மையைப் பற்றிப் பார்க்கும் முன்பு ஒரு நாய் குறுக்கே வந்து விட்டது. ஆகவே நாயைப் பற்றியும் அதற்குக் காரணமான தீயைப் பற்றியும் பார்ப்போம்.
வறுமையை ஒழிப்போம்! வளமையைப் பெருக்குவோம் ! என்று வாக்குக் கேட்டு வந்தவர்களை நம்பி கோக்கு மாக்காக வாக்களித்து இன்று நாக்குத் தள்ளி நிற்கிறார்கள் பீஹார் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசவாசிகள்.
“நினைச்சது ஒன்னு! நடந்தது ஒன்னு!
அதனாலே முழிக்குதே அம்மா கண்ணு!
கணக்கும் தவறாகிப் போனதினாலே
கவலை கொள்ளுதே தனியா நின்னு” –
என்று ஒரு பழையகாலப் பாட்டொன்று இருக்கிறது. வளர்ச்சியை நம்பி வாக்களித்த அந்த மாநில மக்கள் இந்தப் பாட்டைத்தான் இப்போது இந்தியில் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நாட்டின் இன்றைய சகிப்புத் தன்மையற்ற பிரச்னைகளுக்குக் காரணம் ஒரு கையடக்க சதவீதமே உள்ள சிலர் நாட்டை இன்னும் ஆட்டிப் படைக்க நினைப்பதுதான். புத்தர் காலத்திலிருந்தே இந்தப் பிரச்னை இன்னும் தீரவில்லை. இதோ இந்த வரலாற்று சிறப்புமிக்க உரையாடலைப் பாருங்கள்.
“அந்த குதிரையை ஏன் தீயில் இட்டு எரித்தீர்கள் ?”
“குதிரையை சுவர்கத்திற்கு அனுப்புகிறோம்.”
“அப்படியானால் நீங்கள் ஏன் உங்களையும் தீயில் போட்டு எரித்துக் கொண்டு சுவர்க்கம் செல்ல முயலவில்லை? “
பிராமணரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவர் யார்? பெரியாரல்ல; புத்தர்.
அரியானாவில் ஜிதேந்திரா என்ற தலித் இனத்தவரின் வீட்டுக்கு, அதிகாலையில் உயர் ஜாதியினர் தீ வைத்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. அவை பொட்டலமாக் சுற்றப்பட்டு இறுதி ஊர்வலமாக வந்தநிகழ்வைக் கண்டு கல்லும் கரைந்தது.
இதேபோன்று மற்றொரு சம்பவம் அதே அரியானாவில் நடந்து உள்ளது. கோஹனா நகரைச் சேர்ந்த தலித் சிறுவன் மீது மற்றொரு உயர் சமூகத்தினர், புறவாவைத் திருடியதாக புகார் ஒன்றை அளித்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த 15 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தான்.
இது பற்றி கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், உள்ளுர் சம்பவங்களுக்கு மத்திய அரசை தொடர்பு படுத்துவது சரியல்ல. யாராவது சிலர் நாய் மீது கல் விட்டு எரிந்ததற்கு கூட மத்திய அரசை எப்படி பொறுப்பாக்க முடியும் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அங்கேதான் ஆரம்பித்தது பிரச்னை.
அதென்னவோ பிஜேபி கட்சிக்கும் நாய்களுக்கும் இருக்கும் தொடர்புக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்றால் நாட்டில் நடக்கும் எந்த சம்பவத்தைப் பற்றியும் கருத்துத் தெரிவிக்க வேண்டுமென்றாலோ உதாரணம் காட்டவேண்டுமேன்றாலோ எங்கோ இனவிருத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற நாய்களை இழுப்பது சொல்வது பிஜேபியின் வாடிக்கையாகிவிட்டது. நாய் படாதபாடு என்பார்கள். நாய்களே மாட்டி கொள்ளும் இயல்புடையவைதான். இவர்களிடம் நாய்களே மாட்டிக் கொண்டு படாத பாடுபடுகின்றன.
இதற்கு முன் குஜராத்தில் நடைபெற்ற வரலாற்றில் வடுக்களை ஏற்படுத்திய கலவரத்தை பற்றி பத்திரிக்கை நிருபர்கள் கேட்டபோது காரில் அடிபடும் நாய்க்குட்டிகள் என்று இன்றைய பிரதமர் உதாரணம் சொன்னார். இன்று அவரது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் நாய்கள் மீது கல்லெறிவதை ஒப்பிட்டு உதாரணமாக சொல்கிறார். அநியாயமாகக் கொல்லப்படும் தலித்களின் உயிர்களுக்கு நாய்களை ஒப்பிடுவது ஒரு நாகரிகமான செயலாக மத்திய அமைச்சர்களுக்குத் தோன்றினால் அவர்களது வழி வழி வந்த நாகரிகம் பற்றி சிந்திக்க வேண்டி இருக்கிறது ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவருக்கு இப்படிப்பட்ட மனநிலை இருந்தால் அவர் பணியாற்றிய காலத்தில் தலித்களை எப்படி நடத்தி இருப்பார் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற அநியாயக் குற்றச்சாட்டில் ஒரு ஏழை முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்டார் ; இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டனர்; ஒரு தலித் சிறுவன் காவல்துறையால் அடித்தே கொல்லப் பட்டான் . ஆனாலும் நாட்டை ஆளும் பிரதமர் இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார். அவருக்கு பேசத் தெரியாதா? பேசத்தெரியும். இன்னும் சொல்லப் போனால் பேசியே அசத்துவதில் இவர்தான் சிறந்தவர். ஆனால் இவரது வாயில் ஆர் எஸ் எஸ் பூட்டு தொங்குகிறது. அதனால் இவரால் வாய் திறக்க இயலவில்லை அல்லது வாய் திறக்க அனுமதி கிடைக்கவில்லை.
பிரதமர் வாய் திறக்காவிட்டால் என்ன? நாட்டின் உண்மையான நிழல் பிரதமர் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர் திரு. மோகன் பகவத். அண்மைக்காலங்களில் பிரதமர் கருத்துத் தெரிவிக்க வேண்டிய நேரங்களிலெல்லாம் திரு. மோகன் பகவத் தான் பேசுகிறார். இதோ அவர் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தைகள்
“நாடு முழுவதும் நம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சி நிலவுகிறது. சிறு சிறு சம்பவங்களால், இந்துக்களின் பண்பாட்டையும், இந்தியாவையும் சிதைத்துவிட முடியாது” என்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் 90வது ஆண்டுவிழாவில் பேசியிருக்கிறார் திரு. மோகன் பகவத்.
அதாவது அவரது கருத்துப்படி,
உ.பியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொல்லப்பட்ட முகமது அக்லக், ஹரியானா மாநிலத்தில் எரித்துக்கொல்லப்பட்ட இரண்டு தலித் குழந்தைகள், சிறுவனின் சாவு, நாடெங்கும் கல்வியாளர்கள் சுடப்படுவது, அறிஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விலை மதிப்பற்ற விருதுகளை திருப்பி அளிப்பது சம்பவங்கள்யாவும் , ஆளும் பாஜகவுக்கு முதலாளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவருக்கு புத்துணர்வு ஊட்டும் சிறு பிரச்சினைகளாகத் தெரிகின்றன.
திரு பகவத் உடைய கூற்றுப்படி மேற்கண்ட கொடுமைகள் சிறிய பிரச்னைகள் என்று எடுத்துக் கொள்ளும்போது , சென்னை மயிலாப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்தக் காரணங்களால் சில பிராமண சகோதரர்களின் பூணூல் நடுத்தெருவில் வைத்து சிலரால் அறுக்கப் பட்ட அவல நிகழ்வு நமக்கு நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு மற்றவர்களுடைய புனித சின்னங்களை அவர்கள் அணிந்திருக்கும் நிலையில் அறுத்து அவமானப் படுத்துவது கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியதுதான் இந்த செயலை செய்தவர்கள் உடனே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. என்ன வழக்குத் தெரியுமா? பூணூல் அறுத்த வழக்கல்ல; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த வழக்கல்ல ; தேசிய பாதுகாப்புச் சட்டபடி அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. காரணம் இந்தச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் சாதியினர்.
ஒரு பக்கம் குழந்தைகள் எரித்துக் கொலை, சிறுவன் அடித்துக் கொலை, எழுத்தாளர்கள் சுட்டுக் கொலை இவைகள் எல்லாம் சிறு சிறு நிகழ்ச்சிகள் என்றும் புத்துணர்ச்சி என்றும் வடிவமைக்கப்படுகின்றன. காரணம் இவற்றால் பாதிக்கப்பட்டோர் நாதியற்ற தலித்கள் மனுநீதியின் மொழியில் சொல்லப்போனால் சூத்திரர்கள். மறு பக்கம் பூணூல் அறுத்த வழக்குக்கு தேசிய பாதுகாப்புச்சட்டம் பாயக் காரணம் அவைகள் சிறு சம்பவங்களல்ல ஏனென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பாஷையில் பிராமணர்கள். இதுதானே இந்த நாட்டின் நீதி?
வளர்ந்துவரும் மதவாத வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கல்புர்கி, பன்சாரே, தபொல்கர் ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் கொல்லப்பட்டதையும் எதிர்த்து கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களுடைய விருதுகளையும் அங்கீகாரங்களையும் அரசிடம் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பூனாவில் இருக்கும் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேசிய விருது வாங்கிய பத்து கலைஞர்களும் தங்களது விருதுகளை திருப்பிக் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் நாடெங்கிலுமிருந்து பல அறிவியலாளர்கள் நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலையை சுட்டிக் காட்டி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி தங்களின் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிஞர்கள், கலைஞர்கள் முதல் உணர்வுமிக்க எழுத்தாளர்கள் வரை முன்னெடுத்து இருக்கும் இந்த வகைப் போராட்டங்கள் அலட்சியபடுத்தப்படக் கூடியதல்ல. காரணம், எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள், கலைஞர்கள் ஆகியோர் உலகத்தின் சரித்திர சூரியனை கிழக்கிலிருந்து மேற்கே உதிக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். இவ்வகை மக்களின் இந்தச் செயல் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. இதை அரசு உணரவேண்டும்.
உலகை உலுக்கிய வரலாற்று நிகழ்வுகளைப் படித்துப் பார்த்தால் எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு சரித்திர மாறுதல்களுக்கு காரணமாக இருந்து இருக்கிறார்கள் என்பது புரியும். அரிஸ்டாட்டில், டார்வின், மார்டின் லூதர், கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், நியூட்டன், பெர்னாட்ஷா, இங்கர்சால், பிளாட்டோ, தாமஸ் மால்தஸ், ஹோமர் போன்ற உலகில் புகழ்பெற்ற தலைவர்கள் ஒரு எழுத்தாளராகவும் அறிவியலார்களாகவும் கலைஞர்களாகவும்தான் தங்களது வாழ்க்கையைத் துவங்கி இருக்கிறார்கள்.
இந்தியாவிலும் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், பாரதியார், ஜவஹர்லால் நேரு, அண்ணா, போன்றவர்களின் எழுத்துக்கள் இந்த நாட்டின் வரலாற்றை புரட்டிப் போட காரணமாக இருந்து இருக்கின்றன. எழுத்தாளர்கள் இந்த மண்ணின் மனசாட்சிகள். உண்மைகளை உலகத்தின் கண்களுக்கு காட்சியாக்கித் தரும் கண்ணியம் மிகுந்தவர்கள். எப்போது எழுத்தாளர்களின் விரோதத்தை இந்த அரசு சம்பாதித்துக் கொண்டதோ அதுவே ஆபத்துக்கு அறிகுறி என்பதை அரசு உணர வேண்டும். இப்போது எழுத்தாளர்களுடன் ஏனைய அறிவு ஜீவிகளும் இணைந்திருப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். எழுத்தாளர்களின் கரங்களில் இருப்பது எழுதுகோல் அல்ல அவை சுட்டெரிக்கும் துப்பாக்கிகள் என்பதை எந்த அரசாக இருந்தாலும் உணரவேண்டும்.
உயிர்ப்பலி வாங்கும் வன்முறைகள் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்க, இப்போது புதிதாக மை பூசும் அரசியல் நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடங்கி இருப்பவர்கள் மும்பையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிரடி நண்பர்கள். இதுவரை கல்லையும் கம்பையும் கைகளில் எடுத்து மாற்று மாநிலத்தவரை மும்பையிலிருந்து நையப்புடைத்து விரட்டியடித்தவர்கள், வளர்ச்சியின் அடையாளமாக இப்போது மையைக் கையில் எடுத்தார்களோ என்று தோன்றுகிறது. ஏனென்றால், இந்தப் போராட்ட முறை உலகில் இதுவரை எந்த இயக்கமும் தங்களது கைகளில் எடுக்காத வழிமுறையாகும். .
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் முஹம்மத் காசுரி எழுதிய, “ பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையில் எனது பார்வை, பருந்தோ, புறாவோ அல்ல” என்ற ஆங்கில புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தவர் மீது சிவசேனா தொண்டர்களால் கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் பிஜேபி கட்சியைச் சேர்ந்த சுதீந்திரா குல்கர்னி என்பவர்தான். தனது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவருக்கே மையால் அபிஷேகம் செய்து ஆனந்தித்தது சிவசேனா. இந்த அரசியல் அத்துமீறலை நாடே கண்டித்தது என்பதை விட முக்கியமானது இந்தச்செயலை பிஜேயின் மூத்த தலைவர் எல் கே அத்வானியும் கண்டித்துள்ளார்.
ஆனால், குல்கர்னி மீது வீசப்பட்டது மை அல்ல, எங்கள் வீரர்களின் ரத்தம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். குல்கர்னி மீது மை வீசப்பட்டது ஒரு சாதாரண ஜனநாயக போராட்டம் என்றும் அவர் வினோதமான விளக்கம் வேறு அளித்துள்ளார்
சிவசேனாவின் அந்த அரசியல் அநியாயம் அதோடு நிற்கவில்லை. பாகிஸ்தானின் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ஒன்று மும்பையில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால் இசை நிகழ்ச்சி நடைபெற்றால் மும்பையில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுமென்று சிவசேனா அச்சுறுத்தியதன் காரணமாக அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உலகறிந்த பாடகர் குலாம் அலிக்கு மும்பையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிவசேனாவின் இந்த அராஜகத்தால் செவிக்குணவு இன்றி திகைத்து நின்றார்கள்.
அதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டிகள் நடத்தப்படவேண்டுமென்ற நோக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய தலைவரான சஷாங் மனோகர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியார் கான் ஆகியோருக்கு இடையேயான பேச்சு வார்த்தை மும்பையில் நடைபெறும் என்கிற செய்தி வெளியானது.
இதற்காக சஹாரியார் கானும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல் அதிகாரி நஜீம் சேத்தியும் இந்தியா வந்திருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ அலுவலகத்தை சிவசேனாக் கட்சியினர் மை பாட்டில்களுடன் முற்றுகையிட்டனர். அப்போது, சஷாங்க் மனோகரின் இருக்கைக்கு முன்பாக சென்று, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று அநாகரீகமான கோஷங்களை எழுப்பி, ரகளையில் ஈடுபட்டனர்.
சிவசேனாவின் போராட்ட வடிவத்தை நாமும் வரவேற்க முடியும். எப்போதென்றால் திரு. மோடி பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷரீபை வரவழைத்தபோது ஒரு பச்சை மை பாட்டிலை அவர் மீது ஊற்றி இருந்தால் வரவேற்கலாம்; வெங்காயத்தின் விலை வானளவுக்கு உயர்ந்ததால் பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி ஆனபோது அந்த லாரிகள் மீது மஞ்சள் நிற மையை ஊற்றி இருந்தால் வரவேற்கலாம்; இந்தியாவில் தேடப்படும் ஹபீஸ் சையித் என்பவரை ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த வேத பிரதாப் விதிக் பாகிஸ்தானிலேயே சந்தித்துப் பேசிவிட்டு ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஏப்பம்விட்டுவிட்டு வந்தாரே அவர்மீது ஒரு காவி நிற மையை ஊற்றி இருந்தால் வரவேற்று இருக்கலாமே! டில்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சென்று அந்நாட்டின் தேசிய தினத்தை ஒன்றாக சேர்ந்து கொண்டாடிவிட்டு வந்தார் சுப்ரமணியம் சுவாமி அவர்மீது கொஞ்சம் வெள்ளை மையையாவது ஊற்றி இருந்தால் கொண்டாடியே இருக்கலாமே! பிஜேபி ஆட்கள் மீது ஊற்ற வெளியே வராத மை உள்ள பையும் கையும் மற்றவர்கள் மீது மட்டும் ஊற்றி அவமானப்படுத்த வருவானேன்?
இந்துக் கடவுளின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்தார் என்பதற்காக ஒரு ஆஸ்திரேலியா சுற்றுலாப் பயணி, கடுமையான சொல்லடிக்கு உட்பட்டு காவல் நிலையத்தில் தவறு என்று எழுதிக் கொடுத்து மன்னிப்புக் கேட்கிறார். மாட்டிறைச்சி விருந்துகொடுத்தார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி மக்கள் மன்றத்திலேயே அடிக்கப்படுகிறார், பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அவர் மீது மை பூசப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் , எதிர்கருத்து பேசும் மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை மிரட்டுகிறார்கள். ஞானி போன்ற சமூக சிந்தனையாளர்கள் மீதும் மை பூசுவோம் என்று வெளிப்படையாக தொலைக் காட்சியிலேயே மிரட்டுகிறார்கள்.
இவ்வாறான நாட்டின் அமைதியைப் பாழ்படுத்தும் சூழ்நிலைகள் இப்போது மெல்ல மெல்ல உச்ச கட்டத்துக்குப் போய்க்கொண்டு இருக்கின்றன. புது டில்லியில் கிருத்தவ ஆலயங்கள் கல்லெறிந்து தாக்கப்பட்டது, தாய் மதம் திரும்புவோம் என்று ஆசைகாட்டி “கர்வாப்சி” என்ற திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது, மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று பேசியது, ராமருக்கு பிறக்காதவர்கள் தவறாகப் பிறந்தவர்கள் என்று பேசியது, இந்த நாட்டில் இஸ்லாமிய கிருத்தவ வழிபாட்டுத்தலங்கள் எதுவும் தேவை இல்லை அவற்றை இடித்து விடலாமென்று சுப்ரமணியம் சுவாமி கூறியது, சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று சிவசேனா கூறியது இப்போது மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை வேட்டையாடுவது, எழுத்தாளர்களைக் கொல்வது, மாற்றுக் கருத்துடையோருக்கு மை பூசி அவமானபடுத்துவது, விவாதங்களில் மிரட்டுவது இன்ன பிற செயல்கள் இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பாரம்பரியமான சகிப்புத்தன்மைக்கும் பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.
ஆக, “சாரே ஜகான்சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா” என்று அல்லாமா இக்பால் அவர்களால் புகழப்பட்ட இந்தியாவில்- பன்முகத் தன்மைதான் இந்த தேசத்தின் உயிர்நாடி என்று இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்துத்தந்த அம்பேத்கர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் தனது உயிரையே பலி தந்த காந்தியின் தேசத்தில் – “விந்திய ஹிமாசல உத்சல கங்கா திராவிட உத்ல்கல ரங்கா” என்று நாடு தழுவிய தேசியகீதம் முழங்கப்படும் நாட்டில் - வாழும் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருவித பதற்றமும் அச்சமும் கலந்த உணர்வுடனே நாட்டில் நடமாடும் நிலை ஆட்சி மாற்றத்துக்குப் பின் பலவகையிலும் உருவாகி இருக்கிறது.
அரசே திருந்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் தீர்ப்புகள் திருத்தப்படலாம். .
இப்ராஹீம் அன்சாரி
14 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
சொல்லடிகளா கல்லடிகளா!!!
கருத்தடிகளா செருப்படிகளா!!!
பேய்களின் ஆட்சியில் நாய்களின் காட்டுகள்.
வாய்க்கொழுத்த வீணர்கள் குடித்தத் தாய்ப்பாலில் தகறாறோ என்னவோ
தறிகெட்டு உளறுகின்றனர்.
இவன்கள் விஷம் என்பதைத் தொடர்ந்து சொல்வோம். அடுத்த தேர்தலுக்குள் இந்தக் குள்ளநரிக் கூட்டம்தான் சிறுபான்மை என்று ஸ்தாபிப்போம்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
//"நினைச்சது ஒன்னு! நடந்தது ஒன்னு!
அதனாலே முழிக்குதே அம்மா கண்ணு!
கணக்கும் தவறாகிப் போனதினாலே
கவலை கொள்ளுதே தனியா நின்னு”
வளர்ச்சியை நம்பி வாக்களித்த அந்த மாநில மக்கள் இந்தப் பாட்டைத்தான் இப்போது இந்தியில் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.//
சோச்த்தா ஏக்ஹே! ஹுவாத்தா ஏக்ஹே!
இஸ்லியே தேக்தா மாக்கி ஆங்க்ஹேன்!
ஹிஸாப் கலத் ஹோகயா கத்தே
அஃப்ஸோஸ் ஹோரா அகேலா கடாஹ்க்கே
ஹிஹி...கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேன்னு....
//நாய்களே மாட்டி கொள்ளும் இயல்புடையவைதான். இவர்களிடம் நாய்களே மாட்டிக் கொண்டு படாத பாடுபடுகின்றன.//
காக்கா....
அடல்ட்ஸ் ஒன்லி!
பொதுவா 'தாயைப் போல பிள்ளை: நூலைப்போல் சேலை"
பிஜேபீல, நாயைப் போல் தலைவன்; பேயைப்போல் தொண்டன்!
சீக்கிரமாகவே 'மாட்டி'க்கினுவானுக; கல்லோடு காத்திருப்போம்.
//எப்போதென்றால் திரு. மோடி பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷரீபை வரவழைத்தபோது ஒரு பச்சை மை பாட்டிலை அவர் மீது ஊற்றி இருந்தால் வரவேற்கலாம்; வெங்காயத்தின் விலை வானளவுக்கு உயர்ந்ததால் பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி ஆனபோது அந்த லாரிகள் மீது மஞ்சள் நிற மையை ஊற்றி இருந்தால் வரவேற்கலாம்; இந்தியாவில் தேடப்படும் ஹபீஸ் சையித் என்பவரை ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த வேத பிரதாப் விதிக் பாகிஸ்தானிலேயே சந்தித்துப் பேசிவிட்டு ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஏப்பம்விட்டுவிட்டு வந்தாரே அவர்மீது ஒரு காவி நிற மையை ஊற்றி இருந்தால் வரவேற்று இருக்கலாமே! டில்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சென்று அந்நாட்டின் தேசிய தினத்தை ஒன்றாக சேர்ந்து கொண்டாடிவிட்டு வந்தார் சுப்ரமணியம் சுவாமி அவர்மீது கொஞ்சம் வெள்ளை மையையாவது ஊற்றி இருந்தால் கொண்டாடியே இருக்கலாமே! பிஜேபி ஆட்கள் மீது ஊற்ற வெளியே வராத மை உள்ள பையும் கையும் மற்றவர்கள் மீது மட்டும் ஊற்றி அவமானப்படுத்த வருவானேன்? //
வர்ணஜால எழுத்து! கைதட்டுவது காதில் விழுகிறதா காக்கா?
காவி பாவிகளுக்கே செ'மை'யா மை பூசியுள்ளீர்கள்
இன்னும் 110 பாதியுடன் நிற்பதாக நினைவு!
காட்டுமிராண்டிகளின்கையில்மக்கள்நாட்டைகொடுத்துவிட்டார்கள் .இந்திய ஜனநாயகம்குரங்குகையில்பூமாலை.சுயமரியாதை பேசிய திராவிடம் கூட கடந்த தேர்தலின்போது'' சாமி யே சரணம் ஐயப்பா!'' என்று காலில் விழுந்து ஆராத்தியும்எடுத்து கையும் ஏந்திநின்றது. மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை மன்னவன்திருந்தமாட்டான் .
மொத்தத்தில்இதுஒருநல்லநீண்டபச்சைபதிவு.இந்தநீண்டபதிவுஎழுத ''மை''யார்தந்தது?
அடுத்ததேர்தல்வரும்வரை ''மை''யாவாரிகள்நல்லாகல்லாகட்டுவார்கள்.
தம்பி அமீன்!
110 தானே அதன் இயல்பு அப்படி அறிவிப்பு மட்டும்தான் வரும் அமுல்படுத்தல் தாமதமாகவே நடக்கும். சில வேலை நடக்காமலும் போகலாம்.
ஆனால் நமது அறிவிப்பு அப்படியல்ல
இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் நிறைவு செய்ய முயலலாம்.
தம்பி சபீர் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ் சலாம்.
இன்று காலையிலேயே பதில் பதிவு செய்தேன். ஆனால் ஏனோ இங்கு பதிவாகவில்லை. சிவசேனா சதியா?
இந்தி தமிழாக்கம் படு ஜோர். உண்மையில் எழுதும்போது இந்தியில் என்ற வார்த்தை தானாகவே வந்தது. உடனே எனக்கே சிரிப்பும் கூடவே உங்கள் நினைப்பும் வந்தது.
ஜசாக்கல்லாஹ்
Assalamu Alaikkum
Respected brother Mr. Ebrahim Ansari,
Nice observation on the reality of India now. What about the Kerala House menu item 'beef', removed, then re-added as 'buffalo meat' and Umman Chandi's condemnation?
Hope Indians are not in the dreaming state by putting trust on dangerous guys to develop the country. Now all are waking up to the reality of the India. I expect the atrocities of backward thinking people will come to an end soon.
May God Almighty save the Indian Citizens from cheating cunning foxes.
B. Ahamed Ameen from Dubai.
நாய்களே மாட்டி கொள்ளும் இயல்புடையவைதான். இவர்களிடம் நாய்களே மாட்டிக் கொண்டு படாத பாடுபடுகின்றன.
--------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.காக்கா படித்தவுடன் எழுத நினைத்தேன் சிறுவேலை வெளியில் சென்றதால் எழுத முடியவில்லை!கத்திரி போடனும் நான் இந்த நாய்களுக்கு சொன்னேன்!.
தம்பி அகமது அமீன் மற்றும் கிரவுன்
வ அலைக்குமுஸ் சலாம். ஜசாக்கால்லாஹ் ஹைரன்.
Post a Comment