Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? - பகுதி - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2015 | , , ,


கடந்த வாரத்தில்  அழைப்புப் பணி  தொடர்பாக,  அண்டைவீட்டாரோடு  நாம் பேணவேண்டிய சில கடமைகளைப் பார்த்தோம். இப்போது நமது வீட்டை விட்டு சற்று வெளியே வந்து நம்மைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் சமுதாயத்தையும்  நோக்குவோம். ஒரு அழைப்புப் பணியாளர் தனது சொந்த ஒழுக்கங்களைப் பேணுவதும் தனது அண்டைவீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எந்த அளவுக்கு இதயங்களை வெற்றி கொண்டு இஸ்லாத்தில் இணைக்குமோ அந்தச் செயல் எவ்வாறு இறைவனுக்கு இனிக்குமோ, அதே அளவு இன்னும் அதைவிட ஒரு படி மேலாக, ஒரு அழைப்பாளன் தனது சமுதாயத்தோடும் தான் இணைந்து வாழும் சமூகத்தோடும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதிலும்கூட இழைந்து   ஊடுருவி இருக்கிறது.   

நுமான் இப்னு பஷீர் ( ரலி ) அவர்கள் புகாரியில் ஒரு அற்புதமான  நபி மொழியை அறிவிக்கிறார்கள்.

“ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவர்  மற்றவரைச் சார்ந்து நிற்பதிலும் இறை நம்பிக்கையாளர்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். அந்த உடலின் ஓர் உறுப்புக்கு நோய்கண்டுவிட்டால் அதனால் உடலின் மற்ற உறுப்புகளும் இருப்புக் கொள்ளாமல் அதன் துன்பத்தில் பங்கு கொள்கின்றன. ஓர்  இறை நம்பிக்கையாளன் அதைப் போன்றே  பிறரின் துயர் கண்டு வாடவேண்டும்.  “ – என்பதே அந்தப் பொன்மொழி .  

பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்ன அற்புதமான  உவமைகளில் ஒன்றாக இந்த நபி மொழி கருதப்படுகிறது. சமுதாயத்தையும் சமூகத்தையும் ஒரு முழு உடலுக்கு ஒப்பிட்டார்கள். காலில் முள் குத்தினால் வாய் ஆ! என அலறுகிறது; கை அந்த இடத்தைத் தடவி விடுகிறது; கண்கள் வலி தாங்காமல் கண்ணீரைச் சொரிகின்றன; மூளை அதற்கான  மருந்தைத் தேடுகிறது.  காலில் தானே முள் குத்தியது! அதனால் மற்ற உறுப்புகள் ஏன் பதற வேண்டும்? பதைக்கவேண்டும்? 

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று நம்மில் பலர் இருக்கிறோம். விஷமுள்ள  கொடிய பாம்பு , அடுத்த வீட்டுக்குள் புகுந்துவிட்டால் அது நமது வீட்டுக்குள்ளும் வர எவ்வளவு நேரம் ஆகும்? தீயின் துளி  ஒன்று அடுத்த வீட்டுக் கூரையில் பட்டுவிட்டால் தொடர்ந்து நமது வீட்டுக்கும் பற்றிப் பரவி  எரிய  பல ஆண்டுகளா  ஆகும்? ஆகவே ஒருவருக்கு ஒன்று சம்பவித்தால் அது அவரை மட்டுமே  சார்ந்தது அவரை மட்டுமே  பாதிக்கக் கூடியது  என்று விட்டுவிட இயலாது. ஒரு உடல் உறுப்பைப் போல செயல்பட்டு ஒருவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அடுத்தவர்களும் அந்தத் துன்பத்தைக் களைய  ஒன்றிணைந்து   நடவடிக்கைகளை எடுப்பது நம்மையும் அழிவிலிருந்து காப்பாற்றும் என்பது நாம் படிக்காமலேயே கற்றுக் கொள்ள  வேண்டிய பாலபாடமாகும். இந்தக் கருத்தைதான் பெருமானார் (ஸல்) அவர்களின் அமுதமொழி நமக்கு சொல்லித்தருகிறது. அழைப்புப் பணியாளரும் இதை   அடிப்படையாகக் கற்றுக் கொள்ள வேண்டிய  கருத்தாகும்.   

ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அது ஒரு கதை மட்டுமல்ல நல்ல ஒரு பாடமும் கூட. 

ஒரு விவசாயி வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்தது. அதை ஒழிப்பதற்காக விவசாயி ஒரு எலிப்பொறியை வாங்கி வந்து தனது மனைவி இடம் காண்பித்து இன்று இரவு இந்த எலிப் பொறிக்குள் ஒரு சுட்ட கருவாட்டுத்துண்டை வைத்துவிடு! தொல்லை தரும்  எலி வந்து சிக்கிக் கொள்ளும் என்று சொன்னார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எலி மிகவும் கவலையோடு அந்த வீட்டில் இருந்த சேவலிடம் போய் என் உயிருக்கு ஆபத்து!  இதோ!  என்னைப் பிடிக்க எலிப்பொறி வந்திருக்கிறது என்று சொன்னது. ஆனால் சேவல் அதைப் பற்றி எனக்கென்ன கவலை? நீதான் கவலைப் பட வேண்டும் என்று எலி இடம் சொன்னது. நேராக எலி அங்கிருந்த  வான்கோழியிடம் போய்  அதேபோல் புலம்பியது. வான்கோழியும் அது உன்பிரச்னை எனக்குக் கவலை இல்லை என்றது. பிறகு நேராக அந்த வீட்டில் வளர்ந்த      செம்மறியாட்டிடமும்  போய் எலி  தனது கவலையைத் தெரிவித்தது. கவலையில்லாமல் தலையை ஆட்டிய ஆடும் போடா!  போய் உன் உயிரைக் காப்பாற்றிக் கொள் எனக்கு எவ்விதக் கவலையும் இல்லை என்று சொல்லி எலியை விரட்டிவிட்டது. 

அன்று இரவு எலிப்பொறி தயாராக்கப்பட்டு வைக்கப்பட்டுவிட்டது. நடு நிசி! எலிப் பொறி இயங்கும் சப்தம் கேட்டது. உடனே விழித்த விவசாயியின் மனைவி எலி மாட்டிக் கொண்டது என்ற சந்தோஷத்தில் எலிப்பொறியை நோக்கிப் போய் இருட்டிலேயே அதில் கையை வைத்தாள். உண்மையில் பொறியில் மாட்டியது எலியல்ல ஒரு விஷப்  பாம்பு! அந்தப் பாம்பு  அந்த வீட்டுக்காரியை கடித்துவிட்டது. விஷம் தலைக்கேறி விட்டது. வீட்டுக்காரியை வைத்தியரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். வைத்தியர் பாம்பின் விஷத்தை இறக்கி, வீட்டுக்காரியை காப்பாற்றிவிட்டு அந்த அம்மையார்  மிகவும் களைப்பாக இருந்தததால் அவருக்கு ஒரு கோழியை  அறுத்து சூப் வைத்துக் கொடுக்கச் சொன்னார். 

தனது அன்பு மனைவிக்கு முன் விவசாயிக்கு கோழி பெரிதாகப் படவில்லை. எந்தக் கோழி எலிப்பொறியால்  தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றதோ அந்தக் கோழி இப்போது அடுப்பில் சூப்பாக கொதித்தது. அடுத்தநாள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட சொந்தக்காரர்கள் உடல்நலம் விசாரிப்பதற்காக திரண்டு வந்தார்கள். அவர்களுக்கு விருந்து வைக்க வீட்டிலிருந்த வான்கோழியும் அறுத்து சமைக்கப்பட்டது. வீட்டுக்காரி பெரிய ஆபத்திலிருந்து மீண்டு  வந்திருக்கிறாள் ஆகவே ஆட்டை அறுத்து ஏழைகளுக்குக் கொடுத்துவிடு என்று ஒரு பெரியவர் சொன்னதால் செம்மறி  ஆடும் அறுத்துப் பங்கிடப்பட்டது.  வீட்டின் ஒரு ஓரத்த்தில் எலிப் பொறி கிடந்தது. வீட்டுக்காரர் உன்னால்தானே இவ்வளவும் என்று   என்று முனங்கிக் கொண்டே அதைத்தூக்கிப் பரணியின் மேல் போட்டார். எலி மட்டும்  எப்போதும்போல சுதந்திரமாக  ஓடி விளையாடியது. 

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் ஆபத்தின் அடையாளங்கள் வரும்போது அது  நமக்கு வராது என்று நாமே  நினைப்பதும் கூடாது; நமக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று விலகவும் கூடாது. அதேபோலத்தான் சமூக , சமுதாய வாழ்வும். 

ஊருக்குள் ஓடி வரும் வெள்ளம் ஆட்களின் ஐடிகார்டைப் பார்த்து இழுத்துச் சென்று அழிப்பதில்லை. அழிவையும் இழிவையும் அனைவரும் ஒன்றுகூடித்தான் தடுக்க வேண்டும். எனக்கென்ன என்று இருப்பவர்களையே கேடுகள் முதலில் சூழும். 

“மனிதர்கள் சீப்பின் பற்களைப் போன்றவர்கள் ; மனித இனத்தோர் அனைவரும் ஒரே இறைவனின் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் “ என்ற  நபி     (ஸல்) அவர்களின் பொன்மொழி சாதி மத இனம் கடந்து  மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவிக் கொள்ளவேண்டுமென்று நமக்கு எடுத்துச் சொல்கிறது.     

நாட்டில் திடீரென்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்தப் பேரிடர்கள் குலம் பார்த்து குணம் பார்த்து வருவதில்லை.  அறிவியல் கணிப்புகளை மீறி இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு விடுகின்றன. அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும்  வெள்ளம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இப்படிப் பட்ட  நிலைமைகள் ஏற்படும்போது அத்தகைய இடர்களால் இடரப்பட்டு இடருறும்  மக்களுக்கு உதவிக்கரம் நீட்டப்படுவதில் முதல் கரம் ஒரு அழைப்புப் பணியாளரின் கரமாக இருக்கவேண்டும். இதயங்களை இஸ்லாம் வெல்லவேண்டுமானால்  அழைப்புப் பணியாளரின் கரங்களில்  ஏந்தும் அன்புநிறைந்த வாளால் மட்டுமே  இயலும். . 

தேவையில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று சொல்வார்கள். ( A FRIEND  IN NEED IS A  FRIEND INDEED )

“உதவி வரைத்தன்று உதவி , உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்று திருக்குறளும் சொல்கிறது. துன்பத்திலும் துயரத்திலும் இருப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பண்பு ஒரு அழைப்பாளனின் அடிப்படை குணமாக இருக்க வேண்டும். உதவி தேவைப் படாத நேரங்களில் செய்யப்படும் உதவிகள் பயனற்றவையாக இருக்கும். அந்த வகையில் இயற்கை பேரிடர் , உயிர்காக்கும் அரிய வகை இரத்த தானம், மருத்துவ உதவிகள் ஆகியவை ஒரு அழைப்பாளரின் சமூக சேவைக்கான பட்டியலில் முதலிடம் பெற வேண்டும். 

மனிதர்களுக்கு மற்ற மனிதர்களின் உதவிகள் தேவைப்படும் இடங்கள் என்று நாம் சில இடங்களைத் தேர்வு செய்தால் அவற்றுள் மருத்துவ மனை, சிறைச்சாலை, காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள்  ஆகியவை நிச்சயம் இடம் பெறும். காரணம் இங்கெல்லாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பாராதவகையில் மனித உதவிகள் அவசியம் தேவைப்படும். 

சாலைவிபத்துக்களில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்பவர்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அனாதைகள்தான். சில நேரங்களில் அவர்களால் தங்களின் முகவரியைக் கூட  சொல்ல இயலாத நினைவிழப்பு, கோமா போன்ற சிக்கல்களில்  அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இதே மாதிரி நிலைகள் மனிதர்களுக்கு காவல் நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும்கூட ஏற்பட்டு விடுகின்றன.  அப்பாவிகள் சிலர் சந்தேக வழக்குகளில் கைது செய்யப்பட்டு தங்களுடைய நிலைமைகளை விளக்க சந்தர்ப்பமின்றி தடுத்துவைக்கப்படுகின்றனர். நிலுவையில் உள்ள பொய்வழக்குகள் அவர்கள் மீது புனையப்படுவதையும் நாம் அறிந்து இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலைகளில் இன மத பேதமின்றி மனிதர்கள் அனைவரையும் தேடிப்போய்  உதவுவதில் அழைப்புப்பணியாளருக்கு ஆயிரம் வேலைகள் உள்ளன.  

அண்மையில் நாம் நேரடியாக அறிந்து மகிழ்ந்த ஒரு சம்பவம் என்னவென்றால் கடலூர் மாவட்டத்தில் கணக்கின்றி பெய்த மழையும் அதைத்தொடர்ந்த காற்றும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன. அத்தகைய சூழ்நிலையில் அந்த மாவட்டத்தில் ஒரு முக்கியமான முஸ்லிம்களின் கேந்திரமான பரங்கிப் பேட்டை என்ற ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிவாசல்களைச் சேர்ந்த திருமண மண்டபங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களில் தங்க வைத்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உணவுத் தேவைகளையும் சிறப்பாக செய்து கவனித்துக் கொண்டார்கள். 

ஏற்கனவே  2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலும் பல மீனவக் குடியிருப்புகளை கூட்டத்தோடு காப்பாற்றி அழைத்து வந்து இவ்வாறு காப்பாற்றித் தொண்டு செய்தார்கள். இவர்களின் இப்படிப்பட்ட  மனிதாபிமான நடவடிக்கைகள் மத, சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு என்பது ஒருபக்கமிருந்தாலும் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிற அனைத்து மக்களுக்குமான மனிதாபிமானம்தான்  இங்கே புகழ்மொழியாக கோலோச்சியது. சுனாமிக்குப் பின் கருணையுள்ளம் கொண்ட முஸ்லிம்களைக் கண்டுவிட்டு தங்களின் வாழ்வுமுறையாக  இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த ஊரில் ஏராளம். 

முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் , மனித உயிர்களை அழிப்பவர்கள் என்று மேல்நாட்டார் மற்றும் எதிர்மறை ஊடகங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் , மற்றவர்களின் துயர் துடைப்பதற்காக  அணிகளாகத் திரண்டு அனைத்து உயிர்களையும் அரவணைத்துக் காக்கும்  செயல்களை அரங்கேற்றுவது எவ்வளவு பெரிய மரியாதையை இந்த மார்க்கத்துக்குப் பெற்றுத்தரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

நமது இத்தகைய செயல்களும் அழைப்புப்பணியின் வகைகளில் அடங்குவதுதான். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறையப் பேசலாம். 
தொடரும்...
இப்ராஹீம் அன்சாரி

24 Responses So Far:

Unknown said...

//இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறையப் பேசலாம்.//

......... ஆக, 'அல்மஹா'வின் 'தஅவா' வகுப்பிற்காக நிறையத் தயாரிப்பு செய்திருக்கிறீர்கள்; செய்துகொண்டும் இருக்கிறீர்கள். வாழ்த்துகின்றேன்.

Ebrahim Ansari said...

அன்பின் காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆமாம். நீங்கள் தந்த பணி. அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். அதிலேயே லயித்துவிட்டேன். வகுப்பு நடத்துவதற்காக தயார் செய்வதை எனது எண்ண ஓட்டங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது மனுநீதி தொடர் ஒரு உணர்ச்சிகளின் கொந்தளிப்பு என்றும் , மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு ஒரு கோபத்தின் வெளிப்பாடு என்றும் இந்த அழைப்புப்பனித் தொடர் ஒரு தெளிந்த நீரோடை என்றும் நான் கருதுகிறேன்.

உங்களுடைய துஆ இந்தத் தொடரையும் வெற்றியாக்கும் காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எனது மனுநீதி தொடர் ஒரு உணர்ச்சிகளின் கொந்தளிப்பு என்றும் , மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு ஒரு கோபத்தின் வெளிப்பாடு என்றும் இந்த அழைப்புப்பனித் தொடர் ஒரு தெளிந்த நீரோடை என்றும் நான் கருதுகிறேன்.

உங்களுடைய துஆ இந்தத் தொடரையும் வெற்றியாக்கும் காக்கா. //

இன்ஷா அல்லாஹ் !

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும் வழங்கி மென்மேலும் எழுத்துகள் சிறக்க எங்களின் துஆவும் இணைந்திருக்கும் !

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வாள்வீச்சில் வளர்ந்தது இஸ்லாம் என்று வாய்கூசாமல் பொய் பிரச்சாரம் செய்யும் விஷமிகள் வாசிக்க வேண்டும் இந்தப் பதிவை...அம்பல்ல, அன்பினால் வளர்ந்தது எம் மார்க்கம் என்று உணர்ந்து திருந்துவர்.

அண்டை நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் அரேபியரின் மார்க்கம் என்று பிதற்றுபவர்கள் வாசிக்க வேண்டும் இப்பதிவை... நாட்டோடு மட்டுமல்ல அண்டை வீட்டாரோடும் அன்பு செய்யச் சொல்வது எம் மார்க்கம் என்றுணர்ந்து மறையோன் முன் மண்டியிடுவர்.

வெட்டுகுத்து வெடிவைப்புதான் இஸ்லாம் என்று உளறும் வீணர்கள் வாசிக்க வேண்டும் இந்தப் பதிவை... மகாத்மாவுக்கு முன்னரே அவசியமான இடங்களில் அகிம்சை போதித்தது எம்மார்க்கம் என்று புரிந்து கொள்வர்; நம்மோடு இணைந்து கொள்வர்!

விடலை தஃவாவில் வீம்பிருக்கும் வேகமிருக்கும் ஆனால் தங்களைப்போன்ற சாந்தமானவர்களின் போதனைகளில்தான் விவேகமிருக்கும் ஆக்கபூர்வமான அழைப்பு இருக்கும் என்பதற்கு இந்நூல் ஆதாரமாகத் திகழட்டும்.

வாழ்க தங்கள் எண்ணம்; வளர்க தங்கள் பணி!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

//எனது மனுநீதி தொடர் ஒரு உணர்ச்சிகளின் கொந்தளிப்பு என்றும் , மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு ஒரு கோபத்தின் வெளிப்பாடு என்றும் இந்த அழைப்புப்பனித் தொடர் ஒரு தெளிந்த நீரோடை என்றும் நான் கருதுகிறேன்.

உங்களுடைய துஆ இந்தத் தொடரையும் வெற்றியாக்கும் காக்கா. //

இன்ஷா அல்லாஹ் !

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும் வழங்கி மென்மேலும் எழுத்துகள் சிறக்க எங்களின் துஆவும் இணைந்திருக்கும்

அதிரை.மெய்சா said...

உங்கள் கட்டுரையில் ஆணித்தரமான பல விளக்கங்களைகண்டு வியந்து போனேன்.

உதாரணங்களும் உவமைகளும் உயிர் நாடிபோல் கட்டுரைக்கு வலு சேர்த்துள்ளது. அருமை

தொடருங்கள் காக்கா

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம்.

// ஆக்கபூர்வமான அழைப்பு இருக்கும் // இன்ஷா அல்லாஹ் இருக்கும்.

அடிப்படையில் முழுதாக அறியாமல் சில கருத்து பேதங்கள் கொண்டிருப்போருக்கு அன்போடு சில விளக்கங்களை சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே இந்தத் தொடர்.

குறிப்பாக ஒரு அன்புச சகோதரர்- இணைய தளங்களில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை- அராபியக் காடையர்கள் என்றெல்லாம் தொடர்ந்து வசை மொழி பேசி வருகிறார்.

அவர் ஒரு உதாரணம்தான். அத்தகைய எண்ணம் உள்ளவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கிறார்கள்.

இந்தத் தொடர் அத்தகையோரின் தவறான அபிப்பிராயங்களைக் களைய உதவி செய்து மக்களின் மத்தியில் சகோதரப் புரிந்துணர்வை வளர்க்க உதவினால் அதுவே பெரிய நன்மையாக இருக்கும்.

காரியமாற்றுவது நமது செயல் கூலி தருவது படைத்தவனே.

தங்களின் தொடர்ந்த அன்பான ஆதரவுக்கு ஜசாக்கல்லாஹ் ஹைர்.

Ebrahim Ansari said...

தம்பி அபு இப்ராஹீம் !

அழகான தலைப்புத் தோரணம் கட்டி இந்த அத்தியாயத்தை அலங்கரித்து இருக்கிறீர்கள்.

ஜசாக்கல்லாஹ் ஹைர்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி - சக பதிவாளர் மெய்ஷா அவர்களுக்கு,

அனைத்து அத்தியாயங்களையும் படித்து கருத்திடும் தங்களின் கனிவுக்கு நன்றி.

Ebrahim Ansari said...

பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் கட்டுரையின் இந்தப் பகுதியை சுட்டி , தனது கருத்தைப் பதிவு செய்யும்படிப் பணித்து இருக்கிறார்கள்.

//சாலைவிபத்துக்களில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்பவர்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அனாதைகள்தான்.//

ஒரு முறை திருச்சியிலிருந்து எங்களுடைய பேரனை இன்னோவா காரில் அழைத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தோம். என்னுடன் எங்கள் பேரனும் , மனைவியும் இருந்தார்கள். இரவு பனிரெண்டு மணியளவில் பாப்பா நாடு அருகே வரும்போது காரில் பெல்ட் அறுந்து பிரேக் டவுன் ஆகிவிட்டது. அடுத்த இரண்டுநாள் கழித்து பெருநாள். சென்னையிலிருந்து நமது ஊரை நோக்கி நிறைய கார்கள் வந்து கொண்டிருந்தன. நாங்கள் சாலையில் நின்று கொண்டிருந்தோம்.

நான் கலர் கைலி கட்டி இருந்தேன். எனது மனைவி துப்பட்டி போட்டு இருந்தார்கள். நமது ஊர் கார்களில் ஒன்று கூட நின்று நடுரோட்டில் நின்ற எங்களிடம் என்ன எது என்று விசாரிக்கவில்லை. எங்களைக் கண்டதும் விரைந்து சென்றன.

ஆனால்

ஒரு சின்னகார் எங்களை நோக்கி வந்தது. விபரங்களை விசாரித்துவிட்டு அவரே அருகில் சில ஆட்களை அழைத்து எங்களது காரை ஒரு ஓரமாகத் தள்ளி நிற்க வைத்து உதவி செய்தார்.

அத்துடன், " நான் பட்டுக் கோட்டைக்குப் போகிறேன். வாருங்கள் நான் அழைத்துப் போகிறேன். நோன்பு நேரம் நீங்கள் நோன்பு வைக்க நேரமாகிவிட்டது " என்றார். நாங்கள் மறுத்தும் எங்களை விடவில்லை.

சரி என்று ஏறி பட்டுக் கோட்டை வரை வந்தோம். அவருக்கு நன்றி சொல்லி இறங்க எத்தனித்த போது இறங்க விடாமல் அதிரைக்கு எங்கள் வீடுவரை எங்களை அழைத்து வந்தார். அவருடைய பெயர் திரு. பிரபாகர். எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகரா? என்று கேட்டேன். இல்லை. நான் வேறு பிரபாகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். அதிரையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர் என்று சொன்னார்.

வீட்டுக் குள் அழைத்து தேநீர் அருந்தி விட்டுப் போகலாம் என்ற போதும் நீங்கள் சஹர் வைக்க நேரமாகிவிட்டது அதைப் பாருங்கள் என்று பெருந்தன்மையாக சொல்லி விடை பெற்றார்.

மனிதாபிமானத்துக்கு மதமில்லை. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் மனமில்லை.

இத்தனைக்கும் நம்மில் பலர் மனிதாபிமானம் பற்றி பல திருமறை வசனங்களை ஓதுகிறார்கள்; ஹதீஸ்களைப் படிக்கிறார்கள். வாராவாரம் ஜூம் ஆ பிரசங்கங்கள் கேட்கிறார்கள். ஆனால் செயலில் காட்டுவது இல்லை. மார்க்க வழிகாட்டுதல்களை பெருமையடித்துப் பேசுவது மட்டும் உதவாது. அதை செயலிலும் கொண்டுவரவேண்டும்..

Ebrahim Ansari said...

அன்புள்ள மச்சான்!

நான் கடந்த மூன்று அத்தியாயங்களில் எழுதியதை ஒரே உண்மை சம்பவத்தில் சாறுபிழிந்து கொடுத்துவிட்டீர்கள். நன்றி.

sheikdawoodmohamedfarook said...

மேல்கண்டஎன்கருத்தின்வழிநான் கூ றுவது/ மாற்றுமதத்தினர் திருக்குர்ஆன் , ஹதிஸ்களில்சொன்னதைதெரிந்தோதெரியாமலோ கடைபிடிக்கிறார்கள். மனிதகுணங்களை சார்ந்தஅன்பும்பரிவும்அவர்களிடம் இ ருக்கிறது.

crown said...

அஸ்ஸலாமுலைக்கும். காக்கா!ஒரு எலிப்பொறியை வைத்தே 'புரியவேண்டியவர்களுக்கு பொறிவைத்து,சுயனலம் கேடில் முடியும் என்பதை ஒரு சிறு "எலியை கதையாக "எளி"தாக விளக்க உங்களால் தான் முடியும் , மாசா அல்லாஹ்!.

crown said...


ஊருக்குள் ஓடி வரும் வெள்ளம் ஆட்களின் ஐடிகார்டைப் பார்த்து இழுத்துச் சென்று அழிப்பதில்லை. அழிவையும் இழிவையும் அனைவரும் ஒன்றுகூடித்தான் தடுக்க வேண்டும். எனக்கென்ன என்று இருப்பவர்களையே கேடுகள் முதலில் சூழும்.
----------------------------------------------------------------------
வாய்விட்டு சிரித்தேன்,குசும்பு! இருந்தாலும் நல்ல குட்டு".

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ் சலாம் தம்பி கிரவுன்.

மணிமுடி இல்லாத மன்னன் = பயனில்லை.

கிரவுனின் கருத்து இல்லாத கட்டுரை கருமணி இல்லாத கழுத்து.

crown said...

முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் , மனித உயிர்களை அழிப்பவர்கள் என்று மேல்நாட்டார் மற்றும் எதிர்மறை ஊடகங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் , மற்றவர்களின் துயர் துடைப்பதற்காக அணிகளாகத் திரண்டு அனைத்து உயிர்களையும் அரவணைத்துக் காக்கும் செயல்களை அரங்கேற்றுவது எவ்வளவு பெரிய மரியாதையை இந்த மார்க்கத்துக்குப் பெற்றுத்தரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
கட்டுரைக்கு மகுட வரிகள்! நிஜமான வழிமுறை!அருமைகாக்கா!தொடருங்கள். உங்கள் பாணி தாவாவை!

Ebrahim Ansari said...

மகுட வரிகள் யாவை என்று மகுடத்துக்குத்தான் தெரியும். காரணம் அது ஒரு நிறைகுடம். ( உங்கள் பாணி)

sabeer.abushahruk said...

காக்கா/க்ரவ்ன்,

உரையாடல் நல்லாருக்கு. தொடர்ந்து பேசுங்களேன்.

Shameed said...

மகுட வரிகள் பற்றி மகுடத்துக்காரர் சொல்லும் போது மகுடிக்கு மயங்கும் பாம்பைப்போல் அனைவரும் மயங்கிவிடவேண்டி இருக்கின்றது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பாசமிகு இபுறாஹீம் அன்சாரி காக்கா, நலமா காக்கா? ஊரில் இருக்கும்போது உங்களை நான் சந்திக்க இயலாமல் போனது மிகவும் வருத்தமாகவே உள்ளது. இருப்பினும் இணையத்தின் மூலம் தங்களின் பதிவுகளை வாசிப்பதில் தவறியதில்லை.


நீண்ட இடைவேலைக்கு பிறகு அதிரைநிருபரில் கருத்திடுகிறேன்.

இந்த தொடரின் முந்தைய பதிவுகளுக்கே கருத்திட எண்ணி இருந்தேன், ஊரிலிருந்து வந்தவுடன் பணிச்சுமை அதிகம் காரணமாக கருத்திட முடியவில்லை.

அல்ஹம்துலில்லாஹ்.. "அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? " என்ற இந்த தொடரில் அருமையான, அவசியமான நினைவூட்டல்கள் காக்கா.. ஒவ்வொரு முஸ்லீமும் அழைப்பாளனாக இருக்க வேண்டும் என்பதை ஹதீஸ் மற்றும் சிறுகதை மூலம் சொல்லி நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரா காக்கா..

தொடர்ந்து எழுதுங்கள்.. உங்கள் பதிவுகளை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வாசித்து கருத்திடுகிறேன்.

உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மேலும் மார்க்க ஞானத்தையும் வல்லவன் ரஹ்மான் தந்தருள்வானாக.

மீண்டும் ஒரு முறை ஜஸக்கல்லாஹ் ஹைரா..

crown said...


மணிமுடி இல்லாத மன்னன் = பயனில்லை.

கிரவுனின் கருத்து இல்லாத கட்டுரை கருமணி இல்லாத கழுத்து.
------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.உங்கள் எழுத்து வெண்மணி!இருட்டு நேரத்திலும் ஒளிரும்.என்றும் மிளிரும்.இந்த கருமணி அத்துவிடக்கூடாது என்றுதானே(பொதுவில் தாலி)ஒவ்வொரு அத்தியாயதிலும் சமுதாயத்துக்கு அதன் மகத்துவம் சொல்லி விலக்கிகொண்டிருக்கிறீர்கள்!அது மதுவின் தீமையாக இருந்தாலும்,மானியக்கோரிக்கையாக இருந்தாலும் நம் உரிமை,அரசியல் என பல!வெறும் கழுத்தாக இருந்தாலும் பார்க்க பழகிவிடும்! நீங்கள் சொல்லும் கருத்தே நாளைய சமூகத்தின் கழுத்துக்கு வெற்றி மாலை! என் கருத்து வெற்றுமாலை!

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்

வ அலைக்குமுஸ் சலாம்.

தங்களை சந்திக்க இயலாதது குறித்து எனக்கும் மிகவும் வருத்தமே. உங்கள் வீட்டு வாசலுக்கு நான் வந்த போதும் நீங்கள் அன்று பார்த்து வெளியூர் சென்று இருந்ததும் அல்லாஹ்வின் நாட்டமில்லை என்றே நம்மை உணரவைத்தது .

இன்ஷா அல்லாஹ் து ஆச் செய்யுங்கள். வெகு விரைவில் இன்ஷா அல்லாஹ் நமது மதச் சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு நூல் வெளியிடத் தயாராக இருக்கிறது. அட்டைப்படத்தின் மாதிரியை நீங்களும் பார்த்து இருக்கலாம். நீங்கள் துபாய் சென்றுவிட்ட செய்தி தெரியாததால் உங்களுக்கு அனுப்பவில்லை. தங்களை ஊரிலேயே சந்தித்து நாம் அதுபற்றி விவாதிக்கலாம் என்று கருதியதே காரணம். கடந்த முறை மனுநீதி நூல் வெளியிடப்பட்டபோது தங்களின் அன்பான ஒத்துழைப்பை நான் நினைவுகூரத் தவறினால் நன்றி கொன்றவனாவேன்.

பணிகளுக்கிடையில் இயன்றால் கருத்திட்டு ஆலோசனைகளைப் பகிருங்கள்.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன் அவர்களுக்கு

வ அலைக்குமுஸ் சலாம்.

வார்த்தைகளின் வடிவமைப்பாளரே! வலம்புரி ஜானுக்குப் பின் வார்த்தைச் சித்தரே!

தங்களின் மணிமணியான கருத்துக்கள் என்னைப் போல கட்டுரைகளை எழுதுபவர்களுக்கும் தம்பி சபீர் அவர்களைப் போல கருத்தாழம் மிக்க கவிதைகளைப் படைப்போருக்கும் ஆர்வ ஒலி கொடுத்து ஒளி காட்டும் வெண்மணிகள் ஆகும்.

அவை கீழ வெண்மணி அல்ல; மேலான வெண்மணி.

மகுடத்தின் மணியோசை இல்லாவிட்டால் எங்களின் எழுத்தோசை எழும்பாது. உங்களின் ஓசைதான் எங்களைத் தட்டி எழுப்பும் தமிழோசை.
நீங்கள் இசையாகத் ( புகழ்ச்சியாக ) தருவது இன்னிசை மட்டுமல்ல; எங்களை இயக்கும் இசை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு