Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 13 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 07, 2012 | ,

தலையாய 'பகுதி'யும் 'விகுதி' உடல் உறுப்புகளும்

(2) 2. இருவகைப் பதங்கள்
காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, "இடுகுறிச் சொற்கள்" என்பர். இடுகுறிச் சொற்களைப் பிரித்துப் பொருள் சொல்ல இயலாது. அவை முழுமையாக நின்றே பொருள் தருபவையாகும். இவ்வாறான இடுகுறிச் சொற்களைப் "பகாப் பதம்" எனக் கூறுவர். பகாப் பதங்கள் குறைந்த எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

குறைந்த எழுத்துகளைப் பெற்றிருந்தாலும் வயிறு, முக்காலி, நாற்காலி, காற்றாடி போன்ற காரணப் பெயர்கள் பகாப் பதங்களாகா.

(2) 2.1. பகாப் பதங்கள்
பெயர், வினை, இடை, உரி எனப் பகாப் பதங்கள் நான்கு வகைப்படும்:

பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி

முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற

பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்-நன்னூல் 131.


(2) 2.1.1. பெயர்ப் பகாப் பதம்
பெயர்ப் பகாப் பதங்கள் பெயர்ச் சொற்களாக வரும்.
காட்டுகள் : மண், மழை, நிலா, பலா.

(2) 2.1.2. வினைப் பகாப் பதம்
வினைப் பகாப் பதங்கள் பெரும்பாலும் ஏவல் வினைகளாக வரும்.
காட்டுகள் : எழு, நில், நட, செய்.

(2) 2.1.3. இடைப் பகாப் பதம்
பெயர்ச் சொல், வினைச் சொல் தவிர்த்து, இடைச் சொற்களாக வருபவை இடைப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள் : மற்று (மற்ற), ஆதல், போல், தான், உம், முன், பின், இனி, , ஓ போன்றவையும் வேற்றுமை உருபுகளான ஐ, ஆல், கு, ன், அது, கண் ஆகியனவும் இடைப் பகாப் பதங்களாகும்.

(2) 2.1.4. உரிப் பகாப் பதம்
பெரும்பாலும் 'மிக்க' எனும் ஒரு சொற்பொருளைப் பல சொற்களாகப் பயன்படுத்த உதவும் உரிச் சொற்கள், உரிப் பகாப் பதங்களாகும்.
காட்டுகள்: சால, உறு, தவ, நனி, கூர், கழி.
இவற்றுள் 'சால' எனும் உரி, சொல்லின் முன்னும் பின்னும் முறையே, பகுதி ("சாலச் சிறந்தது") ஆகவும் தொகை ("அன்புசால் நண்பர்களே!") ஆகவும் இடம் பெறும்.


இவை தவிர, சேர்ந்து வரும் சொற்களைப் பொருத்து, வேறுபட்ட பொருள்களைத் தரத்தக்க, 'கடி' எனும் ஓர் உரிச் சொல்லும் உண்டு: கடிமணம் = புதுமையான திருமணம்; கடிவேல் = கூர்மையான வேல்; கடிமுரசு = ஆர்க்கும் முரசு; கடிவந்தான் = விரைந்து வந்தான். 'கடி' உரி, பகுதியாக வரும்.

மேற்காணும் காட்டுகளில் குறிப்பிட்டுள்ள பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரிக்க முடியாது; பிரித்தால் அவை பொருள் தரா.
பகுக்கத் தக்க ஒரு பெயர்/வினைச் சொல் எத்துணை நீளமானதாக இருந்தாலும் அதன் பகாப் பதமே அச்சொல்லின் தலையாய பகுதிஆகும். தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும் - நன்னூல் 134.

காட்டு : வா+த்+த்+அன்+அன் = "வந்தனன்" எனும் வினைச் சொல்லின் தலையாய் உள்ள "வா" எனும் வினையடிதான் இச்சொல்லின் பகுதியாகும். (எடுத்துக் காட்டில் எழுத்துப்பிழை ஏதுமில்லை). வெகு அரிதாக இடை/உரிச் சொற்கள் பகுதியாக அமைவதுண்டு. அவை பற்றி அடுத்து வரும் பாடங்களில் படிக்கலாம்.

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

-ஜமீல் M.சாலிஹ்

7 Responses So Far:

Yasir said...
This comment has been removed by the author.
Yasir said...

”செய்வனே திருந்தச்செய்” என்பதுபோல்...எங்கள் வாயிலும்,கையிலும் பிழைப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் உங்களின் ஆக்களின் மூலம் சிறிது குணம் பெற்று எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது...இதன் பெருமை தங்களையேச்சாரும்

sabeer.abushahruk said...

தமிழ் அழகாகிப் போகும் தங்களின் வகுப்பை கிரகித்துப் பழகினால்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Noor Mohamed said...
This comment has been removed by the author.
Noor Mohamed said...

காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.

//காட்டு : வா+த்+த்+அன்+அன் = "வந்தனன்"//

மேலே கொடுக்கப் பட்டுள்ள காட்டு: வா+த்(ந்)+த்+அன்+அன் = வந்தனன்.

இதில் வா-பகுதி; 'த்' 'ந்' ஆக மாறியது விகாரம்; த்-இறந்தகால இடைநிலை; அன்-சந்தி; அன்-ஆண்பால் வினைமுற்று விகுதி என உறுப்பிலக்கணம் பிரித்து பொருள் காணலாமா?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி நூர் முஹம்மது,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
நீங்கள் பிரித்திருப்பது சரியே. கூடுதலாக
'த்' இடைநிலை, கடந்தகாலத்தைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. எனவே, 'தெரிநிலை' என்றானது.

Noor Mohamed said...

//'த்' இடைநிலை, கடந்தகாலத்தைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. எனவே, 'தெரிநிலை' என்றானது.//

நன்றி ஜமீல் காக்கா.

38 ஆண்டுகளுக்கு முன் எனக்கு தமிழ் போதித்த என் தமிழாசான் புலவர் தி. இராமதாசு அவர்கள் இதே விளக்கத்தை தந்ததுடன் 'தெரிநிலை' என்பது advance level என்றும், இறந்தகால இடைநிலை என்று எழுதினாலே தேர்வில் முழு மதிப்பெண் கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள்.

இன்றோ இங்கு பழகு மொழி படிக்கும்போது, M A தமிழ் பட்டம் பெற்ற சிலர் கூட இதுபோன்று தமிழ் இலக்கணம் கற்பிப்பது அரிது. ஆழமான தமிழ் இலக்கணம் கற்பிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் கண்டிப்பாக வித்வான் அல்லது புலவர் தமிழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் புலவர்கள், வித்வான்களுக்கு நல்ல புலமையான படிப்பு இருந்தது. தமிழை நன்றாகக் கரைத்துக் குடித்தால்தான் வித்வான் என்றும் புலவர் என்றும் பட்டம் அளிக்கப்பட்டார்கள். ஜமீல் காக்கா அவர்களின் வயதை கணக்கிடும்போது அவர்கள் வித்வான் படித்திருக்க வாய்ப்பில்லை. புலவர் பட்டயப் படிப்பு 1975 ல் முடிவுற்று பின் அது B Litt என்ற பட்டப் படிப்பாக மாறியது.

அப்போது புலவர் படிக்க பள்ளிப் படிப்பே போதுமானது. ஒரு சமயம் நாமெல்லாம் அறியாமல் ஜமீல் காக்கா அவர்கள் புலவர் படித்து விட்டு, நமக்கெல்லாம் இவ்வாறாக ஆழமான இலக்கணம் கற்பிக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அக்காலத்தில் நல்ல புலமையான தமிழ் படிப்பு இருந்தன. அவர்கள் வித்வான் என்றும் புலவர் என்றும் பட்டம் அளிக்கப்பட்டார்கள். மேலும் அண்ணாவியார் என்பதும் புலமைமிக்க தமிழ் பட்டப் படிப்பு என்பதையும் அ.நி. வாசகர்கள் அறியவே இந்த பின்னூட்டத்தை பழகு மொழி பகுதியில் கொடுத்துள்ளேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு