நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

“பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா 25

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 24, 2015 | ,


கடந்த சில நாட்களாக பல ஊர்களிலும் தங்களது ஊர்களை பசுமையாக்க வேண்டுமென்ற முனைப்பு, முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பாக சில ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால்,

நாடு இப்போது போய்க் கொண்டிருக்கும் போக்கில் பசுமை என்கிற வார்த்தையில் இருக்கும் “ பசு ”  என்கிற வார்த்தையை சொன்னால் கூட வலங்கைமான் சேம்பர் செங்கல்லால் அடித்தே  கொன்றுவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நான் பசுமை என்றுதான் சொன்னேன் பசு என்று சொல்லவில்லை என்று கதறக் கதற எடுத்துச் சொன்னாலும் கல்லால் அடிப்பது உயிர் நிற்கும்வரை  நிற்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பசு என்கிற வார்த்தையோடு மை என்பதையும் சேர்த்துத்தான் பசுமை என்று சொன்னேன் என்று வாதாடினால் “ அடேய் !  எடுடா அந்த கருப்பு மையை! ஊற்றுடா!  இவன் தலையிலே!  என்று சொல்வார்களோ என்று அந்த அச்சமும் பின் தொடர்கிறது.

இப்படி ஒரு நிலைமை இந்தியாவில் ஏற்படுமென்று ‘என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே’ என்று வைரமுத்துக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டுப் பாட வேண்டும் போல் இருக்கிறது.

தாத்ரி என்கிற உத்திரபிரதேச கிராமத்தில் ஒரு ஏழை முஸ்லிம் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற வதந்தியால் சங்கப் பரிவாரின் தொ(கு)ண்டர் படை தடவித்தடவி அடித்தது. இந்த அடி தாங்காமல் முகமது அக்லக்கின் உயிர் பறந்து போனது.

பாரதீய ஜனதாவின்  வளர்ச்சியை நோக்கிய இந்தப் பணியைத் தொடர்ந்து நாட்டில் வேலை இல்லாமல் இருந்த பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கல்லாலேயே ஒருவரை அடித்துக் கொன்ற வளர்ச்சிப் பணியையும் ஜனநாயக நடவடிக்கையையும் எதிர்த்துக் குரல் எழுப்பினார்கள். தொலைக் காட்சிகள் வேறு வேலை இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் பற்றி விவாதங்களை நடத்தின.

அறிவை எப்படி வளர்ப்பது என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த படித்த பலருக்கு  இந்த விவாதங்களை நோக்கும்போதுதான் அதுவும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவாளரான நித்தியானந்தம், எஸ். ஆர். சேகர் பிரபாகரன் ஆகியோர்  விவாதிக்கும் போதுதான் பசு என்பது வேறு மாடு என்பது வேறு என்று தெரிந்தது.  இத்தனை வருடங்களாக பசு என்பது மாட்டின் இனத்தைச் சேர்ந்ததுதான் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தோம் . நமது அறிவுக்கு ஒளி பாய்ச்சிய அவர்களுக்கு நன்றி சொல்லும் முன்பு மனதின் அடித்தளத்தில் சில சந்தேகங்கள் எழுந்தன.

ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதே  பசுவின் படத்தைப் பார்த்து பசு மாடு என்று படித்து இருக்கிறோமே , உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது பசுமாடு என்று பரிட்சைகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறோமே என்றெல்லாம் மனதில் சந்தேகங்கள் எழுந்த  போது, ஆப்கி பார் மோடி சர்கார் என்று போனவருடம் காதில் விழுந்த கோஷம்  நினைவுக்கு வந்தது. ஓ! வளர்ச்சி!  வளர்ச்சி!  என்று கூவப்பட்டதே அதன் ஒரு அடையாளமாகத்தான்   பசுமாடு என்று நாம் படித்த பசு வேறு  மாடு வேறு என்று குலோனிங்க் முறையில்  பிரிந்துவிட்டதோ என்று  நினைக்கத்   தோன்றியது.

இனி வரும் காலங்களில் பசுமை, பசுந்தளிர், பசுநேசன், பசுமரத்தாணி   போன்ற வார்த்தைகளை பகலில் பக்கம் பார்த்தும் இரவில் அதுவும் பேசக்கூடாது என்றும் உணரவேண்டிய ஒரு காலம் வந்துவிட்டதோ என்று அச்சமாக இருக்கிறது.

அதோடு மாடு என்கிற வார்த்தை இணைந்து வரும் வார்த்தைகளைக் கூட தவிர்த்துக் கொள்வதும் புத்திசாலித்தனமாக  இருக்கக் கூடும் உதாரணமாக சுமைகளை தலைகளில் தூக்கிவைத்து இலகுவாக சுமக்க நமக்கு உதவும் “சும்மாடு” என்கிற வார்த்தையைக் கூட சொல்வது நமக்கு  இனி ஒரு சுமையாகவே ஆகலாம்  யார் கண்டது?

நல்ல வேளை , மாடு வாயில்லாப் பிராணிகளின் வரிசையில் சேர்ந்து விட்டது இல்லாவிட்டால் இப்போது மாட்டின் பெயரால் நடக்கும் கூத்துக்களை எல்லாம் பார்த்துவிட்டு நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார்போல் நாலு நல்ல கேள்விகளை கேட்டுவிடும். அப்படி மாடு வாய் திறந்து கேட்டால் இப்படி எல்லாம் கேட்கலாம்.

“ஏன்யா என்னோட  கறியை சாப்பிடக் கூடாதுன்னு சொல்றியே!  என்னோட பாலைக் கறந்து கறந்து குடிக்கிறியே அந்தப் பால் நீ மூச்சு விடாமல் குடிக்கிறதுக்காக  என்னிடம் சுரந்ததா அல்லது என் கன்றுக்காக சுரந்ததா ? இது பசு வதை இல்லையா?

மனிதர்கள்தான் எங்களை  வஞ்சித்து எங்களின்  பாலைக் கறந்து குடல் நிறையக் குடிக்கிறார்கள் என்பதைக் கூட  ஏற்றுக் கொண்டாலும் அந்தப் பாலை யாருக்கும் உதவாமல் சிலைகளின் மேலே ஊற்றி பாலாபிஷேகம்    செய்கிறீர்களே அதை பார்த்து எங்களின்  பெற்ற வயிறு பற்றி எரியாதா? இந்தச் செயல் பசுவதையில் சேராதா?

சரி பால்தான் போகட்டும் என் பாலில் இருந்து நெய்யை தயாரிச்சு என்னென்னவோ  புரியாத  பாஷையிலே சொல்லி விலை அதிகம் என்று கூட நினைக்காமல் நெருப்பிலே அள்ளி அள்ளி  ஊத்துறியே அது பசுவதை இல்லையா?

என் கன்றுக்குட்டி செத்துப் போயிட்டா அதனோட  தோலுக்குள்ளே  வைக்கோலை வச்சு திணிச்சு  எனக்கு கண்ணில் காட்டிக் காட்டி ஏமாற்றி  பால் கறக்குறியே அது பசுவதை இல்லையா?

எனது மடியில்  பால் வற்றிப் போய்விட்டால் இனி கன்று போட இயலாது என்று வயசாகிவிட்டால் என்னை நடுத்தெருவில் அனாதையாக விட்டுவிடுகிறீர்களே அது பசுவதை இல்லையா?

இப்படி அனாதையாக விடப்படும் நான் நெடுஞ்சாலைகளில் விரைவாக வரும் வாகனங்களில் அடிபட்டு அனாதையாக இறந்து போகிறேனே அது பசுவதை இல்லையா?

நமது பங்குக்கு நாமும் சில கேள்விகளை கேட்கலாமா?

காய்கறி சாப்பிடுபவன் உயர்ந்த சாதி – கோழி, ஆட்டுக்கறி சாப்பிடுபவன் நடுத்தர சாதி மாட்டுக் கறி சாப்பிடுபவன் கீழ்சாதி என்று சாப்பாட்டை வைத்து சாதியை பிரிக்கிறீர்களே அது அநியாயம் இல்லையா?

பெரிய புராணத்தில், சிறுதொண்டர் நாயனார் தான் பெற்ற பிள்ளையையே சிவபெருமானுக்கு சமைத்து படைத்ததாக கூறப்பட்டிருக்கிறதே அதை கட்டுக்கதை என்று சொல்ல இவர்களுக்கு தைரியமும் மனசாட்சியும் இருக்கிறதா? மனிதக் கறியை கடவுள் சாப்பிடலாம்  மாட்டுக் கறியை ஏழை மக்கள் சாப்பிடக் கூடாதா?

காசியை புனிதத்தலம் என்று இந்தியப் பண்பாடு கருதுகிறது. காசிக்குப் போய் கங்கையில் குளித்தால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது பெரும்பான்மை இந்திய மக்களின் நம்பிக்கை. அந்தக் காசியில் அகோரிகள் என்கிற சாமியார்களின் ஒரு வகையினர்  இறந்து போன மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகிறார்களே அதைவிடவா மாட்டுக்கறி சாப்பிடுவது மோசமாகப் போய்விட்டது?

அரசியல் செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அரசியல் செய்தால் -  ஆயிரம்தான் அரசியல்  சாக்கடை என்று கருதப்பட்டாலும் - அதில் ஒரு ஆர்த்தம் இருக்கும். ஆனால் இப்படி மாட்டை வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது அரசியல் வெறும் சாக்கடையல்ல அது  சாணமும் மாட்டு மூத்திரமும் கலந்த சாக்கடை என்று கருதப்படாதா?

விஷமுள்ள நல்ல பாம்பை கொன்றால்  அதை அடக்கம் செய்யும்போது அதனுடன் பாலைஊற்றி , பூக்களையும் போட்டுப் புதைக்கும்  ஒரு மரியாதையான வழக்கமாக இருக்கிறது. ஆனால் இவர்கள் இவ்வளவுதூரம் கொண்டாடும் ஒரு பசு மாடு இறந்து போனால் நல்ல பாம்புக்குக் கொடுக்கப்படும் மரியாதை கூட  கொடுக்கப்படுகிறதா? செத்த மாட்டை இலவசமாக தலித் மக்களிடம் கொடுப்பது இல்லையா?

மாடு உயிரோடு இருக்கும் நிலையில் அதை அறுத்து சாப்பிடக் கூடாது அது தெய்வம் என்று தடுப்பவர்கள் செத்த பிறகு அதற்கு  செய்ய வேண்டிய மரியாதையைக் கூட   செய்யாமல் தலித்களிடம் இலவசமாக தூக்கிக் கொடுப்பது மட்டும் ஏன்? இவர்களது இந்த பசுமாடு தெய்வம் என்கிற  சித்தாந்தத்தில் இவர்களுக்கு உறுதி  இருக்குமானால் செத்த மாட்டை பாடம் செய்து தங்களது வீடுகளில் வைத்து பூஜிக்க வேண்டும் அல்லது சுடுகாட்டில் எரித்து அதன் சாம்பலையாவது செம்பில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அல்லது செத்த மாட்டை கொம்புடன் படம் பிடித்து தங்களின் முன்னோர்களின் படத்துடன் வீட்டுச் சுவர்களில் மாலை போட்டு மாட்ட வேண்டும். அப்படி செய்கிறார்களா?

இதெல்லாம் செய்யாமல், “ மாட்டுக் கறிக்காக கொல்லவும் தயார் கொல்லப்படவும் தயார் “ என்று அறிவிக்கும் சாத்தி மகராஜ் போன்ற வாய்க் கொழுப்பு எடுத்தவர்களை பிஜேபி மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது;  மாட்டுக்கறி சாப்பிட வேண்டுமானால் பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள்  என்று சொல்லும் முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற கருப்பு ஆடுகளுக்கு கால் கழுவி விட்டுக் கொண்டிருக்கிறது.

காஷ்மீர் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினரை சட்டமன்றத்துக்குள்ளேயே வைத்து நையப் புடைத்ததையும் அதே சட்டமன்ற உறுப்பினர் மீது கருப்பு மையை ஊற்றி குரங்குப் படைகள் (பஜ்ரங்க் தள்) அவமானப் படுத்தியதையும் அரசியல் சட்டம்  மட்டுமல்ல அகில உலகமும் கண்காணித்துக் கொண்டுதானிருக்கிறது.   

மாட்டுக்கறியை உண்ணுவதற்கான எதிர்ப்பும் அதைத் தொடர்ந்த வன்முறையும் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் 39,000 கோடி ரூபாய் அளவுக்கு மாட்டுகறியை ஏற்றுமதி செய்து டாலராக்கி தங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்ட பாஜக வின் முக்கியத் தலைவர்களிடமிருந்தே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எல்லாம் அச்சமூட்டி மாட்டுக் கறியை மக்கள் உள்நாட்டில் உண்பதற்கு அணுகவிடாமல் செய்தால் ஏற்றுமதிக்கு தாராளமாக எங்கும்  கிடைக்கும் என்கிற வணிகச் சதியின் நோக்கம்தான் இதன் காரணமே தவிர மாடுகள் பாவம்! மாடுகள் தெய்வம்! மாடுகள் தேவதை! மாடுகள் குலமாதா!  என்கிற மாடுகளின் மீது இவர்களுக்குள்ள பாசமல்ல காரணம். 

“அரே பாய் வட்டி கட்டாமே டபாய்க்கிரே!  சேட்டு நிம்மல் வீட்டுமேல் வர்றான்” – என்று சுந்தரத் தமிழ் பேசும் வடநாட்டுப் பணமுதலைகள்- தங்களை உயிர்ப்பலியைத் தடுக்கும் புனிதர்கள் என்று வெளிவேஷமிட்டுக் கொண்டு அல்-கபீர் என்றும் அல்- ஹிலால் , அராபியன் எக்ஸ்போர்ட்ஸ் என்றும் அரபி மொழியில்  பெயர் சூட்டிக் கொண்டு, ஹலால் மாட்டுக் கறி என்று  ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும்  சதீஷ் , அதுல் அகர்வால்,  சுனில் கபூர், மதன் அபாட் , எ.எஸ். பிந்த்ரா  ஆகிய கருப்பு மாடுகள் யாருடைய தோட்டத்திலிருந்து இந்த நாட்டை மேய வருகின்றன? சங்கப்பரிவார் கூட்டத்தின் தோட்டத்திலிருந்துதானே?        

ஒரு கிலோ மாட்டுக்கறி வைத்திருந்ததாக  குற்றம் சாட்டப்பட்ட  முகமது அக்லக்கை கல்லால் அடித்துக் கொல்வதுதான் தண்டனை என்றால் டன் கணக்கில் கண்டெயினரில் வைத்து  மாட்டுக்கறியை  ஏற்றுமதி செய்யும் இந்த பிஜேபி கும்பலுக்கு என்ன தண்டனை? அதற்காக ஒப்பந்தம் போட்ட பிரதமருக்கு என்ன தண்டனை ? 

ஆகவே  மாடு , பசுமாடு , தெய்வம்  உயிர்வதை , புலால் உண்ணாமை என்பதெல்லாம் பிஜேபியின் உதட்டளவுப் பாசமே.  இவைகளை காரணமாக வைத்து பெரும்பான்மை இனத்தவரை சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டிவிட்டு பேரினவாதத்தை வடிவமைத்து,  அதை வாக்கு வங்கியாக மாற்றி அதிகாரத்தில் நீடிக்கவேண்டுமென்பதே ஆர் எஸ் எஸ்ஸின் இந்த ஆபத்தான அரசியலின் அடையாளம். வாயில்லா ஜீவனை வைத்து தங்களது அரசியல் வண்டியை ஓட்டும் நாடகத்தின் காட்சிகள்தான் இன்று நாடெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நாடக மேடையின் திரைகள் தொங்கும் காலம் தூரத்தில் இல்லை. பீகாரில் இருந்து இதன் கடைசிக் காட்சிகள் தொடங்க இருக்கின்றன.     

பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் மீதான கருத்துத் தாக்குதலைத் தொடங்கி வைத்தவர் சிறுபான்மைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நஜ்மா ஹெப்துல்லா என்ற முக்காடு போடாத முஸ்லிம் பெண்மணிதான். முஸ்லிம்களை சிறுபான்மையினர் அல்ல என்றும் அதற்கான சலுகைகளைப் பெற்றிட அவர்களுக்குத் தகுதி இல்லை என்றும் வாய் கூசாமல் கூறினார் என்பதை நாம் மறக்க இயலாது. 

அன்று முதல் அடுக்கடுக்கான துயரங்களை முஸ்லிம்கள் மட்டுமல்ல  இதர சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இந்த நாட்டில் அனுபவித்து வருகின்றன.  வளர்ச்சியை எதிர்பார்த்து இவர்களுக்கு வாக்களித்தவர்களை கற்காலம் நோக்கி அழைத்துச் செல்லும் கலாச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர்.    

பசுமை’பூசி அடிமை ஆகும் இந்தியாவில் இதுவரை பசு படுத்தும் பாட்டைப் பார்த்தோம். 

இனி 'மை' படுத்தும் பாடு. அதற்காக ஒருவாரம் பொறுமை தேவை . இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.

இப்ராஹீம் அன்சாரி

25 Responses So Far:

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

இந்தியாவில் ஆடு,மாடு மட்டுமின்றி குரங்கு, பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளும் நிறைந்துள்ளன. எனினும், மாட்டுக்கறி அதிகமாகப் புசிக்கப்படுவதற்குக் காரணம் இந்தியா ஓர் விவசாய நாடு என்ற பின்னணியே. காளைகளையும், எருதையும் உழவுக்குப் பயன்படுத்தியதுபோக, எஞ்சியதையும் உழவுக்கும் பாலுக்கும் தகுதி அற்றபோது அவற்றின் கறியைப் புசிக்கின்றனர். இவ்வாறு புசிப்பவர்களில் 70% பேர் உழைக்கும் வர்க்கம்.

கடல்தாண்டக்கூடாத பார்ப்பனர்கள் உள்நாட்டில் மணியாட்டும் தொழில்!?! அல்லது கடல்தாண்டி/கண்டம் தாண்டி அமெரிக்காவில் சாஃப்ட்வேர் எஞ்ஜினினர் என்ற பெயரில் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் மோடியின் மொக்கை பதிவுகளுக்கு லைக் போட்டுக்கொண்டிருக்கும் 2% பேர்தான் மாட்டுக்கறிக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு விவசாயிகளின், உழைக்கும் மக்களின் உணவுமுறை தெரியும்படி சேற்றில் இறக்கும் அவசர சட்டங்களை இயற்றினால்தான் புரியும்.

மாட்டுக்கறி தின்போர் பாகிஸ்தானுக்குப் போகிறார்களோ இல்லையோ பருப்பும், புளியோதரையும் தின்போர் மியான்மர், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் வகையில் பருப்பு விலை பல்லிளிக்கிறது. மாட்டுக்கறி தந்தால் மட்டுமே இனி வெங்காயம் என்று பாகிஸ்தான் கைவிரித்தால் அம்பிகள் எல்லோரும் கொன்டக்கடலையைத்தான் இனிமேல் சாம்பாருக்குப் போடவேண்டும்.

மாட்டுக்கறி எதிர்ப்பு பின்னணியில் மோடி அரசின் கையாலாகத்தனத்தையும், பல்லாயிரம் கோடிகளில் வகுக்கப் படும் திட்டங்களில் நடக்கும் ஊழல், பேரங்களை மறைக்கும் உத்தியுமே அடங்கியுள்ளதாகவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஜமாலுத்தீன் N.

sheikdawoodmohamedfarook சொன்னது…

'இந்தமாட்டுக்கறி அரசியல்வாதிகளுக்கு இங்கேநிறையவே சூடு போடப்பட்டு இருக்கிறது .நல்லமாட்டுக்கு ஒருசூடு! இந்த பட்டிமாடுகளுக்கு எத்தனை சூடுபோட்டாலும்சொரனை வராது.

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமை அருமை அருமை !!!

நெத்தியடி கேள்விகள்! நேர்மையான விளக்கங்கள்! வாசிப்பவர் எவரையும் சிந்திக்கத் தூண்டும் கட்டுரை!

வாழ்க!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

Ebrahim Ansari சொன்னது…

கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தம்பி ஜமாலுதீன் போன்ற உரத்த சிந்தனையாளர்கள் கருத்திட்டிருப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

ஜசாகல்லாஹ் ஹைரன்.

Ebrahim Ansari சொன்னது…

தம்பி சபீர் அவர்களுக்கு வ அலைக்குமுஸ் சலாம்.

அகில இந்திய அரசியல் பசுவரை
அதிரையின் அரசியல் பசுமை வரை.

sabeer.abushahruk சொன்னது…

//இப்படி மாட்டை வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது அரசியல் வெறும் சாக்கடையல்ல அது சாணமும் மாட்டு மூத்திரமும் கலந்த சாக்கடை என்று கருதப்படாதா?//

பேசுபொருளின் முக்கியத்துவத்தையும் மீறி சட்டென சிரிக்க வைத்த வர்ணனை!

இதைப்போல் பல இடங்களில் வழக்கமான காக்காவின் நையாண்டி, ஆப்பு, நக்கல், செருப்படி என்று செம அடி வாங்குகிறான்கள் நாதாறிகள்.

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

Nice analysis about cow politics and brutality and. India seems to be going to stone age due to some backward thinking illiterate guys doing politics there. May Allah save common people from such evils.

Either this trend to be stopped soon or the result can be so pathetic in the near future. The total world is observing India now.

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari சொன்னது…

https://www.facebook.com/photo.php?fbid=491292317708835&set=a.265184566986279.1073741826.100004842132923&type=3

பசு உனக்கு அம்மா என்றால் காளை உனக்கு அப்பனா என்று கேட்டிருக்கிறார்.

அவரோ இவரோ அல்ல . கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள்.

Ebrahim Ansari சொன்னது…

Dear Brother Ahmed Ameen,

Wa Alaikkumussalam.

Jasak Allah hairan.

Shameed சொன்னது…

மாடு மாதிரி உழைப்பார்கள் என்று எண்ணி நாட்டு மக்கள் இவர்களுக்கு (BJP)ஓட்டுப்போட்டார்கள் ஆனால் இவர்களோ மாட்டின் வாழை தூக்கி பிடித்துக்கொண்டு அதன் ...த்தை முகர்ந்து கொண்டு மாட்டுப்பின்னால் திரிகின்றனர்

sabeer.abushahruk சொன்னது…

காக்கா,

இந்த பதிவில் வரிக்கு வரி நக்கல் தூக்கலா இருக்கே இதை எழுதும்போது செம மூட்ல இருந்தீர்களா?

அதுசரி, இவய்ங்களோட கேனத்தனத்தைப் பார்க்கும்போது எனக்கே வெடைக்கனும்போல இருக்கும்போது...சொற்களுக்கு உயிர் தந்து உணர்வுகளைத் தொடும் எழுத்துக்குச் சொந்தக்காரர் உங்களுக்கு சொல்லவா வேண்டும்!

பின்னுங்க காக்கா!

(இன்னொரு முறை படித்ததால்...)

Ebrahim Ansari சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ebrahim Ansari சொன்னது…

தம்பி சபீர் அவர்களுக்கு,

//இந்த பதிவில் வரிக்கு வரி நக்கல் தூக்கலா இருக்கே இதை எழுதும்போது செம மூட்ல இருந்தீர்களா?//

தம்பி அபு இபு ஆணையிட்டார். எழுதி முடிக்க ஐந்து நாட்கள் ஆயின.

ஐந்து நாட்களும் ஒரே மூடு இல்லை. இனி எழுத்துக்களில் பழிகரப்பங்கதம் - வஞ்சப் புகழ்ச்சி அணி - அதிகம் காணப்படும்.

இன்னொரு முறை படித்ததற்கு இன்னொரு நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஆட்சி கட்டிலிலிருந்து விழ்ந்ததும் கவிக் கூட்டமே `பசு` மறந்தாலும் நாம `பசுமை` மறவோம் ! அங்கே அவனுங்க கோமாதாவுக்கு உணவும் கிடைக்கும் நம்மிடம் ! :)

அதிரை.மெய்சா சொன்னது…

வேறு எந்த விதத்திளெல்லாம் பசுவதை நடத்துகிறார்கள் என்பதை புரியாத ஜென்மங்களுக்கு புரியும்படி புட்டுபுட்டு வைத்து இருக்கிறீர்கள்.காக்கா. அருமை

Ebrahim Ansari சொன்னது…

இந்தக் கட்டுரையைப் படித்து கருத்துரை பகர்ந்த என்றும் என்றென்றும் அன்புக்குரிய மச்சான் அவர்களுக்கும், தம்பி சபீர் அவர்கள், மெய்ஷா அவர்கள் மருமகன் சாவன்னா அருமைத்தம்பி அஹமது அமீன் முதலிய அனைவருக்கும் நன்றி.

தம்பி ஜமாலுதீன் அவர்கள் அடிக்கடி இங்கு வந்து தனது அனுபவ கருத்துக்களை வழங்கிட வேண்டுமென்று விழைகிறேன்.


crown சொன்னது…

பெரிய புராணத்தில், சிறுதொண்டர் நாயனார் தான் பெற்ற பிள்ளையையே சிவபெருமானுக்கு சமைத்து படைத்ததாக கூறப்பட்டிருக்கிறதே அதை கட்டுக்கதை என்று சொல்ல இவர்களுக்கு தைரியமும் மனசாட்சியும் இருக்கிறதா? மனிதக் கறியை கடவுள் சாப்பிடலாம் மாட்டுக் கறியை ஏழை மக்கள் சாப்பிடக் கூடாதா?
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நான் மதிக்கும் மேதையே நலமா? மேற்கண்ட வரிகள் குமட்ல குத்துறமாதிரி இருக்கு!சொரன கெட்ட நாதாரிகள்!

crown சொன்னது…

காசியை புனிதத்தலம் என்று இந்தியப் பண்பாடு கருதுகிறது. காசிக்குப் போய் கங்கையில் குளித்தால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது பெரும்பான்மை இந்திய மக்களின் நம்பிக்கை. அந்தக் காசியில் அகோரிகள் என்கிற சாமியார்களின் ஒரு வகையினர் இறந்து போன மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகிறார்களே அதைவிடவா மாட்டுக்கறி சாப்பிடுவது மோசமாகப் போய்விட்டது?
-------------------------------------------------------------------------
இதை நிறுத்த சொல்லி சமூக ஆவலர்கள் பல முறை கோரியும் அக்கோரிக்கையை அகோரிக்காக கேட்காத செவிடன் காது இந்த மூடரிகளின் காது!அவர்களுக்கு நல்ல விசயம் கேட்காது!

crown சொன்னது…


மாடு உயிரோடு இருக்கும் நிலையில் அதை அறுத்து சாப்பிடக் கூடாது அது தெய்வம் என்று தடுப்பவர்கள் செத்த பிறகு அதற்கு செய்ய வேண்டிய மரியாதையைக் கூட செய்யாமல் தலித்களிடம் இலவசமாக தூக்கிக் கொடுப்பது மட்டும் ஏன்? இவர்களது இந்த பசுமாடு தெய்வம் என்கிற சித்தாந்தத்தில் இவர்களுக்கு உறுதி இருக்குமானால் செத்த மாட்டை பாடம் செய்து தங்களது வீடுகளில் வைத்து பூஜிக்க வேண்டும் அல்லது சுடுகாட்டில் எரித்து அதன் சாம்பலையாவது செம்பில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அல்லது செத்த மாட்டை கொம்புடன் படம் பிடித்து தங்களின் முன்னோர்களின் படத்துடன் வீட்டுச் சுவர்களில் மாலை போட்டு மாட்ட வேண்டும். அப்படி செய்கிறார்களா?
-----------------------------------------------------------------------------------
செத்த" மாட்ட நினைச்சிருக்கலாம்!

crown சொன்னது…

மாட்டுக்கறி சாப்பிட வேண்டுமானால் பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள் என்று சொல்லும் முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற கருப்பு ஆடுகளுக்கு கால் கழுவி விட்டுக் கொண்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------
ஓனாய் கூட்டத்தில் ஒரு கருப்பாடு!கைபர் வழியாக கால் நடையா வந்த கூட்டம்! மனித உயிரை எடுக்க துணிந்துவிட்டனர்!

crown சொன்னது…

பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் மீதான கருத்துத் தாக்குதலைத் தொடங்கி வைத்தவர் சிறுபான்மைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நஜ்மா ஹெப்துல்லா என்ற முக்காடு போடாத முஸ்லிம் பெண்மணிதான். முஸ்லிம்களை சிறுபான்மையினர் அல்ல என்றும் அதற்கான சலுகைகளைப் பெற்றிட அவர்களுக்குத் தகுதி இல்லை என்றும் வாய் கூசாமல் கூறினார் என்பதை நாம் மறக்க இயலாது.
-----------------------------------------------------------------------------------------------------------
முக்காடு போடாத இந்த அரவேக்காடு பெயர்தாங்கி முஸ்லிம் பதவிக்காக கொழுத்திவிட்டபோதே அவளையும் கொழுத்தியிருக்கனும்.!

crown சொன்னது…

உன்மையை உரக்க சொல்லும் போதும் அதை மனதில் பதியும் படி எழுத உங்களைப்போல் மேதைகளால் மட்டுமே முடியும் .

crown சொன்னது…

Ebrahim Ansari சொன்னது…

கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தம்பி ஜமாலுதீன் போன்ற உரத்த சிந்தனையாளர்கள் கருத்திட்டிருப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

ஜசாகல்லாஹ் ஹைரன்.
------------------------------------------------------------------
ஜமால் கருத்திட்டிருக்கும்போதே எழுத நினைத்தேன் மேன்மக்கள் மேன்மக்கள் என நீருபித்து நீங்களே வரவேற்றது பெருந்தன்மை.! ஜமால் தொடர்ந்து கருத்தும்,ஆக்கமும் எழுதுடா!

Ebrahim Ansari சொன்னது…

தம்பி கிரவுன் அவர்களின் கருத்துக்களை படித்த போது , மாட்டு வால் சூப் குடித்ததுபோல் தெம்பாக இருக்கிறது.

தம்பி அபு இப்ராஹிமுடைய கருத்து அந்த சூப்பில் கலந்த உப்பு.

ஜசாக்கால்லாஹ்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+