செய்திகளால் வதைப்பது - சபீர் அபுஷாருக்
முக்கிய செய்திகள்:
-அமெரிக்க முன்னால் கவர்ச்சி நடிகை மர்லின் மான்றோ மருத்துவமனையில் அனுமதி
-லட்சத்தீவுகளில் ஒன்றான டகால்ட்டியில் திருவிழா
விரிவான செய்திகள்:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லா அஸ்திரங்களையும் பிரயோகித்தும்கூட சொர்ப்ப வாக்குகளே பெற்றாலும் சோர்வுறாத சங்மா இறுதிவரைப் போராடிவிடுவது என்று தீர்மானித்து பிரணாப் பதவி ஏற்கச்செல்லும்போதுகூட கடைசி முயற்சியாக அவர் ஜிப்பாவைப் பிடித்து இழுத்த காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இழுத்த இழுப்பில் பிரனாபின் ஜிப்பா கிழிந்ததால் முகர்ஜியின் முகம் அலர்ஜியால் வெளிறியது.
இந்தச் சம்பவம் பற்றி சங்மாவிடம் கேள்வி எழுப்பியபோது நைட்மேரிலிருந்து விழித்ததுபோல் மலங்க மலங்க விழித்த அவர் கூறினார், "தமிழ்நாட்டு ஓட்டுகள் எனக்கு மட்டுமே. அம்மாவுக்கு நான் உடன்கட்டை பட்டிருக்கேன்" என்று உடன்படுவதையும் கடமைப்பட்டிருப்பதையும் கலந்து உளறிக்கொட்டினார்.
அமெரிக்க முன்னால் கவர்ச்சி நடிகை தனது 86வது வயதில் கணுக்கால் வலியால் அவதிப்பட்டு வந்தது அறிந்ததே. தற்போது அவர் ஐ சி யுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய அமெரிக்க பெருசுகள் பெருமூச்சுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி அம்மா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "மைனாரிட்டி கருனாநிதியின் கடந்தகால அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக உழைத்த கழக கண்மணிகளுள் ஒருவரான தூக்கனாம்பட்டி ஒன்றிய தலைவர் மொக்கச்சாமியின் மறைவு தமக்கு வருத்தத்தைத் தந்ததாகவும், பிறப்பிலேயே அநாதையான மொக்கச்சாமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறிக்கொள்வதோடு கட்சி நிதியிலிருந்து பத்து லட்சம் உதவித்தொகையும் வழங்க தாம் உத்தரவிட்டிருப்பதாகவும்" அறிவித்தார். அந்த உதவித்தொகையை மொக்கச்சாமியே நேரில் வந்து அம்மா கால்களில் விழுந்து பெற்றுக்கொண்டார்.
காட்டான்பட்டியைச் சேர்ந்த காத்தமுத்து தம் மனைவி கருப்பாயியை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பப்பரப்பாவை... மன்னிக்கவும்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பாயிக்கும் வெளித்தெரு வெள்ளைச்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஆத்திரமுற்ற காத்தமுத்து பக்கத்துத் தெரு பச்சையம்மாளுடன் தானும் கள்ளத்தொடர்பு வைத்து மனைவியை பழிக்கு பழிக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸில் சரணடைந்த காத்தமுத்து, "தன் மனைவி கருப்பாயி தன்னிடமும் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளாததால்தான் ஆத்திரமுற்று கொன்றதாக" கூறினார்.
அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த காட்டான்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் கேனய்யன் இந்த கேஸில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்து கேசை சி பி ஐக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தின் தரித்திரம்...சாரி... தலையெழுத்து சூப்பர்ஸ்ட்டார் அவர்கள் கலந்துகொண்ட காவடி தூக்கும் விழா ஒன்றில் அவரின் அடுத்த திட்டம்பற்றி கேட்கப்பட்டபோது, ஒற்றை ரூபாய் காசை லாவகமாகச் சுண்டி வீசிவிட்டு எந்திரத்தனமான குரலில், "கதம் கதம்" என்று கூறினார். அதன் அர்த்தத்தை முழுதும் விளங்கிக்கொண்ட ரசிகர் மந்தை " தலீவா கொண்ணுட்டே" என்று கோஷங்களை எழுப்பினர்.
அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய செய்தியாளாரின் கேள்விக்கு பதிலளித்த பாப்பர்...ஐ மீன்... சூப்பர் ஸ்டார், "ஷங்கர் டைரக்ட் செய்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு முன் இமையமலை போகாமல் இருந்தால் கே எஸ் ரவிக்குமாருக்காக ஒரு படம் பண்ணப்போவதில்லை என்று ஆண்டவன் சொல்றான் (முஷ்டியை மடக்கி தன்னை நோக்கி விரலை நீட்டி) முடிக்கிறான்" என்றார். கேள்வி கேட்ட செய்தியாளரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி அவர் அரக்கபறக்கக் கிளம்பி ஓடினார்.
விளம்பர இடைவேளைக்குப் பிறகு செய்திகள் இடறும்.
ச்சப்பாத்தி மெதுவாக வரவேண்டுமா? கவலைப்படாமல் நெஹன் லன்க்காவில் ஏற்றி விடுங்கள். அது எப்பவுமே மெதுவாகத்தான் வரும். சமயத்தில் வரூம்...ஆனா வராது.
***
"வாங்கய்யா. உங்க மகன் குமார் நல்லாருக்கானா?"
"அடப்பாவி. நான்தான்டா குமார். நீ கொடுத்த ஆண்களுக்கான ஃபேர்நெஸ் க்ரீம் பயன்படுத்தினேன். சட்டுனு மூஞ்சிக்கு மட்டும் வயசாயிடுச்சிடா பாவி"
***
சொதப்பகல்கள் தொடர்கின்றன...
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பாடங்களை மாற்றக்கோரி நாமக்கல் மாவட்ட அரசினர் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியாளர் மனீந்த்தர் சிங் பிரச்னையை விசாரித்தபோது மாணவர்கள் காட்டிய சர்ச்சைக்குரிய மூன்று பாடங்களும் மலையாளத்தில் இருப்பது கண்டு "படத்தில்தன் மலையாள பிட்டுகள் போட்டு படுத்தறாங்க...பாடத்திலேயுமா?"என்று அதிர்ச்சி தெரிவித்தார். கேள்விகளும் மலையாளத்திலேயே கேட்கப்பட்டுள்ளதைக் கண்டு கொதித்துப்போன மாணவர்கள் சுமுகமான தீர்வு ஏற்படும்வரை சாலையிலேயே சமைத்துச்சாப்பிடும் போராட்டத்தை அறிவித்ததால் போக்கு வரத்து புளகாங்கிதம் அடைந்தது. இந்த சாலை மறியல் எதிர்கட்சிகளின் சதி என்றும் இதனால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் அரசு அறிவித்தது கண்டு குழம்பிய செய்தியாளர்கள், ஏற்கனவே அந்தச் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து இந்த மறியலால் மேற்கொண்டு பாதிக்கப்படப்போவதில்லை என்பதை உணர்ந்து சூசகமாக அறிக்கை விட்ட அரசாங்கத்தின் அரசியல் சாணக்கியத்தனம் கண்டு வியந்து போயினர்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் அப்புக்குட்டன் நாயர், கப்பையும் கட்டன் காப்பியுமாய்ட்டு பறைகுகையில், " பத்து பதினைந்நு பாடஙளு தமில்ல இருக்கும்போல் மூநு பாடம் மலையாளத்ல ஷேத்திரத்தில் வாயிக்கட்டெ, ஒந்நு புத்திமட்டில்லா அன்னாச்சி." எந்நு பரைஞிட்டு ஓஃபீஸ்லைக்குப் போய் வாதில் அடைச்சு.
விளையாட்டாய் சில செய்திகள்:
இலங்கைக்கு எதிரான இந்திய அணி இரண்டாவது போட்டியில் 130க்கு சுருண்டதைப்பற்றி கேப்ட்டன் தோனி கூறுகையில், " விக்கட்டுகள் மலமலவெனச் சரிந்ததும் இலங்கை சிறப்பாகப் பந்து வீசியதும்தான் காரணம்" என்று புதிரை அவிழ்த்தார். “கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா?” என்ற கேள்விக்கு, "மற்ற அணிகளின் தோல்வியாலேயே இந்தியா எப்போதும் ஃபைனலுக்குத் தள்ளப்பட்டு வருவது ரசிகர்கள் அறிந்ததே. ஆனால், இம்முறை இலங்கை இந்தியா இரண்டு அணிகளே களத்தில் இருப்பதால், அந்த வாய்ப்பு இல்லாததால், கடினமாகப் போராடி ஃபைனலுக்கு வருவோம்" என்று நம்பிக்கைத் தெரிவித்ததோடு, "வி வில் ப்ளே அவர் நேட்ச்சுரல் கேம். கோப்பையைக் கைப்பற்றுவது நோக்கமல்ல. பட் தி ட்ரோஃபி இஸ் அவர்ஸ்" என்று கட்டை விரல் உயர்த்தியதின் மர்மம் யாருக்கும் பிடிபடாத ஒரு ஃபிக்ஸிங் ஆகவே இருக்கிறது.
லண்டன் ஒலிம்ப்பிக்கில் தங்கம் வெல்லும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மின்ட்டன் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவுகளை இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறியடித்தன. "தங்க விலை எக்குத்தப்பாக ஏறிப்போயிருப்பதே தங்கப்பதக்கம் வாங்கமுடியாத தோல்விக்கு காரணம்” என்று விளையாட்டு வீராங்கனைகள் சொன்னபோது மெய்சிலிர்த்து மயிர் கூச்செறிந்தது. “அட்ஷய கிருதிகளில் மட்டும் தங்கம் வாங்கும் பழக்கத்திலிருந்து இந்தியா மீளவேண்டும்” என்று விளையாட்டுத்துரை அமைச்சர் சோம்பேரி சுந்தரம் கருத்துத் தெரிவித்தார்..``
இனி தங்கம் வெள்ளி பற்றிய விலை நிலவரம்:
தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஆபரணத்தங்கம் சவரனுக்கு 22,500 க்கு விற்கப்படுகிறது. . இது நேற்றைய விலையைவிட 120 ரூபாய் கூடுதலாகும். நாளைய விலையைவிட 120 ரூபாய் குறைவாகும். வெள்ளியின் விலையில் இந்த பிறப்பில் மாற்றமில்லை.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் கீழிறங்கி குறிப்பிடமுடியாத அளவுக்கான நிலையில்லாத மதிப்பைத் தொட்டது. இனி வரும் காலங்களில் ரூபாய் அச்சிடப்படுவதற்கான காகிதத்தின் எடையைக் கூட்டுவதன் மூலமே நாம் டாலரைவிட வெயிட்டான கரன்ஸியை உருவாக்க முடியும் என்று கருத்து தெரிவித்த நிதி அமைச்சரின் அறிவைக் கண்டு ஐ நா சபையே அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது.
வா(வரண்ட)நிலை அறிக்கை:
"ஷார்ஜாவில் வாணம் மேகமூட்டமாக இருந்து ஓரிரு துளிகளைத் தூவியதாக" கனவுகண்டு பீதியில் விழித்த கந்தசாமி கூறினார். அந்தத் துளிகளைக் காட்டி "ஏஷ் ஆதா" என்று கேட்ட அமீரக அராபியக் குழந்தைகளுக்கு "இதுதான் மழை என்பது" என்று விளக்கினர் அரபாபுகள்.
இதற்கிடையில் மழையில்லாமலேயே குளித்த தோரணையில் இருந்த வலைகுடா வாசிகள் ஆங்காங்கே டிஹைட்ரேஷனில்(DEHYDRATION) மயங்கி விழுந்தனர். வெப்ப நிலவரம்: துபை உண்மையில் 50 டிகிரி ; அறிவிக்கப்பட்டது 45 டிகிரி.
வெளிநாட்டுச் செய்திகளை வெளிநாட்டில் வசித்து வரும் அசத்தல் காக்கா என்கிற மருத்துவக் காக்கா பாடிகாட்…சாரி படிக்கட்டுகள் புகழ் ஜாகிர் அவரகள் தொகுத்து அடிப்பார் என்று கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆறு மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் பத்திரிகைகளை தவறாமல் வாசியுங்கள்… மேலும் விபரங்களுக்கு editor@adirainirubar.in கேளுங்கள் (அதனை பதிவுகளாக வெளியிட்டால் நான் பொறுப்பல்ல)...
சபீர் அபுஷாருக்