Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காரை வீடுகள்..! 38

ZAKIR HUSSAIN | December 01, 2013 | , , ,



நம்மையும் மீறி காலம் எழுதிச் செல்லும் உண்மைகளை மறுபடியும் பார்க்கும் மீள்பார்வை மாதிரி இருந்தது, அந்த வீட்டை பார்த்த தருணம். மார்ஃபிங் டெக்னாலஜியில் மறுபடியும் அந்த வீட்டுக்கு பெயின்ட் அடித்து லைட் எல்லாம் ஒளிர விட்டு பார்த்தால் நிச்சயம் வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கலாம்.


இப்போ யார் இருக்காங்க'அந்த வீட்டுக்காரங்கன்னு யாரும் இல்லே... ஒரு வயசானவர் அந்த வாசல்லெ படுத்துக் கிடப்பார், அவருடைய சேஃப்டிக்கு ஒரு படல் மட்டும் கட்டி வச்சிருக்கார், ஒரு கயிருதான் அவருடைய பூட்டு.

நாங்க சிறுசுங்களா இருக்கும் போது அந்த வீட்டிலெ எப்போதும் சந்தோசத்தைத்தான் பார்த்து இருக்கோம். நிறைய உறவுக்காரங்க ரொம்ப 'தாட்டியா' இருப்பாங்க. அந்த வீட்டுக்கார அம்மா எப்போதும் சளைக்காமெ எல்லோரையும் கவனிச்சுக்குவாங்க... ஒரு வாட்டி அந்த வீட்டிலெ அவங்க மகளுக்கு அம்மை போட்டிருந்துச்சா..தலைக்கு தண்ணி விடும்போது சக்கரைப்பாவிலெ சோரு.. அரிசியை அரைச்சு தேங்காய் எல்லாம்  சில்லு சில்லா போட்டு உருண்டையா ஒரு எழனி [இளநீர்] மேலே வச்சு தந்தாங்க... இன்னிக்கும் இனிக்குதுங்க..

பெரியவருக்கு கண்ணுக்கு எட்டினதூராம் எல்லாம் அவருடைய சொத்துதான். வசதி இருந்தாலும் மனுசன் சுறுசுறுப்புக்கு கொரவில்லே..'


எங்க ஊர்லெ முதன் முதல்லெ கார் வாங்கியதும் அவர்தான். புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்கியதும் அவர்தான். அவர் தெருக்கோடிலெ வந்து நுழையும்போது அந்த மோட்டோர் சைக்கிள் அவருக்காகவே செஞ்ச மாதிரி அப்படி ஒரு கம்பீரம் இருக்கும். அவங்க வீட்டம்மா முழுக்கை ஜாக்கெட் போட்டிருப்பாங்க... பார்க்க ஏதோ ராஜ குடும்பத்து மனுசி மாதிரி அப்படி செவப்பா... கவுரவமா இருப்பாங்க.

அவங்க கார்லெ வெளியே போகும்போது நாங்க எல்லாம் சின்னப்பசங்களா.... அந்த அம்பாசிடர்காரின் பின்னால் உள்ள ஃப்ரேமில் உட்கார்ந்து அந்த சிக்னல் லைட்டை பிடிச்சிட்டு கொஞ்ச தூரம் போய் எறங்கிடுவோம். அப்ப ஒரு பெட்ரோல் வாசனை இருக்கும் பாருங்க... அது ஒரு ஜென்ம சந்தோசமுங்க... இது வரைக்கும் அந்த மாதிரி ஒரு வாழ்க்கை இல்லே.

இவ்வளவு வாழ்ந்த வீடு ஏன் இப்படி ஆயிடுச்சி...

அதுதான் எல்லோருக்குமே ஒரு மர்மமா இருக்கு. நான் சின்ன வயசா இருக்கும்போது வெளியூர் அப்படி இப்படினும் போயிட்டதாலே, இந்த வீட்டை பற்றிய ஞாபகம் இல்லே... பூட்டியிருக்குனு நெனச்சோம்... அப்புறமா அந்த வீட்டு வசதிகள் மற்றவர்களுக்கு பங்கு வைக்க முடியாத சூழ்நிலை... அப்புறம் என்ன செத்த மாட்டிலெ உண்ணி எறங்குற மாதிரி சொந்தமெல்லாம் வேறு இடங்கலெ நாட ஆரம்பிச்சிடுச்சி...

கெளரவமா வாழ்றவதில் இதில் தான் ரிஸ்க். எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?

சொல்றது ஈசி....வாழ்றதுலெ கஷ்டம் இருக்கு.

சொந்த ஊர்லெ கொஞ்சம் அடக்கி வாசிக்கனுங்கிறியளா...

அட நீங்க ஒன்னு  அடக்கி வாசிச்சாலும் நீட்டி வாசிச்சாலும் டன் கணக்கிலெ குறை வரத்தான் செய்யும். சம்பாத்யம் இல்லேனே சோம்பேரினுவான். சம்பாதிச்சா கொடு எல்லாத்தையும்னு வந்து நிப்பானுக. பசிச்சவனுக்கு சோறு கிடைக்கலயேனு கவலை. சோறு கிடைச்சவனுக்கு, பிரியாணி கிடைக்கலயேனு கவலை. குழிக்கு போர நேரம் வரை கூடவே வர்ர உணர்வுதானே இது.

இருந்தாலும் என மனதுக்குள் என்னவோ செய்தது. அந்த வீடு கரைபடிந்து இடிந்த நிலையில் இருந்தது. வெகு நாட்களாக ஜனப்புழக்கம் இல்லாததால் சன்னல்களின் சட்டங்கள் சுவற்றோடு ஒட்டாமல் தனியாக நின்றது. இடைவெளியில் ஒரு மரவட்டை நகர்ந்து கொண்டிருந்தது. வீடு நீளமாக இருந்ததால் பக்கவாட்டில் இருந்த சுவரும் நீலமாகவே இருந்தது.

எப்போதோ நடந்த தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ-வின் பெயருடன் உதயசூரியன் வரைந்து இருந்தது.... மங்கிப்போய். வழக்கம்போல் ஒழிக / வாழ்க இருந்தது.  உள்ளே நடு முற்றம் வைத்து கட்டிய வீடு, முற்றமெல்லாம் செடி கொடிகள் மண்டிப்போய்...!

' அந்த நடுவில்தான் பெரியவர் உட்கார்ந்து பேப்பர் படிப்பார்... வேலைக்காரங்க பக்கத்திலேயே செம்பு சட்டிலெ வெண்ணீர் போட்டு வச்சிருப்பாங்க குளிக்க...

உற்றுப்பார்த்தேன்.... மூன்று கருங்கள்கள் செடிகொடிகளுக்கிடையே... வீட்டின் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு ரூம்.... .க்ராஸ் பன்னும்போதே வவ்வால் நாற்றம்.

இங்கே தான் அறுவடை சமயங்கல்லே  கூரை முட்டும் அளவுக்கு நெல் மூட்டையா அடுக்கி இருக்கும்.

"அதோ அந்த சமையல் கட்டை பாருங்க.... எப்போதும் பொங்கி போடுற எடம். கேட்டு வர்ரவங்களுக்கு இல்லேனு சொல்லாத வீடும்பாங்க....

கூரை ஒட்டையாகப் போய் உடைந்த சட்டங்களுக்கிடையே சூரிய வெளிச்சம் வந்தது.

மனசு கணத்துப்போய் கேட்டேன். ' இந்த வீட்டுக்காரங்க இப்போ எங்கேதான் இருக்காங்க.....

பெரியவர் இறந்து போனப்புரம், அந்த அம்மா தனது மகளை கூட்டிட்டு எங்கே போனதுன்னு தெரியலெ.

சில பேர் சொல்றாங்க எதோ வெளி ஊர்லெ இருக்காங்க ரொம்ப தூரம்னாங்க...

எத்தனையோ ஊர்களில் இப்படி காரை வீடுகளின் அஸ்திவாரங்களுக்குள் புழுங்கிபோன வரலாறுகள் இருக்கிறது.

