Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 051 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 12, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

‘’நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும், உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. (அல்குர்ஆன்: 4:78 அன்னிஸா - பெண்கள்)

இறந்தவரிடம் கூற வேண்டியவை, இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை:

''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்தபோது, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன். ''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு! என நபி(ஸல்)கூறினார்கள். அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் (ஸல்) அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)

''ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டதும் ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீமுஸீபத்தீ வக்லிஃப்லீ கய்ரன் மின்ஹா (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நாம் அவன் பக்கமே மீளுபவர்களாக உள்ளோம். இறைவனே! என் சோதனையில் எனக்கு கூலியைத் தருவாயாக! அதைவிட சிறந்ததை எனக்குப் பகரமாக்குவாயாக) என்று கூறினால், அவருக்கு அல்லாஹ் அவரின் சோதனைக்கு  கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை அவருக்கு பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (என் கணவர்) அபூஸலமா(ரலி) இறந்தபோது நபி(ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டபடிக் கூறினேன். அவரையும் விட சிறந்த நபி(ஸல்) அவர்களையே எனக்கு கணவராக ஆக்கினான். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 921)

''ஓர் அடியானின் குழந்தை இறந்துவிட்டால், வானவர்களிடம் அல்லாஹ், ''என் அடியானின் குழந்தை (உயிரை) கைப்பற்றினீர்களா?'' என்று கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள். ''என் அடியானின் இதயத்தைக் கைப்பற்றினீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள். ''என் அடியான் என்ன கூறினான்? என்று கேட்பான். ''உன்னைப் புகழ்ந்தான். ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன் எனக் கூறினான்'' என்று வானவர்கள் கூறுவார்கள். ''சொர்க்கத்தில் என் அடியானுக்கு வீடு கட்டுங்கள். அதற்கு ''புகழுக்குரிய வீடு'' என்றறு பெயரிடுங்கள்!'' என்று அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 922)

''ஓர் இறை நம்பிக்கை கொண்ட அடியானின் குழந்தையை இவ்வுலகில் நான் கைப்பற்றி, அவன் அதை பொறுமையாக எடுத்துக் கொண்டால், அவனுக்குக் கூலியாக சொர்க்கத்தைத் தவிர வேறில்லை' என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 923)

''நபி(ஸல்) அவர்களின் பெண் மக்களில் ஒருவர் (ஜைனப்(ரலி) தன் மகன் இறந்து விட்டதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது வந்தவரிடம் நபி(ஸல்) அவர்கள் ''என் மகளிடம் செல். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு எடுத்துக் கொள்ளவும், கொடுக்கவும் உரிமை உண்டு என்று அவரிடம் கூறு! அல்லாஹ்விடம் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு.  அவர் (என் மகள்) பொறுமையாக இருந்து, நன்மையை நாடும்படி அவருக்கு கட்டளையிடு'' என்று கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்). (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத்  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 924)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் :63:9 அல் முனாஃபிகூன் -நயவஞ்சகர்கள்)

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ‘’இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது மனிதன் கூறுவான். (அல்குர்ஆன் :63:10 அல் முனாஃபிகூன்- நயவஞ்சகர்கள்)

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் :63:9 அல் முனாஃபிகூன்- நயவஞ்சகர்கள்)

மய்யித்திற்கு துஆச் செய்வது, அதை பின் தொடர்வது:  

''ஒருவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டால் அவருக்கு ஒரு 'கீராத்' நன்மை உண்டு. ஒருவர் அதை அடக்கம் செய்யும் வரை கலந்து கொண்டால் அவருக்கு ''இரண்டு கீராத்'' உண்டு என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இரண்டு கீராத் என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''பெரும் இரண்டு மலைகள் போன்றது'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 929)

''இறை நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொண்டு, அதற்காக தொழுது, அதை அடக்கம் செய்யப்படும் வரை ஒருவன் இருந்தால், அவன் இரண்டு ''கீராத்'' நன்மைகளை கூலியாகப் பெற்று திரும்புகிறான். ஒரு கீராத், உஹது மலை போலாகும். ஒருவன் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, அடக்கம் செய்யப்படும் முன் திரும்பிவிட்டால், அவன் ஒரு ''கீராத்'' நன்மையுடன் திரும்புகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 930)

''இறந்தவருக்காக நீங்கள் தொழுதால், அவருக்காக துஆவை நீங்கள் மனத்தூய்மையுடன் செய்யுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 937)

''ஜனாஸாவை (அடக்கம் செய்ய) தீவிரமாக்குங்கள். அது நல்லதாக இருந்தால், அதை நன்மையின் பக்கம் முற்படுத்தி வைத்தவர்களாவீர்கள். அது தீமையானதாக இருந்தால் உங்களின் பிடரிகளை விட்டும் (உங்கள் பொறுப்பை) அந்த தீமையை இறக்கி வைத்தவர்களாவீர்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 941)

''ஜனாஸா (அடக்கம் செய்திட) தயார் செய்யப்பட்டு, அதை ஆண்கள் தங்களின் கழுத்துகளில் சுமந்து சென்றால், அந்த ஜனாஸா நல்லதாக இருந்தால், ''என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள்.'' என்று அது கூறும். அது சரியில்லாததாக இருந்தால், தன்னைச் சேர்ந்தோரிடம் ''எனக்கு வந்த நாசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?'' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதன் அல்லாத அனைத்தும் கேட்கும். மனிதன் கேட்டால் அதிர்ச்சியாகி விடுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 942)

''(இறந்து விட்ட) ஒரு மூஃமினின் உயிர், அவனது கடன் அவனை விட்டும் நிறைவேற்றப்படும் வரை கடனால் சூழப்பட்டிருக்கும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 943)

''பகீஉல் அர்கத் என்ற இடத்தில் ஒரு ஜனாஸாவில் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்து, உட்கார்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்கள் உட்கார்ந்தோம். அவர்களுடன் ஒரு கைத்தடி இருந்தது. தன் தலையைக் குனிந்த அவர்கள்,  தன் கைத்தடியால் தரையைத் தோண்டினார்கள். பின்பு '' ஒருவரின் தங்குமிடம் நரகம், தங்குமிடம் சொர்க்கம் என உங்களில் ஒருவர் எழுதப்படாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள். '' இறைத்தூதர் அவர்களே! எங்களின் ஏட்டில் உள்ளபடி நடக்கிறது எனக் காரணம் காட்டி இருந்து விடலாமா?' என, நபித் தோழர்கள் கேட்டார்கள். ''நீங்கள் நற்செயல் செய்யுங்கள். (சொர்க்கம் நரகம் என) எதற்கு படைக்கப்பட்டதோ (அதை அடைய உள்ள வழிகள்) அனைத்தும் இலகுவாக அமைந்திருக்கும்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸாகும்.) (அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 945)

''ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்றைத் தவிர அவனது செயல்கள் முடிந்து விடும். (1) நிரந்தரமாக நன்மை பெற்றுத்தரும் தர்மம் (2) பயன் பெறப்படும் கல்வி (3) அவருக்காக துஆ செய்யும்  நல்ல குழந்தை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 949)

''ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்ட நபித்தோழர்கள் இறந்தவரைப் பற்றி நல்ல விதமாகப் புகழ்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அவசியமாகி விட்டது'' என்று கூறினார்கள். பின்பு மற்றொரு ஜனாஸாவின் அருகில் நபித்தோழர்கள் சென்றார்கள் அதனை இழிவாகப் பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அவசியமாகிவிட்டது'' என்று கூறினார்கள். ''என்ன அவசியமாகி விட்டது?'' என உமர் (ரலி) கேட்டார்கள். ''அந்த ஜனாஸா குறித்து புகழ்ந்து நல்லதைப் பேசினீர்கள்! இவருக்கு சொர்க்கம் அவசியமாகி விட்டது. இந்த ஜனாஸாவைப் பற்றி இகழ்ந்து பேசினீர்கள். அவருக்கு நரகம் அவசியமாகிவிட்டது. நீங்கள் தான் பூமியில் அல்லாஹ்விற்குரிய சாட்சியாளர்களாக உள்ளீர்கள்'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 950)

''பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறந்து போன எந்த ஒரு முஸ்லிமையும் அவர் தன் பிள்ளைகள் மீது காட்டிய கருணையின் காரணமாக அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை'' என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 952)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். (104:1)

அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். (104:2)

தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். (104:3)

அவ்வாறில்லை ஹுதமாவில் அவன் எறியப்படுவான். (104:4)

ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? (104:5)

மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு(104:6)

அது உள்ளங்களைச் சென்றடையும். (104:7)

நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும். (104:8,9)

(அல்குர்ஆன்: 104 அல் ஹுமஸா -புறம் பேசுதல்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? (107:1)

அவனே அநாதையை விரட்டுகிறான். (107:2)

ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (107:3)

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான். (107:4,5)

அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். (107:6)

அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (107:7)

(அல்குர்ஆன்: 107 அல் மாவூன் - அற்பப் பொருள்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் அதிரை ! 17

அதிரைநிருபர் | August 11, 2016 | ,

நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எத்தகைய பாரம்பரியமானது என்பதற்குக் கீழ்க் காணும் தகவல் ஓர் எடுத்துக்காட்டாகும்:

நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது. நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள்:

தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)

செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)

பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்

இளைஞரும் ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு சிந்தனை முகிழ்த்தது. 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம். அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?'

அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள்.

இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து வந்த அந்தத் தீர்மானம், நம் தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது.

இந்தியச் சுதந்திரத்தில் நம் அதிரைக்கும் பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில் நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.

--அதிரை அஹமது

புகைப்படம்: அதிரைவரலாறு

இருளும் ஒளியும் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 10, 2016 | , , ,

ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் அடங்கிய அரை உலகத்தின் நடுமத்தியில் அடங்கிக் கிடக்கிறது அரபு நாட்டுத் தீபகற்பம். 12 லட்சம் சதுர மைல் பரப்புள்ள இந்நாட்டின் மூன்றிலொரு பகுதி வெறும் பாலைவனமாகும். மெச்சிப் பாராட்டத்தக்க ஆறு

எதுவுமே இங்கே கிடையாது. அரேபியா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் ஹிஜாஸ் என்னும் மாநிலமாகும். இங்கேதான் ‘பாதுகாக்கப்பட்ட பரிசுத்த தலம்’ என்று பொருள்படும் ‘ஹரம்’ என்னும் வட்டம் அமைந்துள்ளது. மனித நினைவுக்கு அப்பாற்பட்ட மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தப் பரிசுத்த தலவட்டாரத்துக்குள் எவரும் எவரும் எந்தவிதச் சச்சரவும் போராட்டமும் நிகழ்ததத் தகாது என்னும் தடை விதி பேணிக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. அத்துணைப் பரிசுத்தமிக்க தலம் அது. அங்கேதான் கஅபா என்னும் புனித ஆலயமும் இருக்கிறது. மக்கா, மதீனா போன்ற நகர்களும் ஹிஜாஸிலேதான் உள்ளன.

ஹிஜாஸுக்கு அடுத்தபடியாக விளங்கும் மற்றொரு மாநிலம் எமன் என்று அழைக்கப்படுகிறது. இது அரேபியா தீபகற்பத்தின் தென்பகுதியில் இருக்கிறது. முழு அரேபியாவிலும் வளப்பமிக்க பூபாகம் இதுவே. இங்கேதன் நாகரிகம் வளர்ச்சி பெற்றிருந்தது. மிகப் பழங்கால் நாகரிகச் சின்னங்களாகிய பெருங் கட்டிடங்களின் இடிபாடுகள் இன்றும் இங்கே காணப்படுகின்றன. விவசாயத்துக்கு ஏற்ற நிலப்பரப்புகள் இங்குண்டு. உலோகங்கள், கெம்புக் கற்கள், நறுமணக் கறிமசாலாப் பண்டங்கள் முதலிய பொருள்களின் வர்த்தகங்களும் இங்கேயே நடந்து வந்தன. எமனுக்கு அடுத்த தரத்தில் விளங்கும் மாநிலங்கள் நஜ்து, உம்மான் என்பனவாம்.

இவ்வாறான பரந்த நிலப்பரப்பில் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை நாடோடிகளான கூட்டத்தினர் பலர் வசித்து வந்தனர். பொதுவாக இந்த நாடோதடிகள் ‘பதவீகள்’ (Bedouin) என்று அழைக்கப்படுவர். ஈரநைப்பு இல்லாத வரட்சிமிக்க பரந்த மணற்பாலை வெளியில் அவர்கள் தங்கள் ஆடு, ஒட்டகம், குதிரை முதலியவற்றை நடத்தி, எங்கெங்குப் புல்வெளி தென்படுகின்றதோ அங்கெல்லாம் திரிந்து வந்த காரணத்தால் நாடோடிகளாக விளங்கியதில் வியப்பில்லை. எனவே, கட்டுக்கோப்பான சமுதாயமோ, நிரந்தரக் குடியிருப்புப் பெற்ற மக்களினமோ எவ்விடத்திலும் நிலையாயிருந்ததில்லை. நகரங்களிலிருந்தவர்களும் வாணிபத்தின் நிமித்தம் எங்கெங்கும் அலைந்து வந்தனர். இவற்றால் விளைந்த முடிவு என்னவென்றால்: நாட்டில் சட்டமில்லை; மக்களிடைக் கட்டுப்பாடில்லை; அரசு என்று ஏதுமில்லை. அவனவனும் தன்தன் விருப்பம்போல் நடந்து கொண்டான். சில சமயங்களில் அந்த நாடோடிகள் தனித்தனிக் குழுவினராகச் செயல்பட்டு, வலாத்காரத்தை ஆயுதமாகக் கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவன் இருப்பான். அவனும் மாநிலமெங்கும் முழு அதிகாரத்தைச் செலுத்தும் வல்லமை பெற்றிருந்ததில்லை.

அராபியர்கள் பெண்களை வெறுத்து வந்த அதே சமயத்தில், தாங்கள் வழிபட்டு வந்த அத்தனை தெய்வங்களையும் பெண் தேவதைகளாகவே கொண்டிருந்தனர். எண்ணிலடங்காத அத்தனை சாமிகளும் பெண்களே! அம் மக்கள் ஏன் இப்படிப்பட்ட விபரீத முரண்பாட்டைக் கடைப்பிடித்தனர் என்பது புரியவில்லை. ஒருவனாக இலங்கும் இறைவன் உலகின் அத்தனை கருமங்களையும் தனியே பராமரிக்க முடியாதாகையால், அவன் பல பெண்களைப் பெற்று, அவர்களைத் தேவதைகளாக்கி உலகில் பரிபாலனம் செய்ய நியமித்துவிட்டிருக்கிறான் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

எனவே, எந்த எந்தத் துறையை எவ்வெத் தேவதை கண்காணிக்கிறது என்று அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்களோ அவ்வத் தேவதைக்கும் அவ்வச் சமயத்தில் பூஜை, நைவேத்தியம் செய்வார்கள்; உயிர்ப்பலி இடுவார்கள்; நரபலியும் கொடுப்பார்கள். தாங்கள் வழிபடும் தேவதைகளுக்கென்று தனியான ஆலயம் என்று ஒன்று இருக்க வேண்டுமென்பதில்லை. கல்லோ, கட்டையோ, மணல் மேடோ, குழி விழுந்த பாறையோ அல்லது ஒரு பட்டுப் போன மரமோ —எது கண்ணெதிரில் தென்பட்டாலும் போதும். அதுவே ஒரு தேவதையாகிவிடும். எதுவும் அகப்படவில்லை யென்றால், திறந்த வெளியில் செல்லும்போது மணலைச் சிலர் குவிப்பார்கள். அவ்வாறு குவிக்கப்பட்ட மணல் காற்றில் அடிபட்டுக் கலைந்து விடாமல் பெண்ணொட்டகத்தின் முலைக் காம்பிலிருந்து பாலைப் பீய்ச்சி அதைக் கெட்டிப்படுத்துவார்கள். பிறகு அம் மணல் திட்டைத் தேவதை என்று கும்பிடுவார்கள். இன்னம் சிலர் தங்களுடன் எடுத்துச் செல்லும் அடுப்புக் கூட்டும் மூன்று கற்களுள் ஒன்றை எடுத்து நட்டேகூட அதைப் பூசிப்பார்கள்.

நாளொன்றுக்கு ஒரு தேவதை என்று 360 சாமிகளை அவர்கள் வழிபட்டு வந்ததுடன், கொள்ளை நோய்கள் வந்து விட்டால் அப்பொழுதுக்கென்று புதுத் தேவதைகள் முளைத்துவிடும். சூரியன், சந்திரன், உடுக்குலங்கள், பறவைகள், விலங்குகள், மரங்கள் முதலிய அனைத்தும் கூடத் தெய்வங்களென்று அவர்களால் வழிபடப்பட்டன. ஒரு சாமிக்கு அபசாரம் செய்துவிட்டால் மற்றொரு சாமியிடம் முறையிட்டுப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. சாமிப் பூஜை வளர வளரப் பூசாரி இனமும் புரோகிதர் இனமும் தாமே வளர்ந்தன. சில சமயங்களில் சாமிக்குச் செலுத்தப்பட்ட பக்தியைவிட, பூசாரி புரோகிதர்களுக்கு வழங்கப்பட்ட பக்தி வழிபாடு மிகைத்துவிடும். மடயர்களான மக்கள் மேலும் அறிவிழந்த மாக்களாக்கப்பட்டனர்.

தெய்வ நம்பிக்கையுள்ள ஆத்திகர்களின் போக்கு இதுவென்றால், கடவுளே கிடையாது என்று சாதித்த நாத்திகர்களைப் பற்றி என்ன சொல்லக் கிடக்கிறது! மனிதனுக்கு ஆத்மா உண்டென்றேனும் அவனவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு இறை நியதித் தண்டனை அல்லது வெகுமதி கிடைக்கு மென்றேனும் அந்த நாத்திகர்கள் கிஞ்சித்தும் கருதியதில்லை. அவர்கள், மதம் என்பது ஒரு பரிகசிக்கத்தக்க கோட்பாடு என்று நினைத்தார்கள். எந்தத் தேவதைகளை அவர்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்கி வந்தார்களோ, அதே தேவதைகளை எட்டி உதைத்துத் தள்ளுவதிலும் சில ஆத்திர்கள் பின் வாங்கியதில்லை.

ஒரு கீர்த்தி மிக்க பாவலர் இருந்தார். இம்ரா உல் கைஸ் என்று அவர் அழைக்கப்பட்டார். அவருடைய தந்தையைச் சிலர் கொன்றுவிட்டார்கள். அந்தக் கொலைக்கு ஈடாகத் தம் எதிரிகள்மீது பழிக்குப்பழி நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று தடுமாறிய உள்ளத்துடன் அவர் தம் இஷ்ட தேவதையிடம் சென்று குறிபார்த்தார். அந்தக் காலத்தில் அராபியர் தேவதைகளின் அனுமதி உண்டா இல்லையா என்பதைக் கண்டறிய மூன்று அம்புகளையும் வில்லையும் எடுத்துச் சென்று சன்னிதியில் நின்று கும்பிட்டு, கண்களை மூடித் தியானித்தபடி வானம் நோக்கி அம்பை எய்வார்கள். ஓர் அம்பில் ‘சரியே!’ என்று பொறித்திருக்கும்; மற்றொன்றில் ‘சரியில்லை; கூடாது’ என்று பொறித்திருக்கும்; மூன்றாவது அம்பில் ஒன்றும் பொறித்திராது. மூடிய கண்ணுடன் பறக்க விடப்பட்ட அம்பு சாமி எதிரே வந்து வீழ்ந்ததும் அந்தப் பக்தன் அதை எடுத்துப் பார்ப்பான். அனுமதியளிக்கும் அம்பு வந்து வீழ்ந்திருந்தால் தனது எண்ணத்தை நிறைவேற்ற முற்படுவான்; அனுமதி மறுக்கும் அம்பு என்றால், கைவிடுவான்; ஆனால், வெற்றம்பு வந்து வீழ்ந்தால் மறுமுறை அம்பு எய்வான். இம்ரா உல் கைஸ் என்னும் புலவர் அதே முறையைப் பின்பற்றி அம்பு எய்தார். அவர் மும்முறை முயன்றும், ஒவ்வொரு தடவையும் ‘கூடாது’ என்று தடை விதிக்கும் அம்பே வந்து விழுந்தது. கவிஞருக்குக் கோபம் பொத்துக் கொண்டுவிட்டது. ‘ஏ பாழாய்ப் போன மூதேவியே! உன்னுடைய அப்பனை எவனாவது கொலை புரிந்திருந்தால் அன்றோ உனக்கந்த வேதனை புரியும்? என் அப்பனுக்கெதிராகப் பழி வாங்கக்கூடாதென்று தடுக்கும் நீயும் ஒரு சாமியா!” என்று ஆவேசத்துடன் அலறி, அவர் பிடித்திருந்த வில்லை அச்சிலைமீது வீசித் தகர்த்தெறிந்தார்!

அக்கால அராபியர் சமுதாயத்தில் கல்வியறிவு மிகக் குறைவு. எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் தொகையே எங்கும் அதிகம். பரந்த பாலைவனத்தில் எங்கோ ஒரு மூலையில் சிறு சோலைகள் காணப்படுவதேபோல், எவனாவது ஒருவன் எழத்தறிவுள்ளவனாக விளங்குவான். அவன் பெரும்பாலும் ஒரு பாடகனாகவோ அல்லது கவிஞனாகவோ இருப்பான். அவனது வாயிலிருந்து உதிரும் சொற்கள் எதுகை மோனை நயங்களுடன் நல்ல யாப்புடன் விளங்கும். ஆனாலும், அவ்வாறு இயற்றப்படும் இனிய கவிதைகளும் பாடல்களும் கொஞ்சமேனும் அறிவுக்கு விருந்தூட்டுவனவாகவோ, தத்துவம் பொதிந்தனவாகவோ, அல்லது நல்லொழுக்கம் கற்பிப்பனவாகவோ இருந்ததில்லை. கேவலம் சிற்றின்பக் கெளிக்கைகளும் மதுரச மகிமையும் குதிரைகளின் பெருமையும் கொள்ளையிடுவதன் இன்பமும் கொலை புரிவதன் கலைகளும் சூதாட்டத்தனி மகத்துவமும் மட்டுமே சொன்னயம் சொட்டச் சொட்ட அப்பாடல்களில் ஒலிக்கும். குடித்துக் கூத்தடித்துக் கும்மாளமிடும் கயவர்களுக்கு அப் பாட்டுக்கள் பக்க வாத்தியமாக அமைவதோடு சரி. எந்த விதமான ஆசாரமும் நல்வழியும் நீதிநெறியும் அவற்றில் யாக்கப்பட்டதில்லை. எனவே, ஏற்கெனவே போதை யூட்டப் பெற்ற புத்தியை மேலும் லாகிரி மிக்கதாக மழுங்கச் செய்யவெ கவிஞர்கள் தம் திறமையைக் காட்டினார்களன்றி, சிதைவுற்ற சமுதாயத்தைச் சீர்திருத்தும் நற்போதனையை வழங்க எப் பண்டிதனும் முன் வந்ததில்லை.

நீண்ட நெடிய மரங்கள் வளர்ந்து நெருங்கி அடர்ந்த காட்டின் கடும் இருட்டில் நிலம் சதுசதுப்பாயிருக்கும்; சூரிய ஒளி இலைச் செறிவினூடே உட்புகாது; உயிருக்கு ஆபத்து உண்டுபண்ணும், ஊர்வனவும் ஓடுவனவுமான உயிரினங்கள் அங்கே பதுங்கி வாழும்; தப்பித் தவறி உட்புகுந்தவனுக்குக் கண்ணும் தெரியாது, திரும்பி வரும் மார்க்கமும் புலப்படாது. அவன் உயிருடன் தப்பிப் பிழைப்பானா என்பதே சந்தேகம். இந்த உபமானத்தையேதான் அக்கால அந்தகார அரபு நாட்டுக்குப் பொருந்திக் காட்டலாம். குருடனுக்கு வழிப்பாதை தெரியாது; ஆனால், அவன் கையில் ஓர் ஊன்றுகோலை நீட்டிவிட்டால் அதன் துணையைக் கொண்டு அவன் வழி நடப்பான். அந்தகார் அரபுமக்கள் கண்ணிருந்தும் குரடராகித் திரிந்தாரகள்; காரிருள் சூழ்ந்த கும்மிருட்டில் திகைத்து நின்றார்கள். அக் குருடர்களுக்குத் தேவைப் பட்டதோ ஓர் ஊன்று கோல். கண்ணிருந்தும் பார்க்க முடியாமல் கும்மிருட்டுக் காட்டிடை நின்றார் போலிருந்த அவர்களுக்கு இன்றியமையாது தேவைப்பட்டதோ ஓர் ஒளிச் சுடர். குருடர்க்குக் கண் வழங்கிக் கும்மிருட்டில் ஒளி புகுத்தி மாயா ஜால மந்திர வித்தைபோல் 23 ஆண்டுகளுக்குள் பேரற்புதத்தை விளைத்த பெருந்தகையாளரைப் பற்றித்தான் இனி நீங்கள் படித்துப் பரவசமடையப் போகிறீர்கள்.

தொடரும்...

N. B. அப்துல் ஜப்பார்
நன்றி : 

வள்ளுவ, காந்தி நாட்டு இஸ்லாமியன்... நுனிப்புல் -1 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 09, 2016 | , , , , ,

(முன்குறிப்பு ;- சந்தேகேமே வேண்டாம் இது முழுக்க நுனிப்புல் மேய்ச்சல்தான் .ஆனால் இந்த எழுத்தின்  எண்ணங்கள்  தொலை நோக்குடவை .ஆழ்ந்த திறன் பெற்றவர்கள் இதை விரிவாக்கம் அல்லது திருத்தம் செய்யலாம் )

மொழி :-

நாம் நிலைக்கொண்டிருக்கும் நம்  மண்ணின் மொழியான தமிழை மிக நாம் மிக நுட்பமாக அணுக வேண்டும் .நாம் பேசும் தமிழ் மொழியை குறித்து தெளிவு வேண்டும் .ஆராய்தல் மிக அவசியம்.

இது ஒரு பொதுவான மொழியாகும் .நமக்கும் ,சகோதர இந்துக்கள் ,,இந்துத்துவாவினர் (மனு தர்மத்தினர் ),கிறிஸ்தவர்கள் ,மற்றும் சிலருக்கும் தமிழ் பொதுவான மொழியாகும் . 

நீண்ட கால மற்றும் நிகழ் கால தமிழை திருவள்ளுவர் மற்றும் பாரதியை கடக்காமல் அறியமுடியாது .இதில் நாமறிந்த வரையில் திருவள்ளுவரின் தமிழில் மத அடையாளங்கள் இல்லை (தற்போது திருவள்ளுவரை இந்துத்துவாவில் (இந்துக்கள் அல்ல, மனு தர்மத்தினர்) அங்கமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன). தமிழக பகுதிகளும், தமிழும் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. மனு தர்மத்தினர் தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்த உடன் தமிழை மெல்ல மெல்ல ஆக்ரமித்து கொண்டதன் பாரதூர விளைவுதான் பாரதியாரின் தமிழில் சுதந்திரம், மானுட கவிதைகளுடன் மதம் சார்ந்த தமிழும் எட்டிப்பார்த்தது .அது பாரதியாரின் தவறு அல்ல .இங்கு தான் நம்மை நாமே ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது .அதுதான் தமிழுக்கான இஸ்லாமியரின் பங்கு என்ன ? விடை வெகு சொற்பமே !.இங்கு தான் நாம் மிக அலட்சியமாக இருந்து விட்டோம் .இருக்கிறோம் .நாம் உள்வாங்கிய அழகிய நம் மார்க்கத்தின் இலக்கியங்களை முழு அளவில் தமிழ் மயமாக்க வில்லை .

அரபி என்னும் மொழியை நாம் வெறும் மொழியாக பார்க்க தவறியதுதான் நாம் தமிழை முழுமைக்கொள்ள முடியாமல் போனது.கண்ணியமிக்க நம் நபி(ஸல் ) அவர்களின் இறுதிநாட்களில் மொழிகள் குறித்த அவர்களின் பேச்சு மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியது .

அரபியைப்போல் தமிழும் மிக ஆழமானவை .நம் அழகிய மார்க்கத்தை அரபி மொழியின் அடிவேர் வரை எடுத்து சென்றது போல் தமிழில் இதுவரை இல்லை .தமிழில் உள்ள பல வகையான மொழியின் உட்கூறின் வடிவங்களிலும் நம் மார்க்கத்தின் மகிமைகள் வேர் விட செய்தல் மிக அவசியம் .நாம் பேசும் தமிழை பொதுவானதாக வைத்திருப்பதை நாம் உறுதி செய்தல் அவசியம் .

நாம் எழுதும் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் போது உறுதி செய்தல் அவசியம் .எவ்வாறுஎனில் ,

1.சகோதர இந்துக்களின் இலக்கியமோ அல்லது காவியங்களோ வருமானால் அதை நம் சகோதர இந்துக்களின் (இந்துத்துவாவினர் அல்ல) தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும்.

2.இந்துத்துவாவினரின் (மனு தர்மத்தினரின்) இலக்கியங்களை  இந்துத்துவாவினரின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

3.கிறிஸ்தவர்களின் இலக்கியங்களை கிறிஸ்தவர்களின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

மேலே சொல்லப்பட்டதைபோலே நம் மார்க்கத்தின் இலக்கியங்களை இஸ்லாமியரின் தமிழ் இலக்கியம் என்றே பதிய வேண்டும்.

நம் மொழியின் மீது இந்த புரிதல் அவசியம். இந்த புரிதல்கள் இல்லையென்றால் தற்போதைய பெருபான்மை வாதம் சத்தத்தில் நம் தமிழ் மொழி நம்மை விட்டு அந்நியப்படுத்தப்படும் .

--வள்ளுவ ,காந்தி நாட்டு இஸ்லாமியன்--

-harmys-
Abdul Rahman

காலைநேர நடையும் பள்ளியில்லாக் கவலையும் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2016 | , , , , , ,

பிஸ்மில்லாஹ்...

கடந்த ஆண்டு விடுமுறையில், இதே ஆகஸ்டு மாதம்!

தினமும் ஃபஜ்ர் தொழுதுவிட்டு ஓதவேண்டிய தஸ்பீஹ், திக்ர் மற்றும் துஆ
யாவும் முடித்துவிட்டு நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

தினமும் ஒவ்வொரு பகுதி, ஒவ்வொரு திசை.

ஒருநாள் முத்துப்பேட்டை சாலையில் நசுவினி ஆற்றுப்பலம் வரை. மறுநாள் ராஜாமடம் ஏரி வரை. அடுத்த நாள் மதுக்கூர் சாலை. இப்படியாக பல பகுதிகள், பல திசைகளில் நடை.

அன்று ஒரு நாள் C M P லைன் வழியாக பக்கத்து கிராமத்தை அடைந்து திரும்பி வரும் வேலையில் ஃபாரூக் மாமாவை சந்தித்து என்னை நானே அறிமுகம் செய்துகொண்டு (காரணம் பல ஆண்டுகள் கழித்து சந்திதோம்) தெருவில் நடந்த நிகழ்வுகள், குடும்ப செய்திகள் யாவற்றையும் நின்று கொண்டே சுமார் ஒரு மணி நேரம் பேசி, நடைப் பயிற்சியை மறந்தோம். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். எனக்கும் பிரிந்த சொந்த மொன்று வந்து சேர்ந்த சந்தோஷம். இழந்த ஒன்றை பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் அடைந்தது போன்ற ஓர் உணர்வை அவர்களின் முகத்திலிருந்து நான் அறிந்துகொண்டேன்.

சவூதிக்குப் புறப்படுவதற்கு முன் ஒரு நாள்! கால்கள் நடந்தது ஊரின் பெரிய ஜுமுஆ பள்ளி எனப் போற்றப்படும் மேலத் தெரு ஜுமுஆ பள்ளியைத் தாண்டி நடந்தேன். சானாவயல் வந்தது. அதனையடுத்து ரயில்வே கேட் வரைச் சென்று திரும்பினேன். திரும்பி வரும்போது ஓர் ஆழ்ந்த கவலை மேலிட்டது. மாஷா அல்லாஹ் ஊர் பல்கிப் பெருகிவிட்டது. குறிப்பாக மேலத் தெருவின் பெருக்கம் பக்கத்து கிராமம் வரை சென்றுவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்! ஆனால், "ஜுமுஆ பள்ளியைத் தவிர வேறு எந்த பள்ளிவாசலும் இங்கே இல்லையே. தொழுவதற்கு சுமார் 1 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளதே" என்பது தான் அந்தக் கவலை !

இந்தக் கவலையை யாரிடம் சொல்வது என்ற நினைப்பிலேயே திரும்பி வந்துகொண்டிருந்தேன். இதற்குச் சரியான ஆள் சகோ. ஹலீம் தான் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். தூரத்தில் ஒருவர் நடைப்பயிற்சிக்கு ஏற்றாற்போல் ஷூ அணிந்து வருவது தெரிந்தது. நெருங்கி வந்த போதுதான் ஆச்சர்யம், நான் நினைத்து வந்த அதே சகோ. ஹலீம். வழக்கமாக நான் அவரை செயலாளர் என அழைப்பேன். காரணம் ABM தமாம் கிளையின் சிறந்த செயலாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்டார் என்பதற்காக! கிட்டே வந்ததும் சலாம் கூறி நலம் விசாரித்து என்னுடைய கவலையைச் சொன்னேன். அதற்கு அவர்கள்: அதோ சுடுகாடு தாண்டி ஓர் இடம் பள்ளிக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். கூடிய விரைவில் கட்டுமானப் பணி தொடரும் எனக் கூறினார். மகிழ்ச்சி! அவசரகமாக தொடங்குங்கள் எனக் கூறிவிட்டு விடைபெற்றுத் திரும்பினேன். 

அடுத்த நாள் பயணம், சவூதி வந்து சில மாதங்கள் கழிந்தது. நமதூர் வலைத்தளத்தில் ஒரு செய்தி: "சானாவயல் பகுதியில் ஒரு சகோதரர் தனது சொந்த இடத்தில் பள்ளிவாசல் நிர்மானித்துள்ளார்" என்பது தான் அது! மிக்க மகிழ்ச்சியடைந்து அந்தச் செய்தியில் எனது கமென்ஸ்ஸும் போட்டேன். அந்தச் சகோதரருக்கு எனது துஆவும் பாராட்டும்.

அதேபோல், இந்த வருட விடுமுறையில் ஷாதுலிய்யா புதுப்பள்ளியில் லுஹர் தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டோவில் ஒரு விளம்பரம்: சானாவயலில் அன்னை ஃபாத்திமா (ரழி) மஸ்ஜிது என்ற செய்தி மிகவும் ஆச்சரியமான மகிழ்வைத் தந்தது. கடந்த ஆண்டு நாம் கவலைப்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ்! இந்த வடரும் அந்தப் பகுதியில் இரண்டு இறையில்லங்கள்.

சரியாக, போனவருடம் போல் புறப்படுவதற்கு முன் ஒரு நாள் அதே பகுதிக்குச் சென்று இரண்டு இறையில்லங்களையும் பார்வையிட்டு வந்தேன். அல்ஹம்துலில்லாஹ்! 

இதற்கிடையில் ஒரு சகோதரர் சொன்னர் "அடுத்த வருடம் வரும்போது இன்ஷாஅல்லாஹ்  இன்னுமோர் மஸ்ஜிது கூடுதலாக இருக்கும் என்று!

ஆம்! மஸ்ஜிது தேவையான பகுதிதான் அது. கூடிய விரைவில் திறப்பு விழா அழைப்பிதழ் வரும்.

பள்ளிவாசல்கள் பல்கிப் பெருகுவது சந்தோஷமே! அவற்றில் பித்அத்கள் இல்லாதவையாகத் திகழ வைப்பது அந்தந்த நிர்வாகிகளின் பொறுப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது எண்ணங்களைத் தூய்மையாக்கி, இஹ்லாஸுடன் பணிகளாற்ற அருள்புரிவானாக. ஆமீன்.

அபூஹாமித்
அல்லாஹ் நாடினால் மீண்டும் சந்திப்போம்…

ஈடிணையற்ற இறைவா! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2016 | , , ,

(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)

அல்லாஹ்!

ஊண் உருகி உடல் குறுகி
உயிர்  ஒடுங்கி உளம் நடுங்கி
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிற யாருமில்லை

உயிர்த்திருக்கும் அவன்
நிலைத்திருப்பதில் நிகரற்றவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பதில் நிரந்தரமவன்!

சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனுக்கில்லை!

வானங்களும் பூமியும்
வளி மண்டல நிரப்பிடமும்
விண்வெளியும் வெற்றிடமும்
சிந்தைக்கு எட்டாத
சித்தாந்தங்களு மென
யாவும் அவனுக்கே உரியன!

அவன்
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பில் பரிபாலனையில்
விதிப்பதில் வழங்குவதில்
காப்பதில் கற்பிப்பதில்
அவன் நாட்டமின்றி
எவரும் எதையும்
நிகழ்த்துதலோ
நிகழ்த்த முனைதலோ
நடவாதது!

அவன்
படைத்த படைப்பினங்களின்
முன்பும் பின்பும்
முன்னரும் பின்னரும்
இன்னும்
இடைப்பட்டவற்றிலுமான
யாவையும் பற்றிய
ஞானம் மிகைத்தவன்!

கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பெரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்து கொள்ளல் இயலாது!

எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகள் இல்லா
எழில்ப் பரிமாண இருக்கை
எம்மிறையாம் அவனுக்காய்
பூமிக்கும் வானங்களுக்குமென
வியாபித்திருப்பதாகும்!

வானங்களும் பூமியுமாகிய
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமல்ல
எந்தவொரு சிரமமுமில்லை

அவன்
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்புகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

இயற்கை இன்பம் – 18 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 06, 2016 | , , , ,

மீன்கள் 


வண்ணவண்ண  மீன்கூட்டம்  கண்ணா  டிக்குள்
               வாலாட்டி  நீந்துகின்ற  அழகைக்  கண்டே
எண்ணமெலாம்  பறிகொடுத்து  மகிழ்ந்து  நின்றே
               இறையோன்தன்  படைப்புகளின்  அற்பு  தத்தைக்
கண்ணெதிரே  காண்பவர்கள்  வியந்து  போற்றிக்
               காரிருளில்  விளக்கொளியாய்  இருக்கும்  அந்தத்
திண்ணமுடை  அத்தாட்சிக்  கிணங்கி  வந்து
               திகைப்புடனே  ‘படைத்தவனே!’ என்பா  ரன்றோ!

அதிரை அஹ்மத்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 050 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 05, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

சந்திக்கும்போது கைகுலுக்குதல்

''இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவ்விருவரும் கைகுலுக்கினால், அவ்விருவரும் பிரியும் முன் அவ்விருவரின் குற்றம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 887)

''நன்மையானவற்றில் எதையும் நீ குறைவாக எண்ணிவிடாதே! (அது) உன் சகோதரனை சிரித்த முகத்துடன் நீ சந்திப்பதாக இருப்பினும் சரியே! என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 892)

''நபி(ஸல்) அவர்கள், ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். (அப்போது அங்கிருந்த) அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்கள், எனக்கு பத்து குழந்தைகள் உண்டு. அவர்களில் எவரையும் நான் முத்தமிடமாட்டேன் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''இரக்கமில்லாதவன், (இறைவனால்) இரக்கம் காட்டப்படமாட்டான்'' என்று கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 893)

நோயாளியை நலம் விசாரித்தல்

"நோயாளியை விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவனுக்கு பதில் கூறுதல், நீதியைப் பேணுதல், அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல், விருந்திற்கு அழைத்தால் செல்லுதல், ஸலாமை பரப்புதல் ஆகியவற்றை எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: பராஇ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 894)

''ஒரு முஸ்லிம் மீது மற்றொரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து : 1) ஸலாமிற்கு பதில் கூறுதல், 2) நோயாளியை விசாரித்தல், 3) ஜனாஸாவில் கலந்து கொள்தல், 4) விருந்தை ஏற்றுக் கொள்ளல், 5) தும்மியவருக்கு பதில் கூறுதல் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 895)

''நிச்சயமாக அல்லாஹ், மறுமை நாளில், ''ஆதமின் மகனே! நான் நோயாளியாக இருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?'' என்று கேட்பான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?'' என்று மனிதன் பதில் அளிப்பான். ''என் அடியான் இன்னவன் நோயாளியாக இருந்தான். அவனை நீ விசாரிக்கவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனின் நோய் பற்றி விசாரித்திருந்தால், அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று அல்லாஹ் கூறிவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்தேன். எனக்கு நீ உணவு தரவில்லையே!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு எப்படி உணவளிப்பேன்?'' என்று மனிதன் கேட்பான்.

''என் அடியான் இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டு வந்து, அவனுக்கு நீ உணவு தரவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனுக்கு உணவு தந்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று இறைவன் கேட்டுவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். எனக்கு நீ குடிக்கத் தரவில்லை!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு நான் எப்படி குடிக்கத் தருவேன்'' என்று மனிதன் கேட்பான். ''என் இன்ன அடியான் உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ குடிக்கத் தரவில்லை. நீ அவனுக்கு குடிக்கத் தந்திருந்தால், அதை என்னிடம் (இன்று) நீ பெற்றிருப்பாய் என்பதை அறியவில்லையா? என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 896)

''நோயாளியை நலன் விசாரியுங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். அடிமையை விடுவியுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 897)

''ஒரு முஸ்லிம், தன் முஸ்லிமான சகோதரனை நலன் விசாரித்தால், அவனிடமிருந்து அவன் பிரியும் வரை சொர்க்கத்தின் 'குர்ஃபத்'ல் இருந்து கொண்டிருப்பான்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தின் ''குர்ஃபத்'' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது ''சொர்க்கத்தின் பழம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 898)

நோயாளிக்காக பிரார்த்திக்க வேண்டியவை:

''நான் என் உடலில் ஏற்பட்ட வலி குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது என்னிடம், உன் உடலில் வலி உள்ள இடத்தில் உன் கையை வைத்து, பிஸ்மில்லா என மூன்று முறை கூறு! பின்பு, ''அஊது பி இஸ்ஸத்தில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாஃதிர்'' என்று ஏழு முறை கூறு! என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

துஆவின் பொருள்:

அல்லாஹ்வின் கண்ணியம் அவனது சக்தி மூலம் நான் அடைந்துள்ள மற்றும் பயப்படுகின்ற தீமையை விட்டுப் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லா என்ற உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 905)

''நபி(ஸல்) அவர்கள், ஒரு கிராமவாசியை நோய் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர்கள் எவரையேனும் நோய் நலம் விசாரிக்கச் சென்றால், ''லா பஹ்ஸ தஹுருன் இன்ஷா அல்லாஹ்'' என்று கூறுவார்கள்.

துஆவின் பொருள்:

பரவாயில்லை! அல்லாஹ் நாடினால் குணமாகும்''.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 907)

மரண வேளையில் ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' வை சொல்லித் தருதல்:

''ஒருவரின் இறுதிச் சொல்லாக ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' ஆகிவிடுமானால், அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆத் (ரலி)  அவர்கள் (அபூதாவூது, ஹாகிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 917)

''உங்களில் இறந்து விடும் நிலையில் உள்ளவர்களுக்கு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்பதைக் சொல்லிக் கொடுங்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 918)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. (102-1,2)

அவ்வாறில்லை! அறிவீர்கள்.  பின்னரும் அவ்வாறில்லை மீண்டும் அறிவீர்கள். (102-3,4)

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். (102-5,6)

பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். (102-7)

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (102-8)
(அல்குர்ஆன்: 102 – அத்தகாஸுர் - அதிகம் தேடுதல்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

முடங்கிப்போன "முஸ்லீம்களின் பொருளாதாரம்" 31

அதிரைநிருபர் | August 04, 2016 | , ,

இந்த பகிர்வை எழுத தூண்டுகோலாக இருந்த சகோதரர் யாசிர் அவர்களுக்கு நன்றி.
                                                                    
சரி விசயத்துக்கு வருவோம்

இதன் ஆச்சர்யம் எது என்று ஆராய்ந்தால் வரதட்சணையை அறிமுகப்படுத்திய முதல் துரோகியும் ..அதை ஒரு வேதவாக்குமாதிரி காப்பாற்றி வரும் சில "பெருசுங்க'ளும்தான். இந்த நடைமுறையில் அழிந்தது சில இளைஞர்களும்தான் என்றால் அது மிகை இல்லை. வரதட்சணை வாங்கியதன் மூலம் படிக்காமலும் , சம்பாதிக்காமலும்ஊர் சுற்றும் சில வெறும்பயல்கள் தனக்கு ஏதோ ஓரு திறமை இருக்கிறது என்பது போல் ஊரில் நடமாடுவது பிறகு பிழைக்கபோகும் நாட்டில் உண்மை உச்சந்தலையில் அடித்த மாதிரி பாடம் நடத்தும்போது தடுமாறுவதும் உள்ளங்கை நெல்லிக்கனி [ என்னா உதாரணம் இது ...வேறு கனி வைத்தால் கண்ணுக்கு தெரியாதா?]

முதலில் ஒரு 25 வருட வரதட்சணையின் பரிணாமத்தை பார்ப்போம்.

நிச்சய தார்த்தம் என 10 பேரை கூப்பிட்டு கேசரி / கொஞ்சம் மணிக்காரபூந்தி +டீ என இருந்த விசயம் இப்போது அரசியல் கட்சிக்கு ஆள் சேர்ப்பதை விட மோசமாகி 100 பேரை கூப்பிடுகிறேன் 200 பேரை கூப்பிடுகிறேன் மோட்டோர் சைக்கிள் / லேப் டாப் கம்ப்யூட்டர் [VCD/DVD ஓடுமா காக்கா என அப்ரானியா கேட்கும் மாப்பிள்ளைகளுக்கும்] / பால்குடம் / 10, 15 சகன் அல்வா / செப்புக்குடம் , சில்வர்குடம் / அமுல்ஸ்ப்ரே , பூஸ்ட், சீனி/ வாசிங் மெசின், பவுன் நகை , மணைக்கட்டு....இப்போது சொல்லுங்கள் இது எல்லாம் வரதட்சணையின் புதிய பரிணாமம் எப்படி முஸ்லிம்களிடம் ஒரு வைரஸ் மாதிரி நுழைந்திருக்கிறது???.

நிச்சயதார்த்ததுக்கும் இவ்வளவு பில்டப்பா என கேட்டால் நம்மை ஏதோ தொண்டி,நம்புதாலையிலிருந்து பிழைக்க வந்தவனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை. இதற்கு பெயர் வேண்டுமானால் வட்டார வழக்குபடி பெயர் வைத்துக்கொள்ளலாம்..மொத்தத்தில் இது ஒரு நவீன திருட்டு.சமிபத்திய இஸ்லாமிய புரிந்துணர்வில் முன்பு வரதட்சினை வாங்கியவர்கள அதை திருப்பி கொடுக்கும் அல்லது கொடுக்க நினைக்கும் நிலை கண்டு சந்தோசம்.


நம் ஊர்ப்பக்கம் ஏன் முஸ்லீம்கள் தொடர்ந்தாற்போல் வசதியாக இல்லை.?

பெண்களுக்கு வீடு என்ற சிஸ்டம் பெண்ணை பெற்றவர்களின் பொருளாதார விசயத்தில் ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது.

ஆனால் அந்த வீட்டை கட்ட ஒரு பொறுப்புள்ள தகப்பனின் பல கால உழைப்பும் வருமானமும் அதற்காகவே செலவாகிறது.வீடு என்பது வருமானம் தரும் சொத்தல்ல என்று தெரிந்தும் அதற்காக பெரும்பணம் / வங்கியில் நகைக்கடன் / உறவினர்களிடம் கைமாத்து [ ஆயிரக்கணக்கில்] செலவழிப்பது ஏன் என்பது தெரியவில்லை.வசதியாக வீடு கட்டி வாழ்வதில் தவறில்லை...ஆனால் வீட்டில் உசுப்பேத்தும் பெண்களின் ஆசைக்காக கடனாளியாகி பிறகு கடனை அடைக்க உங்கள் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்..அதற்க்கு பதில் உங்கள் வருமானத்தை பெருக்கும் வழிகளில் கவனம் செலுத்துங்கள்.

கல்யாணம் என்ற பெயரில் பெண்ணை பெற்ற தகப்பனை 'ஸ்பெசல் மொட்டை" அடிக்க நிறைய சம்பிரதாயங்களை நம் ஊரில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.அதற்க்கக கல்யாணங்களை ஏதோ மகிழ்ச்சி இல்லாத விசயம் மாதிரி ஒரு விமரிசை இல்லாமல் நடத்தவும் என நான் பாடம் எடுக்கவில்லை. மாப்பிள்ளையை பெற்றவர்கள் கொஞ்சம் பெண்ணை பெற்றவர்களையும் நினைத்துப்பார்க்க சொல்கிறேன்

"எங்களுக்கா கேட்கிறோம் அவ்வ மவளுக்காதானே எல்லாம்" என்று தத்துவம் பேசும் ஞானிகளே ...எங்கே இருந்து வந்தது இந்த பெண்ணுக்கு வக்காலத்து..எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு வருசமாய்?

வரதட்சணை வாங்குவது தவறு எனும் விழிப்புணர்வு வர முக்கியம் நாம் செய்ய வேண்டியது வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்த மாப்பிள்ளையின் பெயரையும் அவர்களது பெற்றோரின் பெயரையும் ஜும்மா பிரசங்கத்தின் போது ஒரு சிறு அறிவிப்பாக செய்யலாம். ஆடித்தள்ளுபடியையும் , நகைக்கடை/ புடவைக்கடை விளம்பரங்களையும் காது கொடுத்து கேட்கும் நம் ஊர்சனம் நிச்சயம் இதையும் கேட்கும்.

பெண்ணுக்கு வீடு என்பதால் நம் ஊரில் நிறைய புது வீடு இருக்கிறது, ஆனால் அதன் அஸ்திவாரத்துக்குள் கருங்கல்லும் சிமண்ட்டும் போடுவதற்க்கு பதில் நம் ஊர் ஆண்களின் வாழவேண்டிய இளமைக்காலமும் கனவுகளும் மொத்தமாக புதைக்கப்பட்டிருக்கிறது.

வரதட்சணை கேட்பதற்க்கு எதிர்காலத்தின் பொருளாதார சவால்களின் மீதான பயம் தான் காரணமா?..

நீங்கள் இந்த உலகத்தின் காற்றை சுவாசிக்குமுன் உங்களுக்கான தாய்ப்பாலை உருவாக்கி வைத்து இருக்கும் இறைவன் எப்படி உங்களை ஏமாற்றுவான்????

ஜாஹிர் ஹுசைன்

மாத்தியோசி 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2016 | , , ,

நமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம்

நம்மைப் பிரதிபலிக்கிறது.

குழப்புகிறதோ?

ரொம்ப சிம்பிள்.

நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.


நீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால்? பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு... கஷ்டம்.

நம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம் தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..

சரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது?

அது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.

அந்த சுயபிம்பம் தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

நாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்!

அந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்!

பள்ளியில், கல்லூரியில் ஏதாவது ஒரு பாடம் படு்த்தியெடுக்கும். ஒருவர் பௌதிகத்தில் வீக்காக இருப்பார். “என்னதான் தலைகீழாக நின்றாலும் இது என் மண்டையில் ஏறாது” என்ற முடிவிற்கே வந்துவிடுவார். ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பெளதிக விதி சற்றுப் புரியாமல் ஆகி, அதைத் தொடர்ந்து அந்தத் தேர்வில் சற்றுக் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அலர்ஜியாக உருப்பெற்று, ”ம்ஹும்! காப்பி அடிக்கலாமா? பிட்டு அடிக்கலாமா?” என்று குறுக்குவழிக்கு மனம் தயார்பட ஆரம்பித்திருக்கும்.

மனம் மேலும் மேலும் அந்தப் பாடத்தில் அவரைப் பின்தங்க வைக்கும். அப்படியே தப்பித் தவறிச் சற்று நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டாலும், ”ஹ! எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே!” என்றுதான் மனம் நிம்மதி அடையும்.

பௌதிகம், உதாரணம் மட்டுமே! வாழ்க்கையில் ஒருவர் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைந்து இருக்கலாம், வீக்காக இருக்கலாம்.

சைக்களில் டபுள்ஸ் அடிக்கும் போது ஒருமுறை விழுந்திருப்பார். அதன் பிறகு தம்மால் டபுள்ஸ் அடிக்க முடியாது என்று முடிவெடுத்து அதையே நம்ப ஆரம்பிப்பார். தாம் மனதளவில் அதைப் பலமாய் நம்புவது மட்டுமில்லாது, பார்ப்பவரிடமெல்லாம் அதைப் பறை சாற்றிககொள்ளவும் செய்வார்.. எதிர் வீட்டு மாமா, அடுத்த வீட்டு வேலைக்காரி, காலையில் பால் சப்ளை செய்பவர் என்று யாரிடமெல்லாம் சகஜமாய்ப் பேசுவாரோ அத்தனைப் பேரிடமும் அவரது பலவீனம் விளம்பரம் ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அப்படிச் சொல்லிக் கொள்கிறாரோ மற்றவர்களும் அந்த அளவுக்குஅதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அதைக் கொண்டு மனம் மேலும் தன்னை அப்படியே நம்ப, அவரது பலவீனமான சுயபிம்பம் வலுவடைந்து விடுகிறது.

இதை மாற்ற, நம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அதற்கு என்ன செய்யலாம்.

மாத்தியோசி!

நம்முடைய பாஸிட்டிவ் தன்மைகளை உணர்ந்து நம்மால் நம் குறைகளைக் களைந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை முதல்படி. தம்முடைய சக்தியையும் வலிமையையும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அதுவே ஒருவரை வேகமாய் முன்னேற வைக்கும்.

“என்னதான் ஸ்பின் போட்டால்லும் என்ன? துரத்துகிறேன் பார் அதைப் பவுண்டரிக்கு” என்று நினைத்தால் அதுதான் தன்னம்பிக்கை. அம்பயர் கையை வேகமாய் வலமும் இடமும் ஆட்ட வேண்டியது தான்.

மாறாக “இந்த ஸ்பின்னெல்லாம் தாங்குவேனா” என்று நினைத்தால் அம்பயர் ஒற்றைக் கையின் ஒற்றை விரலை மேலே நீட்டி விடுவார்.

“வர வருமானத்திலே எப்படித் தான் குப்பைக் கொட்டுவதோ” என்று நினைத்தால் மாசா மாசம் பற்றாக்குறை தான்.

“எப்படியும் சமாளிச்சுடலாம்” என்று நினைத்துப் பாருங்களேன். மாயம் நிகழும்.

இது இப்படியிருக்க,

தமது வாழ்க்கையில் ஓரளவு தான் நல்லது நடக்கும் என்று சிலரது மனம் தேவையில்லாமல் ஒரு வரைமுறை வைத்திருக்கும். அவரது வாழ்க்கையில் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள், ”அதெப்படி எல்லாமே இவ்ளோ சூப்பரா நமக்கு நடந்து கொண்டிருக்கிறது” என்று அவரது மனம் ஆச்சரியமும், இனந்தெரியா பதட்ட நிலையையும் அடைய, அடுத்து ஏதாவது ஒரு தீயது நிகழலாம்.

“அதானே பார்த்தேன். அப்படி நமக்கு எல்லாமே ஒழுங்கா நடந்துட்டாலும்?” என்று அப்பொழுதுதான் மனம் சமாதானம் அடையும்.

மனதை இன்பமாக வைத்துக் கொள்ள வரைமுறை தேவையில்லை. நம்மை விட வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எத்தனைக் கோடி உள்ளார்களோ அதே போல் நமக்கும் கீழே உள்ளவர் கோடி.

எனவே நமது சுயபிம்பத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள நமது வாழ்க்கையின் தரம், அமைதி, நோக்கம் இவற்றைத் தரமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

இங்கு ஒன்றை மிகக் கவனமாய் மனதில் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான சுயபிம்பம் என்பதற்கும் கர்வம், அகந்தை தலைக்கணம் போன்ற சொற்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை உணர வேண்டும்.

இல்லையென்றால் என்னாகும்?

தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடன் நாம் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும்.

மற்றவை? சட்டசபை, நாடாளுமன்றம், என்று எங்காவது நம்மை அனுப்பி வைக்கலாம்.

மனம் மகிழ, தொடருவோம்...

இந்நேரம்.காம்-ல் 09 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை

நூருத்தீன்
நன்றி : 

மண்டியிட மறுத்த மருத நாயகம்..2 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 02, 2016 | ,

தொடர் – 26
மருதநாயகம் என்கிற கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் அவர்களுடைய இந்த வரலாற்றின் முதல் அத்தியாயம் ,  அவர் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் எவ்வாறெல்லாம் உதவிகரமாக இருந்தார் என்பதை பற்றிப் பேசியது. அதன் பின் அவர் உரிமைக்குரல் எழுப்பும் வீரமகனாக மாறிய வரலாற்றை இந்த இரண்டாம் அத்தியாயம் சொல்லும். முதல் அத்தியாயத்தில் அவர் அன்னியர் இட்ட ஏவல்களைச் செய்யும் – இன்னும்  சொல்லப்போனால் அவர்களுடைய அடியாட்களில் ஒருவராகவே வாழ்ந்தார். அந்நிய ஆதிக்க சக்திகளின்  கட்டளைக்குக் கட்டுப்பட்ட ஒரு வேட்டை நாயாகவே மருதநாயகம் வாழ்ந்தார் அதன் மூலம் ஏற்றமும் பெற்றார். என்பதுதான் அவரது வாழ்வின் முதல் பக்கம். இது ஒரு வகையில் துரதிஷ்டமே . அதே நேரம் யாவும் இறைவனின் கட்டளைப்படித்தான் நடக்கிறது. ஒரு கொலைகார பாதகன் என்று அறியப்பட்டவன் கூட இறைவனின் நாட்டம் இருந்தால் நல்ல ஆட்சியாளனாக  மாறிவிட இயலும். அப்படித்தான் இறைவனின் நாட்டமானது, அன்னியர்  கைகளில் பொம்மையாக இருந்த  கான் சாகிபை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. 

மதுரை மற்றும் திருநெல்வேலி சீமைகளை உள்ளடக்கிய தென் மண்டலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட கான் சாகிப் , தனது ஆட்சித்திறமையாலும் மனிதாபிமான நடவடிக்கைகளாலும் மக்களின் மனம் கவர்ந்தார். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்"  என்ற பாடலுக்கு இலக்கியமாக பல நற்பணிகளைச் செய்து கருணையும் காருண்யமும் மிக்க கள நாயகராக கான் சாகிப் பவனி வந்தது ஆற்காட்டு நவாபுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. தான்  உருவாக்கிய ஒரு சாதாரண சிப்பாய்,  இப்படி கவர்னராகி கலக்கிக் கொண்டிருப்பது ஆற்காட்டு நவாப்பின் நல்ல பாம்புக் கண்ணை உறுத்தியது. அந்த ஆற்காட்டுப் பாம்பு படமெடுத்து ஆட  ஆரம்பித்தது. 

ஒரு மரம்,  மனிதனைப் பார்த்து, "நீ என்னை செடியாக நட்டு இருக்கலாம்; எனக்கு நீரும் ஊற்றி இருக்கலாம் ; அதற்காக நான் உன்னைவிட உயரமாக வளரக் கூடாதா ?" என்று கேட்டதாம். 

இதே மனநிலைதான் கான்சாபிடமும் உருவானது. இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாபுக்கும் பனிப்போர் தொடங்கியது. வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் ஒருவருக்கொருவர் ஆயுதப் போரை ஆரம்பித்து வைப்பது மனத்தளவில் ஏற்படும்  பனிப்போர்தானே! அதே கதைதான் இங்கும் ஆரம்பமானது.  

கான் சாகிப் கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு நவாபுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் வருவாயும் வரிவசூலும் பெருகினாலும்,  கான் சாகிப் அந்த வட்டாரங்களில் பெரிய மனிதராக உருவாவது இருவருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரும் ஆபத்து வரலாம் என்று கருதினார்கள்.  பொறாமை கொண்ட ஆற்காட்டு நவாப்,  கான் சாகிபின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப் படுத்தவும் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கான் சாகிப் வசூலிக்கும் வரித்தொகையை ஆற்காட்டு நவாபாகிய அவரிடமே நேரடியாக செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும் மற்றவர்களும் கூட  அவர் மூலம்தான் வரிசெலுத்த வேண்டுமென்றும் ஒரு  புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதற்காக கிழக்கிந்தியக் கம்பெனியிடமும் போட்டுக் கொடுத்து அதற்கான அனுமதியும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆற்காட்டு நவாபின் இந்தச் செயல் கான் சாகிபுக்கு எரிச்சலூட்டியது. 

தனது எரிச்சலை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கான் சாகிப் எடுத்துரைத்தபோது அவர்கள் அளித்த பதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. கான் சாகிப்  கவர்னராகவே இருந்தாலும் ஆற்காட்டு நவாபுக்குக் கட்டுப்பட்ட பணியாளர்தான் என்று கூறியது கிழக்கிந்தியக் கம்பெனி. அவர்களது இந்த பதில் கான் சாகிபின் உள்ளத்தில் அவரது சுயமரியாதையை அசைத்துப் பார்த்தது. ஆஹா ! தவறு செய்துவிட்டோமே  இதுவரை பாம்புகளுக்குப் பால் வார்த்து இருக்கிறோமே! என்று உணர வைத்தது. அதனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்த உத்தரவை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார் கான் சாகிப். இதனால் யார் இருவரின் கைப்பாவையாக இதுவரை செயல்பட்டாரோ அவ்விருவருக்கும் கான் சாகிப் எதிரியாகிவிட்டார். இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாகிபுக்கும் இடையே பகைமைப் பயிர் தழைத்து வளர ஆரம்பித்தது. 

அந்த நேரம் டில்லியின் அரசுப் பிரதியாக இருந்த ஷாவும் ஹைதராபாத் கிமாம் அலியும் கான் சாகிபின் உதவிக்கு வந்து கிழக்கிந்தியக்  கம்பெனியிடம் கான் சாகிபுக்காக வாதாடினார்கள். சட்டபப்டி , கான் சாகிப்தான் மதுரை மற்றும் தென் மண்டலத்துக்கு கவர்னர் என்று அவர்கள் வாதாடியதை கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்க மறுத்தது.  

ஏற்கனவே செலுத்திக் கொண்டிருந்த ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்பதை ஏழு லட்சம் என்று அதிகரித்து செலுத்திடவும் ஆனால் தனது தனது சுதந்திர அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும் கான் சாகிப் ஒரு சமரச திட்டத்துக்கு முன்வந்தார். ஆனால் அவரது இந்த அதிகரித்த தொகையைக் கூட ஏற்க நவாபும் கம்பெனியும் மறுத்துவிட்டனர். இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் , தங்களை விட மக்களின் செல்வாக்குப் பெற்று ஒருவன் நாயகனாக  உருவாவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான். அத்துடன் தென் மண்டலத்தில் இருந்த சில இனத்தைச் சேர்ந்த வணிகர்கள், கான் சாகிப் மீது பொறாமை கொண்டு கான் சாகிப் பிரிட்டிஷாருக்கு எதிராக மக்களைத் தூண்டியும் திரட்டியும்   வருவதாகவும் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு உணர்வை  மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும் குலத்தொழிலின்படி  “கோள்”மூட்டி விட்டனர்.  

இந்தப்  பூசாரிகள் போட்ட சாம்பிராணிக்கு பிரிட்டிஷ் நிர்வாகப் பேய்  ஆட ஆரம்பித்தது .  கேப்டன் மேன்சன் என்ற மனுஷனை அழைத்து கவர்னர்  கான் சாகிபை  கைது செய்து கொண்டுவரும்படி உத்தரவிட்டனர். இந்த செய்தியறிந்த கான் சாகிபின் உள்ளத்தில் உறங்கிக்  கொண்டிருந்த தன்மானச் சிங்கம் சிலிர்த்து  எழுந்தது. ஆயிரம் ஆனாலும் சுதந்திரம் சுதந்திரம்தான் அடிமைத்தனம் அடிமைத்தனம்தான் என்று உணர ஆரம்பித்தார்.  இந்த உணர்வின் உந்து சக்தியின்   விளைவாக கவர்னர் கான் சாகிப் தன்னை மதுரைக்கு மன்னராக அதாவது மதுரையின் சுதந்திர  சுல்தானாக தன்னைப் பிரகடனபடுத்தி, அந்தப் பகுதி முழுதும் தனது ஆளுமைக்கு உட்பட்டது இதில் அன்னியர் வந்து புக இயலாது என்று பிரகடனப் படுத்தினார். தான் இனி தானே சுயமாக இயங்கும் -   யாருடைய தளைக்கும் உத்தரவுக்கும் கட்டுப்படாத சுதந்திர சுல்தான் என்று ஊரெங்கும் அறிவித்தார். 

இப்படி அறிவித்துக் கொண்டதற்கு ஆற்காட்டின் தரப்பிலிருந்து ஆங்கிலேயர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருமென்று எதிர்பார்த்த கான் சாகிப் தனக்கு ஆதரவாக தோளோடுதோள் நின்று போராட  27,000 வீரர்களைக் கொண்ட பலமான படையையும் தயாராகத் திரட்டினார்.  எதிர்க்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் சில பிரெஞ்சு நாட்டு வீரர்களும் கான் சாகிபுடன் அவருக்கு ஆதரவாக அணிவகுத்தனர். 

ஆனால் ஆங்கில ருசி கண்ட பூனை அவ்வளவு சுலபமாக தனது மண்ணாசையையும் சுளையாகக் கிடைத்துக் கொண்டிருந்த வரி வசூல் தொகையையும்  விட்டு விடுமா? 1763 செப்டம்பர் மாதம் கலோனியல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்க திரண்டது ஆங்கிலேயருக்கு ஆதரவான படை.  இதற்கு முன் ஆங்கிலேயருக்கு ஆதரவாக யார் யாரையெல்லாம் கான் சாகிப் தாக்கி தனக்கு எதிரியாக்கிக் கொண்டாரோ அந்த பாளையக்காரர்களும் தஞ்சை, திருவிதாங்கூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் , சிவகங்கை ஆகிய அனைத்து சமஸ்தான்களும் கான் சாகிபை பழிவாங்கவும்  ஆங்கிலேயருக்கு  பயந்து கொண்டும்  தங்களின் படைகளை  அனுப்பினர். இவர்களுடன் நவாபின் படையும் சேர்ந்துகொண்டு ஒரு பெரும் கூட்டமே கான் சாகிபுக்கு எதிராக கரம் கோர்த்தனர். இந்த சண்டை  22 நாட்கள் நீடித்தது . ஆனால் ஆங்கிலேயருக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. அவர்கள் தரப்புக்கு பலத்த  சேதத்தை உண்டாக்கினார் கான் சாகிப் 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். ஆங்கிலப் படையும்  அதன் ஆதரவுப் படைகளும்  நிலை குலைந்து பின் வாங்கின.

தோல்வி முகம் கண்டு கொண்டிருந்த ஆங்கிலப் படை தனது தோல்வியைத் தவிர்க்க பம்பாய் மற்றும் சென்னையிலிருந்து பல எண்ணிக்கையிலான பெரும் படைகளைக் கொண்டு வந்து குவித்து மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.  ஆனாலும் இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரும் கூட  ஆங்கிலேயருக்கு வெற்றி கிட்டவில்லை. முற்றுகை இடப்பட்ட கான் சாகிபின்  மதுரைக் கோட்டைக்குள் இத்தனை படைகளின் ஈ காக்காய் கூட நுழைய முடியவில்லை. பதிலுக்கு ஆங்கிலேயரின்  படையில் 160 பேர்கள் பலியானார்கள். இதனால் போரில் பொருதி கான் சாகிபை வெற்றி கொள்ள இயலாது குள்ளநரித்தனமே குணமுள்ள மருந்து என ஆங்கிலேயர் நினைக்கத் தொடங்கினர்.  

ஆகவே கோட்டைக்குள் செல்லும் உணவையும் குடிநீரையும் நிறுத்தினார்கள். இதன் காரணமாகக்  கோட்டைக்குள் இருந்த வீரர்களிடையே ஆங்கிலேயர் நினைத்தபடி குழப்பமும் மனச் சோர்வும் ஏற்பட்டது. கான் சாகிப் எப்படியாவது உயிருடன் எங்காவது தப்பித்து  போய்விடலாம் என்று போட்ட திட்டமும் நிறைவேறாமல் போனது.  இதனால் உடனிருந்த பிரெஞ்சு நாட்டுத் தளபதி  கான் சாகிப்பிடம் சரணடைந்துவிடும் திட்டம் ஒன்றைக் கூறினான். இதனால் கோபமுற்ற கான் சாகிப் பிரெஞ்சுக் காரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் . வெள்ளைக்காரனின் கன்னத்தின் கீழ் வானம் சிவந்தது. இதன் காரணமாக கூட்டணிக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டது. கான் சாகிபின் இந்தக் கோபம் அவரது அழிவுக்குக் காரணமாக இருந்தது. 

கோட்டைக்குள் இருந்தபடியே பிரெஞ்சுத் தளபதி சிவகங்கை தளபதி தாண்டவராயப் பிள்ளை மூலமாக எதிரிகளைத்   தொடர்பு கொண்டு மதுரைக் கோட்டையில் திவானாக இருந்த சீனிவாசராவ் பாபா  சாஹிப் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டி கான் சாகிபைப் பிடித்துக் கொடுக்க சம்மதித்தான்.  1764 அக்டோபர்  13 ஆம் நாள்  முகமது யூசுப்கான் ஆகிய கான் சாகிப்  காலைத்தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது முதுகுக்குப் பின் திரண்ட அந்த நம்பிக்கை துரோகிகள் கான் சாகிபை அவர் தலையில் கட்டியிருந்த முண்டாடாசைத் தரையில் தட்டிவிட்டு உதறி,  அதைவைத்து கான் சாகிபின் கையும் காலையும் கட்டிப் போட்டனர். உடனே கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. கர்ஜித்துக் கொண்டிருந்த கான் சாகிப் இப்படி சூழ்ச்சியாலும் துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு  கைது செய்யப்பட்டார். 

15-10-1764 ஆம் நாள் மதுரையில் சம்மட்டிபுரத்தில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ முகாமில் அமைக்கபட்டிருந்த தூக்கு மேடை!  ஆற்காட்டு நவாப் அணி சூழ்ந்திருக்க  கண்ணைக் கட்டிக் கொண்டுவரபப்ட்ட கான் சாகிப் அங்கிருந்த தூக்குமரத்தில் தூக்கிலடப்பட்டார். 

இந்தக் கொடுமை இத்துடன் நிற்கவில்லை. இறந்து  விறைத்துப் போன கான் சாகிபின் உடலின் பாகங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டன. இறந்து போன பின்னும் கூட கான் சாகிபின்  உடலைப் பார்க்கவே ஆங்கிலேயரும் பாளையக்காரர்களும் அஞ்சினர். கான் சாகிபின் தலை துண்டிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டது. கைகள் துண்டாக்கபப்ட்டு பாளையங்கோட்டைக்கும் கால்கள் தஞ்சாவூருக்கும்  திருவிதாங்கூருக்கும் ஆளுக்கொன்றாக அள்ளிக் கொண்டு போனார்கள். கான் சாகிபின் தலையும் கைகளும் கால்களும் இழந்த நடு உடல் பகுதி மட்டும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் புதைக்கப்பட்டது. 

அவர் புதைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1808 ல் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டு ஒரு தர்கா போல இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.. கான் சாகிப் பள்ளிவாசல்  என்று சம்மட்டிபுரத்தில் அழைக்கப்படும் அந்தப் பள்ளியின் அருகிலேயே தொழுகை நடத்தும் பள்ளியும் ஷேக் இமாம் என்பவரால் கட்டிக் கொடுக்கப் பட்டு திகழ்ந்து வருகிறது.  

மகுட முடிடால் விருதிலங்க
மதயானை வளர்த்தெடுத்த வரிவேங்கைக் குட்டி
விகடமிடுவோர்கள் குல காலன்
விசையாலீம் குலம் விளங்க வரு தீரன்

என்றெல்லாம்  தென்பகுதிச் சீமையில் பாடப்படும் கிராமியப்  பாடல்களில் மருத நாயகத்தின் புகழ் பாடப்பட்டு வருகிறது.   

மருதநாயகம் கான் சாஹிப்  அவர்களின் வரலாற்றைப் படிக்கும் போது அவர் நல்லவரா கெட்டவரா என்று கமலஹாசனைப் பார்த்து ஒரு சிறுவன் கேட்பதுபோல்தான் நாம் கேட்க வேண்டுமென்று நமக்குள் தோன்றுவது இயல்பான கேள்விதான்.  காரணம் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயரின் படைவீரராக அவர்களிட்ட கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துப் பணியாற்றிய  கான் சாகிப் , பின்னாளில் தனக்கே ஒரு நெருக்கடிவரும்போதுதான் சுதந்திரப்  போராட்ட வீரராக மாறினார். ஆனாலும் தான் செய்த தவறை உணர்ந்தது அந்நியன் அந்நியன்தான் என்ற உணர்வுடன் அவரது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட நற்பணிகளையும் இறுதி நாட்களில் எதிரிக்கு மண்டியிட மறுத்து எதிர்த்துப் போராடிய வீரத்தையும் மறைந்த  பின்னும் அவரது உடல்கூட சின்னா பின்னபடுத்த பரிதாபத்துக்குரிய வரலாற்றுச் செய்தியையும் காணும்போது , விடுதலை வீரர்களின் பட்டியலில் மண்டியிட மறுத்த மருத  நாயகத்தின்  பெயரையும் நமது உதடுகள் உச்சரிக்கின்றன.    

இறைவனருளால்  நிறைவுற்றது. 

அன்புகாட்டிப் படித்த அனைவருக்கும் நன்றி. 

இபுராஹீம் அன்சாரி
ebrahim.ansari@adirainirubar.in
==================================================================
எழுத உதவியவை : 
திரு. ந.ராசையா எழுதிய “ மாமன்னன் பூலித்தேவன் “
திரு. ந.ராசையா எழுதிய “ இந்திய விடுதலைப் போரின் முதல் முழக்கம்”
ஹுசைனி எழுதிய “பாண்டியர்களின் வரலாறு” 
மஹதி எழுதிய “ மாவீரர் கான்சாகிப்.”
Yusuf Khan the Rebel Commander by S Charles Hill.
திரு.  எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுதிய வீர விலாசம் எனும் நூல்.

எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2016 | ,

கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.

சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமான நிதி இந்திய ராணுவத்திடம் இல்லாததால் அதனை திரட்ட ஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி. அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.

இதற்காகவென்று தேசிய பாதுகாப்பு வைப்பு நிதி (National Defense Fund) ஒன்றை ஏற்படுத்திய இந்திய அரசு, அதன் மூலம் செல்வ செழிப்புள்ள இந்திய குறுநில மன்னர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.

ஆபத்தான நிலைமையைப் புரிந்து பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார். இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார் லால் பகதூர் சாஸ்திரி.

இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி வள்ளல் உஸ்மான் அலீயை சந்தித்தபோது...அவர் சென்று சந்தித்தவர் ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan). நேரில் ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நிலைமையை விளக்கினார்.

கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம் மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார். தனது கருவூலத்திலிருந்து ஐந்து டன்கள் எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார். (வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600 கோடிகளுக்கும் மேல்)

ஹைதராபாத் நிஜாமின் இந்த உத்தரவு இந்தியாவையே உலுக்கியது. இந்திய பாதுகாப்பு நிதிக்காக உதவி கேட்டால் தனது சொத்தின் ஒரு பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு எங்கும் பரவியது.

இன்றைய தேதிவரை இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த் திகழ்ந்த ஹைதராபாத் நிஜாம், கடந்த பெப்ரவரி 24, 1967 அன்று மறைந்தார்.

அன்று இந்தியாவை பலப்படுத்திய இந்த நிதி பலர் அறிந்திராத நிகழ்வு. முந்தைய ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறி புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இந்திய வரலாற்று ஆவணங்களை எரித்து விடலாம். அழித்து விடலாம். ஆனால், நடந்த காலத்திற்குச் சென்று திருத்தி விட முடியாது என்பதே உண்மை.

அபூ ஸாலிஹா
நன்றி : 


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு