Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2015 | ,

ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாத்தை வாஞ்சையுடன் வாரித் தழுவிக் கொண்ட முக்கியமான அன்சாரிகளுள் ஒருவர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி). ஜாபிரின் தந்தையான அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) புனித பத்ருப்போரில் வெற்றிக் களம் கண்ட முக்கியமான நபித் தோழர்  ஆவார். இவர் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பிரபலமான உஹத் யுத்தத்தில் கலந்து கொள்ளும் ஆவலுடன் மகனை அழைத்தார். 

"ஜாபிரே! என் மனைவி மக்களில், பிள்ளைகளில் நீயே எனக்கு மிகவும் பிரியமானவன். இந்தப் புனிதப் போரில் நான் ஷஹீதாகி விடுவேன் என்று எனக்குப் படுகின்றது. என் மீதான கடன் சுமைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டியது உன் பொறுப்பேயாகும். உன் சகோதரிகளோடு நன்முறையில் நடந்துகொள். அவர்களை நன்கு பராமரித்துக் கொள்வது உன் கடமை" என்று உபதேசம் செய்துவிட்டு அறப்போரில் ஈடுபட்டு, அவர் சொன்னவாறே உஹத் களத்தில் ஷஹீதானார். 

தந்தைக்கேற்ற தனயனாக, தந்தையின் சொல்படி, தம்  தங்கைகளின் நலனுக்காக தம்மையே  தியாகம் செய்துகொண்டார் இளைஞர் ஜாபிர் (ரலி) அவர்கள். 

ஜாபிரின் தந்தைக்குக் கடன் கொடுத்த யூதன் அவருக்கு அவகாசம் அளிக்க மறுத்து,  'முப்பது வஸக்' பேரீத்தம்  பழங்களையும் உடன் திருப்பித்தருமாறு கேட்டு நின்றான். கருணை  நபி (ஸல்) அவர்களின்  கவனத்திற்கு இந்த வழக்கு வந்தது!

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) இருவருடனும், ஜாபிரின் தோட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு நின்று பேரீத்த மரங்களைப் பார்த்தார்கள். மிகச் சொற்ப மரங்களே கொஞ்சம் கனிகளைக் கொண்டிருந்தன! உடனே, மரங்களுக்கிடையே சுற்றிவரத் தொடங்கினார்கள். பிரார்த்தித்தார்கள். அதன்பிறகு, ஜாபிரிடம் 'இம்மரங்களின் கனிகளை எல்லாம் கொய்துவிடு! கடன்களை அடைத்துவிடு! உன் பிரச்னைகள் தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ்!' என்று சொல்லிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிட்டார்கள்.

அவ்வாறே ஜாபிர் (ரலி) மரங்களின் பழங்களைப் பறித்தார். என்ன அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு ஏராளமாக இருந்தன.

அந்த யூதன் உட்பட, தம் தந்தை கடன் பட்டிருந்த அனைவரையும் அழைத்து, ஒருவர் விடாமல், அனைவருக்கும் செலுத்த வேண்டிய கடன்களை எல்லாம் நிறைவேற்றினார். அவ்வாறு எல்லோருக்கும் கடன்களை நிறைவேற்றிய பிறகும் அவரிடம் பனிரெண்டு 'வஸக்'குகள் (ஏறத்தாழ 2,150 கிலோ) பேரீத்தம் பழங்கள் எஞ்சி விட்டன! ஜாபிருக்கு பயங்கரமான ஆச்சரியம்!

சிரித்துக் கொண்டே ஓடிப்போய், அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) உடைய உடன்பிறந்த சகோதரியும் தன் அத்தையுமான ஃபாத்திமா பின்த் அம்ரு (ரலி) விடம் விவரத்தைச் சொன்னார். அத்தைக்கும் அளவிட முடியாத ஆச்சர்யம்! 

'நீ உடனடியாக அண்ணலாரிடம் திரும்பிச் செல்! நிகழ்ந்தவற்றைச் சொல்!' என்றார் அத்தை உள்ளப்  பூரிப்புடன்!

திகைப்பும் மகிழ்ச்சியுமாக தியாகத் திருநபி (ஸல்) அவர்களிடம் சென்றவர் 'கடன்கள் எல்லாம் அடைந்துவிட்டதென்றும் 'பன்னிரண்டு வஸக்குகள்' எஞ்சிவிட்டன அல்லாஹ்வின் தூதரே! என்றும்   மூச்சுவிடாமல் மொழிந்தார்! 

புன்னகைத்த பெருமானார் (ஸல்) சிரித்துக்கொண்டே, “அபூபக்ருவிடமும் உமரிடமும் செல்! நிகழ்ந்ததைச் சொல்!” என்றார்கள்.

அவர்கள் இருவரிடமும் சென்றுரைத்தபோது,

'எங்களுக்கு அப்போதே இதன் முடிவு என்னவாகும் என்று தெரியும்!

மெய்யானவரும் மெய்ப்பிக்கப் பட்டவருமாகிய உண்மைத் தூதர் (ஸல்) “உன் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வரும்போதே, என்ன நிகழும் என்பதை நாங்கள் கிரகித்துக் கொண்டோம்” என்றனர் புன்னகையுடன்! (1) 

இத்தகைய  அற்புதமான மாமனிதரைத்தான் மதீனாவின் அன்சாரிகள் அடிக்கடி சந்திப்பதிலும் அவர்களோடு அளவலாவுவதிலும் போட்டி போட்டு நின்றார்கள். மேலும் நபியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அதிலும் ஜாபிர் (ரலி) அவர்களுக்கோ, அண்ணலார் தம் தந்தைக்கு  நெருக்கமானவர் என்ற அலாதியான உரிமையும் கூடவே இருந்தது!

இத்தனைக்கும் அன்று தம் சொந்த மண்ணின் பூர்வீக நாட்டாண்மைகளால் 'சூன்யம் வைக்கப்பட்டவர்' என்றும் 'மறை கழன்றவர்' என்றும் 'மனிதர்களை மயக்குபவர்' என்றும் ஏசி ஒதுக்கப்பட்ட ஓர் எளிய மனிதர், 

இன்றோ முழு அரேபியாவையே ஆளும் மன்னராக மட்டுமின்றி, மதீனத்து மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் மனச் சாட்சியின் காவலராக, இளைஞர்கள் மத்தியில் இலட்சிய புருஷராக, வயதானோர் வாக்கெடுப்பில் வெற்றி வேந்தராக, விசுவாசிப் பெண்களின் விடிவெள்ளியாக, தம் மழலை நண்பர்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காக, மொத்தத்தில் அந்த எல்லோருக்கும் சுவனத்தைப் பற்றிச் சொல்லி, தங்கள் கவனத்தைக் கவர்ந்த ஒரு காந்தப் புள்ளியாகவே நம் கண்மணி நாயகம் (ஸல்) தோன்றினார்கள்.

இஸ்லாமிய சரித்திரத்தில் 'தாத்துர் ரிகா' எனக் குறிப்பிடப்படும் படையெடுப்பிலிருந்து திரும்பும் வழியில் கனமழை பிடித்துக் கொள்ள, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உட்பட முஸ்லிம்கள் அனைவரும் முற்றிலுமாக நனைந்து போனார்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தை அடைந்தபோது, பெருமானார் (ஸல்) அவர்கள், தம் நனைந்த உடைகளைக் களைந்து ஒரு மரத்தில் காயப்போட்டு விட்டு, அவர்களின் போர்வாளை ஒரு கிளையில் தொங்கப் போட்டுவிட்டு அந்த மரத்தின் நிழலிலேயே அசதியில் அயர்ந்து உறங்கிவிட்டார்கள். 

பனீ முஹாரிப் கூட்டத்தைச் சார்ந்த 'கௌராத்' என்பவன் அண்ணல் நபியைக் கொல்லும் நோக்கத்துடன் திடீரென்று அங்கு தோன்றினான். வந்த வேகத்தில் வள்ளல் நபியின் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். சலசலப்புச் சப்தம் கேட்டு விழித்தெழுந்த சத்தியத் தூதரைப் பார்த்து,

நீ 'முஹம்மது' தானே? என்று அகங்காரத்துடன் கேட்டான்.

“ஆம். நான்தான்!” என்றனர் நபியவர்கள். 

“இந்த நேரத்தில் யாரால் உம்மைக் காப்பாற்ற முடியும்?” என வாளை உயர்த்தி மிரட்டினான்.

அல்லாஹ்வை மட்டும் அஞ்சுபவர்கள், இந்த பூமியில் வேறு எவனுக்கும் அஞ்சத் தேவையில்லை! என்பதற்கிணங்க, சிறிதுகூடக் கலவரப் படாமல், உறுதி மிகுந்த தொனியில் அமைதியாக அந்த 'ஒற்றைச்சொல்லை' உத்தமத் தூதர் (ஸல்) அவர்கள் உச்சரித்தார்கள்.
'அல்லாஹ்'
சர்வ சக்தியும் ஒன்று திரண்டு நின்ற அந்த ஒற்றைச் சொல் 'கௌராத்' என்ற அந்தக் கொலை பாதகனைக் குலை நடுங்கச் செய்துவிட்டது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு விதமான பயங்கர நடுக்கம் அவனை ஆட்கொண்டதால், அவனை அறியாமலேயே, அவன் கையில் இருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது!

இப்போது, தமது வாளைக் கையில் எடுத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள், சற்றுமுன் அவன் கேட்ட அதே கேள்வியை அவனிடமே திருப்பிக் கேட்டார்கள். அவன் கண்களில் மரண பீதியுடன் கண்கள் கலங்க,

'என்னைக் காப்பாற்ற யாரும் இல்லை.  நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றான்.

அப்படியல்ல! உன்னையும் அந்த 'அல்லாஹ்' தான் காப்பாற்றுவான். வந்த வழியே நீ  திரும்பிச்சென்று விடு!

நான் கொலைகாரனல்லன்! 'நான் சத்தியத்தின் தூதுவன். சமாதானத்தின் காவலன்!' என்று கூறி அவனைப் போகச் சொன்னார்கள்.

இந்த மனிதாபிமான மிக்கப் பெருந்தன்மையால், நெகிழ்ந்து போய் நின்ற அவன், அங்கேயே இஸ்லாத்தைத் தழுவினான்!

தன் கூட்டத்தாரிடம் நபியைக் கொல்வதாகக் கூறி சூளுரைத்து வந்தவன், தன் சகாக்களிடம் திரும்பிச் சென்றபோது, 'இந்த உலகத்திலேயே உயர்வகையான ஓர் உத்தமரிடமிருந்து உண்மையைக் கண்டு வருகின்றேன்!' என்றான். 

சத்திய நபியின் சாந்த முகமும் காந்த விழிகளும் கனிவான பார்வையும் கற்கண்டு மொழியும் கண்டு அவன்  ஒரு கண்ணிய மனிதனாக அல்லாஹ்வின் அருளால் ஆகிப்போனான்! 

காலையில் இஸ்லாமியப் படையினர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) வின் பேரீத்த மரங்களுக்கு நீர் சுமக்கும் ஒட்டகம் மிகவும் களைப்படைந்து நடக்க முடியாமல் அனைவருக்கும் கடைசியாக வந்து கொண்டிருந்தது. 

நபி (ஸல்): யாரது? ஜாபிரா?

ஜாபிர் (ரலி): ஆமாம். நான்தான், யா ரசூலல்லாஹ்!

நபி (ஸல்): உன் ஒட்டகத்திற்கு என்ன ஆயிற்று?

ஜாபிர் (ரலி) : அது களைப்படைந்து விட்டது. ஆதலால், நான் பின் தங்கி விட்டேன், யா ரசூலல்லாஹ்.

(அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சற்றுப் பின்தங்கி அந்த ஒட்டகையை அதட்டி அதற்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே, அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகத்தை எல்லாம் முந்திக் கொண்டு ஓடத் துவங்கியது)

நபி (ஸல்): ஜாபிர். நீ திருமணம் முடித்து விட்டாயா?

ஜாபிர் (ரலி): ஆமாம். அல்லாஹ்வின் தூதரே. நான் புது மாப்பிள்ளை!

நபி (ஸல்) : அட. அப்படியா! யாரை மணமுடித்தாய்? கன்னிப் பெண்ணையா?

ஜாபிர் (ரலி): இல்லை. வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான், அல்லாஹ்வின் தூதரே!

நபி (ஸல்): நீ கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கூடிக் குலாவி மகிழ்ந்து விளையாடலாமே? (எனச் சிரித்துக் கொண்டே கேட்டார்கள்)

ஜாபிர் (ரலி): அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயதுடைய தங்கைகள் ஏழு பேர் இருக்கும் நிலையில் என் தந்தை உஹத் போரில் ஷஹீதாகிவிட்டார்கள். எனவே, என் தங்கைகளுக்கு ஒழுக்கமும் கல்வியும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களை நல்ல முறையில் தலைவாரிப் பராமரித்து வருவதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன்.

நபி (ஸல்): மிக்க நல்ல காரியம்தான் செய்திருக்கின்றாய். அது சரிதான். (சிரித்துக் கொண்டே) இப்போது ஊர் செல்லப் போகின்றாய்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வாயாக! நிதானத்துடன் நடந்து கொள்வாயாக! ஜாபிரே! ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் உன் வீட்டுப் பெண்களை அடைய நீ இஷா நேரம்வரை பொருத்திருப்பாயாக. உன் வரவைப் பற்றிக் கேள்விப்படும் உன் மனைவி தலை வாரிக் கொள்ளட்டும். மேலும், மெத்தைகளை எல்லாம் தூசு தட்டிப் போட்டுவைக்க அவகாசமளிப்பாயாக!

ஜாபிர் (ரலி): மெத்தைகள் எதுவும் எங்களிடம் இல்லையே, அல்லாஹ்வின் தூதரே!

நபி (ஸல்): விரைவில் வரும்; விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ். நீ வீடு திரும்பியதும் செய்ய வேண்டியதைச் செய்!

(ஜாபிரின் தந்தைக்காக இருபத்தைந்து முறை இறையருள் வேண்டிப் பெருமானார் (ஸல்) இறைஞ்சினார்கள்)

நபி (ஸல்): உன் ஒட்டகத்தை நீ இப்போது எப்படிக் காண்கிறாய் ஜாபிர்!

ஜாபிர் (ரலி): அதை நான் மிக நல்ல முறையில் இப்போது காண்கிறேன். தங்களின் பிரார்த்தனைப் பேற்றை  அது பெற்றுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!

நபி (ஸல்): அதை எனக்கு விற்று விடுகின்றாயா?

ஜாபிர் (ரலி): அதைவிட, என் ஒட்டகத்தை உங்களுக்குப் பரிசாக அளிப்பதில் நான் மகிழ்வுறுவேன்.

நபி (ஸல்): அதெல்லாமில்லை. ஒரு 'களஞ்சிப் பொன்' அதன் விலை. சரிதானா, ஜாபிர்?

ஜாபிர் (ரலி): சரிதான், யா ரசூலல்லாஹ். இந்த ஒட்டகம் உங்களுடையது இப்போது. ஆனால், மதீனாவரை இதன்மீது சவாரி செய்து சென்றடைய தாங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். நான் புதுமாப்பிள்ளை. சீக்கிரமாகச் செல்ல வேண்டும்.

நபி (ஸல்): ஓ, தாராளமாக!

(அடுத்த நாள் காலை எழுந்ததும் சுபுஹ் தொழுதுவிட்டு, முதல் வேலையாக தம் ஒட்டகத்தை அன்பு நபியிடம்  கொண்டுவந்தார் ஜாபிர் (ரலி). ஒட்டகத்தைக் கற்கள் பரப்பப்பட்ட பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு), '

ஜாபிர் (ரலி): அல்லாஹ்வின் தூதரே, இதோ  தங்களின் ஒட்டகம்.

(நபியவர்கள்  வெளியே வந்து ஒட்டகத்தை ஆராயும் வகையில் சுற்றிவரத் தொடங்கினார்கள்) 

நபி (ஸல்): ஆம். நிச்சயமாக, இந்த ஒட்டகம் நம்முடைய ஒட்டகம்தான். யா ஜாபிர், பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு வா!

யா பிலால்! இங்கே வாரும். ஒட்டகத்தின் விலை ஐந்து ஊக்கியாக்கள் தங்கத்துடன் சற்றுக் கூடுதலாக நிறுத்து 'இதை ஜாபிரிடம் கொடுத்து அனுப்புவீராக. (பிறகு சற்று நேரத்தில்), ஜாபிரே, ஒட்டகத்தின் விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?' 

ஜாபிர் (ரலி): ஆம். பெற்றுக் கொண்டேன், யா ரசூலல்லாஹ். போய் வருகிறேன்.

நபி(ஸல்): நில் ஜாபிர். (புன்னகையுடன்) 'விலையும் உனக்கே உரியது. இந்த ஒட்டகமும் உனக்கே உரியது. இரண்டையும் நீயே வைத்துக் கொள்!’

ஜாபிர் (ரலி): (திகைப்புடன்) வள்ளலே! வான் மதியே! இருள் நீக்க வந்த நிலவே! ஈகையின் வடிவான இறைத் தூதரே! தேவை அறிந்து உதவும் தங்களின் இதயத்தை விட, வேறு எந்த இதயமும் இத்தனை விசாலம் பெற்று இருக்கவே முடியாது! உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நான் சாட்சி பகர்கின்றேன்! (2) 

இவ்வாறு 'மகிழ்ச்சி' என்பதை மற்றவர்களுக்கு எதிர்பாராத ஓர் இன்ப அதிர்ச்சியாக 'பளிச்' சென்று அளிப்பது பண்பாளர் நபியின் பழக்கமாக இருந்தது.

இப்படித்தான் ஒருதடவை, ஒரு கிராமத்து மனிதர் மாநபியிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, நான் ஏறிச் செல்ல வாகனமாக ஓர் ஒட்டகம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டு நின்றார்.

அவரை ஏறிட்டு நோக்கிய ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் "சரி. உம்மை ஓர் ஒட்டகைக் குட்டியின் மீது ஏற்றி அனுப்புகின்றேன்" என்றார்கள். அவருக்கு ஒரு மாதிரி ஏமாற்றமாகப் போய்விட்டது. வெறும் ஒட்டகைக் குட்டியை வைத்துக் கொண்டு இருப்பதில் என்னதான் பயன் என்று வெறுத்துப் போய் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார்!

அவரை மீண்டும் அழைத்துவரப் பணித்தார்கள் மாறா அன்பின் பிறப்பிடமான மாண்பு நபி (ஸல்) அவர்கள்;

"ஒவ்வொரு ஒட்டகமும் அதனை ஈன்றெடுத்த தாய்க்குக் குட்டிதானே?"

என்று மந்தகாசப் புன்னகையுடன் அவரை அன்பாக நோக்கிக் கேட்கவே, அப்போதுதான் எழில் மிகுந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தன்னுடன் நகைச்சுவையுடன் உரையாடுகிறார்கள் என்று விளங்கிக் கொண்டு, அவரும் அண்ணலுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினார். வாஞ்சை நபியின் நகைப்பால், அங்கே வாடிய நெஞ்சம் மகிழ்ந்தது!(3) 

அகழிப் போர்: நபித்தோழர்களின் நிலைமை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அகழி  நிர்மாணப் பணியின் கடுமை. போதிய உணவு இல்லாமல் மிகவும் சிரமப் பட்டார்கள். குறிப்பாக, அண்ணலாரின் மெலிந்த, வலிமை குன்றிய தோற்றம் ஜாபிரின் மனத்தை வருத்தி எடுத்தது! வீட்டுக்குச் சென்றார். இருந்த ஒரே ஒரு செம்மறி ஆட்டை அறுத்துப் பொறிக்க ஏற்பாடு செய்தார். மீதம் இருந்த சிறிது வாற் கோதுமையைக் கொண்டு மனைவியிடம் ரொட்டி செய்யச் சொல்லிவிட்டு, இருள் கவியத் தொடங்கியபின், அண்ணலாரைக் காணச் சென்று, மெல்லிய குரலில், "உணவு தயார் செய்திருக்கின்றேன். என் வீட்டுக்குத் தாங்கள் வரவேண்டும், யா ரசூலுல்லாஹ்" என அழைத்து நின்றார்.

ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்களோ, ஜாபிரின் உள்ளங்கையை அவர்களின் உள்ளங்கையோடு பொருத்தி, ஜாபிரின் விரல்களை நபியின் விரல்களால் முடிச்சுப் போட்டதுபோல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, ஆங்கே நின்ற ஆயிரக் கணக்கானவர்களையும் பார்த்து 'தோழர்களே! ஜாபிருடைய வீட்டில் எல்லோருக்கும் உணவு தயாராக உள்ளது. ஜாபிர் உங்களை அழைக்கின்றார். அவர் வீடு நோக்கி எல்லோரும் விரையுங்கள்' என்றார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்களுக்கோ, ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்றது. இன்னொரு பக்கம் பயம் பற்றிக் கொண்டது! இக்கட்டான சூழலில் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொல்லிக் கொண்டே மனைவியை எச்சரிக்க வீட்டை நோக்கி விரைந்தார். 

மனைவி கேட்டார்: ‘அவர்கள் அனைவரையும் நீங்கள் அழைத்தீர்களா அல்லது அல்லாஹ்வின் தூதர் அழைத்தார்களா?’

‘அல்லாஹ்வின் தூதர்தாம்!’

'அப்படியானால் அவர்கள் வரட்டும். நீங்கள் கவலையை விடுங்கள்' என்றார்.

சாந்தம் கமழும் காந்த நிலவாய் சத்தியத் தூதர் (ஸல்) வீட்டிற்குள் நுழைந்தார்கள். நபியவர்களின் முன்னால் உணவு வைக்கப்பட்டது. இறுதித் தூதர் (ஸல்) அமர்ந்து இறைவனிடம் இறைஞ்சினார்கள்.

தோழர்களிடம், 'அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள். அன்று அகழில் பணியாற்றிய அத்தனைத் தோழர்களும் ஒருவர் விடாமல் வயிறார உணவுண்டு முடித்தார்கள். பின்னரும் சிறிது ரொட்டியும் மாமிசமும் மீதமிருந்தது. ஜாபிரின் வீட்டில் அல்லாஹ் கிருபையாளனின் அருள் மழை 'பரக்கத்' ஆகப் பொழிந்து கொண்டிருந்தது!

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அண்ணல் எங்கள் ஆருயிர் நபி  (ஸல்) அவர்கள், பின் வருமாறு இறைஞ்சுவார்கள்:

'இறைவா! என் குற்றங்களைவிட உன் மன்னிப்பு விசாலமானது. என் செயல்களைவிட உன் அருள் ஒன்றே நான் பெரிதும் எதிர்பார்ப்பது' (4) 

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தமது 94 ஆவது வயதில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் ஆட்சிக் காலத்தில் மதீனாவில் இறப்பெய்தினார். மதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழரும் ஜாபிர் (ரலி) அவர்கள் தாம். 

o o o 0 o o o
ஆதாரங்கள்:
(1) புஹாரி  2127 : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
(2) புஹாரி 2967: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
(3) அபூதாவுத் 4998: அனஸ் இப்னு மாலிக் (ரலி) 
(4) ஹாக்கிம் முஸ்தத்ரக்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்


0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு