தொடர் 16.
எதிரிகளுடன் போரிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சரணடைந்தால் உயிர் தப்பிக்கலாம் என்கிற நிலை வரும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பதே மனித இயல்பு . ஆனால் வீரர்களுக்கென்று ஒரு நியதி இருக்கிறது. மரணமே வரினும் மாற்றானிடம் மண்டி இடுவதைவிட மரணத்தை ஏற்றுக் கொள்வதே ஒரு உலகம் போற்றும் மாவீரனின் உண்மை சரித்திரமாக இருக்க முடியும் . அப்படி ஒரு சரித்திரம்தான் தீரன் திப்பு சுல்தானின் சரித்திரம். எந்த நேரமும் மரணம் தன்னை தழுவக் கூடுமென்ற நிலையில் எதிர்களால் தாக்கப் பட்டு சரிந்து கொண்டிருந்த திப்புவிடம் , அந்த மாவீரனின் உடனிருந்த பணியாள் ஓடிவந்து, “அரசே! நாம் சரணடைந்து, சமாதானமாகப் போனால் நமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்” என்று தயங்கித் தயங்கி எடுத்துரைத்த போது, உயிருக்குப் போராடும் நிலையிலும் அந்த வீரன் உதிர்த்த வரிகள் வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியவை. “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று அந்த சிங்கம் சிலிர்த்தெழுந்து இவ்வார்த்தைகளை மரணப் படுக்கையில் உதிர்த்த தென்றால் அரண்மனையில் – அரியணையில் – அதிகாரத்துடன் ஆட்சி செய்த காலங்களில் இந்த சிங்கம் எப்படியெல்லாம் கர்ஜித்து இருக்கும்? வாருங்கள் நண்பர்களே! தீரமிக்க திப்புவின் தியாக மிக்க வரலாற்றின் அன்பும் அரவணைப்பும் ஆளும் தன்மைகளும் நீதியும் நியாயமும் எழுச்சியும் நிறைந்த காட்சிகளைக் காணலாம்.
தியாகம் நிறைந்த திப்புவின் வாழ்வைப் படிக்கும்போது தோள்கள் தினவெடுக்கும். முதலில் அவரது வாழ்வு மற்றும் ஆட்சிமுறையின் சிறப்பம்சங்களை அறியத் தருகிறேன். பின்னர் போகலாம் போர்க்களத்துக்கு.
பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில் நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.
திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர். திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையாலும் இறைவனின் ஆசியாலும் அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நிலைப்படுத்திக் கொண்டார்.
திப்பு சுல்தானின் தந்தையான மைசூரின் மன்னர் ஹைதர் அலியின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். அவருக்கும் ஹைதர் அலிக்கும் பெண்குழந்தைகளே பிறந்தன. ஆண் வாரிசு இல்லை. ஆதலால் ஷாபாஸ் பேகமின் வற்புறுத்தலின்பேரில் ஹைதர் அலிக்கு ஃபக்ர் உன்னிஸாவைத் திருமணம் செய்துவைத்தனர். ஃபக்ர் உன்னிஸா தனக்குப் பிறக்கும் முதல்குழந்தையை அல்லாஹ்வின் திருப்பணிக்கு அர்ப்பணிக்கக்கவும் அடுத்த குழந்தையை அரசாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளவும் ஹைதர் அலியிடம் அனுமதிபெற்றுக்கொண்டார். அத்தம்பதியருக்கு ஐந்தாண்டுகள் குழந்தைப்பேறு இல்லை.
முதல் குழந்தையாகத் திப்பு சுல்தான் 20.11.1750ஆம் நாள் பிறந்தார். ஹைதர் அலி தன் இரண்டாம் மனைவி ஃபக்ர் உன்னிஸாவின் விருப்பப்படி திப்பு சுல்தானை இறைப்பணிக்கு ஒப்படைத்தார். ஹைதர் அலியின் முன்னோர்களின் சூஃபி மரபு இனி திப்பு சுல்தானால் தொடரும் என்று நம்பினார். திப்புசுல்தானுக்கு இஸ்லாமிய மார்க்கக் கல்வியும் பிற இந்திய மதங்களும் கற்பிக்கப்பட்டன. அமைதி என்பது ஒரு மந்திரமாகவே திப்பு சுல்தானுக்குக் கற்பிக்கப்பட்டது.
ஹைதர் அலி – ஃபக்ர் உன்னிஸா தம்பதியருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. கரீம் என்று பெயரிட்டனர். அவனையே தன் அடுத்த ஆட்சி வாரிசாக ஹைதர் அலி நினைத்தார். ஆனால், அல்லாஹ்வின் கணக்குவேறு விதமாக இருந்தது.
கரீம் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையானான். ஹைதர் அலி கலங்கினார். அவர் திப்பு சுல்தானைப் பார்க்கச் சென்றார். அப்போது திப்பு சுல்தான் ஒரு பண்டிதரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே ஹைதர் அலி தன் முதல் மகன் திப்பு சுல்தானின் மொத்த ஆன்மீகப் படிப்பையும் நிறுத்தினார். திப்பு சுல்தானின் கைகளில் தன் வாளை ஒப்படைத்தார். இனி திப்பு சுல்தான் ஆன்மிகப் பாதையில் பயணிக்க முடியாது. ஆட்சிகட்டிலும் அரியாசனமும்தான் அல்லாஹ் அவருக்கு விதித்த வழி என்பது அன்று முடிவானது.
திப்பு சுல்தானுக்குப் போர்க் கலைகள் கற்பிக்கப்பட்டன. ஒரு தகுதிவாய்ந்த இளவரசராகத் திப்பு சுல்தான் உருவானார். அப்போது திப்பு சுல்தானுக்கு வயது 15.பெத்தனூர் அரசர் ஹைதர் அலியிடம் வாலாட்டினார். இதனால் வாளாட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலியின் படைகள் பெத்தனூரை நோக்கி முன்னேறின. இந்தப் போரைக் காண்பதற்காக 15 வயதுடைய திப்பு சுல்தானும் போர்க்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். போர்க்களம் அவருக்கு ஒரு பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு வீரப் பால் ஊட்டப்பட்டு , போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.
ஹைதர் அலியும் அவரது படைகளும் பெத்தனூர் அரசனைப் பந்தாடின. திப்புசுல்தான் போர்க்களத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தார். தன் தந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று கருதிய திப்பு சுல்தான் மாற்று வழியில் ஹைதர் அலி போரிடும் பகுதிக்குச் சென்றார். அவ்வாறு போகும் வழியில் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைச் சந்தித்தார். போரினால் பாதிக்கப் பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்த அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவந்தார். அந்தக் குடும்பத்தின் நிலை போர்த் தர்மத்தின்படி பிணைக் கைதிகளின் நிலையானது. இச்செய்தி பெத்தனூர் அரசருக்குத் தெரிந்ததும், மேற்கொண்டு சண்டையிட மனம் இன்றி பெத்தனூர் அரசர் ஹைதர் அலியிடம் சரணடைந்தார்.
திப்பு சுல்தான், பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைப் பிணைக் கைதியாகப் பிடித்துள்ளார் என்பதனை அறிந்த ஹைதர் அலி மகிழ்ச்சியுடன் திப்பு சுல்தானைப் பார்க்க வந்தார். அதற்குள் ஹைதர் அலியின் தளபதி மக்பூல்கான் திப்பு சுல்தானிடம் வந்து, பிணைக் கைதிகளைப் பார்வையிட்டார். திப்பு சுல்தானின் நேரத்துக்குத் தகுந்த வீரத்தைப் புகழ்ந்தார். பின் வழக்கம்போலப் பிணைக் கைதிகளிடம், வென்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களைச் செய்யத் துணிந்தார் . அச்செயல்கள் மனிதாபிமானம் மிக்க, திப்புசுல்தானுக்குப் பிடிக்கவில்லை. தளபதியை எச்சரித்தார். திமிர் கொண்ட அவன் சிறுவர் திப்புவின் பேச்சைக் கேட்கவில்லை. திப்புசுல்தான் தன் கைத்துப்பாக்கியால் கொடுமை செய்யத் துணிந்த மக்பூல்கானை நோக்கி சுட்டார். திப்புசுல்தானின் அரசியல் கொலைகளின் எண்ணிக்கை மக்பூல்கானின் கொலையிலிருந்து தொடங்கியது. அந்தக் கொலை மனிதாபிமான அடிப்படையிலானது. ஒரு அடைக்கலம் தேடிய அரச குடும்பத்தைக் காப்பாற்ற தனது தளபதி என்றும் பாராமல் சுட்டுத் தூக்கி வீசினார் திப்பு.
திப்புசுல்தான் பெத்தனூர் அரச குடும்பத்தாரைப் பாதுகாத்ததும் மக்பூல்கானைக் கொன்றதும் ஹைதர் அலிக்குச் சரியாகவே பட்டது. திப்புசுல்தானின் விருப்பப்படி ஹைதர்அலி பெத்தனூர் அரசரையும் அவரது குடும்பத்தாரையும் விடுவித்தார். அந்த இளவயதில் திப்பு சுல்தான் எடுத்துவைத்த முதல் அடி அவரது எதிர்கால இரக்கமிக்க நீதி நிறைந்த ஆனால் உறுதியான உள்ளத்தை உலகோருக்கு எடுத்துக் காட்டியது.
“எங்கெல்லாம் பிரிட்டிஷார் அத்து மீறி ஆக்கிரமிப்பு நடத்துகிறார்களோ அங்கெல்லாம் விரைந்து செல்லவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, நம் எதிரியாகவே இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்து நிற்கவேண்டும்.” இதுதான் திப்புசுல்தானுக்கு அவரின் தந்தை ஹைதர்அலி சொல்லிச் சொல்லி வளர்த்த அரசியல் அரிச்சுவடி. இதனையே திப்புசுல்தான் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அதனால்தான் அவர் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார்.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது. சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு அதுவும் ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவித் தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.
திப்புவின் இயந்திரப் புலி சுவாரசியமானது. ஒரு புலி ஒரு பிரிட்டிஷ் வீரரைக் கடித்துக் குதறுவது போன்று ஓர் இசை இயந்திரத்தை பிரெஞ்சுக் கலைஞர் ஒருவரைக் கொண்டு திப்பு வடிவமைத்திருந்தார். ஒரு விசையை இயக்கியவுடன் அந்தப் புலி, கர்ஜனையுடன் அந்த பிரிட்டிஷ் வீரனைக் கடித்துக் குதறும். வீரன் அலறுவான். புலியின் கர்ஜனையும் வீரனின் மரண ஓலமும் கூடிய இந்த இயந்திரப்புலி திப்புவுக்கு பிரிட்டிஷாரைப் பழிதீர்க்கும் எண்ணத்தை அவ்வப்போது நினைவூட்டிவந்தது. இந்த இயந்திரப் புலி ஒரு குறியீடு. அது திப்புவின் ஆழ்மனது. அது திப்புவைத் திப்புவுக்கு நினைவூட்டியபடியே இருந்தது. திப்புவின் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை வளர்த்துவந்தது. திப்புவின் இறப்பிற்குப் பின்னர் அது பிரிட்டிஷாரால் திருடப்பட்டு, இலண்டனுக்குக் கடத்தப்பட்டது. இப்போதும் அந்த இயந்திரப் புலி இலண்டனிலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார்.
ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப்போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார்.
தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும் போது நபி(ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு, ஒருதனி நபர தனது மொத்த வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்காக செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.
நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜருக்கு முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது.
இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து படித்தார். குர்ஆனை தானும் படித்து, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் படிக்குமாறு வலியுறுத்தினார்.தன் பிள்ளையை படிக்கவைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது கூற்று.
இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்புசுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000-க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒரு பன்மொழிப் புலவர். உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.
திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச்சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவுத் துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்த மண்ணில் வேரூன்ற விடமாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார்.
தமது மக்களின் சமுதாய,பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மதுவை காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும் என திப்பு (வருவாய்துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல்படுத்தினார்.
திப்பு சுல்தான் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு பிரிட்டிஷார் நடத்திய போர்களுக்குப் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள் பொருளுதவிச் செய்து வந்தனர். ( இன்றும் இவர்கள்தான் குஜராத்தில் இஸ்லாமிய விரோத சக்திகளுக்குத் துணை போகின்றனர்) ஆனால், வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றியவர் திப்புசுல்தான்.
அரசுக்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தன் அமைச்சரைக் கண்டித்த திப்புசுல்தான், “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். இந்தக்கேள்வியை நாம் இப்போது நம் அரசிடமும் கேட்கவேண்டும்.
பிரிட்டிஷார் விவசாயிகளைக் கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் திப்புசுல்தான் தடை செய்தார். பிரிட்டிஷார் பாலியல் தொழிலில் பணம் சம்பாதித்தபோது திப்புசுல்தான் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் பாலியல் தொழிலைத்தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளைக் கோயிலுக்குத் தேவதாசியாகத் தானமளிப்பதையும் தடை செய்தார்.
அடிமை விற்பனையைத் தடை செய்வதற்காகத் திப்புசுல்தான் ‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என்று ஆணை பிறப்பித்தார். வரதட்சணைக் கொடுமையும் சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளையும் திப்புசுல்தான் நீக்கினார்.
கேரளத்தில் நம்பூதிரிகள் கொண்டிருந்த ஆச்சாரப் பழக்கவழக்கத்தில் உள்ள தீய முறையை நீக்கவேண்டியும் தன் மக்கள் தூயவாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கிலும், “உங்களுக்கு மத்தியில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்” என்றார்.
கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தார் திப்புசுல்தான். இதை நான் எழுதிய மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறேன். ( பக்கம் 31 ).
மதச்சார்பின்றி அனைத்து மதத்தினருக்கும் அரசுப் பணத்தில் கொடைகள் வழங்கினார். இந்துக் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் பிராமண மடங்களுக்கும் முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும் திப்புசுல்தான் ஆண்டுதோறும் 2.34 லட்சம் வராகன்கள் செலவிட்டார்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்திருக்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் மூன்று லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.
விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்பு ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார்.
1790ல் காவிரியின் நடுவே அணைகட்ட அடிக்கல் நாட்டினார் திப்பு. . 1792ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப்பின் திப்புசுல்தானிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை தாளாமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தானின் ஆட்சிப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்ததை, 1796ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் மன்றோ தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.
“விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றினார்.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்குத் திப்புசுல்தான் எழுத்துப் பூர்வமாக ஆணையிட்டார்.
பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய திப்புசுல்தான், “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்று ஆணையிட்டார்.
இத்தனை நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆட்சிபுரிந்த திப்புசுல்தானின் மீது வரலாற்றாசிரியர்கள் மதவாத, இனவாதக் கருத்துக்களைத் தூவி அவரின் புகழுக்குக் களங்கம் விளைவித்தனர். சங்கும் சுட்டாலும் வெண்மைதரும் என்ற விதிக்கு ஏற்ப திப்புசுல்தானின் புகழ் இம்மி அளவும் குறையவில்லை.
இஸ்லாத்தை எல்லா நிலைகளிலும் போற்றிய திப்பு, ஒரு தொழுகையாளி மட்டுமல்ல. அழைப்புப் பணியிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். நெப்போலியனுக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார். தனது தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அரண்மனை அருகே பள்ளிவாசலை கட்டினார். அவர் கொல்லப்பட்ட பிறகு, எரிக்கப்பட்ட அவரது அரண்மனை நூலகத்தில் 44 குர்ஆன் பிரதிகளும், குர்ஆன் தப்ஸீர் நூல்களும், 41 ஹதீஸ் நூல்களும், 56 இஸ்லாமிய அறிவியல், வரலாறு, வானியல், சட்ட நூல்களும் கண்டெடுக்கப்பட்டன.
திப்பு தன் நாணயங்களுக்கு அரபி, பார்ஸி பெயர்களை சூட்டினார். அதில் கலீஃபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோரின் பெயர்களைச் சூட்டினார். தங்கம், வெள்ளி நாணயங்களிலும் கலீஃபாக்களின் பெயர்களை பொறித்தார். ஆனால் எதிலும் தனது பெயரை அவர் பொறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தானே. அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து பயன்படுத்தினார்.
இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“நான் பயிற்சிபெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக்கூடமான வாலோபஸீக்கு சென்றேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் வரவேற்பு கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒருபோர்க்களத்தின் மிகப்பெரிய ஓவியத்தைப் பார்த்தேன்.
அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்பு நடத்திய விடுதலைப்போர் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது.
திப்புவின் தாய்மண்ணே நினைவு கூர்வதற்கு தவறிய அவரது ராக்கெட் போர் நுட்பத்தை, உலகின் மறுகோடியில் நவீன ராக்கெட் நுட்பத்தின் உயர் தளமான நாசாவில் நினைவு கூரப்பட்டு ஓவியமாக நிற்பது எனக்கு ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், பெருமகிழ்ச்சியையும் தந்தது” என்று அப்துல்கலாம் எழுதியுள்ளார்.
புராணங்களையும் , நம்ப முடியாத சம்பவங்களையும் உண்மை நிகழ்வுகளைப் போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனைக் கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்திய அரசு திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்தது . இது ஒரு வரலாற்று துரோகம். இதற்காக வருத்தம் தெரிவிக்கக் கூட இந்த வக்கற்றவர்களுக்கு வழி தெரியவில்லை. இது திப்புவின் தியாகத்தின் மீது பூசப்பட்ட களங்கத்தின் காயாத சேறு.
அண்மையில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய அத்துமீறிய கொடும் ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான திப்புவின் போர்வாள் வாள் ரூபாய்3.5 கோடிக்கு இலண்டனில் ஏலமிடப் பட்டபோது , அதனை ஏலத்தில் எடுத்து ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கக்கூட இந்திய அரசுக்கு துப்பில்லை.
அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரை வார்க்கும் கும்பல்களுக்கு, திப்புவின் தியாக வாழ்க்கையின் பக்கங்கள் நிறைய நிறைய பாடங்கள் இருக்கின்றன. ஏகாதிபத்தியத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் கொடி பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையைக் காவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கும் திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. ஆனால் படித்துக் கொள்ளத்தான் ஆள் இல்லை.
'திப்பு'வின் தியாகங்கள் தொடரும் இன்ஷா அல்லாஹ்.
இபுராஹீம் அன்சாரி