Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2 23

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2016 | , ,

தொடர் 17.

திப்பு சுல்தானின் தீரமும் வீரமும் தியாகமும் ஓரிரு அத்தியாயங்களில் அடங்கிவிடாது. ஆகவே இன்னும் தொடர்ந்து பார்க்கலாம். 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷார் சிலருக்கு அடையாள பட்டபெயர்களை வழங்கினார்கள். “அரை நிர்வாண பக்கிரி” என்பது தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு வழங்கப் பட்ட பெயர். அந்தப் பெயர் மகாத்மா காந்தியின் தன்னலமற்ற - எளிமையான இயல்பைத்தான் உலகுக்குப் பறை சாற்றியது. 

அதே போல் ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ என்பது திப்பு சுல்தானுக்கு பிரிட்டிஷ் பத்திரிகைகள் வழங்கிய பெயராகும். இந்தப் பெயர் திப்புவின் வீரத்தையும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அவர் எவ்வளவு பெரிய சவாலாக இருந்தார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் இதயங்களில் அவ்வப்போது அச்சத்தை விதைத்த வீரராகவே தீரர் திப்பு திகழ்ந்தார். அன்றைய ஆங்கிலேயர்களுக்கு திப்புவின் பெயர் ஒரு மாக்காண்டி, சாக்கு மஸ்தான் போல பயமுறுத்தலுக்காகக் காட்டப்பட்டது; கருதப்பட்டது. அதனால்தான் திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்த செய்தியை அறிந்து மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் என்பவன் உடனே உதிர்த்த வார்த்தைகள் ‘அப்பாடா! இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்பதாகும். 

“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில்காந்தியடிகள் புகழ்ந்து எழுதினார். 

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார். (‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

திப்பு, 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார். 

கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்கள் அனைத்திலும் திப்புவே வெற்றி பெற்றார்.

கி.பி. 1776ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதி கோட்டையைத் திப்புசுல்தான் கைப்பற்றினார்.

திப்பு தன்னகத்தே விடுதலை தாகம் மிக்க மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். அவரது வீரர்கள் வெறுமனே கூலிக்கு மாரடிப்பவர்கள் அல்ல. இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். பிரிட்டிஷாரின் அத்துமீறல்களை அடக்குவதற்கு வாளும் வேலும் மட்டும் பயன்படாது என்று உணர்ந்து, முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டுமென்று மூளையில் பதித்துக் கொண்டவர் திப்பு. அதனால் , தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதைத் திப்பு சுல்தான் புரிந்துகொண்டார். ஆதலால் கடற்பயிற்சி பள்ளிகளை உருவாக்கி, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு நிகராக நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தானே.

திப்பு சுல்தானிடம் மொத்தம் 3.20 லட்சம் வீரர்கள் இருந்தனர். மூன்று லட்சம் துப்பாக்கிகளும் 929 பீரங்கிகளும் 2.24 லட்சம் வாள்களும் இருந்தன. தன் தந்தை பயன்படுத்திய ஏவுகணைகளைத் திப்புசுல்தான் பிரெஞ்சு படைவீரர்களின் துணையுடன் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுவகையில் பயன்படுத்தினார்.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் , கோலாரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருந்த பாடி என்கிற இடத்தில் போர்க்களத்தில் வைத்து ஒரு சிறு கூடாரத்தில் மவுலவிகள் மற்றும் இந்துப் பண்டிதர்கள் முன்னிலையில், மைசூரின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார் . 

இன்றைய அரசியலில், முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்த உடன் போடும் முதல் கையெழுத்து என்று எப்படி ஒரு பழக்கம் ஆரம்பித்து இருக்கிறதோ அப்படி மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்?” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் கிழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது. 

மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. ஆனால் வெள்ளைத்தோல் வெள்ளைத்தோலுக்கு விட்டுக் கொடுத்தது. பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி, பிரிட்டனுடன் ஒரே கோப்பையில் ஒயின் அருந்தி சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் அநியாயமாக எதிர்பாராமல் இணைந்துக் கொண்டனர். ஆனாலும் இதனால் சற்றும் பின்வாங்கிவிடாத திப்பு, எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் அடக்கி வாசித்து ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக ரூபாய் 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது.( சில நூல்களில் வராகன் என்று எழுதுகிறார்கள்) இழப்பீடு தொகையை செலுத்துவரை பிரிட்டிஷார் அடமானமாகக் கேட்டது என்ன தெரியுமா? 

திப்புவின் இருமகன்கள் எட்டுவயது நிரம்பிய அப்துல் காலிக் ஐந்து வயது நிரம்பிய முய்சுதீன் ஆகிய இரண்டு வீரத்திருமகனின் இன்னுயிர்ப் புதல்வர்களே ஆங்கிலேயர்கள் கேட்ட அடமானப் பொருள்கள். அதன்படி அடமானமாக வைக்கப் பட்டனர். இது எவ்வளவு பெரிய சோதனை என்பதை என்னும் போது கலங்காத - கண்ணீர் வடிக்காத நெஞ்சமே இருக்க இயலாது. ஒப்பந்தப் படி முழுத்தொகையும் கொடுத்த பின்னரும் காரன் வாலிஸ் பிளாக் மயில் செய்து வளம் மிக்க கூர்க் போன்ற பகுதிகளை அபகரித்தான். அத்துடன் அடமானத் தொகையை செலுத்தி இரண்டு வருடத்துக்குப் பிறகே தன்னுடைய மகன்கள் ஆங்கிலேயரால் திப்புவிடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டனர். தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.

1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் துருக்கியின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இப்படி திப்புவின் துரோகம் செய்யும் அமைச்சர்களோடு தொகுதி உடன்பாட்டை முடித்த வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிட்டான். “இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்” .

ஆங்கிலேயருக்கு பயந்து அனைவரும் கைவிட்ட நிலையில், இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான். 

இப்படி இத்தனை நாள் முற்றுகையிட்டும் ஆங்கிலப் படை திப்புவின் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும். அந்தக் கோட்டையைச் சுற்றி காவிரி நதி ஓடிக்கொண்டு இருக்கும். கோட்டையின் உள்ளே இருந்து காவிரி நதிக்கு செல்லும் வகையில் ஒரு படித்துறை உண்டு. அந்தப் படித்துறை கோட்டை வாசல் போல பாதுகாப்பு மிக்கது. அங்கு பலத்த காவல் இருக்கும். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை சுற்றிலும் காவி ஆற்றிலும் ஆங்கிலப் படைகள் சுற்றி வளைத்து இருந்தன. உள்ளே வரும் ஒரே வழியான ஆற்றுப் படித்துறை கோட்டை வாசலை ஒரு துரோகி ஆங்கிலேயப் படைகளுக்குத் திறந்துவிட்டான். திட்டமிட்டபடி அந்த வழியே ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. களத்தில் தனது வீரர்களுடன் தன்னந்தனியே திப்பு. 

போர்க்களத்தில் ஒப்பாரி ஏது? தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை. குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்! வாயை மூடு! ” என்று உறுமுகிறார் திப்பு. இந்த சந்தர்ப்பத்தில்தான் கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று திப்பு செய்த வீரப்பிரகடனம் வெளிப்பட்டது. அந்தப் பிரகடனத்துடனே இவ்வுலகில் தீரமிக்க - ஒரு மானமுள்ள மன்னனை மரணம் தழுவிக் கொண்டது. 

தன் வீரர்களின் உடல்களின் குவியல்களுக்கு மத்தியில் 1799, மே 4 அன்று ஷஹீதான திப்புவின் உடல் கிடந்தது. இந்திய மண்ணின் விடுதலைக்கு இப்படி ஒரு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக் குர்ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன. திப்புவின் உடல் கிடந்தது கண்டெடுக்கப் பட்ட இடத்தில் இன்றும் ஒரு கல் நடப்பட்டு இருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் கண் கலங்காமல் இருக்க முடியாது.

இந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது எனக்கு கீழ்க்கண்ட நாலடியார் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?

என்பதே அப்பாடல்.

வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 04.05.1799ஆம் நாள் திப்புசுல்தானை வீழ்த்திய பிரிட்டிஷார் அவரது அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த 9,700-க்கும் மேற்பட்ட நவீன ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திப்பு சுல்தான் தன் அரண்மனையில் அமைத்திருந்த ஓரியண்டல் லைப்ரரி என்ற பெயருடைய நூலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ராக்கெட் தயாரிப்பு சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு திட்டக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டனர்.

இங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான். திப்புசுல்தானின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய பிரிட்டிஷ் அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர் மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் என்பவரை அணுகியது.

சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்புசுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளைத் திருத்தி, திப்புசுல்தானின் ராக்கெட்டை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு “காங்கிரிவ்“ என்ற ராக்கெட்டை வடிவமைத்தார். 16அடிகள் நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட “காங்கிரிவ் ராக்கெட்டுகள்“ ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கி.பி. 1800களில் நடந்த பல யுத்தங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

திப்புவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1799ஆம் ஆண்டில் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து புலம் பெயர்ந்து வேலூரைச் சுற்றி முகாமிட்டனர். இன்று வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, மேல் விசாரம் , வழுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ளோர் இப்படிப் புலம் பெயர்ந்தவர்களின் வம்சாவழிகளே.

சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, ஆலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீர்ப் புரட்சி செய்ய என்று முடிவு செய்தனர். ஆனால், அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து ஆங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலூர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. 

இதனை அறியாத திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 10.07.1806ஆம் நாள் அதிகாலை 2.00மணியளவில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கொன்றனர். கோட்டையின் மேல் திப்புசுல்தானின் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர். திப்புவைப் போன்ற ஒரு வீரன் புதைக்கப்படவில்லை விதைக்கப் பட்டான் என்பதற்கு இதுவே உதாரணம். 

இரண்டு நாட்களில் ஆற்காட்டிலிருந்து பிரிட்டிஷாரின் 19 லைட் ட்ரகூன்ஸ் என்ற 19ஆவது குதிரைப் படை ஆயுதங்களுடன் வந்து அப்புரட்சியை முற்றிலும் முறியடித்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பீரங்கி வாய்களில் கட்டி, பீரங்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.

அந்தப் புரட்சிக்குப் பின் திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் சில அண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே அதன்பின் வந்த இந்திய அரசும் அவர்களைக் கைவிட்டு கை கழுவி விட்டது. இன்று திப்புவின் வாரிசுகள் கல்கத்தாவில் ரிக்ஷா இழுப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. 

திப்புவைப் பற்றி பல வல்லுனர்கள் வழங்கிய புகழ் மொழிகள் சிலவற்றை இங்கு பட்டியலிடுவதில் பெருமை கொள்கிறேன். 
  • Major Base, “He was a God fearing man in the real sense of the world. He never formulated dual policies and avoided lies and hypocrisy”.
  • Lord Carnwallis (British Governor General in India) “Were Tipu happened to be let go scot-free, we would have bid farewell in India”.
  • Lord Wellesely (British Governor General during the Fourth Battle). “After Tipu’s death no ruler has enough guts to challenge us in future.”
  • Dr. John R. Anderson, “Never again would India witness a man of the likes of Tipu.”
  • Sir Thomas Menzo in his autobiography, “Everybody in the Sultanate Khudadad’ was treated with justice, without any bias and partiality because of which his state had become extremely strong in the country and still remains unparalleled till now.”

விடுதலைப் போரின் முன்னோடியாகவும் ஆங்கிலேயனின் குலை நடுக்கமாகவும் வாழ்ந்து காட்டிய மாவீரன் திப்புவின் வாழ்வேன் வீர வரலாற்றை சஞ்சய் கான் என்கிற பாலிவுட் நடிகர் , தொலைக் காட்சியில் தொடராக தயாரிக்க முற்பட்டபோது இந்தியாவின் நாசகார சக்திகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சமல்ல. 

சஞ்சய்கான் ’SWORD OF TIPPU SULTHAN‘ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்குத் தீ வைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்த காயங்களுடன் பல மாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர்தப்பினார்.

இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனை னைக்கொண்ட மல்கானி என்பவர் ஆவார். கரசேவைக்கு கல் அனுப்பிய கட்சியினரிடமிருந்து கஞ்சி வாங்கிக் குடிக்கும் கயமைத்தனம் கொண்ட அவரோ தீரன் திப்புவின் தியாக வரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கண்மூடித்தனமாகக் கூறினார். முஸ்லிம்களின் வரலாற்றை மறைப்பதற்கு கூச்சம் இல்லாத கூமுட்டைகளும் அவ்வாறே செய்து ஒளிபரப்பின. நடக்காத இராமாயணமும் மகாபாரதமும் வரலாறு என்று ஒளிபரப்பாகின்றன. ஆனால் நடந்த வரலாறு கற்பனைக் கதை என்கிற முத்திரையிடப்பட்ட நிகழ்வையும் சுதந்திர இந்தியா பார்த்துவிட்டு அதன் பொக்கை வாய்பொத்தித்தான் இருந்தது நண்பர்களே! 

தீரன் திப்புவின் புகழ், இப்படி ஆயிரம் கைகளால் மறைக்கப் பட்டாலும் ஆதவன் மறைவதில்லை என்றே இந்திய வரலாற்றில் நின்று நிலவும். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.
=================================================== 
எழுத உதவியவை : 
Nadvi, M. Ilays, Tipu Sultan (A Life History) translated by M. Saghir Hussain, N. Delhi 2004, p.83.
Irfan Habib, Resistance and Modernisation under Haider Ali and Tipu Sultan, 1st ed., N. Delhi, p. Xxiii.
I.H. Qureshi: “The Purpose of Tipu Sultan’s Embassy to Constantinople”, Journal of Indian History, Vol.24 (1945), pp. 77-84.
B. Shaik Ali, Tipu Sultan, New Delhi, 1971, p.57.
Jawaharlal Nehru, The Discovery of India, 6th ed., Delhi, edn., Delhi, 1956,pp. 272-73.
Tarachand, History of Freedom Movement of India, revised edn., Delhi, 1965, 
தமிழ் e பேப்பர்.
=================================================== 
இபுராஹீம் அன்சாரி

23 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

விவரிக்க விவரிக்க
விரிகின்றன காட்சிகள்
விழித்திறை முன்னால்.

கயவர்களுக் கெதிரான
கட்டுரை வரிகளோ
கசையடியென சுரீர் சுரீர்

உங்கள் தமிழ்
மறைக்கப் பட்ட வரலாற்றின்
திரையை
விலக்கவல்ல
கிழித்தெறியவே செய்கிறது.

சொற்களுக்குள்
சொல்லவந்த உணர்வுகளை
செலுத்திவைத்து எழுதுவதால்
வார்த்தைகள் வலுவடைகின்றன
வாசிப்போர் தோள்களோ
திணவெடுக்கின்றன

பட்டப்பெயர் சூட்டிய
பரங்கியர் காலத்தவர் எனில்
"கசையடிக் கட்டுரையாளர்" எனப்
பட்டம் பெற்றிருப்பீர்கள்!

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்க்முஸ் ஸலாம்.

இந்தக் கவிதையை மறக்க முடியாது. காரணம் இதுவே எனது எழுத்துக்கான முதல் கவிதைப் பரிசு.
ஜசாக் அல்லாஹ் ஹைர்.

Unknown said...

முஸ்லீம்களின் தியாக வரலாற்றின் மீது புழுதியாய் படிந்து மறைத்துள்ள காவிக்கறையை அகற்ற சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுடைய எழுத்துக்கள் தீரன் திப்புவின் வாள் போல் சூழல்கின்றன.

வஞ்சக பர்ப்பன, பனியாக்கள் பரங்கியரைப் போல் வீழ வேண்டும். இந்திய முஸ்லீம்களின் தூய சுதந்திர வரலாறு ஒளியாய் பாரெங்கும் பரவ உங்களுடைய வரலாற்று ஆய்வுகள் பன்மொழிகளிலும் வெளிவர வேண்டும்.

sheikdawoodmohamedfarook said...

மைத்துனர் இப்ராஹீம் அன்சாரி எழுதும் தீரன் திப்பு சுல்தானின்வீர வரலாற்று வரைவை படிக்கும் நாக்காளம் பூச்சிகூட நாகபாம்பாய் படமெடுக்கும் வீரம் ஊறும். தீரனின் வீரத்தை படமெடுத்து காட்டவிடாத காவிக்கோழைகள். கோழைக்கு என்றுமே 'வீரனை பிடிக்காது 'என்பதற்கு இதுவே சான்று!.// திப்புவின் வீரவரலாற்றை ஒளிபரப்ப// ஆட்டு மந்தைகளுக்கு ஓநாயே காவல் போட்ட இந்திய அரசின் புத்திசாளி தனத்திற்கு இன்னும் ஏன் நோபல்பரிசு கிடைக்கவில்லை?

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
மாவீரர் திப்புவின் தீரச்செயல் மலைக்க வைக்கிறது.
சத்திய மார்க்கம் "தோழர்கள்" வாசித்தேன். அதில்
"ஒருமுறை உடல்நலமின்றி இருந்த அபூதுஜானாவைச் சந்திக்கத் தோழர்கள் வந்திருந்தனர். உடல் மிகவும் சுகவீனமற்று இருந்தாரே தவிர, அபூதுஜானாவின் முகம் நோயின் தாக்கம் இன்றிப் பளிச்சென்று பொலிவுடன் இருந்தது. வியப்புற்ற தோழர்கள், “உம்முடைய முகம் பிரகாசமாக உள்ளதே அபூதுஜானா” என்று விசாரிக்க,

“என்னுடைய செயல்களுள் இரண்டின்மீது எனக்கு மிக நல்ல நம்பிக்கை உள்ளது. ஒன்று, எனக்குச் சம்பந்தமற்ற பேச்சை நான் பேசுவதில்லை. அடுத்தது, எந்தவொரு முஸ்லிமின் மீதும் கசப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி இன்றி அவர்களைப் பற்றி என் மனத்தில் நல்ல அபிப்ராயத்திலேயே இருக்கிறேன்.”

அகம் அழகாக இருந்தால் என்னாகும்? அது முகத்தில் தெரிந்திருக்கிறது. இச்செய்தியை ஸைது இப்னு அஸ்லம் விவரித்ததாக, அத்தஹபி குறித்து வைத்துள்ளார். இவ்விரண்டையும் நாம் உள்ளார்ந்து பின்பற்ற ஆரம்பித்தாலே போதும்; இன்று நம்மிடையே உள்ள பல பிரச்சினைகளும் மாயும்."
என்று குறிப்பிட்டு இருந்தது. பொருத்தம் தானே காக்க?
N.A.Shahul Hameed

Ebrahim Ansari said...

பேரன்புமிக்க பேராசிரியர் என் ஏ எஸ் அவர்களுக்கு ,

வ அலைக்குமுஸ் ஸலாம்.

தங்களின் அன்பான கருத்திடலுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தேர்வித்துக் கொள்கிறோம்.

தாங்கள் சுட்டிக் காட்டிய சத்திய மார்க்கத்தின் அபூதுஜானா அவர்களுடைய வரலாற்றை வாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. தங்களின் கருத்து பொருத்தம்தான்.

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari said...

பெரியவர் மச்சான் எஸ் எம் எப் அவர்கள் கூறியது

//நாக்காளம் பூச்சிகூட நாகபாம்பாய் படமெடுக்கும் வீரம் ஊறும். // அற்புதமான வசனம். ஊற்றெடுக்கும் வார்த்தைப் பிரவாகம் உங்களுக்கே இயல்பாகவே உரித்தானது.

தங்களின் உடல் நலத்துக்கு அனைவரும் இறைஞ்சுகிறோம்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி அதிரை அமீன் அவர்களின் தொடர்ந்த ஆர்வப் படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சி. ஜசாக் அல்லாஹ் ஹைர்.

sabeer.abushahruk said...

காக்கா,

வெள்ளக்காரன் லவட்டிக்கிட்டுப் போன புத்தகங்களும் பொக்கிஷங்களும் அவங்களிடம்தானே இருக்கும். நம் அரசாங்கம் திருப்பிக் கேட்டால் தருவாங்களா? சர்வதேச நடைமுறையில் சாத்தியமா?

எங்களையும் இளைய தலைமுறையையும் வரலாற்று உண்மைகளைக் கொண்டு உத்வேகம் தந்து உசுப்பேத்தி வரும் தங்களின் தொண்டு தொடர அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

sabeer.abushahruk said...

//மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்?” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் கிழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது. //

அற்புதமான குணம் படைத்த தீரன் திப்புவின் புகழ் ஓங்குக!

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர் அவர்கள்

//வெள்ளக்காரன் லவட்டிக்கிட்டுப் போன புத்தகங்களும் பொக்கிஷங்களும் அவங்களிடம்தானே இருக்கும். நம் அரசாங்கம் திருப்பிக் கேட்டால் தருவாங்களா? சர்வதேச நடைமுறையில் சாத்தியமா?//

கோகினூர் வைரத்தையும் ஆக்ராவில் அக்பர் கட்டிய கோட்டையில் பதிக்கப் பட்டிருந்த வைரங்களையும் இன்னும் பல விள மதிக்க முடியாத செல்வங்களையும்தான் லவட்டிக் கொண்டு போனார்கள். சுதந்திரம் தரப் பட்டபோது போடப்பட்ட ஒப்பந்தத்தில் அடித்துக் கொண்டு போனவை பற்றி ஆர்ப்பரிக்கக் கூடாது என்று ஒரு அம்சம் இருந்து இருக்கலாம்.
ஏனோ இந்தியா இவற்றை கேட்கவில்லை.

sheikdawoodmohamedfarook said...

சுமார்அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ''தீரன் திப்பு சுல்தான்'' என்ற புத்தகம் படித்தேன். அதில்''திப்பு கோட்டையே நோக்கி வெள்ளையன் படைவேகமாக நெருங்கிவரும்போது கோட்டைசுவர் மீதிருந்த பீரங்கிகள் முழங்கின. ஆனால் பீரங்கிகள் கக்கியது குண்டுகள்அல்ல. வெறும் ஆற்றுமணல்! கோட்டையை படைநெருங்கியதும் காவலன்கோட்டைவாசல் கதவைத்திறந்து நிறைகுடம் வைத்து ஆலாத்தி சுத்தி ''வா! வா!' என்று வரவேற்றான்.திப்புவின் கோட்டை வெள்ளையன் கையில் எளிதாக வீழ்ந்தது '' என்று படித்தேன்.இது உடன் இருந்தேகுழிபறித்தஆரியன் சூழ்ச்சி. திப்பு போட்டஉப்பை திண்ட ஆரியன் வெள்ளையன் வீசிய எலும்பு துண்டுகாக செய்த தப்பு!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தீரன் திப்பு சுல்தான் ! (S.K.M.H மாமா எழுதிய நாடகம்)

பள்ளிப் பருவத்தில் கேட்ட அந்த வீர வசனங்கள் ! (அதப் பேசியவர்கள் நம்மிடையே நிறைய பேர் சுற்றி இருக்கிறார்கள்) அடிக்கடி நினைவுக்கு வரும் !

அந்த ஒலிநாடக்களில் ஏதேனும் ஒன்றினை இங்கே பதிய முயற்சிக்கிறேன் !

adiraimansoor said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


வீரத் திப்பு பற்றி துப்பு தந்ததுக்கு நன்றி காக்கா.

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் சபீர்
//மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்?” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் கிழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது. //
இதைப் படித்ததும் நம் உயிரினும் மேலான நபிகளாரின் மக்கா வெற்றியின் போது கஹ்பாவின் திறவுகோலை தன்னிடம் முன்பொரு முறை கொடுக்காத சகொதரரிடமே கொடுத்தது நினைவுக்கு வந்தது.
இந்த மனப்பான்மை நம் இயக்கத் தலைவர்களுக்கு இருந்தால் நமது நிலை இப்படியா இருக்கும்?
மாற்றுக் கருத்துக் கூறினால் புழுதியை அன்றோ வாரித் தூற்றுகின்றார்கள்.
N.A.Shahul Nameed

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// தீரன் திப்புவின் புகழ், இப்படி ஆயிரம் கைகளால் மறைக்கப் பட்டாலும் ஆதவன் மறைவதில்லை என்றே இந்திய வரலாற்றில் நின்று நிலவும்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று திப்பு செய்த வீரப்பிரகடனம் வெளிப்பட்டது.
“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில்காந்தியடிகள் புகழ்ந்து எழுதினார். ////
*********************************************************************************************
உண்மையான வார்த்தைகள்!
*********************************************************************************************
ஆரிய வந்தேறிகள் முஸ்லிம்களின் வரலாற்றை மறைத்து முஸ்லிம்களை அழித்து விட வேண்டும் என்று நினைப்பது தங்களின் வயிற்றை வளர்க்க வேண்டும், சொகுசாக வாழவேண்டும், என்ற ஒற்றை குறிக்கோள்தான்.

இந்த காக்கி அரை டவுசர் ஆரிய வந்தேறி கயவர்களுக்கு என்று ஒரு கொள்கை கிடையாது. இந்த உலகத்தில் தான் தன் இனம் மட்டும் சொகுசாக வாழவேண்டும் என்ற கொள்கை மட்டும்தான்.

அலாவுதீன்.S. said...

இந்திய நாட்டின் மீது, வளத்தின் மீது அக்கரை எதுவும் கிடையாது. நாமெல்லாம் இந்துக்கள் அல்லவா? என்று ஒப்பாரி வைத்து முஸ்லிம்களை அழிக்கும் காரியத்திற்கு மட்டும் அப்பாவி இந்திய மண்ணின் மைந்தர்களை பயன்படுத்தி பலிகடாவாக்கி வருகிறார்கள். இந்த அப்பாவி மக்கள் காவிக் கயவர்களின் உண்மை முகத்தை அறிந்து இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும்பொழுது காவி அரைடவுசர்களின் கூடாரம் காலியாகி நாட்டை விட்டு ஓட்டம் எடுக்கும் காலம் வரும்.

முஸ்லிம்கள் மட்டும் இல்லையென்றால் சுதந்திரம் என்னும் காற்றை இந்திய மக்கள் சுவாசித்திருக்க முடியாது. முஸ்லிம்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத காரணத்தால் மட்டுமே ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். வேறு எந்த அமைதி புரட்சிக்கும் ஆங்கிலேயன் பயப்படவில்லை என்பதே வரலாறு.

அனைத்து வீரர்களின் வரலாறும் வெளி வரவேண்டும், ஆவணப்படுத்தப்பட வேண்டும் அனைவரின் கைகளிலும் உண்மைப் போய்ச் சேர வேண்டும். வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் ஸலாம்.

//அனைத்து வீரர்களின் வரலாறும் வெளி வரவேண்டும், ஆவணப்படுத்தப்பட வேண்டும் அனைவரின் கைகளிலும் உண்மைப் போய்ச் சேர வேண்டும். வாழ்த்துக்கள்!//

இன்ஷா அல்லாஹ். து ஆச செய்யுங்கள்.

ஆனால் சிலர் நான் ஏதோ புத்தக வியாபாரி என்கிறார்களே!

அல்லாஹ் போதுமானவன்.


sheikdawoodmohamedfarook said...

//மக்கா வெற்றியின்போது கஹ்பாவின் திறவு கோலை.....// N.A.S ஸார் சொன்னது.''என் ஆவியே தா! '' என்று கேட்டாலும் தருவேனே தவிர சாவியே தரவேமாட்டேன்!''என்று குப்புறப்படுத்துகொள்வார்கள்.

Shameed said...

//ஆனால் சிலர் நான் ஏதோ புத்தக வியாபாரி என்கிறார்களே!//

புத்தக வியாபாரம் ஹராம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள்

sheikdawoodmohamedfarook said...

//ஆனால் நான் ஏதோ புத்தகவியாபாரி என்கிறார்களே// அப்படியே இருந்தால்தான் என்னவாம்.முஸ்லிம்கள் புத்தகவியாபாரம்செய்யக்கூடாதுன்னு யார் பாத்வா கொடுத்தது ?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// 1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்//

என்பது,

1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் துருக்கியின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.

என்று இருக்கவேண்டும்.

மற்றபடி ...

மாஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு