Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 14 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 18, 2012 | ,

(2) 3.பகுபதங்கள்

பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, "பகுதி" என்றும் இரண்டாவது உறுப்பு, "விகுதி" என்றும் கூறப்படும். சிலர், பகுதியை "அடிச்சொல்" என்றும் அதில் வந்து ஒட்டும் விகுதியை "ஒட்டு" எனவும் கூறுவர். ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்.

பகுதியான அடிச்சொல் சுருக்கமான பொருளை உடையதாக விளங்கும். பகுதியும் விகுதியும் இணைந்து, விரிந்த பொருள் தரும். ஆனால், தனித்த விகுதி பொருளற்றுக் கிடக்கும்.

காட்டாக,
ஆடு+கள் = ஆடுகள். இதில் "ஆடு" எனும் சொல்லானது பொருள் தரும் தனித்த அடிச்சொல்(பகுதி) ஆக அமைந்துள்ளது. "கள்" எனும் விகுதி, பன்மையைச் சுட்டுவதற்காக வந்து ஒட்டியுள்ளது. இங்கு விகுதியாக வந்து ஒட்டிய "கள்", தனித்துப் பொருள் தரக்கூடிய குடிக்கும் "கள்" அன்று. எனவே, விகுதியான "கள்" பொருள் தரத்தக்கச் சொல்லன்று.

சுக்கு, அச்சு, கட்டு, பத்து, காப்பு, மாற்று ஆகியவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகும். இவற்றைப் பழகுமொழி-05இன் பாடம்(1):2:2இல் படித்திருக்கிறோம். வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து வரும் சொல் (வருமொழி) க/ச/த/ப ஆகிய ஏதேனும் ஒரு வல்லின உயிர்மெய்யில் தொடங்கினால், நிலைமொழியான குற்றியலுகரச் சொல்லின் இறுதியில் க்/ச்/த்/ப் ஆகிய வல்லொற்று இணைந்து கொள்ளும் என்பது விதி. இவ்விதி, வருமொழியானது தனித்துப் பொருள் தரும் சொல்லாக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

காட்டுகள்:
சுக்கு+குழம்பு = சுக்குக்குழம்பு; மாற்று+சாலை = மாற்றுச்சாலை; கட்டு+திட்டம் = கட்டுத்திட்டம்; பத்து+பாட்டு = பத்துப்பாட்டு

அதனாற்றான், எழுத்து, கருத்து, வாழ்த்து, பாட்டு ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகவே இருந்தபோதும் அவற்றுடன் வந்து ஒட்டும் தனித்துப் பொருள் தராத "கள்" விகுதியில் வலிமிகலாகாது என்று தமிழறிஞர்கள் கூறுவர்.

காட்டுகள்:
எழுத்து+கள் = எழுத்துகள்; கருத்து+கள் = கருத்துகள்; வாழ்த்து+கள் = வாழ்த்துகள்; பாட்டு+கள் = பாட்டுகள்.

ஒரு சொல் பகுக்கத் தக்க இரு உறுப்புகளைக் கொண்டிப்பதுபோல் தோன்றினாலும் இரு உறுப்புகளும் பொருள் தருவனவாக அமைந்திருந்தால் அச்சொல்லைப் பகுதி+விகுதி எனப் பிரித்துக் கூறலாகாது.

காட்டுகள்:
ஆடு+குட்டி = ஆட்டுக்குட்டி; தாய்+மடி = தாய்மடி; யானை+தந்தம் = யானைத்தந்தம்

மேற்காண்பவற்றுள் குட்டி, மடி, தந்தம் ஆகியன தனித்துப் பொருள் தரும் சொற்கள். எனவே, ஆட்டுக்குட்டி, தாய்மடி, யானைத்தந்தம் ஆகிய சொற்களை, "கூட்டுப்பகுதி" எனக் கூறுவர். அஃதாவது விகுதி அல்லாத, பகுதிகளின் கூட்டு என்பது அதன் பொருள்.

கூட்டுப்பகுதியை, "தொகைச்சொல்" என்றும் கூறுவர். தொகை என்றால் தொக்கி (மறைந்து) நிற்பதாகும். மேற்காணும் மூன்று காட்டுகளிலும் "இன்" எனும் ஐந்தாம் வேற்றுமை தொக்கி (மறைந்து) உள்ளது.

விளக்கம்:
ஆடு+இன்+குட்டி = ஆட்டின் குட்டி / ஆட்டுக்குட்டி; தாய்+இன்+மடி = தாயின் மடி / தாய்மடி; யானை+இன்+தந்தம் = யானையின் தந்தம் / யானைத்தந்தம்.

(2) 3.1 பகுபத வகைகள்
பகுபதங்கள் அறுவகைப் பெயர்களையும் காலங் காட்டும் இருவகை வினைகளையும் உள்ளடக்கியவை என்று நன்னூல் கூறுகிறது:

பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே - நன்னூல் 132.

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

1 Responses So Far:

sabeer.abushahruk said...

புரிகிறது.
நன்றி வாத்யாரே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு