நபிமணியும் நகைச்சுவையும்...!

தொடர் : 17
அன்னை ஆய்ஷா சித்தீக்கா (ரலி)

ஒற்றை வார்த்தையில் உடனே உதிர்ந்த பதில்! "ஆய்ஷா".

அடுத்தார்ப்போல்.....ஆண்களில்?

தயங்காமல் வந்தது அடுத்த பதில்! "அவரின் தந்தை"

அண்ணல் நபி (ஸல்) யிடம் கேள்வி கேட்டு நின்ற அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அயர்ந்து போனார்!

அல்லாஹ்வின் தூதர், தன் பெயரைச் சொல்லமாட்டார்களா என்ற நப்பாசை அவருக்கு!

'தாத்துஸ் ஸுலாஸில்' என்ற ஒரு போர்ப் படைக்குத் தலைமை தாங்கி நிற்கும் வெறும் தளபதியாகிய தானும் அதே சமயத்தில் அல்லாஹ்வின் தூதருடைய இனிய நெஞ்சத்தில் தமக்கும் முன்னால் தனியிடம் பெற்று வீற்றிருப்பவர்களும் சமமல்ல! என்பது அப்போதுதான் அவருக்கு பலமாக உரைத்தது! (1)

கேள்வி என்னவென்றால் "மனிதர்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர் யார்?" அல்லாஹ்வின் மீது ஆணையாக, முதல் முக்கியத்துவம் பெற்றவராக பெண்ணினத்தின் பேரரசி, கற்புநெறியில் பனியின் வெண்மையும் தூய்மையும் கொண்ட மாதரசி " நம் அன்னை ஆய்ஷா (ரலி)" ஆகவே இருந்தார்கள்!

"உணவுகளிலேயே ஸரீத் என்னும் உணவு சிறந்து விளங்குவதைபோல பெண்களில் ஆய்ஷா சிறந்து விளங்குகிறார்" என்று செம்மல்  நபி (ஸல்) அவர்கள், இவரை சிறப்பித்தார்கள். (2)

"நான் உன்னைக் கனவில் கண்டேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத்துணியால் போர்த்திக் கொண்டு வந்து இவர்தான் உன் மனைவி என்றார். முகத்தின் துணியை அகற்றிப் பார்த்தேன். அப்போது நீயாக இருந்தாய்! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்திருந்தால் அப்படியே நடக்கும் என்று கூறிக்கொண்டேன்" என்று ஏந்தல் நபியவர்கள் என்னிடம் கூறினார்கள். (3)

அறிவில் ஒளிவீசும் நம் அன்னை அவர்கள் அதில் ஒரு மாணிக்கமாக சிறுவயதிலேயே மின்னத் தொடங்கி விட்டார்கள். நம் அன்னை அவர்களின் அதீதமான ஞாபக சக்தியாலும் புத்திக் கூர்மையாலும் எந்தவொரு சிறு சம்பவத்தையும் உடனே நினைவுக்குக் கொண்டு வந்து தெளிவாக விளக்கும் தன்மைப் பெற்றிருந்தார்கள்.

'நபிமொழித்துறை'என்பது அண்ணலாருடன் கொண்டிருந்த நெருக்கமான பரிச்சயத்தைக் கொண்டுதான் தீர்மானிக்கப் படுகின்றது. அல்லாஹ்வின் தூதரோடு யார் யார் அந்த அளவிற்கு நெருக்கமும் அண்மையும் கொண்டிருந்தார்களோ அவர்கள் மட்டுமே அதில் சிறந்து விளங்க முடியும். இதனாற்றான் இவர்கள் மூலம் நமக்கு 2210 நபிமொழிகள் கிட்டியுள்ளன. அவை அனைத்தும் முக்கியமான மார்க்க சட்டதிட்டங்கள் பற்றியவை ஆகும். எனவேதான்அவனியெங்கும் புகழ் நிறைந்த அஹ்மது  நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் ஹுமைரா (ஆய்ஷா) விடமிருந்து மார்க்கத்தின் மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அருளினார்கள்.

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் புத்திசாதுர்யமான அதே சமயத்தில் நகைச்சுவை நல்கும் ஒரு பதிலை நாம்  பார்ப்போம்:

அண்ணல் பெருமான் நபி (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று பலமாக அடித்ததால் எனது அலமாரி திரை அகன்றது. நான் விளையாடும் பொம்மைகள் தெரிந்தன!

அண்ணலார் அவர்கள்: "இவை என்ன ஆய்ஷா?" என்று கேட்டார்கள்.

"என் விளையாட்டு பொம்மைகள்" என்றேன்.

"அதன் நடுவே இருப்பது என்ன?" என வினவினார்கள்..

"அது ஒரு குதிரை" என்றேன்.

"அதன் மீது இருப்பது என்ன?" என்றார்கள்.

நான் "இரு இறக்கைகள்" என்றேன்.

"ஓஹோ. குதிரைக்கு எங்காவது இறக்கைகள் இருக்குமா?" என்று கேட்டார்கள்.

அதற்கு "ஓ. இருக்குமே! சுலைமான் நபி அவர்களின் குதிரைக்கு இறக்கைகள் இருந்ததே!" என்று நான் தயங்காமல் பதில் சொன்னபோது,

அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! என் பதில் கேட்டு கடைவாய்ப்பற்கள் தெரியுமளவிற்கு சிரித்தார்கள்" (4)

இந்நிகழ்வில் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் சமயோசிதமான புத்திசாலித்தனமும் மார்க்க அறிவும் விஷயத்தை உடனுக்குடன் புரிந்துகொள்ளும் பக்குவமும் பளிச்சிடுகின்றதல்லவா!

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் விரைந்து வளரும் தன்மையுடைய பெண்களுள் ஒருவர். ஒன்பது வயதானபோதே ஒரு பெரிய பெண்மணியைப் போன்ற உருவத்திற்கு வந்துவிட்டார்கள்! 

ஹிஜ்ரீ முதலாண்டு ஷவ்வால் மாதம் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இனிய இல்லறத்தைத் துவங்கினார்கள்.

ஒருமுறை மாமதீனாவின் ஒளிசேர் மணியான மண்குடிலில் வாழ்ந்த மன்னர் நபி அவர்கள் தமது வீட்டில் செருப்புத் தைத்துக் கொண்டிருக்க, சங்கை மிகுந்த புனிதமான மங்கையர் திலகம் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் ஓர் ஆடையை ராட்டினத்தில் நெய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபித்துவ ஒளி மிகுந்த நாயகத்தின் உடலில் இருந்து வியர்வை பூத்துக் கொண்டிருந்தது. உகப்பான உண்மைத்தூதரின் முகரேகைகள் ஒளியால் இலங்கிக்கொண்டிருந்தன! இந்த அதிசய நிகழ்வைக் கண்டு திடுக்கிட்டுப் போன அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள், தன் அன்புக் கணவரின் எழில்முகம் அதை உற்று நோக்கினார். அது ஜெகஜ் ஜோதியாய் ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது!

ராட்டை சுற்றிடும் சப்தம் திடீரென்று நின்றதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஆய்ஷா (ரலி) அவர்களை ஏறிட்டுப் பார்த்து, 'என்ன காரணம்' என்று வினவ, வைத்த கண் வாங்காது தன் அன்புக் கணவரையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆய்ஷா (ரலி) அவர்கள் "யூஸுஃப் நபியின் அழகை இமைகொட்டாது பார்த்துப் பழமென எண்ணிக் கை விரல்களை கத்தியால் நறுக்கிக் கொண்ட மிஸ்ர் நாட்டின் அரம்பையர், தங்களின் முக அழகை இப்போது காணின் அவர்களின் விரல்களை அல்ல, தங்கள் இதயத்தையே கத்தியால் வெட்டிக் கொள்வார்கள் என்று பொருள்படும் கவிதை அமுதமாய் அவர்கள் வாயிலிருந்தும் வெளிவந்தது!

இன்னும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, கவிவேந்தர் அபூகபீர் ஹுதலி தங்களை இப்போது சந்திப்பின்;

"அவரது முக ரேகைகளை நீங்கள் பார்த்தால், அவை மின்னும் நட்சத்திரங்களைப் போன்று இலங்குவதைக் காணலாம்"

என்ற பிரசித்திப் பெற்ற அவரின் கவி வரிகளுக்கு, பிறர் எவரையும்விட நீங்களே முற்றிலும் பொருத்தமானவர் என சத்தியம் செய்வார் என்று அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் இன்னும் வியப்பு மாறாமல் பேரழகர் பெருமானாரையே ரசித்து நின்றார்கள்! (5)

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் சகோதரி மகன் உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்ற நிலையில், தம் துணைவியருள் ஒருவரை முத்தமிடுவார்கள்" என்று சொல்லிவிட்டு என் சிறிய அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள் என்றார். (6)

ஆண்-பெண் (கணவன்-மனைவி) இவர்களுக்கிடையே உள்ள உறவுகளும் தொடர்புகளும் அத்துடன் அண்ணல் நபியின் இனிய இல்லற வாழ்வு, அல்லாஹ்வின் தூதருடைய தனிப்பட்ட நெறிமிகுந்த வாழ்வொழுங்குகள் போன்றவை பற்றிய அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் பிரசித்திப் பெற்ற ஃபத்வாக்கள் சிறப்பிற்குரியனவாகும்.

மேலும், உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள், ஹலால்-ஹராம், அறிவுப் புலமை, கவிதை, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் 'என் சிற்றன்னை ஆய்ஷா முத்தஹ்ஹரா அவர்களை விட சிறந்தவர் ஒருவரை நான் கண்டதில்லை' என்கின்றார். (7)

நான் மணிமொழிப் பேசும் மாண்பு நபி (ஸல்) அவர்களோடு ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது நான் சிறியவளாக, சதைப்பற்று அதிகமில்லாதவளாக, கனத்த உடம்பு இல்லாதவளாக இருந்தேன். அப்போது மக்கள், "வாருங்கள். ஓட்டப்பந்தயம் வைக்கலாம்" என்றழைத்தனர். அனைவரும் ஓடினர்.

நபி (ஸல்) என்னை அழைத்து, "நம் இருவருக்கும் பந்தயம் வைக்கலாம்" என்றார்கள். அவர்களோடு ஓடினேன். பந்தயத்தில் நான் அவர்களை முந்திவிட்டேன். நபி (ஸல்) அவர்கள், அமைதியானார்கள். பின்னர், சில காலத்தில் எனக்கு சதைபோட்டு உடல் கொஞ்சம் கனத்துவிட்டது.

நடந்த பந்தய நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன். இன்னொரு பயணம் எங்களுக்கு வாய்த்தது. மக்கள் ஓடினர். அண்ணல் நபி (ஸல்) என்னை அழைத்து, "உன்னோடு ஓடுகிறேன்" என்றார்கள். எனவே, நான் அவர்களோடு ஓட்டப்பந்தயத்தில் ஓடினேன். ஆனால் , இந்தமுறை என்னை முந்திவிட்டு, வையகம் போற்றிடும் வள்ளல் நபியவர்கள் வான்மதிபோல் பிரகாசமாய்ச் சிரித்தார்கள். "இது, அதற்கு முன்னால் உன்னிடம் தோற்றதற்கு சரியாகிவிட்டது" என்றார்கள்.

நினைவெல்லாம் தேடும் நம் நெஞ்சிலே வாழ்கின்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். ஒரு பெருநாளின் போது , சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து மஸ்ஜித் நபவீயின் எல்லையில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்க விரும்புவதை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னை அவர்களுக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படும் அளவில் என்னை நிற்க வைத்தார்கள். பிறகு, அவர்களை நோக்கி, "அர்பிதாவன் மக்களே, உங்கள் விளையாட்டைத் தொடருங்கள்" என்றார்கள்.நான் பார்த்து சலித்தபோது "உனக்கு பார்த்தது போதுமா?" என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். "அப்படியானால் சரி. உள்ளே போ" என்று கூறினார்கள். (8)

நம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மறைவிற்குப்பின், அன்னை ஸவ்தா (ரலி) அவர்களையும் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்து இருந்தார்கள். இரு அன்னையரும் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் கேளிக்கை செய்தும் சிரித்து மகிழ்வார்கள். 

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அன்றைய தினம் 'ஹரீராஹ்' என்ற ஒரு சிறப்பான உணவை வீட்டில் தயாரித்து இருந்தார்கள். நபிகளாருக்கு பரிமாறும் சமயத்தில் அன்னை ஸவ்தா அவர்களையும் உண்ண அழைத்தார்கள். ஆனால், அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள், தனக்கு வேண்டாம் என மறுத்துகொண்டிருந்தார்கள். 

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களோ அப்போது மிகவும் இளமைத் துடிப்புள்ள ஒரு சிறுவயதாக இருந்ததால், தான் செய்த அந்த சிறப்பான உணவை கண்டிப்பாகச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அடம் பிடித்து, வலுக்கட்டாயமாக அன்னை ஸவ்தாவின் வாயில் ஊட்டிவிட முனைந்த அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் முயற்சியில் விளைவு என்னவாயிற்று  என்றால், அன்னை ஸவ்தா அவர்கள், வேண்டாம் என்று தலையை வேகமாக ஆட்டி மறுத்துகொண்டிருக்கும் நிலையில் வாயை நோக்கித் திணிக்கப்பட்ட உணவு திசைமாறி முகம் முழுதும் பூசப்பட்டு விட்டது. 

இந்தக் கேளிக்கையான நிகழ்ச்சி இரு அன்னையரையும் பார்த்துகொண்டிருந்த அண்ணலாருக்கு அன்னை ஸவ்தாவின் 'உணவுமுகம்' பெரிய சிரிப்பைக் கொண்டுவந்து சேர்த்தது!

உடனே, அண்ணலார் பாய்ந்து போய் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் இரு கைகளையும் முதுகுப்பக்கம் நின்று பிடித்துக் கொண்டார்கள். சீக்கிரம் வா ஸவ்தா! இப்போது உன் முறை. இப்போது ஆய்ஷாவின் முகத்தில் நீ பூசிவிடு! என்று அன்னை ஸவ்தாவுக்கும் வாய்ப்பளித்தார்கள். சற்று நேரத்தில் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் முகம் 'உணவுமுகமாக' மாறவே மீண்டும் மனைவியைப் பார்த்து நகைக்கத் தொடங்கிவிட்டார்கள் நபிகளார் அவர்கள்.

இவ்வாறு அன்னை ஆய்ஷா (ரலி) அவர்களின் வாழ்வு, மாறா அன்பின் பிறப்பிடமான மகிமை  நபி (ஸல்) அவர்களோடு மிக்க மகிழ்வுடன் இருந்தது. மிகச் சிறப்பாகவும் இருந்தது!

அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள், தங்களின் தனிச்சிறப்புப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

நான் ஒருத்தியே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மணமுடித்ததில் கன்னிப் பெண்ணாவேன். என் பெற்றோரைவிட, வேறு யார் பெற்றோரும் இஸ்லாத்திற்காக 'ஹிஜ்ரத்' செய்யவில்லை. என்மீது அவதூறு சுமத்தப்பட்டபோது, என் தூய்மையை அல்லாஹ் (ஜல்) வஹீ மூலம் அறிவித்தான். (9)

என்னை மணமுடிக்குமுன் நான் அல்லாஹ்வின் தூதருக்குக் கனவில் காட்டப் பட்டேன். நானும் அண்ணல் நபியவர்களும் ஒரே தொட்டியில் குளித்துள்ளோம்.

நபிகளார் தொழும்போது அவர்கள் மனைவியரில் என்னை மட்டுமே உறங்க அனுமதித்தனர். என்னுடன் தங்கும்போது அண்ணல் நபியவர்களுக்கு வஹீ வருவது வழக்கமாக இருந்தது. என் நெஞ்சில் தலைவைத்தே அண்ணலார் உயிர் நீத்தனர்.

அன்று அவர்கள் என்னுடன் வாழும் தவணை நாளாகவே இருந்தது. அவர்கள் என்னுடைய இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

நம் அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறங்கிக் கொண்டிருந்தபோது, தமது படுக்கையில் சிரிக்கலானார்கள். பின்னர் விழித்தெழுந்தபோது நான், 'அல்லாஹ்வின் தூதரே. தாங்கள் உறங்கும்போது ஏன் சிரித்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு முத்திரைத்தூதர்  அவர்கள் 'என் சமூகத்தினர் சிலர் இறையில்லம் ஹரமில் தஞ்சம் புகுந்துள்ள குறைஷியரில் ஒருவருக்காக, இறையில்லம் நோக்கி படையெடுத்து வருவார்கள். அவர்கள் 'பைதா' எனும் சமவெளியை அடையும்போது பூமிக்குள் புதைந்து போவார்கள்.

புதைந்த அவர்கள் பிற்பாடு பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாக எழுப்பப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப அல்லாஹ் (ஜல்) மறுமையில் அவர்களை எழுப்புவான். இந்தக் காட்சியைக் கண்டுதான் நான் சிரித்தேன் என்றார்கள்.

நான், "அல்லாஹ்வின் நபியே! பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாக வந்திருக்கும் நிலையில், அவர்களின் எண்ணங்களுக்கேற்ப மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் எவ்வாறு மறுமையில் எழுப்புவான்?" என்று கேட்டேன்.

அதற்கு வையகம் போற்றும் அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் "பார்வையாளர்கள், வழிப்போக்கர்கள், நிர்ப்பந்தமாக அழைத்து வரப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் சாலையில் திரண்டிருப்பர். அவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அழிந்து போவர். பின்னர், அவர்கள் அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப எழுப்பப் படுவார்கள்." என்று பதிலளித்தார்கள். (10)

ஒருமுறை ஒருசிலர் அன்னையை சந்திக்க வந்தனர். உம்முல் முஃமினீன் அவர்களே, அண்ணலாரின் பண்பு நலன்களைப்பற்றி சற்று எங்களுக்குச் சொல்லுங்களேன் என்றார்கள்.

"நீங்கள் குர்ஆனை வாசிப்பதில்லையா? குர்ஆன் தான் மாசிலா மாமணியான மாண்பு நபியின்  ஒட்டுமொத்தப் பண்பு நலனாகத்திகழ்ந்தது' என்று பதிலளித்தார்கள்.

வேகவேகமாகக் குர் ஆனை வாசித்து முடித்துவிடுவதுதான் சிறந்தது. நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது என்று சிலர் ஒரே இரவில் குர்ஆனை  ஓதி முடிக்கிறார்களே அன்னையே! என்ற கேள்விக்கு;

"அவர்கள் ஓதுவதும் ஒன்றுதான். ஓதாமல் இருப்பதும் ஒன்றுதான்!" இரவு முழுவதும் சாந்திநபி அவர்கள்  நின்று தொழுது இருக்கிறார்கள். பார்த்தால், அல் பகரா , அந் நிஸா, ஆலு இம்ரான் அத்தியாயங்களைத் தவிர வேறு எதையும் ஓதி இருக்க மாட்டார்கள்.நற்செய்தி தாங்கிய வசனங்கள் வந்தால் திரும்பத் திரும்ப அதனையே ஓதுவார்கள். அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். இறைவேதனை, இறை சாபம் சுமந்த வசனங்களைக் கண்டால் இறைவனிடம் பாதுகாவல் தேடுவார்கள் என அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள் (11)

இறைவேதத்திற்கு உரை அளிக்கக்கூடிய தகுதியும் இறைத்தூதரின் நடைமுறையை விளக்கும் ஆற்றலும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களைப் போதிக்கும் தீர்க்கமான அறிவும் பெற்ற திறமையாளராய் மிளிர்ந்த ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே அன்னை ஆய்ஷா (ரலி) அவர்கள் அண்ணலாரின் மறைவுக்குப் பிறகு மீதி 46 ஆண்டுகள் மக்களுக்கு மார்க்க வழிகாட்டுதலிலேயே கழித்து அவர்தம் 67ஆம் வயதில் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

(ஆனால், அந்நாளில் தன் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும் அவன் உன் மீது திருப்தி அடைந்த நிலையிலும் நீ மீளுவாயாக! நீ என் நல்லடியார்களுள் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (அல் குர் ஆன் 89:27)

o o o 0 o o o
ஆதாரங்கள்:

(1) புகாரி 3662
(2) மனாகிப் ஆய்ஷா
(3) புகாரி 5125
(4) அபூதாவூத் 4284
(5) தஹ்தீப் தாரிக் திமிஷ்க்
(6) புகாரி 1928
(7) முஸ்தத்ரக் ஹாக்கிம்
(8) புகாரி 950
(9) அல்-குர்ஆன் 24:4-26
(10) முஸ்னத் அஹ்மத் 23595
(11) முஸ்னத் அஹ்மத்

இக்பால் M.ஸாலிஹ்

15 கருத்துகள்

Yasir சொன்னது…

அல்லாஹூ அக்பர்....மாஷா அல்லாஹ் மிகக் கடினமான வேலையைக் கையில் எடுத்துக்கொண்டு,பல்வேறு பணிப்பினைகளுக்கிடையே எங்களுக்காக இனிமையாகவும்,எளிமையாகவும் அறிந்திராத பல விசயங்களையும்,கண்ணிய நபி(ஸல்) அவர்களின் மாண்புகளையும்,அவர்தம் குடும்பத்தினரின் பண்புகளையும் எளிய நடையில் தமிழைக்கொண்டு மாலைக்கோர்க்கும் உங்கள் பணிக்கு அல்லாஹ் மிகப்பெரிய கூலி தருவான் காக்கா,ஆமீன் யாரப்பல் ஆலமீன்

Yasir சொன்னது…

//அர்பிதாவன்// இதனை நேரமிருந்தால் கொஞ்சம் விளக்கமுடியுமா காக்கா ??

Unknown சொன்னது…

இனிய தமிழில் எளிய நடையில் பெருமானார் நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கையை படிப்பினையாய் பின்பற்றி துயர் நீங்கி இன்புற்று வாழ இவ்வாக்கம் நல்லதொரு தாக்கமாய் உள்ளது.மாஷா அல்லாஹ்,,,,,,
------------------
இம்ரான்.M.யூஸுப்

Ameena A. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மரியாதைக்குரிய சகோதரர் அவர்களுக்கு,

இதுநாள் வரை இந்த தொடரின் ஸ்டார் அந்தஸ்து பெரும் அத்தியாயம் இது !

மாஷா அல்லாஹ் !

வழ்வியல் இலக்கணம்.

Great effort brother ! Please continue...

sabeer.abushahruk சொன்னது…

நகைச்சுவை என்னும் தலைப்பில்
அறுசுவை. சொல்லறம் போதித்த கண்மணி நாயத்தின்(ஸல்) இல்லறம் எத்துணை நல்லறமாய் விளங்கியது என்பதைத் தாய்மொழியில் இதற்குமுன் இலக்கியச்சுவையோடு வாசித்தது கிடையாது.

வாழ்க உன் நிய்யத்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா-டா.

Ebrahim Ansari சொன்னது…

சொக்கிப் போக வைக்கும் தமிழ் நடை .

உதாரணம் :" வியர்வை பூத்துக் கொண்டிருந்தது. " இதுபோல எங்கும் படித்ததில்லை. அந்தக் காட்சியை கற்பனை செய்து பார்த்தால் தெரியும். எங்களை வாரந்தோறும் தேன் குடிக்கும் வண்டாக மாற்றுகிறது இந்தத் தொடர்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

விளையாட்டு பொம்மைகள் வைத்து விளையாடுவது கூடாதென்பதுபோல் பெரியவர்கள் சொன்ன ஞாபகம் தங்களின்(4)அபூதாவூத் 4284ல்[ஆதாரம்]சொல்வதை பார்த்தால் குழப்பம் ஏற்படுகிண்றதே விளக்கம் தேவை

faizeejamali சொன்னது…

Good article

N.A.Shahul Hameed சொன்னது…

Assalamu Alaikkum Brother Iqbal!
My heart is full so words are few!!!
Alhamdhulillah, your first article itself is the best article. I feel this is going to be your masterpiece. I hope you have attained the benefit of your being created through this wonderful piece of work.
Every week we have been eagerly looking for this particular posting and your lucid and vivid narration of our Holy Prophet (PBUH) makes us have a feel of living in that golden era.
I feel proud of being one of your close friends. May Allah bless all of us.
Yet another point I would like to mention you, we have shared many things regarding the sacrifices of our Holy Prophet (PBUH) and his esteemed Companions. Whenever we hear you saying we were elated. But I think this is the right platform and the right time to expose your knowledge and your matured sense of faith. Indeed we all are moved through your narration.
I am sure the readers of your articles will still have further enlightenment and true faith upon our Creator.
Wassalam.
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கட்டுரையே கவிதையானது !

மாஷா அல்லாஹ் !

புரியும்படியான கவிதைத்துவமான கட்டுரை !

ஒவ்வொரு அத்தியாயத்தின் நிறைவில் அடுத்த அத்தியாயத்திற்கான சுழி போட்டு நிறுத்துவார்கள், ஆனால் இங்கே அத்தியாயத்தின் ஆரம்பம்பமே... ஏங்க வைக்கும் துவக்கும் ! அழகோ அழகு !

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

// "யூஸுஃப் நபியின் அழகை இமைகொட்டாது பார்த்துப் பழமென எண்ணிக் கை விரல்களை கத்தியால் நறுக்கிக் கொண்ட மிஸ்ர் நாட்டின் அரம்பையர், தங்களின் முக அழகை இப்போது காணின் அவர்களின் விரல்களை அல்ல, தங்கள் இதயத்தையே கத்தியால் வெட்டிக் கொள்வார்கள் என்று பொருள்படும் கவிதை அமுதமாய் அவர்கள் வாயிலிருந்தும் வெளிவந்தது!//

ஆதாரப்பூர்வமான நிகழ்வு மூலமாகக் கவிதையின் தாக்கம் பற்றி உணரச்செய்தது உங்கள் ஆக்கம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நபியவர்களின் வாழ்க்கை முறை நம் மொழியாடலில் மிக அருமை.
குறிப்பாக குர்'ஆன் ஓதுவதில் வேகத்தை விட விவேகமே மேலானது என்பது அறிய முடிகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா -க்கா.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

இனிய தமிழில் எளிய நடையில் பெருமானார் நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கையை படிப்பினையாய் பின்பற்றி துயர் நீங்கி இன்புற்று வாழ இவ்வாக்கம் நல்லதொரு தாக்கமாய் உள்ளது.மாஷா அல்லாஹ்,,,,,,

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். மெய் சிலிர்க்கவைக்கும் தொடர்! படிக்க,படிக்க திகட்டாத தேன் அமுதம்.

Iqbal M. Salih சொன்னது…

மதிப்பிற்குரியவர்கள்: சகோதரி ஆமினா, அண்ணன் என் ஏ எஸ், டாக்டர் இ.அன்ஸாரி, ஃபெய்ஸீ ஜமாலீ ஆகியோருக்கும்

பிரியத்திற்குரிய சகோதரர்கள்: அபுஇப்ராஹீம், அப்துல்லத்தீஃப், கவியன்பன் அவர்கள், இம்ரான் கரீம், தஸ்தகீர், நண்பன் சபீர், சஃபீர் அஹ்மத், யாசிர், ஜஃபர் ஸாதிக் ஆகியோருக்கும் கருத்திட்டமைக்காக என் நன்றிகள் உரித்தாகட்டும்.

தம்பி யாசிர்: அர்பித்தா' என்பது அப்போதைய ஆஃப்ரிக்காவின் புகழ்பெற்ற நகரம்.

Attn: Bro.Safeer Ahmad: It has been narrated by Aishaa (Rali) said that The messenger of Allah had returned from the battle when wind blew swiftly and removed a screen that was on Aishah's sahwah and thus uncovering her dolls. He asked "what is this Oh Aishaa? She said my dolls" He saw among them a horse that had two wings made of patches, so He asked 'whats that I see among them? She replied "a Horse". He asked "whats that on it?" She answered two wings'. He asked "you mean, a horse with two wings?" She said "yes, have you not heard that prophet Solomon had a horse with two wings?".

Aishaa (Rali) said "Thereupon the Messenger of Allah SMILED until I could see his molar teeth!"

-Recorded in Sunan Abu Dawud #4938, #4284 and transmitted by An-Nasaii in Sunanul Kubra #8857. I hope its worth mentioning which has been authentically narrated by the chains of transmission in order to satisfy your questions!