Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நீரடிச்சு நீ(ர்)தம் விலகாதீர் ! 93

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , , , ,

அதிரை குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு தன்னார்வலர்கள் மேற்கொண்ட முயற்சி, அதனால் சிலரிடம் எழுந்த காழ்ப்புணர்வுள், இணைய கருத்துப் பரிமாற்றங்களால் எழுந்த நீயா-நானா மனப்பான்மை, இவற்றையெல்லாம் மீறிய அரசியல் குறுக்கீடுகளால் தற்போது தடைபட்டுள்ள நீர் வரத்து குறித்து இணைய தளங்களில் வெளியான பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் இவற்றையெல்லாம் கண்டபிறகு நானறிந்த சில விளக்கங்கள் மூலம் 

சிலரின் தவறான புரிதலை நீக்கும் என்று நம்புகிறேன்.

1) காவிரி கடைமடை பகுதியான அதிரைக்குத் தேவையான நீர்வரத்து கிழக்கில் நசுவினி ஆற்றிலிருந்தும், மேற்கில் ராஜாமடம் அருகே கடலில் கலக்கும் ஆற்றிலிருந்தும், பள்ளிகொண்டான் அருகேயுள்ள செல்லிகுறிச்சி ஏரியிலிருந்தும் கிடைக்கிறது என்பதை அதிரையர்கள் அறிவோம். அவ்வகையில் ராஜாமடம் வழியாகக் கடலில் கலக்கும் ஆற்றுநீரை ஊருக்குள் திருப்பிவிடும் முயற்சியை தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பேரூராட்சி சேர்மனும் முன்னின்று செய்தார். 

2) ராஜாமடம் ஆற்றிலிருந்து வரும் நீரை ஊருக்குள் கொண்டு வரும் வழித்தடமாக சி.எம்.பி வாய்க்கால் இருந்து வந்தாலும், குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் இந்த வாய்க்கால் அடைபட்டிருந்ததையும் அறிவோம். இந்த வாய்க்காலை சீர்செய்வதன்மூலம் அதன்வழியாக ஆலடிக்குளம், செக்கடிகுளம், காட்டுக் குளம், மரைக்காயர் குளம், நடுத்தெரு கீழ்புறமுள்ள செட்டியாகுளம், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளி குளம் ஆகியவற்றை நிரப்ப முடியும்.

3) சி.எம்.பி வாய்க்காலில் வரும் தண்ணீர் வரத்து பட்டுக்கோட்டை சாலை வழியாக வெள்ளக் குளம்,கரிசல் மணி வழியாக சி.எம்.பி வாய்க்கால் மூலம் செக்கடி, ஆலடி, மரைக்காயர் ஆகிய குளங்களுக்குச் செல்கிறது.

4) நமதூரின் இயற்கை நீர்வரத்து வழிகளை வைத்துப் பார்க்கும்போது செக்கடி குளம் நிரம்பினால் ஆலடிக்குளம், செட்டியாகுளம்,புதுப்பள்ளி குளம் ஆகியவற்றிற்குள்ள வாய்க்கால் மூலம் அடுத்தடுத்து நான்கு குளங்கள் நிரம்பும். 

5) ஆலடி குளம் நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் நீர் மண்ணப்பன் குளத்திற்கும் யானையன் குளத்திற்கும் செல்லும்.யானையன் குளம் நிரம்பி மெயின்ரோடு வழியாக செல்லியன் குளம், நாரக்குட்டை ஆகியவை நிரம்பும். ஆஸ்பத்திரி தெருவிலிருந்த இன்னொரு வழித்தடம் மூலம் புதுப்பள்ளி குளத்திற்கு இருவழிகளில் நிரம்பும் வசதி இருந்தது.

6) மேற்கிலிருந்து ஆறு வழியாகவும், செல்லிக் குறிச்சி ஏரி வழியாகவும் நீரவரத்து இருக்கும் போது இவ்வாறு செயல்பட்டால் தான் மேற்கண்ட குளங்கள் நிரம்பும் என்பதை அறியாமல், செக்கடிக் குளத்திற்கு மட்டும் ஏன் நீரை அனுப்ப வேண்டும்? மற்ற குளங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று புலம்புவதில் நியாயம் இல்லை.

7) ஒரு குளத்தில் போதுமான நீர் இருப்பு இருந்தால் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது இயற்கை. அவ்வகையில் ஊரின் நடுவில் நீர் நிரம்ப தயார் நிலையில் இருக்கும் செக்கடி குளம் நிரம்புவதன்மூலம் புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன்,செக்கடித்தெரு,நடுத்தெரு,ஆலடித்தெரு,செட்டித்தோப்பு ஆகிய பகுதிகள் பலன்பெறும்.

8) மூலிகைக் குளியலுக்குப் பேர்பெற்ற நமதூரின் செடியன் குளத்திற்கு நீர்வரத்து, ராஜாமடம் ஏரியிலிருந்து ரயில்வே பாதையையொட்டிய ஓடைகள் மூலமே சாத்தியம் என்பது தெரிந்தும், வந்துகொண்டிருந்த ஆற்றுநீர் திட்டமிட்ட குளங்களுக்குள் வந்தடைவதற்குள்ளாக செடியன் குளத்திற்கும் நீர்வேண்டி தனியாக கலெக்டரிடம் மணு கொடுத்தது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. 

9) சில வருடங்களுக்கு முன் ஊர் குளங்களெல்லாம் வறண்டு கிடந்தபோது செடியன் குளம் தூர் வாரப்பட்டு அதிக நீர் நிரம்பியதனால் ஏற்பட்ட உடைப்பில் பிலால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அறிவோம். செடியன் குளம் தூர்வாரப்பட்டபோது செக்கடி குளம் கண்டு கொள்ளப்படவில்லை என்று யாரும் கேட்கவில்லை அல்லது இப்பகுதியில் இருந்தவர்கள் அதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை.

10) மேற்ச் சொன்ன இயற்கையான காரணங்களால் செக்கடி குளமும் ஆலடிக்குளமும் நிரப்புவதற்கு முயற்சிகள் நடக்கும்போது, குறிப்பிட்ட குளங்களுக்கு மட்டும் சாதகமாக நீர்வரத்து திருப்பி விடப்படுகிறது என்று குற்றம் சொல்வது நியாயமா?

11) சமீபத்தில் குடிநீர் பஞ்சத்தால் அதிரையின் பாரம்பரிய தெருக்களில் ஒன்றான கடற்கரைத் தெருவுக்கு ரூ.15 லட்சம் செலவில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்தபோது, புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரமும் குடிநீர் பஞ்சத்தில் வாடிய போதும்,சேர்மன் கடற்கரைத் தெருவுக்குச் சாதகாமகச் செயல்படுகிறார் என்று இப்பகுதி மஹல்லாவாசிகள் சொல்லவில்லை. அதுபோல் செய்னாங்குளம் தூர் வாரப்பட்டபோதும் சொல்லவில்லை.

12) நீண்டகால பயன்பாடுகளின் அடிப்படையிலான ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைப்புக்காக அதிரை பேரூராட்சி சேர்மனின் தனியார்வமும், அதனால் சந்தித்த இடையூறுகளும் அறிவோம். ஊர் நலனில் அக்கரை இருந்திருந்தால்,இவ்விசயத்திலும் சேர்மனுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ ஒத்துழைத்திருக்கலாமே! 

13) யாருமே கண்டு கொள்ளாத நிலையில் தன்னார்வலர்களின் முயற்சியால் அதிரை சேர்மன் இவ்விசயத்தில் களம் இறங்கிய பிறகு, இன்னொரு வழியில் ஆற்றுநீரைக் கொண்டு வரப்போகிறோம் என்பதிலிருக்கும் அரசியல் வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும், எப்படியாவது நமதூர் குளங்கள் நிரம்பட்டும், நீர்நிலைகளும்  நீர்மட்டமும் உயரட்டும் என்பதாகத்தானே பலரது எதிர்பார்ப்பும் இருந்தது. 

14) சுயவெறுப்புகளின் அடிப்படையிலும் போட்டிமனப்பான்மையிலும் அரசியல் ஆளுமைகளைத் தூண்டிவிட்டு தண்ணீர் வரத்தைத் தடுத்தவர்களின் முந்தைய செயல்பாடுகளும், இவர்களின் ஒத்துழைப்பின்மை, இடையூறு குறித்து சேர்மன் வைத்த குற்றச்சாட்டு நிரூபனமாகியுள்ளதை நடுநிலையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15) 2014 ஜனவரி 28 ஆம் தேதி வரை காவிரியில் நீர்வரத்து விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டும் என்று அரசு குறிப்பு தெரிவிக்கிறது.எஞ்சியுள்ள நாட்களுக்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காழ்ப்புனர்வுகளைக் கைவிட்டு ஒற்றுமையாகச் செயல்பட்டால் எதிர்வரும்கோடையில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவு சமாளிக்கலாம். இன்ஷா அல்லாஹ். 

இந்த அக்கரையிலும் ஆற்றாமையிலும்தான் இந்த விளக்கங்கள். யாரையும் உயர்த்த அல்லது தாழ்த்துவதல்ல என் நோக்கம்.

வஸ்ஸலாம்,

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

அதிரை உலா - 2013 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , ,

2013 - வது  வருடம் விடைபெறும் தருவாயில் இருக்க  அதனை விடை கொடுத்து அனுப்பும் முன்னர் சென்ற வருட உலகம், சென்ற வருட இந்தியா என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும் கண்டு வருகிறோம். அவைகளையெல்லாம் விடுத்து நாமும் 2012ம் வருடத்தில் பார்த்தது போலவே இவ்வருடமும்  அதிரையின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.


1.பல்லாண்டுகளாய் சாக்கடையும் ஆக்கிரமிப்பும் நிறைந்த நடுத்தெரு பள்ளியின் பின்புறமுள்ள செட்டியா குளத்திற்கு தமிழ்நாடு அரசு மூலம்  நபார்டு உதவி திட்டத்தின் கீழ்  50 லட்சம் ஒதுக்கி அவ்வப்போது  பணி நடந்து முடியும் தருவாயில் உள்ளது. 


2.மக்களின் மடமையை பயன்படுத்தி அவர்களின் மூட நம்பிக்கைக்கு புகைமூட்டி அதில் குளிர்காய எடுத்துக் கொண்ட ஆயுதமாக  இந்த புதிய கல்லறை, அதுவும் ஏற்கனவே இருக்கும் கல்லறைக் கட்டிடத்திற்கு அருகிலேயே புதியதொரு கல்லறை ஜொஹரா அம்மாள் என்று பெயரிட்டு!


3.செக்கடிப்பள்ளிக்கு சொந்தமான அதன் மேட்டுப் பகுதிகளில் பல கட்டிடமாகவும் கீத்துக் கொட்டகைகளாகவும் இருக்க, மற்றொரு கட்டிடம் செக்கடிப்பள்ளி நிர்வாகம் பேரில் கட்டி வருகையில் திடீரென்று அங்கே பேரூராட்சி சார்பில் "இது பேரூராட்சிக்கு சொந்தமான இடம்" என பெயரிட்டு போர்டு  வைத்து கட்டிட தளவாட சாமான்களை பேரூராட்சி அள்ளிச் சென்றது, பேரூராட்சி தலைவரின் கவனத்திற்கு வராமலே! பின்னர்  நிர்வாக  (அரசியலில் நீயா நானா) குளறுபடிகள் கலைந்து அத்தகைய அறிவிப்பு போர்டு நீக்கப்பட்டு பேரூராட்சி தலைவரின் தலையீட்டின் பேரில் செக்கடி பள்ளி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டன. 


4. மார்ச் மாத்தத்தில் தக்வாபள்ளிக்கு புதிய நிர்வாகம் வந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு கூடாது அல்லது சர்ச்சை என நன்கறிந்த   மெளலிது ஓதி நார்சாவுடன் முரண்டு செய்தார்கள். சில முடிவெடுப்பதில் சிலரை கலக்காமலேயே செயல்பட்டதாக வழக்கும் தொடர்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல் பல்லாண்டுகளாய் மார்க்க பயான் செய்த ஹைதர் அலி ஆலிம் அவர்களை நீக்க வழி தெரியாமல் 10 நாள் சஸ்பென்ஸ் மற்றும் மைக் கிடையாது போன்ற சட்டமன்ற சமாச்சாரமெல்லாம் நடந்து முடிந்தன.


5. அல் அமீன் பள்ளி விவகாரத்தில் பல ஆண்டுகளாய் நிலச் சர்ச்சைக்கு தீர்வு கிடைத்து சாதகமான தீர்வு கிடத்தது ஒட்டு மொத்த அதிரையருக்கும் குறிப்பாக "அதிரை எக்ஸ்ப்ரஸ்" வலைத் தளத்தின் முன்னெடுப்பகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். விரைவில் பிரம்மான்ட பள்ளி உருவாகி தொழுகையால் நிரம்ப துஆ செய்வோமாக!


6. மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.  ஒரு கட்டத்தில் நம்மவர்களே நம்மவர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய காவல் துறை பள்ளிக்கு வந்தும் பின் அவரே நானே வருகிறேன் என்று காவல் துறைக்கு போயும் பின்னர் பலதரப்பு பேச்சு வார்த்தை நடத்தி ஓரளவு சுமூக தீர்வுடன் அல்லாஹ்வின் நாட்டபடி அதிரையிலேயே இருக்கிறார்கள்.


7. அதிரையர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் என்ற புதிய முயற்சியாக வர்த்தக திருவிழா என்ற பெயரில்  ஏப்ரல் 28 முதல் மே 12 வரை  ஒரு குழுவினர் சார்பாக நடத்தப்பட்டது. இது கந்தூரிக்கு மாற்றாகவும் மார்க்கத்திற்கு உட்பட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால்  வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இது இப்படியே தொடர்வது மார்க்க விரோதம் என கருதி ஒரு புறம் ஆலிம்கள் தலையீட்டின் பேரிலும் மறுபுறம் கலெக்டரின் தலையீட்டின் பேரிலும் கலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விழா தொடர்ந்தது.


8. கடந்த மேயில் கடற்கரை தெருவில் கல்வி விழிப்புணர்வு மாநாடு அன்னை ஆயிசா மகளிர் கல்லூரி நிறுவனர் சலீம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவுடன் சிறப்பாக நடை பெற்றது.


9. கடந்த ஜூனில் கடைத்தெரு மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டும் நோக்கில் திட்டமிட்டு அஸ்திவார மட்டம் வரை தற்போது எழுந்துள்ளது. துவக்க நிகழ்வில் அடிக்கல் நாட்டு சம்பவ முறையில் சர்ச்சைகள் எழுந்தன. நிர்வாகத்தின் நல்ல நோக்கம் சீக்கிரம் நிறைவேறட்டும். இன்சா அல்லாஹ்.


10.  அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் பெண்களால் அதிரையில்  இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா கடந்த  ஜூனில் அன்னை ஆயிசா அறிவியல் கலை மகளிர்கல்லூரி தாளாளர் பேராசிரியை சயீதாபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள    சிறப்பாக நடைபெற்றது.


11. பேராசிரியர்கள் அப்துல் காதர், பரகத் இவர்களுக்கு பதிலாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் எஸ்.எம் அன்வர் பாட்ஷா அவர்கள்  பள்ளியின் நிர்வாகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


12. சகோ. M.ஜமால் முஹம்மது அவர்களின் மகன் J.மீராசாகிப் குரூப் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்று 2014 ஆம் ஆண்டு நடைபெறும் I A S தேர்வு எழுதவுள்ளார். பொறியியல் பட்டம் பெற்றுள்ள J.மீராசாகிப், சென்னை அண்ணா சாலையிலுள்ள அழகிய கடன் I A S  அகாடமியில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


13. காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  கா.மு.மே.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையுரையுடன், இணையதள எழுத்தாளரும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூத்த பங்களிப்பாளருமான சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சிறப்புரையை ஆற்றி  பேசியதுடன்  பட்டிமன்றப் பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்கார வேலு அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை மற்றும் சிந்திக்க வைத்த பேச்சுடன்  அதிரைநிருபர் வலைதளத்தால் கவுரவித்து வழங்கப் பட்ட “நபிகள் நாயகம்” என்கிற வரலாற்று நூல் நினைவுப் பரிசாக ஆசிரிய ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டது.  அத்துடன் ஆசிரியர் தினம் பற்றிய கவிஞர் சபீர் அவர்களின் கவிதை படி எடுத்து அனைவருக்கும் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் அதிரை அறிஞர் பன்னூலாசிரியர் அதிரை அகமது, பேராசிரியர் அப்துல் காதர், கணிணி தமிழ் அறிஞர் ஜமீல் எம். ஸாலிஹ், மூத்த சகோதரர் முகமது பாரூக். நாவலர் நூர் முகமது, பெற்றோர் சங்க  தலைவர் செய்யது, எல்.எம்.எஸ். அபூபக்கர்,ஆகியோர் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   


14. கடந்த அக்டோபரில் கடைத்தெரு மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. இதிலும் அரசியல் வாதிகள் அத்தனை பேரும் தனக்கே உரிய பானியில் ஆதாயம் அடைய முற்பட்டனர். உண்மை அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இன்னும் கயறு தொழிற்சாலை தீ, சமாதி கூரை தீ, வீடுகள் தீக்கிரை என தொடர்கதையாக உள்ளது. அதிரைக்கென்று தீயணைப்பு வாகனம் ஒதுக்குவதில் அரசின் மெத்தனம் உடனடியாக களையப்பட வேண்டும். வெளியூரில் இருந்து வரும் தீயணைப்பு வாகன தமதித்தால் அவர்கள் மீதே கோபத்தை காட்டி தாக்கிய வேதனைச் சம்பவமும் கடைத்தெருவில் அரங்கேறியது.


15. K M A ஜமால் முஹம்மது அவர்கள் ஆரசியல் ஆதாயம் இல்லாமல் பொது நலனில் அக்கரை கொண்டு பல்வேறு தேவை அறிந்து அரசுக்கு சட்ட ரீதியாக கோரிக்கை வைத்து  அவ்வப்போது சேவையில் சாதித்து வருகிறார். இவரைப் போல தெருவுக்கு நாலு பேர் சமுக அக்கரை கொண்டால் அரசியலே தோற்பது நிச்சயம்.


16. அதிரை தாருத்தவ்ஹீத்  மார்க்க பிரச்சாரங்கள் சிறப்பாக செய்து வருவதுடன் கடந்த இரு சாமதித்திருவிழாவுக்கு எதிராக நேரடி அணுகுமுறை, மற்றும் குறைந்த பட்சமாக  அதனால் மின் துண்டிப்பு தவிர்க்கப்பட மனுச் செய்தும் அதில் வெற்றியும் கண்டது. இன்னும் தொடர் நடவடிக்கைகளால் மார்க்க விரோதங்கள்  முற்றிலும் ஒழியும் என்பதில் ஐயமில்லை. 


17. கடந்த காலம் அதிகமான விபத்துகளை அதிரை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக ரமலான் மாத வாக்கில்  அதிகமான வாகன, உயிர் சேதம் ஏற்பட்டது. 


18. தெருவில் இறங்கி காலி குடங்களுடன் போராட்டம் என்பதெல்லாம் பத்திரிகையில் படித்த செய்தி அன்று. இன்றோ அதிரையில் பெண்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அதிரை பேருராட்சி!


19. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் சட்டத்தாலும் செயலாலும் தடுக்க முடியாமல் தோல்வியுற்ற பேரூராட்சி இன்று சாலைகளில் அலையும்  ஆடு மாடுகளை பிடிப்பதிலும் சட்டம் போட்டு 'லூஸ்' விட்டு அதிலும் தோல்வி கண்டுள்ளது. ஆளுமையின் குறையா அல்லது ஆள்பவரை பிடிக்காத அரசியல்  சதியா? பாவம் அதிரை!


20. ஈ.சி. ஆர் சாலையில் மூன்றடுக்காய் பிரம்மாண்டமாய் காட்சி தரும் இறையில்லம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில்  மீதி வேலை முடித்திட நிதிக்காக காத்திருக்கிறது. இன்சா அல்லாஹ் வழி கிடைக்கும். 


21. சி.எம்.பி.லைனில் அமைந்த  ALM ஸ்கூலில் ஜூம்மா மட்டும் நடந்த இடத்தில் ஐவேளைக்கும் தொழுகைக்கும் மஸ்ஜிதும் உருவாக்கி எளிய முறையில் திறப்பு விழா கண்டு அதிரை மஸ்ஜித் எண்ணிக்கையை மேலும் ஒன்று கூட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.


22. கடந்த தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற S.அப்துல் அஜீஸ் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்., புதிய பொறுப்பு அதிரைக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெருமை சேர்க்க அல்லாஹ் நாடுவானாக!


23. பேரூராட்சி தலைவர் அன்றிலிருந்து இன்று வரை ஏகப்பட்ட சவால்களையும் எதிர்ப்புகளையும் வழக்குகளையும்  எதிர் கொண்டு அதிரைக்காக! போராடி வருகையில் அரசியல் காழ்ப்புணர்வால் திட்டங்கள் கேன்சலாகிய கதையாகவே உள்ளன. நேர்மையும் உண்மையும் வெற்றியாகட்டும். 


24. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் தலைமையில்  நடந்தேறியது, இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப்  பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நம்மை சுற்றியுள்ள   வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத்-மிலன் நிகழ்ச்சி. இந்த வருடத்தின் ஹைலைட் நிகழ்வு இது.


25. அல்லாஹ்வின் நாட்டப்படி மஸ்ஜிதின் கம்பீர தோற்றத்திற்கும், மனம் குளிர இயற்கையை ரசிக்கவும் மண் வளம் கூடிடவும் அல்லாஹ் தந்த அருட்கொடை. இதுபோல் அதிரையின் எல்லா குளமும் நிரம்பிட மனம் ஒன்றிய வலிமையையும்,  மழைநீரையும்  அனைத்து ஆறு ஏரி வளங்கள் வாயிலாகவும் வாய்ப்புகளை தந்தருள்வானாக! 


* இன்ஷா அல்லாஹ் அடுத்த வருட அதிரை-உலாவில் அதிரைக்கு இரயில் போக்குவரத்து, ஷிஃபாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், பாதாளச் சாக்கடைத் திட்டம், அனைத்து குளத்திலும் தண்ணீர், விபத்தே இல்லாப் போக்குவரத்து  இன்னும் எல்லாம் இன்பமாய் காண்போமாக! மார்க்க நெறிக்குட்பட்டு!

M.H.ஜஹபர் சாதிக்
pictures supplied

கண்கள் இரண்டும் - தொடர்-18 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 30, 2013 | , ,


செயற்கை ‘கண்’

பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர். இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர், 'பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது : கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது.

'பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.இந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

செயற்கை செயலற்ற கண்களின் தயாரிப்புகளின் காணொளிகளை காண கீழ் காணும் லிங்கை கிளிக் செய்யவும்.





இதை அடுத்து பார்வையை லேசர் சிகிச்சை பற்றி  அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடரும்
அதிரை மன்சூர்

பேசும் படம் தொடர்கிறது...! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2013 | , , , ,

அதிரைநிருபர் பேசும் படம் சொன்னவைகள் ஏராளம், இதில் இன்னும் இருக்கும் தாராளமாக ! அவ்வகையில் சின்ன சின்ன இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறது மூன்றாம் கண்ணுடைய இளமைப் பார்வையும், துள்ளலும் ஆங்காங்கே எழுத்துக்களின் கிள்ளலும் !

புகைப்படக் கலை என்ற ஒன்றை அறிந்தவர்கள் சிலர் என்றாலும், பலருக்கும் பிடித்த ஒன்றுதான் அந்தக் கலையைக் கொண்டு 'பிடித்த'வைகள்.


"வேகமா போறியளே ஊரில கல்யாண சீஸனாச்சே பார்த்து போங்க !... உடம்புல இருக்கிற பார்ட்ஸ் பத்திரமா பார்துக்குங்க!!"


மீனுக்கு மசாலா போட்டது சரியில்லைன்னு கொற வந்துடுச்சு, அதுனாலே அந்த கொறைய போக்க இந்த பொறிச்ச கோழி போட்டோ (இதுக்கும் ஏதாவது இக்கு வச்சிராதிய)!


ஆத்துலே தண்ணி தொறந்து விட்டுட்டாங்க கச்சல் கட்டிகிட்டு யாரையும் காணோமே!? தஞ்சாவூர் போறவங்க ஆத்தைப் பார்த்து ஆனந்தபடுங்க ஆனா எறன்கிறாதிய !!


பாவம் இந்த பூ'வை பூவையர் யாரும் தலையில் சூடுவதும்  கிடையாது எந்த கவிஞரும் இந்த 'பூ'வை நினைத்து கவி பாடுவதும் கிடையாது !


வெட்டி வச்ச பழமெல்லாம் நல்லாத்தான் இருக்குது வெலய கேட்டா காலு வெடவெடன்னு ஆடுது !


இத உட்கார வச்சிகிதா நிக்கவுட்டு வச்சிகிதா !


ஓல்ட் ஈஸ் கோல்ட்ன்னு சொல்வாங்க ஆனா இது போல்டா இருக்கா இல்லையான்னு பாத்து சொல்லுங்க.


சுண்டால் விக்கிற பையனை காணமேன்னு கம்ளைண்டு பண்ணிறாதிய !


நல்ல வேலை யானைக்கு மணிகட்டி  யானை மேல ஆள் உட்க்கார்ந்து இருக்கு இல்லைன்னா ஊருக்குளே யானை யானையாக புகுந்துடுச்சின்னு நியூஸ் போட்டுருவாங்க !!


அல்லாஹுவின் இந்த பள்ளி வாசல் கட்ட நன்கொடைகள் கொடுத்தவர்கள் ஏராளம், இந்த புளியமரமும் தன் பங்கிற்கு உடலின் ஒரு பாகத்தை பள்ளிவாசலுக்கு நன்கொடை கொடுத்து விட்டு மீண்டும் துளிர் விட்டு வருகின்றது !!

Sஹமீது

அதிரைக்கு தடைகளை மீறி தவழ்ந்து வந்த தண்ணீர் ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2013 | , , , , , ,


நல்ல காரியங்கள் நடக்கும்போது, நெஞ்சில் பால் வார்த்தது போல இருந்தது என்று சொல்வது பண்பாடு ; பழக்கம். 

அத்திப்பட்டியாக மாறிக் கொண்டிருந்த அதிராம்பட்டினம், தார் பாலைவனத்தின் தத்துப் பிள்ளையாக மாறிப் போய் விடுமோ என்ற அச்சம் அதிரை மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேர் இதயத்தையும் சுரண்டிக் கொண்டிருந்த கேள்வியாகும். கடந்த பல வருடங்களாக வானம் பாடிய பஞ்சப் பாட்டு காரணமாக மழை பொய்த்துப் போனது. மேகங்கள் திரண்டு வந்து வேடிக்கை காட்டினவே தவிர மழையாகப் பொழிந்து மகிழ்வூட்டவில்லை. இதனால் ததும்பி, நிரம்பி வழிந்த வரலாற்று சிறப்பு மிக்க அதிரையின் குளங்கள், விளயாட்டுத் திடல்களாக விபரீதமாக மாறிப் போயின. இந்தக் குளங்கள் வறண்டு போனதால் நிலத்தடி நீர் மட்டம் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பூமிக்குள் போனது. செவ்வாய் கிரகத்துக்கு சந்திரயான் அனுப்பி வைப்பது போல் தண்ணீரைத்தேடி பூமியின் வயிற்றுக்குள்ளும் ஒரு செயற்கை ‘துளை’க் கோளை அனுப்ப வேண்டுமோ என்கிற ஐயம் உண்டானது. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் குடங்கள் தவம் கிடக்க ஆரம்பித்தன. தண்ணீர்! தண்ணீர்! என்று கூவிக் கொண்டு காலிக் குடங்களுடன் மக்கள் வீதிக்கு வந்து சாலை மறியல் முதலிய போராட்டங்களை அரங்கேற்றினார்கள்; ஆக அதனையும் அதிரைக்கு அறிமுகப் படுத்தினார்கள். 

மழை பொய்த்துப் போனாலும், கர்நாடகம் எப்போதாவது இரக்கம் காட்டி திறந்து விடும் தண்ணீரும் வந்து சேர இயலாத வகையில் ஆற்று நீர்ப் பிரசவ வாசல்கள், மண்மேடுகளால் தடுக்கப்பட்டு மலடாகப் போயின. வரலாற்று சிறப்புமிக்க காவேரி மேட்டூர் திட்ட வாய்க்கால் குப்பை கூளங்கள் குடியிருக்கும் மாளிகை ஆனது. அதோடு குப்பைகளாக இருந்த அரசியல் சித்தர்கள் கோபுரங்களில் உட்கார்ந்தார்கள். குப்பை குளங்களுடன் சாக்கடை நீரும் கைகோர்த்து கூட்டணி அமைத்துக் கொண்டு சுற்றுச் சூழலை மாசுபடுத்தின. கொசுக்களின் கொண்டாட்டமும், மருத்துவமனைகளில் மக்களின் கூட்டமும் விபரீத விளைவுகளாயின. முப்பது ஆண்டுகளாக இதற்கு ஒரு விடியலைத் தேடி அதிரையரின் இதயங்கள் ஏங்கின. 

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற நிலைமை ஏற்பட்ட நிலையில் சில நல்லெண்ணமும் செயல்திறனும் படைத்த சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இதுபற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். வெறும் வாய்ப் பேச்சு மட்டும் பயன் தராது நமக்கு நாமே ஒன்று கூடி வியர்வை சிந்தினால்தான் தண்ணீரை ஊருக்குள் கொண்டுவர முடியும் என்கிற நிதர்சனம் உணரப்பட்டது. அதற்காக நிதியும் திரட்டப் பட்டது. ஊரின் அருகில் இருக்கும் ஏரிகளில் இருந்து ஊருக்குள் நீரைக் கொண்டுவர என்றோ ஒரு காலத்தில் ஆண்ட அரசு போட்ட திட்டத்தின் வாய்க்கால் ஒரு நீட்டிப் படுத்துவிட்ட வெறும் நெடுங்கோடாக கிடப்பதை நேர் செய்தால் மட்டுமே பயன்பெற முடியும் என்பது விவாதங்களின் மூலம் உணரப்பட்டது. உறங்கிக் கிடக்கும் வாய்க்காலை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தொடங்கப்படுவது ஒன்றே இதற்கான வழி என்பதை உணர முப்பது வருடங்க ஆயின. அதற்கு முன், இந்த வரப்பிரசாதமான வாய்க்காலின் வரலாறை தெரிந்து கொள்வது அவசியம்.

சி. எம். பி. திட்டம் என்றால் என்ன? ஏன்? எதற்கு?

ஆங்கிலேயர் காலத்திலேயே தொலை நோக்குப் பார்வையுடன் போடப்பட்ட திட்டமே C.M.P என்று அழைக்கப் படுகிற Cauvery Mettur Project ஆகும். 

காவிரி டெல்டாவின் நெற்களஞ்சியங்களை மனதில் வைத்தும் கடைமடைப் பகுதிகளை எண்ணத்தில் கொண்டும் போடப்பட்ட திட்டமே Cauvery Mettur Project ஆகும். அடிப்படையில் தென்மேற்கு பருவமழை மழை மிதமிஞ்சி பொழியும்போதும் வட கிழக்கு பருவமழை அடிக்கடி தவறும் போதும் , காவிரி டெல்டா பகுதியின் விவசாயப் பணிகளைப் பாதித்து வந்தது. ஆகவே அதிகம் மழை பெய்தால் வரும் உபரி நீரை அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்வதன் மூலம் வெள்ளத்தை தடுக்கவும் தொடர்ந்த விவசாயப் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு தடையின்றி தண்ணீர் கொடுக்கவும் காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கும் தட்டுப் பாடு இல்லாமல் ஒரே சீரான முறையில் தண்ணீர் வழங்கவுமே இந்தத் திட்டம் போடப்பட்டது . 

“When South-west supply is copious and dependable the North-east Monsoon frequently affected the cultivation of the Cauvery Delta. The Chief aim of the Cauvery Mettur System is to remedy the system of affairs by storing the water of the surplus floods in the South-west Monsoon and distributing them evenly through the succeeding the irrigation period.” என்று திட்ட அறிக்கை கூறுகிறது. 

இந்த திட்டத்தை கலோனியல் W.M.எல்லிஸ் என்பவர் 1910 ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேய அரசுக்கு சமர்ப்பித்தார். ஆனாலும் திட்டம் நிறைவேற்றப்பட்டு 20ம் நாள் ஜூலை மாதம்1925 வருடம், அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவில் இருக்கும் ஏரிகளுக்கு நீர் விடப்பட்டு பிறகு வயல் வரப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே முக்கிய நோக்கம்.

The final and carefully designed Cauvery Mettur Project was submitted by Col.W.M. Ellis in 1910 and the execution of the scheme was started on 20.07.1925, when the first blast was made. The project as designed, provides for a sixty square miles lake impounding 93,500 mcft. of water. The dam is 5,300 ft. long and the reservoir backs up 33 miles to the foot of 70ft. high Hogenekkal falls which become partly submergible.

A new canal, the Grand anicut canal, with a capacity of 4,200 cusecs, was also excavated to supply an extent of 2,71,000 acres of new irrigation. The total cultivation in the delta 10,82,000 acres of single crop and 2,70,000 acres of double crop. The reservoir is expected to supply the requirements of this area of 13,52,000 acres.

இதன் அடிப்படையிலேயே ஒழுங்கு படுத்தப்பட்ட கால்வாய்கள் திட்டமிட்டு பல பகுதிகளிலும் வெட்டப்பட்டு நீர் வரத்து தட்டுப்பாடு இல்லாமல் ஓட ஆரம்பித்து வந்து கொண்டு இருந்தது. 

சுதந்திரம் பெற்று விட்டால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறப்பட்டது. ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு பாலாறும் தேனாறும் கிடக்கட்டும் அதற்கு முன்பு ஓடிக் கொண்டிருந்த நீராறு கூட சரிவர ஓடவில்லை என்பதே கசப்பான உண்மை. காமராசர் முதல்வராக இருந்த காலம் வரை விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் ஏற்கனவே போடப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்ந்து சரியாக பராமரிக்கும்படியும் மேலும் புதிதாக பல அணைகள் கட்டப்பட்டு மேலும் நீர்ப்பாசன வசதிகள் நாடெங்கும் ஏற்படும்படியும் பார்த்துக் கொண்டார். 

கரிகால் சோழனால் காவிரியில் கட்டப்பட்ட கல்லணை, முதலாம் ராஜ-ராஜ சோழனால் அமைக்கப்பட்ட உய்யக் கொண்டான் கால்வாய், பாண்டிய மன்னர்களால் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட பல கல் அணைகள் தமிழர்களின் பொறியியல் மேன்மைக்கும் நீர்பாசன முறைகளுக்கும் சான்றாக விளங்குகிறது. மேட்டூர் அணை, பெரியாறு அணை ஆகிய இரண்டைத் தவிர ஆங்கிலேயர்களின் காலத்தில்நிறைவேற்றப்பட்ட நீர்ப்ப்பாசன திட்டங்கள் யாவையும் சிறுசிறு திட்டங்கள்தான். 1889 முதல் 1947 வரை ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 9,75,096 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன. விடுதலை பெற்ற 1947லிருந்து 1954 வரை தற்போதைய தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களால் 66,000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பயன்பெற்றன. 

1954-ஆம் ஆண்டு பதவி ஏற்ற காமராஜர் நீர்ப்பாசன திட்டங்களால் மூன்று பெரும் நன்மைகள் உணவு உற்பத்திப் பெருக்கம், புதியபாசனப் பகுதிகளால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பு மற்றும் மின்சார உற்பத்தி இருப்பதைக் கண்டார். அதன் விளைவாக, சிறிதளவு வாய்ப்பு இருந்த நதிகளிலும் கூட அதற்கேற்ற நீர்ப்பாசனத் திட்டம் என்ற நிலையில், தமிழகத்தின் எல்லா நதிகளிலும் பாசனத் திட்டங்களை ஏற்படுத்தியது காமராஜர் ஆட்சி. இதன் காரணமாக, காமராஜர் ஆட்சியிலிருந்து ஒன்பது ஆண்டுகளில் பெரிய அணைத் திட்டங்களால் மட்டும் ஏறக்குறைய 3,73,436 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதிப் பெற்றது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பெரிய அணைத் திட்டங்களை காணும்போது, ஒருவேளை அவரது ஆட்சியின் காலத்திலேயே நிறை வேற்றப்படாமல் இருந்திருந்தால் அவைகள் நிறைவு பெறாத திட்டங்கள் என்ற பட்டியலில் சேர்ந்திருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

அதன்பிறகு வந்த ஆட்சிகள் ஆற்றிலே போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி! என்று தங்களை நோக்கியே அனைத்து வாய்க்கால்களையும் திருப்பிவிட்டுக் கொண்டன என்பது அனைவரும் ஏற்றே ஆகவேண்டிய உண்மை! உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பொது நன்மைகள் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகள் அதன்பிறகு மாறி மாறி வந்த அனைத்து ஆட்சிகளிலும் தொடர்ந்தன. 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல் ஊழலே பொதுப் பணித்துறையில்தான் நடந்தது என்று சர்க்காரியா கமிஷன் சான்று பகர்கிறது. வீராணம் ஏரியையும் பண்ருட்டியிலிருந்து செல்லும் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றும் வருடக் கணக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் குழாய்களின் பட்டாளமே இதற்கு வெட்கக் கேடான சான்றாகும். 

ஆறுகள் தூர்வாரப் படவில்லை. அப்படியே வாரப்பட திட்டம் போடப்பட்டாலும் அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து திட்டத்தின் பெயர் கூறி பணம் வெளியானது. அந்தப் பணம் மட்டுமே வாரப்பட்டது. சாட்சி வேண்டுமென்றால் பட்டுக்கோட்டை – முத்துப்பேட்டை சாலையில் அணைக்காடு அருகில் இருக்கும் ஆற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆறுகளில் புல்லும் புதரும் அப்படியே மண்டிக் கிடக்கின்றன. திடீரென்று கனமழை பெய்தால் ஊரில் வெள்ளம் வருகிறது. விளைந்த வயல்களில் நீர் புகுந்துவிடுகிறது. முறையான நீர்ப்பாசன வசதிகளை வருடந்தோறும் பராமரித்து வந்தால் இந்நிலைகள் ஏற்படாது. மனிதன் ஒரு நாளைக்கு ஒருவேளையாவது குளிக்க அலைகிறான்; மாதந்தோறும் முடிவெட்டிக் கொள்கிறான்; வாரம் ஒருமுறையாவது முகச்சவரம் செய்து கொள்கிறான். ஆனால் தனது வாழ்வின் ஆதாரங்களான ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளை அதேபோல் வருடத்துக்கு ஒருமுறையாவது பராமரித்து வரவேண்டும் என்கிற பழக்கம் அரசிடம் இல்லை. ஒரு விவசாயத்தை நம்பி இருக்கும் நாட்டுக்கு ஆறுகளை நீர்நிலைகளை அலட்சியம் செய்யும் போக்கு ஒரு சாபக்கேடு. 

இப்போது இந்த பொதுவான தமிழகத்தின் நிலைமைகளைத் தாண்டி மீண்டும் நமது உள்ளூர்ப் பிரச்சனைகளுக்கு வரலாம். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சி. எம். பி. திட்டம் தனது வேர்களைப் பரப்பிய பகுதிகளில் அதிரையும் அடங்கி இருந்தது. ‘அது ஒரு அழகிய நிலாக் காலம்’ என்று சொல்வார்களே அப்படி, காலில் வெள்ளிக் கொலுசு அணிந்து தத்தித்தத்தி நடந்து வரும் குழந்தையின் அழகுபோல் தங்கு தடையின்றி, கடைமடைப் பகுதியான அதிரையில் காவிரியில் நீர் வரும் காலங்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அதிரையின் மேற்குப் பகுதியான மிலாரிக்காடு எல்லையில் புகுந்து புறப்பட்டு வரும் கால்வாய் நீர், வரும் வழியில் இருக்கும் நன்செய் புன்செய் பயிர்களை நனைத்துக் கொண்டே சிற்றோடையாக ஓடி வரும். அப்படி வரும் நீர் வரும் வழியில் இருக்கும் அதிரையின் குளங்களை நிரப்பிக் கொண்டே வழிந்து ஓடி அடுத்த குளத்துக்குச் செல்லும். அப்படி செல்லுகின்ற வகையில் கால்வாயின் வழிகள் வருடந்தோறும் பொதுப் பணித்துறையால் செப்பனிடப் பட்டன. குளங்களுக்கு தண்ணீர் நிரம்புவதற்கு அந்தந்த பகுதிகளில் இருந்த இளைஞர்களும் தன்னார்வமாக தொண்டாற்றுவார்கள். ஆனால் இந்த நிலைமைகள் கடந்த பல வருடங்களாக மாறிப் போயின. நமதூர் மக்களின் வாழ்வாதாரமான தென்னை விவசாயம் பொய்த்துப் போன நிலைமைகளும் விளைவாக ஏற்பட்டன. 

இந்த வருடம், ஊர் காய்ந்த காய்ச்சலில், தொடர்ந்த கோரிக்கைகளின் காரணமாக தெருக்களின் அனைத்து முஹல்லாக்களும், பேரூராட்சித் தலைவரும் இந்தப் பிரச்னையை கைகளில் எடுத்துக் கொண்டனர். அதிரை பைத்துல்மால் கட்டிடத்தில் ஊரின் பல சமூக நல்லார்வமுடையவர்கள் கலந்து பேசி தண்ணீரைக் கொண்டு வந்து குளங்களை நிரப்புவதற்கான திட்டங்களை கலந்து ஆலோசித்தார்கள். அதன்படி செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டன. காரியங்களில் அதிரை பேரூராட்சித் தலைவரும் முன்னின்று தேவையான ஏற்பாடுகளை செய்ததோடு அல்லாமல் களத்தில் இறங்கியும் ஒத்துழைப்பு கொடுத்தார். 

இதுவரை எல்லாம் சரிதான். அதன்பின் நம்மவர்களுக்கே உரிய இயல்பான நண்டு வேலை ஆரம்பித்துவிட்டது. தண்ணீர் கொண்டு வந்த புகழை யார் பெற்றுக் கொள்வது என்று அரசியலின் அடிப்படையில் வேறு ஒரு அணி முயற்சிப்பதாக ஒரு வலைப்பூ செய்தி வெளியிட்டது. இவ்வளவு நாட்களாக இதற்காக முயற்சி எடுக்காத சிலர் மேற்சொன்ன முயற்சிகளைத் தடை செய்து வேறு வழியில் தண்ணீர் கொண்டு வருவதற்காக முயற்சி செய்கிறார்கள் என்று பேரூராட்சி மன்றத் தலைவரும் ஒரு காணொளிப் பேட்டியில் கோபமாக சாடிய பேட்டியினை அதிரையின் முன்னோடி வலைத்தளதில் பதிக்கப்பட்டது. தாகத்துடன் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்த மக்களின் நடுவே அரசியல் நீயா நானா போட்டி ஆரம்பித்து விட்டதைக் கண்ட நடுநிலையாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்கய்யா! என்ற புலம்பல்களும் வெளியாகின. 

இந்தப் பலே பலே போட்டி அனைத்துலக அகமான முகநூலிலும் எதிரொலித்தது. அடேயப்பா! எவ்வளவு வகை வகையான கருத்தாடல்கள். காட்டாமணக்குச் செடிகள் மண்டிப் போய் கால்வாயை அடைத்த போது காணப்படாதவர்கள்- கழிவு நீர் கால்வாயாக சி. எம். பி. சிற்றோடை சீர்கெட்ட நேரத்தில் காணாமல் போயிருந்தவர்கள் – மண்மேடுகள் இந்த வாய்க்காலை மூடி மறைத்த காலத்தில் முகத்தை மூடிக் கொண்டு தூங்கிக் குறட்டை விட்டவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வார்த்தை சண்டை போடத் தொடங்கினார்கள். ஆகவேண்டிய காரியங்களைப் பார்க்க ஆளைக் காணோம். ஆனால் செய்பவர்களையும் குற்றம் சொல்ல அரசியல் சாயம் பூசி பலர் படை எடுத்து வந்தார்கள். 

இவ்வளவு காலம் உடுப்பை துவைப்பதுதான் தண்ணீர் என நினைத்து இருந்தோம் . ஆனால் ஒருவர் மேல் ஒருவர் கடுப்பையும் காழ்ப்புணர்வையும் காட்டவும் தண்ணீர் பயன்படும் என்று இதன் மூலம் தெரிந்தது. வலது கரமாகவும் இடது கரமாகவும் செயல்பட வேண்டிய அதிகாரவர்க்கத்தில் இருந்த பேரூராட்சி மன்றத் தலைவருக்கும் மன்ற துணைத் தலைவருக்கும் இருந்த காழ்ப்புணர்வுகள் சி. எம். பி. வாய்க்காலில் தண்ணீர் பொங்கி பிரவாகம் எடுக்கும் முன்பே பிரவாகமெடுத்தது. 

பேரூராட்சியின் துணைத் தலைவரும் தனது பங்குக்கு தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு காணொளிப் பேட்டியை ஒளிபரப்பினார். அவர் வெண்டாக் கோட்டையில் இருந்து கரிசமணி ஏரி வழியாக தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக விளக்கம் கொடுத்தார். அவருடைய முயற்சிகளையும் பாராட்டுகின்ற அதே வேளையில் தமிழகத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த துணைத் தலைவருக்கும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த பேருராட்சி மன்றத் தலைவருக்கும் நிலவி வந்துள்ள ‘ஒத்துழையாமை’ வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலைமை மிக மிக துரதிஷ்டவசமானது என்பதை மக்கள் உணர்ந்து வருத்தப்பட்டனர். பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். ஆயிரம் ஆனாலும் அவரால் சில காரியங்களை சாதிக்க இப்போது அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இருக்கும். அந்த தொடர்பைக் கொண்டு ஊரின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நிர்வாகத்தினருக்கு இடையில் தேவைப்பட்டது புரிந்துணர்வு. ஆனால் இந்த புரிந்துணர்வும் ஒற்றுமையும் ஒரு குடம் வைத்துப் பிடிக்க வேண்டிய நிலை இதுவரை அதிரையின் வரலாற்றில் இல்லாத நிலை. 

இதற்கு இடையில் பேரூராட்சித் தலைவரின் களப்பணியில் இணைந்து பல நல்லெண்ணம் கொண்ட இளைஞர்களின் இரவு பகல் பாராத கடும் உழைப்பில் ஈடுபட்ட பல புகைப்படங்கள் வலை தளங்களில் வெளியாகி ஒரு நம்பிக்கையை துளிர் விடச் செய்தது. பலர் நிதி உதவியும் செய்தார்கள். துபாயில் இருந்து சம்சுல் இஸ்லாம் சங்கம் நிதி திரட்டி அனுப்பியதாக செய்திகள் வெளியாயின. இவ்வாறான உதவியைக் கொண்டும் சி. எம். பி. வாய்க்கால் அதிரைக்கு வரும் வழிகளில் இருந்த இடையூறுகள் யாவும் நீக்கப்பட்டு ‘செம்புலப் பெயல் நீர் அன்புடை நெஞ்சத்துடன் கலந்தது போல்’ செம்மண் நிறத்தில் நீர் வந்தது. வரும் வழியில் நெல்லுக் கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே பொசிந்தது. பல வருடங்கள் காணாத கன்றை கண்டுவிட்ட தாய்ப் பசுபோல் தண்ணீர், குளங்களின் செக்கடிக் குளத்திலும் ஆலடிக் குளத்திலும் ஆர்ப்பரித்துப் பாய்ந்து அவை நிரம்பத் தொடங்கின. வழிய வரவேண்டிய நீருக்கு வழியமைத்துக் கொடுத்து வரவேற்பு அமைத்து இந்த சாதனையை செய்து காட்டிய பேரூராட்சி மன்றத் தலைவரையும் அவரோடு பணியாற்றிய அனைத்து இளைஞர்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். 

ஆனாலும் !

ஆலடிக் குளத்துக்கும், செக்கடிக் குளத்துக்கும் முன்னதாக காட்டுக் குளம் என்ற குளமும் மரைக்கா குளமும் இருக்க , தண்ணீர் நேராக ஆலடிக் குளத்துக்கும், செக்கடிக் குளத்துக்கும் முன்னுரிமை கொடுக்கப் பட்ட முடிவுக்கு உரிய காரணம் ஊரில் பலருக்கு விளங்கவில்லை. குறிப்பிட்ட சில குளங்களுக்கு மட்டுமே இந்த முயற்சி என்றால் அது இன்னும் மோசமான நிலைமைகளில் இருந்து நாமும் நமது மனமும் விடுபடவில்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் இந்தப் பணியை செய்து முடிக்க வேண்டிய நிலையில் வாய்க்காலில் வந்த தண்ணீரின் அளவும் அழுத்தமும் அதிகமாக இருந்ததால் குளத்தில் பாய்ந்த தண்ணீர் வாய்க்காலில் விழுந்து பெருமளவு வீணாகி விட்டதாகத் தெரிகிறது. அவ்வளவு அழுத்தம் வரும் முன்பே காட்டுக் குளத்துக்கும் ஒரு கால்வாய் வெட்டிப் பாயும்படி விட்டு இருந்தால் இப்படி வீணான நீர் அந்தக் குளத்துக்கும் சென்று நிரம்பி இருக்கும் என்று ஒரு கருத்து பலமாக நிலவுகிறது. 

செக்கடிக் குளத்துக்கும் ஆலடிக் குளத்துக்கும் கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் மரைக்கா குளத்துக்கும் செடியன் குளத்துக்கும் கொடுக்கப் படவில்லை என்று தொடர்புடைய முஹல்லாவாசிகளுக்கு மனவருத்தம். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் இடம் தனியாக மனு கொடுத்து அனுமதி வாங்கி , தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் இளைய தலைமுறையின் நல்லதொரு உழைப்பால் மரைக்கா குளத்திலும் தண்ணீர் நிரம்பிக் கொண்டு இருப்பதாக தெரிகிறது. பொதுப் பணித்துறை, சி எம் பி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீர் விடுகிறார்கள். ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் நமது பகுதிக்குரிய கால்வாயில் தண்ணீர் வரும். இனி வரும் தண்ணீரை மகிழங்கோட்டை அருகே உள்ள பிரிவு வாய்க்காலில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து செடியன் குளத்துக்கும் தண்ணீர் செல்லும்படிச் செய்தால் பழியில் இருந்து தப்பலாம். 

நிற்க !

சில கேள்விகளை இங்கு வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறோம். தண்ணீர் பிரச்னை – குளங்களில் நீர் இல்லை என்பது அதிரையின் எல்லாக் குளத்துக்கும் எல்லாத் தெருவுக்கும் உரிய பொதுப் பிரச்னை. இது ஊர் தழுவிய பிரச்னை. இப்படிப் பட்ட ஜீவாதாரப் பிரச்னையைத் தீர்க்க திட்டமிடும்போது ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்கிற கோஷம் எழும்பாமல் பார்த்து எல்லோருக்கும் எல்லாம் என்கிற வகையில் செய்து கொடுக்க வேண்டியது பொறுப்பில் உள்ளோரின் பொறுப்பாகும் என்பதை மறுக்க இயலுமா?

இரண்டாவதாக, தண்ணீர் போன்ற தலையாயப் பிரச்னையில் கூட மக்கள் பிரதிநிதிகளால் கலந்து பேசப்பட்டு நமக்குள் புரிந்துணர்வை நிலை நாட்டி ஊருக்கு நல்லது செய்ய ஒன்றுபட முடியவில்லை என்றால் சாதாரணப் பிரச்னைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் எப்படி மேற்கொள்வார்கள் என்கிற மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? 

இப்போது ஊர் கூடி நீர் கொண்டு வந்தது போல் எல்லா வருடங்களும் மக்களே ஒன்று கூடி நிதி திரட்டி ஊருக்கு வேண்டிய காரியங்களை செய்து கொள்ள எல்லாக் காலங்களிலும் இயலுமா? அரசின் உதவிகளை நாம் பணிந்து கோர வேண்டுமா அல்லது துணிந்து எதிர்க்க வேண்டுமா?

நம்மவர்களின் ஒற்றுமையே ஊரின் பலம். தனி நபர்களுக்கிடையில் ஏற்படும் மனவருத்தங்களை பொதுவான ஊர்ப்பிரச்னைகளில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதும் ‘இருப்பவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ இருப்பதும் அனைவரையும் அரவணைத்து சாதனைகள் புரிவதும் பொறுப்பில் உள்ளோர்க்குரிய இன்றியமையாத கடமைகள். 

அதிரைநிருபர் பதிப்பகம்

உருவப்படம் வரைதல்... ஓர் ஆய்வு - பகுதி - 2 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2013 | , ,


உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

உயிரினங்களின் உருவச் சிலைகளுக்கும் உருவ பொம்மைகளுக்கும் வித்தியாசமில்லை. வணங்கி வழிபாடு நடத்தினால் அது சிலை; வைத்து விளையாடினால் அது பொம்மை. இங்கு எண்ணம் - நோக்கம் வேறுபடுகின்றது. மரியாதை தரும் வகையில் இருந்தால் அது வணக்கத்தின் துவக்கமாக அமைந்துவிடும். விளையாட்டுப் பொருளாகவோ மிதிபடும் மதிப்பற்ற வகையில் இருந்தாலோ அவை வீட்டில் இருக்கத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், அன்னையர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்தனர். 

நபி(ஸல்) அவர்கள், ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பாளர்: ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2091).

சிறுவர் சிறுமியருக்கு நோன்பு கடமையில்லை என்றாலும் நோன்புக்கான பயிற்சி அளிக்க நபித்தோழியர் சிறுவர், சிறுமியரை நோன்பு நோற்க ஆர்வமூட்டுவார்கள். குழந்தைகள் பசியில் அழுதால், விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்து அவர்களின் கவனத்தைத் திருப்புவார்கள் என மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்குகிறோம். விளையாட்டுப் பொருட்களில் பொம்மைகளும் இருந்தன என்பதற்குச் சான்றாக, முதல் பகுதியில் இரண்டாம் வகை ஹதீகளில் 5,6,7 ஆகிய அறிவிப்புகளை மீண்டும் பார்வையிடுவோம்.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். (முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து)ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378).

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன,

7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி எனது விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா! இவை என்ன?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, "அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். "குதிரையின் மேல் என்ன?" என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். "குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932).

7ஆவது அறிவிப்பில், கைபர் அல்லது தபூக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது. நபி (ஸல்) அவர்கள் கைபர் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது என்று வைத்துக் கொண்டாலும், கைபர் யுத்தம் முடிந்த ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பதினைந்து வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

6ஆவது அறிவிப்பில், ''ஒன்பதாம் வயதில் விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன'' என்பதையும் 7ஆவது அறிவிப்பின்படி கைபர் போர் நடைபெற்ற காலத்தையும் கணக்கிட்டால்  உயிரினங்களின் உருவ பொம்மைகள் சுமார் ஆறு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்திருக்கின்றன என்பது தெளிவு.

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை" என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள். பிறகு அவர்களது மனதில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள். அன்று மாலை நேரத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அப்போது "நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக வாக்களித்திருந்தீர்களே?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள். அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை விட்டுவிட்டார்கள் (அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிடவில்லை). (அறிவிப்பாளர்கள்: மைமூனா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4273, நஸயீ 4283, அபூதாவூத் 4157, அஹ்மத். இதே கருத்தில் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு: முஸ்லிம் 4272).

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு உம்ரத்துல் களாவை முடித்துத் திரும்பும்போது, மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களை மணமுடித்தார்கள் என வரலாற்றுக் குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும் நபியவர்களின் துணைவியரில் ஒருவரான மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நாய் நுழைந்திருந்து பிறகு அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு அல்லது எட்டாம் ஆண்டு நடந்திருக்க வேண்டும் என்று விளங்க முடிகிறது. 

இறைச் செய்தியைக் கொண்டு வரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எந்த நேரத்திலும் - எந்தப் பொழுதிலும் செய்திகளைச் சொல்ல வரக்கூடியவர். நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்கு ஜிப்ரீல் (அலை) வழக்கம்போல் வரும் தருணத்தில் வீட்டிலிருந்த நாயும், உயிரினங்களின் உருவங்கள் வரைந்த திரைச் சீலையும் தடையாக இருந்து, ஜிப்ரீல் (அலை) வீட்டிற்குள் செல்ல இயலாமல் ஆனது. ஆனால், ஆறு ஆண்டு காலம் ஆயிஷா (ரலி) அவர்களின் உயிரின உருவ பொம்மைகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்தும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வீட்டிற்குள் நுழைய அவை தடையாக இருக்கவில்லை! நபி (ஸல்) அவர்களும் உருவ பொம்மைகளை அப்புறப்படுத்தச் சொல்லவும் இல்லை! இதிலிருந்து உருவ பொம்மைகளை வணங்கி வழிபாடு நடத்தாமல், மதிப்பற்ற வகையில் விளையாட்டுப் பொருளாக வீட்டில் வைத்திருக்கலாம் என விளங்குகிறோம்! 

ஆயிஷா (ரலி) அவர்கள் உயிருள்ளவற்றின் உருவ பொம்மைகளை வைத்து விளையாடியிருப்பதால், பொம்மைகள் வீட்டிலிருக்கத் தடை இல்லை என்பது தெளிவு. இவை கார்ட்டூன், அனிமேஷன் போன்றவற்றுக்கு அனுமதியாகவுள்ளது. மேலும், கார்ட்டூனும் விளையாட்டுப் பொம்மைகளே. அவை தந்திர அமைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, கருவியின் மூலம் இயக்கப்படுகின்றன. கார்ட்டூன் மூலம் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுத்தரலாம்!

குறிப்பு: நாய்கள் பற்றிய மேலதிகத் தகவல்.

இறைமறை 005:004 வசனக் கருத்தின்படி பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், வேட்டைப் பறவைகளை வளர்க்க - வைத்திருக்க அனுமதியுண்டு.

"எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர". என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ. அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன).

வேட்டை நாய்களையும், காவல் நாய்களையும் வளர்க்கலாம். நாய் வாய்வைத்தப் பாத்திரத்தை ஏழு தடவை மண்ணிட்டுக் கழுவவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நாய்களை வீட்டிற்குள் நுழையவிடாமல் வெளியில் வைத்து வேட்டை நாய்களை / காவல் நாய்களை வளர்க்க வேண்டும். நாய்களைச் செல்லப் பிராணிகள் என்று சிலர் வீட்டில் படுக்கையறையில் வைத்து வளர்க்கின்றனர். என்னதான் உயர்சாதியாக இருந்தாலும் நாய், நாய்தான். நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் தளர்த்தப்பட்டு, வெறிநாய்களையும், ஷைத்தானைப் போன்று திடுக்கிடச் செய்து இடரளிக்கும் கன்னங்கரிய நாய்களையும் கொல்லும்படி கூறிய சட்டம் நீடிக்கின்றது.

அடுத்து,

முதல் வகை ஹதீஸ்களில் 3வது ஹதீஸில், "என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் பார்ப்போம்.

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

படைத்தல் என்பது இறைவனின் தனித் தகுதிக்கு மட்டுமே உரிய ஓர் ஆற்றல். இதில் யாருக்கும் எவ்விதப் பங்கும் இல்லை! இந்தக் கருத்தில் இறைமறையில் பல வசனங்கள் உள்ளன. இறைவனுக்கு இணைகற்பித்தோர் தன்னிச்சையாகப் பல தெய்வங்களை உருவாக்கி, அந்தச் சிலைகளிடம் தமது தேவையைக் கேட்டுப் பிரார்த்தனை செய்தனர். அப்போது அருளப்பட்ட வசனம் இது,

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் செவிசாயுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களால் ஓர் ஈயைக்கூடப் படைக்க இயலாது. ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் ஈயிடமிருந்து அதை மீட்டெடுக்கவும் அவர்களால் இயலாது. (உதவி)தேடுபவனும், தேடப்படுபவனும் பலவீனர்களே! (அல்குர்ஆன் 022:073).

இறைத் தன்மையின் முதல் தகுதி, அவன் படைப்பாளனாக இருக்கவேண்டும். நீங்கள் அழைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட அல்லது ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது என்று கூறி, ''மனிதர்களே! ஓரிறைவனைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவையெல்லாம் பொய்க் கடவுள்களே'' என உரைத்து, தமக்குத் தாமே எவ்வித உதவியும் செய்ய இயலாத பொய்த் தெய்வங்களின் முன் நின்று உங்கள் தேவைகளை வேண்டுவது மூடநம்பிக்கை என்று மேற்கண்ட வசனம் இடித்துரைக்கின்றது.

இங்கு, தாம் வடிவமைத்தவற்றின் முன் தாம் அடிமையாக நின்று வணங்கி வேண்டுவது கண்டிக்கப்பட்டு, சிலைகளுக்கு இல்லாத ஆற்றலை இருப்பதாக உணரும் மூடநம்பிக்கை தகர்க்கப்படுகின்றது.

மற்றபடி, படம் பார்த்துப் பெயர் சொல் எனக் கொசுவத்தி விளம்பரத்திற்காக கொசுவை வரைந்தவர் கொசுவைப் படைத்துவிட்டார் என்று அர்த்தம் அல்ல. மேற்கண்ட ஹதீஸில் உள்ளது போல், கோதுமையை வரைபவர் கோதுமையைப் படைக்கிறேன் என்ற எண்ணத்தில் ஓவியம் தீட்டுவதில்லை / அதைப் புகைப்படம் எடுப்பதில்லை. மாறாக, தாம் வடிக்கும் சிலைக்கு அல்லது வரையும் உருவத்திற்கு ஆற்றல் இருப்பதாக எவர் நம்புகிறாரோ அவருக்குத்தான் ''ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது'' என சவால் விடப்படுகின்றது!

ஓர் உயிரின உருவத்தை நகலெடுக்க, இறைவனின் அசல் படைப்பு முன்மாதிரியாக விளங்குகிறது. தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிப்படம் ஓடிக்கொண்டிருக்க, அதில் பேசுபவர் எதிரில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியில் தான் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதனால் ஒளிப்படத்தில் வருபவர் படைக்கப்பட்டார் என்று பொருள் கொள்வது பிற்போக்கு சிந்தனை! ஒளிப்படத்தில் பேசியவர் மரணித்து விட்டார் என்று அறிந்தபின், ஒளிப்படத்தில் உள்ளவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் நம்பமாட்டோம். ஆகவே, படைப்புக்கும், படைப்பின் நகலுக்கும் பெரும் வித்தியாசமுள்ளது.

இறுதியாக,

குர்ஆன், சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் இதுவரை எடுத்துரைத்தக் கருத்துக்களிலிருந்து, உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்கிற காலச் சூழ்நிலையில் இருக்கிறோம். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில்தான் உருவப்படத்தின் தேவையுள்ளது எனச் சிலர் சொல்கின்றனர். ஆனாலும், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களும் அன்னிய நாடு செல்ல வேண்டுமாயின் பாஸ்போர்ட் வேண்டும், பாஸ்போர்ட்டுக்கு உருவப்படம் கட்டாயத் தேவை என்பதையும் நாட்டின் குடியுரிமைக்கான உருவப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டையும் கட்டாயத் தேவை என்பதையும் மறந்து இவர்கள் கருத்துரைக்கின்றனர்.

இஸ்லாமிய நாடு என அறிவிக்கப்பட்ட நாடுகளிலும் உருவப்படங்கள் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளன. அந்நாட்டு ரூபாய் நோட்டுக்களிலும் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வேலை செய்வதற்காக அங்குத் தங்கும் அன்னிய நாட்டினருக்கு புகைப்படம் பதியப்பட்ட அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டையும் வழங்கப்படுகின்றன. இதை ஆதாரமாக இங்குச் சொல்லவில்லை. இவற்றை எதிர்ப்பதற்கு இஸ்லாத்தில் சான்றுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம்! 

மக்கள் தொகை அதிகரிக்க நிர்வாக வசதிக்காக பூமியில் நாடுகளின் எல்கைகள் போடப்பட்டன. ஒரு நாடு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒரு மாநிலம் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நகரங்கள் கிராமங்கள் என அடையாளப் படுத்தப்படுப்பட்டன. ஒருவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரின் ஊர் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் எந்த தாலுகாவில் உள்ளது என்கிற முகவரியுடன் அவரின் புகைப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டை கட்டாயமாக அவரிடம் இருந்தாக வேண்டும். இது காலத்தின் தேவை! இதற்கு இடையூறாக இஸ்லாம் சட்டம் எதையும் விதிக்கவில்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

காலத்துடன் கைகோர்த்து பயணிக்கும் விஷயமிது. உருவப்படம் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தாத ஒன்றை முஸ்லிம்களின் மீது திணித்தால், மக்களுடன் சேர்ந்து வாழ இயலாமல் முஸ்லிம்கள் நெருக்கடிக்கு உள்ளாகித் தனித்து விடப்படுவார்கள். 'அவை எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை' என்று குடும்பத்துடன் வனம் சென்று வசித்தாலும் அங்கும் ஆட்சியாளர்களின் கை நீண்டு ID CARD - அடையாள அட்டையைக் காட்டு என அதிகாரம் செலுத்தும். எனவே, உருவப்படங்கள் விஷயத்தில் இஸ்லாம் மீதான பிற்போக்குச் சிந்தையைக் களைந்து, இஸ்லாம் இம்மண்ணுக் கேற்ற மார்க்கம் என்கிற முற்போக்குச் சிந்தனையை வளர்ப்போம்!

முற்றாய் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

நேற்று! இன்று! நாளை! – தொடர் - 23 13

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2013 | , , , ,

நேற்றும் இன்றும் நீதிமன்றங்களின்  முன்  வரும் வழக்குகள் பல விசித்திரமானவையாகவும் அவற்றின் தீர்ப்புகள் வெளிவரும்போது மக்களால் நம்ப முடியாமலும் இருந்து இருக்கின்றன. நாளையும் இப்படித்தான் ஆகுமென்று நாம் சொல்ல முடியும். சில நேற்றைய  மற்றும் இன்றைய வழக்குகளைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டத்தை பானைச் சோற்றை பதம் பார்க்கும் வகையில் பார்க்கலாம்.  சுதந்திர இந்தியாவில்தான் இந்த நிலை என்பதல்ல. சுதந்திரத்துக்கு முன்பே அதாவது நேற்று சில பிரபலங்கள் மேல் குற்றச்சாட்டுகள் வந்ததும் அதை புலனாய்வுத்துறை கையாண்ட விதமும் நீதிமன்றத்தில் அவைகளை சமர்ப்பித்த விதமும் பின் அதை முன்னிட்டு நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்புகளும் இன்று சங்கரராமன் கொலை வழக்கு கையாளப்பட்ட முறைகளுக்கு சற்றும்  இளைத்தவை அல்ல.

தமிழ் நாட்டில் புகழ் பெற்ற கொலைவழக்கு என்றால் நேற்றைய வயதினருக்கு நினைவுக்கு வருபவற்றுள்  லட்சுமி  காந்தன் கொலை வழக்கும் ஒன்றாகும்.  இந்த லட்சுமிகாந்தன் என்பவர் ஒரு பத்திரிகை ஆசிரியர். பத்திரிகை என்றால் தினமணியோ தினத்தந்தியோ மாலைமுரசோ போல அல்ல. நாட்டில் பிரபலமாக இருக்கும் பலரின் அந்தரங்க வாழ்வை ஆராய்ந்து பரபரப்பான பாலியல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதுதான் இவர் நடத்திய பத்திரிகையின் முக்கிய வேலை. இது ஒரு பாலியல் புலனாய்வு பத்திரிகை.  இப்படி வெளியிடுவதில் சில உண்மைகளும் இருக்கும் என்று சொல்கிறார்கள். உண்மைகள் கசக்கும் என்று சொல்வார்கள். அப்படிக் கசிந்து ,  கசந்த உண்மைகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டு, தொடர்புடையோரை சலனப்படுத்தி கோபம்  கொள்ள வைத்ததென்னவோ உண்மை.

திரைத்துறையில் இருப்பவர்களே இவரது முக்கியக் குறி. திரைத்துறையில் இருப்பவர்கள் சற்று அப்படி இப்படி ‘கண்போன போக்கிலே கால் போகும் ‘ வாழ்வை வாழ்பவர்கள்தான் என்பது உலகறிந்ததே. கருவாட்டு வியாபாரம் செய்பவர்களிடம் மல்லிகையின் மணத்தை எதிர்பார்க்க இயலாதுதான் . அப்படிப்பட்ட     ‘ ஒருமாதிரியான ‘செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு அவதூறு பரப்புவதே இந்தப் பத்திரிகையின் வேலை. சுருக்கமாக சொல்லப்போனால் அது,  நீல விஷயங்களை பச்சையாக எழுதும் ஒரு மஞ்சள் பத்திரிக்கை.

அந்தப் பத்திரிகையின் பெயர் இன்னும் விபரீதமானது ; வேடிக்கையானது . பத்திரிகையின் பெயர்  இந்துநேசன் என்பதாகும். ஆனால் இந்தப் பத்திரிக்கை இந்து மதத்தை சார்ந்தது அல்ல. அந்த மதத்தின் கோட்பாடுகளை பரப்பியதோ எழுதியதோ அல்ல. இப்படிப்பட்டத்  தரம் உள்ள   பத்திரிகையை  நடத்திய லட்சுமி காந்தன் பலதரப்பில் இருந்தும் பகையைத் தேடி வைத்து இருந்தார்.

அவரை யாரோ சிலர் 1944 நவம்பர் ஒன்பதாம் நாள் கத்தியால் குத்திவிடுகிறார்கள். கொலையாளிகளை யார் என்று ஊகிக்க எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் மரணம் அடையும் முன், லட்சுமி காந்தனின்  வாக்கு மூலம் வடிவேலு மற்றும் நாகலிங்கம் என்று பெயர்களைக்  குறிப்பிடுகிறது. அவர்களுடன் இன்னும் சிலர் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் லட்சுமி காந்தனைக்  கொலை செய்ய மோடிவ் என்கிற நோக்கம் இல்லை. இவர்கள் கூலிப் படையினரே. இவர்களுள் ஒருவன் ஜெயாநாதன். திடீர் திருப்பமாக ஜெயாநாதன்  அப்ரூவராக மாறுகிறான். அப்போது ஒரு க்ளூ கிடைக்கிறது.

லட்சுமிகாந்தன்  ஏற்கனவே நடத்திவந்த ‘சினிதூது’  என்கிற பத்திரிகையை தடை செய்யும்படி  அன்றைய  கவர்னரிடம், எம் கே டி தியாகராஜ   பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் மனுகொடுத்திருந்தார்கள். மேலும் இவர்கள் இருவரையும் பற்றியும்  பலமுறை பாலியல் தொடர்பான செய்திகளை இந்துநேசன் வெளியிட்டது. இப்படியான சில பல முகாந்தரங்களை முன்வைத்து  நவம்பர் 27ஆம் நாள்  வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டு, அன்றைய சூப்பர் ஸ்டார் ஆன பாகவதரும் புகழ்பெற்ற கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனும் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக வெள்ளைக்காரனின்  நிர்வாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

அன்றைய காலங்களில் உலகப்போர் செய்திகளைக் கேட்பதற்காக வானொலியை உயிர்ப்பித்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ”லெட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடிகர் எம். கே. தியாகராஜா பாகவதர், நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், மற்றும் படத்தயாரிப்பாளர் எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு கைது செய்யப்பட்டார்கள் என்பதே அச்செய்தி. கைது ஆன அடுத்தநாள் முதலே  பாகவதர், மனிதருள் மறைந்திருந்த நரிகளையும், நாய்களையும் புரிந்துகொள்கிறார். சிரிக்க சிரிக்க அட்வான்ஸ் கொடுத்த பட அதிபர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். பொறாமைகொண்ட போட்டியாளர்கள் மகிழ்கிறார்கள். துன்பத்தில் விட்டு விலகி ஓடுபவர்களைக் கண்டு வேதனைப்படுகிறார்.  ‘மன்மதன் லீலையை வென்றார் உண்டோ ‘ என்று அவர் பாடியதும் மறந்து போகிறது. ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் காட்ட ‘ யாரும் அவருடன் இல்லை.

இடையில் சிலகாலம் ஜாமீனில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் வழக்கு விசாரணை பூர்த்தியானபோது,  வடிவேலு, நாகலிங்கம், ஆரிய வீரசேனன், ராஜபாதர் ஆகியோர் கொலை செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டனர். இவர்களைத் தூண்டி கொலைக்கான சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக தண்டிக்கபபடவேண்டுமென்று  ஒன்பது பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் ஆறுபேர் தீர்ப்பு வழங்கியதால்   பாகவதர் மற்றும் என் எஸ் கே க்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு ஜாமீன் ரத்துசெய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல காரணங்களை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல் முறையீடு செய்தார்கள். 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அதன்பின் அன்றைய  வழக்கப்படி லண்டன் பிரிவி கவுன்சிலில் மேல் முறையீடு செய்தனர். மிக கடும் சட்டமுயற்சிகளுக்கு பிறகு லண்டனில் உள்ள பிரிவியு கவுன்சில் அளித்த தீர்ப்பால்,  இரண்டு வருடம் மூன்று மாத சிறைவாசத்திற்குப் பிறகு நிரபாரதி என இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள். விடுதலைக்கு லண்டன் பிரிவி கவுன்சில் அளித்த தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் அப்ரூவர்  ஜெயந்தன் கொடுத்த வாக்கு மூலத்தில் இருந்த குழப்பங்கள். ஆறுவகையான வாக்குமூலங்களை அப்ரூவர் கொடுத்திருந்தார். (இதைப் படிக்கும்போது புதுவை- காஞ்சி-  பிறழ் சாட்சி ஆகியவை நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. ) இதனால் சாட்சியம் நிருபிக்கப்படவில்லை என்று இருவரும் விடுதலை ஆனார்கள்.   நிரபராதி என நிருபிப்பதற்குள் பாகவதரும், கலைவாணரும் சம்பாதித்த அனைத்தையும் இழக்க வேண்டியதாகிவிட்டது. அந்தக் காலத்திலேயே வழக்காட வந்த பம்பாய் வக்கீல் கே. எம். முன்ஷிக்கு ஒரு நாளைக்கு ரூ . 75,000/= தரப்பட்டதாம்.


சிறையில் இருந்து விடுதலையான இருவரின் வாழ்க்கையிலும் நேர்மாறான விளைவுகள். அன்றைய சூப்பர் ஸ்டார் ஆக இருந்த தியாக ராஜ பாகதவரின் வாழ்க்கை பெரிய சரிவை சந்தித்தது. ஒருகாலத்தில், அவர் கேட்ட தொகையைக் கொடுத்து திரைப்படங்களில் புக் செய்தவர்கள் இன்று அவரை எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்ககூட இல்லை. ‘வாழ்க்கை என்னும் ஓடம வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்கவொன்னா வேதம்’ என்று பாடாத குறையாக ஏழ்மை நிலைக்குத் தள்ளப் பட்டார். தன்னுடைய இறுதிக் காலத்தில் கோயில்களில் பாட்டுப் பாடி ஜீவனம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். “ என்னைப் போல வாழ்ந்தவனும் இல்லை என்னைப் போல வீழ்ந்தவனும் இல்லை என்பது அவரைப் பற்றிய அவருடைய கணிப்பும் கருத்தும்.

அதற்கு மாறாக, என் எஸ் கிருஷ்ணனின் வாழ்வு மறுமலர்ச்சி கண்டது. காரணம் திராவிட இயக்கங்களில் தொடர்புடையோர் சுயமரியாதை பிரச்சாரத்துக்கு திரைப்படங்களை கருவியாகப் பயன்படுத்தும் காலம் ஆரம்பமானதால் என் எஸ் கிருஷ்ணனை ,  அந்தப்  புதிய பரிணாமம்  மிக உயரே தூக்கியது. தனது  மனைவி மதுரத்துடன் இணைந்து பல சிரிக்கவும் சிந்திக்கவுமான கருத்துக்களை பரப்பினார். கலைவாணர் என்ற பட்டமும் வழங்கப் பட்டார்.


லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பின் தமிழகத்தில் புகழ்பெற்ற கொலை வழக்கு, 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்காகும். இன்றும் கூட , வருடம் தோறும பரமக்குடிப் பகுதியை பரபரப்பாக்கும் நிகழ்வு அது. தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும்  வகுப்பைச் சார்ந்தவர்.  தேவர் சாதி யைச் சேர்ந்தவர்களால் , அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி , தனது 33 ஆம் வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில்    புகழ்பெற்ற முதுகுளத்தூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி இருந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வாழ்க்கையை நாம் பலவகையில் இன்று பார்க்க முடிகிறது. அவரது ஆரம்ப கட்டத்தில் தேசவிடுதலையில் பங்கெடுத்துச் சிறை சென்றவராக, சமூக சீர்திருத்தவாதியாக, தொழிற்சங்கவாதியாகக் காண்கிறோம். இரண்டாம் கட்டத்தில் அவர் காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை இழந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி, அரசியலில் தனிமைப்பட்டு, கசப்படைந்த சாதித்தலைவராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் அவர் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. காமராஜருக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் கசிந்த நீயா நானா போட்டியும் இந்த வழக்கில் தேவர் சேர்க்கப் படக் காரணம் என்கிற கருத்தும் நிலவுகிறது. தலித் இந்துக்கள்  கிருத்தவர்களாக மதம் மாறுவதன் பின்னணியும் இம்மானுவேல் சேகரன் கொலை  செய்யப் படுவதற்குக் காரணம் என்றும் சொல்லப் படுகிறது.

அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. அதனால் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

இம்மானுவேல் கொலை வழக்கின் விசாரணை புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அனந்த நாராயணன் முன்னிலையில் நடைபெறத் தொடங்கியது. இந்த வழக்கை அரசுத்தரப்பில் நடத்த அரசு வழக்கறிஞராக எத்திராஜ் என்கிற புகழ்பெற்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். இம்மானுவேல் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராக பணிபுரிய எண்ணற்ற வழக்கறிஞர்கள் தயக்கம் காட்டினார்கள். காரணம் பல மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதைக் காரணம் காட்டி திருச்சி மற்றும் திருநெல்வேலி  பகுதிகளைச் சேர்ந்த சில சிறந்த வழக்கறிஞர்கள் ஆரம்பத்தில் ஒப்புதல் காட்டிவிட்டு பின்பு ஒதுங்கிக் கொண்டார்கள்.  முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் சார்பில் வாதிடுவதற்காக அன்றைய மிகப் பிரபலமான வி. ராஜகோபாலாச்சாரியார் அமர்த்தப் பட்டு இருந்தார்.

விசாரனை ஆரம்பம் ஆன அன்று சிறையில் இருந்து தேவர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அந்த நாயகனைக் காண புதுக் கோட்டை நீதிமன்றத்தில் மக்கள் கூட்டம் கொந்தளித்துக் கூடியது. அவர் நல்லவரா? கெட்டவரா? என்று பலர் மனங்களில் வினாக்கள். வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வழக்குக் கூண்டில் முத்துராமலிங்கத்தேவர் ஏறி நின்று வணக்கம் சொல்லி கை கூப்பினார்.

அப்போது அரசு வழக்கறிஞர் எத்திராஜ் எழுந்து நீதிபதியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “ கனம நீதிபதி அவர்களே! முத்துராமலிங்கத் தேவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மக்களின் அன்புக்குப் பாத்திரமானவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளவர். விசாரணை நடைபெறும் நேரத்தில் விசாரணைக்  கூண்டில்  அவர் நின்று கொண்டு இருப்பது சரியாகத் தோன்றவில்லை. அவர் உட்காரத்தக்க வகையில்  கூண்டில் ஒரு நாற்காலி போட ஆணையிடுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் “ என்றார். அனைவரும் அரசு வக்கீலை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நீதிபதியும் கோரிக்கையை ஏற்று ஒரு நாற்காலி போட ஆணையிட்டு தேவரை அதில் அமர்ந்துகொள்ளச் சொன்னார். தேவரும் நன்றி சொல்லி அமர்ந்தார். அரசு வழக்கறிஞரின் இந்த நல்லெண்ண கோரிக்கை மரபுகளை மீறிய கைதட்டலை நீதிமன்றத்தில் ஒலிக்கச் செய்தது. அரசு வழக்கறிஞர் நியாய உணர்வுடன் நடந்து கொள்வார் என்ற எண்ணம் தேவரின் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையின் பின்னணியில் காமராசர் இருந்ததாக ஒரு செய்தி உண்டு.

அடுத்து இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அரசு தரப்பில் வழக்கை நடத்தவேண்டிய பப்ளிக் ப்ராசிக்யூட்டரான  பாரிஸ்டர் எத்திராஜ்   (இவர்தான் சென்னை எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர்)  எடுத்த எடுப்பிலேயே நீதிபதியைப் பார்த்து சொல்லிவிட்டார்., ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் ‘ எனக் கேட்டுக் கொண்டார்.  வழக்கத்துக்கு மாறாக விநோதமாக, அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது. வெடிகள் முழங்க முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டார். இது எப்படி இருக்கு?

அதற்குப் பின் தமிழகத்தைக் கவர்ந்த மற்றொரு கொலைமுயற்சி வழக்கு அதுவும் திரைப்படத்துறை தொடர்பானது. அதுவும் புகழ்பெற்ற இருவர் தொடர்புடைய  பரபரப்பான துப்பாக்கிச் சூடு வழக்கு.  புரட்சி நடிகராக இருந்து பிறகு புரட்சித் தலைவராக மாறிய எம்ஜிஆர் மற்றும் நடிகவேள் எம் ஆர் இராதா தொடர்புடைய வழக்கு.

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும் திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.  இந்த சந்திப்பின்போது நடந்த தகராறில் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். எம் ஆர். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும்   தோளிலுமாக  இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து    எம் ஆர் இராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு  தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர்., தமிழ் திரைப்படங்களில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணா  தலைமையிலான தி மு க வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. அன்றைய சென்னை மாநிலம் இன்றைய தமிழ்நாடு,  சட்ட மன்றத்துக்கு  தேர்தல் நடைபெற இருந்த நேரம். வெற்றியை தி மு க எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. திமுகவின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது. எம்ஜியார் பணமாக தேர்தல் நிதி கொடுத்த போது ‘பணம் வேண்டாம் உன் முகத்தை மக்களிடம் காட்டு அது போதும் ‘ என்று அண்ணா சொன்ன தேர்தல்.

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக  மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.  பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட , எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான  திராவிடர் கழகம் , தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான எம் ஆர் இராதா , காமராசரின் அனுதாபி மற்றும் நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும்  தீவிரப்  பிரச்சாரமும் செய்து வந்தார். ஆகவே இருவருக்குமிடையில் அரசியல் பகைமையும் இருந்தது. மேலும் திரைப்படத்துக்கு நிதி உதவி செய்த வகையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இருந்தது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று எம்ஜிஆர்  சார்ந்திருந்த தி.மு.க. வின் அரசு அண்ணா தலைமையில் அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட எம்ஜிஆரும்  பெரும் வாக்கு எண்ணிக்கையில் பரங்கிமலைத் தொகுதியில்  வெற்றி பெற்றார்.  இதனால் பின்னாளில் தமிழக அரசியல் சரித்திரத்தில் படுத்துக் கொண்டே ஜெயித்தவர் என்று எம்ஜியாரைக் குறிப்பிடுவார்கள்.

முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்து வழக்கை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றினார்.  அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு  நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும்,  இராதா தரப்பில் வழக்கறிஞர் வானமாமலையும் வாதாடினர்.  ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு 1968-ஆம் ஆண்டு ஏப்பிரல் 24-ஆம் நாளன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.  தண்டனைக் காலத்தை சிறையில் கழித்துவிட்டு எம் ஆர் இராதா     விடுதலையானார்.  எதையுமே நகைச்சுவையாக குறிப்பிடும் இயல்புடைய எம் ஆர் இராதா,  தனது விடுதலைக்குப் பிறகு மலேசியா சென்றார். அங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியது வேடிக்கையும் வியப்பும் நிறைந்தது.

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் எனக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்.

மேலும் பலமுறை பத்திரிகைகளிடம் 'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம்’ என்றார்.

இப்படி தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு வழக்கு பரபரப்பில் தொடங்கி அனுதாப வாக்குகளாக மாறி ஆட்சியை மாற்ற காரணமாகி குற்றம் சாட்டப்பட்டு தண்டனையை அனுபவித்தவரின் நகைச்சுவையான கமெண்ட்ஸ் ஆக மாறிப் போனது.

இங்கே மேலே  குறிப்பிட்டுக் காட்டியுள்ள மூன்று வழக்குகளிலும் ஒரு பொதுவான சில அம்சங்கள்  இழையோடி இருப்பதைக் காணலாம். அதுவே அரசியல் தலையீடு- அரசின் ஆரம்பகால கடுமையான போக்கு- பின் நீர்த்துப் போகச்செய்யும் செயல்கள் - அதன் காரணமான நீதிமன்றத்தின் போக்கு-  தீர்ப்பு ஆகியவைதான் அவைகள்.

இவை இன்றும் தொடர்கின்றன. உதாரணமாக, நாட்டையே உலுக்கிய ராஜீவ் காந்தி கொலைவழக்கில்  பேரறிவாளன் என்கிற இளைஞனுக்கு தூக்கு தண்டனை வழங்க காரணமாக இருந்தது அவர் கொடுத்த வாக்குமூலம். ஆனால் இருபத்தி  இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கும்   பேரறிவாளனின் வாக்கு மூலத்தை தான் மாற்றி எழுதியதாக இன்று  சி பி ஐ அமைப்பின் ஒரு பொறுப்புள்ள அதிகாரி சொல்கிறார் என்றால் மக்கள் யாரைத்தான் நம்ப முடியும்?

ஒரு ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி – அதுமட்டுமல்ல தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஒரு பாலியல் புகாரில் சிக்க வைக்கப் படுகிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமைத்த நீதிபதிகள் குழுவும் அவரை குற்றவாளி என்று அறிக்கை தருகிறது.  இவைகளை எல்லாம் பார்க்கும்போது நீதி – நீதி மன்றங்கள்- சட்டம் – புலன் விசாரணை – காவல்துறை- ஆகிய யாரையுமே நம்ப இயலவில்லை என்பதே நிதர்சனம். அழுகிற பிள்ளைகள் பால் குடிக்கின்றன. செல்வாக்கும் சொல்வாக்கும் உள்ள சங்கராச்சாரியார்கள் போன்றவர்கள் எதையும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நிலை இருக்கிறவரை சாதாரண மனிதனுக்கு சட்டம் ஒரு இருட்டறைதான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.

ஆக்கம்: முத்துப் பேட்டை. P.  பகுருதீன் B. Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு