பல தரப்பட்ட சமுதாய மக்கள் வாழும் ஒரு நாட்டில் அழைப்புப் பணி செய்கிறோம் என்று ஒரு அமைப்பையோ இயக்கத்தையோ வீரியமான முறையில் நடத்த தொடங்கினால் சில எதிர்விளைவுகளை நேர்கொள்ள நேரிடும். சில மாநிலங்களில் மதமாற்றத் தடைச்சட்டம் போட்டு வைத்திருக்கிறார்கள்; மதமாற்ற தடைச் சட்டத்தை நாடு முழுதும் கொண்டுவரவேண்டுமென்று பேசுகிறார்கள். ஒரு உத்வேகத்தில் இத்தகைய காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டு தங்களின் வாழ்வை இப்பணிக்காக அர்ப்பணிக்கும் பலரின் மீது வன்முறைச் செயல்களும் ஏவிவிடப்படுகின்றன; அத்தகையோர் மீது பொய் வழக்குகள் புனையப்படுகின்றன; அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிரட்டப்படுகின்றனர். அதற்காக நமது கடமைகளில் இருந்தும் விலகிட இயலாது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நாம் இந்தப்பணியை தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால் , நமது அன்றாட நடவடிக்கைகளில் நம்மை நமது மார்க்கம் கற்றுத் தந்த யாவரையும் நேசிக்கும் அன்புடன் அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு சிறந்த முறையாகும். பலமுறை நாம் இந்த விஷயத்தில் தவறிவிடுகிறோம் என்பதே நாம் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.
நமது நற்பணியை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்விக்கு எல்லா நல்ல காரியங்களையும் தனது வீட்டிலிருந்தே தொடங்கட்டும் என்ற கட்டளையை பதிலாக அளிக்கலாம். அதற்கு அடுத்து எங்கிருந்து தொடர்வது என்ற கேள்விக்கு நமது அண்டைவீட்டிருந்து என்று பதிலளிப்பதில் நமக்குத் தயக்கம் இருக்கக் கூடாது.
அண்டை வீட்டாருடன் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி அருள்மறையும் நபி மொழியும் நம்மை எவ்வாறெல்லாம் வழிநடத்துகின்றன என்பதை அறியலாம்.
“உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் (அன்புடன்) நன்றி செய்யுங்கள். “ (திருமறை அல்குர்அன் 4:36)
மேற்கண்ட இறைவசனத்தில்
"அண்டை வீட்டிலுள்ள உறவினர்' என்பது முஸ்லிமான அண்டை வீட்டார் அல்லது உறவினரான அண்டை வீட்டாரைக் குறிக்கும். "அந்நிய அண்டை வீட்டார்' என்பது முஸ்லிமல்லாத அல்லது உறவினரல்லாத அண்டை வீட்டுக்காரரைக் குறிக்கும். அண்டை வீடு என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறதே தவிர அண்டைவீட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் மட்டும்தான் என்று பாகுபடுத்திக் குறிப்பிடவில்லை. தனது இல்லத்திற்கு அருகில் இருப்பவருக்கு இன மத மொழி வேறுபாடின்றி அண்டை வீட்டார் என்ற உரிமையை இஸ்லாம் கொடுத்து இருக்கிறது. அவர் நமக்கு உறவினராகவோ, முஸ்லிமாகவோத்தான் இருந்தாகவேண்டுமென்ற கட்டுப்பாடு இல்லை. அண்டை வீட்டாருக்கான இந்த கெளரவம் மனித நேயமிக்க இஸ்லாத்தின் அடிப்படையாகும். இதை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம் என்பதே நமது முன் உள்ள கேள்வி.
பெருமானார் நபி (ஸல்) அவர்களும் அண்டை வீட்டாரைப் பற்றி அவர்களோடு நமக்கு இரத்த பந்தம் உள்ளதா, எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் பொதுப்படையாகத்தான் அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாரிசுரிமையைக் கடமையாக்கி விடுவாரோ என்று நான் எண்ணுமளவு அண்டை வீட்டாரைப் பற்றி ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு உபதேசித்துக்கொண்டே இருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இம்மகத்தான மார்க்கத்தின் பிரகாசத்தை தனது இயத்தில் ஏந்திக் கொண்டிருக்கும் உண்மை முஸ்லிம், தனது அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையுடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அவருக்கு எதேனும் தேவைப்பட்டால் அதைக் கொடுக்க வேண்டும் என்பதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "அபூதர்ரே! நீர் ஆணம் சமைத்தால் அதில் கொஞ்சம் தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்ளும். உமது அண்டை வீட்டாரையும் விசாரித்துக் கொள்ளும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில், "நீர் ஆணம் சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக் கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரை கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
தனது அண்டை வீட்டார் வறுமையிலும் சிரமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும், வசதியுமாக ஆடம்பரத்துடன் இருப்பதை உண்மை முஸ்லிமின் மனசாட்சி ஒப்புக் கொள்ளாது. எப்படி ஒப்புக் கொள்ளும்? அவரது அடிமனதில் அண்டை வீட்டாருடன் இனிய நேசத்தையல்லவா இஸ்லாம் எற்படுத்தியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறை விசுவாசியாக இருக்க மாட்டார்.'' (முஸ்னத் அபூ யஃலா)
மேலும் கூறினார்கள்: "தனது அண்டை வீட்டார் பசித்திருப்பது தெரிந்தும் தான் மட்டும் வயிறு நிரம்ப உண்டு இரவு கழிப்பவர் என்னை விசுவாசித்தவராக மாட்டார்.'' (முஸ்னத் அல் பஸ்ஸப்ர்)
அழைப்புப்பணி என்கிற அல்லாஹ் விதித்த கடமைச் சுமையை தங்களது தலையில் தாங்கி நிற்கும் முஸ்லிம்களின் கடமையுணர்வும் பின்பற்றுதலும் அண்டைவீட்டார் தொடர்பான தவிர்க்கக முடியாத தன்மைகளாகும். அண்டை வீட்டாரை அரவணைக்கும் போக்கு நமது அகங்களை முற்றுகை இடுமளவுக்கு நமது மனங்கள் விசாலப்பட்டால்தான் அதிலிருந்து ஏற்படும் இஸ்லாமியப் பிரகாசம், இஸ்லாத்தை நோக்கி இதயங்களைத் திரட்டி வரும்.
அண்டைவீட்டாருடன் நாம் நடந்துகொள்ளும் முறைகள் யாவை என்று பல்வேறு திருமறையின் வசனங்கள் மற்றும் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் நமக்கு போதித்துள்ளவை யாவை என்று நாமே ஒரு பட்டியலைப் போட்டுப் பார்த்து நம்மை ஒருவித சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். .
- உதவி கேட்டால், உதவுங்கள்,
- கடன் கேட்டால், கொடுங்கள்,.
- துயர வேளைகளில் நிவாரணம் அளியுங்கள்,
- நோயுற்றால் நலம் விசாரியுங்கள்,
- மரணமுற்றால் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள்,
- நல்லவை நடந்தால் வாழ்த்து சொல்லுங்கள்,
- தீயவை நடந்தால் அனுதாபம் தெரிவியுங்கள்,
- அண்டை வீட்டாருக்கு காற்று கிட்டாதவாறு உங்கள் வீட்டு சுவரை அவர்கள் அனுமதியின்றி உயரமாக எழுப்பாதீர்கள்,
- தொல்லை தராதீர்கள்,
- அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள்.
- அண்டைவீட்டாருடைய வாசலில் உங்கள் வீட்டுக் குப்பைகளைக் கொட்டாதீர்கள்.
மேலே நாம் பட்டியலிட்டிருக்கும் அத்தனை உதவிகளும் உங்களுக்கு அண்டைவீட்டிலிருக்கும் அனைவருக்கும் தேவைப்படக்கூடியவைதான். அதேபோல் இத்தகைய உதவிகள் உங்களுக்கும், உங்களுடைய அண்டைவீட்டாரிடமிருந்தும் தேவைப்படவேண்டிய நிலைமைகளும் ஏற்படலாம்.
ஆனால் துரதிஷ்டவசமாக நாம், “ கிட்டே இருந்தால் முட்டப் பகை ” என்ற ஒரு பழமொழியை உருவாக்கி வைத்தது இருக்கிறோம். மேலும் இன்றைய மனிதர்களின் மனப்பான்மையே நம்முடைய பெருமைகளையும் டாம்பீகங்களையும் ஆடம்பரங்களையும் நமது சொந்தக் காரர்கள் மற்றும் அண்டைவீட்டுக்காரர்களிடம்தான் அதிகமாக தம்பட்டமடித்துக் காட்டிக் கொள்ள விரும்புகிறோம். அடுத்த வீட்டுக்காரர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் நம்மை பெரிய ஆளாக கருத வேண்டுமென்று நினைக்கிறோம். அதே போல அவர்களை நாம் நினைக்கத் தயங்குகிறோம்.
பெரும் நகரங்களில் நமக்குப் பக்கத்து வீட்டுக்கு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் குடி வந்தால் ஏதோ அவர்கள் நமது தலையின் மீது ஏறி வந்துவிட்டார்கள் என்று நினைக்கும் போக்கு இருக்கிறது. நமக்கே சொந்தமாக வாடகைக்கு விடும் அளவு வீடு வசதி இருந்தால் அதற்காக முஸ்லிம்கள் யாராவது வருவார்களா என்பதே நமது முதல் தேர்வாக இருக்கிறது. இதே நிலை மற்ற மத சகோதரர்கள் மத்தியிலும் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டாலும் அவர்களுக்கெல்லாம் அவ்வித மனப்பான்மை கூடாது என்ற போதனைகள் இல்லை. ஆனால் நமக்கு அனைவரையும் ஒன்றாகக் கருதும்படி தெளிவான போதனைகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் படைப்பில் பேதங்களைப் பார்க்கக் கூடாது என்பது நமக்கு விதிக்கப்பட்ட கட்டளை.
அவ்வாறான கட்டளைகள் நமக்கு கைவசம் இருக்கும்போது சமூக பேதங்களை வைத்து சாதி மதங்களை வைத்து மனிதர்களைப் பாகுபடுத்திடவும் அதைக் காரணமாக வைத்து மற்றவர்களை தனிமைப் படுத்தவும் ஒதுக்கிவைக்கவும் நமக்கு உரிமை இருக்கிறதா? அப்படி நாம் நடந்துகொண்டால் அது நமது இறைவனின் கட்டளைக்கு எதிர்மறையானதல்லவா? அழைப்புபணியை மனதில் நிறுத்தியாவது அடுத்த வீட்டாரை அன்புடன் அரவணைப்பது நமக்குக் கடமையல்லாவா?
பள்ளி கல்லூரி வகுப்புகளில் மற்ற மத சகோதரர்களுடன் ஒன்றாக உட்கார தயக்கம் காட்டுவதைத் தவிர்ப்பது , நாம் சாப்பிடும் உணவுவகைகளில் அவர்களுக்கும் அன்புடன் சிறிதளவு கொடுத்து சாப்பிடும் இய்லபுடையோராய் நமது குழந்தைகளை வளர்ப்பது , பள்ளி இடைவேளைகளில் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் அள்ளிப் போட்டு பகிர்ந்துகொள்வது ஆகிய பண்புகள் இள நெஞ்சங்களில் இஸ்லாம் பற்றிய பார்வையை விசாலமாக்கும். இதனால் உடனடிப் பயன் ஏற்படாவிடாழலும் காலப்போக்கில் இஸ்லாத்தை நோக்கிய பயணங்களை அத்தகைய குணங்கள் ஏற்படுத்தலாம். பெருமானார் ( ஸல்) அவர்கள் தாயிப் நகரத்தில் வானவர்களிடம் சொன்னதும் இத்தன்மை உடையதுதானே!
இன்று உலகில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் எது என்றால் இஸ்லாம்தான் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட தவறான புரிதல் ஏற்படத் தலையாய காரணம் உலகிலின் நவீன வளர்ச்சியை வகைப்படுத்திக் கொண்டு இணைந்து வாழாமல் நாம் ஒதுங்கி வாழ நினைப்பதுதான். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வீடு பார்த்துக் குடியேறுவது, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புதிய வீடு கட்ட விரும்புவது ஆகிய குணங்களைத் தவிர்த்து நம்மை உலகத்தோரிடமிருந்து தனிமைப் படுத்தி ஒதுக்கிக் கொள்ளாமல் எல்லோருடனும் இணைந்துவாழும் எண்ணத்தை வளர்ப்பது, இன்று இல்லாவிட்டாலும் நாளை இஸ்லாத்தை வளர்ப்பதற்கு உதவும்.
இந்திய மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது இருவகைப் பார்வைகள் இருக்கின்றன.
ஒன்று இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் ; இவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களால் எவ்வித ஆபத்தும் இல்லை.
ஆனால் இரண்டாவது வகையினர் இஸ்லாத்தைப் பற்றித தாங்களே தவறாக சிலவற்றைப் புரிந்துகொண்டு தங்களின் புர்ந்துணர்வின் அடிப்படையில் இஸ்லாத்தின் மீது தேவையற்ற களங்கங்களை சுமத்துபவர்கள்.
இந்த நிலைமைக்குக் காரணங்கள் யார்? நாம்தான்.
ஒன்று இஸ்லாத்தை நாம் சரியான முறையில் அவர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை- அறிமுகப்படுத்த நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைவிட்டு ஒதுங்கிப் போகிறோம்.சமூக வாழ்வில், அடுத்தடுத்த வீட்டினராய் முஸ்லிம்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்ந்தால்தால் இந்த வாய்ப்புகள் அதிகமாகும். அதுவே அழைப்புப் பணிக்கு விதையும் தூவும்.
இரண்டு, நம்முடைய தனிநபர் வாழ்வில் இஸ்லாமிய நெறிகளின்படி நாம் வாழ்ந்து அதன் வெற்றிகளை மற்ற மத சகோதரர்கள் அறியும் வண்ணம் நாம் நடந்துகொள்ளவில்லை. குடிக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்வதாக நாம் மார்தட்டிக் கொள்கிறோம்; வட்டித தொழிலை மார்க்கம் தடை செய்து இருக்கிறது என்று வாய்கிழியப் பேசுகிறோம். ஆனால் பெருநாள் தினங்களில் டாஸ்மார்க் கடைகளில் நல்ல வியாபாரம் நடக்கிறது என்ற செய்தியும், நம்மில் பலர் கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டு வாழ்வு நடத்துவதும் , நமக்கு மற்றவர்களிடம் மரியாதையை பெற்றுத் தருமா?
மூன்று, நமது சமூக கூட்டு வாழ்வை இஸ்லாமிய நெறிகளின்படி அனைவரையும் அரவணைக்கும் வகையில் அமைத்து வாழ்வதில்லை. நம்மில் சிலரையே உளவுத்துறை காவல்துறை அரசுத்துறை ஆகிய ஏதாவது வம்பில் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாமா ? என்று நாம் செயல்பட்டு அதற்காக நமது சக்திகளை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறோம். இந்த நிலையில் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? எப்படி நம்மைத் தேடி வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்க இயலும்?
முரசொலி அடியார் என்ற அப்துல்லா அடியார் அவர்களின் வரிகளைச் சொல்லி இந்த அத்தியாயத்தை நிறைவு செய்கிறேன்.
விதைகளை அழுத்தமாக விதைத்துவிடுங்கள் – அது அல்லாஹ்வின் விதை! . கரங்களாலோ ஆயுதங்களாலோ அகற்ற முடியாத விதை!
என்றோ ஒருநாள்
இறைமறுப்பாளர்கள் எனும் பாலைவனத்திலும் சோலைவனமாய் விரிகிற விதை அது.!
இப்ராஹீம் அன்சாரி
16 Responses So Far:
அழைப்பு பணிஏற்றுஇஸ்லாத்திற்க்குவருவோற்க்கு பழையஇஸ்லாமியர்கள்சகன்சோத்தில்சமத்துவ இடம்கொடுப்பார்களா?
Assalamu Alaikkum
Respected brother Mr. Ebrahim Ansari,
This part of the article series shows that "Humanity" and "Relationship" is primary before strictness in religious following. It needs maturity and broad mindedness to behave well with other human beings.
Jazakkallah khair
B. Ahamed Ameen from Dubai
Dear Thambi Ahmed Ameen,
Wa Alaikkumussalam.
//Humanity" and "Relationship" is primary before strictness in religious following. // EXACTLY.
Nice observation and comment. Jasakkallah hairan.
அன்புள்ள மச்சான் அவர்களுக்கு,
//அழைப்பு பணிஏற்றுஇஸ்லாத்திற்க்குவருவோற்க்கு பழையஇஸ்லாமியர்கள்சகன்சோத்தில்சமத்துவ இடம்கொடுப்பார்களா?//
அக்ரகாரங்கள் நிறைந்த அதிரையை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். நான் பொதுவாக எழுதுகிறேன். இத்தகைய அக்கிரஹாரங்கள் பல ஊர்களில் பரவலாக இருக்கின்றன. அவைகளைப் பற்றியும் தொடரின் போக்கில் அவர்களின் மனதில் படும்படி பண்போடும் அன்போடும் சுட்டிக் காட்டுவேன். இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
அற்புதமான, வாழைப்பழத்திலேற்றும் ஊசி போன்ற, பொறுப்பான, வெளிப்படையான, யதார்த்தமான, தீர்வுகளுடன் கூடிய பயான்.
அல்லாஹ் ஆத்திக் ஆந்பியா, காக்கா.
அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ் சலாம்.
//தீர்வுகளுடன் கூடிய// ஆமாம். தீர்வுகளை நோக்கிய வண்ணம் எழுதவேண்டுமென்பதே நோக்கம்.
வெறும் குறைகளை மட்டும் சொல்லி கையறு நிலையை காட்டாமல் வெறும் பெருமைகளை மட்டும் பேசி நல்ல விஷயங்களை நடைமுறைப் படுத்தாமல் பிரச்னைகளுக்கான வழிகளையும் தீர்வுகளையும் சொல்வதே இங்கு வைக்கப்படும் கருத்துக்களின் வெற்றியாக அமையும் என்பதே என் கருத்து.
இன்ஷா அல்லாஹ் .து ஆச் செய்ய வேண்டிநிற்கிறேன். .
அழைப்புப்பணி மதமாற்றம் ஆகுமா.?
சிறந்த தலைப்புடன் சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டுடன் அருமையான பதிவு. ஒவ்வொரு வரியிலும் உவமைகள் அழகு. உலகுக்குச்சொல்லவேண்டிய கருத்துக்கள் நிறைவு. சொல்லுங்கள் இன்னும் நிறைய சொல்லுங்கள். மக்களுக்கு எத்திவைப்பது மகத்தான பணியல்லவா.
தம்பி மெய்ஷா அவர்களுக்கு,
//சொல்லுங்கள் இன்னும் நிறைய சொல்லுங்கள். //
இன்ஷா அல்லாஹ் . சொல்ல நிறைய விஷயங்கள் உள்ள தலைப்பைத்தான் எடுத்து இருக்கிறோம். சொல்லலாம்.
//அழைப்புப் பணி மத மாற்றம் ஆகுமா?//
ஆகாது.
அஸ்ஸலாமுஅலைக்கும். அண்டை வீட்டாரிடம் காட்டவேண்டிய அன்பை பகிர்தலை பெருமானார்(ஸல்)சொன்னபடி அதை அழகாய் மேற்கோள் காட்டி எழுதிய அருமையான ஆக்கம்.தாவாவின் கருத்திலிருந்து தாவா' எழுதியிருக்கீங்க!அருமை !அந்த தாவா பணிசெய்பவர்களை தாயி"என அழைப்பது எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா? தாயை போல் அணைத்து அனைத்து மக்களிடம் எடுத்து செல்லும் உண்ணத பணியல்லவா? அண்டைவீட்டாரை சிலர் எதுக்கும் அண்டாதிருப்பதும்,சிலர் சண்டை வீடாக நினைப்பதும் சகோதரத்துவத்திற்கு வேட்டு வைக்கும் தன்மையாகும்.அண்டைவீட்டாரை பேணி நடந்தால் நன்மையாகும்.
மரியாதைக்குரிய அஹமது காக்கா , அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த அன்புச் சிறையில் என்னை அடைத்தது நீங்கள்தானே.
தம்பி கிரவுன்
வ அலைக்குமுஸ் சலாம்.
தங்களின் வார்த்தை விளையாட்டுக் கருத்து \க்களைப் பெரும் தகுதி பெற்ற பெருமைக்கு மகிழ்கிறேன்.
தம்பி கிரவுன்
வ அலைக்குமுஸ் சலாம்.
தங்களின் வார்த்தை விளையாட்டுக் கருத்து \க்களைப் பெரும் தகுதி பெற்ற பெருமைக்கு மகிழ்கிறேன்.
தம்பி கிரவுன்
வ அலைக்குமுஸ் சலாம்.
தங்களின் வார்த்தை விளையாட்டுக் கருத்து \க்களைப் பெரும் தகுதி பெற்ற பெருமைக்கு மகிழ்கிறேன்.
------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஒரு மேதை சாமானியனிடம் கூட பெருந்தன்மையாக இருப்பது நான் செய்த பாக்கியம்.
Jazakallahu khairan, kaka....
Jazakallahu khairan, kaka....
Post a Comment