மதங்களும் பொருளாதார இயலும்
உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி அழிந்து விட்டன; சில வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மதங்களும் தங்களைத் தழுவிய மக்கள் சமுதாயத்துக்கு போதித்த கோட்பாடுகளில் பொருளாதாரக் கோட்பாடுகளும் அடங்கும். இத்தகைய மதங்களையும் பொருளாதாரத்தையும் பொருத்திப் பார்க்கும் முன்பு மதம் அல்லது மார்க்கம் என்பதன் விளக்கங்களையும் பொருளாதாரம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் அளித்திருக்கும் விளக்கங்கள் மற்றும் அந்த விளக்கங்களின் ஏற்புடைய தன்மைகள் ஆகியவைகளையும் பார்ப்போம். இவற்றுடன் இஸ்லாமியப் பொருளாதாரத்தை ஒப்பிட்டும் பார்ப்போம்.
மதங்களைப் பற்றிய சாத்திர விற்பன்னர்களும் (Theologians) சமூக அறிவியலார்களும் மதம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக, பொருளாதாரம் தழுவிய இஸ்லாமிய நூல்களைத் தந்த எம். அப்துல்லாஹ் திராஜ் (M.A. Draz) என்கிற வல்லுனர் தனது அல்-தீன் Al Din (The Religion) என்கிற நூலில் பல மேற்கோள்களைச் சுட்டுகிறார். இவற்றுள் முக்கியமானவை Reveille, Michael Mayer, New Webster’s Dictionary ஆகிய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளாகும்.
Reveille கூறுவது என்னவன்றால், மதம் என்பது மனித இனத்தின் வாழ்வை வடிவமைக்கிறது - மதம் என்பது சாதாரண மனிதனின் அந்தர ஆத்மாவுக்கும் மிகவும் உயர்நிலையில் உள்ள அறியப்படாத சக்தி என்று நம்பப்படும் கருப்பொருளுக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தம் என்ற கருத்தின் அடிப்படையானதுமாகும். (bond between the human soul and Mysterious Soul) இதைத்தான் ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்று கூறினார்களோ?
Michael Mayer, என்கிற வல்லுநர் விளக்குவது மதம் என்பது மனிதன் தனக்கு வழிகாட்டும் கடவுள் என்று கருதப்படுபவை அளித்த நம்பிக்கை மற்றும் தீர்க்கதரிசனங்களின் தொகுப்பு என்பதாகும். (set of beliefs and percepts)
New Webster’s Dictionary மதம் என்பதற்குத் தரும் விளக்கம் அது மனிதனை பயபக்தியுடன் வணங்கவும் கீழ்ப்படியவும் வைக்கிற ஒரு சிறப்புக்குரிய சக்தியின் ஆளுமை என்பதாகும். ( entitled to obedience, reverence and worship).
மேற்கண்ட எல்லா விளக்கங்களையும் ஊன்றிப் படித்த பின்னர் நாம் உணரும் பொதுவான சாராம்சம் என்ன வென்றால்
மதம் என்பது மனித இனத்தின் ஒட்டுமொத்த ஆன்மீக, சமூக, தனி மனித வாழ்வின் மீதும் இதர படைப்பினங்களைப் பற்றிப் பேசியும் தொடர்புபடுத்தியும் வரையறுக்கிறது என்பதும் மனித இனத்தின் நம்பிக்கை, கடைப்பிடிப்பு, அர்ப்பணிப்பு ஆகிய செயல்பாடுகளின்மேல் ஒழுங்குபடுத்தும் வகையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தன்னிகரற்ற சக்தியுமே மதம் ஆகும் என்பதே.
மதம் என்பதன் விளக்கங்களை அறிந்த பிறகு பொருளாதாரம் என்பதன் சுருக்கமான விளக்கத்தையும் நாம் காண வேண்டி இருக்கிறது. பொருளியல் விளக்கங்கள் பல்வேறு வல்லுனர்களால் தரப்பட்டுள்ளதை விளக்கவும் விவரிக்கவும் விவாதம் செய்யவும் வேண்டியுள்ளது. மேலே கண்டபடி மதம் என்பது ஒட்டுமொத்த மனிதவாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்று குறிப்பிடும் நேரத்தில் பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் செல்வங்கள், மூலவளங்கள், பணிகள், உற்பத்திப் பொருள்கள், வாழ்வின் தேவைகள், ஆகிய மனிதவாழ்வின் சில குறிப்பிட்ட பாகங்களின் மீது மட்டும் தனது ஆதிக்கம் செய்யும் ஒரு தனித்துறையாகும்.
பொருளாதாரம் என்பதற்கு பல்வேறு பொருளியல் அறிஞர்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.( L. Robins), ஆர். ராபின்ஸ், பி . சாமுவேல்சன் ( P. Samuelson.) ஜெ. ஹார்வி ( J.Harvey) ஆகியோருடைய அணுகுமுறைகள் மாறுபட்டாலும் ஒரு பொதுவான அம்சத்தில் ஒத்துப் போகின்றன.
அதாவது, மனிதனுடைய நடைமுறைப் பழக்கங்களில் அவன் வாழும் நாட்டில் கிடைக்கும் மூலவளங்களையும் அவற்றைக்கொண்டு உற்பத்தியாகும் பொருள்களையும் பணிகளையும் தனது உயர்ந்த பட்ச திருப்திக்கும், உபயோகத்துக்கும் ஏற்றபடி எப்படி நிர்வகித்துக் கொள்கிறான் அல்லது ஆள்கிறான் என்பதே ஆகும்.
நவீன கால பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்கிறவர்கள் ஆடம் ஸ்மித் ( Adam Smith 1723- 1790 )என்கிற மந்திரப்பெயரை மறக்க முடியாது. இவர் தனித்தனிக் கோட்பாடுகளாக வந்துகொண்டிருந்த பொருளியல் கோட்பாடுகளை ஒன்று திரட்டி ஒரு வடிவமாகக் கொடுத்தவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். An enquiry into the Nature and Causes of Wealth of Nations என்கிற இவரது நூலே நவீன அரசியல் பொருளாதாரத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆல்பிரெட் மார்ஷல் ( Alfred Marshal 1842- 1924) என்கிற மற்றொரு வல்லுநர் தனிமனிதனின் வாழ்க்கையில் காணப்படும் செல்வத்தை நோக்கிய செயல்பாடுகளின் கல்வியே பொருளாதாரம் என்று குறிப்பிட்டார். வாழ்வதற்குத் தேவையான வருமானத்தைத் தேடும் அல்லது திரட்டும் வழிமுறைகளையும் அப்படித் தேடியவற்றை தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும் பொருளாதாரம் சொல்லித்தரும் என்று சொன்னார்.
இருந்தாலும் லயனல் ராபின்ஸ் சுட்டிக்காட்டிய கோட்பாடு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்தது. கோட்பாட்டின் அடிப்படை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை :
மனிதனின் தேவைகள் அதிகம். (Countless Desires)
அந்தத் தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றாக்குறையானவை . (Scarce Means)
அவ்விதம் வரையறைக்குட்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள் மனிதனுக்கு ஒரே நேரத்தில் எழக்கூடிய மற்ற தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள மாற்றிப் பயன்படுத்தத் தக்கவை . ( Alternative Uses)
(இந்தக் கருத்துக்களை நான் விளக்க ஆரம்பித்தால் நீங்கள் சற்று நிமிர்ந்து உட்காரலாம். சரியாத்தானய்யா சொல்லி இருக்கே! நல்லா யோசிச்சுத்தானே சொல்லி இருக்கே ! என்று சிலர் கூவவும் செய்யலாம்.)
முதலாவதாக மனிதனின் தேவைகள் அதிகம் என்பதைப் பார்க்கலாம். மனிதனுக்கு எல்லாமே தேவைதான். எதிலுமே ஆசைதான். மழை நாளில் வெயில்தேடும் மனிதன் வெயில் நாளில் மழை தேடுவான். ஆசைகளின் மூட்டை என்று மனிதனை வர்ணிக்கலாம். தேவைகள் இவனிடத்தில் தேங்கிக்கிடக்கின்றன. தேவைப்பட்டது அகப்பட்டதும் அடுத்ததைத் தேடுகிறான். குடிசையில் வாழ்பவனுக்கு மச்சு வீடு தேவை ; பாயில் படுத்துறங்குபவனுக்கு பஞ்சு மெத்தை தேவை; கஞ்சி கிடைத்தால் போதுமென்று நினைத்தவனுக்கு கவளச் சோறு தேவை ; நிற்க இடம் கிடைத்தால் போதுமென்று நினைத்தவனுக்கு உட்கார இடம் தேவை; காலையில் காபி தேவை; பகலில் அறுசுவை உணவுதேவை; இடையில் தின்ன மசால் வடை தேவை; இரவில் குடிக்க பசும்பால் தேவை; பிள்ளைகளுக்குப் படிப்புத்தேவை ; பெற்றவர்களுக்கு முதியோர் இல்லத்தில் இடம் தேவை; பெரிய வீட்டுக்கு மட்டுமல்ல சின்ன வீட்டுக்கும் சொந்தமாக சொத்துத் தேவை; ஏவல் செய்ய ஆள் தேவை ; இட்டதை முடிக்க பரிவாரங்கள் தேவை; இருக்கும் பணத்தை மறைத்துவைக்க சுவிஸ் வங்கியில் கணக்குத்தேவை என்பது வரை மனிதனின் தேவைகள் சொல்லி மாளாதவை; மறையாதவை. சராசரி மனிதனை ஆசைதான் வாழ்வை நோக்கி இழுத்துச் செல்கிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும் வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழி நெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. எந்க கட்டத்திலும் ஆசையும் தேவையும் பூர்த்தியடையவில்லை.‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறது. ஆகவே தேவைகள் எண்ணற்றவை.
இரண்டாவதாக இத்தகைய தேவைகளை மனிதன் நிறைவேற்றிக் கொள்ள உலகில் அவனுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புக்கள் என்றுமே பற்றாக்குறையானவை. தேவைப்பட்டுக் கேட்பவனுக்கு கேட்பது தேவையை நிறைவேற்றுமளவுக்குக் கிடைக்காது. அது இருந்தா இது இல்லை; இது இருந்தால் அது இல்லை. நாயை கண்டால் கல்லை காணோம்; கல்லைக் கண்டால் நாயை காணோம். மண்ணிலிருந்து மண்ணெண்ணெய் வரை – அரிசியிலிருந்து பருப்புவரை – மின்சாரம் முதல் குடிநீர் வரை- கல்லூரி முதல் கல்லறை வரையும் கூட மனிதத்தேவைகள் அவனின் தேவைகளின் அளவுக்கு கிடைக்காமல் பற்றாக்குறையாகவே இருக்கின்றன. இத்தகைய பற்றாக்குறைகள்- தேவைகள் –அவசரத்தேவைகள் விலைகளைக் கூட்டுகின்றன அல்லது குறைக்கின்றன. ஆகவே கிடைப்பவை பற்றாக்குறையானவை.
மூன்றாவதாக, இப்படி தேவைக்கு பற்றாக் குறையாக கிடைக்கின்றவைகளைக் கூட மற்ற தேவைகளுக்கும் உபயோகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக எனக்கு ஒரு சைக்கிள் தேவை .வீட்டுக்கு அரிசி தேவை. மகனுக்கு சட்டை தேவை. சமையலுக்கு ஒரு சட்டி தேவை. வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். அம்மாவை வைத்தியரிடம் கூட்டிச் செல்லவேண்டும். இப்படி பல தேவைகளுக்கும் உதவ என்னிடம் எண்ணூறு ரூபாய்தான் இருக்கின்றது. இந்த எண்ணூறு ரூபாயை வைத்து நான் சைக்கிள் வாங்கவா? சட்டை வாங்கவா? வைத்தியம் பார்க்கவா? அரிசி வாங்கவா? வாடகை கொடுக்கவா? நான் எதை தேர்ந்தெடுப்பேன்? எதைத் தேர்ந்தெடுப்பது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? அரிசி வாங்க வைத்திருக்கும் பணத்தில் சட்டி மட்டும் வாங்கினால் சரியாகுமா? ஆகவே என்னிடம் பற்றாக்குறையாக இருக்கும் மூலவளத்தை நான் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தமுடியும். எதற்குப் பயன்படுத்தப் போகிறேன்? எதைத் தேர்ந்தேடுக்கப் போகிறேன்? எதைத் தேர்ந்தெடுப்பது எனக்கு உதவும்? என்பதே பொருளாதாரம்.
இதுவே ராபின்ஸ் சொன்ன “ A relationship between ends and scarce means that have alternative uses” என்கிற கோட்பாடாகும். அதிகமான தேவைகள் அல்லது எண்ணற்ற விருப்பங்கள்- பற்றாக்குறையான சாதனங்கள்- இருப்பவற்றுள் தேர்ந்தடுப்பது ஆகியவையே பொருளாதார நடவடிக்கைகளை எற்படுத்திகின்றன என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை. . மேலை நாடுகளின் பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக இந்தக் கோட்பாட்டை ஏற்றனர். நாமும் சற்று யோசித்துப் பார்த்தால் இந்த அடிப்படையிலேயே ஆண்டி முதல் அரசன்வரை பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை உணர முடியும்.
தாயின் வைத்தியத்தை அலட்சியம் செய்துவிட்டு சாராயக்கடைக்குப் போகிறவர்கள் – பள்ளிக் கூடத்துக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கொண்டு பட்டுப்புடவை வாங்குபவர்கள் – நிலமே வாங்காமல் செங்கல் வாங்கி அடுக்குபவர்கள் – குடிதண்ணீருக்கு வழி செய்யாமல் ஹோம் தியேட்டர் வாங்குபவர்கள் ஆகிய அவர்களை நமது வாழ்வின் வழிப் போக்கில் அன்றாடம் காணுகிறோம். இவர்களே பொருளாதாரம் அறியாத பேதைகள்.
இந்த அளவில் பொதுவான பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி ஓரளவு விளங்கிய பிறகு இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் பற்றி இனி விரிவாக விவாதிக்கலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இபுராஹீம் அன்சாரி













