கடந்த வாரம் இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் – உரசும் உண்மைகள் என்று தலைப்பிட்ட குறுந்தொடர்ப் பதிவைப் படித்து இருப்பீர்கள். வேதனையான விஷயம் என்னவென்றால் ஆரிய சக்திகள்தான் இனத்தைப் பிரித்து – இனத்தை ஒதுக்கி அதனால் இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை உருவாக்கின என்றால் இன்றைய முஸ்லிம் சமூகத்திலும் இட ஒதுக்கீடு தொடர்பான இன ஒதுக்கீடு செய்து நமக்குள்ளே இருக்கிற இயக்கங்கள் நடந்து கொள்வதுதான். இது தொடர்பான சில செய்திகளை யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி உண்மை நிலைகளைப் பதிவு செய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
கடந்த சில மாதங்களாக அல்லது வாரங்களாக ஊடகங்களை சில செய்தித் தலைப்புக்கள் தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றன. அவற்றுள் வரப் போகும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணிகள் அமைவது. கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தை, ஒருவரை ஒருவர் இழுப்பதற்கான ஆயத்தங்கள், சில எதிர்பாராத உறவுகள், சில எதிர்பாராத பிரிவுகள், கூட்டணித் தரகுவேலைகள், அரசியல் குடும்ப சண்டைகள், கட்சியை விட்டு விலக்கல்கள், சுவரொட்டிப் போர்கள், தந்தை மகனின் உருக்கமான கண்ணீர் மல்கும் காட்சிகள் , அரசியலே வேண்டாமென்று போனவருக்கு விருதுகள், தொண்டர்களின் மாநாடுகள் என்பனவெல்லாம் ஊடகங்களை ஆக்ரமித்தவை.
அவற்றுள்ளும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயம் தொடர்புடைய இஸ்லாமியருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டுமென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் என்கிற ஒரு மக்கள் திரண்ட போராட்டமும் கடந்த மாதங்களிலும் வாரங்களிலும் நமது கவனத்தை கவர்ந்தவையாகும்.
இடஒதுக்கீடு வேண்டுமென்று சிறை நிரப்பும் போராட்டம் தேவையா தேவை இல்லையா என்பது பற்றி பல வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களை மட்டுமல்ல நமது உள்ளங்களையும் ஒரு குலுக்கு குலுக்கிப் போட்டன. இது போன்ற ஒரு ஜீவாதாரப் பிரச்னையில் அரசின் கவனத்தைக் கவர ஒரு ஒன்றுபட்ட வெகுஜன இயக்கம் தேவைதான் என்பது வெளிப்படையிலும் அடிப்படையிலும் பெரும்பாலோரின் கருத்தாகும். அதற்கு முன் , இட ஒதுக்கீடு என்றால் என்ன ? அது முஸ்லிம்களுக்கு ஏன் அவசியம்? இப்படிப் பட்ட இட ஒதுக்கீடு ஏற்கனவே கொடுக்கப் பட்டிருந்ததா?
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பதற்கு ஒரு சிறு சமூக வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. அத்துடன் சில அரசியல் பேரங்களும் இருக்கின்றன. அவற்றை முதலில் சுருக்கமாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது பல வகையான பரிமாணங்களைக கடந்து வந்துள்ளது. இன்றைக்கு ஏழு சதவீதம் கேட்டுப் போராட்டம் நடத்துகிறோம் . இந்த ஏழு சதவீதம் ஆங்கிலேயர் காலத்திலேயே முஸ்லிம்கள் அனுபவித்து வந்த உரிமைதான் . இந்த உண்மைகளைப் பாருங்கள்.
- 1927 முதல் 1947 வரை முஸ்லிம்கள் சென்னை மாகாணத்தில் 16 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று வந்தனர்.
- 1947ம் வருடத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரால் இது 7 ஆக குறைக்கப்பட்டது. இந்த 7 சதவிகித இட ஒதுக்கீடு 1954ம் ஆண்டுவரை முஸ்லிம்களால் பெறப்பட்டது.
- 1954ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது இந்த 7 சதவிகித இட ஒதுக்கீட்டையும் தேவை இல்லை என நீக்கினார்.
- "மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது'' என்று காமராஜர் கொள்கை முடிவு செய்து, முஸ்லிம் இட ஒதுக் கீட்டை முழுமையாக ரத்து செய்த பிறகு, முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியை வெறுக்கத் தொடங்கினார்கள். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இன்று போடும் தந்தனா பாட்டுக்கு அரிச்சுவடி அன்று முதலே எழுதப் பட்டது . அந்தப் பாவத்தைத் தான் இன்றுவரை அறுவடை செய்துகொண்டு இருக்கிறது.
- அந்த நேரத்தில்தான் "காமராஜர் தள்ளுபடி செய்த இட ஒதுக்கீட்டை நாங்கள் பெற்றுத் தருவோம்'' என்று கூறிய தி.மு.க.வை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி அடைய வைத்தனர். அன்று திமுகவின் வலையில் விழுந்த பல முஸ்லிம்கள் இன்று வரை எழுந்திருக்கவில்லை. ஆனால் எதற்காக திமுகவை ஆதரிக்கத் தொடங்கினோம் என்பதே பல முஸ்லிம்களுக்கு இன்று மறந்தே போய்விட்டது.
- மாநிலக் கட்சியாக முதன் முதலில் உருவெடுத்த தி.மு.க.வால் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த முடியாமல் போனது. பின்னர் 1973ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முஸ்லிம்களை அப்போது இருந்த 31 சதவிகித பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் பெற வைத்தது.
- அதன்பிறகு, "மற்ற பிற்படுத்தப் பட்ட சமுதாயங்களோடு போட்டியிட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் எங்கள் சமூகம் கஷ்டப்படுவதால் முஸ்லிம்களுக்கென்று- எனக்கே எனக்கு என்று தனி இட ஒதுக்கீடே எங்களுக்கு பயனளிக்கும்" என்ற அவர்களின் வாதம் சரியான முறையில் ஆட்சியாளர்களால் உணரப்படவில்லை ; அன்றைக்கு அல்லும் பகலும் திமுக, அதிமுக என்று மாறி மாறி வந்த ஆட்சியாளர்களோடு ஒட்டுறவாக இருந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளாலும் இயக்கங்களாலும் உணர்த்தப் படவுமில்லை.
- பின்னர், 2008ஆம் ஆண்டில் தான் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக் கீட்டை அளித்தது.
- ஆனாலும், ஒதுக்கப்படும் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் குறைகள் பற்றியும், சதவிகித இட ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது என்பதைப் பற்றியும் முஸ்லிம்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பியவண்ணம் இருந்தனர். இதில் ரோஸ்டர் பூஸ்டர் என்று பல டெக்னிகல் விஷயங்கள் கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்தன.
- இந்த நிலையில் மத்தியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என அறிவித்து, ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆராய, அறிக்கைதர நீதிபதி சச்சார் தலைமையிலும், பின்னர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலும் கமிஷன்களை அமைத்தது.
- மேற்கண்ட இரு விசாரணைக் குழுக்களும் முஸ்லிம்கள், உண்மையான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின் தங்கிய நிலைமையில் இருப்பதையும் அவர்களை கை தூக்கி விடவேண்டுமென்ற இயற்கையான இட ஒதுக்கீட்டு நியதியையும் சுட்டிக் காட்டி தெளிவான அறிக்கைகளைத் தந்தன.
- இப்படி மத்திய அரசு நியமித்த குழுக்கள் தெளிவான அறிக்கையால் உரைத்திட்ட பிறகும் முஸ்லிம்களுக்கு சரியான முறையில் மத்திய, மாநில அரசுகளால் இட ஒதுக்கீடு அளிக்கப்படாமல் இருப்பது சமூக நீதிக்கு முற்றும் எதிரானது முஸ்லிம்களின் மோசமான நிலையை விளக்கும் வகையில் அந்த அறிக்கைகள் இருந்தும், மத்திய அரசு இடஒதுக்கீட்டை அளிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதற்கு பாஜகவின் எதிர்ப்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது இதனால் இதற்காக, என்று பல்வேறுபட்ட முஸ்லிம்களின் இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கின.
- சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒன்பது சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க முடிவெடுத்து விட்டதாகக் கூறியுள்ளார் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் இதற்கான அமைச்சரவை முடிவோ அறிவிப்போ இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இட ஒதுக்கீடு வேண்டுமென்று தீவிரமாக களத்தில் இறங்கிப் போராட ஒரு முடிவெடுத்து போராட்டத்தை அறிவித்தது. இப்படி அறிவிக்கப் பட்ட போராட்டத்தைப் பற்றி பல முனைகளிலும் முஸ்லிம் அமைப்புகளுக்குள்ளிருந்தே எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்தப் போராட்டத்துக்கு எந்த அளவு ஆதரவு இருந்ததோ அந்த அளவுக்கு நம்மவரிடையே எதிர்ப்பும் இருந்தது; எழுந்தது.
அடிப்படையில் இந்த கோரிக்கை மற்றும் போராட்டம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மாநிலங்களில் ஏழு சதவீதமும் மத்தியில் பத்து சதவீதமும் முஸ்லிம்களுக்கு சட்ட பூர்வமான இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கைவிடுவது போராடுவது என்பதுதான். இதை முன்னின்று நடத்தியவர்கள் மீதான சில விமர்சனங்கள் மற்றும் உண்மையான உள் நோக்கங்கள் பற்றிய சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவற்றையும் இங்கு விவாதிக்க இருக்கிறோம். முதலில் நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்க்கலாம்.
இன்றைய அரசியல் காலக் கட்டத்தில் முஸ்லிம்களைப் பொருத்தவரை தட்டிக் கேட்ட காலம் போய் அதனால் தொடர்ந்து தட்டுக் கெட்டே நிற்பதால் அதட்டிக் கேட்கும் காலம் அவசியமாகிவிட்டது. காரணம், நியாயம் , நேர்மை, நீதி, சமத்துவம், சரிநிகர் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் வாயில் போட்டுத் துப்பும் பாண் பராக் அல்லது வெற்றிலை பாக்கு என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. முஸ்லிம்கள் வெறும் ஓட்டு வங்கிகள் என்கிற நிலைமை தவிர, அவர்களை கை தூக்கிவிட ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் தகர்க்கப்பட்டே வந்து இருக்கிறது. முஸ்லிம்களை எப்படியெல்லாம் கறிவேப்பிலை போலப் பயன்படுத்தித் தூக்கி எறியலாமென்றே அரசியல் கட்சிகள் கணக்குப் போட்டு வைத்து இருக்கின்றன. தவிரவும் முஸ்லிம்களை நேரம் கிடைக்கும்போது கருவறுக்கவும் அரசியல் வேட்டை நாய்கள் வாய் பிளந்து கொண்டே இருந்து இருக்கின்றன. இனியும் இளிச்சவாயர்களாக இருந்து ஏமாறத் தயாரில்லை என்று ஒரு இயக்கம், தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இதை முன்னெடுத்து நடத்தி வக்கிரபுத்தி உடையவர்களுக்கு சாவுமணி அடிக்க இந்த மாதிரியான ஒரு அறப் போரை துவக்கி விதை தூவியது வரவேற்கத் தகுந்த காய் நகர்த்தல்தான் என்பதை மனசாட்சி உள்ளோர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
அதே நேரம், இந்தப் போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் ஏன் முன்னெடுத்து செய்ய வேண்டும்? இதற்கு சில அரசியல் உள் நோக்கங்களும் தனிப்பட்ட பிரதிபலனும் இருப்பதாக இந்த போராட்டத்தை எதிர்த்து கருத்திட்டவர்கள் பட்டியலிட்டார்கள். இத்தகையோர் சார்பில் எடுத்து வைக்கப் பட்ட வாதங்கள்.
- படிக்கிற இளைஞர்களை இயக்க அரசியலில் ஈடுபடுத்தி படிப்பைக் கெடுக்கிறார்கள்.
- இப்படிப் பட்ட இளைஞர்களை சிறைக்கு அனுப்ப ஒரு போராட்டமா?
- முதியவர்களைக் கூட இந்தக் குளிர் நேரத்தில் திரட்டிக் காட்டி அவர்களையும் சிரமப் படுத்துகிறார்கள் ; குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
- பெண்களை மார்க்கம் அனுமதிக்கப் பட்ட துணைகள் இல்லாமல் நெடும் தொலைவுக்கு அழைத்துப் போய் கூட்டம் கூட்டிக் காட்டுகிறார்கள்,
- ஆளும் கட்சியின் தலைவி ஒரு முறை தங்கள் இயக்கத்தின் அளவை குத்துமதிப்பாக சொல்லிக் காட்டியதால் அதை நிருபிக்க வேண்டுமென்று கூட்டம் கூட்டுகிறார்கள்,
- தங்களின் அரசியல் செல்வாக்கைக் காட்டி எதிர்வரும் தேர்தலில் பேரம் பேசவே இப்படி போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள். உண்மையில் உள் நோக்கம் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவது அல்ல ,
- ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது இப்படி ஒரு கூட்டம் கூட்டிக் காட்டுவது இவர்களது வாடிக்கையாகிவிட்டது,
- இவர்களது இந்தப் போராட்ட நடவடிக்கையை எதிர்த்துப் பேசுபவர்களை தனிப்பட்ட முறையில் இவர்களே போதித்த மார்க்க நெறிமுறைகளையும் மீறி தாக்கி கடுமையான வார்த்தைகளால் பேசுவதுடன் மூர்க்கமாக ஈடுபடுகிறார்கள்.
- இயக்க அரசியலில் தங்களுக்கு இணையான போட்டியாகக் கருதும் மற்றொரு இயக்கம் இருக்கும் இடத்தில் அல்லது ஆதரிக்கும் இடத்தில் தாங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே போட்டி அரசியல் நடத்தவே ஒரு காரணம் தேடி உணர்வு பூர்வமான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை கைகளில் எடுத்து இருக்கிறார்கள்.
- கல்வியில் ஆர்வமின்மையும் வெளிநாட்டு மோகமும் நிறைந்துள்ள சமுதாயத்தில் சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு எவ்வித சேவையும் ஆற்றாமல் வேலை வாய்ப்பை மட்டும் குறியாக வைத்து செயல் படு போராடு என்பது எவ்விதத்தில் சரியாகும்?
- ஏற்கனவே அறிவித்த 3.5 சதவீத இட ஒதுக்கீட்டையே நிரப்பவே ஆள் இல்லாதபோது தகுதிகளை உயர்த்திக் கொள்ளாமல் மேலும் ஒதுக்கீடு கேட்பது சரியான யுக்தி அல்ல.
- என்பதெல்லாம் இட ஒதுக்கீடு கேட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்த நாள் முதல் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் மேல் வைக்கப் படும் குற்றச்சாட்டுக்கள் அல்லது இந்த போராட்டத்துக்கு எதிரான பொதுவான வாதங்கள்.
இவைகளைத் தவிர, மிகவும் கடுமையாக தவ்ஹீத் ஜமாத்தின் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டுகள் சற்று அதிர்ச்சி அளிப்பவை.
பிற முஸ்லிம் இயக்கங்களையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி கடிதம் எழுதி அழைத்து இருந்தது. இது பலரின் வியப்புக்கு உரியதாக இருந்தது. காரணம் பிற இயக்கங்களில் உள்ளவர்களை முஸ்லீம்கள் அல்ல என்றும் தாங்கள் மட்டுமே உண்மையான இறைவழியும் நபிவழியும் நடப்பவர்கள் என்றும் கூறிவிட்டு இப்போது மட்டும் அழைப்பது ஏன் என்பது அவர்கள் கேள்வி. தவ்ஹீத் ஜமாத்தின் கூற்றுப்படி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இரண்டு வகைப் படுவார்கள். ஒரு வகை அல்லாஹ்வின் பார்வையில் அவர்கள் முஸ்லிம் ; அடுத்த வகை, உலகத்தின் பார்வையிலும் அரசின் ஆவணங்களிலும் முஸ்லிம் என்று அழைக்கப் படுபவர்கள். ஆனால் இட ஒதுக்கீடு கேட்பது எல்லா முஸ்லிம்களுக்காகத்தான். முஸ்லிம்களே அல்ல என்று முத்திரை குத்தி தனிப் பள்ளி, தனித் தொழுகை, தனிப் பெருநாள் என்று தனி வழி கண்டவர்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்துக்கு மட்டும் எல்லோரையும் அழைப்பது ஏன்? (கோ. சலீம் – ஏகத்துவ பிரச்சார மையம் , காரைக்கால்)
அது மட்டுமல்லாமல் பிற இயக்கங்கள் நடத்துகின்ற அல்லது நடத்திய போராட்டங்களைப் புறக்கணித்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தவ்ஹீத் ஜமாத், தான் நடத்தும் போராட்டத்தில் மட்டும் மற்றவர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று எவ்விதம் எதிர்பார்க்க முடியும் என்பதும் அவர்கள் கேள்வி.
மேலே நாம் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் எதுவும் யார் மீதும் குற்றப்பத்திரிகை வாசிக்க அல்ல. மேற்கண்ட எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பிலும் பதிலுரைகள் பரப்பப் பட்டன. அவை யாவற்றிலும் அடிப்படையான உயிரோட்டம் என்ன வென்றால் இட ஒதுக்கீட்டுப் பிரச்னை என்பது முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதாரமான பிரச்னை. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தொடர்ந்து முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் நிலைமைகள் மாறவில்லை. ஆளுவோர் அமைக்கும் விசாரணைக் கமிஷன்கள் தந்த அறிக்கைகள் கூட காலம் பல கடந்தும் அமுல் படுத்தப் படவில்லை. ஆகவே அரசுகளின் கவனத்தைக் கவரும் வகையில் அனைவரும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது அனைவரின் கடமை எனவேதான் அனைவருக்கும் அழைப்பு விடப் பட்டது. இதில் உள் நோக்கம் எதுவுமில்லை என்கிற வகையில் தவ்ஹீத் ஜமாத்தினரும் விளக்கங்கள் தந்தார்கள். பல ஊர்களில் விளக்கக் கூட்டம் நடத்தி பெரும் செலவில் விளக்கமான விளம்பரங்கள் முதலியவை அவர்களின் சார்பில் பிரமாண்டமாக செய்யப்பட்டன.
இதற்கிடையில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தவ்ஹீது ஜமாஅத்தின் போராட்டத்தை விமர்சித்து சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி அவர்கள் ஜூம்ஆ பேருரையில் சில கருத்துக்களைக் கூறினார். அவர் கூறிய கருத்துக்கள் எவ்வளவு நியாயம் உடையதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தக் கருத்துக்களை பலவித கருத்துக்களையும் இயக்கங்களையும் சார்ந்த முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை ஜூம் ஆவுக்காக கூடும்போது அந்த மிம்பரில் ஏறி ஒரு தனிப்பட்ட இயக்கத்தைத் தாக்கிப் பேசியது தவறு என்றே நினைக்கிறோம். ஜூம் ஆ மேடை என்பது பலவித இயக்கங்களும் கூடும் இடத்தின் பொது மேடையாகும். சம்சுதீன் காசிமி அவர்களின் விமர்சனத்தை பள்ளிவாசல் அல்லாத வேறு ஒரு பொது இடத்தில் அவர் பேசி இருக்கலாம். பள்ளியில் ஜூம் ஆ பிரசங்கத்தில் பேசியது ஒரு வகையில் தவறுதான்.
அதே நேரம் அவர் எழுப்பிய பிரச்சனைகள் அல்லது கேள்விகளுக்கு மார்க்க அடிப்படையில் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து இருக்க வேண்டிய தவ்ஹீத் ஜமாத் உடைய இரண்டாம் நிலைத் தலைவர்கள் பொதுத் தளங்களில் பேசிய பேச்சுக்கள் இதுவரை அவர்கள் போதித்து வந்த குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் மாறானவை. மேலும் சம்சுதீன் காசிமி அவர்களின் வீட்டின் முன்பு பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் நிகழ்வுகளும் ஓட்டு மொத்த சமுதாயமும் தலைகுனிய வேண்டிய சங்கதிகளாகும்.
நாம் இந்தப் பதிவில் சொல்ல விரும்புவது என்னவென்றால் நமது சமுதாயத்தின் ஜீவாதாரமான உரிமைகளைக் கேட்பதில் வேதனைகளைத் தரும் இவ்வளவு விமர்சனங்களும் வேடிக்கைகளும் நமக்குள் தேவையா என்பதுதான்.
தொடக்கமாக தமிழக முதல்வர் இட ஒதுக்கீட்டைத் தந்துவிடுவார் என்று நினைத்து இந்த போராட்டத்தை தன்னந்தனியே ஏற்பாடு செய்த தவ்ஹீது ஜமாத்தின் துணிவைப் பாராட்டலாம். ஆனால் செயல் முறைகளைப் பாராட்ட இயலாது. காரணம் கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீடையும் ஆந்திர அரசு கொடுத்த இட ஒதுக்கீடையும் கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா போன்ற ஒருவரிடம் தமிழ் முஸ்லிம்களின் நம்பிக்கையை அடமானம் வைத்து ஏழு சதவீதம் இட ஒதுக்கீடை எதிர்பார்ப்பது என்பது “ கறந்த பால் மடி புகும் - கருவாடு மீன் ஆகும் " என்ற கதைதான்.
இப்போது கூறப் போவது ஒரு பேராசையாக இருக்கலாம். ஆனால் தீர்வு இப்படித்தான் இருக்க முடியும் என்பது அவரவர் மனசாட்சியின்படி நிதர்சனமான உண்மை! உண்மை! முக்காலும் உண்மை!
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீக் , மமக , எஸ்டிபிஐ, தேசிய லீக் மற்றும் டி.என்.டி.ஜே. போன்ற அனைத்து இயக்கங்களும் இந்த இட ஒதுக்கீடு பிரச்னைக்காக மட்டுமாவது கை கோர்த்து கலந்து பேசி ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் சார்பான போராட்டத்தை மார்க்க நெறிமுறைகளைப் பேணி, குறிப்பாக விமர்சனத்துக்குள்ளாகும் பெண்களை போராட்டக் களத்துக்கு அழைக்காமல் - நீயா நானா என்கிற ஈகோ பிரச்சனைகளைப் பார்க்காமல் – ஒன்று கூடி அரசியல் நோக்கங்களைக் களைந்து வீசிவிட்டு சமுதாயம் ஒன்று திரண்டு அரசைத் தட்டிக் கேட்டால் இந்த சமுதாயம் ஏற்கனவே பெற்று இருந்து பின் இழந்த இட ஒதுக்கீட்டைத் திரும்பப்பெற வாய்ப்பு உண்டு. அதுவே சரியான, வாய்ப்பு. மற்றபடி தனித்தனியாக கோஷம் போடுவதும் மார்க்கத்தை உபதேசிக்க வேண்டியவர்களே ஒருவரை ஒருவர் வசைபாடித் திரிவதும் மாற்றார் நம்மை வேடிக்கை பார்க்கவும் - நம்மை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தவுமே உதவும்.
இரண்டாவதாக இட ஒதுக்கீடு மட்டும் கோரி என்ன பயன் ஏற்படப் போகிறது என்று புரியவில்லை. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஐ எப் எஸ் ஆகிய தேர்வுகளில் பதினான்கு பேர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்கிற செய்தி பத்திர்கைகளில் வந்தன. இவர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இட ஒதுக்கீடு நாம் கேட்டு அரசே தருவதாக இருந்தாலும் அதில் நாம் யாரை நியமிக்க முடியும்? அந்தந்தப் பதவிகளுக்குரிய கல்வி முதலிய தகுதிகளால் போட்டி இடும் அளவுக்கு நமது மக்களின் கல்வித்தரம் உயர்ந்து இருக்கிறதா? அல்லது இன்று கூச்சல் போடும் இயக்கங்களில் யாராவது இந்தக் கல்வித்தரத்தை சமுதாய மக்களிடம் ஏற்படுத்த – அவர்களுக்கு வழிகாட்ட ஆக்கபூர்வமாக ஏதாவது செய்து இருக்கிறார்களா?
உதாரணமாக எங்கள் மக்கள் உட்கார பத்து நாற்காலிகள் வேண்டுமென்று கேட்கிறீர்கள் . அரசு ஒரு பத்து நாற்காலிகளைத் தூக்கித் தருகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பத்து நாற்காலிகளில் உட்கார நமது இளைஞர்களுக்கு ஆர்வம் , ஆசை ,ஈடுபாடு இருக்கிறதா? நமது இளைஞர்கள் விமானத்துக்கான போர்டிங்க் பாசை கைகளில் வாங்கி வைத்துக் கொண்டு விமான நிலைய காத்திருப்பு அறையில் உள்ள நாற்காலிகளில் அல்லவா உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்? இதை மறுக்க முடியுமா? பத்தாவது படிக்கும் போதே நான் படித்து என்ன செய்யப் போகிறேன் எங்க வாப்பா அமெரிக்காவுக்கு விசா ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொல்லித்தானே படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்?
இட ஒதுக்கீடு வேலைகளில் கேட்கிறோம். நமது உரிமைதான். ஆனால் வருடா வருடம் வெளிவரும் அரசுத் தேர்வுகளில் முதல் மூன்று அல்லது முதல் பத்து இடங்களிலாவது ஒரு முஸ்லிம் மாணவ மாணவியர் வந்ததுண்டா? அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒரு பெயர் வருவதைத் தவிர இந்த சமுதாயத்தின் பெயர்கள் கல்விப் பட்டியலில் தலையாய இடங்களில் ஏதாவது ஒன்றைப் பிடித்ததுண்டா? முஸ்லிம்களால் நடத்தப் படும் கல்வி நிலையங்களில் எந்த கல்வி நிலையமாவது எந்த ஊரிலாவது நூறு சதவீத வெற்றி பெற்ற செய்தி நாம் கேள்விப் பட்டு இருக்கிறோமா? வணிக நோக்கம் இல்லாத இஸ்லாமிய கல்வி நிலையங்கள் எந்த இயக்கத்தாலுமோ அல்லது அதன் தலைவர்களாலுமோ அல்லது அடுத்த நிலைத் தலைவர்களாலுமோ நடத்தப் படுகின்றனவா?
உத்தமபாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களும் அதிராம்பட்டினத்தில் வள்ளல் காதர் முகைதீன் அப்பா அவர்களும் திருச்சியில் ஜமால் முகமது அவர்களும் தங்களுடைய சொந்த சொத்துக்களை இந்த சமுதாய கல்வியின் வளர்ச்சிக்காக வழங்கிவிட்டுச் சென்றார்கள். இப்படி வாரி வழங்கப்பட்டதன் நோக்கத்தை இந்த சமுதாயமோ அல்லது அதைச் சார்ந்த இயக்கங்களோ பின் தொடர்ந்து இருக்கின்றனவா? பயன்படுத்தி இருக்கிறார்களா? எந்த இயக்கமாவது ஒரு மருத்துவக் கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ அல்லது கலைக் கல்லூரியோ தொடங்கி சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தத் திட்டம் தீட்டியது உண்டா? இயக்கங்களின் பெயரால் பலர் வசதிபடைத்தவர்களாக மாறிவிட்டார்கள் என்பதைத் தவிர அவர்களது சொந்தப் பணத்தில் ஒரு பத்துப் பைசாவாவது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு செலவிட்டதுண்டா? வெற்று கோஷம் போட்டும் அரசியல் மாச்சரியங்களை ஒருவருக்கொருவர் விதைத்துக் கொள்ள மட்டும் நினைப்பது ஒரு மாயாஜால வித்தை என்பதை உணரமாட்டார்களா? இவைகள் விடை இல்லாத கேள்விகள்; விடைகளே சொல்ல முடியாத கேள்விகள்.
மூன்றாவதாக ஏதாவது அரசியல் சக்திகள் இணைந்தால்தான் இட ஒதுக்கீட்டை வென்று எடுக்க முஸ்லிம்களால் முடியும் என்ற நிலை இருப்பதாக நாம் உணர்ந்தால் பெரிய அரசியல் கட்சிகளின் பதவிப் போட்டி என்கிற தேர்களில் பூட்டபப்ட்டுள்ள யானைகளின் காலில் நாம் ஏன் நசுங்கிச் சாகவேண்டும்? நம்மைப் போல பாதிக்கப்பட்ட மக்களையும் நம்முடன் இணைத்துக் கொண்டு அவர்களும் நாமும் ஒன்று இணைந்து போராடினால் பெரிய கட்சிகள் எல்லாம் நம் வீட்டு வாசலில் வந்து பிச்சைப் பாத்திரம் எடுக்க வைக்கலாமே! நமது அரசியல் சார்ந்த சிந்தனைகள் இப்படி ஒரு மாற்று வழியை சிந்திக்க ஏன் மறுக்கின்றன? எப்போதும் யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் அம்மா என்றும் ஐயா என்றும் ஏன் திருவோடு ஏந்த வேண்டும். இவ்வித ஒரு மாற்று அரசியல் முன்னெடுக்கப் பட்டால் நமக்கு வேண்டிய இட ஒதுக்கீட்டை நாமே ஒதுக்கிக் கொள்ளும் எஜமானர்களாக மாறமுடியும். இந்த ரீதியில் நமது இயக்கத்தலைவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்?
முடிவாக மூன்று விஷயங்களைச் சொல்லலாம்.
ஓட்டு மொத்த சமுதாயத்தின் ஒற்றுமை. ஒரே குரலில் ஓங்கி ஒலித்தாலே இட ஒதுக்கீடு கிடைக்கும்.
சமுதாயத்தின் கல்வி மேம்பாடும் இட ஒதுக்கீட்டோடு பிரிக்க முடியாத தொடர்புடையது என்பதும் உணரப்பட வேண்டும் .
நம்முடைய கோரிக்கைகளுக்கு வலு சேர்க்க - அரசியல் ரீதியாக பலம் சேர்க்க இன்னும் ஆதரவுக் கரங்கள் வேண்டுமென்றால் நம்மைப் போலவே பின்தங்கிய சமூகத்தோடு கை கோர்த்து ஒத்துழைத்து போராட வேண்டுமே தவிர பெரும் கட்சிகள் அவைகளை நமக்குப் பெற்றுத் தருமென்று அவர்களின் பின்னால் போவது நமது சக்திகளை வீண் விரயம் செய்யும் வேலையாகும். காரணம், பெரிய கட்சிகளுக்கு பெங்களூரிலும் டில்லி சிபிஐ நீதி மன்றத்திலும் நிறைய கவனிக்க வேண்டிய வேலைகள் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் நமக்கு இடஒதுக்கீடு என்பது “கொடுக்க மனம் இல்லாதவன் சினை ஆட்டைக் காட்டுவதற்கு” ஒப்பானதாகவே இருக்கும்.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இபுராஹீம் அன்சாரி
22 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்!
அற்புதமான அலசல். ஆக்கபூர்வமான ஆலோசனைகள். பாரபட்சம் அற்ற விமரிசனம். நமக்கு நாமே சுய பரிசோதனை செய்யும் விடயங்கள்.
ஆனால் நாம் எல்லோரும் இயக்க மயக்கத்தில் இருந்து கொண்டு உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை இழந்து இருக்கின்றோமே.
N.A.Shahul Hameed
வ அலைக்குமுஸ் ஸலாம்.
பேரன்புமிக்க பேராசிரியர் என் ஏ எஸ் அவர்களுக்கு,
தங்களின் பின்னூட்டம் ஒரு வகையில் இன்ப அதிர்ச்சி .
மறுவகையில் தங்களைப் போன்ற ஒரு கற்ற பெருந்தகையிடமிருந்து கிடைத்துள்ள அங்கீகாரம்.
ஜசக் அல்லாஹ் ஹைரன் சார்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான இபுராஹீம் அன்சாரி காக்கா மற்றும் பகுருதீன் அண்ணன்,
அற்புதமான நியாமான அலசல். ஜஸக்கல்லாஹ் ஹைரா..
இந்தியாவில் முஸ்லீம்கள் வாழும் இடங்கள் எங்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய கருத்துக்களும் கேள்விகளும்.
இறுதியாக கேட்கப்பட்டுள்ள கேள்விகள் நம் ஒவ்வொருவரின் இதயத்தங்களுக்கு ஏவப்பட்ட அம்புகள்.
நம் சமுதாயத்திடம் இருக்கும் இயக்கம் மயக்கம் என்ற மாயை என்று ஒழியுமோ? நம்முடைய சமுதாயத்தை அல்லாஹ் மட்டுமே பாதுகாக்க போதுமானவன். து ஆ செய்வோம் காக்கா.
நியாய உணர்வுள்ள முஸ்லீம்களின் உள்ளக் குமுறலை வெளிக்கொண்டு வந்தமைக்கு மீண்டும் ஒரு முறை உங்கள் இருவருக்கும் நன்றி எங்கள் மூத்த சகோதரர்களே...
Assalamu Alaikkum
Respected brothers,
An excellent article reflects the pathetic conditions of Muslims in Tamil Nadu state throughout the long period of political history.
Divisions among us have become like a cancer, which is unresolvable mess. Your proposed solutions can be considered by concerned people in the groups or the parties. If collective intentions are pure with harmony, then resultant actions would be prosperous ones.
May Allah save us from vicious conditions.
Jazakkallah khair.
B. Ahamed Ameen from Dubai.
இதற்கு மேலுமா ? அலசனும்...!
வேண்டும் இட ஒதுக்கீடு...! அழைத்தவர்கள் பொதுவான விடயங்களில் அவர்களின் பெருந்தன்மையை காட்டி ஒத்துழைத்தார்களேயானால் ! (அந்தக் கால எழுச்சியின் ஈர்ப்பால் இன்னும் அந்த 'தலை'மையை நேசிக்கும் கூட்டத்தில் இருப்போரின் எண்ணிக்கை கூடுமே என்னையும் சேர்த்துதான்)
'அவனா நீ' என்ற சுட்டல் இல்லாத நேசம் வலுக்குமே !
ஆழமாக அனைவரும் பொறுமையுடன் வாசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டிய பதிவு.
பதிவுக்கு கீழ் விரும்பும் / நேசிக்கும் தலைமை அல்லது பொறுப்பாளர்கள் எழுதியிருந்தால் மட்டுமே எழுதியை பொருந்திக் கொள்வோம் என்று போர்த்திக் கொண்டிருந்தால்... மூச்சு முட்டத்தான் செய்யும் !
சிந்திப்போம் !
பிரதான பத்திரிக்கையில் வெளிவரத்தகுந்த அருமையான, ஆக்கப்பூர்வமான, நடுநிலையான மற்றும் சரியான தலையங்கம்.
இயக்கங்களுக்கும் விமர்சிப்பவர்களுக்கும் இதை படித்தாவது ரோசம் வந்து இனியாவது சிந்திக்கட்டும்!
//''பிற இயக்கங்களில் உள்ளவர்கள் முஸ்லிம்கள் அல்ல!''என்று தனி கண்டவர்கள்//'' சுறா மீன் கறி மக்ரூஹ் [ஆனால்நாக்குக்கு ருசியா இருக்கு] யாருக்கும் தெரியாமே அதிலே கொஞ்சம் இறுத்து ஊத்து'' என்று சொன்னது போல் இருக்கு. இது ஒரு முத்திரை கட்டுரை.எழுதிய கைகளுக்கு மோதிரம் விடவேண்டும்.பவுன் விலை குறையட்டுமே.!
//எழுதிய கைகளுக்கு மோதிரம் விடவேண்டும்.பவுன் விலை குறையட்டுமே.! //
நல்ல வேலை இடஒதுக்கீடு கிடைக்கட்டுமேன்னு சொல்லாம இருந்தியலே...! :) அது இந்தா இப்போ கிடைச்சிட்டுட்டா உடணடியாக செய்ய வேண்டியிருக்கும். :)
அஸ்ஸலாமு அலைக்கும்!
அற்புதமான அலசல். ஆக்கபூர்வமான ஆலோசனைகள். பாரபட்சம் அற்ற விமரிசனம்.
// எதற்க்காக தி.மு.க வை ஆதரிக்கிறோம் என்பது பெரும்பாலோருக்கு தெரியாமல் போய் விட்டது// இதைபடித்ததும் ஒரு கதை நினைவுக்கு வந்தது. வெளியூருக்கு சென்ற ஒருவன் ஊர் திரும்பும் வழியில் மாமியார் வீடு இருந்தது. ''வந்ததுதான் வந்தோம் மாமியார்வீட்டிலேயும் தலையை காட்டிட்டுவருவோமேன்னு''வீட்டுக்குள் போனான். ''ஒருக்காலும் வாராத மாப்புள்ளே வந்ததை கண்டமாமியாருக்கு கையும் ஓடலே!காலும் ஓடலே! அவசர அவாரமா பயே விரிச்சு வந்தமாப்பிளேயே ''வாங்க மாப்புளே! உக்காருங்க''ன்னு சொன்ன மாமியா அவசரஅவசரமாஉள்ளேபோயி ஒருதட்டுலே கொலக்கட்டையும் ஒருகொவளையிலே தேத்தண்ணியும் கொடுத்தா. கோலாக்கட்டைதிண்டமாப்புளே நாக்குக்கு ருசி புடிச்சு போச்சு.இது நாள் வரை மாப்புளே கொலக்கட்டையை கண்ணாலேயே பாத்ததேஇல்லே!''ரெம்பருசியா இருக்கே! இது பேரு என்ன மாமி?'' ன்னு கே ட்டாரு. ''இது தான் மருமவனே கொலக்கட்டை.எம்மவ பாக்கியம், உங்கபொண்டாட்டி இதைவிடரெம்ப ருசியாசெய்வாளே!கேளுங்கசெஞ்சுதருவா'' என்றாள். ''நேரமாச்சு!போயிட்டு வர்ரேன்மாமி''ன்னு மாப்புளே புறப்புட்டுடாரு.போரவழிஎல்லாம்'' கொலக்கட்டை!கொலக்கட்டை!'' ன்னு மனப்பாடம் செய்து கொண்டேபோனாரு! வழியில் ஒருவாய்க்கால் குறிக்கிட்டது.'' லாங்ஜம்ப்லேஅவருகொஞ்சம்வீக்கு! அதனாலே பலத்தையெல்லாம்ஒன்னுதெரட்டி''அத்தறுபாச்சா!'' ன்னுவாய்க்காலேதாண்டுனாரு. தாண்டிஅடுத்த கரைபோனதும்கொலக்கட்டைமறந்துபோச்சு.கொலக்கட்டைக்குபதிலா''அத்தருபாச்சா! அத்தருபாச்சா''ன்னுசொல்லிக்கிட்டேபோனாரு.வீடுபோய் சேர்ந்ததும் பொண்டாட்டிட்டேஎல்லாகதையும்சொல்லிட்டு''எனக்கு நீ அத்தருபாச்சா செஞ்சுதான்னு கேட்டாரு. அவளுக்கோ 'அத்தரு பாச்சா' என்னான்னு தெரியாது. அது எனக்கு என்னான்னு தெரியாதே' ன்னு சொன்னா.அத்தருபாச்சாநீரெம்ப நல்லாசெய்வேன்னு உங்க அம்மாசொன்னாங்களே''என்றான். அப்படிஒன்னு இருக்குதுன்னு சத்தியமாஎனக்கு தெரியாதுங்க'ன்னு சொன்னாள். '' பொய்யாசொல்றே! ''ன்னு புருஷன் கோவத்தேலே பொண்டாட்டியே '' முதுகு!முதுகு.!கண்ணம்!கண்ணம்.என்றுஅடியோதனமென்று கண்டபடிஅடிசுபுட்டான்! பொண்டாடிக்குகண்னத்திலே வீக்கம் முதுகிலே வீக்கம்.அன்னைக்கி ராத்திரிபாயும் படுக்கையும் வேறையா போச்சு! அடுத்த நாள் அந்த அந்த வீட்டுக்கு வந்தஅடுத்த வீட்டுக்காரிகண்ணத்தையும் முதுகையும் பாத்துட்டு''ஏம்மாகண்ணமும் முதுவும் இப்புடிவீங்கிபோய் கெடக்குது'ன்னு கேட்டா.'' குத்துலே போனவன் அடிச்சஅடி கொலக்கடைகொலக்கடையா வீங்கிபோச்சுன்னு''சொன்னா.படுத்துக்கெடந்த புருசனுக்கு அப்பத்தான்மாமியா ஊட்டுலேதிண்டது 'கொலக்கட்டை' என்ற நினைவு வந்தது. '' அடி!அதைதான்டி செஞ்சு கேட்டேன்'' என்று புருஷன் ஓடிவந்துசொன்னான்.//ஏதோ நினைவில் நினைக்கவேண்டியதை மறந்து மறக்கவேண்டியதை நினைத்து மாயையில்கறைந்தேபோனோமே.
//எங்கள்மக்கள் உட்கார பத்து நாற்காலிகள் வேண்டும்// மூட்டுவலி காரர்கள் தொழ பள்ளிக்கு பத்து இருபது நாற்காலிகள் கிடக்கிறது.இது போதாது இன்னும் வேணும் என்று கேட்டால் பள்ளிக்கு நூறோ ஐம்பதோ நாற்காலிகள் கொடுப்பார்கள். கேட்டதுதான் வேணுமென்றால் ஈகோவை குப்பையில்கொட்டிவிட்டு எல்லோரும்ஒன்று கூடி உரத்த குரலில் கூவினால் கிடைக்கலாம். ஈகோவை குப்பையில்கொட்டுவது யார்? என்பதும் பூனைக்கு மணி கட்டுவது யார்?என்பதும் ஒன்றே.உண்மையான சமூகத் தலைவன் ஈகோ வை ஒரு கிள்ளுக்கீரையாக எண்ணுவான்.
இயக்க மயக்த்திற்கு ஒரு சரியாமான மருந்து இந்த கட்டுரை
//இந்த ரீதியில் நம் இயக்கத்தலைவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்// மாற்றியோசிச்சு நமக்கெல்லாம் பழக்கமில்லிங்க! இடியப்பம், ரொட்டி, வட்டுலப்பம், ஆட்டுக்கறி, ரவ்வா! ஏப்பம்விட இது பத்தாதா ?
சகோ.இபுராஹீம் அன்சாரி காக்கா மற்றும் சகோ.பகுருதீன் அவர்களுக்கு எண்ணிலடங்கா வாழ்த்துக்களும், நன்றிகளும்..
முடிந்தால் இதை அனைத்து இயக்கங்களுக்கு FAX / மின்னஞ்சல் அனுப்புங்கள்.. கூடுதல் தகவல்களோடு புத்தகமிட்டு புத்தி கூறினாலும் தகும்..
காலப்போக்கில் இயக்கங்களை ஒழிக்க ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு அதில் நானும் சேர்ந்தால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.. அந்தளவிற்கு இயக்க வெறி செறிவூட்டப்பட்டு கிடக்கின்றது நம் தமிழ் சமுதாயம்..
என் மனம் ஒத்த வரிகள்..
//கல்வியில் ஆர்வமின்மையும் வெளிநாட்டு மோகமும் நிறைந்துள்ள சமுதாயத்தில் சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு எவ்வித சேவையும் ஆற்றாமல் வேலை வாய்ப்பை மட்டும் குறியாக வைத்து செயல் படு போராடு என்பது எவ்விதத்தில் சரியாகும்?//
//பிற இயக்கங்கள் நடத்துகின்ற அல்லது நடத்திய போராட்டங்களைப் புறக்கணித்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தவ்ஹீத் ஜமாத், தான் நடத்தும் போராட்டத்தில் மட்டும் மற்றவர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று எவ்விதம் எதிர்பார்க்க முடியும்//
அன்பு நிறை தம்பி மீராசா அவர்களுக்கு,
தங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் நல்ல ஆலோசனையை செயல் படுத்த முயற்சிக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான இபுராஹீம் அன்சாரி காக்கா மற்றும் பகுருதீன் அண்ணன்,
அற்புதமான நியாமான அலசல். ஜஸக்கல்லாஹ் ஹைரா.. உங்கள் மெயில் கிடைத்தவுடன் உடனே படிக்க முடியவில்லை. தற்போது படித்தேன். நான் இங்கு சில சிறு கூட்டங்களில் வாலிபர்களிடம் போசுவர்க்கு மிக அருமையான சிந்திக்க வேண்டிய விஷயங்கள் தந்து இருக்கின்றிர்கள், இன்ஷா அல்லாஹ். அனைவரிடமும் கூறி புரியவைப்போம். தங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் நல்ல ஆலோசனையை செயல் படுத்த முயற்சிக்கிறோம். இன்ஷா அல்லாஹ்
அன்புள்ள தம்பி அப்துல் ஜலீல் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ் ஸலாம்.
இந்த ஆக்கம் தங்களைப் போன்ற பொது நல விரும்பிகள் அவசியம் படிக்க வேண்டுமென்றே தனி மின் அஞ்சலில் அனுப்பினேன். தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
வஸ்ஸலாம்.
உங்கள் அன்சாரி காக்கா.
தெளிவான ஆய்வுக்கட்டுரை. (வெளியான தினமே படித்தாலும், உடனே கருத்திட முடியவில்லை). இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும், அதை முன்வைத்து அரசியல் செய்பவர்களும் தெளிவுபெற இக்கட்டுரையே போதுமானது.
அன்புள்ள தம்பி ஜமாலுதீன் அவர்களின் ஆதரவான கருத்தை காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜசாக் அல்லாஹ் ஹைர்.
இந்தக் கட்டுரையைப் பற்றி ஒரு மிகவும் கண்ணியமான விமர்சனமும் வந்து இருக்கிறது.
அந்த விமர்சனத்துக்கு இன்ஷா அல்லாஹ் பதில் அளிக்கப்படும் .
ஆஹா !!
Post a Comment