அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் உள்ள நம் அதிரைச் சகோதர சகோதரிகள் தங்களின் நண்பர்கள், மற்றும் சொந்தங்களுடனும், அவர்களோடு தங்கியிருக்கும் சக முஸ்லிம் சகோதரர்களோடும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். இதற்கு மேல் ஊரில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள், குடும்ப சொந்தங்கள், நண்பர்கள் அனைவருடன் அன்பும் நட்பும் பாராட்டி வழக்கம் போல் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் அல்ஹம்துலில்லாஹ்!
'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். புகாரி 12. Volume :1 Book :2
அதிரையில் நம்மோடு நெருங்கிப் பழகும் சகோதரர்களின் நட்பு பாராட்டும் ஏற்பாட்டால், பெருநாள் விருந்து என்று 400க்கு மேற்பட்டவர்களுக்கு விருந்து பரிமாறி தங்களின் உணவு உண்ணும் நிகழ்வை நடத்தி ஈகை திருநாளின் புனித நோக்கத்திற்கு மாற்றாக அமையப் பெற்றதை ஒட்டு மொத்த அதிரை முஸ்லீம்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த ‘மந்தி’ விருந்தோம்பலில் கலந்து கொண்ட 90% சதவீதத்திற்கு மேற்பட்ட சகோதரர்கள் தங்களின் அன்றைய உணவுக்கு திண்டாடுபவர்களல்ல.
பெருநாள் தினத்தன்று அதனைத் தொடரும் விடுமுறை நாட்களில் தாய் தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்று ஒன்று கூடி சந்தோசமாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள், இந்த மந்தி விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தங்களுக்கென்று வீடு குடும்பம் இல்லாமல் இருப்பவர்களுமல்ல !
குடும்பங்கள் ஒன்று கூடும் வீட்டில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு இவ்வாறான விருந்தோம்பல் அவசியம் தானா ?
ஒன்று கூடல் பெருமைக்கும் பகட்டுக்காகவும் இவ்வகை விருந்து வீண் விரையங்கள் நடைபெறுகிறதே, இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது மார்க்க அறிஞர்களுக்கும் தோன்றவில்லையா?
அனாச்சாரங்களை தட்டிக்கேட்க வேண்டியவர்களே பம்மிக் கொண்டு நமக்கொரு அழைப்பில்லையே என்று ஏங்கிக் கொண்டிருகிறார்களா? என்னவோ ! அவர்களெல்லாம் எங்கே ? பொதுக் காரியங்களில் ஈடுபடும் சகோதரர்கள் இவ்வாறான பகட்டுக்காக புகைப்படமெடுத்து விளம்பரப்படுத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்வது அவர்களின் பொதுநலச் சேவைகளை கேள்விக் குறியாக்காதா?
பெருநாள் பகல் தினத்திலோ அல்லது பெருநாள் முடிந்த அடுத்தடுத்த நாட்களிலோ ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வலிமா என்ற பெயரிலா இவ்வாறான மந்தி விருந்து கொடுக்கப்பட்டுள்ளதா?
கடந்த சில வருடங்களாக தங்களின் பொருளாதாரத்தை அர்த்தமற்ற இது போன்ற பொழுதுபோக்கு மற்றும் பகட்டுக்கான விருந்துகளுக்கு பண உதவி செய்பவர்கள் அதற்கு உடந்தையாக செல்பவர்கள் பின்வரும் இறைவசனத்தை கொஞ்சம் நிதானமாக வாசித்துப் பாருங்கள்.
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31
(ஒருவேளை உணவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும், சத்திய சஹாபாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்? அந்த கஷ்டத்தில் ஒரு துளி உணவின்றி நாம் கஷ்டப்பட்டிருப்போமா? நம் கண்களின் கண்ணீர் வர வைக்கும் அந்த சம்பவங்களை சிறிதளவேனும் அறிந்து கொள்ள இங்கே சுட்டிப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/05/8.html)
இது போன்ற அனாச்சார விருந்துக்கு செலவு செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?
ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க முன்வரக் கூடாதா?
அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?
பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 400 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?
ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?
முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி தின்பவர்கள் என்று சொல்லும் பிற மதத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?
உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர் உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?
வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?
ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?
எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா?
என்னதான் நடக்கிறது ஊரில்?
ஒவ்வொரு பெருநாள் காலங்களில் என்ன ஆனது நமதூர் ஊர் செக்கடிமேடு நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சாப்பாட்டையும் அரட்டையையும் முன்னிருத்தி பெருமையடிப்பார்கள்? இன்னுமா திருந்தவில்லை? ஏன் இந்த அவசியமற்ற பெருமை? நாளை நமது பிள்ளைகள் இவ்வாறே தொடர்ந்தால் அதன் விளைவாய் ஏற்படும் அந்த வலியை சொல்லிக்காட்ட ஆள் இருக்காது கிள்ளிப் போடத்தான் சுற்றியிருக்கும் கூட்டம்.
தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக ஓட்டு கேட்கவும் கூட்டுகளை உடைக்கவும் பல கூட்டணிகளில் பங்கெடுக்கும் நம் சகோதரர்கள், மந்தியென்றதும் முந்திக் கொண்டு இந்த சாப்பாட்டுக் கூட்டணி ஏன்? [ஒற்றுமையின் அவசியம் அறிந்துதான் செயல்படுகிறோம் என்றால் இதில் மட்டுமல்ல இன்னும் ஏனைய காரியங்களிலும் முன்னிருத்தி காட்டுவதுதான் சிறந்தது].
காஸாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் நாளுக்கு நாள் மக்கள் கொல்லப்படும் இந்த சூழலில் செக்கடிமேடு சார்ந்த சில சகோதரர்கள் இப்தார் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். ஆனால் அதே சகோதரர்கள் இந்த மந்தி விருந்தை அங்கீகரித்திருப்பது எவ்வகையான நிலைபாடு என்பது புரியவில்லை.
வீண் பெருமை, வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று தனது திருமறையில் தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டானே, வீண் பெருமைக்காக, தேவையின்றி வீண் விரயமாக செய்யப்படும் இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் நேசம் நெருங்குமா என்பதை நம் சகோதரர்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.
மேற்கண்ட கேள்விகள் உங்களின் சிந்தனையை சிதைக்கவல்ல, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அன்பான எங்கள் நண்பர்களே, சகோதரர்களே மேலே சொன்னவை எந்த ஒரு தனி நபர்கள் மேல் வெறுப்பு கொண்டு எடுத்து வைக்கப்பட்டது அல்ல. மாறாக நாம் எங்கே செல்கிறோம்? நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு எவ்வகை அனாச்சார செயலை நற்செயலாக முன்னுதாரனமாக காட்டுகிறோம்? நாளை நமது பிள்ளை இதே வழியை நாடினால் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருப்போமா? அல்லது அவர்களின் நேர்வழி வேண்டி இறைஞ்சுவதில் இருப்போமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.
இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இந்த வீண் விரய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தால் அதற்காக பரிகாரம் தேடுங்கள். இந்த வீண் விரய விருந்தை முதன் முதல் ஆரம்பித்து வைத்த சகோதர்களுக்கு இதன் தொடர் பாவங்கள் அவர்கள் கணக்கில் சேர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பரிகாரம் தேடட்டும்.
அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற வீண் விரையங்களை ஏற்படுத்தும் விருந்து உபசரிப்புகளிருந்து தடுத்து அனைவரையும் பாதுகப்பானாக. ஆமீன் !
அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு மீண்டும் அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இது போன்ற வீண் விரய அனாச்சார நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை திட மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள். இதுதான் இஸ்லாமிய ஊடகக்காரர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான செயலாக இருக்க முடியும். சமுதாய பெறுப்புணர்வுடன், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதை பதிந்து வைக்கிறோம் அவர்களுக்கு வரலாற்றில் ஏடாக எதைக் கொடுக்கப் போகிறோம் என்ற கவலையுடன் செய்திகளை வெளியிடுங்கள். கேடுகெட்ட தினசரிகளைப் போன்று இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் ஊடகங்களும் அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதை வேண்டுகிறோம்.
இது போன்ற விரயங்களை தற்பெருமையாக இணையத்தில் வெளியிட்டு இதனை படிப்பவர்கள் சந்தோசமடைவார்கள் என்று தவறான நோக்கத்துடன் இருக்கிறார்கள் மந்தி விருந்து ஏற்பாட்டாளர்கள். இதற்கு விதிவிலக்காக அதிரையில் மார்ர்கத்திற்கு புறம்பான வீண் விரயங்களை சுட்டிக்காட்டி அதிலிருந்து நம்மக்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இதனை பிற வலைப்பூக்கள் செய்யத் தவறினாலும் நாம் அதிலிருந்து பிறழாமல் எவருக்கும் அஞ்சாமல் செயல்படுவோம், மவுனமாக இருக்க மாட்டோம் என்பதற்கு இந்த பதிவும் முந்தைய பதிவுகளும் சாட்சி பகரும்.
இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிக நெருக்கமானவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அழைத்து எடுத்துச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதனை ஒரு கண்டன பதிவாகவே பொதுவில் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம்.
இஸ்லாமிய சமுதாய, நம்மக்களுக்கு ஒவ்வாத, புறம்பான செயல்கள் எதுவாயின் அதனை விமர்சிக்கவும், அவற்றிலிருந்து நம்மக்களை தவிர்த்திட வைக்கவும் அதிரைநிருபர் தளம் தயவு தாட்சனைகளின்றி செயல்படும் இன்ஷா அல்லாஹ் !