விழலுக்கு வீணாகும் சிந்தனைகள்!


சகதியில் சிக்கிக்கொண்ட
சக்கரத்தைப் போல
சில சமயம்
சிக்கித் தவிக்கிறது
சிந்தை

எத்தனை முயன்றாலும்
எதையுமே
எழுத முடிவதில்லை

சொல்லித் தீரவேண்டிய
சிந்தனைகள்
சிதறிக்கிடக்கின்றன;
எழுதிக் கோப்பது
எளிதாக இருப்பதில்லை

ஏரிகளாகவும் குளங்களாகவும்
சேமித்து வைக்கத்தக்கச்
சிந்தனைகள்
முகநூல்களிலும்
துரிதத்தொடர்புச் செய்திகளிலும்
விழலுக்கு இரைக்கப்படுகின்றன

பொதுக்கூட்டங்களுக்கு வருபவர்களின்
பிரியாணி பொட்டலம் மீதான
கீழ்த்தர இச்சையைப்போல
சின்னஞ்சிறு வட்டங்களில்
சிக்கி
திருப்தியுற்றுக் கொள்கிறது
சிந்தை

ஒப்பணையால்
ஒப்பேற்றியது போக
தொழில்நுட்பத்
தூரிகை தயவால்
தெளிவாகவும் அழகாகவும்
சுயம் காட்டி
விருப்பங்களில் வீழ்ந்து
சிக்கித் தவிக்கிறது
சிந்தை

இனத்தைப் போலவே
சமூகத்தைப் போலவே
இயக்கங்களைப் போலவே
கழகங்களைப் போலவே
சிறு சிறு குழுக்களாய்
சிதறிக்கிடக்கின்றன சிந்தனைகள்

உலகையே மாற்றிய
வரலாற்றுச் சம்பவங்கள்
சிந்தனைகளை ஒருங்கிணைத்ததால்தான்
சாத்தியமாயிற்று

வாரந்தோறும் வெளியான
சஞ்சிகைத் தொடர்களின்
பக்கங்களைச் சேமித்து
புத்தகமாய்த் தொகுத்த
காலம் கடந்தோடிவிட

புத்தகப் பக்கங்களைப்
பிய்த்துப்பிய்த்து
உதிரியாகப் பரிமாறப்
பழகிக்கொண்டிருக்கிறது ஊடகம்

ஒற்றுமைக் கயிறு
உதறிவிடப்பட்டு
வேற்றுமையிலும் விரிசல்களிலும்
விருப்பம் காட்டுகிறது
தற்காலத் தலைமுறை

ஒற்றையைவிட குடும்பமும்
குடும்பத்தைவிட குழுமமும்
குழுமங்களைவிட கூட்டமும்
வலிமையானவை

சுவரொட்டிகளில்
சொக்கிப் போய்
சாரம் போகும் முன்

சிதறி
சில்லறைகளாக
வலிமை இழக்கும் முன்

சிந்தனைகளைச்
செறிவாக்கிச்
சேமிப்போம்

திண்ணைகளைவிட்டும்
படித்துறைகளைவிட்டும்
மரத்தடிகளைவிட்டும்
டீக்கடைகளைவிட்டும்
சலூன்களைவிட்டும்
முகநூல் பக்கங்களைவிட்டும்
குறுஞ்செய்திகளைவிட்டும்

வாருங்கள்
ஒன்றிணைந்து
வாய்த்த தளங்களை
வலிமையான எண்ணங்களால்
வளமாக்குவோம்

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

12 கருத்துகள்

அதிரை.மெய்சா சொன்னது…

உன் சிந்தையில் தோன்றிய
சிந்தனைகள் யாவும்
சிந்திக்க வேண்டிய
சிறந்ததோர் நினைவூட்டல்

ஆட்டு மந்தைகளாய்
இன்றைய மனிதர்கள்
இணைய சமூக தளத்தோடு
எந்நேரமும் இணைந்து
அறிவினை அர்ப்ப ஆயுளாய்
ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்

எல்லாவற்றையும் சிந்திக்க
இக்கவிதை ஒரு எடுத்துக்காட்டு

நீ சிந்தித்து
எங்களையும் சிந்திக்க
வைத்துவிட்டாய்

Yasir சொன்னது…

உண்மை காக்கா --விழலுக்கு இரைத்த நீராகத்தான் வீணாகின்றது சிந்தனைகள்...இந்த முகநூலிலும்,டிவிட்டரிலும் மற்ற மைக்ரோ பிளாக்கிங் தளங்களிலும்...

//சிந்தனைகளைச்
செறிவாக்கிச்
சேமிப்போம் /// ஆமாம்

அதிரைக்காரன் சொன்னது…

என்றைக்கோ கிடைக்கும் விருதைவிட அன்றே கிடைக்கும் கைதட்டலில் திருப்தி பெறும் மனநிலைதான் ஃபேஸ்புக் Likes என்றாலும், முகமறிந்தவர்களுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பும் இல்லாமலில்லை.

ஃபேஸ்புக்கோ, ப்ளாக்கரோ சுடச்சுட தகவல் உள்ளவரை சுற்றிவரும் கூட்டம்
- அறிஞர் அதிரைவாலா :)

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் மெய்சா,

உன் கருத்திற்கு நன்றி.

//ஆட்டு மந்தைகளாய்
இன்றைய மனிதர்கள்
இணைய சமூக தளத்தோடு
எந்நேரமும் இணைந்து
அறிவினை அர்ப்ப ஆயுளாய்
ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்//


சரியாகச் சொல்வதானால், நீ மேலே குறிப்பிட்டிருக்கும் கூட்டத்தின் நேர விரயத்தைப் பற்றியல்ல என் சாடல். உன்னைப்போன்ற, என்னைப்போன்ற இன்னும் நம் நட்பு வட்டத்துக்குள் இருக்கும் பலரைப்போன்ற ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள் பலரின் பிரமிக்கத்தக்கச் சிந்தனைகளும் ஆலோசனைகளும் சமூக அக்கறையான கருத்துகளும் அருமையான அரசியல் விமரிசநங்களும் செறிவாகத் தொகுத்து நிரந்தரமாகச் சேமித்துப் பகிரப்படாமல் வரிவரியாகவும் வார்த்தைச் சிதறல்களாகவும் காணாமல் போய்விடுகின்றன.

நம்மைப்போன்றவர்களைத்தான் சாடியிருக்கிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

தம்பி யாசிர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் ஒத்தக் கருத்திற்கு நன்றி.

பெரும்பாலோரின் வெற்றிக்கு வித்தாக, வழிகாட்டியாக அமைந்தது சிலர் தமது வெற்றிக்கான காரணங்களையும் அனுபவங்களையும் முறையாகவும் செறிவாகவும் கோர்வையாகவும் எத்தி வைத்ததுதான் என்பது என் அபிப்ராயம்.

அதைப்போல நம்மைப்போன்ற வெற்றிப்பாதையில் செல்ல முயல்பவர்கள் நம்தம் ஆலோசனைகளை முறையாகப் பதிந்து வைக்க வேண்டும் என்பதே என் பதிவின் நோக்கம்.

தண்ணீரில் எழுதியதுபோல் சடுதியில் மறைந்துவிடும் வகையில் சொல்லிச்செல்வது உபயோகப்படாது என்பதுவும் என் கருத்து.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தம்பி ஜமாலுதீன்.

ஒப்பம்.

நீங்கள் அழகாகவும் வீரமாகவும் (ஹிஹி) இருந்த காலங்களில் பதிந்து வைத்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது, சிறு பிராயத்து, பள்ளி மற்றும் கல்லூரி காலத்து சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை உண்மையிலேயே நானும் ரசிக்கிறேன்.

அதே சமயம் நீங்களும் உங்கள் நட்பு வட்டாரமும் கதைத்துக் கொள்ளும் பல ஆக்கபூர்வமான அறிவார்ந்த அனுபவரீதியிலான விஷயங்கள் சொட்டுச் சொட்டாக விழலுக்கு விரயமாவதைக் கவலையுடன் கவனித்ததால்தான் இப்படி எழுதத் தோன்றியது.

நம் நிறத்தவர்கூட புகைப்படம் பதிந்து லைக்ஸ் வாங்கிவிடுவது இக்காலத்தில் சாத்தியமே.

கைதட்டுகள் இருக்கட்டும். மேடைகல் வேண்டாமா?

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuSharukh,

Nice poem, a lot of concerns on the contemporary wastage of thoughts power dispersion everywhere.

அகல உழுவதைவிட ஆழ உழு
நுணிப்புல் மேய்வது போல்
தகவல்களை மேய்ந்து செல்லும்
காலமாய் மாறிப் போனது.

ஆழச் சிந்தனையோட்ட கருத்துச் செறிவுள்ள
ஆக்கங்களைத் தேடிப்படிக்கும் பழக்கம் அற்றுப்போனது
தகவல் தொழில்நுட்ப முன்னெற்ற வேகத்திற்கு
ஈடுகொடுக்க முயலும் தனிமனித மூளை.

ஒடிக்கொண்டிருக்கும் மனிதா உன் ஆன்மாவை
பின்னே விட்டு விட்டு உடலளவில் இத்தனை வேகம் எதற்கு.?
வாழ்க்கையில் எளிமையான எதிர்காலம் என்பதைவிட
தேடலில்லா தகவல் திணிப்பால் திணறும் காலம்

In my objservation
In short, hot & short is desirable as expected
Whoever able to provide the hot sauce are the hot.
It is the command of the time now.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk சொன்னது…

Dear brother B. Ahamed Ameen

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

//ஒடிக்கொண்டிருக்கும் மனிதா உன் ஆன்மாவை
பின்னே விட்டு விட்டு உடலளவில் இத்தனை வேகம் எதற்கு.?//

super!

யதார்த்தத்தை உச்சந்தலையில் ஓங்கி அடித்ததுபோல் சொல்லியிருக்கிறீர்கள். ஆன்மா இல்லாத உடல், ஓடி அடையும் இலக்கு நிச்சயமாக உணர்வுபூர்வமாக இருக்காது.

முகநூல் பீன்ற தளங்களைப் பகிர்வதற்கு உபயோகப்படுத்திக்கொண்டு blog மற்றும் websiteகளைப் பதிவதற்குப் பயன்படுத்துதல் புத்திசாலித்தனம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

//

OP:

I also want to say: "sauce or case, can't maintain hot all the time; and once it turns cold, then, no one would want it anymore."

isn't it better to keep a cool head all the time? :-)

According to science, heat disperses but cold contracts. It can be applied not only on solids, liquid and gases but human and his behavior also. //

Thank you

அதிரைக்காரன் சொன்னது…

வ அலைக்கும் ஸலாம் காக்கா.

உங்கள் கருத்து சரிதான். தற்போது நான் தேர்ந்தெடுத்துள்ள களம், ஃபேஸ்புக். முன்பு ப்ளாக்கர். களம் எதுவாக இருந்தாலும் கருத்து தெளிவாக, சென்றடைய வேண்டியவர்களை அடைவதே நோக்கம். மேலும், பெரும்பாலான நேரத்தை விழுங்கும் (நான் எழுதாவிட்டாலும் கருத்திட வேண்டி) புழங்கும் ஃபேஸ்புக், வாட்ஸப் தளங்கள் எளிதில் அணுகும்படி கிடைப்பதும், வசதியும் இன்னோரு காரணம்.

தரமான ஆக்கங்களை நூலாக்கும் அதிரை நிருபர் பதிப்பகத்தின் யுத்தி, எந்தக்களத்தையும் வெல்லும். இன்ஷா அல்லாஹ். (அதிரை எக்ஸ்பிரஸும் மாத சஞ்சிகையாக வெளிவருசதாக அறிந்தேன். இன்னும் பார்க்கவில்லை)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//தரமான ஆக்கங்களை நூலாக்கும் அதிரை நிருபர் பதிப்பகத்தின் யுத்தி, எந்தக்களத்தையும் வெல்லும். இன்ஷா அல்லாஹ். (அதிரை எக்ஸ்பிரஸும் மாத சஞ்சிகையாக வெளிவருசதாக அறிந்தேன். இன்னும் பார்க்கவில்லை)///

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் - அதிரைக்காரன் !

இதைத்தான் எதிர்பார்க்கப்படுகிறது... இன்னும் கைவசம்

1. இந்திய முஸ்லீம்களின் மறைக்கப்பட்ட வரலாறு [தயாராகிக் கொண்டிருக்கிறது]
2. இஸ்லாமியப் பொருளாதாரம் [தயாராகிக் கொண்டிருக்கிறது]
3. படிக்கட்டுகள்
4. கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை [தயாராகிக் கொண்டிருக்கிறது]
5. கடன் வாங்கலாம் வாங்க
6. ஏது கவிதை [சபீர் காக்காவின் கவிதைகளின் - தொகுப்பு இன்ஷா அல்லாஹ்]

Ebrahim Ansari சொன்னது…

கடும் உழைப்பிலும் காலச்செலவிலும் உருவாக்கப்பட்ட எழுத்துப்பதிவுகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆவணமாக அனைவரின கரங்களில்

Ebrahim Ansari சொன்னது…

கடும் உழைப்பிலும் காலச்செலவிலும் உருவாக்கப்பட்ட எழுத்துப்பதிவுகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆவணமாக அனைவரின கரங்களில்