அறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் !

தென்னைக்கேத் தெரியாமல்
தேங்காயைத் திருடினோம்
அன்னைக்கேத் தெரியாமல்
அடுப்பங்கரையில் திருடினோம்


மாமரம் அயர்ந்தபோது
மாங்காயைத் திருடினோம்
கைக்கெட்டும் கிளையிலிருந்து
கொய்யாவையும் கொய்தோம்

சொடுக்குப் போடும் நேரத்தில்
கொடுக்காப் புளி கவர்ந்தோம்
முடுக்கு வழி புகுந்தோடி
அடுக்களைக்குள் பதுங்கினோம்

உப்பு விளையும் பாத்தியிலே
உல்லான் குருவி பிடித்தோம்
மதில்மேலே ஏறி நின்று
மாதுளம்பழம் திருடினோம்

நோன்புப் பிடித்து நாள் முழுதும்
சோம்பிப்போய்க் கிடந்தோம்
ஹிசுபு ஓதி முடித்தபின்பும்
குசும்பு செய்தே திறிந்தோம்

ரெண்டு மிதி சைக்கிளையும்

நாலு காலால் மிதித்தோம்
சாலையோர மரத்திலெல்லாம்
ஆட்டையைத்தான் போட்டோம்

பெருசுகளை கண்ணைக்குத்தி
புளியங்காயைத் திருடினோம்
பேச்சு பேச்சா இருக்கும்போதே
பேரீட்சையில் கைவைத்தோம்

பார்வையைப் பறிகொடுத்து
பார்வைகளைத் திருடினோம்
வேர்வையோடும் நாட்களிலும்
போர்வைக்குள்ளே புலம்பினோம்

காரணமே இல்லாமல்
கண்டதெல்லாம் சுட்டோம்
கவனமாக ஓதிப் படித்து
நல்லபிள்ளை யென்றானோம்

கிளித்தட்டு கிட்டிபில் போல்
விளையாட்டாத்தான் திருடினோம்
பெற்றவங்க மனம்குளிர
நல்லாபேரையும் திருடினோம்

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

12 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகளெல்லாம் ஞாபகம் வருதே!

அழியாத கோலங்கள்.

Ebrahim Ansari சொன்னது…

ஆசிரியர்களை நண்பர்களாக்கி கொடுவாக் கருவாட்டு ஆணம் கொடுத்து கும்மாளம் அடித்ததை விட்டுவிட்டீர்களே!

ZAKIR HUSSAIN சொன்னது…

சபீர்,.............

நான் , நீ , ரியாஸ் , ஹாஜா இஸ்மாயில் சுற்றித்திரிந்த நம் ஊர் ஏரி , பல்லவகுளக்கரை, ரயில்தண்டவாளம் பக்கத்தில் நடக்கும்போது குயில்கள் தென்னந்தோப்பில் கூவும் சத்தம் எல்லாம் பிரதிபலிக்கிறது உன் கவிதையில்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

பெத்தவங்கமுந்தானையில்படம்பாக்கதிருடினோம்/பக்கமிருந்தமாணவன்பையில்கல்லுகுச்சிதிருடினோம்/வாப்பாஅனுப்பிய106 ரூவாயேநூறுரூவா என்றுசொல்லிஆறுரூவாதிருடினோம்.இன்னொருவன்தாய்மடியில் பசியாலே நள்ளிரவில்பால்திருடிய எண்ணி ரெண்டு பதினாறு மாசக் கைகுழந்தைநான்.

Shameed சொன்னது…

பள்ளிக் கூடம் போகும் பாதையில்
பப்பாளியை பதம் பார்த்தோம்

Shameed சொன்னது…

கவிதை எழுதிய
கைகளில் துரியான்
வாடை அடிப்பதுபோல்
எனக்கு ஒரு பீலிங்

sabeer.abushahruk சொன்னது…

//கவிதை எழுதிய
கைகளில் துரியான்
வாடை அடிப்பதுபோல்
எனக்கு ஒரு பீலிங் //

ஹமீது,

அதை அதிரையின் சீத்தாபழ/பப்பாளி கொண்டு கழுவி ஷார்ஜாவின் பேரீத்தம்பழத்தால் மெழுகி 6 மணி நேரமாகிறது.

Yasir சொன்னது…

ஆஹா அருமை..சூப்பர் ...கலக்கீட்டீங்க

Unknown சொன்னது…

என்னவென்று சொல்வதம்மா கொஞ்சி வரும் கவிதையை... அருமை அருமை...

Unknown சொன்னது…

என்னவென்று சொல்வதம்மா கொஞ்சி வரும் கவிதையை... அருமை அருமை...

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நன்மை பயக்குமெனில் பொய்யும் வாய்மையைப் போல்தான் என்று சொல்வர். அதுபோல் இந்தத் திருட்டுகளும் யாரையும் பாதித்திருக்காது என்பதால் விளையாட்டைப்போலத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாசித்துக் கருத்திட்ட நல்லுள்ளங்களுக்கு நன்றி.

Unknown சொன்னது…

//தென்னைக்கே தெரியாமல்
தேங்காயைத் திருடினோம்
அன்னைக்கே தெரியாமல்
அடுப்பங்கரையில் திருடினோம்//

தேவையில்லாமல் இருந்த இரண்டு ஒற்றெழுத்துகளை (த்) நீக்கிவிட்டேன்.
ஒற்று மிகுதல், மிகாமை பற்றிய என் பாடத்தை மீண்டும் படித்துப் பார்க்கவும். இன்ஷா அல்லாஹ், விரைவில் எனது 'நல்ல தமிழ் எழுதுவோம்' நூல் வெளிவர இருக்கின்றது! எதிர்பாருங்கள்!