Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈடிணையற்ற இறைவா! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2016 | , , ,

(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)

அல்லாஹ்!

ஊண் உருகி உடல் குறுகி
உயிர்  ஒடுங்கி உளம் நடுங்கி
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிற யாருமில்லை

உயிர்த்திருக்கும் அவன்
நிலைத்திருப்பதில் நிகரற்றவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பதில் நிரந்தரமவன்!

சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனுக்கில்லை!

வானங்களும் பூமியும்
வளி மண்டல நிரப்பிடமும்
விண்வெளியும் வெற்றிடமும்
சிந்தைக்கு எட்டாத
சித்தாந்தங்களு மென
யாவும் அவனுக்கே உரியன!

அவன்
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பில் பரிபாலனையில்
விதிப்பதில் வழங்குவதில்
காப்பதில் கற்பிப்பதில்
அவன் நாட்டமின்றி
எவரும் எதையும்
நிகழ்த்துதலோ
நிகழ்த்த முனைதலோ
நடவாதது!

அவன்
படைத்த படைப்பினங்களின்
முன்பும் பின்பும்
முன்னரும் பின்னரும்
இன்னும்
இடைப்பட்டவற்றிலுமான
யாவையும் பற்றிய
ஞானம் மிகைத்தவன்!

கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பெரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்து கொள்ளல் இயலாது!

எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகள் இல்லா
எழில்ப் பரிமாண இருக்கை
எம்மிறையாம் அவனுக்காய்
பூமிக்கும் வானங்களுக்குமென
வியாபித்திருப்பதாகும்!

வானங்களும் பூமியுமாகிய
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமல்ல
எந்தவொரு சிரமமுமில்லை

அவன்
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்புகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

13 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குர்ஆன் ஆயத்களை மூலமாகக் கொண்டு தமிழில் எழுத வேண்டும் என்கிற என் நீண்ட கால ஆசையின் முதல் முயற்சி.

இதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டி அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள். திருத்திக் கொள்கிறேன். நிறையிருப்பின் அல்ஹம்துலில்லாஹ்.


Thanks: Alaudeen/Thajudeen

crown said...

இன்றுதான் உங்களுடைய எழுத்து தன்னை முழுதுமாக தூய்மை படுத்தி கொண்டுள்ளது!வாசிக்கும் போது ஆன்மாவுக்கு ஒரு புது காற்று வந்து ஒத்தடம் கொடுத்தது போல் இருக்கிறது! இது போல் இனி தொடரட்டும் என வேண்டுகிறோம்!வாழ்த்துக்கள் கவிஞரே!

crown said...

கவிஞரின் கவிதை கொண்டு அப்பப்ப துருபிடிக்கும் தமிழ் ஞானத்தை சானைப்பிடித்து கூராக்கி வந்தேன் இப்போழுதோ என் என் தமிழ் ஞானம் துருபிடித்து கூர் செய்ய முடியாமல் மழுங்கிவிட்டது! மறுபடியும் கூர்த்தீட்ட கவிஞர் கவிதை தீட்ட வேண்டும்!

Riyaz Ahamed said...

சலாம்.மிக உயர்ந்த கருத்துகள்,கவி உன்க்கு கை வந்த கலையாச்சு

Riyaz Ahamed said...

சலாம்.மிக உயர்ந்த கருத்துகள்,கவி உன்க்கு கை வந்த கலையாச்சு

Unknown said...

உன்னதமான சேவை .மிகுந்த எச்சரிக்கையுடன் இதை கையாண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் .உங்களின் இந்த முயற்சி தொடர எல்லாம் வல்ல ஏக இறைவன் போதுமானவன் .வாழ்த்துக்கள் காக்கா .

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தம்பி

அடக்க இயலாத ஆனந்தத்துடன் இதைப் பதிகிறேன். உங்களுடைய கவித்திறமை எத்தனையோ எழுத்துச் சித்திரங்களைப் படைத்து இருந்தாலும் தம்பி கிரவுன் சொல்லி இருப்பதுபோல் ஒரு முழுமையடைந்த நிலைக்கு வந்திருப்பதாக நானும் உணர்கிறேன்.

இதே போன்ற ஒரு காரணத்தால்தான் எனது எழுத்துப் பணியை அழைப்புப் பணி என்கிற ஆன்மீகப் பணிக்காக அர்ப்பணித்து வருகிறேன்.

எல்லாபுகழும் இறைவனுக்கே. எனது மனமார்ந்த மகிழ்ச்சியும் துஆ வும். இன்னும் எதிர்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

N. Fath huddeen said...

வாழ்த்துக்கள் ஜோ!
ஆயத்துல் குர்ஸியில் எத்தனை விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்டால் பலரும் தெரியாது என்றே சொல்வர். ஆனால் மனப்பாடமாக ஓதுவார்கள். அங்கே எத்தனை விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இமாம் இப்னு கதீர் (ரஹ்) பத்து விஷயங்கள் என பட்டியலிடுகிறார்கள். அதை அப்படியே கவியாக வடித்து விட்டீர்கள் ஜோ.

இப்படி அல்குர்ஆன் தர்ஜுமாக்களை கையாளும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது என் தாழ்வான வேண்டுகோள்.

crown said...

சமூக?வலைத்தளம் சில நேரம் எவ்வாறேல்லாம் மனிதனின் தனித்தன்மையை மாற்றுகிறது. இந்த மொழி பெயர்த்தல் கவிதை தனித்துவமிக்கது அதை முக நூலில் பார்த்த உடன் எழுத தொடங்கிய கருத்து அதில் எழுதும் போது பல மதத்தினர் காண்பர் என்பதால் சலாம் சொல்லி எழுத மாட்டேன்.ஆனால் நமது தளத்தில் சலாம் சொல்லாமல் எழுதிய முதல் கருத்து இதுதான். அல்லாஹ் மன்னிக்கனும். இதுபோல் தவறுகள் நம்மவர்கள் யாருக்கும் நேராமல் என்றும் நல்ல முஸ்லிமாக வாழ்ந்து மறையனும்.ஆமீன்.

sabeer.abushahruk said...

இந்த முதல் முயற்சிக்கு உற்சாகமாக வரவேற்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

ZAKIR HUSSAIN said...

உன் எழுத்துக்களை எத்தனையோ முறை பாராட்டி இருப்பேன். ஆனால் இந்த ஆக்கம் உனக்கு இறைவன் தந்த பரிசாகவே கருதுகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//உன் எழுத்துக்களை எத்தனையோ முறை பாராட்டி இருப்பேன். ஆனால் இந்த ஆக்கம் உனக்கு இறைவன் தந்த பரிசாகவே கருதுகிறேன்.//

Yes ZAKIR kaka. This is what i wish to say..

Sabeer kaka, this is the mercy from Allah.

JazakAllah hayir kaka.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு