Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயன் தரும் பன்மொழித் தொடர்பு - 1 22

அதிரைநிருபர் பதிப்பகம் | February 04, 2014 | ,

அது 1977 ஜூன் மாதம். நடு இரவு கழிந்து, சுமார் ஒரு மணி இருக்கும். பம்பாயிலிருந்து புறப்பட்டு, சஊதியின் ‘தஹ்ரான்’ விமான நிலையத்தில் வந்து சேர்ந்த எம்மை வரவேற்று, ‘அராம்கோ’ கேம்ப்புக்கு அழைத்துச் செல்ல, பம்பாய்க்காரர்கள் சிலர் வந்திருந்தார்கள். நாங்கள் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன் சஊதிக்கு வந்து, நல்ல நல்ல இடங்களைப் பிடித்திருந்த அவர்கள், இந்தியன் என்பதற்கான அடையாளமாக, இந்தியில் நலம் விசாரித்தார்கள். நான் அந்த உறக்க நேரத்திலும், இந்தியில் பதில் அளித்தேன்.

இந்தியின் முக்கியத்துவத்தை என் மூத்தவர்கள் என்னில் வித்திட்டிருந்ததால், SSLC வரை இந்தியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்து, இந்தியில் இரண்டு அரசுத் தேர்வுகளையும் எழுதி, முழு ஆண்டுத் தேர்வில் மூன்று மணி நேரமும் இந்திப் பரீட்சை எழுதிய KMHS மாணவன் நான் ஒருவன் மட்டுமே! மற்றவர்களெல்லாரும் கேள்விகளை அப்படியே விடைத்தாளில் எழுதி வைத்துவிட்டு, அரை மணி நேரத்தில் தேர்வுக் கூடத்தை விட்டு வெளிவந்து, என்னை ஒரு UFO வைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றதை நானும் கவனிக்கத் தவறவில்லை. அத்துணைத் தொடர்பு இந்தியுடன் எனக்கு! இனி, மீண்டும் சஊதிக்கு வருவோம். 

இரவு இரண்டு மணிக்கு ‘ஜுஅய்மா’ Aramco கேம்புக்கு வந்து சேர்ந்தோம். Camp House-keeping அலுவலகத்தில் பதிவு செய்து வந்து, எப்படியோ தூக்கம் வந்தது; தூங்கி விட்டேன். நான் கண் விழித்தபோது, எனக்குக் கீழிருந்த கட்டிலில் உறங்கியவர்கள் பணிக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். உறக்கத்திலிருந்து எழுந்து வெளியில் வந்தேன்; சூரியன் தன் வெம்மைக் கதிர்களை உச்ச கட்டத்தில் பாய்ச்சிக் கொண்டிருந்தான். பகல் பன்னிரண்டு மணியாயிருக்குமோ? என்னைத் தவிர வேறு யாருமே இல்லாதிருந்த அந்தத் தகிக்கும் வேளையில், எதிரில் ஒருவர் வந்தார். இந்திக்காரனாக இருக்குமோ?! “பாய் சாப் டைம் க்யா ஹய்?” என்று கேட்டேன். அவன், “சுபா சாடே சாத்” என்று பதில் தந்தான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, இயல்பாக உதிக்கும் ஆவல், என்னுள்ளும் உதித்தது. ‘யாராவது தமிழ்க்காரர்கள் வரமாட்டார்களா?’ இப்படி நினைத்துத் திரும்பிய என் காதில் சிலரின் தமிழ் உரையாடல் கேட்டது! அவ்வளவுதான். காதில் தேன் வந்து பாயும் என்பார்களே, அதற்கு மாறாக, தகிக்கும் அந்த வேளையில் தென்றல் வந்து பாய்ந்தது! அவர்கள் Saudi Catering என்ற இன்னொரு கம்பெனிப் பணியாளர்களாம். அந்தக் கேம்பின் துப்புரவு மற்றும் சாப்பாட்டின் ஒப்பந்தக் கம்பெனியின் பணியாளர்களாம். “என்னங்க இப்டி வெயிலடிக்குது?” என்று வியந்து கேட்ட எனக்கு, “இது ஏழு எட்டு மணி வெயில். உச்சிப் பொழுது எப்டி இருக்கும் பாருங்க” என்று கூறி, எனக்கு ஒரு shock treatment கொடுத்துச் சென்றனர்.

அன்றைய அதிகாலை ஐந்து மணிக்கே கேம்பில் தங்கியிருந்தவர்களை ஏற்றிக்கொண்டு job site க்குச் செல்லும் பஸ்கள் எல்லாம் சென்றுவிட்டதால், அன்றைய Aramco சவூதி அதிகாரிக்கு முன் interview கொடுக்கவேண்டிய என் தவணை பிந்திவிட்டது! என்ன செய்வது? இனி, அடுத்த நாள்தான் போய் நேர்முகத் தேர்வு கொடுக்கவேண்டும். அச்சத்துடன் தொடங்கிய அந்த முதல் நாள் ஒருவாறு கழிந்தது. அடுத்த நாள், நேரத்தோடு உறங்கச் சென்று, நேரத்தோடு விழித்து, ‘மெஸ்’ஸை விட்டுவிட்டு,பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்!.

“நீ இந்தியாவில் என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்ட அதிகாரியிடம், “ஆசிரியப் பணி செய்துகொண்டிருந்தேன்” என்றேன். எனது பள்ளிப் படிப்பு நாட்களில் ‘ரஹ்மானியா மதரசா’வில் இரண்டாண்டுகள் படித்த அரபி மொழியறிவும், கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அதைக் கூட்டிக்கொள்ள வேலூர் ‘பாகியாத்’ மத்ரசாவில் ஐந்தாண்டு தமிழ் / ஆங்கில ஆசிரியப் பணியோடு அரபி அறிவை வளர்க்க உதவிய சூழலும் நன்கு கை கொடுத்தன. இலக்கணச் செறிவுடன் நான் கொடுத்த பதிலும், அவரை அண்ணாந்து பார்க்க வைத்தது. இருப்பினும், அலுவலகப் பணியில் பம்பாய்க்காரர்கள் முதல் நாளே அமர்ந்துகொண்டதால், அடுத்த நாள் வந்த எனக்கு ஆபீஸ் வேலைக்கு வாய்ப்பில்லாது போயிற்று!

“ஆசிரியருக்கெல்லாம் இங்கு வேலையில்லை” என்ற மேனேஜர், “இந்த ஆளை open yard வலுத் தூக்கும் கிரேனில் லேபர் வேலை பார்க்கக் கொண்டுபோய் விட்டுவா” என்று yard superviser க்கு ஆணையிட்டார்! 

‘விதியோ? தலை எழுத்தோ?’ என்று எண்ணிக் கொண்டு, ஆயுள் தண்டனைக் கைதி போல், மிரட்சியுடன் பாம்பேக்கார சூப்பர்வைசரின் காரில் ஏறியமர்ந்து, இந்தியில் நலம் விசாரிக்கத் தொடங்கினேன். “அரே, மவ்லிசாப் மதராசி தும்கூ ஹிந்தி ஆத்தா ஹய்!” (தாடி, தொப்பி அணிந்தவர்களை ஈசியாக ‘மவ்லவி’யாக்கிவிடுவார்கள் பம்பாய்க்காரர்கள்.) வியந்து கேள்வி எழுப்பியவருக்கு, நான் கற்ற ஹிந்தி மொழியைப் பற்றி, சற்றுக் கூடுதலாகவே சொல்லிக்கொண்டு வந்தேன்.

தொப்பி வைத்து, தாடியுடன் இருந்த என் மேல் அந்த ஆளுக்கு இரக்கம் ஏற்பட்டு. பாம்பேக்கார ‘கிரேன் ஆப்பரேட்டர்’ ஷஃபி பாயிடம் கொண்டுபோய் விட்டார். தேநீர் ஒய்வு நேரம் அது. “அரே, ஆஜாவ் மோல்வி சாப்” என்று வரவேற்ற ஷஃபி பாய், குர்பானி கொடுக்கப் போகும் பிராணியைப்போல் மிரண்டிருந்த என் முகத் தோற்றத்தைக் கண்டு, அன்புடன் உபசரித்தார். ‘டீட்டைம்’ முடிந்தவுடன், எல்லோரும் எழுந்தனர். நானும் எழுந்தேன், ‘வேலை’ பார்க்க!
(இன்னும் உண்டு, இன்ஷா அல்லாஹ்)
அதிரை அஹ்மது

22 Responses So Far:

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வாங்க காக்கா! பஹூத் தின் கெ பாத் ஆப்கா ஆவாஜ் !

பர்மாயியே !

Ebrahim Ansari said...

நாங்கள் பதினோராம் வகுப்புப் படிக்கும் போதுதான் இந்தி மொழி பள்ளிகளில் இருந்து ஒழிக்கப்பட்டது. இரு மொழித்திட்டம் கொண்டுவரப் பட்டது. நமது பள்ளியில் அதுவரை உருதும் இந்தியும் மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்கப் பட்டு வந்தன.
ஒரு உருது முன்ஷியும் ஒரு இந்தி டீச்சரும் இருந்தார்கள்.
மூன்றாம் மொழி ஒழிக்கப் படுவதற்கு முன், நமது ஊர் மாணவர்களில் முஸ்லிம் மாணவர்கள் உருது மொழியையும் மற்றவர்கள் இந்தி மொழியையும் எடுத்துப் படிப்பார்கள். நான் இந்திதான் எடுத்தேன். ஆனால் படிக்க முடியாமல் அரசு தடை போட்டுவிட்டது.

ஆகவே இந்தி படித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் உள்ளத்தில் இருந்தது. ஆகவே வாணியம்பாடியில் பி. காம் படிக்கும் போது இரண்டாம் மொழியாக இந்தியை எடுத்துப் படித்தேன்.

ஒரு மொழியைக் கூடுதலாகப் படித்துக் கொள்வதில் அன்று மண்ணை அள்ளிப் போட்ட அரசியல்வாதிகள் இன்றுவரை அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். பல நேரங்களில் தூண்டிவிடப்படும் உணர்வுகள் அறிவை அடமானம் வைக்கச் சொல்கிறது என்பதற்கு இது உதாரணம்.

இந்தி தெரியாமல் அரபு நாடுகளுக்குச் செல்லும் பலர் தங்களின் ' தேர் நிலைக்கு வரும்வரை' படும் பாடுகள் சொல்லி மாளாது.

sheikdawoodmohamedfarook said...

//தாடி தொப்பி அணிந்தவர்களை ஈசியாகமௌலவி// நான்மலாயாவில் பினாங்கில் முதன் முதலில் 'தண்ணி' கப்பலில் போய் இறங்கியபோது அங்கும் தாடிதலைப்பாகை பைஜாமாவுடன் நிறையப்பேர்களைப் பார்த்ததேன்.'' நம்ஊரைவிட இந்திஆலிம்சாக்கள்இங்கே ரெம்ப பேர் இருக்கிறார்களே ? '' என்று நண்பரிடம் கேட்டேன்! ''இவர்கள் எல்லாம் சீக்பங்காலிகள்.ஆலிம்சாக்கள் அல்ல!'' என்றார். பொதுவாக மலேசியாவில் குஜராத்தி, மராத்தி,பஞ்ஜாபி எல்லோரையும் 'பங்காலி' என்ற ஒரே மொழிக்குள்அடைத்து விடுவார்கள் . உருது மொழிகாரர்களை மட்டும் உர்து முஸ்லிம் என்பார்கள்.குறிப்பு:பஞ்சாபியர்களை பங்காளிகள்யென்றே சொல்வது அங்குஇன்னும் மாற்ற முடியாத நடைமுறை! பன்மொழி புலவரின் கட்டுரை போகப்போக பல்சுவைதரும் என்ற நம்பிக்கையின் ஒளிகீற்று தென்படுகிறது! வருக!தருக!வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அலைக்கும்

Shameed said...

ஆரம்பமே அமர்களமா இருக்கு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை!

அதோடு ஆங்காங்கே அந்த இந்தியுடன்!!

sabeer.abushahruk said...

காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதுபோன்ற அனுபவங்கள் கேட்க சுகமானவை, அவை கொஞ்சம் சோகமாகத் துவங்கினாலும் கூட.

ஆர்வமுடன் காத்திருக்கிறோம் முழுக் கதையையும் கேட்க.

sabeer.abushahruk said...

எங்களையெல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிப்புட்டாய்ங்க காக்கா. கருப்புச் சாயம் பூசிட்டாங்க. அதனால், சிரமப்பட்டுத்தான் தட்டுத் தடுமாறி பேசக் கற்றுக் கொண்டோம்.

கண்டிப்பாக நீங்கள் கற்றுக்கொண்ட ஹிந்தி தங்களுக்கு உதவியிருக்கும் என்பதை வரப்போகும் அத்தியாயங்களில் அறியலாம் அல்லவா.

Meerashah Rafia said...

இந்த 'இந்தி'யால் பல நேரங்களில் மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தியதுண்டு, ஏற்படுத்திகொண்டிருக்கின்றது...

அவ்வப்போது "கலைஞர்" என்னிடம் அநியாயத்திற்கு திட்டு வாங்கிக்கொண்டே இருக்கின்றார்,மனதுள்.. 30 நிமிடத்திற்கு முன்புகூட இதே நிலை ஏற்பட்டது..

இந்தியின் அவசியமும், அதனால் ஏற்பட்ட அவமானமும் என்ற வகையில் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற கடந்த இரு வருடங்களாக மனதிற்குள் யோசித்துக்கொண்டே ஒழித்து வைத்துள்ளேன்.. இந்தி அறியாமல் வாழ்வில் ஒவ்வொரு நாளும்(வெள்ளிக்கிழமை தவிர்த்து-அன்றுதான் கார் ஓட்டுனர்களிடமோ, அலுவலகத்தில் வேலை புரியும் பங்காளியிடமோ, என் சக பாகிஸ்தானிய ஊழியரிடமோ,வீட்டு காவலாளியிடமோ) வாங்கும் அடியால் எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்ற குழப்பத்தில் எழுதாமல் மனப்புழுக்கத்தோடு நின்றுவிடுகின்றது..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்தி' தான் இங்கே முந்தி க்கொண்டு இருக்கும்'னு சொல்லவும் இல்லை, இங்கு வந்த புதிதில் நிறைய தந்தி அடிக்க வைத்த இந்தி....!

இப்போ கோபம் வந்தால் காட்டுவதற்கு மட்டும் முந்திக் கொள்கிறது... (ஏன்னா கோபப்பட்ட நல்லா இந்தி பேசுறேனாம்...)

இந்த குறுந்த் தொடர் அனுபவம் பேசுகிறது... !

எனக்கு (ன்னு சொல்லிக்கிறேஎன்) முதல் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவும், பத்தாவது மார்க் ஷீட்டும்... ஏனோ நெஞ்சை விட்டு அகலாதா முத்திரைகள் !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அனுபங்கள் மூலம் பெறும் படிப்பினைகள் பயன் தரும். வரவேற்கிறோம் தொடரை.

adiraimansoor said...

காக்கா ஜொய்மா கேம்பவிட்டுட்டு இன்கேயும் வந்திட்டியலா

உங்க கதாபாத்திரத்தில் நானும் இடம் பெறுவேன் என நினைக்கின்றேன் நீங்க போய் 4 வருஷத்திலே உங்களோடு நானும் வந்து சேர்ந்ததை மற்ந்திருக்க மாஅட்டீர்கள் என நினைக்கின்றேன்

உங்களுடன் ஜொய்மா கேம்ப் பள்ளிவாசலில் நோன்பு திறக்கும்போது எடுத்த போட்டோ இன்னும் என்னிடம் உள்ளது

உங்களுடன் இரவில் ரோட்டில் நின்றுகொண்டு போகின்ற வண்டியை எல்லாம் கையை காட்டி ஏறி தமாம் செல்லும் அனுபவங்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றது

இப்னு அப்துல் ரஜாக் said...

//இத்தனைக்கும் கிறிஸ்துவ மத ஸ்தாபாகர் ஈசா நபிக்கு ஆங்கிலத்தில் ABCகூடதெரியாது.அவர்கள் ஒருயுதார். அவர்கள்ஆங்கிலத்தைப்ரொமோட்பண்ண வரவில்லை!//

அன்புக்குரிய சகோ முஹம்மத் பாரூக் காக்கா அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.
மேற் குறிப்பிட்ட உங்கள் கருத்து இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது.தயவு செய்து திருத்தி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
1)அல்லாஹ்வின் தூதர் ஈஸா நபி அலை அவர்கள் கிறிஸ்தவ மத ஸ்தாபகர் கிடையாது.
2)அவர்கள் யூதர் என்பதும் தவறு.
குரான் கூறுவதை கேளுங்கள்,"

உடனே அவர் (அக்குழந்தை), 'நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.

நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கிய சாலியாகவும், அடக்குமுறை செய்பவனாக வும் அவன் ஆக்கவில்லை.

நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது'(என்றார்)

இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.

3)ஈஸா நபி உட்பட,எந்த நபிமார்களையும்,அல்லாஹ் எந்த மொழியையும் ப்ரொமோட் செய்வதற்கு அனுப்பவில்லை.எல்லாரும் ஒரே அஜெண்டா மட்டும்தான்.

"அல்லாஹ் ஒருவனே,அவனே வணங்கத் தகுதியுள்ளவன்"

----------------------------------------------------------------------

அல்லாஹ்வுக்காக உங்கள் கருத்தை திருத்திக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக

Unknown said...

அஹா அருமையான அனுபவத்தொடர்.. யான் பெற்ற துன்பம்/இன்பம்..? அனைத்தையும் முதல் அத்தியாயத்தில் அசத்தியுள்ளது அற்புதம்..

தொடருங்கள் அதிரையின் எழுத்து நயகனே.. அவ்வப்போது நான் பட்ட கஷ்டங்களை நேரமிருந்தால் இத்தொடரின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்கிறேன்..

Anonymous said...

*** மட்டுறுத்தப்பட கருத்து ****

sheikdawood mohamedfarook சொன்னது…

//தூண்டி விடப்படும் உணர்வுகள்//மைத்துனர் இப்ராஹிம்அன்ஸாரிசொன்னது.

அந்நாளில் நம்நாட்டிலும் முஸ்லிம்கள் நிறைந்த ஊரில் ஆங்கில மொழி படித்தால் கிறிஸ்தவன் ஆகிவிடுவான் என்ற பிரசாரத்தால் தமிழ் முஸ்லிம்கள் கல்வியிளும் ஆங்கிலமொழியிளும் பின்தங்கி கூலிகள் ஆனார்கள்.

அரசு ஆவலாகப்படிகளில் ஏறுவது போலும் அரசு நாற்காலிகளில் உட்கார்ந்து பணியாற்றுவது போலும் கனவு கூடகாணாத தூக்கத்திலும் துக்கத்திலும் இருந்தார்கள்.இருக்கிறார்கள்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலேயாவில் ஆங்கில மொழி அரியணை ஏறி ஆட்சி செய்தது. [Merdeka] சுதந்திரம் பெற்றபின் மொழிபற்று முற்றி அது மொழி வெறியாகி ஆங்கில மொழி வெறுப்பை தூண்டியது ஆங்கிலத்தை புறந்தள்ளி மலாய்மொழி அரியணைஏறியது.

மெல்ல மெல்ல ஆங்கிலம் கைநழுவியது. காலம் செல்லச் செல்ல உலகில் கனம் கனம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அதில் உலகமயமும் கம்பூயூட்டரும் ஒன்று. ஆங்கிலம் இன்றி ஒரு நாடு வாழ முடியாத நிலை உருவானபோது. தவறு செய்தவர்கள் ஆங்கிலத்தை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் உலகவரை படத்தில் கை ரேகை அளவுக்குகூட இல்லாத சிங்கப்பூர் ஆங்கிலத்தை 'தலாக்' சொல்லி ஒதுக்கி வைக்காமல் முதல் வீட்டோடு இன்னொரு முதல் வீடாக ஆங்கிலத்தை வைத்து நன்றாக குடும்பம் நடத்துகிறது.

மலேசியாவோ இப்பொழுதுதான் 'சின்ன வீட்டின்' சிறப்பு பற்றி சிந்திக்கிறது. ஆச்சாரத்தில் கெடுபிடியான பிராமணர்கள் ஆங்கிலத்தை கைவிடவில்லை. முஸ்லிகள் மதக் காரணங்களை முன்நிறுத்தி ஆங்கிலத்தை வெறுத்தார்கள்.

இத்தனைக்கும் கிறிஸ்துவகர்கள் போற்றும் ஈசா நபிக்கு ஆங்கிலத்தில் அவர்கள் எடுத்துரைக்கவில்லை. அவர்கள் ஆங்கிலத்தை ப்ரொமோட் பண்ண வரவில்லை!

நாமோ 'அவலை நினைத்து உரலை இடிதோம்!' இப்போ வடே போச்சேன்னு குந்திகின்னு இருக்கோம்!

sheikdawoodmohamedfarook said...

அன்புத் தம்பி அரஅல தமக்கு அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்] தாம் குறிப்பிட்டஎன் கமெண்டில்உள்ள பிழையும் பிழையே ! இதில் மாற்றுக்கருத்தோ விவாதமோ கிடையாது.அது தெறிந்தும் வேண்டுமென்றே செய்த பிழை அல்ல!ஈஸாநபி[அலை] அவர்களையோ மற்றஎந்தநபிமார்களையோ,பெரியோர்களையோ தாழ்மை படுத்தும்நோக்கம் எனக்கில்லை!செய்த பிழைக்கு அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!.ஆமீன்.தாமும் துவா செய்யவும்.பிழையை மென்மையாக சுட்டிக்காட்டும் பண்பாட்டுக்குணம் கொண்ட தமக்கு நன்றியும் ஸலாமும்உரித்தாகுக.வஸ்ஸலாம்.

Shameed said...

அழகிய முறையில் பிழையை சுட்டிக்காட்டிய அரஅல அவர்களுக்கு நன்றி

இப்னு அப்துல் ரஜாக் said...அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய மூத்த சகோ பாரூக் காக்கா அவர்களுக்கு,வ அலைக்கும் ஸலாம்.

காக்கா,உங்கள் பெருந்தன்மைக்கும்,அன்புக்கும் கடமை பட்டுள்ளேன்.அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக,ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே.

உங்களின் இந்த நல்ல பண்பை நம் அதிரை மற்றும் சமுதாய தள எழுத்தாளர்கள்,கருத்திடுவோர் முன் மாதிரியாக கொள்ள வேண்டும்,சிலருக்கு சுட்டிக் காட்டும்போது பிடிப்பதில்லை.ஆனால்,உங்களின் பரந்த மனப்பான்மை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.நீங்கள் அல்லாஹ்விடம் என்ன என்ன வேண்டும் என கேட்கிறீர்களோ அந்த எல்லா நல்லவற்றையும் உங்களுக்கு தாராளமாக தருவானாக.ஆமீன்

உங்களுக்கும்,நெறியாளருக்கும்,அப்துல் ஹமீது காக்கா அவர்களுக்கும் நன்றி.

என் மாமா அவர்கள் ஜனவரி 26ம் தேதி இறந்துவிட்டார்கள்.அன்னாரின் மாக்பிரத்துக்காக துவா செய்யுங்கள்.மிக்க நன்றி காக்கா

Ebrahim Ansari said...

//என் மாமா அவர்கள் ஜனவரி 26ம் தேதி இறந்துவிட்டார்கள்.அன்னாரின் மாக்பிரத்துக்காக துவா செய்யுங்கள்.மிக்க நன்றி காக்கா//

தம்பி அர அல அவர்களுக்கு , அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் தம்பி நெய்னாவின் மறைவுச் செய்தி அறிந்து தம்பி ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்குப் பலமுறை அலை பேசியில் அழித்தேன். தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. மிகச் சிறுவயதில் இருந்தே எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். நான் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது என்றாலும் அவரது அன்பும் பண்பும் சிரித்த முகமும் என்னால் மறக்க முடியாது.

அல்லாஹ் அவருடைய மறுமை வாழ்வை மேம்படுத்தும்வகையில் அவருடைய பிழைகளை மன்னித்து ஏற்றுக் கொள்வானாகவும் என நாங்கள் அனைவரும் து ஆச செய்கிறோம்.

நீங்களும் குடும்பத்தினரும் சபூர் செய்து கொள்ளுங்கள். அல்லாஹ் அதற்கான வல்லமையை உங்கள் அனைவருக்கும் தருவானாக்!

sheikdawoodmohamedfarook said...

அன்புத்தம்பி அரஅல தமக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்[வரஹ்] தங்களின் மாமா நெய்னால் தம்பி அவர்கள் காலமான செய்திகேட்டு வருத்தமடைந்தேன். உங்கள் துயரிலும்உங்கள்குடும்பத்தார்துயரிலும் நானும் ஒருபங்கெடுக்கிறேன்.அல்லாஹ் தன்னால் ஆசீர்வாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த நல்லிடத்தை அவர்களுக்கும் அளிக்க எல்லாம்வல்லஅவனிடமே இருகரம்யேந்தி இறைஞ்சுகிறேன்.சாந்தியும் சமாதானமும் அன்னார்மீதுஅல்லாஹ்பொழிவானாக.ஆமீன்.உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆறுதலையும் சலாத்தையும் சொல்லவும்.அஸ்ஸலாமு அலைக்கும்[ வரஹ்]

sheikdawoodmohamedfarook said...

// நெய்னால்தம்பி//என்பதை தயவுசெய்து //'நெய்னா//'என்று திருதிக்கொள்ளளவும்.

ஜலீல் நெய்னா said...

அன்று 1980 களில் பம்பாயில் நம்மூரைச் சேர்ந்த அதிகமானோர் வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்து வந்த சமயம், பல இன்டர்வியூகளை சந்தித்து வெறுத்து, விரக்தியால் ....ஒரு முறை இன்டர்வியூக்கு போயிருந்த பொழுது முதன் முதலாக ..... ஹிந்தி மாலுமே, என்று கேட்டதும் மாலவே மாலாது என்று சொல்ல கேட்டது ஞாபகம் .....

அன்று நடந்த அனுபங்களை எங்களிடம் பகிரும் நடையே சிறப்பு... அதற்காக அந்த ......பலய பாஸ்போர்ட் காப்பியையே ஆதாரமாக தரவேண்டுமா காக்கா

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜனாப் முஹம்மத் பாருக் காக்கா,ஜனாப் இப்ராஹிம் அன்சாரி காக்கா,மிக்க நன்றி.என் மாமாவுக்காக துவா செய்தமைக்கும்,உங்கள் அன்புக்கும்.

அஹம்து சாச்சாவின் பன் மொழி புலமையும்,அதை ஒட்டிய நம் மக்களின் பன் மொழி கதம்பமும் அருமை.
In sha Allah Estoy también quieren unirse en este game.Will me aceptas?

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு