Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - முன்னுரை 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 04, 2012 | , , , ,


"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே - வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னர் மனிதன் தோன்றியிருப்பானா என்பதைச் சிந்திக்க மறந்தோம். ஏனெனில் தாய்மொழிப் பாசம் நமது அவ்வாறான சிந்தனையைத் தடுத்து விட்டது"

மேற்காண்பது, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் "கல்வெட்டு முதல் கம்ப்யூட்டர்வரை - தமிழ் எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி" என்ற தலைப்பில் 'தமிழ் கம்ப்யூட்டர்' இதழுக்கு அடியேன் எழுதிய கட்டுரையின் தொடக்கம்.

மனிதனின் முதல் ஆயுதமான கல் தோன்றுவதற்கு முன்னரே வாள் தாங்கிய தமிழனைக் கற்பனை செய்து பார்ப்பதை மறந்து, கம்ப்யூட்டரில் - இணையத்தில் தமிழ் மொழியின் பரவலைப் பார்க்கும்போது பூரித்துப் போகிறோம்!

யுனிகோடு எனும் ஒருங்குறி அற்புதம் இணையத்தில் புரட்சியாகப் புகுந்தபின் தமிழும் கணினி அறிவும் தெரிந்த பலரும் எழுத வந்தனர் - இரண்டுமே கொஞ்சம் தெரிந்திருந்தால் போதும் என்ற துணிச்சலோடு.

ப்ளாகர் எனும் இலவச வலைப்பூ இணையத்தில் அறிமுகமான பின்னர் அறிவியல், ஆன்மீகம், அரசியல், விளையாட்டு, உலக நடப்புகள், போன்ற எல்லாத் துறைகளிலும் தத்தமக்கு உள்ள சொந்தக் கருத்துகளை, புலமையை இணையத்தில் வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஓரளவு பலனடைந்து வருகிறோம்.

ஆனால், நாம் எழுதும் தமிழ் தரமானதா என்பதைக் குறித்துப் பெரும்பாலோர் கவலை கொள்வதே இல்லை. இணையத்தில் எழுதுபவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஏனெனில் பெரும்பாலான தமிழ் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் தம் மொழித் திறன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை.

"இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதல்" என்று நாளிதழ்களில் படிக்கும்போதும் "இத்துடன் செய்திகள் முடிவடைந்தது" என்று தொலைக்காட்சியில் கேட்கும்போதும் பலவேளை மனதுக்குள் வருத்தமும் சிலவேளை முள் குத்தும் வலியும் தோன்றுகிறது!

அவற்றைத் திருத்தி முடிப்பது நம்மால் ஆகாது என்றாலும் இணையத்தில் எழுதுபவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத நாம் உதவலாம் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்தது. இங்கு எழுதத் தொடங்கியதற்கு அதுவே தலையாய காரணமன்று.

"அன்புள்ள ஆசிரியருக்கு," எழுதி அலுத்துப்போய் நீண்ட காலம் எழுத்தில் தொடர்பு இல்லாமல், இப்போது எழுதத் தொடங்கியதில் இலக்கண/எழுத்துப் பிழைகள் எனக்குக் கூடுதலாக வருகின்றன. தீட்டப் படாமல் உறையினுள் உறங்கும் வாள், கூர் மழுங்கிப் போய்விடுவது இயல்பன்றோ? அதுவும் ஒரு தமிழ்க்குடியின் வாள் ...!

இந்தத் தொடரின் உண்மையான நோக்கம் புரிந்திருக்குமே! ஆம்; தூர் வாரப்படாமல் கிடக்கும் எனது 'கிணற்றை'த் தூர்வாரும் முயற்சியில் ஒரு தொடர். 

கற்றுக் கொடுப்பதற்காகவே கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள. சுருங்கக் கூறின், 'தொட்டனைத்தூறும் மணற்கேணி ...' முயற்சியே இத்தொடர்.

அந்தக் குறளின் முழுமையையும் ஓர் அன்பர், "தொட்டனைத்தூறும் ம‌ண‌ற் கேணீ மாந்த‌ற்க்கு க‌ற்ற‌னைத் தூறும் அறிவு" என்று இணையத்தில் எழுதி வைத்திருக்கிறார். படிக்கும் நமக்கே வலிக்கிறது! எழுதியவன் படித்தால் என்னாகும்?

"யோவ்! எழுதுறப் படிச்சிட்டுப் போவியா, அத விட்டுட்டு எலக்கணம் எழுத்துப்பிழை எல்லாம் பார்க்கணுமாக்கும்?" என்று எரிச்சல் படும் தமிழ்க்குடி, ஆங்கிலத்தில் எவராவது பேசும்போதோ எழுதும்போதோ சிறுபிழை செய்தாலும் அறச்சீற்றம் கொண்டு விடுவார்; குறைந்தது எள்ளி நகையாடத் தவற மாட்டார்.

ஆங்கில எழுத்துகள் மொத்தம் எத்தனை? என்று கேட்டால் அடுத்த நொடியில் விடை சொல்லிவிடக் கூடிய நம்மில் எத்தனை பேர், "தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?" என்ற கேள்விக்குச் சட்டென விடை சொல்வோம்?

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
- ஜமீல் M.சாலிஹ்

18 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. ஜமீல் அவர்களே,

வருக ! நமக்கு “பயிற்று”விக்க தமிழே !!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மொழி (முன்)வைத்து - வேண்டியதை செழிப்பாக்காலாம், சுழிபோடலாம், இப்படியிருக்க சமீபகால இணைய பயன்பாட்டில் அதிரை வலைத்தளங்களின் அசுர வேக வளர்ச்சி நம் விழி திறக்க வைத்திருக்கிறது இம்மாதிரியான மூத்தோர் கற்று தரும் பாடங்கள் நம் முன்னால் கொண்டு வரும்போது.

மொழி சிறக்க ஆர்வமுடன் பயிலவும் காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழே எங்கள் மொழியாகும்.
அதில் ஏற்ப்படும் பிழைகள் எங்கள் தவறாகும்.
அவற்றை சுற்றி காட்ட வந்திருக்கும் ஜமீல் காக்காவாகும்.
அதை சீர் படுத்திக்கொள்வதே எங்களின் கடமையாகும்.

நல்தமிழே வருக! நல்லவற்றை பல தருக!

ZAKIR HUSSAIN said...

dear JameelNana,


வலைப்பூவில் எழுதுபவர்களின் தவறுகள் அதிகம்தான். ஆனால் எல்லோருக்கும் உங்களைப்போல் திருத்தித்தரும் ஆசிரியர்கள் கிடையாது. அந்த வகையில் நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்தான் [ அதிர்ஷ்டம் வடமொழியா?,....அப்டீனா தமிழில் என்ன? ]

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் ஜமீல் அவர்களுக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தங்களின் பழகுமொழி தமிழை படித்து எங்களின் எழுத்தில், பேச்சில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ள காத்திருக்கிறோம்.

Shameed said...

தவறு என்று சுட்டி(சுட்டியா அல்லது சுன்டியா ) காட்டினால் திருத்திக்கொள்வதில் தவறில்லை
ஆனால் ஒருசில இடங்களில் சரியான தமிழில் பேசினாலோ எழுதினாலோ பல பேருக்கு அது என்னவென்று புரியாமல் போய் விடுகின்றது

Yasir said...

சொல்லிதாருங்கள் காக்கா ,கற்றுக்கொண்டு முடிந்தவரை தவறில்லாமல் எழுத பழகிகொள்கிறோம்.....

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தலையாய தாய்த் தமிழ்ப் பணியை பெரிதும் வரவேற்கிறோம்.

// தூர் வாரப்படாமல் கிடக்கும் எனது 'கிணற்றை'த் தூர்வாரும் முயற்சி//

தூர் வாரப்படும்போது கிடைக்கும் பலனை நாங்களும் அனுபவிக்கிறோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான ஜமீல் காக்கா,

யுனிகோட் என்ற ஒருங்குறி செய்த புரட்சி இன்று தமிழை 10 விரல்களாலும் என்னைப் போன்ற மிக குறைந்த தமிழறிவுள்ளவர்களாலும் எழுதப்படுகிறது என்பது உண்மை தான்.

எழுத்துப் பிழை இலக்கணப் பிழையின்றி நம் அழகு மொழியை நாம் எழுதாமல் வேறு யாரு தான் எழுதுவது என்ற சிந்தனை அவ்வபோது எழாமல் இல்லை.

தரமான தமிழை கற்க ஆசை தான் காக்கா...

Anonymous said...

ஜமீல் காக்கா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே - வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னர் மனிதன் தோன்றியிருப்பானா என்பதைச் சிந்திக்க மறந்தோம். ஏனெனில் தாய்மொழிப் பாசம் நமது அவ்வாறான சிந்தனையைத் தடுத்து விட்டது"//

ஒருவன் தன் கருத்தை மற்றவனுக்கு தெரிவிப்பதற்காக தன் குரல்வலையிலிருந்து எழுப்பும் ஒலியே மொழியாகும். இதில் தமிழ் மொழி பற்றி கூறும்போது, கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று கூறுகின்றோம்.

கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன் மனிதன் தோன்றியிருக்க முடியாது.மனிதனே தோன்றாதபோது மொழி ஏது? என்பதுதான் தங்களின் மேற்கூறப்பட்ட கருத்து.

ஆனால் மொழிகளுக்குள் மூத்த முதன்மை மொழி (Senior most language) தமிழ் மொழி என்பதை மிகைப்படுத்தி கூறுவதற்கு பதிலாக, எல்லையையும் மீறி,

'கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி' என்று கூறப்படுவது நம் தமிழ் மொழின் தொன்மையை பறை சாற்றும் கருத்தாக இங்கே பொருள் கொள்ளலாமா?

நூர் முஹம்மது

அப்துல்மாலிக் said...

சிலபேரின் கவிதைகளையும், கட்டுரைகளையும் படிக்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கும், இவர்களுக்கு மட்டும் எங்கேர்ந்து தமிழ் வார்த்தைகள் கொட்டுகிறது என்று, நிறைய படிக்க தெரிந்துக்கொள்ள ஆர்வம். தாய் மொழியை முழுமையாக கற்றால் பிற மொழி தானா வரும் என்பது உண்மையே...

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

வந்துட்டே...ன்.

நல்லவேளை. இன்னும் அடுத்த பீரியடுக்கு பெல்லடிக்கல.

நீண்ட நாள் எதிர்பார்ப்பு இத்தொடரின்மூலம் நிறைவேறுகிறது. 

என் அன்பிற்குரிய ஜமீல் காக்கா எங்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும் என்ற பேரவா இதோ நடந்தேறப்போகிறது.

தமிழைத் தமிழ் வாத்தியார் நடத்தினால் தமிழை மட்டும்தான் கற்போம்.  காக்கா நடத்தினால் அது தமிழ் மட்டுமாயிறாது என்பதற்கு   முன்னுரையே ஆதாரம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

கற்காலம் எனப்படும் கற்களைக் கொண்டு தீ மூட்டி, கற்களைக் கொண்டு வேட்டையாடியக் காலத்திற்கும்; மண்ணால் பானைகள் செய்தும் மண்ணைத் தோன்றிக் காய்கறிகள் பயிரிட்டக் காலமான “மண்காலத்திற்கும்” இடைப்பட்ட காலத்தில் தான் தமிழ் மொழித் தோன்றியிருக்கக் கூடும்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பான அனைவர்க்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்.

1999இல் Adirai Web Community (AWC) எனும் யாஹூ குழுமத்தை சகோ. மீராசா தொடங்கி, அதில் நமதூருக்கு நல்லது செய்யவேண்டும் எனும் நோக்கத்தோடு பல சகோதரர்கள் கருத்துகள் பகிர்ந்து கொண்டிருந்தோம். அதில் Blog எனும் வலைப்பூவைக் குறித்து சகோ. உமர் தம்பி அறிமுகம் செய்தார். அநேகமாக அது 2005 என நினைக்கிறேன். பட்டுக்கோட்டை-அதிரை பஸ்ஸில் போடுவதுபோல் உடனடியாக முண்டிக்கொண்டு Bloggerஇல் துண்டு போட்டு வைத்தவர்களுள் நானும் ஒருவன்.

'எல்லாருக்கும் பயன் தரக்கூடியதாக என்ன எழுதலாம்?' எனும் கேள்விக்கு எளிதில் விடைகாண முடியாமல் தவித்து, 2009இல் எழுதத் தொடங்கியதுதான் 'பழகு மொழி'. பின்னர் பணிப்பளு கூடிப்போய் அடிக்கடி இடுகையிட முடியவில்லை. அ.நி.யில் மீள்பதிவு வரத்தொடங்கிய பின்னர் பழகு மொழியைத் தொய்வின்றித் தொடரவேண்டும் எனும் கவலையும் கூடிப்போனது!

மிகுந்த தயக்கத்துக்குப் பின்னர், யாரும் தவறாகக் கருத மாட்டீர்கள் எனும் நம்பிக்கையில், என்னிலிருந்து தொடங்கி, இங்கு இடப்பட்டவற்றிலுள்ள சில எழுத்துப் பிழைகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் - திருத்திக்கொள்வோம் எனும் நன்நோக்கில்:

மனத்துக்குள் வருத்தமும் சிலவேளை முள் குத்தும் வலியும் தோன்றுகிறது!

வேண்டியதைச் செழிப்பாக்காலாம், சுழிபோடலாம், இப்படியிருக்க சமீபகால இணையப் பயன்பாட்டில்

மூத்தோர் கற்றுத் தரும்

ஏற்(ப்)படும் பிழைகள் எங்கள் தவறாகும்.
அவற்றைச் சு(ற்றி)ட்டிக் காட்ட

[ அதிர்ஷ்டம் வடமொழியா?,....அப்டீனா தமிழில் என்ன? = பேறு]

தமிழைப் படித்து எங்களின் எழுத்தில், பேச்சில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ள காத்திருக்கிறோம்.

தவறில்லாமல் எழுதப் பழகிகொள்கிறோம்.....

மிகக் குறைந்த தமிழறிவுள்ளவர்களாலும் தமிழைக் கற்க

தமிழ் மொழி பற்றிக் கூறும்போது,

எனக்குப் பொறாமையாக இருக்கும்,

முழுமையாகக் கற்றால்

அது தமிழ் மட்டுமாயி(றா)ராது

மண்ணைத் தோ(ன்றி)ண்டிக் காய்கறிகள் பயிரிட்டக் காலமான “மண்காலத்திற்கும்” இடைப்பட்டக் காலத்தில் தான் தமிழ் மொழி(த்) தோன்றியிருக்கக் கூடும்.

***

மேற்காணும் திருத்தங்கள் எவ்வாறு செய்யப்பட்டன? இந்த இடத்தில் புள்ளிராஜா வருவாரா மாட்டாரா? என்பதைப் புரிந்து கொள்வதுதான் பாடங்களின் தொடர்ச்சி.

கருத்திட்ட அனைவர்க்கும் என் நன்றி!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

ஆஹா !

சிலேட்டில் பின்னர் அவை கடந்து, அடுத்து குறிப்பேடுகளில் எழுதி தொடர்ந்து தட்டச்சு என்றாகிவிட்டது இன்றைய கணினி வளர்ச்சியும் ஒருங்குறி காட்டித் தந்த ஒற்றுமை தமிழ் எழுத மட்டுமல்ல வாசிக்கும் பழக்கத்தையும அதிகரித்தது இணைய பயண்பாட்டின் எழுச்சி.

பழகு மொழி - தலைப்புக்கு ஏற்ற மொழிதான் நம் தமிழ் மொழியும், அதனை இலக்கண, எழுத்து பிழைகளை தவிர்த்து எழுத மூத்தவர்கள் முன்னிருக்க நாமும் அவர்களின் வகுப்பறையில் அமர்ந்து திருத்திக் கொள்ள காத்திருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ் !

மணியடித்தால் வகுப்பு மணியடித்தால் வீடு என்றில்லாமல், மனத்தை வெல்லும் வகுப்பு, மனத்தோடு ஒட்டிடும் பாடமாக இருத்திட அதிரைநிருபர் வலைத்தளமும் இந்த தொடரை முன்னெடுத்து செல்ல இருக்கிறோம் - இன்ஷா அல்லாஹ் !

அன்பான வாசகர்களே ஒரே ஒரு வேண்டுகோள்(தானுங்க)!

இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் பதியும் கருத்துக்கள் எழுத்துப் பிழைகள் இன்றி தொடர்ந்தால் அதன் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு மெகா பரிசு காத்திருக்கிறது அது என்னவென்று இந்த தொடரின் நிறைவில் அதிரைநிருபர் குழு அறிவிக்கும் இன்ஷா அல்லாஹ் !

சரி, பரிசு என்றும் அறிவித்தாகிவிட்டது அதற்கான நெறிகள் இருக்கனும் அல்லவா !

இதோ :-

* ஒவ்வொரு பதிவுக்கும் நான்கு வரிகளுக்குமேல் கருத்துக்கள் இருக்க வேண்டும்.

* மடித்து மடித்து எழுதி (கவிதை எழுதிட்டேன்னு) சீக்கிரம் பேப்பரை மடிக்க கூடாது, வரிகள் முழுமையா எல்லைக் கோட்டை தொட வேண்டும்.

* பதிவோடு தொடர்புடையதாக இருத்தல் முன்னுரிமை, இருப்பினும் தமிழ் கற்க எழும் சந்தேகங்களையும் எழுப்பலாம்

* ஆங்கிலம் கலந்திடலாகாது

* தூய தமிழ் என்ற கட்டாயமில்லை, வழக்கு தமிழாக இருக்கலாம்.

* பதிவு ஆசிரியரின் திருத்தம், அதில் சுட்டப்படும் கருத்துக்கள் கற்பதற்கே என்ற மனநிலையுடன் இருத்தல் அவசியம், அவசியமற்ற விவாதம் தொடர்ந்தால் நெறியாளரின் தலையீடு இருக்கும்.

வாருங்கள் தட்டச்சுவோம் பிழையின்றி...

-அதிரைநிருபர் குழு

குறிப்பு : எழுத்துப் பிழைகள் திருத்தம் இந்த தொடருக்கு மட்டுமே பொருந்தும்.

sabeer.abushahruk said...

ஆஹா. பாடம் நடத்திய கையோடு டெஸ்ட்டும் அதைத் திருத்தியும் தந்து எங்களை எப்படியாவது தேத்தி எடுத்துவிடவேண்டும் என்னும் காக்காவின் அவா நிறைவேறட்டும்.

அ.நியின் பரிசுத்திட்டம் கலக்கல். தமிழை நன்றாகக் கற்றேத் தீரவேண்டும் எனும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இதுவும் ஒரு சிறந்த சமூக சேவைதான்.

ஜமீல் காக்காவுக்கும் அதிரை நிருபருக்கும் நன்றி.

அஹ்மது காக்காவின் தொடர், ஜமீல் காக்காவின் வகுப்பு, ஜாகிரின் படிக்கட்டுகள், இ.அன்சாரி காக்காவின் விழிப்புணர்வு கட்டுரைகள், அலாவுதீனின் அருமருந்து, எடிட்டோரியலின் ஊடக போதை... கலை கட்டுகிறது அ.நி.

sabeer.abushahruk said...

//என்னிலிருந்து தொடங்கி, இங்கு இடப்பட்டவற்றிலுள்ள சில எழுத்துப் பிழைகளை//

//என்னிலிருந்து தொடங்கி,//

//என்னிலிருந்து//

ஜஸாக்கல்லாஹ் கஹைர் காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு