Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாவால் நோவாதீர்... 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2011 | , , , ,

நாக்கு - அதை அடக்கு !!!

தலைப்பைக் கண்டதும் சாப்பாட்டு பிரியர்கள், பிரியமாக கோபப்படாதீங்க. ருசியான சாப்பாட்டுக்காக நாக்கை நாலு முழம் நீட்டி, நானூறு கிலோமீட்டர்ல ஒரு நல்ல சுவையான உணவு பறிமாறும் உணவகம் இருந்தால், உடனே கிளம்பிவிடுகிற டைப் ஆளுதான் நானும். இங்க சொல்லப்போவது வேற விடயமிது.

சிலரைக் கண நேரிடும்போது அவர்களிடம் "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டால் போதும்

"அது, இது, அப்படி இல்ல, இப்படி இல்ல" என்று தாழ்வான வார்த்தைகளையே கூறி நம்மை இல்லாமல் செய்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, கா.மூ.தொ கூட்டணியில் உட்கட்சி பொறுப்பிலிருக்கும் இந்த உறுப்பினர் வாரம் முழுவதும் பேசும் வார்த்தைகளை ஒன்றாகச் சேகரித்து கோர்த்தால் ஏறத்தாழ 500 பக்கம் உள்ள புத்தகத்தை தயார் செய்து விடலாம்… "தொன தொன ஆட்களுக்கு 500 பக்கம் உள்ள புத்தகமா?’ என்று சாவன்னா காக்கா சவூதில் இருந்து கேட்கிறது காதில் விழுகிறது.

“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.” - அல்குர்ஆன் (அத்தியாயம் 49:12) 

“உங்கள் நாவை பேணிக்கொள்ளுங்கள் “  - நபிமொழி

“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு." - திருவள்ளுவர்

“நாக்கு கத்தியை விட கூரானது “ - யாரோ

“முள்ளில்லாத நாக்குமா “ - நம்மூர்காரங்க

சுவையை அறிய தரும் நாக்கு சுட்டும் விடும், அதனால் பல நட்புகளும், உறவுகளும், செயல்களும் கெட்டுவிடும்.

ஒரு ஊரில் மூன்று தவளைகள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தன, அதில் ஒன்றுக்கு உணவு இல்லாவிட்டாலும் மற்றவர்கள் கொண்டு வந்ததைப் பங்குபோட்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்ந்து வந்தன (நம்மைபோல சீரியஸாக அல்ல எப்பவுமே ஒரு சில கவலைகள் ஏதாவது விதத்தில் நம்மை ஆட்டிப்படைத்து போலன்று)

அழகிய மாலை நேரத்தில் இவை மூன்றும், இரைக்காவும், இன்பதிற்காவும் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன. அப்பொழுது இலைகள் மூடிய கடின கற்கள் உள்ள பழமைய் வாய்ந்த பாழும் கிணற்றில் தெரியாமல் கால் வைத்ததில் இரண்டு தவளைகள் தவறி விழுந்தன. அதில் ஒன்று மட்டும் நூலிழையில் தப்பித்து நணபர்களைக் காப்பற்ற போராடியது.

கிணற்றில் விழுந்த இரண்டு தவளைகளும், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே, உணவில்லாத இக்கிணற்றிலிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்ற நோக்கில் தத்தித்தத்தி கிணற்றை விட்டு வெளிவர குதித்தன. மேல நின்று கொண்டிருந்த தவளை அவைகளை பார்த்து ‘குதிக்காதீர்கள், குதிப்பதால் நீங்கள் தட்டு தடுமாறி கிணற்றில் உள்ள கற்களால் காயமேற்படும் அல்லது தலையிலடித்து சாவதைவிட அங்கேய தங்கி விடுங்கள் என்று ஆரவாரமாக காட்டு கத்து கத்தியது. அதைக் காதில் வாங்காத இரண்டும் தவளைகளும் மீண்டும் மீண்டும் குதித்தது, அதில் ஒரு தவளை மேலே உள்ள தவளை உண்டாக்கிய பயத்துடன் கீழே பலமாக விழுந்ததில் அடிபட்டு மாய்ந்தது. மற்றொரு தவளை குதித்து குதித்து சாதித்தது அதன் பின்னர் கிணற்றுக்கு மேலே வந்து உயிர்க்காற்றை சுவாசித்தது.

மேலே இருந்த தவளை அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “ நான் வர வேண்டாம், குதிக்கவேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று கத்தியும், நீ எப்படி மேலே வந்தாய்” என்று கேட்க. 

அதற்கு மேலே தப்பித்து வந்த தவளை சொன்னது "நீ குதிக்க வேண்டாம் என்றா கத்தினாய் !!! எனக்கு காது கேட்காததால் நீ ஆரவாரமாக கத்தியது என்னை உற்சாகப் படுத்தி மேல வர செய்யத்தான் என்று நினைத்து உற்சாகத்துடனும் ,ஊக்கத்துடனும் குதித்தேன்,மேலே வந்துவிட்டேன்" என்றது.

ஆகையினால் இங்கே அறியப்படும் நியதி என்னவென்றால் “ சில சொற்கள் கொல்லும் வேறு சில சொற்கள் வெல்லும்” என்பதற்கேற்ப நல்ல சொற்களை நாவால் அடுத்தவர்களுக்கு சொல்லுங்கள் அது அவர்களுக்கு, ஊக்கமளிக்கும், பக்குவபடுத்தும், உங்களைப் பண்படுத்தும், வேண்டாத சொல்லை பிறருக்கு நீங்கள் சொன்னால் அது அவர்களை மட்டுபடுத்தும், மடமையாக்கும்.

நாவால் கெட்ட & சீரழிந்த குடும்பங்களையும், வாழ்க்கைகளையும் நிறைய பேசலாம் & எழுதலாம் ஆனால் நாம் உதாரணத்திற்காக சொல்லும் சில சம்வங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பாதித்துவிடும் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே மேற்சொன்ன உதரணத்தை சொல்லிக் காட்டினேன் ஆதால அவைகளை தவிர்த்திடுவோம்.

நாவை கட்டுக்குள் வைத்து பேணிக்கொள்வோமா நண்பர்களே !!! பேச வேண்டிய இடத்தில் அவசியமானதை பேச வேண்டியதை பேசினால் பிரச்சனை என்பதே வராது.

“உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது?”

“தரிகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது!” – என் எஸ் கே.

சிந்தனை & ஆக்கம்

- முகமது யாசிர்

ஊடக போதை ! 54

அதிரைநிருபர் | December 08, 2011 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பானவர்களுக்கு....
முகவுரை:
இன்று நேற்று என்றில்லாமல் நீண்ட காலமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலையில் உலகில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள் என்பதை நம்மில் பலர் அறிந்திருந்தாலும் அவைகளை பொருட்படுத்தாமல், பின் விளைவுகளை அலசி ஆராயாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றால் நாம் அடைந்து வரும் இன்னல்களுக்கு அளவே இல்லை. வருங்கால சந்ததியினரும் இந்த கேடுகெட்ட ஊடகங்களால் பல கொடிய இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சைத்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அநேக ஊடகங்களின் அட்டூழியங்களை அவ்வப்போது கட்டவிழ்த்து விடும் நிகழ்வுகளை வைத்து அலசி ஆராயும் விதமாக இந்த பதிவை தொடராக பதியலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
பொய்யை மற்றும் ஆபாசத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு செயலாற்றி வரும் உலக, இந்திய, தமிழ் ஊடகங்களை எதிர்த்திடும் அல்லது களையெடுக்கும் வேலையை நாம் செய்ய உணர்ச்சிகளின் வேகம் ஒரு புறமிருந்தாலும். அவ்வப்போது அதிரையில் இணைய மற்றும் தினசரி ஊடகத்துறையில் சாதனை படைக்க துடிக்கும் பலருக்கு ஊக்கமும், உற்சாகமும் தந்து நல்ல படிப்பினைகளுடன் கூடிய வழிகாட்டலுடன், யாருடைய மனதையும் புண்படுத்தாமல், மாறாக பண்படுத்தி. நட்புரீதியான விமர்சனங்களை எடுத்து வைத்து அவர்களை மெருகூட்டவும் ஒரு வழியை ஏற்படுத்தலாம் என்ற கோணத்திலும் இந்தப் பதிவு ஒரு தொடராக பயணிக்க உள்ளது.
ஊடகம் (தினசரி பத்திரிக்கைகள், வாரப்பத்திரிக்கைகள், மாதப்பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, சினிமா, இணையம், மின்னாடல் குழுமம்) என்ற போர்வையில் நடைபெரும் விரட்டியடிக்கப்பட்ட சைத்தானியத்தனத்துக்கும், முனாஃபிக்தனத்துக்கும் (நயவஞ்சகத்திற்கும்) சாட்டையடி கொடுக்கும்விதமாக (நமக்குள்) தனிமனிதச் சாடல்கள் எவ்விதத்திலும் கலந்துவிடாமல் அதே நேரத்தில் அழகிய பெயர்களைக் கொண்டு அல்லது அழைக்கும் பெயரே அழகென்றால் உங்களைப்பற்றிய தனிமின்னஞ்சல் அறிமுகம் செய்து கொண்டு அனைத்து வாசக நேசங்களும் மேலான கருத்துக்களை பதியலாம்.
அதிரை ஊடகங்கள்:
முதலில் வெளி ஊடகங்களை அவதானிக்கும் முன் இணைய ஊடகத்தில் அதிரைவாசிகளின் பங்கு எவ்வாறு உள்ளது?. வலைப்பூக்களின் எண்ணிக்கையும் அதனை கையாளும் விதமும், நுட்பமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏறிய விலையை குறைக்க அரசுகள் முழி பிதுங்குவதுபோல் எண்ணிக்கையை குறைப்பது சாத்தியமாகுமா என்பது கேள்விக் குறியே. தகவல்கள் / செய்திகளின் தரத்தை வைத்து நாமும் கனிசமான எண்ணிக்கையில் அதிரை வலைத்தளங்கள் / இணையதளங்களின் பக்கம் சென்று நமக்கு தேவையான நல்லவைகளை எடுத்துக் கொண்டு, நல்லவை அல்லாதது என்றறியப்படுபவைகளை அப்படியே ஒதுக்கி வைக்கிறோம்.

இது ஒரு புறமிருந்தாலும் போலியான புனைபெயர்களை விரும்பிய வகையில் வைத்துகொண்டு உண்மையின் / நேர்மையின் / சாடுவதற்கு ஒதுங்கும் நிழல்களாக வெகு சில சகோதரர்கள் ஏதோ சமூகத்தையும் ஊடகத்துறையிலும் மாற்றம் செய்யலாம் என்றும் துடிக்கிறார்கள். இது சரியா / தவறா என்பதை விரிவாகத்தான் பார்க்க வேண்டும்.
போலிப் புனைபெயர்களில் (தங்களை யாரென்றே தெரியப்படுத்தாதவர்கள்) எழுதுபவர்களாகட்டும், அப்படி எழுதுபவர்களை ஊக்குவிப்பவர்களாகட்டும். அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் அல்லது நல்ல / எதிரான கருத்துக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், முகம் / நிஜப் பெயர் தெரியாத நிழலாக கருத்துரையாடுவதால் பின்னூட்டத்தில் பின்னால் ஒட்டவும் / ஊக்கம் ஊட்டவும் செய்வதில் என்ன பயன் என்பதை உணர்ந்துதான் அவ்வாறு போலிப் புனைபெயர்களில் எழுதுகிறார்களா என்பது வினாவுக்குரியதே !
மற்றொரு பார்வையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நன்மையை நாடி இதுபோன்று போலியான புனைபெயர்களில் வலம் வருகிறோம் என்ற ஒரு வாதத்தை எடுத்துக் கொண்டால். உண்மையை ஒளிந்துக்கொண்டு எடுத்துச்சொல்ல இஸ்லாத்தில் அனுமதியுண்டா? அப்படியிருக்குமாயின் அதனைச் சான்றாக எடுத்துக் காட்டிவிட்டு போலியான புனைபெயரில் எழுதுவதில் நியாயம் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் போலி புனைபெயர்வாதிகளின் எழுத்துக்கள் நல்ல ரசனைக்காக படிப்பதற்கும் ஆராவரமாக இருக்கும்படியான நகைச்சுவையுடன் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் போலி புனைபெயரில் விழிப்புணர்வு என்பது நம்பகத் தனமையற்ற முற்றிலும் போலித்தனமான ஊடக நயவஞ்சகம் என்று சொல்லுவதை விட வேறு என்னதான் சொல்ல முடியும். மொத்தத்தில் நிழலோடு உரையடுவதால் நேர விரையமே மிச்சம்.
'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார் ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.

உண்மை விசுவாசி தன் நாவினாலோ அல்லது கரத்தாலோ சக முஸ்லீமுக்கு அநீதி இழைக்க மாட்டான் என்பது மேல் சொன்ன நபிமொழியின் மூலம் உணர்த்தப்படுகிறது.
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்;  (அவனே) மனிதர்களின் அரசன்;  (அவனே) மனிதர்களின் நாயன்; பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்); அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்;  (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.  அல்குர்ஆன் 114:1 முதல் 114:6 வரை.
உண்மையான இறை விசுவாசி சைத்தனின் செயலான ஒழிந்து பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்க மாட்டான் என்பது மேற் சொன்ன திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் உணர்த்தப்படுவதை கவனிக்கலாம். நன்மை செய்கிறோம் என்றும் விழிப்புணர்வு செய்கிறோம் என்றும் சொல்லி மக்களிடையே வீண் குழப்பம் ஏற்படுத்தி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நம்பகத் தனமையை நிலைநாட்டாமல் போலிப்பெயர்களில் வலம் வருபவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சைத்தானின் சூழ்ச்சியில் சிக்கியிருக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'  மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி Volume :2 Book :43
இரட்டை முகத்தவன் (மனிதர்களின் மிகவும் மேசமானவன்), விவாதம் புரிந்தால் நேர்மை தவறி தனிமனித தாக்குதல் செய்பவன்(நயவஞ்சகத்தனம்), தேவையாற்ற வீண் பேச்சால் அதிகம் கேள்வி கேட்பவன் (விலக்கப்பட்ட செயல்) என்று மேலே சொல்ல பட்ட ஹதீஸ்களுடன் வலைத்தளங்களில் வெளியிடும் / அனுமதிக்கப்படும் சில போலிப் புனைபெயர் பின்னூட்டங்களை சற்றே அலசிப் பார்த்தால் மேற் சொன்ன மூன்று தன்மைகளில் ஒன்றோ அல்லது மூன்றுமோ ஒத்துபோவதை நம்மால் உணராமல் இல்லை. இது போன்ற வீண் சந்தேகங்களை குழப்பங்கள் விளைவிக்கும் போலி புனைபெயர்வாதிகளை ஊக்கப்படுத்துவதும் நேர விரயமே என்பதும் தெளிவே.
அழகிய பெயர்களை விரும்புபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மேல் சொன்ன செய்திகளை மனதில் கொண்டு போலி புனை பெயர்வாதிகளின் நல்ல துணைப் பெயருடைய வாதிகளாக மாற்றிட, கருத்துக்களை நியாயமாக பரிமாறி நம் உண்மை பெயர்களில் அல்லது (அறிமுகப்படுத்தப்பட்ட) அடையாளப் பெயர்களில் வந்து நாமும் தெளிவுற்று மற்றவர்களையும் முடிந்தவரை தெளிவுற செய்யலாம். இது முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் நண்மையின் பக்கம் அழைப்பதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
முக்கியமாக ஒன்றினை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் நம் சமுதாயச் சகோதரர்கள் அனைவரும் சமுதாய பற்றுடையவர்களே, அவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களே. அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவ்ன். வேதனைக்குறிய விஷயம் நம் சமுதாயச் சகோதரர்களின் பெயர்களிலேயே, ம்மைப் போன்றே முகமுன் கூறியே (காவிக்)குரோதக் கும்பல் குழப்பங்களை விளைவிக்கும் நோக்குடன் நம்மிடைய ஒன்றுவிட்டு நன்றாக பழகி நம் வலைத்தளங்களிருந்தே தகவல்களை திரட்டி நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதையும் சமீபத்தில் கண்டறியப்பட்டது தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போன்றே நிகழ்ந்தது. இவைகளை மனதில் நிறுத்தி நெஞ்சுரம் உடையவர்களாக நாம் நிமிர்ந்து நின்று ஊடக போதை போக்கி அங்கே இலகுவாக வலம் வருவோம், அந்தக் (காவிக்)கும்பலின் சதிவிளையாட்டை முறியடிப்போம் கைகோர்ப்போம்.
நம்மில் போலிப்பெயர் பின்னூட்டங்களின் வாயிலாக அறிந்தோ அறியாமலோ குழப்பங்களோ / சிந்தனைச் சிதறல்களிலோ ஈடுபட்டிருந்தால் அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்திக் கொள்வோமாக. போலி புனைபெயர்கள் வாயிலாக உண்டாகும் குழப்பங்களால் பாவ செயல்களிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக என்று பிரார்த்தனை செய்தவர்களாக இந்த பதிவை நிறைவு செய்கிறோம்.
இணைய தொழில் நுட்பத்தால் இணையத்தில் அறியமுடியாதது என்று இருப்பது அரிதே என்று சொல்லும் அளவுக்கு நுட்பங்கள் நிறைந்திருக்கும் இக்கால கட்டத்தில்.இணையத்தின் தொடுப்பு எங்கிருக்கிறது அதன் மடிப்புகள் எங்கெல்லாம் மயங்குகிறது, அவைகள் எவ்வாறு செல்கிறது அடுத்து எங்கே வைக்க இருக்கிறது வேட்டு. இப்படியாக புரியாதவர்களுக்கு சூன்யமாக இருக்கும் வலைச் சிக்கலில் சிக்கியவர்களை மீட்டெப்பதும் சாத்தியமே அதனை அடுத்த பதிவுகளில் காணலாம் இன்ஷா அல்லாஹ்.
- அதிரைநிருபர் குழு

உணவுக்கும் நானே; சுவாசத்துக்கும் நானே ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | December 06, 2011 | , , , , , ,

உணவு, ஆக்சிஜன் - நாம் உயிர் வாழ்வதற்கு இவைகளும் இன்றியமையாதது என்பது உங்களுக்குத் தெரியும். உணவு, உணவுக் குழாயின் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. ஆக்சிஜன், சுவாசக் குழாயின் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இதில் இரண்டு குழாய்களுமே தொண்டையின் வழியாகத்தான் பயணப்படுகின்றன என்பதைத்தான் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்(!!)

ஆக, உணவும் ஆக்சிஜனும் உடலுக்குள் செல்ல தொண்டையும் ஒரு முக்கியமான பாதையாக இருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் உணவுப் பாதையிலும் சுவாசப்பாதையிலும் தொண்டையும் ஓரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.

இதோடு தொண்டையின் வேலை முடிவதில்லை. உணவு, சுவாசக் குழாய்க்குள் போகாமல், சுவாசக் காற்று உணவுக் குழாய்க்குள் போகாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம். அந்த சிறப்பான பணியையும் பொறுப்புடன் நிறைவேற்றுவது திருவாளர் / திருமதி (செல்வன் / செல்வி) தொண்டையார்தான். பொதுவாக, சுவாசப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும். உணவுப்பாதை எப்போதும் மூடியே இருக்கும், உணவு சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும், உணவுப் பாதை திறக்கும்.

உணவு உள்ளே போனதும் உணவுப் பாதை மீண்டும் மூடிக் கொள்ளும், சுவாசப்பாதை திறக்கும். இந்த வேலையை EPGLOTTIS என்ற பாகம் செய்கிறது. டான்சில்ஸ் என்ற குட்டிச் சதையும் இதில் பங்கேற்கிறது.

உணவுப் போக்குவரத்து நடைபெறும்போது (இங்கேயும் நம்மில் சிலர் ஒரு கவலம் உட்சென்று இறங்குவதற்குள் அடுத்தடுத்து உள்ளே அனுப்பி டிராஃபிக் ஜாம் ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்) சுவாசப்பாதையின் வாயிலை மூடவும், சுவாசப் போக்குவரத்து நடக்கும்போது உணவுக் குழாயின் வாயிலை மூடவும் இவை பயன்படுகின்றன. இதனால், சுவாசக் குழாயில் உணவு செல்லாமல் தடுக்கப்படும். அதேபோல், காற்றும் உணவுக் குழாயில் செல்லாமல் இருக்கும், ஆனால், சாப்பிடும்போது பேசினால், பேசுவதற்காக சுவாசக் குழாய் திறக்கும். இங்கே சிக்னலில் சிக்கல் வந்தால் "யாரோ நினைக்கிறாங்கமா" என்ற ஸ்லோகன் அருகிலிருப்பவரிடமிருந்து தானாக வரும் !

இதன் காரணமாக, சிலசமயம், சுவாசக் குழாயில் உணவு நுழைந்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. இதனால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கத்தான், உணவை சுவாசக் குழாய் வெளியே பலவந்தமாகத் தள்ளும். இதைத்தான் "புரையேறுதல்" எனக் கூறுகிறோம். இதனால் சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படும்.

பொதுவாக, பாடகர்களும், பேச்சாளர்களும் தங்களது தொண்டையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள், பராமரிப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தில் எங்களுக்குச் சம்மதம் இல்லை என்று மற்றவர்கள் ஒதுங்க முடியாது. ஏனெனில், நம் ஒவ்வொருவருக்கும் தொண்டை மிகமிக முக்கியம். எட்டுக்கட்டை ஸ்ருதி பாடுவது இருக்கட்டும், பிறர் காதுகளில் எட்டும் வகையில் பேசுவதற்காவது தொண்டை தேவைப்படுமே.

தொண்டையில் உணவுக் குழாயும், சுவாசக் குழாயும் சந்தித்துக் கொள்ளும் இடத்துக்கு மிக அருகில் உள்ள குரல்வளைதான் நாம் பேசுவதற்கான ஆதாரம். ஆனால், அங்கிருந்து எழும்பும் ஒலியை மேம்படுத்தி, பாலீஷ் போட்டு, இனிமையான குரலாக, கரகர குரலாக வெளிப்படுத்த வாய், கன்னம், சைனஸ் அறைகள் போன்றவற்றோடு தொண்டையும் முக்கியமாகப் பயன்படுகிறது.

தொண்டைக்குள் தாகத்துக்கும்கூட மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நம் அனைவருக்குமே எப்போதாவது தாக உணர்வு ஏற்படுவது இயல்புதான். முதலில் தண்ணீரின் அவசியம் புரிந்தால்தான் தாகத்தின் அருமையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூன்று வாரங்கள் தண்ணீர் குடிக்காமல் ஒருவர் இருந்தால் அவர் இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகம்.

நம் உடலில் பொதுவாக, 47 லிட்டர் தண்ணீர் இருக்கிறது. தசைகளில் முக்கால்வாசி தண்ணீர்தான் அடங்கியிருக்கிறது. கல்லீரலில் 70 சதவீதம் தண்ணீரே. சிறுநீரகத்தில் 83 சதவீதம், மூளையில் 79 சதவீதம் என்ற அளவில் தண்ணீர் இருக்கிறது. வாயும் தொண்டையும், வறண்டுபோனால் தாகம் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அச்ச உணர்ச்சிகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகும் சிலருக்கு நாக்கும் தொண்டையும் வறண்டு போகலாம் அல்லது எச்சில் ஊறும் வேகம் திடீரென்று குறைவாக இருக்கலாம். இதனாலும் வறட்சி உண்டாகி இருக்கக்கூடும். கொஞ்சம் எலுமிச்சை ஜூஸை குடித்தால் எச்சில் மீண்டும் வழக்கம்போல் சுரக்கும்.

மிக அதிகமாக எச்சில் சுரந்தால் (அல்லது சுரக்க வைக்கப்பட்டால்) தாகம் அடங்கிவிடுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். எச்சில் சுரந்து வயிறு நிரம்பி விட்டால்கூட தாகம் ஏற்படலாம்.

சரி, இப்போது அடிப்படைக் கேள்விகளுக்கு வருவோம். 

"தாகம் ஏன் ஏற்படுகிறது. ?"

"நம் உடலில் உள்ள உப்பு, சர்க்கரை ஆகிய இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் இந்த விகிதம் மாறி உப்பின் அளவு (தண்ணீரோடு ஒப்பிடும்போது) அதிகமானால் தாகம் எடுக்கும்."

நம் மூளையில் தாக மையம் (Thirst Center) என்ற பகுதி உண்டு. இது நம் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். உப்பின் சதவீதம் அதிகமானால், உடனே தொண்டையின் பின்பக்கத்தில் உள்ள நரம்புகளுக்குத் தகவலைத் தெரிவிக்கும். அந்தத் தகவல் மூளையை எட்டும். இப்படி தகவல் பரிமாற்றங்கள் நடக்கும்போதுதான் நாம் தாகத்தை உணர்கிறோம். தண்ணீர் குடித்து உப்பு - தண்ணீர் விகிதத்தை சரி செய்கிறோம்.

தொண்டையின் தொண்டு பற்றி விரிவாகப் பார்த்தாகிவிட்டது. இனி, தொண்டையில் ஏற்படும் சின்னச் சின்ன தொந்தரவுகளையும் வரிசையாகப் பார்க்கலாம்.

அங்கே இருமல், விக்கல் தும்மல் என்ற தொண்டர் அணியின் அணிவகுப்பை அடுத்தடுத்து பார்க்கலாம்....

சொடுக்குத் தகவல்:-

அடிக்கடி ஏப்பம்! ஏற்படக் காரணம் என்ன ? 

உணவுக் குழாய் உள்ளே காற்று இருப்பதனால் ஏப்பம் வருகிறது. சாப்பிடும்போது அதிகமாகப் பேசுவது, கரிய மில வாயு கலந்த பானங்களை குடிப்பது, புகைப்பிடித்தல், இவற்றி ஏதாவது ஏப்பம் வரக் காரணமாக இருக்கும். வாயிலும், தொண்டைக் குழியிலும் இருக்கும் காற்று, வயிற்றுக்கும் குடலுக்கும் செல்லாமல் வாயின் வழியாக ஏப்பமாக வருகிறது. சாப்பிடும்போது அதிகமாக பேச வேண்டாம். குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். புகைப் பழகத்தில் இருந்து மீள வேண்டும். இவற்றைச் செய்தாலே ஏப்பம் வருவது பெரும்பாலும் நின்றுவிடும்.

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டனி.


நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.

வயசு வந்து போச்சு.... 26

அதிரைநிருபர் பதிப்பகம் | December 06, 2011 | , , ,


வயசு வந்து போச்சு
மனசு நொந்து போச்சு
ஆண்டுகள் பெருகிப் போச்சு
ஆயுளும் அருகிப் போச்சு
உணர்வுகள் கருகிப் போச்சு
கண்களும் அருவியாச்சு

வரன் பிச்சைக்காரர்களால்
சவரன் இச்சைக்காரர்களால்
முதிர்க்ன்னி நிலையில்
வாழ்ந்தோம்
புதிர்ப்பின்னிய வலையில்
வீழ்ந்தோம்

நரையும் வந்தாச்சு
வாழ்க்கை நாடகத்
திரையும் விழுந்தாச்சு
அலை ஓய்வது எப்போது?
நிலை மாறுவது எப்போது?

சாதியும் சவரனும்
பிரதிவாதி ஆன போது
நீதியும் கிடைப்பது எப்போது?
நாதியற்றோரைக் காணாத போது !

விடையறியா வினாவாக
நடைபெறா கனாவாக
விடியலறியா இரவாக
மடைதிறக்கா அணையாக.
தடைபட்டே அணைகின்றது

உணர்வுகளின் வெப்பம்
உருவாக்குமோ தப்பும்?
உன்னுடைய சுகத்துக்கு
பெண்ணிடம் பிச்சைக் கேட்கும்
உன்னுடைய ஆண்மைக்கு
என்ன பெயர் உலகம் வைக்கும்?

ஏக்கப் பெருமூச்சின்
தாக்கங்களே உங்களைத்
தாக்குகின்றன
சுனாமி, பூகம்பங்களாய்
இன்னுமேன் உணரவில்லை
பினாமி பூதங்களே

முதியோர் இல்லங்கட்கு
மூடுவிழா நடாத்த
புதியதோர் உலகம் காண
புறப்பட்ட கவிஞர்காள்!
முதிர்கன்னிகளின் இல்லங்கள்
புதியதாய் முளைப்பதை
பதிவு செய்யுங்கள்

மேற்காணுப்வைகள் புதுக்கவிதை வாசகர்க்ட்காக
கீழ்க்காணுப்வைகள் மரபுப்பா நேசகர்கட்காக

உண்ண வுணவு முடுத்த
       உடையு மிருக்க வீடும்
திண்ண மாய்நீ தராமல் போனால்
     திறமை மிக்க ஆணாய்
மண்ணில் வாழ்தல் வீணாய்
     மதிப்பி ழந்து போவாய்
எண்ணி வரனைப் பேசு
     என்றன் வயதுப் போச்சு


குறிப்பு: சீர்கள் கொடுக்க இயலாததால் வருத்தம்- அதனால்
                    ஆறு மாச்சீர்கள் கொண்ட ஆசிரிய விருத்தம்

- “கவியன்பன்” கலாம்

இடிப்பும்! நடிப்பும்! படிப்பும்! - டிசம்பர் 6 9

அதிரைநிருபர் | December 06, 2011 | , ,

பாபர் மசூதி இடிப்பு:

பாபர் மசூதியை இடித்த மதவெறியர்கள் இந்தியாவின் இறையாண்மையையும் சேர்த்தே அன்று இடித்தார்கள். ஆனால் இழப்பு ஏற்பட்டது என்னவோ முஸ்லிம்களுக்கு மட்டுமே!. இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த ஒரு எழவும் ஏற்படவில்லை!!. காரணம் முஸ்லிம்களின் அமைதி!. முஸ்லிம்களும் பதிலுக்கு நாங்களும் கரசேவை செய்வோம் என்று கூறி இந்தியாவில் உள்ள எந்த கோயிலையும் கரசேவை செய்ய செல்லவில்லை. செல்லவும் மாட்டார்கள். ஏனெனில் மத வழிபாட்டு தளங்களை கண்ணியபடுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய கட்டளை.

பாபர் மசூதி வழக்கு தொடர்பான தீர்ப்பின் மூலம், ஏதோ இந்தியாவே ரணகலமாக ஆகப்போவதாக கூறி ஒரு மாயை ஏற்படுத்தி ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர். ஆனால் மூன்று காமெடியர்கள் வழங்கிய தீர்ப்பு, முஸ்லிம்களுக்கு பாதகமாக வந்தாலும் அதே அமைதியை மீண்டும் முஸ்லிம்கள் காட்டி, தங்களுக்கு தீவிரவாதத்தில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்று பறைசாட்டினர். அன்றே உள்துறை அமைச்சர் முஸ்லிம்களின் அமைதியை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. 

 
அநீதியான தீர்ப்பு வெளியான பின்பும், மீண்டும் இந்திய நாட்டு சட்டதிட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, மேல்முறையீடு செய்து மீண்டும் இந்த சமூகம் காத்து இருக்கின்றது. இந்திய சுப்ரீம்கோர்ட், அஹமதாபாத் நீதிமன்றத்தில் என்ன நடக்கின்றது?. குரங்குகள் அப்பத்தை பங்கு போட்டது போல பாபர் மசூதியை பங்குபோட யார் சொன்னது?. என்று கேட்ட சாட்டையடி கேள்விகள், இன்னும் இந்த நாட்டில் நீதி சாகவில்லை, மாறாக அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கின்றது என்று விழி மேல் விழிவைத்து முஸ்லிம் சமூகம் காத்துக்கொண்டிருகின்றது.

அரசியல்வாதிகளின் நடிப்பு:
மசூதி இடிக்கப்பட்டதை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும், அதை ஓட்டு பொறுக்கும் அரசியல் நோக்கோடு பார்க்கின்றார்களே தவிர, அநீதி இழைக்கப்பட்ட சமூகத்திற்கு உடனே தீர்வை ஏற்படுத்தி தர எவரும் முன்வருவதில்லை. காரணம் கேட்டால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று கூறுவார்கள். அட அரசியல்அநியாக்க்காரர்களே, வழக்குமன்றத்தில் உள்ள மசூதி வழக்கை காட்டி ஓட்டு பொறுக்க முடிந்த உங்களால், ஆட்சிக்கு வந்ததும் அதை தீர்க்க முடியவில்லையா?. மசூதி இடிக்கப்பட்டதும் ஓடி ஒழிந்த நரசிம்மராவ் முதல், முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சோனியா வரை இன்னும் துரோகம் தொடரவே செய்கின்றது. 

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வரும்!. வழக்கம் போல அரசியல் வா(வியா)திகள் பாராளுமன்றத்தில் கோஷம் போடுவார்கள்!!. பின் பாராளுமன்றம் பிற்பகல்வரை ஒத்திவைக்கப்படும். பின் இந்த சம்பிரதாயம் அடுத்த வருடத்திற்கும் ஒத்தி வைக்கப்படும். இந்த வருடமும் அதேதான் நடக்கப்போகின்றது. இதுதான் அரசியல் வியாதிகளும், ஆளும் வர்க்கமும் நமக்கு காட்டும் பாடம். அதில் எந்த வித மாற்றமும் இருக்கப்போவதில்லை!.

முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பு:
முஸ்லிம்கள் இந்தியாவில் பாபர் மசூதி விவகாரத்தில் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றால் இல்லை. இடஒதுக்கீடு, அரசியல் அறியாமை, கல்வியறிவு இல்லாமை, பொய் வழக்குகள், பொருளாதாரத்தில் முன்னேற்றமின்மை, குஜராத் போன்ற மாநிலங்களில் வாழ்வுரிமையும் பாதுகாப்பின்மையும் என இந்த பட்டியல் நீளும். இந்த சமூகம் எல்லாவகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதைவிட வஞ்சிக்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். சுதந்திரத்திற்கு பாடுபட்ட இனம் இன்று அடிமைப்பட்டு கிடக்கின்றது. இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?. முஸ்லிம்கள் தங்களை தாங்களே முதலில் உணரவேண்டும். 

வெள்ளையனிடம் அடிமைபட்டு கிடந்த இந்தியாவிற்கும், சுதந்திர இந்தியாவிற்கும் இடையில் முஸ்லிம்களின் வாழ்வில் என்ன ஏற்பட்டது என்று உணரவேண்டும். எங்கே நம் உரிமையை இழக்க ஆரம்பித்தோம் என்று அறியவேண்டும்.

அரசியல், மதவாத சூழ்ச்சியில், மீடியாக்களின் பொய்யில் சிக்குன்டதை உணரவேண்டும். நாம் வந்தேறிகள் இல்லை. இந்த தேசத்தின் உண்மையான குடிமக்கள். மற்ற இனத்திற்கு கிடைக்கும் அதே உரிமையும் அதிகாரமும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இனி கிடைக்க வேண்டும். இவ்வாறு உணரும் நாள் வரும்வரை நாம் அடிமைப்பட்டும், அதிகாரம் இழந்தும் கிடக்கவேண்டியே வரும்.

பாபர் மசூதி போராட்டத்தில் கூட ஆளுக்கொரு திசையில் போராட்டம் நடத்தி நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொண்டே உள்ளோம். ஒரு ஊரில், ஒரு மாவட்டத்தில் நான்கு இயக்கங்களின் தனி தனி போராட்டங்கள். ஒரு மாநிலத்தில் ஒரு இயக்கம் கூட்டம் நடத்தினால் அடுத்த மாநிலத்தில் வேறு கொடியுடன் வேறு இயக்கத்தின்போராட்டம். ஒவ்வொரு கூட்டத்திற்கும் பத்து நூறு பேர்கள். இவ்வாறு சென்றால் பின் நம் வலிமையை எங்கே எப்படி காட்டமுடியும்?.

ஆகையால் முதலில் முஸ்லிம்கள் மாநில அளவில் ஒன்றுபட்டு பின் தேசிய அளவில் ஒரே அணியின் தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சாதாரணமானது அல்ல. உலக அளவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!. பின் உங்கள் உரிமைகளை அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் வெல்லுங்கள்!!.

பாபர் மசூதியை பொறுத்தவரையில் நம் சக்திக்கு உட்பட்டு நாம் போராட்டம், சட்ட நடவடிக்கை என்று சென்றாலும், நமக்கு தீர்வு இறைவனிடம் இருந்தே கிடைக்க வேண்டும். அவன் அருள் இல்லையென்றால் நிச்சயம் நம்மால் வெற்றிபெற முடியாது. எனவே ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் முறையிட்டு யா அல்லாஹ், இது உன்னுடைய இல்லம். உன்னை வழிபாடு செய்த இல்லம். இன்று நாசகார நாய்களினால் அது பாழ்பட்டு கிடக்கின்றது. மீண்டும் நாங்கள் அதே இடத்தில் உன்னை வழிபடவும், அதற்கான வெற்றியையும் நீயே எங்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கையை வையுங்கள். இறைவனின் நீதிமன்றத்தை விட உலகத்தில் வேறு எங்குமே சிறந்த நீதியும் நீதிமன்றங்களும் இல்லை.

-- அதிரை முஜீப்

வெந்நீர் ஒத்தடம் - இரண்டாம் பாகம் 20

அதிரைநிருபர் | December 05, 2011 | , , ,

இந்தப் பதிவை வாசிக்கும் முன், இந்தச் சுட்டியைச் சொடுக்கி எனது ‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன பழைய நாவல் படிக்கும்’ அயர்ச்சி நேராமல் தவிர்க்கலாம். 

என் வலது கை சுட்டு விரலைப்பற்றிப் புகழ்ந்து நானே சொன்னால் நல்லாயிருக்காது. அவ்வளவு அழகாக இருக்கும்.  வெண்டைக்காயைப் போல நீண்டு, ஆர்டர் கொடுத்து செதுக்கி வாங்கியதுபோல கவர்ச்சியாய் மிருதுவாய் இருக்கும்.  கொஞ்சம் மருதாணி இட்டு நகத்தின் நுனியை பிறைபோல நருக்கி ரோஸ் நிறத்தில் நகச்சாயம் பூசிவைத்தால், கூரான கிருதா வைத்த இளைஞர்கள் வந்து பொண்ணு கேட்கும் அளவுக்கு அம்சமாயிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 அப்படியாகப்பட்ட என் செல்ல விரல் ஒரு நான்கு மாதங்களாக என்னைப் பாடாப் படுத்தி எடுத்துவிட்டது. ‘சொந்தக்கதை சோகக்கதையையெல்லாம் எங்களுக்கு ஏன்யா சொல்ல வந்தே’ என்றெல்லாம் கேட்கப்படாது.  என் அனுபவம் ஒரு பாடம் என்பதால், தொட்டுப்பார்த்துதான் தீ சுடும் என்று அறிய வேண்டியதில்லை அல்லவா? அதுபோல உங்களுக்கு ஏதும் எனக்கு நேர்ந்தமாதிரி நடந்துவிடக்கூடாது எனும் நல்லெண்ணமும் அக்கறையும்தான்.

இனி என் அனுபவங்களோடு தொடருவோம்.

 ஓர் அடையாளம் நினைவில்லாத காலைப்பொழுதில் வழக்கம்போல் தானாக எழுந்துவிடும் என்னைத் தட்டி எழுப்பியது வெற்றி என்ற வலி (விண்ணென்று வலித்ததாய் ஆங்கிலக் கலப்போடு எழுத என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம்).

தூக்கத்தில் எப்படியோ சுட்டுவிரலின் (சுண்டுவிரலல்ல) நுனி மூட்டில் வலித்ததால், பினாங்குக்காரவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து ரோகத்துக்கும் கைகண்ட நிவாரணியாக அனைத்து இயக்கங்களாலும்(?) ஏற்றுக்கொள்ளப்பட்ட கோடாலித்தைலத்தை தடவவும் வலி அசடு வழிந்து, எங்கும்மா சொல்வதுபோல் “நீ இரு நான் போறேன்னு” போச்சு. போயிந்தி. சலா கயா. இட்ஸ் கான் மேன்!
வளவளக்காமல் நடந்தவற்றை பட்டியலிட்டுவிடுகிறேன்.

டாக்டர் நம்பர் 01: சாட்ஷாத் நானேதான். வலிக்கும்போதெல்லாம் வருடுவது, தைலம் தேய்ப்பது என்று விரலை ஏய்த்தே 2 மாதங்களைக் கடத்தி விட்டேன்.  ஒவ்வொரு முறையும் ஆஃப்டர் ஆல் ஒரு விரலின் நுனிதானே என்று அலட்சியப்படுத்தியும் வந்தேன்.

டாக்டர் நம்பர் 02: என் மச்சானின் மகன். என் உம்மாவின் கட்டளைக்குட்பட்டு (கோடாலிச்சாப்புக்கே கேக்கலேன்னா இது சுலுக்குத்தான். ரெட்டப்பிள்ளை வழிச்சி விட்டா சுலுக்குப் போயிடும் வாப்பா) என் விரலைப்பிடித்து,

 “அன்னிக்கு பரீட்சைல 5 மார்க் குறைஞ்சதற்கு சத்தம் போட்டியல்ல சாச்சா” 

என்பதுபோலொரு பார்வையைக் கண்ணில் தேக்கி, என் விரலை நசுக்கியும் பிதுக்கியும் இழுத்தும் வழைத்தும் விரலைத் தவிர மற்ற என் உடம்பு முழுவதிலும் இருந்து சுலுக்கு எடுத்து விட்டான்.  அவன் சிகிச்சை முடிந்து கிருத்தியாக 2 மணி நேரம் கழித்து என் விரல் நுனி, சொல்லவே வேதனையாக இருக்கிறது, அந்தக் காலத்திலே சுடப்படும் போலீஸ் பனியான் மாதிரி உப்பி, விரலுக்கேத்த வீக்கமெனும் கோட்பாடுகளையெல்லாம் கடந்து வீங்கி பளபளவென வெடிக்கக் காத்திருக்கும் பலூன் போல மாறிப்போய்விட்டிருந்தது. பக்கத்திலே சிறுவர் சிறுமியர் யாரும் இருந்திருந்தால் வெடித்தும் காட்டியிருக்குமோ என்னவோ. (சிறுவர்களிடம் வெடிக்காத பலூனும் சண்டையிலே கிழிபடாத சட்டையும் எந்த ஊர்லே இருக்கு).

டாக்டர் நம்பர் 03: என் மாமி.

உம்மா பயந்து போய், வழக்கம்போல அழுது,  தன் கைகண்ட வைத்தியரான என் மாமியிடம் ‘ரோசனை’ கேட்க, அந்தகால ப்ளஸ் 2வாகிய மாமி, தன் டிஃபால்ட் நிவாரணங்களில் ஒன்றான மஞ்சளை வைத்து கட்டி, “காலைல சரியாயிடும், போய்ப் படுங்க மருமகனே” என்று சொன்னார்கள்.

வலி நிவாரணி ஏதும் எடுத்துக் கொள்ளாததால் இரவு முழுதும் “வெற்றி, வெற்றி” என்று வலித்ததால் தூங்காமல் இருந்தவனை காலையில் உம்மா எழுப்பினார்கள்!?. மஞ்சத்தில்! படுத்திருந்த… அதாவது மஞ்சளில் படுத்தி வைத்திருந்த என் விரல் நுனி மசாலாவில் ஊரிய ரால் மாதிரி மவுனமாக அழுதுகொண்டிருந்தது.  இதுக்குமேல் வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என்று சுயேட்சையாக தீர்மானித்த உம்மா உடனே என் விரலைக் காரில் ஏற்ற நானும் கூட போகவேன்டியதாயிற்று.

டாக்டர் நம்பர் 04: எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான டாக்டர் ராஜூ அவர்கள்: நானும் உம்மாவும் ஒன்றாகப் போக, 

“நேத்துத்தானே வந்திய, இப்ப என்ன?” என்று கேட்க, “எனக்கில்ல வாப்பா (எங்கம்மவுக்கு எல்லா ஆண்களும் பாசம் மிக்க ‘வாப்பா’ தான்) என் பிள்ளைக்கு” என்று விரலைப் பிடித்து காட்டினார்கள்.  டாக்டர் மேலே சொல்லப்பட்டக் கதையெல்லாம் கேட்டுக்கொண்டே அனிச்சையாக மூன்று நாட்களுக்கு ஆன்ட்டி பயாட்டிக்கும் சூ.பட்டையிலே ஓர் ஊசியும் போட்டுவிட்டு கடமையே கண்ணாயினார்.  விடுமுறையும் முடிந்துவிட்டதால் மேற்கொண்டு அவரிடம் காட்ட முடியாமல் (நான் ஊசி போட்ட இடத்தைச் சொல்லவில்லை) திரும்பி ஷார்ஜா வந்துவிட்டேன்.

அதற்குப்பிறகு என் விரல் என்ன நினைத்ததோ, நாணம் கொண்ட மணப்பெண்போல தலை சாய்த்ததைக் கண்டு பயந்துபோய் இங்குள்ள டாக்டரை அண்டினேன்,

டாக்டர் நம்பர் 05: மழமழவென மழித்த முகத்தோடு ஒரு மலையாள மருத்துவன் (மரியாதை கொடுத்து மருத்துவர் என்று விளிக்க ஆயாளுக்கு அறுகதை இல்லை). ஏதோ படப்பிடிப்பின் நடுவே எழுந்து வந்ததுபோல நேர்த்தியாய் தோற்றமளிப்பதிலேயே குறியாயிருந்தான். “இது இப்ப க்ரோனிக் ஆயிடிச்சி” என்று இரத்தமெல்லாம் சோதித்துவிட்டு எக்ஸ்ரேயெல்லாம் பார்த்துவிட்டு “ரெண்டு வாரத்திற்கு மருந்து சாப்பிடு. சரியாகலேன்னா அப்புறம் இது ரெமொட்டோய்ட் அர்தரைட்டீஸாக (Rheumatoid Arthritis) இருக்க வாய்ப்புண்டு” என்றான். ஆர் ஏ (இனி இப்படி இதை சுருக்கமாக அழைப்போம்) என்றால் என்னவென்று தெரியாத நான், “அப்படீன்னா இதுக்கு குணமில்லையா? வளைந்த விரல் நிமிராதா?” என வினவ, அவன் கொடுத்த அதிர்ச்சியோடு வெளியேறிய நான் எழுதியதுதான் “சற்றே பொறுக்கவும்”.  

அந்த நாசமாப்போனவன் சொன்னான், “சுண்டு விரலில் சிறிய வளைவுதானே. விட்டுவிடு. இது ஆர் ஏ எனும்பட்சத்தில் மேற்கொண்டு பரவாமல் இருக்க ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ” என்று பயம் காட்டிவிட்டு தமக்குக் கொடுக்கப்பட்ட வசனத்தைப் பேசி முடித்துவிட்ட தோரணையில் மெளனித்தான்.

வீட்டுக்கு வந்த நான் ஆர் ஏ என்றால் என்னவென்று கூகில் அண்ணாத்தைகிட்ட கேட்க அதன் விளக்கம் தூக்கி வாரிப்போட்டது. ஆர் ஏவைப் படம் வரைந்து பாகங்களைக் குறித்து தமிழில் “முடக்கு வாதம்” என்றது. எனக்கா முடக்கு வாதம் என்று மனசு செத்துப்போக, ஏனோ எனக்கு விபரீதமான கற்பனைகளும் சோகப்பாடல்களும் வாழ்க்கையே முடிந்து போனது போலவும் சோகம் அப்பியது.  நண்பர்கள் அலி, ஜாகிருக்கெல்லாம் சொல்லி அங்கு டாடர்களைக் கன்செல்ட் செய்யச் சொன்னேன். “இது ஆர் ஏ அல்ல டாடி, லுக்ஸ் லைக் ‘க்ரொவுட்(grout)’டாடி” என்ற மகளை முறைத்தேன்.  எல்லோரிடமும் எரிந்து விழுந்தேன். 

ஆயினும், ஆர் ஏ வுக்கான சிம்ப்டம்ஸ்(symptoms) இல்லாததால் ஜி எம் ஸி ஹாஸ்பிட்டலிலும் ஒரு கன்சல்டேஷன் பண்ண அங்கு சென்றேன்.

டாக்டர் நம்பர் 06: ஆர்த்தோவிலே பேராசிரியர் அந்த டாக்டர். எடுத்த எடுப்பிலேயே “இது ஆர் ஏ வல்ல. 100 வகையான அர்தரைடிஸில் ஒன்னு. எதற்கும் எக்ஸ்ரேயும். மொத்த ரெத்த பரிசோதனையும் (total profile of blood)  செய்துவிடலாம்” என்று சொன்னார்.

எனக்கு மனசு சற்றே லேசானது எனினும் ரிஸல்ட் வரும்வரை யோசனைகள் பல வந்து போயின, “நாம் யாருக்கு என்ன பாவம் பன்னோம். ஏன் முடக்கு வாதம்? வட்டி வாங்கினோமா வயிற்றலடிச்சோமா. ஏன் அல்லாஹ் இந்த விதி” என்று ரொம்பவே புலம்பினேன்.

ரிஸல்ட்டும் வந்தது. எல்லாம் நார்மல் என்றும் “ரோஸ் வேலர் (Rose Whaler)’  நெகட்டிவ் என்றும், மூட்டில் இன்ஃபெக்ஷன் (infection) இருப்பதாகவும் சொல்லிற்று ரிஸல்ட்.  டாக்டர் ஆர் ஏ இல்லையென்று தீர்ப்பளித்தார். “எனினும், நீ விரலை ஏறத்தாழ ஃபிரெஞ்ச் டார்ச்சருக்கு ஈடாக சித்திரவதை செய்துவிட்டதால் வளைந்த நுனிமட்டும் நிமிராது” என்று சொன்னார். பிரசவத்தில் சிரமம் ஏற்படும்போது ரிம்லெஸ் கண்ணாடி போட்ட லேடி டாக்டர் “ரெண்டு உயிரில் ஒன்றைத்தான் காப்பாத்த முடியும்” என்பவரிடம்,”பெரிய உயிரைக் காப்பாத்துங்கள், பிள்ளை பிறகுவேணுமானாலும் பெத்துக்கலாம்” என்பார்களே அதுபோல, நானும், “பரவாயில்லை, ஒன்பது விரல்கள் சரியாயிருந்தாலே போதும்” என்று சமாதானமானேன். 

டாக்டர் 15 நாட்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் வரச்சொன்னார், முடிச்சில் உள்ள புண் ஆறிவிடும் என்ற நம்பிக்கையில்.

இன்னும் முடியல.  வேனும்னா ஒரு காஃபி குடிச்சிட்டு வந்து தொடர்ந்து படியுங்கள்.

டாக்டர் நம்பர் 07: ஆர்த்தோ சர்ஜன், ஜி எம் ஸீ ஹாஸ்பிட்டல், அஜ்மான்: 16வது நாளும் வலி குறைந்திருந்ததே தவிர நீங்கவில்லை என்பதால் மீண்டும் போனபோது, “அவர் விடுமுறையில் சென்றுள்ளார். 40 நாட்கள் கழித்து வாருங்கள்” என்று வாரினார்கள். நான், “காத்திருக்க முடியாது. வேறு ஸ்பெஷலிஸ்ட் உண்டெனில் அனுப்பு எனக் கேட்க எலும்பு அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்ப, அவர் “15 நாட்கள் ஆகியும் குணமாகாததால் நீங்கள் ஆர் ஏ சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டைக் காண்பது நலம் என்று சுருக்கமாக முடிக்க நான் சம்மதித்தேன். மேலும், அவர் அங்கு விசிட்டிங் கன்சல்ட்டன்ட் தான்.

விதி, விடுமுறை எனும் முகமூடியிட்டு விளையாடியதால் அவரும் 10 நாட்கள் கழித்துத்தான் வருவார். அவர் ஓர் இராக்கி என்றனர். காத்திருக்குகையில், ஜாகிர், அலி ஆகியோர் ‘இது அதல்ல’ என்று விசாரித்துச் சொன்னார்கள். நான் 25 வருஷத்துக்குப்பிறகு சந்திக்கபோகும் தம்பதியில் ஒருவனாக இர்ராக்கி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டுக்காகக் காத்திருந்தேன்.

டாக்டர் நம்பர் 08: ரெமொட்டொலஜிஸ்ட். (rheumotalogist) அரபு நாடுகளின் அரசியல் எழுச்சியினால் அடிக்கடி பார்த்த முகங்களில் ஒன்றோடு அமர்ந்திருந்தார். ஏழுபது வயதிருக்கும். என் விரலைப் பார்த்தவுடன்,”உன்னை யார் என்னிடம் அனுப்பியது. நான் ரெமொட்டொய்ட் மட்டுதான் பார்ப்பேன். இது அதல்ல”. நான்,”என்ன டாக்டர் ரிப்பொர்ட்லாம் பார்க்காமலேயே சொல்றீங்களே” என்றதற்கு, அவர்”R A வை எனக்கு என் குழந்தைகளைப்போல பரிச்சயம். அவை, மணிக்கட்டு, விரல்களின் அடி மூட்டு, ரொம்ப அரிதாக விரல்களின் நடு மூட்டுகளில்தான் வரும். நுனி மூட்டில் வரவே வராது” என்று ஆணித்தரமா அடித்துச்சொன்னார்” என் வயிற்றில் பால் வார்த்தார். "அப்படியானால் இது என்ன என்று கேட்க” அவர் சொன்னது நாம் அனைவரும் அறியவேண்டிய ஒரு பாடம்:

“விரலில் வலி வந்தவுடன் அதற்கான சிகிச்சை செய்திருந்தால் இவ்வளவு தூரம் உனக்கு பிரச்சினை இருந்திருக்காது. கற்றுக்குட்டி வைத்தியங்களால் விரல் நுனி மூட்டில் ‘ஹைபர்டன்ஸ் நோட்ஸ்” (hiberden's nodes)) எனும் முடிச்சு விரலின் முதுகில் விழுந்து விரலை உள்நோக்கி வளைத்துவிட்டது. மருந்தெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஃபிங்கர் ஸ்ப்லின்ட் (finger splint))  போட்டுக்கோ. 4 செஸ்ஸன் ஃபிஸியோ தெரப்பி ( 4 sessions of physiotherapy))  போனால் சரியாயிடும். என்ன ஒன்று க்ரோனிக் ஸ்டேஜுக்கு நீ கொண்டு போய்விட்டதால் நிவாரணம் கிடைக்க நாளாகலாம்” என்றார். வாழ்த்தி விடை தந்த அந்த டாக்டரை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

last but not least,
டாக்டர்நம்பர்08:
ஃபிஸியோதெரபிஸ்ட்:
ஊட்டி கான்வென்ட்டில் துவங்கி எம் எம் சி என்று படித்த கோவைக்கார லேடி அவங்க. சிறப்பான ட்ரீட்மென்ட்டால் இதோ விரல் நன்றாக நிமிரத்துவங்கி இருக்கிறது. அவங்க என்ன சொல்றாங்கன்னா, "உங்களுக்கு சீக்கிரமே குணம் தெரிவதால் இது ஹைபர்டென்ஸ் நோட்ஸாகக்கூட இருக்க வாய்ப்பு குறைவு. இது அடிபட்டதால் ஏற்பட்ட ஸ்வான் நெக் (swan neck) எனும் சாதாரண நிலைதான்" என்று முடித்த டாக்டர் சொன்னார். (கவனிக்கவும்...)

"நீங்கள் அப்பவே வெந்நீர் ஒத்தடம் கொடுத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது"

- சபீர்

"புதிய‌தோர் ஊர் செய்வோம்" வாருங்கள் 23

அதிரைநிருபர் | December 04, 2011 | , ,

விடுமுறையில் ஊரில் நமது மதிப்பிற்குரிய வாவன்னா சாரை பலமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். அவர்கள் நமதூரில் தொன்றுதொட்டு வரும் சமூகச்சீர்கேட்டையும், மார்க்கம் தூற்றும் பழக்க,வழக்கங்களையும் கலைந்தெறிய (துடைத்தெறிய) இன்றைய இளைஞர்களால் ஒரு மாபெரும் புரட்சி நமதூரில் வெடிக்க‌ வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்(அது தானே நம் எல்லோரின் ஆவலும்). வாவ‌ன்னா சார் போல் எத்த‌னையோ பெரிய‌வ‌ர்க‌ள் ந‌ம்மூரில் இது போன்ற‌ உய‌ரிய‌ எண்ண‌ங்க‌ளுட‌ன் வெளிக்காட்ட‌ வாய்ப்பின்றி வாய‌டைத்து ம‌வுன‌வாய் இன்றும் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். வாழ்ந்து ம‌றைந்த‌வ‌ர்க‌ள் எத்த‌னையோ? அந்த‌ வ‌ல்லோனுக்கே வெளிச்ச‌ம்.

பல ஆண்டுகாலம் யாரும் அசைக்க முடியாமல் ஆண்டு வந்த நாட்டின் மன்னர்கள்/ஜனாதிபதிகளெல்லாம் இன்று மக்கள் புரட்சி ஏற்பட்டு (அது அமெரிக்காவின் தூண்டுதலாலோ அல்லது உள்நாட்டு மக்களின் கொந்தளிப்பாலோ என்பது ஆராயப்பட வேண்டிய விசயம்) ஒற்றுமையாக எல்லோரும் பல உயிர்த்தியாகங்களுக்கிடையே அந்நாட்டு தலைவர்களையே தூக்கி எறிந்து விட்டார்கள். இது போன்ற (பாதிக்கப்பட்ட) மக்கள் புரட்சி நமதூரில் வெகுவிரைவில் வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்ப‌டி வெடித்தாலும் நாம் நேச‌க்க‌ர‌ம் நீட்ட‌ த‌ய‌ங்க‌ப்போவ‌தில்லை.

அரசும் அதன் அலட்சியப்போக்கான அதிகாரிகளும் ஒரு புறம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற துரோகம் செய்து வருவதுடன் உள்ளூர் ம‌க்க‌ளாக‌ இஸ்லாமிய‌ ச‌மூக‌த்த‌வ‌ர்க‌ளே ஒருவ‌ருக்கொருவ‌ர் மார்க்க‌ம் பேணாம‌ல் துரோக‌மும், நில (பிறர் உடைமை)அப‌க‌ரிப்பும், வ‌ர‌த‌ட்சிணை கொடுமையும்,குண்டாமத்து என்னும் பம்மாத்து வேலைகளும், பெண்ணுக்கு வீடு கொடுத்து மார‌டிப்ப‌தும், சில்ல‌ரைப்பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் விவாக‌ர‌த்து வேண்டுவதும், ஏழைக‌ளை ஏறெடுத்து பார்க்காத‌தும், தன்னை ஈன்றெடுத்த‌ பெற்றோர்க‌ளை உல‌கில் இருப்ப‌தை விட‌ சாவ‌தே மேல் என்று அற்ப‌ உல‌க‌ ஆதாய‌த்திற்காக‌ க‌ருதுவ‌தும், ஆண்க‌ளை எல்லாம் குடும்ப‌ பொறுப்பை த‌லையில் ஏற்றி ஊரை விட்டு அப்புற‌ப்ப‌டுத்துவ‌தும், காம இச்சைகளுக்காக எந்தக்கபோதிகளுடனோ காணாமல் போவதும், அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போர்முனையை சந்திப்பது போன்ற சங்கடமான சூழ்நிலைகள் ச‌க‌ஜ‌மாக‌ எல்லா இட‌ங்க‌ளிலும், வீடுக‌ளிலும் ந‌ட‌ந்துவ‌ருமேயானால் அல்லாஹ்வுடைய‌ வேத‌னைக‌ளைத்த‌விர‌ வேறென்ன‌ அவ‌னிட‌மிருந்து நாம் எதிர்பார்க்க‌ முடியும்? நெருப்பு மழையன்றி பன்னீர் மழையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

அவ‌ன் நாடினால் இறைநிராக‌ரிப்ப‌வ‌ர்களை (காஃபிர்கள்) வைத்தே ந‌ம் சோலியை க‌ச்சித‌மாக‌ முடித்து சுவ‌டு தெரியாம‌ல் அழித்திடுவான் அல்ல‌வா? பண்டைய இஸ்லாமிய உண்மை வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டாமா? ஏன் தான் சிந்திக்க‌ ம‌றுக்கிற‌தோ உள்ள‌ம்?

விழிப்புணர்வுகளை ஊரைத்திர‌ட்டி பிரச்சாரம் செய்து போர்க்கொடி தூக்கி ஆர‌ம்பிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அவ‌ர‌வ‌ர் வீடுக‌ளிலிருந்து ஆர‌ம்பிக்க‌ வேண்டியுள்ள‌து. மார்க்க‌மும் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிற‌து அன்று முத‌ல் இன்று வ‌ரைக்கும். மாற்று ம‌தத்தினரை தூற்றும் முன் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் முத‌லில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக மாற வேண்டும். வெறும் இஸ்லாமிய‌ சின்ன‌ங்க‌ள் ம‌ட்டும் ந‌ம்மை க‌ரை சேர்த்து விடாது. ந‌ல்ல‌ எண்ண‌ங்க‌ளே ந‌ம்மை சுவ‌ன‌ம் புக‌ செய்ய‌ வேண்டிய‌தை செய்யும்.

ஜாஹிர் காக்கா, விழிப்புணர்வுகளின் எழுச்சி எந்த‌ ரூப‌த்தில் வெடிக்குமென்று இறைவ‌னே அறிவான். அது உங்க‌ள் எழுத்து மூல‌மாக‌ கூட‌ இருக்கலாம். தொட‌ருங்க‌ள் ஒன்று சேர ஒரு சிலரல்ல ஓராயிரம்‌ ம‌க்க‌ள் காத்திருக்கிறார்க‌ள்.

அவ‌ர‌வ‌ர் ம‌த‌ங்க‌ளை அவ‌ர‌வ‌ர் மதித்து நடந்து ம‌னித‌ நேய‌ம் காக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

"புதிய‌தோர் ஊர் செய்வோம்" வாருங்கள்......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

இன்றைய சவால் [ பகுதி - 4 - நிறைவு...] 30

ZAKIR HUSSAIN | December 03, 2011 | , , , ,


வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி உள் நாட்டில் வாழ்ந்தாலும் சரி பிள்ளைகளுக்கு தெரிந்து இருக்க வேன்டிய விசயம் வயதான காலத்தில் உள்ள பெரியவர்களை மதிக்க கற்றுத்தருவது. அது மட்டுமல்ல, அவர்களை கவனிப்பதும் இளையவர்களின் கடமை என்பதும்.  ஆனால் இப்போது வந்திருக்கும் நவீனம் கேட்ஜெட், ஐபேட் எல்லாம் மனித உறவுகளை கிழித்து போட்டுவிடும்.

மறுபடியும் உறவுகளை தெரியப்படுத்தவும், மனிதம் போதிக்கவும் புதிய வழிமுறைகள் எதிர்காலத்தில் கையாளப்படும்...எல்லா சமுதாய சீரழிவுக்கும் காரணம் மார்க்க அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத குடும்ப சூழல் தனக்கு நேர்ந்த கேவலங்களை கூட "சரி' என வாதிடச்சொல்லும். பொதுவாக தொழுகையை சரியாக கடைபிடிக்காத மக்கள் எதிலும் வெற்றியடைவதில்லை. அப்படியே அடைந்தாலும் சமயங்களில் பணம் சம்பாதிப்பதில் மட்டும் வெற்றியடைந்த பிறகு வரும் மன நிம்மதி தொழுகையின்றி இறைவனுக்கு நன்றி சொல்லாமல் கிடைப்பதில்லை. 


சரி, இப்போது வரும் பிள்ளைகள் முக்கியமாக பெண் பிள்ளைகளை இப்பொது எப்படி எதிர்கால சவால்களை சமாளிக்க தயார் செய்கிறோம். சமீபத்தில் ஒருவர் சொன்னது பெரியவர்கள் இல்லாத வீட்டில் எந்தபிள்ளையும் காலை 8 மணிக்கு முன்பு எழுவதில்லை...உண்மையில் பார்த்தால் சவால்களும்கடமைகளும் அதிகம் நிறைந்த நேரம் இப்போதுதான். அதற்காக தூங்கும் பிள்ளைகள் மீது தண்ணீரை ஊற்றி எழுப்புங்கள் என சொல்லவில்லை. அப்படி செய்தால் வாட்டர் ப்ரூஃப் போர்வையில் நாளையிலிருந்து தூங்குவது எப்படி என பசங்க யோசிக்கலாம். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் துரித உணவிலேயே [Fast Food] எல்லாம் இருக்கிறது எனும் தவறான முடிவில் இருக்கிறார்கள். அதனால்தான் கல்யாணத்துக்கு முன்பே இடுப்பைசுற்றி டயர்கட்டிய மாதிரி உடம்பு போட்டுவிடுகிறது [இதில் ஆண் பிள்ளைகளும் அடங்குவர்]. பிறகு, ஸ்லிம்மிங் எக்சர்சைஸ் மருந்து இப்படி வாழ்க்கை திசை மாற ஆரம்பிக்கிறது. கொஞ்சம் "எல்லாவற்றிற்கும் விடை தெரியும்" பார்ட்டிகள்,  மார்க்க அறிஞர் மாதிரி சீன் போடுறவைங்க, அப்படி செய்தால் தப்பு, இப்படி செய்தால் தப்பு என சொல்லிவிட்டு கல்யாண விருந்துகளில் பயங்கர கட்டு கட்டுவதில் குறியாக இருப்பார்கள்.

இவனுக அட்வைஸ் எல்லாம் அதிக நாள் எடுபடாது. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அடிப்படை இல்லாத அட்வைஸ் இப்போது அதிகம் எல்லாரிடமும் கிடைக்கிறது.
 
வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தனது பிள்ளைகளுடன் அதிகம் பேசுவதை ஒரு முக்கியமாக கருத வேண்டும்  இப்போது எல்லாம் இன்டர்நெட் வசதியில்  ஐபேட். ஸ்கய்பே என இருக்கிறதே மனைவியிடம் பேசிவிட்டால் எல்லா செய்தியும் பிள்ளைகளை போய் சேர்ந்துவிடும் என நினைப்பதன் மூலம் சமுதாயத்தில் திடீர் திடீர் என உருவாகும் சவால்களை எதிர்நோக்க சிரமப்படும் ஆண்பிள்ளைகளை உருவாக்கி விடுகிறோம்.

ஊரைப் பொருத்தவரை பெண் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். கல்யாணம் என வரும்போது ஆண்களின் படிப்பு பெண்ணை விட குறைவானதாக இருப்பதாக இப்போது தெரிகிறது. இதற்கு படிப்பில் ஆண்பிள்ளைகளுக்கு நம்பிக்கை குறைந்து இண்ஸ்டன்ட் வெற்றியாக வெளிநாட்டு வாழ்க்கையை நம்பியிருப்பதுதான். வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தனது பிள்ளைகளின் தேவைக்கு தகுந்தாற்போல் பொருள்களை வாங்கி கொடுப்பதில்லை. பெரும்பாலும் பிள்ளைகளின் ஆசைக்கு தகுந்தாற்போல் விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கித்தருவதால் விளைவுகளும் சமயங்களில் அதிர்ச்சியை தருகிறது.

'சும்மா இருக்கிறேன்" பார்ட்டிகள் ஊரில் எப்படி இந்த பெட்ரோல் விலையிலும் அழுக்காமல் பைக் வைத்திருக்கிறார்கள் என்பது அதிரையின் அதிசயம். உன் வருமானத்தில் பெட்ரோல் போட்டுக்கொள் என சொல்லிவிட்டால் அதிராம்பட்டினத்தில் பல மோட்டார் பைக் இருக்காது.

ஆக உடம்பு வளையாத, மைனர் பார்ட்டிகளை பிள்ளைகளாக உருவாக்கி விட்டு பிறகு 'கஞ்சி ஊத்துவான், ஊறுகாய் தருவான்" என்றிருப்பது கதைக்கு ஆகாது.


மொத்தத்தில் இந்த உலகம் எதிர்பார்ப்பது அதிகம். ஆனால், மார்க்கம் எதிர்பார்ப்பது எப்போதும் ஒரே மாதிரிதான். உலகத்தை காரணம் காட்டி மார்க்கத்தை ஒதுக்கி வாழும் [அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்து போக வைக்கும் பழக்கம்] பிள்ளைகளை தொற்றிக் கொள்ளாமல் பார்க்க வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் ஒரு கட்டத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு குடும்பத்தை கவனித்துக் கொள்வான் என்பதெல்லாம் லாட்டரிச் சீட்டு வாங்கி பரிசு விழுமா விழாதா என சலூன்களில் கிடக்கும் பேப்பரில் தன் வாழ்க்கையை தொலைத்தவர்களின் புத்தி.

வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே "தான் யார்" என்று சரியாக உணர்த்தாத எந்த குடும்ப தலைவனும் பின் காலத்தில் உணர்த்த முயற்சி எடுப்பது எறுமை மாட்டை ரேஸ் குதிரையாக்கும் முயற்சி.


வெளிநாட்டில் வாழும் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுக்க மட்டும் தயார் படுத்துவது, ஒரு தகப்பனின் வேலை அல்ல. அந்த பெண் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என பெற்றோர்கள் உதாரணமாய் இருந்து காட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதுடன் ஆண் பிள்ளைகளுக்கு உள்ள கடமைகள் போல் உயர் கல்வியும் தவிர்க்க முடியாதது என உணர்த்தி விட்டால் எல்லாம் வெற்றிதான்.


--- நிறைவுறுகிறது ---
- ZAKIR HUSSAIN

ஃபோட்டோகிராஃபியும் அதன் நகலும் ! 53

அதிரைநிருபர் பதிப்பகம் | December 01, 2011 | , , ,

பேசும் படங்களும் அவைகள் என்னையும் பேச அழைத்த அழகும் !

சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒரு பகுதியில் செவ்வானம் சிவந்திருக்கும் அந்தி மாலையின் அழகிய இயற்கை காட்சியை துல்லியமாக காட்சிப் படுத்திட உள்ளம் துடித்தது. கிட்டியதோ வழமையாக எம்மோடு தோள்மீது தொங்கும் எனது மூன்றாம் கண்ணாக கேமரா அதனை கையிலெடுத்து குறிவைத்தேன் மறைய எத்தனிக்கு சூரியனை சுட்டுவிடலாம் என்று. ஆனால், எனது விரலோ அழுத்தியது அந்தக் கேமராவின் பொத்தனை அதனூடே பதிந்தது இந்த வண்ணப்படம் நிழற்படமாக.


1. சமீபத்தில் கொடைக்கானல் சென்றிருந்தபோது பில்லர்-ராக் எனும் இடத்தில் மேகக்கூட்டம் அந்த பில்லர் ராக்கை கிராஸ் செய்தபோது எடுத்த படம்.


2. ஒற்றை காலில் தலைகீழ் நின்ற இந்த பூக்கள் என்னை தலை நிமிர்ந்து பார்த்திடத் தூண்டியதன் விளைவு இந்தப் புகைப்படம்.


3. இந்த மஞ்சள் வண்ணப்பூ மென்மையாக இருந்ததை பார்த்து மனம் கவர்ந்து கிளிக் செய்தது .


4. ஊருக்கு விடுப்பில் சென்றிருந்தபோது வீட்டில் இருந்ததை விட தோப்பில் இருந்த நேரம்தான் அதிகம் அப்படி ஒரு நாள் தோப்பில் இருந்தபோது ஒரு மாலை நேரத்தில் பெய்த மழையில் மேற்கே இருந்த சூரியன் கிழக்கே தந்த அந்த வானவில்.


5. கேரட்டை நல்லா கழுவி சாப்பிடனும் இங்கே வந்து பார்த்ததும் தோனியது, காரணம் இவங்க அதை காலால் கழுவி விற்பனைக்கு அனுப்புறாங்க !


6. குட்டி குட்டியாய் இந்த சிவந்த(பூ)விதழை பார்க்க நன்றாக இருந்தது எனக்கு ! உங்களுக்கு எப்படி ?


7. கொக்கு குருவிகளை நேரில் பார்த்த நாம் அதை எல்லாம் இப்போ இப்படித்தான் இனி பார்க்க வேண்டி வருமோ !


8. வெள்ளையும் ரோஜா நிறமும் சேர்ந்த இந்த 'பூ' ஏற்காட்டில் எடுத்தது.








9. நீ முந்தி போவதா நான் முந்தி போவதா என்ற யோசனையில் இருவருமே போகாமல் நிக்கும் காட்சி (எடுத்த இடம் ராஜஸ்தான்)இதை எடுக்க ராஜஸ்தான் போவனுமான்னு யாரும் கேட்டுறாதிங்கா...


10. எக்ஹினோ கேக்டஸ் என்ற இந்த செடி பூமி உருண்டையா ? அல்லது நாங்கள் உருண்டையா என்று கேட்பது போல் இருந்தது.



11. இது எந்த இடம் என்று யாருக்கும் சொல்ல தேவை இல்லை என நினைகின்றேன்.


12. நம்மூர் மார்க்கெட் நம்மூர் தேசை பொடி மீன்.


இந்த புகைப்படங்களை கண்டதும் கவிதையாக எழுதுபவர்கள் கவிதையை அப்படியே எழுதுங்கள், மேலும் கருத்துக்களால் வர்னிப்பவர்கள் பின்னுட்டங்களால் அலங்காரம் செய்யலாம். புகைப்பட அணி வகுப்பு இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ். 

- ஹமீது

இரயில் பயணம் - இனி ஒரு கனவா ? 10

அதிரைநிருபர் | December 01, 2011 | , , , , ,

அன்று அதிகாலை ! கிழக்கில் கதிரவனோடு சேர்ந்தே உதித்தது ஒரு கரும்புள்ளி போன்ற புகை நீண்டு எழுந்து வந்த அந்த இரயில் வண்டி நெருங்கியது. இன்னும் நெருங்கியது அதிர்ந்தது எங்களூரின் இரயிலடியின் நடைமேடையும் அங்கே மூச்சு இழுத்து வந்த அந்த தொடர்வண்டியும் நின்றது கம்பீரமாக. ஆஹா ! என்ன கம்பீரம், இதுவல்லவா இந்திய திருநாட்டின் மிகப்பெரிய பொதுத் துறையின் தன்னிறைவு நிறுவனத்தின் கம்பீரம் என்று இறுமாப்பு காட்டியது...

அது ஒரு பொற்காலம் !


ஆனால், இன்று விரிவாக்கம், விரிவு படுத்துதல், விரைவுக்காக, என்று வீராப்பு பேசியதுபோல் ஆகிவிட்டது இவர்களின் அறிவிப்பும் அதோடு தவழும் நடவடிக்கைகளும்.

ஏன் இவர்கள் மழுப்புகிறார்கள், எதனால் அகல இரயில் பாதைத் திட்டத்தை நீட்ட முடியவில்லை ? தடைகள் என்னதான் இவர்களுக்கு ? அதிரையின் வழித்தடம் என்றுமே எவ்விதமான அதிர்வுகளையும் அமைதியாக ஆட்கொள்ளும் என்பது ஏன் புரியவில்லை இவர்களுக்கு !?

கெஞ்சினோம், கொஞ்சினோம், ஆர்ப்பாட்டம் (முடிந்தவரை) செய்கிறோம், தனிப்பட்டவர்களும் இயக்கங்களும் அவரவர் பங்கிற்கு மனுக்களை அளிக்கிறோம் அடிமேல் அடித்தால் அம்மியும் அசையும் என்பதற்கினங்க, இரும்பால் தடம் கண்ட இரயில்வே நிர்வாகத்தின் மேலதிகாரிகளின் இதயக்கதவையும் தட்டும் சீக்கிரம் அங்கே கைகாட்டியும் இறக்கப்படும் நம்புவுவோமாக !

இரயிலடியைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறோம், வாசித்திருக்கிறோம், ஏன் கனவுகளும் கண்டிருக்கிறோம்... கடந்த தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை மனோகரா எக்ஸ்பிரஸிலும், கம்பன் எக்ஸ்பிரஸிலும் பயணம் செய்தவர்கள் அந்த நாட்களின் ஞாபகத்தைக் கிளறினால் எப்படியிக்கும்னு ஒரு யோசனைதான் தோன்றியது, ஆக !

மூச்சிரைத்த தொடர்வண்டி இனிமேலும் கனவிலாவது வருமா !?

இரயிலடி ஒரு நினைவலைகள் !




- அபுஇபுறாஹிம்
- நன்றி : காணொளி adiraiBBC


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு