நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது. 6

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், ஜூலை 20, 2015 | , ,

தமிழ்த் தட்டச்சு முறையில் ஒரு பெரும் புரட்சியை (Revolution) அல்லது புத்தாக்கத்தை (Renaissance) ஏற்படுத்தியது, என் தம்பி (மர்ஹூம்) உமர் தம்பியின் 'யூனிகோடு' முறை என்று சொல்வதில் மிகையில்லை! தான் உருவாக்கியதை - கண்டுபிடித்ததை, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் தமிழிலக்கிய மரபையொட்டி, தமிழுலகம் முழுமைக்கும் தனது அருங்கொடையாக அளித்தார் இச்செம்மல்! இந்த நன்றியுணர்வுதான்,

                "நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
                          நாற்புலமும் ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்

                  பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
                          புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே

                  அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
                          அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்

                  உற்பவமாய் இன்றமிழை இயங்கச் செய்த
                           உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?"


இன்று, இந்த 'யூனிகோடு' முறையைப் பின்பற்றாத தளமே இல்லை என்னுமளவுக்குப் பெரும்பாலான அனைத்துலகத் தமிழ் இணைய தளங்கள் இம்முறையைப் பின்பற்றிப் பயன்பெற்று வருகின்றன. அண்ணன் - தம்பி உறவு முறையில் இருந்தும், ஒரே ஊரில் பிறந்தும், ஒன்றாகவே வாழ்ந்தும், என் ஆக்கங்களை தட்டச்சாளர் உதவியின்றி நானே பதிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தேன். அப்போதுதான், என் தமிழ்ப் பேராசிரியர், 'இறையருட்கவிமணி' கா. அப்துல் கபூர் அவர்களின் திருமகனார் அன்புத் தம்பி ஜமால் அவர்கள் எனக்கு தம்பி உமர் தம்பியின் பங்களிப்பில் உருவான (தமிழா ஈ கலப்பை, AWC phonetic unicode writer) இந்த யூனிகோடு தமிழ் தட்டச்சு முறைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் வரை, இம்முறையைப் பின்பற்றித் தட்டச்சு செய்து பயன் பெற்றுள்ளேன். இந்தப் பட்டறிவின் பயனாக, நம் நண்பர்கள் இம்முறையில் செய்யும் பிழைகளைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இக்கட்டுரையை வரையத் தொடங்கினேன்.

'குர்ஆன்' என்று தட்டச்ச வேண்டுபவர்கள், kuraan அல்லது quran என்று பதிவார்கள். அப்போது அது 'குரான்' என்று பதியும்; அல்லது 'ஃஉரன்' என்று பதியும். இதனைச் சரியாகப் பதிய வேண்டுமாயின், kur என்பதற்குப் பிறகு ஓர் இடைவெளியை விட்டுப் பின்னர் aan எனப் பதிந்ததன் பின்னர், இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை back space செய்தால், அது 'குர்ஆன்' என்று அமைந்துவிடும். 'அப்பாடா! இதற்கு இவ்வளவு விளக்கம் தேவையா?' என்கிறீர்களா? சற்றுக் கூடுதலாகவே தோன்றினாலும், பழக்கத்தில் வரவேண்டும்; வந்துவிட்டால், பிறகு இலகுவாகிவிடும் என்பதே எனது எண்ணம்.

'அண்ணன்-தம்பி' என்று இடைவெளி இல்லாமல் பதியும்போது, 'அண்ணந்தம்பி' என்று பதிவாகும். இதனைப் போக்க இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி விட்டுப் பதிந்து, பின்னர் back space செய்தால் சரியாகிவிடும். இதில் இன்னொரு பிரச்னை! அதாவது, சில சிஸ்டங்களில் அந்த இடைக்கோடு, 'எ' என்றாகிவிடும். அதை மீண்டும் இடைக்கோடாகத் தட்டச்சு செய்தால் சரியாகிவிடும்.

'தங்கம்' என்று எழுத thangam என்று தட்டச்சுவார்கள். அப்படிச் செய்தால், 'தங்அம்' என்று வரும். இதனைச் சரி செய்ய, thangkam என்று தட்டச்சினால், 'தங்கம்' என்று சரியாக அமைந்துவிடும்.

நண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் தட்டச்சும்போது, அது தானாகவே சரியாக அமைந்துவிடும். அன்றி, அது 'ன்டு' என்று பதியாது. 'n' என்ற எழுத்துக்குப் பிறகு 'd' வந்தால், அது தானாகவே 'ண்' என்ற முச்சுழி எழுத்தாகிவிடும். இது, யூனிகோடின் இயல்பாய் அமைந்த தன்மையாகும்.

'ர'கர, 'ற'கர வேற்றுமைகளையும், 'ல'கர, 'ள'கர, 'ழ'கர வேறுபாடுகளையும் தெரியச் சற்றே மொழிப்புலமை வேண்டும். la என்று அடித்தால் 'ல'கரமாகும். Shift 'L' அடித்தால் 'ள்' ஆகும். za அடித்தால் 'ழ'வாகிவிடும்.

Shift 'S' அடித்தால் 'ஸ்' ஆகும். 'sh' அடித்தால் 'ஷ்' ஆகும்.

'கஃபன்' என்பதற்கு, kaqpan என்று அடிக்கவேண்டும். fa உச்சரிப்புக்கு இதுதான் முறை.

'ai' அடித்தால், 'ஐ' ஆகும். 'மை' என்பதற்கு, 'mai' என்று அடிக்கவேண்டும். 'y' என்ற எழுத்து, 'ய'கர ஒற்றாகும்.

ஷிஃப்ட் R அடித்தால் 'ற்' என்றும், ஷிஃப்ட் N அடித்தால் 'ண்' என்றும், ஷிஃப்ட் L அடித்தால் 'ள்' என்றும், ஷிஃப்ட் X அடித்தால் 'ஞ்' என்றும், ஷிஃப்ட் S அடித்தால் 'ஸ்' என்றும் விதிவிலக்குகளாகப் பதியும். இவையன்றி, பெரும்பாலான capital எழுத்துகளுக்கு அதனதன் நெடில்கள் அமையும்.

இப்படியாகப் பலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டிக்கொண்டே போகலாம். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பது போல, தொடர்ந்து இதில் கவனம் செலுத்தினால், விரைவாகவும் நிறைவாகவும் இதில் முன்னேற்றம் அடையலாம். இவையெல்லாம் எனது பட்டறிவில் பட்டவையே. அதில் இடம்பெறாத இன்னும் பல நுணுக்கங்களும் இருக்கலாம். அவற்றை இத்துறை விற்பன்னர்கள் விளக்குவார்கள். சிலர் எழுதும் எழுத்தோவியங்களும் பின்னூட்டங்களும் சில பிழைகளுடன் காணப்படுவதால், இக்கட்டுரைக்கு, 'சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது' என்று தலைப்பிட்டேன். நானே இந்த மென்பொருளில் கற்கவேண்டிய விளக்கங்கள் இன்னும் நிறைய இருக்கக் கூடும். அவற்றை வாசகர்கள் தங்களின் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அதிரை அஹ்மது
இது ஒரு மீள்பதிவு

தமிழ் தட்டச்சு செய்ய உமர்தம்பி அவர்களின்  AWC PHONETIC UNICODE WRITER,
 
தமிழ் தட்டச்சுக்கு tamil phonetic key board எழுத்துக்கள் உதவி

6 Responses So Far:

Adirai Ahmad சொன்னது…

அன்றைக்கு ஏதோ என் 'மனசு'க்குப் பட்டதை எழுதினேன். இக்கட்டுரையைப் படித்து, எத்தனை பேர் பயன் பெற்றிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.

பின்னர் நானே இதில் கற்றுக்கொண்டவை ஏராளம். இதனால் நற்பயன் அடைந்தோர், என் தம்பி உமருக்காக 'துஆ' செய்யுங்கள். அவரோடு இணை பிரியாதிருந்த காக்கா 'வாவன்னா சார்' (அப்துல் காதிர்) மர்ஹூம் அவர்களுக்காகவும் 'துஆ' செய்யுங்கள்.
- அதிரை அஹ்மத்

நட்புடன் ஜமால் சொன்னது…

பல முறை படித்தும் உணர்ந்த விடயம்

இவ்வளவு எளிதாக தட்டச்ச உதவிய அவருக்கான துவாக்கள் என்றென்றும் இருக்கும்.

Ebrahim Ansari சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ebrahim Ansari சொன்னது…

எத்தனையோ பேர்கள் பிறந்து இருக்கலாம்; மறைந்து இருக்கலாம். ஆனால் உமர் தம்பியின் உழைப்பும் சேவையும் என்றுமே மறக்க இயலாது.

அதேபோல

வாவன்னா சார் அவர்கள். நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது.

அல்லாஹ் அவர்களை இருவரையும் தனது நல்லடியார்களின் கூட்டத்தில் இணைத்துக் கொள்வானாக என்று இறைஞ்சுவோம்.

sabeer.abushahruk சொன்னது…

என் தம்பி உமருக்காக 'துஆ' செய்யுங்கள். அவரோடு இணை பிரியாதிருந்த காக்கா 'வாவன்னா சார்' (அப்துல் காதிர்) மர்ஹூம் அவர்களுக்காகவும் 'துஆ' செய்யுங்கள்.
- அதிரை அஹ்மத்

நிச்சயமாக எங்கள் துஆ என்றென்றும் உண்டு.

Adirai anbudhasan சொன்னது…

அதிரை இளைஞர்களுக்கு தமிழ் அமுதூட்டி, காதல் கொள்ளச்செய்து, கவிஞர் களாய், தமிழ் பேராசியர்களாய் உருவாக காரணமாயிருந்த " மதி நா " பற்றி எழுதுங்களேன்.
ஜமாலும் தொழில் நுட்பதுறையிலே தானே இருந்தார், அதிரையர்க்கு சிறப்பு கட்டுரைகள் தரலாமே

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+