பெண்ணுக்கு மகுடம்
பிழையற்றத் தாய்மை
மண்ணுக்குப் பகரம்
மனிதத்தின் சிகரம்
மனத்தினுள் சேர்த்த
கனவுகள் யாவற்றையும்
மனைவியோடு சுவாசித்து
காத்திருக்கும் கணவா
பிள்ளைக்குப் பெயரும்
பெறயிருக்கும் நாளும்
கனவிலும் நனவிலும்
அசைபோடும் ஆணே
பிரசவ நாளோ ஒன்றுதானெனினும்
பரவச நாட்கள் பலவாகிப் போக
கருத்தறித்த நாள் முதல்
பிள்ளைச் சுமைக்கு
நிகரான பாரமன்றோ
காத்திருப்புச் சுமை
அன்னையாகும் முயற்சியில்
அலறல் கேட்ட நொடிகளில்
வராண்டாவில் வலியோடு
விழித்திருந்தது நினைவிருக்கா
கனவுகளின் பலனாக
காத்திருப்பிற்கான அர்த்தமாக
முதல் அழுகை ஒலித்ததும்
மூச்சு சீரானது உனக்குத்தான்
வயிற்றுச் சுமை பத்துமாதம்
இறக்கி வைத்து இளைப்பார
தோள்ச் சுமையைத் தூக்காமல்
தூர நின்றால்
துயர மன்றோ?
விற்றுத் தீர்த்தப் பொருளின்மீது
பற்று
அற்றுப் போகும் வியாபாரிபோல்
பெற்று விட்டால் முடிந்ததா – வாழ்வைக்
கற்றுத் தர வேண்டாமா
பெற்றெடுத்தது ஒரு
வெற்றுப் பிண்டமென்றாகுமா
ஒற்றுப் பிழையென்றாலும்
சற்று
உற்று நோக்கினால் திருத்திவிடலாம்
பெற்றப் பிள்ளையல்லவா
பிழையின்றி வளர்க்க வேண்டாமா
இரும்பேயானாலும்
இற்றுப் போகுமுன்
சுட்டும் அடித்தும்தானே
வலுவேற்றனும் வடிவேற்றனும்
தகப்பன் என்றாகும்வரை
தவிப்பதுவும்
வளர்த்தெடுக்கும் சிரத்தைகளைத்
தவிர்ப்பதுவும்
தறுதலைப் பிள்ளையெனக் கேட்டுத்
துடிப்பதுவும்
தேடி வாங்கும் தேனீக் கடி
தகப்பன் கடமையைத்
தவறாமல் செய்
தனையன் தலைக்கு
இறையச்ச இழைகொண்டு
கடமை என்றொரு
தனிமகுடம் நெய்
உன் பிள்ளை
முடிசூடும் நாளை
எதிர்பார்த்துக் காத்திரு
இம்முறை
காத்திருப்பு
சுமையல்ல சுவையாகும்!
உரு: சபீர்
கரு: கிரவுன்
66 Responses So Far:
\\தகப்பன் கடமையைத்
தவறாமல் செய்
தனையன் தலைக்கு
இறையச்ச இழைகொண்டு
கடமை என்றொரு
தனிமகுடம் நெய்//
தமிழால் இழைக்கப்பட்டுத்
தரமாய் நெய்யப்பட்ட இழை
அறிந்து கொண்டோம் எம் பிழை!
கீழ்க்காணும் என் பாடல் ஓராண்டுக்கு முன்னர் (திங்கள், 17 செப்டம்பர், 2012) என் வலைத்தளத்தில் தமியேன் பதிந்ததை ஈண்டு மீள்பதிவு செய்கிறேன், உங்களின் அனுமதியுடன்,
http://kalaamkathir.blogspot.ae/2012/09/blog-post_17.html
மக்கட்செல்வம்
பெற்ற பொருளளவால் நாம்பெருமை யுற்றிடலாம்;
பெற்ற புகழளவால் நாமுயர்வை யெட்டிடலாம்;
பொருளளவும் புகழளவும் தருஞ்சிறப் போரளவே;
பொருள்பெற்றோர் புகழ்பெற்றோர் பெற்றோ ராவதில்லை;
சின்னக் கையசைவில் சிங்காரப் புன்னகையில்
வண்ணமுறக் குழந்தை வழங்குவதே அப்பதவி;
எந்தப் பதவியுமே கிடைத்தாலும் ஈடாகாது
இந்தப் பதவிமுன்னே அப்பதவி தூசாகும்;
தத்தி விழுந்து தவழுமப் பிஞ்சுக்கே
எத்திசைச் செல்வமும் ஈடாகி நின்றிடுமா?
வாயொழுகும் நீர்குளித்தே வந்துவிழும் மழலைக்கே
போயெங்கும் ஈடொன்றைப் பார்க்க இயன்றிடுமா?
பூவிதழில் நெளிந்து புரண்டுவரும் புன்னகைக்கே
பூவுலகும் அந்தப் பொன்னுலகும் ஈடாமா?
எட்டி நடைபயிலும் இடையசைவின் எழிலுக்கே
கட்டிவைத்தத் தோரணங்கள் கால்தூ சாகிடுமா?
மேல்விழுந்து புரண்டு வழங்குமந்த முத்தமும்
கால்விழுந்துத் தடுமாறும் தளிர்நடையும் காண்போமே
செல்வத்தில் ஈடில்லா அச்செல்வம் பெற்றோரே
செல்வத்தைப் பெற்றோராம்; மற்றோர் பெறாதோர்;
தொடரும் பரம்பரையின் சிறிய அணுத்துளி;
படரும் ஆலமரச் சந்ததியின் விதைக்கூறு;
தலைமுறையின் மகரந்தம் பரப்பும் ஒருகாற்று
தலைகளைத் தந்தையாக்கும் ரசவாதத் தொருகுளிகை;
பொருளற்ற வாழ்வைப் பொருளுற்ற தாக்கியோர்
பொருளாக்கும் அந்தப் பொருளுக் கீடேது?
கள்ளமிலாச் சிரிப்பு; களங்கமி லாக்கண்கள்
உள்ள மெலாந்தூய்மை எனவிளங்கும் கவிதை
முந்நூறு நாள்சுமந்து பெற்றபெரு வேதனையைப்
பெண்ணவள் மறக்கச் செய்வதப் பிஞ்சுதானே!
கரு= கிரீடம்
தலைப்பு= மகுடம்\கிரீடம்
கிரீடத்தின் கருவில் கவிவேந்தரின் உருவில் கவிதைக் குழந்தைக்கும் கருவின் பெயரென்பதில் என்னே பொருத்தம்!
இறைவனைத் தவிர எவர்க்கும் தலைவணங்காத உங்களின் கம்பீரம் கவிதைகளின் தலையில் சூடிய மகுடம் என்பதால் தலைகுனிந்துக் காட்டப்பட்டுள்ளப் படம் பொருத்தமாக இல்லையே?
சட்டைப்பையில் செருகிய உன் பேனா
செங்கோலாம் கவியாட்சிக்கு என்பேனா
கையில் எடுத்ததும் கயமைப் போக்க
கவிதையில் சாடும் வாள் என்பேனா
உங்கள் எழுதுகோல் மலடு அல்ல;
எப்பொழுதும் கவிதைக் குழந்தைகளைக்
பிரசவித்து எங்களையெல்லாம்
பரவசப்பட்த்தும் பெண் (pen)
பிள்ளை மனங்கொண்ட
வெள்ளை உள்ளமே- உன்னைப்
பிள்ளைத் தமிழ்ப்பாடிக்
கொள்ளை கொள்ள
யோசித்து வைத்துள்ளேன்
யாசித்துக் கொண்டிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ்!
உயிராய்ப் பிறந்த மழலையே வா
.......உணர்வில் நிலைக்கும் மழலையே வா
பயிராய் வளரும் மழலையே வா
...... பசுமைச் சிரிப்பாம் மழலையே வா
துயரை மறக்க மழலையே வா
......தூய்மை அன்பாம் மழலையே வா
வயிறும் வாயும் நிறைவதற்கு
......வருவாய் விருந்தாய் மழலையே வா!
தாய்மை என்னும் மணிமகுடம் மின்னுகின்றது கவியில்
பிள்ளை பெற்றெடுத்தால் போதுமா
பேணி வளர்க்கவேணும் தெரியுமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா ?
சில நொடி சுகத்திலிருந்து ஆரம்பித்த அந்த தாய்மைக்கான அடித்தளம்
பெற்றெடுத்து ஆளாக்கி நாம் பெற்றது வெற்று பிண்டமல்ல பேணி வளர்க்க வேண்டிய நம் இனிய இல்லற வாழ்க்கையின் அத்தாட்சி என்று பெற்றோரின் கடமையை இவ்வளவு அழகாக என் கவி வேந்தன் சபீரால் மட்டுமே தன்னுடைய எளிய தமிழில் எழுச்சியோடு தரமுடியும்
வழக்கம்போல் எளிய இனிய நடையில் கவியில் மேலும் ஒரு மணிமகுடம்.
அபு ஆசிப்.
//தகப்பன் கடமையைத்
தவறாமல் செய்
தனையன் தலைக்கு
இறையச்ச இழைகொண்டு
கடமை என்றொரு
தனிமகுடம் நெய்//சபீர்,
ஒவ்வொரு கவிதையிலும் பெரும்பாலும் இறை அச்சத்தை இறுதியில் நினைவூட்ட தவறாத உன் கவிதையில் எனக்கு எப்பொழுதுமே ஒரு ஈர்ப்புதான்.
கவிவேந்தே!
உன்றன் எழுத்தாணித் தூண்டிலுக்குள்
உற்சாகமாய் மாட்டிக் கொண்ட மீன்
இன்று இந்த வலைக்குள்!
குழந்தையென்னும் கவிதை
உயிரும் மெய்யும்
கலந்திருக்கும்
உன் புன்னகை மொழி ...!
இசைக்கருவிகள்
மழலை ஒலி முன்னே
மண்டியிடுகின்றன!
மலர்கள்
இதழ்களை விரிக்கின்றன
உன் சுவாசத்தை
அவைகளின் வாசமாக்கி
வசப்படுத்திக் கொள்ள..!
அல்லும் பகலும்
அழகூட்டும் உன் விழிகளால்
விண்மீன்கள் வெட்கித்துத்
தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..!
கருவறையின்
கதகதப்பை உன்னிடம்
காற்றும் கடன் கேட்கும்
விஞ்சும் பட்டு மேனியைக்
கொஞ்சம் தொட்டுப் பார்க்கக்
கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்!
ப்ரசவத்தில் கதறினாள்
உன் தாய்
நீ பிறந்ததும் அவள்மீது
பட்ட உன் பார்வையால்
பட்டெனப் புன்னகைச் சிதறினாள்
தாயின் மயக்கம் தீர்த்த
சேயே, மருத்தவச்சி நீயே!
துன்பத்திற்குப் பின்னர்
இன்பம் எனும் தத்துவம்
புரிய வைத்த புத்தகம் நீ!
அற்புதங்கள் காட்டும்
இறைவனின் பேரற்புதம் நீ!
உன் புன்னகை இதழ்களில்
தேன் உண்ணத் துடிக்கின்றன
வையகத்தின் வண்ணத்துப் பூச்சிகள்!
அம்மா அழகென்றால்
நீ “அம்மா” என்றழைப்பதில்
அழகும் அழகு பெறுகின்றது;
தமிழும் அழகு பெறுகின்றது! .
http://kalaamkathir.blogspot.ae/2012/04/blog-post_3794.html (சனி, 21 ஏப்ரல், 2012)
அன்பிற்குரிய கவியன்பன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தங்களின் பின்னூட்டக் கவிதைகள் பதிவை விஞ்சுமளவுக்கு மிகவும் சுவையானவை.
வார இறுதியாதலால் வீடு திரும்பியதும் அவற்றிற்கு கருத்திடுவேன்.
சின்னஞ் சிறிய கருவுக்குள் குழந்தையெனும்
சித்திரத்தை வரைந்து அனுப்பியது யார்?
சன்னக் குரலில் சங்கீதம் தோற்கும்
சாரீரம் அமைத்துப் படைத்தது யார்?
பின்னிடும் சின்னக் குழந்தை எழுந்து
பீடுநடை போடக் கற்பித்தது யார்?
புன்னகை ஒன்றால் மனத்தினை ஈர்க்கும்
பேரோளியை இதழ்களில் புதைத்தது யார்?
அந்த இறையை வணங்குகிறேன் - அவனுக்கு
யாதும் எளிதாகும் என்பதனால்
எந்த வரமெனக் கேட்காமலே-எனக்கு
ஏற்ற தருளிட வேண்டுகிறேன்.
\\தங்களின் பின்னூட்டக் கவிதைகள் பதிவை விஞ்சுமளவுக்கு மிகவும் சுவையானவை.\\
உங்களின் கவிதைக் குழந்தைக்குக் கருகொடுத்த மகுடக் கவிஞர்(க்ரவுன்) அவர்களின் கருவால் உருவானதென்பதால், அவரின் வழியில் சென்றேன்! ஆம். அவ்வார்த்தைச் சித்தர் பின்னூட்டங்களைக் கவிமழையால் நனையவைத்து நம் நெஞ்சங்களைக் குளிர வைப்பவர்; ஆதலால், அவரின் கருவால் உருவான இக்கவிதைக்குப் பின்னூட்டங்களை அவரைப் போலவே கவிதைகளால் பின்தொடர்ந்து விட்டேன்.
உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்டுதான் “உங்களின் அனுமதியுடன்” என்று சேர்த்துக் கொண்டேன்; என் யூகத்தைச் சற்றும் பிறழாமல் உடன் நீங்களும் அங்கீகாரம் என்னும் அனுமதியுடன் என்று முற்கூட்டியே எழுதிவிட்டதற்கும் பொருத்தமாகவே என் கவிதைகளை உங்கள் கவிதைக்குக் கீழே பின்னூட்டங்களாய்ப் பதியப்பட்டவைகட்குப் பாராட்டியுமிருக்கின்றீர்கள்.
தாய்மை
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!
அதிரையில் எதிர்பார்த்திருந்த மழை !
அதிரைநிருபரில் எதிர்பாராத மழை !
குறிப்பு : மழைக்கு முன்னாடி முதல் வரியில் 'காற்று' என்றும் இரண்டாவது வரியில் 'கருத்து' என்றும் தொட்டுகிட்டு வாசித்துடுங்களேன்
அன்பு நண்பா.!
மகுடத்தை தலைப்பாய் வைத்து மடயை திறந்து விட்டது போல் உனது கவிவரிகள் என் மனதை மூழ்கடித்தன.
அனைத்து வரிகளும் வாழ்க்கைக்கு அவசியமான வரிகள். நீ எப்புடி இப்புடி வித்தியாசமாய் யோசிக்கிறாய்.?
'கவிதைக்குப் பொய் அழகு' என்று ஒரு கவிஞன் சொன்னான்..
ஆனால் அந்தக் கவிஞனின் வார்த்தையை பொய்யாக்கிய பெருமை நம் கவிகாக்காவுக்கு உண்டு.
இக்கவியில் வெளிப்பட்டிருக்கும் அனைத்தும் உண்மையல்லவோ...!!
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahrukh,
Amazing poem of concept of crown.
Each line of the poem is showing an evolutionary travel of a soul towards successful life.
Great direction for parents to be sincere and responsible. But genuine and inherent love of parent towards children is the driving force to make their children winning leaders.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
இது அமெரிக்காவுக்கும் அஜ்மானுக்கும் பிறந்த நவீன அழகுக் குழந்தை.
அருமை, புதுமை.
வாழ்த்துக்கள் ஆக்கியோருக்கு!
அஸ்ஸலாமுஅலைக்கும்.
கரு கேட்டதும் விறு,விறு என வீரு கொண்ட கரு இது! பெற்றோருக்கு குழந்தை என்பது பெரும் பேறு! இது எத்தனைப்பேருக்கு எட்டாத கனியாகி இருக்கு! ஆனாலும் இந்த பேறு வாய்க்க பெற்றதும் பேர் வைத்தால் மட்டும் போதும் என இருக்க எழுந்த சிந்தனையை சற்று பகிர்ந்தேன் கவிச்சக்கரவர்தியிடம் அவர் கவிதை மெழுகுவர்த்தி ஏற்றி எல்லா பெற்றோருக்கும் வெளிச்சம் போட்டுள்ளார் தனது கவிதையில் எப்பொழுதும் போலவே இக்கவிதையும் அதன் வித்தையை காட்டியிருக்கிறது.வாழ்த்துக்கள்.
பெண்ணுக்கு மகுடம்
பிழையற்றத் தாய்மை
மண்ணுக்குப் பகரம்
மனிதத்தின் சிகரம்
-------------------------------------------
பனிக்குடத்திலிருந்துவந்த ம"குடம்"இது கருவாகி,உருவாகி பின் மண்ணில் வந்த சிகரம் இதற்கு பகரம் ஏது? என அழகாய் கவிஞர் அரம்பிக்கிறார் பின் தன் அழகு கவிதையில் வியாபிக்கிறார்.
பிரசவ நாளோ ஒன்றுதானெனினும்
பரவச நாட்கள் பலவாகிப் போக
கருத்தறித்த நாள் முதல்
பிள்ளைச் சுமைக்கு
நிகரான பாரமன்றோ
காத்திருப்புச் சுமை
--------------------------------
காத்திருப்பு எனும் பூ கரு மொட்டாகி பின் பூத்திருக்கும் தினத்திற்கு காம்பு காத்திருப்பதுபோல அதன் காத்திருப்பும் கருத்தரிப்பும், அதன் பூரிப்பும்,ஒரு சுகமான சுமைதானே?
அன்னையாகும் முயற்சியில்
அலறல் கேட்ட நொடிகளில்
வராண்டாவில் வலியோடு
விழித்திருந்தது நினைவிருக்கா
-------------------------------------
தந்தை குலமே நினைவிருக்கா வாராண்டாவில்
கனவலியோடு விழித்திருந்தது.
தாயாகும் முயற்சியில் உன் துணை அலறல் கேட்டபோது செல்லமே! இதோ வாரேண்டா என வாராண்டாவில் இருந்து உன் உந்துதல்?
கனவுகளின் பலனாக
காத்திருப்பிற்கான அர்த்தமாக
முதல் அழுகை ஒலித்ததும்
மூச்சு சீரானது உனக்குத்தான்
-------------------------------------
அப்பாடா! இப்ப நான் உன அப்பன்டா என வரும் பெரும் மூச்சு சீராகுமே , அந்தசேயின் முதல் அழுகையில்!அது ஒரு பேரானந்த பொழுது!
வயிற்றுச் சுமை பத்துமாதம்
இறக்கி வைத்து இளைப்பார
தோள்ச் சுமையைத் தூக்காமல்
தூர நின்றால்
துயர மன்றோ?
--------------------------------
அன்னைக்கு இடுப்பில் "பொருப்பு" வந்து இறக்கிவைத்தால் சேயை!பின் தகப்பனுக்கு தோள் மேல் பொறுப்பாய் சேவை செய்யவேண்டிய தருணம்! அந்த சேயை நல்லபடியாய் உருவாக்கி தரணும்!அந்த பொறுப்பு தானாய் வரணும்! அன்னைக்கு (ஈன்ற பொழுதுமட்டும்)மட்டுமே முடிந்துவிடும் பொறுபல்ல! என்றைக்கும் உள்ள பொறுப்பு அது தந்தைக்கு உரிய கடமை!
விற்றுத் தீர்த்தப் பொருளின்மீது
பற்று
அற்றுப் போகும் வியாபாரிபோல்
பெற்று விட்டால் முடிந்ததா – வாழ்வைக்
கற்றுத் தர வேண்டாமா
பெற்றெடுத்தது ஒரு
வெற்றுப் பிண்டமென்றாகுமா
---------------------------------------
சுபஹானல்லா!சுபஹானல்லா! இப்படி ஒரு வாழ்கைப்பாடத்தின் மொத்த இலக்கணத்தையும் இப்படி மெத்தபடித்த மேதையே நீவிர்!பிள்ளை பெத்ததைவிளக்கும் இந்த சிறு வாய்புகளில் அத்தனையும் சொல்லும் ஆற்றல் வாய்க பெற்றது பெரும் பேறு தானே? எங்கள் ஊருக்கும்,உங்கள் பேருக்கும்!
விற்றுத் தீர்த்தப் பொருளின்மீது
பற்று
அற்றுப் போகும் வியாபாரிபோல்
பெற்று விட்டால் முடிந்ததா – வாழ்வைக்
கற்றுத் தர வேண்டாமாபெற்றெடுத்தது ஒரு
வெற்றுப் பிண்டமென்றாகுமா
---------------------------------------
ஒவ்வொரு ஆக்கத்துக்கும் ஒரு கருப்பொருள் இருக்கும். இந்த கவிதை கருவுக்கு நீவிர் பொருளோடு ஒரு ஒப்பனையை பொருள்பட எழுதியசுவை ,பல பொருள்பட வைக்கும் சிந்தை! நீவிர்! அருள்வாய்க்கபெற்றவரே(கவிதையையும், குழந்தைகளையும்)
----------------------
கருவெண்பது கரு,கரு என வளரும் மயிரா?கண்டும் காணாமல் செல்ல அது உயிர் ஈன்ற மற்றொரு உயிரல்லவா?
இரும்பேயானாலும்
இற்றுப் போகுமுன்
சுட்டும் அடித்தும்தானே
வலுவேற்றனும் வடிவேற்றனும்
--------------------------------
புடம் போடும் பாடம் சொல்லியுள்ளார் கவிஞர்! நாம் நன்றாக வார்க்கும் கொல்லன்! நாம் சரியாக வார்க்காவிட்டாள் ,ஒரு சீரான கோணத்தில் வடித்தெடுக்காவிட்டாள் வீணாகி போகுமே நம் குழந்தைகளின் வாழ்வு.ஆடி கறக்குற மாட்ட ஆடி கறக்கனும்,பாடி கறக்குறமாட்ட பாடி கறக்கனும்.இது சூத்திரம் என்றால் இதை பற்றி நடந்தால் நம் கோத்திரம் தழைக்குமே!
தகப்பன் என்றாகும்வரை
தவிப்பதுவும்
வளர்த்தெடுக்கும் சிரத்தைகளைத்
தவிர்ப்பதுவும்
தறுதலைப் பிள்ளையெனக் கேட்டுத்
துடிப்பதுவும்
தேடி வாங்கும் தேனீக் கடி
---------------------------------------------
தேனீக் கடி மட்டுமெல்ல இது சவுக்கடி!முதலிலேயே கவனிக்காதது பின் முற்றிய பின் வருந்துவது எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகும். எனவே இளைதாக முள் மரம் கொல்க!வளரும் போதே நல்லா பாத்திகட்டி வளரும் செடி மரமாய் வளர்ந்து பலன் தருவதுபோல் நம் குழந்தையையும் கவனிப்புடன்,அக்கறையுடன் வளர்ப்பது நம் கடமை!
தகப்பன் கடமையைத்
தவறாமல் செய்
தனையன் தலைக்கு
இறையச்ச இழைகொண்டு
கடமை என்றொரு
தனிமகுடம் நெய்
உன் பிள்ளை
முடிசூடும் நாளை
எதிர்பார்த்துக் காத்திரு
இம்முறை
காத்திருப்பு
சுமையல்ல சுவையாகும்!
---------------------------------
இறைவழியில் வளர்க்கப்படும் எல்லா குழந்தையும் நாளை மகுடம் சூடும் வேளை! நம் மனங்குளிரும் மேலும் மறுமைக்கும் நல் அமலோடு மரணிக்கும். அல்ஹம்துலில்லாஹ்! நல்லதொரு நீதி போதனை இந்த மொத்த கவிதையும் எல்லாப்புகழும் அல்லாஹுக்கே! கவிஞரே ! வார்தையெல்லாம் நீங்கள் வாரிக்கொண்ட தால் வார்தை பஞ்சம் வாழ்த்த!எனக்கு வார்தை கொஞ்சம் அனுப்பி தருவீங்களா?
//உன் பிள்ளை முடிசூடும் நாளை எதிர்பார்த்து காத்திரு!.......//
பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை தாய்-தந்தையருக்கு தரும் சுமைகூலி தன் தலையில் சுமக்கும் மகுடத்தின் சுமையே! மகனே! உன் மகுடத்தின் சுமை ஈன்றார் நெஞ்சுக்கு என்றென்றும் நீங்கா நற்சுவையே! //
நெறி முறை சாற்றும் கவிதைகள் - நற்கனி தரும் விருட்சத்தின் விதைகள்!.
பாராட்டுக்கள் கவிதைக்கும்-கருத்துக்கும்.
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
என்னை விளித்தவன் ஏது சிறப்பென்று
மன்னன் வினவ மறுமொழி பகர்ந்தனன்
மின்னி வருவது மின்னலை விஞ்சிடும்
சின்னக் குழந்தை சிரிப்பு.
தொட்டியில் தோரணம் தொங்குதல் கண்டதும்
மட்டிலா ஆர்வத்தில் வாஞ்சையுடன் - நீட்டியே
கன்னம் குழையக் கருவிழி பார்த்திருக்கும்
சின்னக் குழந்தை சிரிப்பு.
//இரும்பேயானாலும்
இற்றுப் போகுமுன்
சுட்டும் அடித்தும்தானே
வலுவேற்றனும் வடிவேற்றனும்//.................ஆஹா...ஆஹா...
எழுத.....வார்த்தைகள் இல்லை.
மகுடம் !
நிறைகுடமென..!
முத்திரை பதித்து இருக்கிறது..
இந்த கவிதை கருவுற்று அது உருவானதை ஒரு பதிவாக போடும் அளவுக்கு நிரம்ப இருக்கு விஷயம் !
என்ன செய்யலாம் ?
படம் தலை குணியவில்லை !
நுணியில் இருக்கும் துளி பட்டென்று உருண்டு தரையில் விழுந்து சிதறி விடாமல் இருக்க இலை பணிந்து கொடுக்கிறது !
இறக்கமுள்ள இலை சுமைதாங்கியாகவும் நிற்கிறது !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஒரு 16 மணி பறக்கும் தூர அலைபேசி உரையாடலின்போது கிரவுனுடனான குசல விசாரிப்புகளினூடே பற்றிக் கொண்டதுதான் இதன் கரு.
இதைத் தயாரிப்பாளருக்கு கதை சொல்லிக்காட்டும் புது இயக்குநரின் தோரணையில் கிரவுன் விவரிக்கும்போதே எழுதியும் முடித்துவிட்டார்; எழுத்துரு மட்டுமே என்னுடையது.
யதார்த்தமான ஆதங்கத்தோடும் சமூகப் பொறுப்போடும் சிறிதும் தடுமாறாத இலக்கியத் தமிழோடும் அவர் விவரித்த்போதே அதை அப்படியே பதிவு செய்து இங்கே ஒரு ஒலிவடிவக் கவிதையாகப் பதிந்திருந்தால் நிச்சயமாக இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
கிரவுன் எடுத்துக் கொண்ட கரு, நம் இஸ்லாமியர்களின் தற்கால பின்னடைவிற்கான பிரதானக் காரணம் என்பது என் அபிப்ராயம். தகப்பன் பிள்ளைகளைப் பொறுப்போடு நல்லவனாகவும் வல்லவனாகவும் வளர்த்தாலே நம் சமூகம் தானாகவே மேன்படும்.
கவிதையை விட கருவையே நான் பாராட்டுகிறேன்.
nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
படம் தலை குணியவில்லை !
நுணியில் இருக்கும் துளி பட்டென்று உருண்டு தரையில் விழுந்து சிதறி விடாமல் இருக்க இலை பணிந்து கொடுக்கிறது !
இறக்கமுள்ள இலை சுமைதாங்கியாகவும் நிற்கிறது !
-------------------------------------------------------
நானும் கண்டேன் மேனியெங்கும் "புல்லரித்தது!இது(fullலா-) புல்"தரித்தல்"(கருவுற்று)சுமைதாங்கியாக இருப்பதுவும் சாலப்பொருத்தம்!
sabeer.abushahruk சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஒரு 16 மணி பறக்கும் தூர அலைபேசி உரையாடலின்போது கிரவுனுடனான குசல விசாரிப்புகளினூடே பற்றிக் கொண்டதுதான் இதன் கரு.
இதைத் தயாரிப்பாளருக்கு கதை சொல்லிக்காட்டும் புது இயக்குநரின் தோரணையில் கிரவுன் விவரிக்கும்போதே எழுதியும் முடித்துவிட்டார்; எழுத்துரு மட்டுமே என்னுடையது.
யதார்த்தமான ஆதங்கத்தோடும் சமூகப் பொறுப்போடும் சிறிதும் தடுமாறாத இலக்கியத் தமிழோடும் அவர் விவரித்த்போதே அதை அப்படியே பதிவு செய்து இங்கே ஒரு ஒலிவடிவக் கவிதையாகப் பதிந்திருந்தால் நிச்சயமாக இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
கிரவுன் எடுத்துக் கொண்ட கரு, நம் இஸ்லாமியர்களின் தற்கால பின்னடைவிற்கான பிரதானக் காரணம் என்பது என் அபிப்ராயம். தகப்பன் பிள்ளைகளைப் பொறுப்போடு நல்லவனாகவும் வல்லவனாகவும் வளர்த்தாலே நம் சமூகம் தானாகவே மேன்படும்.
கவிதையை விட கருவையே நான் பாராட்டுகிறேன்.
----------------------------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம்.பெருந்தன்மையின் வெளிப்பாடு!கவிதையின் வீரியம் பெருசு! நான் சொன்ன கரு சிறுசு!ஆனாலும் தான் பெரியவன் தான்னு சொல்லாமல் சொல்லும் பெருந்தன்மைக்கு எப்பொழுதும் சொந்தகாரர் என் அன்பிற்குரிய(மன்னிக்கவும் நம் அன்பிற்குரிய)கவிஅரசன் காக்கா சபீர் அவர்கள்.
உரு: சபீர் ஃ பிரோன்ட் வீல் டிரைவ்
கரு: கிரவுன் பேக் வீல் டிரைவ்
சபீர் + கிரவுன் = 4 வீல் டிரைவ்
எழுத்துரு மட்டுமே என்னுடையது.
------------------------------------------
இந்த ஒருவரியை மட்டும் உற்று நோக்கினால் புரியும் , கருசொன்னவுடன் அது உருவெடுப்பது எவ்வளவு சிரமம்! ஆனால் எழுத்துருவில் எழுந்திரு! சமூகமே விழித்தெழு! தூங்கியது போதும். பொறுப்பு இன்னும் உள்ளது என தட்டியெழுப்பியது உங்கள் திறமையும் சமூக அக்கறையும் தான்.
Shameed சொன்னது…
உரு: சபீர் ஃ பிரோன்ட் வீல் டிரைவ்
கரு: கிரவுன் பேக் வீல் டிரைவ்
சபீர் + கிரவுன் = 4 வீல் டிரைவ்
----------------------------------------------
சபிராக்கா!சகோ.சாகுல் நம்ம நல்லா ஓட்டுரார்(சும்மா தமாசு) இவர் நல்ல ஓட்டுனரும் கூட!
//உரு: சபீர் ஃ பிரன்ட் வீல் டிரைவ்
கரு: கிரவுன் ரியர் வீல் டிரைவ்
சபீர் + கிரவுன் = 4 வீல் டிரைவ்//
ஹமீது, மிகவும் ரசித்த சமயோஜித கருத்து. மேலும், மிகவும் பொருத்தமானதும்கூட.
sabeer.abushahruk சொன்னது…
//உரு: சபீர் ஃ பிரன்ட் வீல் டிரைவ்
கரு: கிரவுன் ரியர் வீல் டிரைவ்
சபீர் + கிரவுன் = 4 வீல் டிரைவ்//
ஹமீது, மிகவும் ரசித்த சமயோஜித கருத்து. மேலும், மிகவும் பொருத்தமானதும்கூட.
--------------------------------------------------
எதா இருந்தாலும் நீங்க அந்த துறையைச்சார்ந்தவர் அல்லவா? முன்,பின் சக்கரத்தை கழட்டிமாட்டவோ, மாத்தி உருவாக்கவோ முடியும் அந்த கனிப்பொறியாலரும் நீங்கதான் கவிச்சக்கரவர்தியும் நீங்க தான். நீங்கலாக நான்!
\\சிதறி விடாமல் இருக்க இலை பணிந்து கொடுக்கிறது !
ஐயம் களைதல் ஆன்றோர்க்கழகு என்பதை நிரூபிக்கும் வண்ணம் அழகிய காட்டுடன் விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி!
அன்பின் தம்பிகளே!
கிரவுன் அவர்களை கவிதைப் பதிவு எழுதுங்கள் என்று பல நாட்களாய்க் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இப்போது கரு தந்து தொடங்கி இருக்கிறார். விரைவில் உருவும் அவரே தருவார் என எதிர் பார்க்கலாம்.
தந்த கருவை உருவாக்கி உளவவிட்ட தம்பி சபீரின் வார்த்தை வெண்சாமரம் நமக்குப் புதிதல்ல. இருந்தாலும் இதயத்தை சுரண்டுவதுபோல் ஒரு உணர்வு.
சாகுல் ! நீ சொன்னதுதான் சரி.
முத்தமெனும்
முத்திரை பதிக்க
சின்னம் தான்
கன்னம்
நித்தமும் அதில்
முத்தமிட்டாலும்
செல்லுபடியாகும்
திண்ணம்
நாவெனும்
உமிழ்மை
எழுதுகோல்
வரையும்
அன்பெனும்
மடல்கள்
இதழ்கள்
இதயமெனும்
இணையத்தினை
திறக்க உதவும்
கடவுச்சொல்
உனது பெயர்ச்சொல்
மின்னஞ்சலின்
மின்னல்
வேகத்தினையும்
மிஞ்சும் உன்
கன்னக் குழி
புன்னகை மொழி
மிருதுவான உன் உடலே
விசைப்பலகையாய்
அசைத்திடும் என் விரல் பட்டதும்
இசைத்திடும் இனிய பாடலே
மழலை மொழீயிலே
”வலிமா ”விருந்துண்ண
வாய் தவித்தாலும்
கலிமா சொல்லும் உன்
மழலை தான்
எனக்கு விருந்தாகும்
பஞ்சு பாதங்கள் பட்டதும்
நெஞ்சின் பாரங்கள் விட்டதும்
பிஞ்சு மருத்துவரின்
அக்குபஞ்சர் வைத்தியமோ
அடம்பிடித்தும் அழுகின்ற நீயே
படம்பிடித்தால் சிரிக்கின்றாயே
உதைக்கின்றாய் உன்காலால்
கதைக்கின்றாய் உன்மழலையால்
விதைக்கின்றாய் பாசத்தை
அதையே சொல்வோம் கவிதை என்றே...
-
http://kalaamkathir.blogspot.ae/2012/01/blog-post_20.html (வெள்ளி, 20 ஜனவரி, 2012)
\\கிரவுன் அவர்களை கவிதைப் பதிவு எழுதுங்கள் என்று பல நாட்களாய்க் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இப்போது கரு தந்து தொடங்கி இருக்கிறார். விரைவில் உருவும் அவரே தருவார் என எதிர் பார்க்கலாம். \\
ஆம். அதற்காகத்தானே அலங்காரத் தோரணங்களாய் வருக வருக என்று வரவேற்க என் சார்பில் பின்னூட்டங்களில் “குழந்தைக் கவிதைகளை”க் கட்டி விட்டேன்; புதியன தொடுத்தும்; பழையன மீள் பதிவாய் எடுத்தும்!
இலண்டன் இளங்கவி ஜாஃபர் மற்றும் அமெரிக்க அழகுகவி ஷஃபாத் ஆகியோர்க்கும் முன்னரே அழைப்பு விடுத்திருக்கிறேன்.
கவியன்பன்,
பதிவோடு ஒத்த கருத்துகளாக பெரும்பாலும் கவிதைகளாகவே பதிவது உங்களிடம் எனக்குப் பிடித்த ஒன்று. தமிழின் எல்லா வடிவத்திலிருந்தும் எனக்கு கவிதையாக வாசிக்கவே பிடிக்கும். வேறு எந்த வடிவமும் ஆரம்பத்திலேயே ஈர்க்காவிடில் இரண்டாவது பாராவிலேயே ஜகா வாங்கி விடுவேன்.
இன்னும் சிலரின் கருத்துகள் கவிதை வடிவாக இருக்காதேயன்றி கவிச்சுவை இருக்கும்.
அவ்வகையில் தங்களின் கருத்துகளிலிருந்து என்னை மிகவும் கவர்ந்தவைக் கீழே:
//தலைகளைத் தந்தையாக்கும் ரசவாதத் தொருகுளிகை;/:
//அம்மா அழகென்றால்
நீ “அம்மா” என்றழைப்பதில்
அழகும் அழகு பெறுகின்றது;/:
//சின்னஞ் சிறிய கருவுக்குள் குழந்தையெனும்
சித்திரத்தை வரைந்து அனுப்பியது யார்?//
Wonderful
//படம் தலை குணியவில்லை !
நுணியில் இருக்கும் துளி பட்டென்று உருண்டு தரையில் விழுந்து சிதறி விடாமல் இருக்க இலை பணிந்து கொடுக்கிறது !
இறக்கமுள்ள இலை சுமைதாங்கியாகவும் நிற்கிறது !
-------------------------------------------------------
நானும் கண்டேன் மேனியெங்கும் "புல்லரித்தது!இது(fullலா-) புல்"தரித்தல்"(கருவுற்று)சுமைதாங்கியாக இருப்பதுவும் சாலப்பொருத்தம்!//
அபு இபு/ கிரவுன்,
நீங்க ரெண்டு பேரும் கள்ளக்கடத்தலே பண்ணி பிடிபட்டாலும் கவிதைத் தமிழை வைத்து கேஸா இல்லாம பண்ணிடுவீங்க. ரெண்டுபேரும் அப்பவே அப்படி...இப்ப சொல்லவும் வேணுமா?
மேலும் இந்தப் பதிவை வாசித்த, கருத்திட்ட அனைத்து பொறுப்புள்ள தகப்பனார்களுக்கும் என் மற்றும் கிரவுனின் நன்றியும் வாழ்த்துகளும்.
வஸ்ஸலாம்
\\ கவியன்பன், பதிவோடு ஒத்த கருத்துகளாக பெரும்பாலும் கவிதைகளாகவே பதிவது உங்களிடம் எனக்குப் பிடித்த ஒன்று. தமிழின் எல்லா வடிவத்திலிருந்தும் எனக்குக் கவிதையாக வாசிக்கவே பிடிக்கும்.//
உங்களின் உளம்நிறைவான உத்தரவுக்கு மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
உத்தரவின்றி உள்ளே தோரணங்கள் கட்டிவிட்டேன் என்று உள்ளூர அஞ்சினாலும்
1) இப்பொழுது உங்களின் எழுத்துப்பூர்வமான உத்தரவும்; கருத்துப்பூர்வமான அங்கீகாரமும் கிட்டியதில் என் அச்சமும் ஐயமும் விலகின.
2) எம் கவிதைகட்குத் தொடர் பின்னூட்டங்களாகவே நிரப்பி எம்மைக் குளிர வைக்கும் க்ரவுனாரின் கருவென்பதாலும் இன்று அவர் வழியில் இவ்வாறு கவிதைத் தோரணங்கள் கட்டிவிட்டதும் ஓர் அளவிலா மகிழ்ச்சியே ஆகும்.
//இலண்டன் இளங்கவி ஜாஃபர் மற்றும் அமெரிக்க அழகுகவி ஷஃபாத் ஆகியோர்க்கும் முன்னரே அழைப்பு விடுத்திருக்கிறேன்.//
எம் ஹெச் ஜேயிடமிருந்து ட்டீ வந்து அறுந்தியாயிற்று.
ஷஃபாத்தினுடைய ஸ்ட்ராங்க் ட்டீ ஒன்று மிக விரைவில், இன்ஷா அல்லாஹ்.
sabeer.abushahruk சொன்னது…
//உரு: சபீர் ஃ பிரன்ட் வீல் டிரைவ்
கரு: கிரவுன் ரியர் வீல் டிரைவ்
சபீர் + கிரவுன் = 4 வீல் டிரைவ்//
//ஹமீது, மிகவும் ரசித்த சமயோஜித கருத்து. மேலும், மிகவும் பொருத்தமானதும்கூட.//
நேற்று ! இன்று ! நாளை ! இந்த கட்டுரைக்கும் இந்த பின்னுடம் பொருந்தும்
ஆக்கம்: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc; ஃ பிரன்ட் வீல் டிரைவ்
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி ரியர் வீல் டிரைவ்
: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc; + இப்ராஹீம் அன்சாரி = 4 வீல் டிரைவ்
அதிரை நிருபரில் நிறைய 4 வீல் டிரைவ் ஓடுது
crown சொன்னது…
பஞ்சு பாதங்கள் பட்டதும்
நெஞ்சின் பாரங்கள் விட்டதும்
பிஞ்சு மருத்துவரின்
அக்குபஞ்சர் வைத்தியமோ
-------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். கவியரசே! என்ன செய்யலாம் இந்த கவிதீபத்தை ஏதாவது ஒரு தீவுக்கு கடத்திச்சென்று நித்தம் இதுபோல் கவிதை கேட்கலாமா?இவருடன் தங்கும் அறை மனுசன் கொடுத்துவச்சவர் போங்க!
எம் கவிதைகட்குத் தொடர் பின்னூட்டங்களாகவே நிரப்பி எம்மைக் குளிர வைக்கும் க்ரவுனாரின் கருவென்பதாலும் இன்று அவர் வழியில் இவ்வாறு கவிதைத் தோரணங்கள் கட்டிவிட்டதும் ஓர் அளவிலா மகிழ்ச்சியே ஆகும்.
-------------------------------------------------------------
இந்த ம"குடம்" இன்னும் வரவங்க வந்து நிரப்பாததால் நிறையா குடமாய் இருக்கு சீக்கிரம் நிரப்புங்க அன்பர்களே! இது நம்மலபத்தி(வாப்பாமார்களை) வாத்தியார் எழுதிய கவிதை!
\\அஸ்ஸலாமுஅலைக்கும். கவியரசே! என்ன செய்யலாம் இந்த கவிதீபத்தை \\
வ அலைக்கும் சலாம் வார்த்தைச் சித்தரே!
\\யதார்த்தமான ஆதங்கத்தோடும் சமூகப் பொறுப்போடும் சிறிதும் தடுமாறாத இலக்கியத் தமிழோடும் அவர் விவரித்த்போதே அதை அப்படியே பதிவு செய்து இங்கே ஒரு ஒலிவடிவக் கவிதையாகப் பதிந்திருந்தால் நிச்சயமாக இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.\\
இக்கருத்தை வழிமொழிகிறேன். சென்ற ஈராண்டுக்கு முன்னர் விடுமுறையில் இருந்த வேளையில், அமெரிக்காவிலிருந்து தாயகத்திற்கு அலைபேசி ஊடே அழகுதமிழில் அடுக்கு மொழியில் கவிதைகளாய்ப் பேசிய போதினிலே இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே இந்தக் கிரவுனாரின் வார்த்தை அருவிகளாய்! வல்லவன் அவர்க்குக் கொடுத்த வரம் என்போம்.!!
மாஷா அல்லாஹ்!
உன்னைப் பற்றி என்னுடைய கணிப்பு:
தேனூறும் கவிசொலும் சித்தன் – அதன்
...............தீஞ்சுவை விரும்பிடும் பித்தன்
நானூறு வார்த்தைகளைக் கொத்தாய்- நொடியில்
...............நாவழியே கவிமாளிகைக் கட்டும் கொத்தன்
அஸ்ஸலாமுஅலைக்கும். இப்படியெல்லாம் புகழ்ந்தால் அடியேன் செத்தேன்" இருந்தாலும் உங்க கவிதை செந்தேன்!மகிழ்ந்தேன்!ஆனாலும் புகழ்சி நெருப்பில் வெந்தேன்! நொந்தேன்! இருந்தாலும் தெளிந்தேன் ! இது அன்பினால் அருளபட்ட வார்த்தையை படித்தேன்! தேன் அடையை அடைந்தேன்!ஆனாலும் அல்லாஹுக்கே புகழனைத்தும் என்பதால் அஞ்சினேன்! அல்லாஹ்விடம் கெஞ்சினேன்! என்னை மன்னிப்பாயா அல்லாஹ்வே இந்த அடிமையை மன்னிப்பாயா? அமீன் ,ஆமீன்
இன்று என் “யாப்பிலக்கண வகுப்பு- சந்த வசந்தக் குழுமத்தில்” இணையக் கவியரங்கில் (ஆன்லைன்) தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறேன்; எனக்குக் கொடுக்கப்பட்டத் தலைப்புடன் காத்திருக்கிறேன்; அழைப்புக்காக. அதனால் இன்று முழுவதும் அவ்வகுப்பிலிருந்து விட்டதாற்றானோ, எனக்குள் ஊறும் எண்ணங்கள் எல்லாம் இன்று கவிதைத் தோர்ணங்களாய்க் கட்டி விட்டேன் இம்மன்றலில் என்று நினைக்கிறேன். நிற்க. அவ்வகுப்பில் சற்று முன் நடத்தப்பட்ட “வல்லின முடுகு” என்னும் வாய்பாட்டில் ஒரு நேரிசை வெண்பா எழுதச் சொன்னார்கள்; கருவை உங்களின் இந்தக் குழந்தை (மகுடம்) தான் நினைவில் நின்றதால் இதோ அந்த வெண்பா:
சத்தமிலா முத்தமிடும் வித்தகமே மொத்தமுமாய்ப்
பத்திரமாய் வைத்திருக்கும் சொத்தெனக்குச்- சித்தமதில்
நித்தமும்நான் பொத்திவைத்த அத்தனையும் எத்தனிப்பேன்
அத்தருணம் ஒத்துவரும் காத்து
adiraimansoor சொன்னது…
சபீரின் கவிதைக்கு
கவியன்பனும் கிரவுனும் சேர்ந்து மாத்தி மாத்தி
இந்த சாத்து சாத்திரியலே நான் எதை ரசித்து படிப்பது என்று தினரியபடியே
படம் பார்க்கும் போது சிலபேர் பாட்டை ஓட்டிவிடுவது போன்று எல்லாத்தையும் பொருமையா படிக்க நேரமில்லாமல் ஓட்டிவிட்டுடேன்
கவிதையையும் ரசனைக்கு விடவேண்டிய பொறுப்பு உள்ளவர்களே இப்படி செய்தால் நாங்கள் எப்படி ரசிப்பது?
முத்துபேட்டை தர்காவில் பேயாடுவது போன்று மாரி மாரி சாத்தினால் எப்படி.
கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமக தாருங்கள்
அப்பொழுதுதான் பொறுமையாக ரசித்து படிக்கலாம்.
அன்பின் இனிய நண்பா, மன்சூர், அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் என்றைக்கும் இல்லாத மகிழ்ச்சியில் திளைத்து விட்டேன்; உங்கள் அன்பு மச்சானின் கரு என்று இக்கவிதையை உருவாக்கியவர் சொல்லிவிட்டதால் உங்கள் மச்சானை வரவேற்கும் இந்தப் பந்தலில் நான் கவிதைத் தோரணங்கள் கட்டி விட்டேன். மேலும், குழந்தை என்றதும் கவிதைதான்; கவிதை என்றதும் குழந்தைதான் என்பதும் வள்ளுவன் முதல் சபீர் வரை அறிந்த ஒன்று. அதனாற்றான், இப்படித் திணற வைத்து விட்ட ஓர் உணர்வு உண்டாகி விட்டது; பொறுமையாகப் படிக்கலாம்; இது மின்பதிவு தானே; கிழித்துப் போடும் காகிதப் பதிவு அல்லவே! கறையான்கள் அழிக்கும் ஒலைச் சுவடிகளிலும், காகித நூல்களிலும் இன்னும் கவிதைகள்/செய்யுள்கள் வாழும் பொழுது, அழியாத இந்த மின்பதிவு என்றும் உங்கட்குத் துணை செய்யும்; நேரம் கிட்டும் பொழுது அமைதியாகப் படியுங்கள்.
மகுடம் ஆக்கத்து கருத்திட்டவர்களை வைத்து ஒரு கவியரங்கம் நடத்தலாம். சாப்பாடு நான் ஸ்பான்சர்..,மந்தி இல்லை - நாசிலேமாக்"
மனதைக் குளிரவைத்த மகுடம்...குதூகலம் கொள்ளவைத்த கவிக்காக்கா + கிரவுன் கூட்டணி......எங்களைப்போன்ற இளம் தகப்பனார்-களுக்கு அறிவுரை/பாடம் இக்கவிதை....நன்றி காக்கா
\\மகுடம் ஆக்கத்து கருத்திட்டவர்களை வைத்து ஒரு கவியரங்கம் நடத்தலாம். \\
தமியேன் ஆயத்தமாகவே உள்ளேன் சகோதரா! இன்றும் “ஆன்லைன்” நேரலை கவியரங்கில் தான் கணினியைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறேன் என் யாப்பிலக்கண வகுப்பு, “சந்த வசந்த இணையக்குழுமம்” நடத்தும் ஒரு கவியரங்கில் உலகளாவிய பெரும்புலவர்கள் \பாவலர்கள்/கவிமாமணிகள் அரங்கேற்றும் இக்கவியரங்கில் அடியேனையும் அழைத்துள்ளனர்; அதிலும், எங்கள் குழுவின் நிறுவனரும், தலைமை ஆசானுமாகிய இலந்தையார் என்னும் சுப்பையர் இராமசுவாமியார் (நியூஜெர்சி) அவர்களை அடுத்து இரண்டாம் அழைப்பாளானாகத் தமியேனின் பெயரும் இடப்பட்டுள்ளதால், நேற்று அன்னாரின் பெயர் விளிக்கப்பட்டு அவர்களின் கவிதை அரங்கேறி விட்டது; இனி, அடுத்து என்றன் பெயர் விளிக்கப்படும் என்று கணினியைத் திறந்த வண்ணம் உள்ளேன்; இதே நேரத்தில் நீங்களும் கவியரங்கை நடத்துவீர் என்பதைக் காணுறும் போதில் “கரும்பு தின்னக் கூலியா?” என்றே கருதி மகிழ்வேன் உளவியலார் அவர்களே!
இரு தினங்களாக அவ்வகுப்பில் முதலிருக்கையில்(வழக்கம்போல்) அமர்ந்தவனாகவே இருப்பதாற்றான் என்னால் மேலே உடனுக்குடன் கவிதைத் தோரணங்களைக் கட்டி முடிக்க முடிந்தது. இதோ; கீழே மற்றுமொரு பாடல் (இதுவும் அவ்வகுப்பில் நேற்று நடந்த “வல்லின முடுகு” என்னும் வாய்பாட்டில் நேரிசை வெண்பா எழுதக் கற்று தரப்பட்டதன் விளைவேயாகும்; இந்த “மகுடக்குழந்தை” தான் இன்னும் என்னுள் கருவாய் இருப்பதால்:
துள்ளியெழும் கிள்ளைமொழிப் பிள்ளையிடம் கொள்ளைகொள்ளும்
கள்ளமிலா வெள்ளையுள்ளம் வெள்ளமென அள்ளிவந்து
பள்ளமெனும் உள்ளமதில் கொள்ளுவதால் தெள்ளுதமிழ்
வள்ளுவனின் பள்ளியிலும் உள்ளு
அவர்கள் வகுப்பில் நேற்று நடத்திய வாய்பாட்டின் விதியில் இந்தக் கருவில் உருவானதே மேற்காணும் வெண்பாவாகும். இதனைப் பாராட்டி எனக்கு மதிப்பெண்ணும் வழங்கி விட்டார்கள் எங்கள் வகுப்பின் தலைமை ஆசான் உயர்திரு. இலந்தையார் அவர்கள் இவ்வாறு:
2013/9/13 Subbaier Ramasami
சரியாக இருக்கிறது.
இலந்தை
Post a Comment