சரி இப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி போனது?...

'தெரியலெயே..! எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சா ஆண்டவனை மறந்துட மாட்டோமா... அதான்....!

ZAKIR HUSSAIN

38 Responses So Far:

Unknown said...

இறைவனை மறந்து வாழ்தல் கூடாது.

செம்மையிலும், வறுமையிலும், இன்பத்திலும் துன்பத்திலும், ஏற்றத்திலும் தாழ்விலும், இளமையிலும், முதுமையிலும், எந்த சூழலிலும், இறைவனின் நாட்டமெனும் எழுதப்பட்ட விதியை மாற்ற எந்த கொம்பனும் இல்லை
கையேந்தும் துஆவைத்தவிர.

எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் எதுவும் நடக்கும் என்ற முன்னெச்சரிக்கையுடன் வாழ்வை நகர்த்தவேனும் என்ற நீதிதான் ஜாகிரின் காரை வீடுகள் எனக்கு சொல்கின்றது.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

கரிசல் காட்டுக் காவியம் போல இது தம்பி ஜாகீர் தரும் " காரை வீட்டுக் காவியம். "

ஒவ்வொரு வரியும் யதார்த்தம். இதில் காட்டப் படும் காட்சிகள் வாழ்வுப் பாதையில் ஐம்பது வருடங்களைக் கடந்த எல்லோரும் கண்ட காட்சிகளாக வே இருக்கும்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நேர்த்தியா எழுதப்பட்ட சிறுகதைப்போல் தோனினாலும் மனதில் ஒரு ஓரத்தில் வலியை உண்டாக்கியது இந்த காரை வீடு!

crown said...

என் கருத்தையே மேதை இ.அ காக்காவும் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் கருத்து பதியும் நேரம் என் கருத்து மனதில் எழுந்த நேரமும் ஒன்றோ???

نتائج الاعداية بسوريا said...

இந்த காரை வீடுகள் எதார்த்தத்தை எடுத்து சொல்கின்றது.

எவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்தாலும் , வாழ்ந்தவனும், வாழ்ந்தவீடும்
நிலையற்றவையே.

நிலையற்ற செல்வம் நிறைய இருந்தாலும், உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி
அடக்கி வாசிப்பதே உசிதம்.

அபு ஆசிப்.

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் ஜாகிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///எத்தனையோ ஊர்களில் இப்படி காரை வீடுகளின் அஸ்திவாரங்களுக்குள் புழுங்கிபோன வரலாறுகள் இருக்கிறது.

சரி இப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி போனது?...

'தெரியலெயே..! எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சா ஆண்டவனை மறந்துட மாட்டோமா... அதான்....!///
***********************************************************
உண்மைதான்!!!

வல்ல அல்லாஹ்வின் பூமியில் நிறைய படிப்பினைகள் உள்ளது. பிறரின் வாழ்வைப் பார்த்து நாம் படிப்பினை பெறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் ஒரு சோதனையே இரண்டு நிலையிலும் மனிதன் சோதிக்கப்படுகிறான்.

உயருகின்ற எந்த ஒன்றையும் தாழ்த்துவது -- அல்லாஹ்வின் நியதி.

Shameed said...

காரை வீட்டின் எழுத்தில் ஊரின் பேச்சு மொழி வாசனை தூக்களா இருக்கு

Shameed said...

வீட்டின் போட்டோ (முதல் படம்) ஓவர் எக்ஸ்போசா இருக்கே அந்த காலத்து கருப்பு துணி போட்டு மூடி எடுக்கும் கேமராவில் எடுத்த போட்டோவா அது !!

نتائج الاعداية بسوريا said...











//நேர்த்தியா எழுதப்பட்ட சிறுகதைப்போல் தோனினாலும் மனதில் ஒரு ஓரத்தில் வலியை உண்டாக்கியது இந்த காரை வீடு!//


உண்மையே,

என் அன்புக்குரிய எங்கள் சாச்சா மகன் (கிரௌன்) சொல்வதிலும் ஒரு உண்மை மறைந்து கிடப்பதை உணர்கின்றேன் ( அதான் ஒரு ஓரத்தில் நெருடத்தான் செய்கின்றது )

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

உன்னைப் பாதித்த ஒரு காலக் குறியீட்டை ஓர் அருமையானக் கவிதையாய்ச் சொல்லியிருக்கிறாய்... ஒரு பொதுவான, யாராலும் மறுக்க முடியாத, தெளிவான...

//'தெரியலெயே..! எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சா ஆண்டவனை மறந்துட மாட்டோமா... அதான்....!//

...என்னும் தீர்வோடு.

காரைவீடு வாழ்ந்தவர்கலின் நினைவ என்றைக்குமே சொல்லிக் கொண்டுதான் இருக்கும்.

ஊரை நினைத்தாலே - அங்கு பல்
கூரை வீடுகளும்கூட - உன்
காரை வீட்டைப்போல் கதை சொல்லும்!

உள்ளத்தைத் தொட்டது காரைவீடு; உணர்வுகளை வருடியது சொன்ன விதம்!

Anonymous said...

//இப்படி வாழ்ந்த வர்களின் வாழ்க்கை ஏன்//
[1] வீட்டை கட்டியவனுக்கு வீட்டை கட்டவும் பிள்ளைகளை பெக்கவும்தான் சொரணை இருந்ததே தவிர பெத்து போட்ட பிளைகளுக்கு போதுமான ஒழுக்க நெறிமுறைகளை கற்றுக்கொடுக்க தெரியவில்லை. குடியிலும் காமக்களியாட்டங்களிலும் சூதாட்டங்களிலும் கறைந்து போனது கறைந்த செல்வமோ செல்வோம் - மீண்டும் வரமாட்டோம்' என்று சொல்லாமல் சொல்லி விடை பெற்றது.

[2] சேர்த்த சொத்துகளும் கட்டிய வீடுகளும் செய்த நகைகளும் ஏழை அப்பாவி மக்களை அடித்தும்உதைத்தும் ஏமாற்றியும் சேர்த்தவைகள். 'ஆற்றாது அழுத்த கண் நீரன்றோ செல்வத்தை உடைக்கும் படை'!

மருமகனே ! ஜாஹிர், நீ கண்ட வீடு கடந்து போன நிஜங்கள்.அதோடு அந்த வீட்டின் கதை முடியவில்லை.இன்னும் நிறைய மாளிகைகள் மண்டபங்கள் வௌவால் அடையவும் பாம்பு குடிபுகவும் Waitig- Listடில் இருக்கிறது.You just wait and see!

இந்த சப்ஜெக்ட்டை இன்னும் நிறையவே எழுதி இருக்கலாம். ஊர்கள் தோறும் நிறைய வீடுகள் இருக்கு! .

S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எழுதியவிதம் சாகித்திய அகாடமி (சாதித்த எழுத்து)விருதுக்கு தகுதி! நான் படித்த வாழ்வியல் உண்மையை சொல்லும் கதையில் இது சபீர் காக்கா சொல்வது போல் சிறு கதையாகவும், சிறுகவிதை(ஹைக்கூ)யாகவும் விளங்கியது.இதுவும் ஒரு சிறந்த ஆக்கம். கலப்படம், அதிக வருனனை இல்லாத சுத்த மண் வாசனையுடன் படைக்கபட்ட சிறந்த படிப்பினையை சொல்லும் ஆக்கம். நம்ம தல ஜாஹிர் காக்காவுக்கு ஒரு விசில் கொடுங்க.

ZAKIR HUSSAIN said...

Dear Crown,

இதை எழுதியவுடன் நான் நினைத்தது. " கணையாழி' படித்தவர்களுக்கு இது பிடிக்கலாம். நீங்கள் இதை விரும்பி படித்ததில் ஆச்சர்யம் இல்லை. தமிழில் இப்படி நீங்கள் எழுதும்போதே இது பிடித்துப்போகலாம் என்று நினைத்ததும் சரிதான்.

மனதில் ஒரு வலி வரவேண்டும்...மற்றவர்களின் சோகத்திலும் நமக்கு கண்ணீர் வரவேண்டும்.

"உன்விழியால் பிறர்க்கு அழுதால் கண்ணீரும் ஆனந்தம்."

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"Kaarai veedum Koorai veedum
yaaraiyum athanul nirantharamaai
thangavaithu viduvathillai".

The real story of our olden days whatever stored in our mind always makes renaissance to every one whoever wandering to hear, read, write & speak about the past.

I have an example in front of me that after my beloved mother's death which house was very busy in frequent visits of my family members, neighbours & knowns is now locked. This is the recent lesson taught by Almighty Allah from my own house. I grind with sorrow my olden & golden days ever green memories along with my mum.

Tears are my dedication for your article Zakhir kaka.

ZAKIR HUSSAIN said...

Dear Abdul Kadir,

//எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் எதுவும் நடக்கும் என்ற முன்னெச்சரிக்கையுடன் வாழ்வை நகர்த்தவேனும் என்ற நீதிதான் ஜாகிரின் காரை வீடுகள் எனக்கு சொல்கின்றது//

இந்த ஆக்கத்தின் அஸ்திவாரம் சரியாக உன்னால் புரிந்து உலகுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

கூடவே...என் கருத்தை இந்த இடத்தில் மிக, மிக , முக்கியமாக பதிய விரும்புகிறேன்.

நல்லது செய்தாலோ திறமையாக இருந்தால்தான் வாழ்க்கையின் வசதிகள் வசப்படும் என்பது .....இதுவரை நிரூபிக்கப்படாத விசயம்.

ZAKIR HUSSAIN said...

Dear Brother Ebrahim Ansari,

கரிசல் காட்டு காவியம் அளவுக்கு நான் எழுதியது மாதிரி எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் சொன்ன 50 வருடங்களை தாண்டியவர்களுக்கு கிடைக்கும் Wisdom எனக்கு கிடைத்த மாதிரி ஒரு உணர்வு.

அன்புமிக்க எஸ் முஹம்மதுஃபாரூக் மாமாவுக்கு.....

நீங்கள் சொன்ன மாதிரி இதை இன்னும் எழுதலாம்தான். எனக்கு அந்த வீட்டின் தோற்றம், மக்கள் அப்போது நடந்து கொள்ளும் வழக்கம் இவை எல்லாம் எழுதி...இரண்டாவது அத்யாயம் கொண்டு செல்ல வேண்டும் என்றே நினைத்தேன். முதலில் நான் எழுதிய புதிய முறை எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமே என்ற நினைவும் எனக்கு இருந்ததால் ஒரே ஆக்கத்தில் முடித்து விட்டேன்.

ZAKIR HUSSAIN said...

சாகுல்....அந்த போட்டோ நானே எடிட்டிங்கில் மாற்றி அமைத்தது...ஒரளவு மக்களுக்கு சொன்னால் போதும் என்றுதான்.

sabeer.....இதை எழுத வேண்டும் என்ற உந்துதலுக்காக எழுதவில்லை. இதில் நம் எல்லோருக்கும் மெஸ்ஸேஜ் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

வாழ்க்கையில் ஒடிக்கொன்டிருக்கும்போது சமயங்களில் யாராவது நம்மை நிப்பாட்டி வாழ்க்கையின் சில விசயங்களை சொல்ல வேண்டும்.

அது எதிர்காலத்துக்கு உதவ வேண்டும்.

வயிற்றை நிரப்பவும்,காதுக்கும் கண்ணுக்கும் என்டர்டைன்மென்ட்டில் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது எல்லோருக்கும் புலப்படவேண்டும்.


ZAKIR HUSSAIN said...

Dear Alaudeen,

வ அலைக்கும் சலாம்

நீ சொன்ன விசயத்தில் விடுபட்ட வாக்கியம்.

"தாழ்ந்ததையும் உயர்த்துவது அந்த வல்ல இறைவனின் நியதி".

Dear Brother MSM Naina,


எனக்கு என்னவோ உங்கள் அத்தனை கருத்துகளிலும் உங்களின் தாயாரின் பிரிவு இன்னும் உங்கள் மனதை விட்டு அகலவில்லை [ அல்லது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை ] என்றே தெரிகிறது.

நான் உங்களுடன் சவுதியில் வேலை பார்த்தால் இன்னேரம் உங்களை ஒரளவுக்கு சரி செய்து கொண்டு வந்திருப்பேன்.

ஒரு 70 - 80 வயதுவரை நாம் வாழ்ந்தால் நமக்கு நெருக்கமான 7 , 8 உறவுகளை நாம் பிரிந்துதான் ஆக வேண்டும்.

sabeer.abushahruk said...

உன் காரை வீடு எனக்கு இரண்டு வீடுகளை நினைவு படுத்திற்று:

கூரை வீடொன்றும்
குறைத்து வைத்து எறியும்
முட்டை விளக்கொன்றும்

ஓலைப்பாம்பின் ஓலமும்
அம்மாவின் மேத்துணிக்குள்
ஒடுங்கிக் குடந்த கோலமும்

ஆயிரம் முறைக்குமேல்
அம்மா சொன்ன
ஆன்ட்ராசி பட்சிக் கதையும்

முடைந்துவைத்தப் பனையோலை
இடுக்கில் வழியும்
நிலவொளியும்

என
தூரத்தில் சப்திக்கும்
தேரை ஒலியோடு நினைவிலிருக்கும்
கூரை வீடும் - உன்
காரைவீடுதான்!

sabeer.abushahruk said...

மற்றுமொரு வீடும் நினைவில் நிழலாடுகிறது. அந்த வீடு உனக்கும் பரிச்சயம்தான்:

உஷ்ணகாலத்தில்
உத்தரத்திலிருந்து
தேள்கொட்டும் ஓட்டு வீடு
அங்கு
உறங்கும்போது கையிலோ காலிலோ
தேள்கொட்டும்!

வாசலுக்கு வெளியே
திண்ணைகளிருக்கும்
உன்னையும் என்னையும்
உட்கார்த்தி வைக்கும்

நண்பர்கள் கூடி
உரையாடும் நாழி
புன்னகைப் பூத்தே
பெயர்ந்த காரையோடு
சொந்தம் கொண்டாடும் சுவர்கள்

என்
இரட்டைக் குழந்தைகள்
அடக்கம் செய்யப்பட்ட
முற்றத்தோடு
சொந்தவாடி அந்த வீடு!

sabeer.abushahruk said...

இன்னுமொரு வீடு. அது உன் வீடு!

புராதண அழகோடு
உங்கள் தெரு பள்ளி
உரசிக்கொண்டோடும்
ஓடையை ஒட்டி உன் வீடு

பசங்கள் எங்களுக்கு
பங்களா உன் வீடு

மலர்மணக்கும் கொடிகளும்
மனம் மயக்கும்
உன் மாமா மாமியின் கவனிப்பும்

உன்னறையில்
ஒலிபரப்பும் டேப்ரிகார்டரும்
அந்தப் பாடலுக்கு
உடனாடும்
உன்
உதவாக்கரை டிஸ்கோவும்
ஒத்துழைத்த கேசத் தோரணையும்

வந்து வந்து நிழலாடும்
வாழ்ந்து வந்தப்
பாதையெங்கும் பூப்பூக்கும்!

sabeer.abushahruk said...

இன்னுமொரு வீடு. அது உன் வீடு!

புராதண அழகோடு
உங்கள் தெரு பள்ளி
உரசிக்கொண்டோடும்
ஓடையை ஒட்டி உன் வீடு

பசங்கள் எங்களுக்கு
பங்களா உன் வீடு

மலர்மணக்கும் கொடிகளும்
மனம் மயக்கும்
உன் மாமா மாமியின் கவனிப்பும்

உன்னறையில்
ஒலிபரப்பும் டேப்ரிகார்டரும்
அந்தப் பாடலுக்கு
உடனாடும்
உன்
உதவாக்கரை டிஸ்கோவும்
ஒத்துழைத்த கேசத் தோரணையும்

வந்து வந்து நிழலாடும்
வாழ்ந்து வந்தப்
பாதையெங்கும் பூப்பூக்கும்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜாஹிர் காக்கா,

என் உள்ளத்தை உருக்கிவிட்டது இந்த பதிவு. தாயின் மரணத்திற்கு பிறகு பராமரிக்காமல் உள்ளதே எங்கள் வீடு என்ற வேதனையை இந்த பதிவின் மூலம் மீண்டும் நினைவூட்டப்படுள்ளது காக்கா.

//
எத்தனையோ ஊர்களில் இப்படி காரை வீடுகளின் அஸ்திவாரங்களுக்குள் புழுங்கிபோன வரலாறுகள் இருக்கிறது//

100% உண்மை.

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Zakir Hussain,

Going through your article "Kaarai Veedugal" conveyed the concept of life cycle of soul natured human. Actually we can compare soul inside the body to living people inside the home. If the soul is out of body then the its similar to house without living people inside and vise versa.

We can build a house with materials but truly we need to build a home with the people(souls).

Thanks and best regards

B.Ahamed Ameen feom Dubai.
www.dubaibuyer.blogspot.com

Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...

Bror Alaudeen said :
//வல்ல அல்லாஹ்வின் பூமியில் நிறைய படிப்பினைகள் உள்ளது. பிறரின் வாழ்வைப் பார்த்து நாம் படிப்பினை பெறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழை ஆவதும் ஒரு சோதனையே இரண்டு நிலையிலும் மனிதன் சோதிக்கப்படுகிறான்.//

உண்மைதான் படிப்பினை பெற இவ்வையகத்தில் வாய்ப்புக்களை வல்ல இறைவன் ஏராளமாக வைத்துள்ளான். படிப்பினை பெறுவோர்தான் சொற்பமாக இருக்கின்றனர்.
எனவே தான் காலச்சக்கரத்தின் சுழற்சியில் இத்தகைய தலைகீழ் மாற்றமோ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காரை வீட்டைப் பற்றிச் சொன்னதும் கிரவ்னு ! வந்தான்... !

நிறைவில் சொன்னதோடு இல்லாமல் இன்னும் நீண்டிருக்கலாமோ என்று ஏங்க வைத்தது!

புழக்கங்கள் நிறைந்த வீடு, முக்கிய முடிவுகளுக்கு ஒன்று கூடும் வீடு அந்த வீட்டின் அச்சாரம் அசைந்ததும் / மறைந்ததும்... எவ்வாறு மாறும் என்ற நிகழ் காட்டுகள் எங்கள் கண் முன்னாலேயே இருக்கிறது...

அனைத்தும் இறைவனின் நாட்டமே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா !

காத்து வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் என்பவர்கள் மத்தியில்... காரை வீடு கண்டதும் சர சரவென்ற கொட்டுகிறது வரிகள் !

காரை வீடு பதித்த வலிக்கு உங்கள் வரிகள் நிவாரணமாக வருடுகிறது...

//உஷ்ணகாலத்தில்
உத்தரத்திலிருந்து
தேள்கொட்டும் ஓட்டு வீடு
அங்கு
உறங்கும்போது கையிலோ காலிலோ
தேள்கொட்டும்! //

என் தம்பி அவனது ஒன்றரை வயதில் பூச்சி என்று தேளை பிடித்தேன்.. தேளுக்கு என் தம்பியின் விரலப் பிடித்துப் போய்விட்டது அதோடு கடித்தும் பார்த்து விட்டது !

மறக்க முடியாத அந்த நாட்களின் ஞாபகத்தை கிளப்பி விட்டுவிட்டது !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எதுவும் இப்பவும் எப்பவும் நடக்குமென்பதற்கு பாடம் தரும் 'காரை வீட்டுக்' கதை உருக்கத்துடன் அருமை

நானும் கடந்த 12 மணி நேரமாக இடைஇடையே படித்து கமென்டெழுத முயற்சித்தும் முடியலெ!
இதுவும் இறைவன் நாட்டத்தில் என்பதற்கு இக்கதையும் படிப்பினை.

யாசிர் வாங்க முயற்சித்த வீடும் இது தானா?

KALAM SHAICK ABDUL KADER said...

ஊரை விட்டு வந்தாலும்
....உண்மை மட்டும் மாறாமல்
கூரை வீட்டின் அன்பினையும்
....கூட சுமந்து கொண்டுதானே
காரை வீட்டின் கவனிக்காக்
.....காட்சி அமைப்பின் நிழலாடும்
வேரைக் கூட படம்பிடித்து
....விரிவாய்ச் சொல்லி இடம்பிடிதாய்!
....

Yasir said...

சுபுஹ் தொழுதுவிட்டு ,உதிக்கும் சூரியனை ரசித்துக் கொண்டு காலார மெதுவாக நடக்கும் சுகம் உங்கள் எழுத்தில் காக்கா......வலுவான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்லுவது உங்களுக்கு கைவந்த கலை....வாழ்த்துக்களும் துவாக்களும் காக்கா

Yasir said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

ஒரு சில ஆர்ட்டிகிள் படிச்சவுடன் கருத்திட தோணும், அந்த வகையிலே இதுவும் ஒன்னு. இப்படிதான் எத்தன்யோ சிறுவயதுமுதல் கண்முன்னே மங்கிப்போன குடும்பங்கள் ஏராளம். இருட்டும்/வெளிச்சமும் மாறி மாறி வரும் என்பது நிதர்சனம். எழுத்தும் ஆக்கமும் அருமை காக்கா

Yasir said...

//யாசிர் வாங்க முயற்சித்த வீடும் இது தானா?// இல்லை நண்பரே அது “சுடுதண்ணி” மரைக்கா வீடு....அதனை வாங்க முடியாது.....அரசன் அவ்வாறு எழுதிக்கொடுத்துவிட்டான்... ஆண்டு அனுபவிக்க மட்டுமே முடியும்....”மரைக்கா”வின் கம்பீரக் குரலுடன் குர் ஆன் ஓதப்பட்டு சந்தோஷமாக காணப்பட்ட அவ்வீடு இன்று இருள் சூழ்ந்து கிரிப்பிள்ளையும்/வெவ்வாலும்/மர நாய்களும் வாழும் இடமாக காணப்படுகின்றது..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ யாசிர் சொன்னதிலிருந்து...
//அது “சுடுதண்ணி” மரைக்கா வீடு....அதனை வாங்க முடியாது.....அரசன் அவ்வாறு எழுதிக்கொடுத்துவிட்டான்...//

அப்படின்னா சுடுதண்ணி மரைக்காவும் குஞ்சாலி மரைக்காவும் சொந்தக்காரங்களாக இருப்பாங்களோ!

ZAKIR HUSSAIN said...

சபீர்...நீ சொன்ன 3 வீடுகளும் நாம் சின்னப்பிள்ளையாக இருக்கும்போதிலிருந்தே நம் வாழ்க்கையுடன் ஒன்றிபோன விசயம். நீ சொல்லிய விதமும் அப்படியே பழைய காலத்துக்கு கொண்டு போனது.

தாஜுதீன்....நீங்கள் சொன்ன வீடு மட்டுமல்ல...இதுபோல் எத்தனையோ வீடுகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறது.

ZAKIR HUSSAIN said...

//வேரைக் கூட படம்பிடித்து
....விரிவாய்ச் சொல்லி இடம்பிடிதாய்//

Brother Abulkalam [ Kaviyanban ] ....இதுபோல் எழுத உங்களைப்போல் திறமையான கவிஞர்களால்தான் முடியும்.

Brother Ahamed Ameen,ஆத்மாவையும் உடலையும் இணைத்து எழுதிய உங்கள் கருத்து மிகவும் உண்மையானது. உள்நோக்கிபயணம் என்னும் யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களே ஞானம் பெறுவர். உங்களிடம் அந்த தரம் இருக்கிறது.

எம் ஹெச் ஜே & யாசிர் உங்கள் கருத்துக்கும் நன்றி. ஆக எல்லோருக்கும் இந்த எழுத்து புதுமை பிடித்திருக்கிறது




உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு