நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே செல்லும் இந்தப் பாதை…? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜூலை 28, 2015 | , , , , ,

நீங்கள் மாற்று மதச் சகோதரர்களிடம் இஸ்லாத்தை எத்தி வைப்பவரா? 

‘தாஃவா” பணியை தலையாயப் பணியாகச் சிரமேற்றுச் செய்பவரா? 

ஊணுறக்கம் துறந்து தொலை தூரங்கள் பயணித்து இஸ்லாம் சென்றடையாத இடங்களுக்குச் சென்று, தங்கி மார்க்கம் போதிப்பவரா? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

ஒரு சம்பவத்தை விளக்கி விட்டு இந்தத் தலைப்பை ஞாயப்படுத்துவதாக இருக்கிறேன்.

நான் பணிபுரியும் நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளேயே இங்கு வேலை செய்வோரின் வசதிக்காகவும், நேரப்படி தொழுவதற்காகவும் ஒரு மஸ்ஜிதைக் கட்டித்தந்திருக்கிறார் எங்கள் (அர்பாப்) நிர்வாக இயக்குனர்.  சரியாகச் சொன்னால் இரும்பு வேலைகளில் துவங்கி உள் வேலைப்பாடுகள் வரை நானே முன்னின்று உருவாக்கியது இந்தப் மஸ்ஜித், அல்ஹம்துலில்லாஹ். இங்கு ஐந்து வேளைத் தொழுகை நடத்த பிரத்யேக இமாம் நியமிக்கப்பட்டு, வேலை நேரம் போக மற்ற எல்லா நேரங்களிலும்கூட தொழுகை நடக்கும். நிறுவனத்தின் கேம்ப்பில் வசிக்கும் இந்தியர்கள், பாக்கிஸ்தானியர், வங்க தேசத்தவர் மட்டுமல்லாது அரேபியர்களும் தொழும் இந்த மஸ்ஜித் 50க்கு 50 அடி பரிமாணத்தில் போர்ட்டபிளாக அமைக்கப்பட்டது.  ஷார்ஜாவின் GECO SIGNAL எனும் இடத்தில் உள்ளதால் தினமும் ஓரளவு வரிசைகள் நிரம்பவே தொழுகை நடக்கும்.

எனக்கு இங்கு லுஹர் மற்றும் அஸர் தொழவும், குளிர் காலங்களில் மஃரிபும் தொழவும் வாய்க்கும்.  நான் அஜ்மானில் வசிப்பதால் மற்ற வக்துகள் இங்கு வாய்ப்பதில்லை. ஒரு அஸர் நேர ஜமாத்தை, வேலை நிமித்தம் தவறவிட்ட நான் தனியாகத் தொழுதுவிட்டு வெளியேறும்போது புதிதாக ஒரு மனிதரைப் பார்த்தேன்.  35 வயது மதிக்கத்தக்கவராக தாடி வைத்துச் சற்றுத் தடியாக இருந்த அவரை அதற்குப் பிறகு பலமுறை மஸ்ஜிதில் காண நேரிட்டது. 

சட்டென்ற பார்வையில் துவங்கி சற்று நிதானித்தப் பார்வையாக வளர்ந்து, மெல்லிய புன்னகை என்று துவங்கிய அறிமுகம் ஒரு முறை அழகிய முகமனாக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கனிந்தது. “வ அலைக்குமுஸ்ஸலாம்” என்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரைப் பற்றிய விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டேன்.

அதற்குப் பிறகு, காணும்போதெல்லாம் சற்றுநேரம் நின்று பேசிவிட்டுத்தான் செல்வோம். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஊரைச்சேர்ந்தவர், நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர் எனும் விவரங்களைத்தவிர மேற்கொண்டு எந்த விவரம் சொன்னாலும் அது அவரைப்பற்றியப் புறம் பேசுவதற்குச் சற்றே நெருக்கத்தில் வந்துவிடும் ஆதலால் என்னைப் பாதித்த விவரங்களை மட்டும் கீழே விவரிக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வேலை முடிந்து கம்பெனியைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த வேளை எதிரே நடந்து வந்துகொண்டிருந்த அவரைக் கண்டதும் காரை நிறுத்தி அவரை நிற்கச் சொல்லி ஹார்ன் அடித்தேன்.  நின்ற அவரிடம், காரைவிட்டு வெளியே வந்து,

“அஸ்ஸலாமு அலைக்கும். நலமா?” என்றேன்

“அலைக்குமுஸ்ஸலாம். நல்லார்க்கேன்” என்றார்.  என் காரில் எப்போதும் வைத்திருக்கும் “தோழர்கள்” புத்தகத்தின் ஒரு பிரதியை அவரிடம் கொடுத்து,

“இதைத் தருவதற்காகத்தான் உங்களை நிற்கச் சொன்னேன். வாசியுங்கள். அருமையானப் புத்தகம்” என்றேன்.

“யார் எழுதியது?” என்று கேட்டார்

“நம் சகோதரர் நூருத்தீன் என்பவர் எழுதியது” என்றேன் புன்னகையோடு

“யாரூ….? என்று இழுத்தவரிடம்

“நூருத்தீன் எனது நண்பர். ஸியாட்டிலில் வசிக்கிறார். சத்யமார்க்கம் என்னும் தளத்தில் அவர் எழுதி தொடராக வெளிவந்து வரவேற்பு பெற்றது இந்நூல்.  புத்தகமாக வெளிவந்து பலரால் பாராட்டப்பட்டது.  அதிகம் அறியப்படாத சகாபாக்களைப்பற்றியத் தகவல்களை சுவாரஸ்யமாகச் சொல்லும் நூல்” என்றேன்

“இல்லை. நான் கேட்பது… எந்த அடிப்படையில் எழுதப்பட்டது என்று” முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டார்.

“குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்” என்றேன் இயல்பாக.

“இல்லை. எந்த கிதாப்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்று கேட்கிறேன்” என்றார். குரலில் சற்று சப்தம் கூடுவதைக் கவனித்தேன்.

“குர் ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு” என்றேன் அப்பாவியாக.

“நேராகவே கேட்கிறேன். சுன்னத் ஜமாத் அடிப்படையிலா தவ்ஹீதா?’ என்று வினவினார்

“அல்லாஹ் ரசூல் போதனைகளின் அடிப்படையில்” என்றேன், என் குரலில் சற்றே கேலித் தொணியோடு.

“சுன்னத் ஜமாத்தா?” என்றார்.

“ஆமாம். ஆனால், ஜமாலி, ரஷாதி என்கிற வலிமையான பின்புலம் இல்லை” என்றேன்.

“தவ்ஹீதா?” என்றார்

“ஆமாம். ஆனால், ட்டி என் ட்டி ஜே என்கிற இயக்கப் பின்னணி இல்லை”  என்றேன் சிரித்துக்கொண்டே

“மத்ஹப்களை நம்புபவரா நீங்கள்?” என்றார்.

“நான் வழிபடும்போது ஏதாவது அல்லது எல்லா மத்ஹப்களிலிருந்தும் ஒரு சில அசைவுகள், தோரணைகள் சேர்ந்து கலந்து கட்டி இருக்கும்.  தவ்ஹீத் சிந்தனை கொண்டவன்” என்றேன்.

குழம்பியவராக, “தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் நான்கு மத்ஹப்களை நம்புபவன். ஒன்றைப் பின்பற்றுபவன். மத்ஹப்களை மறுக்கும் எந்தப் புத்தகத்தையும் நான் படிக்கத் தயாராக இல்லை. இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.” என்று என்னிடமே திருப்பி நீட்டினார். 

“இந்தப் புத்தகம் மத்ஹப்களை மறுப்பதாக நான் சொல்லவில்லையே” என்றேன்.

“இல்லை வேண்டாம்” என்று திருப்பித் தந்துவிட்டார். 

எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது என்னவெனில், இதே புத்தகத்தை நான் மாற்று மத நண்பர்களுக்குக் கொடுத்தபோது இன்முகத்தோடு வாங்கிக்கொண்டு நன்றி சொன்னது நினைவுக்கு வந்தது.  சிரிப்பதா அழுவதா என்று அறியாமல் புத்தகத்தைத் திருப்பி வாங்கிக்கொண்ட நான் மேலும் பேச முனையும்போது அவர் நடையைக் கட்டிவிட்டார்.  எனக்கு சரியான எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது. யார்மேல் கோபம் எதன்மேல் ஆத்திரம் என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.  நன்றாகக் கற்றுத்தேர்ந்தவர்களே இப்படி இங்கிதமின்றி முகத்தில் அடித்தாற்போல பேசி சஹாபாக்களைப் பற்றிய ஒரு நூலை வாங்க மறுக்கும் மனோநிலையில் இருப்பது எனக்கு அச்சத்தைத் தந்தது.  

மார்க்கம் சொல்லும் மகா மனிதர்களை எண்ணி கலக்கம் ஏற்படுகிறது. குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொள்ளும் மனோபாவம் அற்றுப் போய்விட்டது.  இரண்டு தரப்பையும் தெரிந்துகொண்டால்தானே எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை நம் அறிவைக்கொண்டு தீர்மாணிக்க இயலும்.  ஒரு தரப்பைப் பற்றி அறிந்துகொள்ளவே மாட்டேன் என்பது என்ன ஒரு மனநிலை? 

இந்த உள்குத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக எனக்குப் பயமாக இருக்கிறது.  நாளுக்கு நாள் இந்த விரிசல் விரசமாகவும் வினையாகவும் வக்கிரமாகவும் பெரிதாகிக் கொண்டே போவதைக் கவலையோடு கவனிக்கிறேன்.  “என்னப்பா இப்டி செய்றீங்களே?” என்று கேட்டால் லாப்டாப், மைக், மேடை, ப்ரொஜெக்டர், நிபந்தனைகள் என்று நாட்கணக்கில் உட்கார்ந்து விவாதம் செய்யக் கூப்பிட்டு விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. இனிமையான இறைவனையும் எளிமையான ரசூலை(ஸல்)யும் பின்பற்றும் எனக்கு எத்தனை பந்தாவான, ஆர்ப்பாட்டமான, அலங்காரமான, அடாவடியான தாயிகள்!!!  தற்கால சினிமாவின் முன்னனி நடிகர்களின் மீது மோகம் கொண்ட ரசிகர்களைவிட மார்க்கத் `தலை`களிடம் மோகம் கொண்டு கண்மூடித்தனமாக பின்பற்றும் சகோதரர்களை எண்ணிப் பார்க்கிறேன். தல எல்லாம் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தெளிவாகத்தான் இருக்கிறது. தொண்டர்கள்தான் நவீன ஜாஹிலாவில் வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எனவே, தாஃவா என்று மாற்று மத மக்களை அனுகுவோர், சற்றே நிதானித்து உங்கள் அடுத்த வீட்டு, பக்கத்துத் தெரு, மற்ற ஊர்களில் உள்ள நம் சகோதர/சகோதரிகளை அனுகுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.  

காரில் உட்கார்ந்து எஃப் எம்மை ஆன் செய்து செய்தி கேட்கலாம் என்று முயல…உடைந்த குரலில் யாரோ பாடிக்கொண்டிருந்தார்கள்: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

10 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

/இனிமையான இறைவனையும் எளிமையான ரசூலை(ஸல்)யும் பின்பற்றும் எனக்கு எத்தனை பந்தாவான, ஆர்ப்பாட்டமான, அலங்காரமான, அடாவடியான தாயிகள்!!!/

உண்மை

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…


/எனவே, தாஃவா என்று மாற்று மத மக்களை அனுகுவோர், சற்றே நிதானித்து உங்கள் அடுத்த வீட்டு, பக்கத்துத் தெரு, மற்ற ஊர்களில் உள்ள நம் சகோதர/சகோதரிகளை அனுகுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. /

அதுதான் தப்லீக் ஜமாத்

Adirai anbudhasan சொன்னது…

ஒரு சிறுவன் வாப்பாவிடம் பழம் வாங்கி கேட்டிருக்கிறான், என்ன பழம் என்று வாப்பா கேட்க, மகன் " வாய பயம் " என்று சொல்ல, திரும்ப திரும்ப அவர் கேட்க, அவனும் திரும்ப திரும்ப அதையே சொல்லி இருக்கிறான்
.
நம்ம சொன்னா சரியா வராது என்று சொல்லி, பள்ளிக்கூடத்திற்கு கூட்டிகிட்டு போய் வாத்தியாரிடம் விவரம் சொல்லி, சொல்லிக்கொடுக்க சொல்ல, அவர் இப்ப பாருங்க சொல்லுவான் என்று சொல்லி,
தம்பி நான் சொலுற மாதிரி சொல்லு என்ன என்று சொல்லி, " வாய பயம் " என்றாராம். வாப்பா தலையிலே கையை வச்சு கிட்டு அடிப்படையே கோளாறு என்று சொல்லிக்கொண்டாராம். இந்த கதை உங்கள் நண்பருக்கு தெரியும் போலிருக்கிறது, அதனால் தான்,

வாத்தியார் யாரென்று தெரிந்து கொள்ள கேட்டிருப்பார் போலிருக்கிறது!!!!

சவூதிகாரன் தன அதிகாரம் பறிபோய் விடுமோ என்று, நாங்களும் முஸ்லிம்கள் தான் என்று சொல்லி கொள்கிற எமன் மக்களை, குண்டு போட்டு சாக அடிக்கிறார்களே, அடிவாங்குகிறவர்கள் அவர்களுடைய கொள்கை புத்தகங்களை உங்களுக்கு தந்தால் நீங்கள் ஒன்றும் சொல்லாமல் வாங்கி கொள்வீர்களா?.

எல்லாவற்றுக்கும் தகுதி என்று ஒன்று இருக்கிறது, தாயீக்கலுக்கு தகுதியுடன் தக்வாவும் வேண்டும்.

sabeer.abushahruk சொன்னது…

//அடிவாங்குகிறவர்கள் அவர்களுடைய கொள்கை புத்தகங்களை உங்களுக்கு தந்தால் நீங்கள் ஒன்றும் சொல்லாமல் வாங்கி கொள்வீர்களா?. //

கண்டிப்பாக வாங்கிக் கொள்வேன். வாசிக்க முயல்வேன். என் அறிவுக்கு உட்பட்ட விஷயங்களை ஆராய்ந்து அவற்றில் நல்லவற்றை ஏற்றுக் கொண்டு அல்லாதவற்றைக் குப்பையில் கடாசி விடுவேன்.

வாங்கவே மாட்டேன் என்பது மடைமை.

என்னிடம் பைபிள் கொடுக்கப்பட்டாலோ பகவத் கீதை கொடுக்கப்பட்டாலோகூட கண்டிப்பாக வாங்கிக்கொள்வேன். வாசித்தால் மட்டுமே அதில் உள்ளத் தவறுகளைச் சுட்டிக்காட்டி தாவா செய்ய முடியும்.

தாவா செய்ய இறையச்சம் மட்டுமே போதுமானது. இறையச்சம் என்பது இஸ்லாத்தின் எல்லா தன்மைகளையும் உள்ளடக்கியது.

விவாதம் செய்யவும் இயக்கம் துவங்கவும் மைனாரிட்டி சமுதாயமாக புறக்கணிக்கப்படும் இந்திய இஸ்லாமியரை மேலும் பிரித்துப் போடவும் மட்டுமே நீங்கள் குறிப்பிடும் பலான பலான தகுதிகள் தேவை.

குறிப்பிட்ட நூலின் ஆசிரியர் என்னிடம் கேட்டது: " தோழர்கள் ஷாஃபி வெர்ஷன் ஹனஃபி வெர்ஷன் என்று பகுக்க வேண்டுமோ?"

அதிரை.மெய்சா சொன்னது…

யாராக இருந்தாலும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(மதியாதோர் வாயலை மிதியார்)
மரியாதை நிமித்தம் நீ கொடுத்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு படித்தபின் அதில் தவறு ஏதேனும் இருந்தால் ஆதாரத்துடன் சுற்றிக்காட்டலாம்.

இப்படி துவேச மனப்பின்மை உடையவர்கள் தவா பணி செய்யப்போனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மாற்றுமத சகோதரர்களுக்கு சரியானவற்றை தேர்ந்தெடுத்து அதன்படி நடப்பதற்கு குழப்பமாகிப்போகும்.

மதஹப் விஷயத்தில் மாற்றுக்கருத்துக்கள் பல இருக்கிறது.

மதஹபு என்றபெயரில் மனிதர்களை பி.ரிப்பதற்கு யாரும் இடமளிக்கவேண்டாம்.

Meerashah Rafia சொன்னது…

கடைசிவரி சிரிக்கவைத்தாலும், இந்த கட்டுரையின் உண்மை நிலை அவ்வப்போது மனதை கசக்கி பிழிகின்றது, இன்னும் பத்து வருடங்களில் தமிழக இஸ்லாமிய சூழ்நிலையை எண்ணி..

தற்போதைய தலைமுறையான நாம் "தாராள உலகமயமாக்க சூழ்நிலையின்" தாக்கத்தின் லாபத்தையும் நஷ்டத்தையும் அனுபவித்துவருகின்றோம்..
இனி வரும் தமிழக தலைமுறைக்கு "(கு)தர்க்க மையமான மார்க்க சூழ்நிலைகளால்" பல விளைவுகளை சந்திக்குமோ என்ற அச்சம் அவ்வப்போது ஆசையின்றி அசைப்போடுகின்றது.

Meerashah Rafia சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Yasir சொன்னது…

கண்டிப்பாக கவலையளிக்கும் விசயம் காக்கா...முகநூல் பக்கங்களில் இவர்கள் மற்றவர்களை விமர்சிக்கும் முறைகள் ,வார்த்தைகள் அருவருப்பாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததகவும் உள்ளது....நாமும் `அவனுங்க` மொழியில் கண்டிக்க இறங்கலாம் என்றால் வளர்ந்தவிதமும்,அறிந்து அதன் படி நடக்கும் மார்க்கமும்,கற்ற கல்வியும் தடுக்கின்றது.....`எதிர்கால` தலைமுறையை எப்படி வரப்போகின்றதோ என்ற ஒரு அச்சம் மேலோங்கி இருப்பதை உணர முடிகின்றது....

நான் வெஸ்டன் கக்கூஸ் போய்விட்டு வந்தேன் என்று சொன்னால் கூட அதற்க்கு எதாதவது ஆதாரம் உண்டா என்று மண்டையை காய வைக்கும் கேள்விகளை கேட்டும் அளவிற்க்கு `தலைகள்` இளைஞர்களை ` கழுவி`வைத்து இருக்கின்றார்கள்...அல்லாஹ் காப்பற்ற வேண்டும்

Adirai anbudhasan சொன்னது…

" கண்டிப்பாக வாங்கிக் கொள்வேன். வாசிக்க முயல்வேன். என் அறிவுக்கு உட்பட்ட விஷயங்களை ஆராய்ந்து அவற்றில் நல்லவற்றை ஏற்றுக் கொண்டு அல்லாதவற்றைக் குப்பையில் கடாசி விடுவேன். "

இஸ்லாம் முழுமை செய்யப்பட்ட மார்க்கம், உங்களுடைய கருத்துக்களையும் என்னுடைய கருத்துக்களையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாமே தவிர, கருத்துசொல்ல யாருக்கும் தகுதியில்லை, நமக்கு புரிய வில்லை என்று விட்டு விட வேண்டும்' " என்னிடம் பைபிள் கொடுக்கப்பட்டாலோ பகவத் கீதை கொடுக்கப்பட்டாலோகூட கண்டிப்பாக வாங்கிக்கொள்வேன். வாசித்தால் மட்டுமே அதில் உள்ளத் தவறுகளைச் சுட்டிக்காட்டி தாவா செய்ய முடியும்.''

உங்கள் கையில் கொடுக்கப்பட்டதில் உள்ளது தான், அந்தந்த கிதாபுகளில் உள்ளது என்று அடித்து சொல்லி விவாதம் செய்ய உங்களுக்கு அவ்வம் மொழிகளில் புலமை இருக்கிறதா ?
சரி வாதம் செய்து தான் தாவா செய்ய வேண்டுமா ? அதுதான் நபி வழியா?

உம்மையெல்லாம் விட பலமடங்கு புலமை பெற்றோர், வாய் மூடி இருக்கின்றனரே ?, இதை நிறை குடம் ..........,...............டும் என்று சொல்லவா.
அவர்களுக்கு இறை நெருக்கம் அடையவேண்டும் என்ற அவா இல்லையா ?
நமக்கெல்லாம் மார்க்கப்பணி பார்ட் டயம்,

சகோதரரே, நம் இருவருக்கு அல்லா நேர்வழி கட்டட்டும், இன்ஷா அல்லா

sabeer.abushahruk சொன்னது…

//உம்மையெல்லாம் விட பலமடங்கு புலமை பெற்றோர், வாய் மூடி இருக்கின்றனரே ?, //

ஐயா,

இந்தக் கருத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவா? எந்த வாயும் மூடியில்லை என்பதை எல்லா ஊடகங்களிலும் காணலாம்/கேட்கலாம். ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொண்டல்லவா இருக்கின்றது!

தவிர, யாருக்கு எதில் எவ்வளவு புலமை இருக்கிறது என்னும் துல்லியமான புள்ளி விவரம் தங்களிடம் இருப்பதுபோல் தொணிக்கிறது தங்கள் கருத்து.

//இதை நிறை குடம் ..........,...............டும் என்று சொல்லவா.//

புள்ளி புள்ளியா வச்சி டும் என்று போட்டு என்னவோ சொல்கிறீர்களே என்ன அது? அசிங்கமான வார்த்தையா?

அல்லது 'குறைகுடம் கூத்தாடும்" என்று என்னை விமர்சிக்கிறீர்களா?

//அவர்களுக்கு இறை நெருக்கம் அடையவேண்டும் என்ற அவா இல்லையா ?//

எவர்களுக்கு என்று நினைத்து கேட்கிறீர்களோ அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என்னைக் கேட்டால்?

//நமக்கெல்லாம் மார்க்கப்பணி பார்ட் டயம், //

கூடாது என்று ஏதும் ஃபத்வா இருக்கிறதா?

முழுநேரமும் மார்க்கப்பணி மட்டுமே செய்யச் சொல்லி ஏதாவது சூரா அல்லது அறிவிப்பு இருக்கிறதா?

//
சகோதரரே, நம் இருவருக்கு அல்லா நேர்வழி கட்டட்டும், இன்ஷா அல்லா //

சகோதரரே, எனக்கு அல்லாஹ் "இஸ்லாம்" என்னும் நேர்வழியைக்காட்டி பல வருடங்களாகிவிட்டன. தனியாக வேண்டுமானால் வேண்டிக்கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+