Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 29 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 12, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் நபித்தோழர்களில் முக்கியமானவரும் நபி(ஸல்) அவர்களின் மருமகன்களில் ஒருவருமான உத்தமத் தோழர் உஸ்மான் (ரலி) அவர்களின் வாழ்வின் ஒரு சில சம்பவங்களை அறிந்து அதன் மூலம் நாம் படிப்பினைகளை அறிந்து கொண்டோம். இந்த வாரம் உஸ்மான் (ரலி) அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பின் முஸ்லீம்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையும் பகைமைகளுக்கு மத்தியில் நபித்தோழர்கள் எப்படி அவைகளை அணுகினார்கள் என்பதையும் இந்த வாரம் ஒரு சில நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களின் மூலம் அறிந்து, அவைகளிலிருந்து நமக்கு என்ன படிப்பினை உள்ளது எனபதை பற்றி அறிந்துக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

உஸ்மான்(ரலி) அவர்களுக்கு பிறகு இஸ்லாமிய சாம்ராஜியத்திற்கு நபி(ஸல்) அவர்களின் மற்றொரு மருமகன் அலி(ரலி) தலைமையேற்றார்கள். இவர் நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகனார் ஆவார். ஃபாத்திமா(ரலி) அவர்களின் அருமை கணவர். ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) ஆகியோரின் பாசமிகு தந்தை. நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைக்கப்பெற்ற காலம் முதல் இந்த தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அலி(ரலி) அவர்கள். அலி(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் வளர்ந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் பல சந்தர்பங்களில் பாராட்டு பெற்ற ஓர் உத்தம நபித் தோழர் அலி(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களால் அபூ துறாப் (மண்ணின் தந்தை) என்று செல்லமாக அழைக்கபட்டவர்கள்.

உஸ்மான்(ரலி) அவர்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல் மூன்று நாட்கள் அவர்களின் வீட்டில் இருந்து எடுக்கக்கூட முடியாத நிலையை உருவாக்கி கலவரக்கார தலைவன் முஸ்லீம் என்ற போர்வையில் இருந்த யூதக் கைக்கூலி அப்துல்லாஹ் இப்னு சபா என்ற கொடுங்கோளனும் அவனின் அயோக்கிய கூட்டத்தாரும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டார்கள். 

மதீனா முழுக்க கலவரம், ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட குழப்பம். அப்துல்லாஹ் இப்னு சபாவின் சதியால் உஸ்மான்(ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அலி(ரலி) அவர்கள் கலீபாவாக பெறுப்பேற்றார்கள். அன்று மதினாவில் வாழ்ந்த ஸஹாபாக்களுக்கு மத்தியில் நிம்மதியில்லாத அந்த சூழ்நிலையில், தல்ஹா(ரலி) அவர்களும், ஜுபைர்(ரலி) அவர்களும் கலீபா அலி(ரலி) அவர்களை சந்தித்து “ என்னதான் இருந்தாலும் உஸ்மான்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மருமகன், பல போர்களுக்கு தலைமை ஏற்று சென்ற உத்தம தோழர், இஸ்லாத்திற்காக வாரி வாரி வழங்கிய கொடைவள்ளல், அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், இனி மதீனாவில் யாருடைய இரத்தமும் ஓட வேண்டாம், எப்படியாவது மதினாவில் உள்ள கலவரத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அலி(ரலி) அவர்கள் இப்னு சபா போன்ற கலவரக்காரர்களை சமாதானப்படுத்தி இறுதியில் கலவரம் நின்றது. பல ஸஹாபாக்கள் நிம்மதி பெரும்மூச்சு விட்டார்கள். தல்ஹா(ரலி) அவர்களும் ஜுபைர்(ரலி) அவர்கள் கலீபா அலி(ரலி) அவர்களிடம் “ஒரு சொர்கவாசி உஸ்மான்(ரலி) அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார், 

இந்த கொலையை செய்தவர்களை நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” என்று கோரினார்கள். இதற்கு அலி(ரலி) அவர்கள் “தற்போது கலவரக்காரர்களின் கை ஓங்கி உள்ளது, மெல்ல மெல்ல நம்முடைய பலம் அதிகரித்த பின்னர் கொலைகாரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவேன்” என்று வாக்களித்தார்கள். ஆனால் அலி(ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் அவர் ஷஹீதாகும் நாள் வரை எண்ணிலடங்கா நெருக்கடியையும், மன சங்கடங்களையும் சந்தித்த நபித்தோழர் இவர் மட்டுமே.

உஸ்மான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் நிறைய ஸஹாபாக்கள் ஹஜ்ஜில் இருந்தார்கள், அதில் அன்னை ஆயிசா(ரலி) அவர்களும் ஹஜ்ஜிற்கு சென்றிருந்தார்கள். இந்த சம்பவங்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களுக்கும் ஹஜ்ஜுக்கு சென்ற பிற சஹாபாக்களுக்கும் தெரியவில்லை. மதீனாவில் இருந்த சஹாபாக்கள் அலி(ரலி) அவர்களிடம் உஸ்மான்(ரலி) அவர்களை கொலை செய்தவர்களை உடனே கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும், அல்லது அவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும்”. ஆனால் அலி(ரலி) அவர்கள் பொறுமையாக இருக்க சொன்னார்கள். உஸ்மான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி மற்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடத்தும் கவர்னர்களுக்கும் தெரியவந்தது. அலி(ரலி) அவர்கள் தனக்கு பையத்(ஒப்பந்தம்) செய்ய வேண்டும் என்று பிற நாடுகளில் உள்ள கவர்னர்களுக்கு கடிதம் எழுதினார்கள். 

இதில் நபி(ஸல்) அவர்களின் வஹி எழுதும் துறையில் இருந்து, பின்னர் சிரியாவின் கவர்னர் பொறுப்பிலிருந்து நல்லாட்சி செய்து வந்த முஆவியா(ரலி) அவர்களிடமிருந்து பதில் கடிதம் வருகிறது. அதில் “உஸ்மான்(ரலி) அவர்களை கொன்றவர்கள் மதீனாவில் உள்ளார்கள், அவர்களை உடனே கைது செய்து அவர்களை தண்டிக்க வேண்டும், அப்படி செய்தால் நான் உங்களிடம் பையத் செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த செய்தி அலி(ரலி) அவர்களுக்கு மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. காரணம் கலவரக்காரர்கள் வலுவான நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் மேல் கை வைத்தால் மேலும் ரத்த ஆறு இந்த புனித மதீனாவில் ஓடும், அதற்கு நாம் வழி வகுத்துவிடக்கூடாது என்ற ஓர் அச்சம் அலி(ரலி) அவர்களிடம் இருந்தது. 

உஸ்மான் (ரலி) அவர்களின் மரணச் செய்தி மக்காவிற்கு சென்றிருந்த அன்னை ஆயிசா(ரலி) அவர்களுக்கு தெரிய வந்தது. அச்சம்பவத்தை தல்ஹா(ரலி) அவர்களும் ஜுபைர்(ரலி) மக்காவுக்கு சென்று நடந்த கொடூர சம்பவத்தை எடுத்துச் சொன்னார்கள், அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் சம்பவங்களை கேட்டதும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். உடனே தன்னோடு இருந்த சஹாப்பாக்களை அழைத்துக் கொண்டு முஆவியா(ரலி) அவர்களை சந்திக்க சிரியாவுக்கு பயணமானார்கள். இதனை கேள்விபட்ட அலி(ரலி) அவர்கள் தனக்கு எதிராக யாரும் படைதிரட்டி மீண்டும் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து. ஆனால் அன்னை ஆயிசா(ரலி) அவர்களை முஆவியா(ரலி) அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லவிடாமல் தடுக்க படைதிரட்டி மக்கா எல்லையோரம் அலி(ரலி) அவர்கள் வந்தார்கள். அந்த படையில் உஸ்மான்(ரலி) அவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய அப்துல்லாஹ் இப்னு சபா என்று அயோக்கியனும் இருந்துள்ளான். அலி(ரலி) அவர்களுக்கு அன்றுவரை தெரியாது அவன் ஒரு மிகப் பெரும் கொடுங்கோலன் என்றும், அவன் அந்த படையில் வந்த்தே மீண்டும் கலவரத்தை தூண்டவே வந்துள்ளான் என்பதும் தெரியாமல் போனது.

அன்னை ஆயிசா(ரலி) அவர்களை அலி(ரலி) அவர்கள் சந்தித்தார்கள், அந்த சந்திப்பில் “உஸ்மான்(ரலி) அவர்களை கொலை செய்தவர்களை கைது செய்து தண்டிக்கிறேன், நீங்கள் பஸாரா செல்ல வேண்டாம், மதீனாவுக்கு சென்றுவிடுங்கள்” என்று அலி(ரலி) அவர்கள் வாக்குறுதி அளிக்க, சமாதானம் ஏற்பட்டது. ஆனால் குழப்பம் விளைவிக்க வந்த இப்னு சபா மீண்டும் ஓர் திட்டம் தீட்டி இரு அணியில் உள்ள சஹாப்பாக்களுக்கு மத்தியில் சண்டையை மூட்டும் விதமாக தன்னுடைய ஆதரவாளர்களை இரவு நேரத்தில் இரு பக்கமும் போகச் சொல்லி, இரு பக்கமும் தீயை மூட்டி சஹாப்பாகளை சண்டையிட்டுக் கொள்ள ஒரு மிகப்பெரும் சதி செய்தி அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டான் அந்த இப்னு சபா. அலி(ரலி) அவர்கள் நல்ல முறையில் தானே சமாதானம் பேசினார்கள், தங்களுடைய பக்கம் அலி(ரலி) அவர்கள் படை ஏன் தீ மூட்டுகிறார்கள் என்று அன்னை ஆயிசா(ரலி) அவர்களும், தங்களுடையை பகுதியில் ஆயிசா(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் ஏன் தீ மூட்டுகிறார்கள்? என்று அலி(ரலி) அவர்களும் குழப்பத்திற்கு உள்ளானார்கள்.  

ஒரு மிகப் பெரும் கலவரம் ஏற்பட்டது அந்த நடு இரவில். இரு தரப்பில் உள்ள சொர்கத்துவாசிகள் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்க்கும் நிலை உருவானது. இருப்பினும் இது சதி என்பது அப்போது அந்த சத்திய சஹாப்பாக்களுக்கு தெரியவில்லை. அயோக்கியன் இப்னு சபாவின் ஆட்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களை கொல்லுவது அவர்களின் அடுத்த கட்ட வேலையாக இருந்த்து, அன்னை ஆயிசா(ரலி) அவர்களை ஒரு கூட்டம் தாக்கப் போவதை கண்டறிந்த கலீபா அலி(ரலி) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களின் ஒட்டகத்தின் காலை வெட்டி, அன்னை ஆயிசா(ரலி) அவர்களை பத்திரமாக இறக்கிவிட்டு அவர்களை பாதுகாத்தார்கள். மிகப்பெரிய உயிர் சேதத்திலிருந்து அல்லாஹ் பாதுகாத்தான் அந்த சொர்கத்துவாசிகளை. மீண்டும் சமாதானம் அடைந்ததை அறிந்த இப்னு சபா இனி குழப்பம் விளைவித்தால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து அடங்கிப்போனான். ஆனால் நடந்த இந்த சம்பவங்களை வரலாறுகளில் சியாக்களும் போராக்களும் அன்னை ஆயிசா(ரலி) அவர்களுக்கும் கலீபா அலி(ரலி) அவர்களுக்கு நடைபெற்ற போர் என்று பொய் பிரச்சாரம் இன்றுவரை செய்து வருகிறார்கள்.

இந்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னார், இப்னு சபாவின் ஆட்கள் வந்து, அன்னை ஆயிசா(ரலி) அவர்களோடு வந்தவர்களின் பொருட்களை கணீமத்து பொருட்களாக ஆக்கி தங்களுக்கு தர வேண்டும் என்று கலீபா அலி(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதனை வன்மையாக கண்டித்து அலி(ரலி) அவர்கள் ஒரு மிக அற்புதமான ஓர் உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். 

அந்த உரை இஸ்லாமிய வரலாற்றில் ஓர் முத்தாய்ப்பான உரை. “நடந்த இந்த கலவரத்தில் உங்களுக்கு கணீமத்துப் பொருட்கள் முக்கியம் என்று கருதுகிறீர்கள், இந்த போரில் முக்கியமான கணீமத்து பொருள் நம்முடைய தாய் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள், அவர்களை கணீமத்துப் பொருளாக்கி, அடிமையாக்கி, அவர்களோடு இல்லரம் நடத்த யாருக்காவது துணிச்சல் இருக்கா? அப்படி துணிச்சல் இருந்தால், வாருங்கள் என் முன்னால், கொலை செய்யாமல் விடமாட்டேன். இந்த பொருட்கள் எல்லாம் முஸ்லீம்களுடைய பொருட்கள், சொர்க்கவாசிகளின் பொருட்கள். கணீமத்து பொருட்கள் என்பது இறை நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செய்யும் போரில் அவர்களிடமிருந்து கிடைப்பது மட்டுமே. இங்கு நடந்த கலவரத்தில் அன்னை ஆயிசா(ரலி) அவர்களோடு வந்தவர்கள் யார் இறை நிராகரிப்பாளர்கள்? இந்த பொருட்கள் எல்லாம் பொது மக்களுடையது, அவர்கள் அவரவர் பொருட்களை எடுத்துக்கொள்வார்கள். இந்த கலவரத்தை தூண்டியது யார்? இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு யார் காரணம்?” என்று தான் ஒரு கலீபா என்பதை மட்டும் உறுதிபடுத்தவில்லை. தான் ஓர் இஸ்லாமியன், சக முஸ்லீம்களின் உயிர் உடமை மானங்களையும் காக்கும் அமைதி மார்க்கத்தில் இருக்கிறேன் என்பதை உலக முஸ்லீமகளுக்கு எடுத்துக்காட்டாக விளக்கிக் காட்டினார் அமீருல் முஃமினீன் அலி (ரலி) அவர்கள்.

பின்னர் அலி(ரலி) மூத்த சஹாப்பாக்களை அழைத்து, அன்னை ஆயிசா(ரலி) அவர்களை மதீனாவுக்கு மிகவும் பத்திரமாகவும் கண்ணியமாகவும் அனுப்பி வைத்தார்கள். அன்னை ஆயிசா(ரலி) அவர்களோடு இருந்த சஹாப்பாக்கள் அனைவரும் அலி(ரலி) அவர்களுக்கு பையத் செய்து அவர்களை கலீபாவாக அங்கீகரித்தார்கள். பின்னர் முஆவியா(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களை கொன்றவர்களை தண்டிக்காதவரை தான் அலி(ரலி) அவர்களுக்கு பையத் செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ,மீண்டும் அப்துல்லாஹ் இப்னு சபாவின் கூட்டத்தில் சூழ்ச்சியால் அலி(ரலி) அவர்களும் முஆவியா(ரலி) அவர்களும் சந்திக்கும் வாய்ப்புகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. 

இரு சஹாப்பாக்களுக்கு மத்தியில் கசப்புணர்வு அதிகரிக்க தங்களால் முடிந்த முயற்சியை இப்னு சபாவின் ஆட்களும், காரிஜியாக்களும் செய்தார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இறுதியில் அலி(ரலி) அவர்களுக்கும் முஆவியா(ரலி) அவர்களுக்கும் விரும்பதாக போர் ஏற்பட்டது, இதற்கு அதிமுக்கிய காரணமாக இருந்தவர்கள் காரிஜியாக்களும், இப்னு சபாவின் ஆட்களும், இந்த போரில் சில சஹாப்பாக்கள் கொல்லப்பட்டார்கள் என்று வரலாறுகளில் வாசிக்கும் போது நாம் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை. இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும், அபூ முஸா அல் அஸ்ஹரி(ரலி) அவர்களும் சேர்ந்து குர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் எடுத்துச் சொல்லி இந்த கலகத்தை நிறுத்து படாதுபாடு பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் போர் முடிந்தது. இறுதியில் அலி(ரலி) அவர்களைப் பற்றிய நல்லெண்ணத்தை முஆவியா(ரலி) அவர்களிடமும், முஆவியா(ரலி) அவர்களைப் பற்றிய நல்லெண்ணத்தை அலி(ரலி) அவர்களிடம் எடுத்துக்கூறி சமாதானம் செய்யும் வேலையை அன்றைய சஹாப்பாக்கள் செய்தார்கள் என்று வரலாறுகளில் நாம் காண்கிறோம்.

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) திருக்குர்ஆன் (2:214)

ஈமானிய உணர்வுள்ள ஒவ்வொருவருக்கும் சோதனை வரும், அந்த சோதனைகளை பொருத்துக்கொண்டு நம்முடைய ஈமானை இழக்காமல் முஸ்லீமாக வாழ்ந்துக் காட்டுவதற்குத் தான் இவ்வுலக வாழ்க்கை என்பதை மேல் குறிப்பிட்ட இறைவசனம் நமக்கு உணர்த்துகிறது. இந்த இறை வசனத்திற்கு ஏற்பவே அன்றை உத்தமசீலர்களான சஹாப்பாக்களின் வாழ்வு இருந்திருந்தது.

ஒரு முஸ்லீம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் கொலையாளியை தண்டிக்க வேண்டும் என்று போராடினார்களே சத்தியத்தோழர்கள். சில சஹாபி அலி(ரலி) அவர்களோடும், சில சஹாப்பாக்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்களோடும் இருந்தார்களே தவிர எந்த ஒரு நபித் தோழரும்  மற்ற நபித்தோழரை திட்டவில்லை. படு கேவலமாக வசைபாடவில்லை. நடந்த சம்பவங்கள், கயவர்களின் சூழ்ச்சிகளினால், மனிதர்கள் என்ற அடிப்படையில் புரிந்துணர்வில் ஏற்பட்ட சிறிய குழப்பத்தால் ஏற்பட்ட கலவரம் மட்டுமே நடந்தது. பின்னர் அனைவரும் உணர்ந்து, ஒன்றானார்கள்.

இன்று ஒரு முஸ்லீம் பிற மூஸ்லீமின் மார்க்க புரிதலில் உள்ள குறைபாட்டை பற்றியோ, அல்லது ஒரு அமைப்பின் தவறான மார்க்க விளக்கத்தை பற்றியோ கருத்து விமர்சனம் செய்தால், விமர்சனம் செய்தவனின் கருத்தை கருத்தோடு விமர்சிக்க திராணியற்று, அவனின் தனிப்பட்ட இல்லாத பொல்லாத குறைகளை தோண்டி தோண்டி எடுத்து அந்த மனிதனின் சுய மரியாதையை கேவலப்படுத்தி, இது தான் குர்ஆன் சுன்னா வழி என்று நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை கொடுக்கிறோமே, இது சரியா? இது தான் நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் நமக்கு காட்டித் தந்த வழிமுறையா? என்பதை சிந்திக்க வேண்டும்.

உஸ்மான் (ரலி) அவர்களின் வாழ்வில் நிறைய படிப்பினைகள் உள்ளது. யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

8 Responses So Far:

adiraimansoor said...

/// கயவர்களின் சூழ்ச்சிகளினால், மனிதர்கள் என்ற அடிப்படையில் புரிந்துணர்வில் ஏற்பட்ட சிறிய குழப்பத்தால் ஏற்பட்ட கலவரம் மட்டுமே நடந்தது. பின்னர் அனைவரும் உணர்ந்து, ஒன்றானார்கள்.////
அது சஹாபாகாக்கள் காலம்
இன்றோ புரிந்துணர்வு இன்மையால் நம்மை பல கூறுகலாக பிரித்துவிட்டனர்
இந்த கூறுகலும் கயவர்களின் சூழ்ச்சிகளினால்தான் என்பது இன்றைய வக்கிரபுத்தியுள்ள தலைவர்களாக தன்னை அலங்கரிப்பவர்களின் மர மண்டைகளுக்கு புரியவில்லை
நம் சமுதாயத்தை அல்லஹ்தான் காப்பாற்றவேண்டும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவர்கள் வாழ்வு தரும் படிப்பு நல் வழிகாட்டல்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sheikdawoodmohamedfarook said...

// ஈமானிய உள்ளம்கொண்ட ஒவ்ஒருவருக்கும் சோதனை வரும்// அந்த சோதனையை சாதனை ஆக்கி வெள்பாவனே இந்தஉலகில் வாழ்வதற்கு அருகதை உடையவன்.சோதனையை சந்தித்தவன் சாதனை மாந்தர்களின் வரிசையிலும் சரித்திர ஏடுகளின் வரிகளிலும் அழியாத இடம் பெறுகிறான். அதற்க்கே நாமும் முயசிப்போம். இதற்க்குபொறுமை ஒருகூறிய ஆயுதம். யாரும் தன்னை குறை கூறிவிட்டால் தாஸ்-பூஸ் தக்கடிபுக்கடி என்று பாய்வதை நிறுத்தி அமைவழியை கையில் எடுப்போமாக! .

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாமிய சரித்திரப் பக்கங்களில் மிகவும் உணர்வுகரமான பகுதியை விளக்கி இருக்கிறீர்கள்.

இவ்வளவு நெருக்கடியான கால கட்டங்களில் பதவி ஏற்ற கலிபா அலி (ரலி) அவர்கள் காட்டிய இராஜ தந்திரம்- அன்னை ஆயிஷா அவர்களை நடத்திய முறைகள் மனித குலத்துக்குப் பாடம்.

இன்றைய சில மனிதர்கள்- அவர்களின் தலைவர்கள்- தலைமைப் பண்புகளை இழந்து நடந்து கொள்ளும் முறைகளை நாம் ஒப்பிட்டால் நாமே வெட்கித் தலை குனிய நேரிடும்.

இந்த சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக!

sabeer.abushahruk said...

அறிவுள்ள மனிதனுக்கு ஆக்கபூர்வமான படிப்பினைகள் இதில் இருக்கின்றது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட, வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி..

ஜஸக்கல்லாஹ் ஹைரா.

இப்னு அப்துல் ரஜாக் said...

//இன்றைய சில மனிதர்கள்- அவர்களின் தலைவர்கள்- தலைமைப் பண்புகளை இழந்து நடந்து கொள்ளும் முறைகளை நாம் ஒப்பிட்டால் நாமே வெட்கித் தலை குனிய நேரிடும்.

இந்த சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக! //

ஆமீன்

புரியும்படியும்,அழகாகவும் விளக்கும் சகோ தாஜுதீன் பாங்கு அருமை

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த தோழர்களே

எமக்கு இஸ்லாத்தை தூய வடிவில் விளங்கி ஒழுகுவதற்கு நீங்கள் செய்யும் அளப்பரிய சேவையினைப் பாராட்டுகின்றேன். உங்களுடைய சேவை தொடர ஏக வல்லோன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிராத்திக்கின்றேன்.

வஸ்ஸலாம்.

ஜே. நஸீர்தீன்
இலங்கை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு