தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை உயர்த்தும் ஒரே நோக்கில் செயல்பட்டால், எந்தத் தலைவரும் வெற்றி பெற வாய்ப்புண்டு. தலைவரும் அவரைப் பின்பற்றும் தோழர்களும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்பட்டால், முழுமையான வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அமைந்து, வெற்றிப் பாட்டையில் வீறுநடை பயிலலாம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவலையெல்லாம், தம்மைச் சார்ந்தோர், தம் தோழர்கள், உலக மக்கள் அனைவரும் நரக நெருப்பை விட்டுக் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே. மறுவுலகக் கவலையை விடுத்து, இம்மையின் இன்பங்களுக்காக மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்ற தலைவர்கள் அள்ளிக் கொடுத்தால், உலகில் ஏராளமான தோழர்கள் கிடைப்பார்கள். ஆனால், நிலையான மறுமை வாழ்வை நோக்கி மக்களை அழைத்தால், அத்தகைய தலைவரை எதிர்ப்பார்கள்; சண்டை போடுவார்கள்; அவர்மீது கல்லெறிந்து காயம் உண்டாக்கும் அளவுக்கும் போவார்கள்; எல்லா வழிகளிலும் எதிர்த்து நிற்பார்கள்!
இதுதான் நடந்தது, இறைத்தூதரின் வாழ்க்கையில்! பல முறை, பல வழிகளில் அவர்களின் எதிரிகள் தொல்லை கொடுத்துத் துரத்த நினைத்தார்கள்! நபி அவர்களும் தாமும் மக்களும் ஈடேற்றம் பெறவேண்டுமே என்று, அளவுக்கு மீறிக் கவலைப் பட்டார்கள். அல்லாஹ்வின் அருட்கதவைத் தட்டியது, அந்தக் கவலை. இதைத்தான், தனது வேத வரிகளில் இவ்வாறு வெளிப்படுத்தினான் அந்த அருளாளன்:
“(நபியே!) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லையே என்ற கவலையால் உம்மையே நீர் மாய்த்துக்கொள்வீர் போலும்” (26:03) என்று கூறினான். இன்னும்,
“(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பாவிட்டால், அவர்களு(டைய புரக்கணிப்பு)க்குப் பின்னால் ஏற்படும் கவலையால், உம்மையே நீர் அழித்துக்கொள்வீர் போலும்!” (18:6)
இத்தகைய வசனங்களுக்குப் பின்னால், அதுவரை இஸ்லாத்தைத் தழுவாதிருந்த பலர், நபி (ஸல்) அவர்களின் மனோநிலையைப் புரிந்து, இஸ்லாத்தைத் தழுவினார்கள். நபி (ஸல்) போருக்கு அழைத்தாலும், போகத் துணிந்தார்கள்; உயிரைக் கொடுத்துத்தான் இஸ்லாத்தை வளர்க்க முடியும் என்றிருந்தால், அதையும் செய்ய ஆயத்தமாய் இருந்தார்கள்! அந்த நபித்தோழர்களைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறுவதைப் பாருங்கள்:
“(இறை நம்பிக்கையாளர்களே!) உங்களிலிருந்தே இறைத்தூதர் ஒருவர் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வேதனையாக இருக்கும். (நீங்கள் நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்கள் மீது பேரன்பு கொண்டவர் அவர். அன்றியும், மூமின்கள் மீது இரக்கமும் கருணையும் கொண்டவர்.” (9:128)
இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி, தலைவர் எனும் அடிப்படையில், தெளிவாக ஒன்றைக் கூறவேண்டும் என்றால், அது அவர்களின் பொறுமையும் சகிப்புத் தன்மையுமேயாகும். அவர்களின் அண்மையில் பலதரப்பட்ட தோழர்கள் இருந்துள்ளனர். சிலர் அறிவில் குறைந்தவர்கள். முரட்டுத் தனத்துடனும் முட்டாள் தனமாகவும் நபியிடம் நடந்துகொண்ட எதிரிகளுக்குத் தக்க பாடம் புகட்ட, அண்ணலாரின் அன்புத் தோழர்கள் ஆவேசமாக வாளை உருவிச் சண்டையிடவும் தயாராயிருந்தார்கள். ஆனால், அந்தத் தோழர்களை அவ்வாறு செய்ய ஒருபோதும் நபியவர்கள் அனுமதித்ததில்லை. முட்டாள் தனமாகவும் முரட்டுத் தனமாகவும் தம்மிடம் நடந்துகொண்ட எதிரிகளிடம், அண்ணல் நபி (ஸல்) அமைதியுடனும் சகிப்புத் தன்மையுடனும் புன்முருவலுடனும்தான் நடந்துகொண் டார்கள்!
அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மிருதுவாக நடந்துகொண்டீர். கடுகடுப்பானவராக நீர் இருந்திருப்பீராயின், உம்மிடமிருந்து அவர்கள் வெகுவாக விலகிப் போயிருப்பார்கள். ஆகவே, அவர்(களுடைய குற்றங்)களை நீர் மன்னித்து, அவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்பும் கேட்பீராக! உங்கள் செயல்பாடுகள் பற்றி அவர்களுடன் கலந்தாலோசனையும் செய்வீராக. ஆகவே, நீர் (ஒரு செயலைச் செய்ய) உறுதி கொண்டால், அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுவீராக. நிச்சயமாக, அல்லாஹ் (தன் மீது) பொறுப்புச் சாட்டுவோரை நேசிக்கின்றான்.” (3:159)
வரலாற்றில் பதிவான செய்தியொன்று உண்டு. அதன்படி, மக்காவில் பெண்ணொருத்தி, நபியவர்களின்மீது வெறுப்புக் கொண்டு, அன்னார் கஅபாவுக்கு வரும் நேரத்தில் தனது வீட்டு மேல்மாடியில் நின்றுகொண்டு, அவ்வழியைக் கடந்து நபியவர்கள் போகும்போது தன் வீட்டுக் குப்பையை அண்ணலாரின் தலைமீது கொட்டுவாளாம். மாறாக, நபியவர்கள் ஒன்றும் சொல்லாமல், தம் மீது விழுந்த குப்பையை உதறித் துடைத்துவிட்டு, அன்னார் செல்லவேண்டிய பாதையில் செல்வார்களாம். இந்தத் தீய செயலைப் பல நாட்களாக அப்பெண் செய்வதும், அண்ணலார் அதைத் துடைத்துவிட்டுச் செல்வதுமாக இருந்தது. வழக்கத்திற்கு மாற்றமாக, ஒரு நாள் குப்பை கொட்டும் நிகழ்வு நடக்கவில்லை. கஅபாவிலிருந்து திரும்பி வரும்போது, நபியவர்கள் அவ்வீட்டுக் கதவைத் தட்டி, அந்தப் பெண்ணைப்பற்றி விசாரிக்க, அவள் நோயுற்றுப் படுக்கையில் கிடப்பதாக பதில் வரவே, அப்பெண்ணைச் சந்திக்க அனுமதி பெற்று உள்ளே சென்று, அப்பெண்ணிடம் நலம் விசாரித்தார்கள் நபியவர்கள்!
விசாரித்தவரை ஏறிட்டுப் பார்த்த அப்பெண், தன்னருகில் அமர்ந்திருப்பவர், தான் தினமும் யார்மீது குப்பை கொட்டிவந்தாரோ, அந்த முஹம்மதுதான் என்று அறிந்தபோது, தான் செய்த படுபாதகச் செயலுக்காக வெட்கி வருந்தி, நபியிடம் மன்னிப்புக் கேட்டு, முஸ்லிமாக மாறினார்!
நபிவரலாற்றில் கூறப்படும் இன்னொரு செய்தி: மக்கத்து வீதியொன்றின் ஓரத்தில் வயது முதிர்ந்த பெண்ணொருத்தி நின்றுகொண்டிருந்தார். அவருக்கருகில் கனமான பொதியொன்றை வைத்துக்கொண்டு, யாராவது தனக்கு உதவி செய்வார்களா என்று, வருவோரையும் போவோரையும் கெஞ்சிய வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அந்த வழியாக வந்த அண்ணலார் (ஸல்) அவர்கள், அப்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் மக்காவை விட்டுப் போக முடிவு செய்ததாகவும், மக்காவின் புறநகர்ப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து புறப்படும் பயணிகளுடன் சேர்ந்துகொள்ள அப்பொதியைத் தூக்கிவர யாராவது தனக்கு உதவுவார்களா என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் தாம் உதவி செய்ய முடியும் என்று கூறி, அப்பொதியைத் தூக்கித் தலையில் வைத்து, அந்த மூதாட்டியுடன் நடக்கத் தொடங்கினார்கள். போகும் வழியில் அப்பெண், தான் மக்காவை விட்டுச் செல்வதற்கான காரணத்தை இவ்வாறு விவரித்தாள்: “நான் மக்காவை விட்டு வெளியூருக்குப் போவதற்குக் காரணமே, முஹம்மது என்ற ஒருவர்தான். தான்தான் இறுதி நபி என்றும், தம் முன்னோர்கள் வணங்கிவந்த பல கடவுள்களை வணங்காமல், அல்லாஹ் என்ற ஒரே கடவுளை மட்டும் வணங்கவேண்டுமாம் தம்பி! அந்த ஆள் விரிக்கும் சதிவலையில் நீயும் விழுந்திடாதே! உன்னையும் அந்த ஆள் கெடுத்துவிடுவார். நீ நல்ல இளைஞனாகத் தெரிகிறாய். முடியாத நிலையில் இருக்கும் எனக்கு உதவுகிறாய்.”
இவ்வாறு பேசிக்கொண்டே வந்து, வாகனக் கூட்டத்தோடு செல்வதற்கான இடத்தை வந்தடைந்த கிழவி, “மகனே! நீ நல்ல பிள்ளையாகத் தெரிகிறாய்! உன் பெயர் என்னப்பா?” என்று கேட்டாள்.
“தாயே! என் பெயர் முஹம்மது” என்று கூறியவுடன், கிழவி அதிர்ந்து போனாள்! தனது பொதியைத் தூக்கிக்கொண்டு, அதுவரை தனக்கு உதவி செய்தவராக, தான் கூறிய பொய்த் தகவல்களைப் பொறுமையோடு கேட்டு மறுப்புக் கூறாமல், தன்னைப்பற்றிக் கூறப்பட்ட ஏச்சுப் பேச்சுகளைத் தாங்கிக்கொண்டு வந்த இளைஞரா இந்த முஹம்மத்? உண்மையை அறிந்தபோது, அதிர்ச்சியடைந்து நின்றாள் அந்த மூதாட்டி!
“அந்த ‘முஹம்மது’ என்பவர் நீதான் என்றால், நீதான் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேனப்பா! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான் என்றும், முஹம்மது அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன் அப்பா!” இறுகி நின்ற கிழவி, இளகிப் போனார்!
மக்காவை விட்டு மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து வந்த பின்னர், ‘மஸ்ஜித் நபவி’யில் நடந்த நிகழ்வை நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) விவரிக்கின்றார்:
ஒரு நாள் நாங்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைச் சூழ்ந்து ‘மஸ்ஜித் நபவி’யில் அமர்ந்திருந்தோம். அப்போது பார்வை இழந்த முதிய கிராமவாசி ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்து சிறுநீர் கழித்தார். அப்போது எங்களில் சிலர் அவரைத் தடுக்க முனைந்தனர். அதைக் கண்ட நபியவர்கள்,”நில்லுங்கள்! அவரை முழுமையாகக் கழிக்க விட்டுவிடுங்கள்” என்று கூறித் தோழர்களைத் தடுத்தார்கள். அம்முதியவர் கழித்து முடித்ததும், “இப்போது அவ்விடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றித் தூய்மைப் படுத்திவிடுங்கள்” எனக் கூறி, நிலைமையைச் சரிப்படுத்தினார்கள்.
நபியவர்களுக்குத் தெரியும், அவரை இடையில் தடுத்தால் என்னவாகும் என்று. சிறுநீர் கழிப்பவரைத் தடுத்தால், அவர் அந்த இடத்திலிருந்து தப்பியோடுவார். அந்த நேரம், அவர் பெய்துகொண்டிருந்த சிறுநீர், மஸ்ஜிதின் மற்றப் பகுதிகளில் சிந்தி, அசிங்கப்படுத்திவிடும். நபியவர்களின் இந்தத் தொலைநோக்குப் பார்வையால், பெரிய விளைவு தடுக்கப்பட்டது. அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்து முடிந்த பின்னர், அவரை வெளியில் செல்ல வழி காட்டிவிட்டு, மக்கள் தொழும் இடமான பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று அவருக்கு நற்போதனை புரிந்தார்கள்.
நாம் இதற்கு முன்பு தெளிவுபடுத்தியது போன்று, இறைக் கட்டளைகளைப் பிழையில்லாமல் பின்பற்றித் தீர்க்கமான முடிவெடுத்துச் செயல்படுத்துவதற்கு முன்னால், நபி (ஸல்) அவர்கள் தம் அருமைத் தோழர்களிடம் ஆலோசனை செய்வார்கள். இது பலருக்கு வினோதமாகத் தெரியலாம். இதற்குக் காரணம், ‘வஹி’ என்னும் வேத இறைக்கட்டளையைப் பெறுபவர்களாக நபி அவர்களே இருந்தும், தோழர்களினும் மேலான அறிவையும் அனுபவத்தையும் பெற்றவர்களாக இருந்தும், தம் தோழர்களுடன் கலந்தாலோசனை செய்ததன் தேவை யாது? இதுவே அவர்களின் கேள்வி.
தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தின் பயன்கள் இதோ:
- முற்ற முற்றத் தலைவரைப் பின்பற்றும் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும், தம் கருத்துக்கும் மதிப்புண்டு என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டு, ஒரு செயல்பாட்டில் விளையும் முடிவில் தமக்கும் பங்குண்டு என்ற பொறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.
- அவர்கள் தலைவரால் மதிக்கப்பட்டு, தமது கருத்தையும் பதிவு செய்வதால், ஒன்றித்த கருத்து வலுப்பெற வாய்ப்புண்டு.
- சில வேளை, உள்ளூர் நிலவரங்களைத் தொண்டர்களும் தோழர்களும் தலைவரைவிடக் கூடுதலாக அறிந்திருப்பார்கள். அவ்வடிப்படையில், அவர்களின் கருத்துப் பதிவு பயனுள்ளதாக அமைய வாய்ப்புண்டு.
- இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பின்னர், ஒரு வேளை, அத்தோழர்கள் முடிவெடுக்க வேண்டிய தலைமைப் பொறுப்பைச் சுமந்தவர்களாக முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு. அதற்கான பயிற்சியாக இக்கலந்தாலோசனை பயன்படக் கூடும்.
- தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையில் கருத்து ஒன்றித்த ஈடுபாடு உண்டாகும். அவரவர் சமூக இயல்புகளைப் பகிர்ந்துகொண்டு, பொதுவான நலனுக்காகவும், இஸ்லாத்தைப் பரப்பும் முயற்சியாகவும் அமைய அதிக வாய்ப்புண்டு.
எந்தப் பணிக்கு யார் பொருத்தமானவர் என்றும், எவர் அதற்கான கூடுதல் பயிற்சியை எடுத்துள்ளார் என்றும் தெரிவு செய்வதில், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், ஒன்றல்ல, தானைத் தலைவர்கள் பலரை ஏற்படுத்தி வைத்துவிட்டே இறப்பெய்தினார்கள். அவர்கள்தாம் அரபுத் தீபகற்பத்துக்கு வெளியில் இஸ்லாத்தை அறிமுகம் செய்தவர்கள். நபியவர்களின் இறப்பிற்கு முப்பதாண்டுகளுக்குப் பின், அவர்களின் விருப்பத்திற்கு மாற்றமான நிகழ்வுகள் நடந்தன என்பது வரலாற்று உண்மைதான். என்ன செய்வது? இறை நாட்டம் வேறாக இருந்தது! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வகுத்த ஒற்றுமை நெறியில் முனைந்து பாடுபடுவது தொடர்ந்தால் மட்டுமே, இறுதித் தூதுத்துவத்தின் இனிய பயனைப் பெற முடியும் என்பது வேத வாக்கின் பதிவல்லவா?
உலக வரலாற்றில் நடந்தவை எதுவானாலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற மகத்தான முன்மாதிரி மிகத் தெளிவாக உள்ளது. அதைக்கொண்டு பயன் பெற விழையும் எவருக்கும், அது கலங்கரை விளக்கமாக ஒளியுமிழ்ந்து வழி காட்டிக்கொண்டு இருக்கின்றது. முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த உலகைவிட, கற்பனை செய்ய முடியாத அளவில் தற்கால உலகம் மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது உண்மைதான். சமூகங்களின் மாற்றத்துக்கு ஒப்பாக இயற்கையின் பருவநிலை மாறாதது போன்று, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற வழிகாட்டல்கள் மாறாமல், வழி காட்டிக்கொண்டுள்ளன.
புவி ஈர்ப்பும் வான்வெளிப் பயணமும் எவ்வாறு நம் கண் முன்னால் உண்மையாக இருக்கின்றனவோ, அது போன்றே முஹம்மத் (ஸல்) அவர்களால் வகுக்கப்பட்ட இவ்வுலக வெற்றியும் மறுமை வெற்றியும் மாறா நிலையில் நிற்கின்றன. இதைத்தான் இவ்வுலக மக்களுக்குக் கற்றுக் கொடுக்க முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதராக அனுப்பப்பட்டார்கள். அந்தத் தூதுத்துவத்தை ஏற்றுச் சான்று பகர்ந்து, இறுதித் தூதரின் வழியைப் பின்பற்றுவோராக இருக்கவே நாம் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும்.
அதிரை அஹ்மது
0 Responses So Far:
Post a Comment