாகச் செய்துவிடும், சொல்லிவிடும் ஒரு விஷயத்தை வைத்துப் பட்டப் பெயர் வைப்பதும் அழைப்பதுவும் வருந்தத் தக்கது. தவிர்த்தல் நலம்.

சுவாரஸ்யமானப் பதிவுக்கு, அஹ்மது காக்கா, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Aboobakkar, Can. said...

அப்படி என்றால் அல்லாஹ்வின் திருநாமங்கள் ஆஸ்மா உல் குஸ்மா வில் கூறப்பட்டவைகள் மற்றும் நமது முகமது நபி (ஸல் ) அவர்களை நாம் கத்தம் நபி, முஸ்தபா ,செய்தினா முஹம்மது , என்றெல்லாம் கூறுவதும் தவறா ? மார்க்க அறிஞர்கள் விளக்கம் தரவும் ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கருங்கல்லு கதையும் மற்ற பட்டபேரு தகவல்களும் அருமை!

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//இட்ட பெயர்களைவிட சில சமயம் பட்டப் பெயர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்குப் பிடித்துப் போய்விடுவதுண்டு.

உ.: ஜெயலலிதா – அம்மா: ராமதாஸ் - ஐயா;//



"ராமதாஸ் ஐயா' இப்படி சொல்வதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாக நான் கருதுகின்றேன்

Adirai anbudhasan said...

பட்டப்பெயர், இந்த ஆக்கத்திற்கு இடப்பட்ட கமெண்டுகலில் கூட, பெரும்பாலும் இன்னாரென்று சுட்டுவதற்கு உபயோகப்படுவதாக குறிப்பிட்டு உள்ளார்கள். பட்டப்பெயரென்று தமிழில் நாம் அழைக்கும் வார்த்தையை பற்றித்தான், செய்யிதினா முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம், கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?, நம் தமிழாக்கம் சரியா? மார்க்க, அரபி அறிஞர்கள் கருத்து என்ன?

கேள்விக்கு காரணம், நம் நபிகளார் சில சஹாபிகளை சிறப்பு ( பட்ட ) பெயர்சொல்லி அழைத்திருக்கிரார்கலெ?. உதாரணத்திற்கு அபூஹுரைரா, சைபுத்தீன்,

பிறரை கேவலப்படுத்தும் நோக்கத்துடன் இடப்படும், அழைக்கப்படும் பெயர்கள் தான் தடுக்கப்பட்டிருக்கிறதோ?. சரியான விளக்கமறிந்தோர் விளக்குவார்களா?

Unknown said...

மோசமான அர்த்தத்தைக் கொடுக்கும் பட்டப்பெயர்களுக்குத்தான் தடையே தவிர; எல்லாவற்றுக்குமல்ல. பெருமானார் (ஸல்) அவர்களின் வாயால் மொழிந்த பட்டப்பெயர்களைக் கேட்டு, தோழர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதேயன்றி, அவர்களின் இதயங்களைக் காயப்படுத்தவில்லை. இந்த அடிப்படையில் விளிக்கப்பட்டவைதான், அபூஹுரைரா, அபூதுராப், துல்யதைன் போன்றவை.

நமக்குப் பரிச்சயமான கஞ்சன், நொண்டி, செவிடு, நெட்டைக் கொக்கு, டோரிக் கண்ணு, இன்னபிற பட்டப் பெயர்கள் இதயங்களைக் காயப் படுத்துபவை. இது போன்ற பட்டப்பெயர்களைத்தான் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கட்டுரையில் இது போன்ற கருத்துகளைச் சேர்க்க எண்ணினேன். சுருக்கியதால், ஒரு 'ரிலாக்ஸ்' ஆகி, வாசிப்பாளர்கள் தமது சிறந்த கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாகியது. வருகைக்கு நன்றி.

Adirai anbudhasan said...

ஜசாக்கல்லாஹ்,

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு