Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மண்டியிட மறுத்த மருத நாயகம்..2 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 02, 2016 | ,

தொடர் – 26
மருதநாயகம் என்கிற கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் அவர்களுடைய இந்த வரலாற்றின் முதல் அத்தியாயம் ,  அவர் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் எவ்வாறெல்லாம் உதவிகரமாக இருந்தார் என்பதை பற்றிப் பேசியது. அதன் பின் அவர் உரிமைக்குரல் எழுப்பும் வீரமகனாக மாறிய வரலாற்றை இந்த இரண்டாம் அத்தியாயம் சொல்லும். முதல் அத்தியாயத்தில் அவர் அன்னியர் இட்ட ஏவல்களைச் செய்யும் – இன்னும்  சொல்லப்போனால் அவர்களுடைய அடியாட்களில் ஒருவராகவே வாழ்ந்தார். அந்நிய ஆதிக்க சக்திகளின்  கட்டளைக்குக் கட்டுப்பட்ட ஒரு வேட்டை நாயாகவே மருதநாயகம் வாழ்ந்தார் அதன் மூலம் ஏற்றமும் பெற்றார். என்பதுதான் அவரது வாழ்வின் முதல் பக்கம். இது ஒரு வகையில் துரதிஷ்டமே . அதே நேரம் யாவும் இறைவனின் கட்டளைப்படித்தான் நடக்கிறது. ஒரு கொலைகார பாதகன் என்று அறியப்பட்டவன் கூட இறைவனின் நாட்டம் இருந்தால் நல்ல ஆட்சியாளனாக  மாறிவிட இயலும். அப்படித்தான் இறைவனின் நாட்டமானது, அன்னியர்  கைகளில் பொம்மையாக இருந்த  கான் சாகிபை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. 

மதுரை மற்றும் திருநெல்வேலி சீமைகளை உள்ளடக்கிய தென் மண்டலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட கான் சாகிப் , தனது ஆட்சித்திறமையாலும் மனிதாபிமான நடவடிக்கைகளாலும் மக்களின் மனம் கவர்ந்தார். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்"  என்ற பாடலுக்கு இலக்கியமாக பல நற்பணிகளைச் செய்து கருணையும் காருண்யமும் மிக்க கள நாயகராக கான் சாகிப் பவனி வந்தது ஆற்காட்டு நவாபுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. தான்  உருவாக்கிய ஒரு சாதாரண சிப்பாய்,  இப்படி கவர்னராகி கலக்கிக் கொண்டிருப்பது ஆற்காட்டு நவாப்பின் நல்ல பாம்புக் கண்ணை உறுத்தியது. அந்த ஆற்காட்டுப் பாம்பு படமெடுத்து ஆட  ஆரம்பித்தது. 

ஒரு மரம்,  மனிதனைப் பார்த்து, "நீ என்னை செடியாக நட்டு இருக்கலாம்; எனக்கு நீரும் ஊற்றி இருக்கலாம் ; அதற்காக நான் உன்னைவிட உயரமாக வளரக் கூடாதா ?" என்று கேட்டதாம். 

இதே மனநிலைதான் கான்சாபிடமும் உருவானது. இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாபுக்கும் பனிப்போர் தொடங்கியது. வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் ஒருவருக்கொருவர் ஆயுதப் போரை ஆரம்பித்து வைப்பது மனத்தளவில் ஏற்படும்  பனிப்போர்தானே! அதே கதைதான் இங்கும் ஆரம்பமானது.  

கான் சாகிப் கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு நவாபுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் வருவாயும் வரிவசூலும் பெருகினாலும்,  கான் சாகிப் அந்த வட்டாரங்களில் பெரிய மனிதராக உருவாவது இருவருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரும் ஆபத்து வரலாம் என்று கருதினார்கள்.  பொறாமை கொண்ட ஆற்காட்டு நவாப்,  கான் சாகிபின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப் படுத்தவும் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கான் சாகிப் வசூலிக்கும் வரித்தொகையை ஆற்காட்டு நவாபாகிய அவரிடமே நேரடியாக செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும் மற்றவர்களும் கூட  அவர் மூலம்தான் வரிசெலுத்த வேண்டுமென்றும் ஒரு  புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதற்காக கிழக்கிந்தியக் கம்பெனியிடமும் போட்டுக் கொடுத்து அதற்கான அனுமதியும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆற்காட்டு நவாபின் இந்தச் செயல் கான் சாகிபுக்கு எரிச்சலூட்டியது. 

தனது எரிச்சலை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கான் சாகிப் எடுத்துரைத்தபோது அவர்கள் அளித்த பதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. கான் சாகிப்  கவர்னராகவே இருந்தாலும் ஆற்காட்டு நவாபுக்குக் கட்டுப்பட்ட பணியாளர்தான் என்று கூறியது கிழக்கிந்தியக் கம்பெனி. அவர்களது இந்த பதில் கான் சாகிபின் உள்ளத்தில் அவரது சுயமரியாதையை அசைத்துப் பார்த்தது. ஆஹா ! தவறு செய்துவிட்டோமே  இதுவரை பாம்புகளுக்குப் பால் வார்த்து இருக்கிறோமே! என்று உணர வைத்தது. அதனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்த உத்தரவை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார் கான் சாகிப். இதனால் யார் இருவரின் கைப்பாவையாக இதுவரை செயல்பட்டாரோ அவ்விருவருக்கும் கான் சாகிப் எதிரியாகிவிட்டார். இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாகிபுக்கும் இடையே பகைமைப் பயிர் தழைத்து வளர ஆரம்பித்தது. 

அந்த நேரம் டில்லியின் அரசுப் பிரதியாக இருந்த ஷாவும் ஹைதராபாத் கிமாம் அலியும் கான் சாகிபின் உதவிக்கு வந்து கிழக்கிந்தியக்  கம்பெனியிடம் கான் சாகிபுக்காக வாதாடினார்கள். சட்டபப்டி , கான் சாகிப்தான் மதுரை மற்றும் தென் மண்டலத்துக்கு கவர்னர் என்று அவர்கள் வாதாடியதை கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்க மறுத்தது.  

ஏற்கனவே செலுத்திக் கொண்டிருந்த ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்பதை ஏழு லட்சம் என்று அதிகரித்து செலுத்திடவும் ஆனால் தனது தனது சுதந்திர அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும் கான் சாகிப் ஒரு சமரச திட்டத்துக்கு முன்வந்தார். ஆனால் அவரது இந்த அதிகரித்த தொகையைக் கூட ஏற்க நவாபும் கம்பெனியும் மறுத்துவிட்டனர். இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் , தங்களை விட மக்களின் செல்வாக்குப் பெற்று ஒருவன் நாயகனாக  உருவாவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான். அத்துடன் தென் மண்டலத்தில் இருந்த சில இனத்தைச் சேர்ந்த வணிகர்கள், கான் சாகிப் மீது பொறாமை கொண்டு கான் சாகிப் பிரிட்டிஷாருக்கு எதிராக மக்களைத் தூண்டியும் திரட்டியும்   வருவதாகவும் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு உணர்வை  மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும் குலத்தொழிலின்படி  “கோள்”மூட்டி விட்டனர்.  

இந்தப்  பூசாரிகள் போட்ட சாம்பிராணிக்கு பிரிட்டிஷ் நிர்வாகப் பேய்  ஆட ஆரம்பித்தது .  கேப்டன் மேன்சன் என்ற மனுஷனை அழைத்து கவர்னர்  கான் சாகிபை  கைது செய்து கொண்டுவரும்படி உத்தரவிட்டனர். இந்த செய்தியறிந்த கான் சாகிபின் உள்ளத்தில் உறங்கிக்  கொண்டிருந்த தன்மானச் சிங்கம் சிலிர்த்து  எழுந்தது. ஆயிரம் ஆனாலும் சுதந்திரம் சுதந்திரம்தான் அடிமைத்தனம் அடிமைத்தனம்தான் என்று உணர ஆரம்பித்தார்.  இந்த உணர்வின் உந்து சக்தியின்   விளைவாக கவர்னர் கான் சாகிப் தன்னை மதுரைக்கு மன்னராக அதாவது மதுரையின் சுதந்திர  சுல்தானாக தன்னைப் பிரகடனபடுத்தி, அந்தப் பகுதி முழுதும் தனது ஆளுமைக்கு உட்பட்டது இதில் அன்னியர் வந்து புக இயலாது என்று பிரகடனப் படுத்தினார். தான் இனி தானே சுயமாக இயங்கும் -   யாருடைய தளைக்கும் உத்தரவுக்கும் கட்டுப்படாத சுதந்திர சுல்தான் என்று ஊரெங்கும் அறிவித்தார். 

இப்படி அறிவித்துக் கொண்டதற்கு ஆற்காட்டின் தரப்பிலிருந்து ஆங்கிலேயர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருமென்று எதிர்பார்த்த கான் சாகிப் தனக்கு ஆதரவாக தோளோடுதோள் நின்று போராட  27,000 வீரர்களைக் கொண்ட பலமான படையையும் தயாராகத் திரட்டினார்.  எதிர்க்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் சில பிரெஞ்சு நாட்டு வீரர்களும் கான் சாகிபுடன் அவருக்கு ஆதரவாக அணிவகுத்தனர். 

ஆனால் ஆங்கில ருசி கண்ட பூனை அவ்வளவு சுலபமாக தனது மண்ணாசையையும் சுளையாகக் கிடைத்துக் கொண்டிருந்த வரி வசூல் தொகையையும்  விட்டு விடுமா? 1763 செப்டம்பர் மாதம் கலோனியல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்க திரண்டது ஆங்கிலேயருக்கு ஆதரவான படை.  இதற்கு முன் ஆங்கிலேயருக்கு ஆதரவாக யார் யாரையெல்லாம் கான் சாகிப் தாக்கி தனக்கு எதிரியாக்கிக் கொண்டாரோ அந்த பாளையக்காரர்களும் தஞ்சை, திருவிதாங்கூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் , சிவகங்கை ஆகிய அனைத்து சமஸ்தான்களும் கான் சாகிபை பழிவாங்கவும்  ஆங்கிலேயருக்கு  பயந்து கொண்டும்  தங்களின் படைகளை  அனுப்பினர். இவர்களுடன் நவாபின் படையும் சேர்ந்துகொண்டு ஒரு பெரும் கூட்டமே கான் சாகிபுக்கு எதிராக கரம் கோர்த்தனர். இந்த சண்டை  22 நாட்கள் நீடித்தது . ஆனால் ஆங்கிலேயருக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. அவர்கள் தரப்புக்கு பலத்த  சேதத்தை உண்டாக்கினார் கான் சாகிப் 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். ஆங்கிலப் படையும்  அதன் ஆதரவுப் படைகளும்  நிலை குலைந்து பின் வாங்கின.

தோல்வி முகம் கண்டு கொண்டிருந்த ஆங்கிலப் படை தனது தோல்வியைத் தவிர்க்க பம்பாய் மற்றும் சென்னையிலிருந்து பல எண்ணிக்கையிலான பெரும் படைகளைக் கொண்டு வந்து குவித்து மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.  ஆனாலும் இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரும் கூட  ஆங்கிலேயருக்கு வெற்றி கிட்டவில்லை. முற்றுகை இடப்பட்ட கான் சாகிபின்  மதுரைக் கோட்டைக்குள் இத்தனை படைகளின் ஈ காக்காய் கூட நுழைய முடியவில்லை. பதிலுக்கு ஆங்கிலேயரின்  படையில் 160 பேர்கள் பலியானார்கள். இதனால் போரில் பொருதி கான் சாகிபை வெற்றி கொள்ள இயலாது குள்ளநரித்தனமே குணமுள்ள மருந்து என ஆங்கிலேயர் நினைக்கத் தொடங்கினர்.  

ஆகவே கோட்டைக்குள் செல்லும் உணவையும் குடிநீரையும் நிறுத்தினார்கள். இதன் காரணமாகக்  கோட்டைக்குள் இருந்த வீரர்களிடையே ஆங்கிலேயர் நினைத்தபடி குழப்பமும் மனச் சோர்வும் ஏற்பட்டது. கான் சாகிப் எப்படியாவது உயிருடன் எங்காவது தப்பித்து  போய்விடலாம் என்று போட்ட திட்டமும் நிறைவேறாமல் போனது.  இதனால் உடனிருந்த பிரெஞ்சு நாட்டுத் தளபதி  கான் சாகிப்பிடம் சரணடைந்துவிடும் திட்டம் ஒன்றைக் கூறினான். இதனால் கோபமுற்ற கான் சாகிப் பிரெஞ்சுக் காரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் . வெள்ளைக்காரனின் கன்னத்தின் கீழ் வானம் சிவந்தது. இதன் காரணமாக கூட்டணிக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டது. கான் சாகிபின் இந்தக் கோபம் அவரது அழிவுக்குக் காரணமாக இருந்தது. 

கோட்டைக்குள் இருந்தபடியே பிரெஞ்சுத் தளபதி சிவகங்கை தளபதி தாண்டவராயப் பிள்ளை மூலமாக எதிரிகளைத்   தொடர்பு கொண்டு மதுரைக் கோட்டையில் திவானாக இருந்த சீனிவாசராவ் பாபா  சாஹிப் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டி கான் சாகிபைப் பிடித்துக் கொடுக்க சம்மதித்தான்.  1764 அக்டோபர்  13 ஆம் நாள்  முகமது யூசுப்கான் ஆகிய கான் சாகிப்  காலைத்தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது முதுகுக்குப் பின் திரண்ட அந்த நம்பிக்கை துரோகிகள் கான் சாகிபை அவர் தலையில் கட்டியிருந்த முண்டாடாசைத் தரையில் தட்டிவிட்டு உதறி,  அதைவைத்து கான் சாகிபின் கையும் காலையும் கட்டிப் போட்டனர். உடனே கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. கர்ஜித்துக் கொண்டிருந்த கான் சாகிப் இப்படி சூழ்ச்சியாலும் துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு  கைது செய்யப்பட்டார். 

15-10-1764 ஆம் நாள் மதுரையில் சம்மட்டிபுரத்தில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ முகாமில் அமைக்கபட்டிருந்த தூக்கு மேடை!  ஆற்காட்டு நவாப் அணி சூழ்ந்திருக்க  கண்ணைக் கட்டிக் கொண்டுவரபப்ட்ட கான் சாகிப் அங்கிருந்த தூக்குமரத்தில் தூக்கிலடப்பட்டார். 

இந்தக் கொடுமை இத்துடன் நிற்கவில்லை. இறந்து  விறைத்துப் போன கான் சாகிபின் உடலின் பாகங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டன. இறந்து போன பின்னும் கூட கான் சாகிபின்  உடலைப் பார்க்கவே ஆங்கிலேயரும் பாளையக்காரர்களும் அஞ்சினர். கான் சாகிபின் தலை துண்டிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டது. கைகள் துண்டாக்கபப்ட்டு பாளையங்கோட்டைக்கும் கால்கள் தஞ்சாவூருக்கும்  திருவிதாங்கூருக்கும் ஆளுக்கொன்றாக அள்ளிக் கொண்டு போனார்கள். கான் சாகிபின் தலையும் கைகளும் கால்களும் இழந்த நடு உடல் பகுதி மட்டும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் புதைக்கப்பட்டது. 

அவர் புதைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1808 ல் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டு ஒரு தர்கா போல இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.. கான் சாகிப் பள்ளிவாசல்  என்று சம்மட்டிபுரத்தில் அழைக்கப்படும் அந்தப் பள்ளியின் அருகிலேயே தொழுகை நடத்தும் பள்ளியும் ஷேக் இமாம் என்பவரால் கட்டிக் கொடுக்கப் பட்டு திகழ்ந்து வருகிறது.  

மகுட முடிடால் விருதிலங்க
மதயானை வளர்த்தெடுத்த வரிவேங்கைக் குட்டி
விகடமிடுவோர்கள் குல காலன்
விசையாலீம் குலம் விளங்க வரு தீரன்

என்றெல்லாம்  தென்பகுதிச் சீமையில் பாடப்படும் கிராமியப்  பாடல்களில் மருத நாயகத்தின் புகழ் பாடப்பட்டு வருகிறது.   

மருதநாயகம் கான் சாஹிப்  அவர்களின் வரலாற்றைப் படிக்கும் போது அவர் நல்லவரா கெட்டவரா என்று கமலஹாசனைப் பார்த்து ஒரு சிறுவன் கேட்பதுபோல்தான் நாம் கேட்க வேண்டுமென்று நமக்குள் தோன்றுவது இயல்பான கேள்விதான்.  காரணம் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயரின் படைவீரராக அவர்களிட்ட கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துப் பணியாற்றிய  கான் சாகிப் , பின்னாளில் தனக்கே ஒரு நெருக்கடிவரும்போதுதான் சுதந்திரப்  போராட்ட வீரராக மாறினார். ஆனாலும் தான் செய்த தவறை உணர்ந்தது அந்நியன் அந்நியன்தான் என்ற உணர்வுடன் அவரது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட நற்பணிகளையும் இறுதி நாட்களில் எதிரிக்கு மண்டியிட மறுத்து எதிர்த்துப் போராடிய வீரத்தையும் மறைந்த  பின்னும் அவரது உடல்கூட சின்னா பின்னபடுத்த பரிதாபத்துக்குரிய வரலாற்றுச் செய்தியையும் காணும்போது , விடுதலை வீரர்களின் பட்டியலில் மண்டியிட மறுத்த மருத  நாயகத்தின்  பெயரையும் நமது உதடுகள் உச்சரிக்கின்றன.    

இறைவனருளால்  நிறைவுற்றது. 

அன்புகாட்டிப் படித்த அனைவருக்கும் நன்றி. 

இபுராஹீம் அன்சாரி
ebrahim.ansari@adirainirubar.in
==================================================================
எழுத உதவியவை : 
திரு. ந.ராசையா எழுதிய “ மாமன்னன் பூலித்தேவன் “
திரு. ந.ராசையா எழுதிய “ இந்திய விடுதலைப் போரின் முதல் முழக்கம்”
ஹுசைனி எழுதிய “பாண்டியர்களின் வரலாறு” 
மஹதி எழுதிய “ மாவீரர் கான்சாகிப்.”
Yusuf Khan the Rebel Commander by S Charles Hill.
திரு.  எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுதிய வீர விலாசம் எனும் நூல்.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு