Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரயில் பயணம் - இனி ஒரு கனவா ? 10

அதிரைநிருபர் | December 01, 2011 | , , , , ,

அன்று அதிகாலை ! கிழக்கில் கதிரவனோடு சேர்ந்தே உதித்தது ஒரு கரும்புள்ளி போன்ற புகை நீண்டு எழுந்து வந்த அந்த இரயில் வண்டி நெருங்கியது. இன்னும் நெருங்கியது அதிர்ந்தது எங்களூரின் இரயிலடியின் நடைமேடையும் அங்கே மூச்சு இழுத்து வந்த அந்த தொடர்வண்டியும் நின்றது கம்பீரமாக. ஆஹா ! என்ன கம்பீரம், இதுவல்லவா இந்திய திருநாட்டின் மிகப்பெரிய பொதுத் துறையின் தன்னிறைவு நிறுவனத்தின் கம்பீரம் என்று இறுமாப்பு காட்டியது...

அது ஒரு பொற்காலம் !


ஆனால், இன்று விரிவாக்கம், விரிவு படுத்துதல், விரைவுக்காக, என்று வீராப்பு பேசியதுபோல் ஆகிவிட்டது இவர்களின் அறிவிப்பும் அதோடு தவழும் நடவடிக்கைகளும்.

ஏன் இவர்கள் மழுப்புகிறார்கள், எதனால் அகல இரயில் பாதைத் திட்டத்தை நீட்ட முடியவில்லை ? தடைகள் என்னதான் இவர்களுக்கு ? அதிரையின் வழித்தடம் என்றுமே எவ்விதமான அதிர்வுகளையும் அமைதியாக ஆட்கொள்ளும் என்பது ஏன் புரியவில்லை இவர்களுக்கு !?

கெஞ்சினோம், கொஞ்சினோம், ஆர்ப்பாட்டம் (முடிந்தவரை) செய்கிறோம், தனிப்பட்டவர்களும் இயக்கங்களும் அவரவர் பங்கிற்கு மனுக்களை அளிக்கிறோம் அடிமேல் அடித்தால் அம்மியும் அசையும் என்பதற்கினங்க, இரும்பால் தடம் கண்ட இரயில்வே நிர்வாகத்தின் மேலதிகாரிகளின் இதயக்கதவையும் தட்டும் சீக்கிரம் அங்கே கைகாட்டியும் இறக்கப்படும் நம்புவுவோமாக !

இரயிலடியைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறோம், வாசித்திருக்கிறோம், ஏன் கனவுகளும் கண்டிருக்கிறோம்... கடந்த தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை மனோகரா எக்ஸ்பிரஸிலும், கம்பன் எக்ஸ்பிரஸிலும் பயணம் செய்தவர்கள் அந்த நாட்களின் ஞாபகத்தைக் கிளறினால் எப்படியிக்கும்னு ஒரு யோசனைதான் தோன்றியது, ஆக !

மூச்சிரைத்த தொடர்வண்டி இனிமேலும் கனவிலாவது வருமா !?

இரயிலடி ஒரு நினைவலைகள் !




- அபுஇபுறாஹிம்
- நன்றி : காணொளி adiraiBBC

10 Responses So Far:

Shameed said...

ரயில்வே துறைக்கு அதிராம் பட்டினம் மீது கோபமுங்க ஏன்னா இந்த ஊர் காரங்க மின்சாரம் இல்லாத மின்துறைக்கு இடம் வாங்கி கொடுக்குறாங்க பணத்தில் மிதக்கும் பதிவு துறைக்கு
இடம் இனாமா கொடுக்குறாங்க இது எல்லாமே மாநில அரசுக்கா பார்த்து செய்றாங்க மத்திய அரசுக்கு அதிரை வாசிகள் சொல்லிக்கொவது
போல் இதுவரை எதுவும் செய்யவில்லை அதான் நம் மீது ரயில்வே துறைக்கு கோபம் (நம் ஊரை பொறுத்தவரை அரசு நமக்கு ஏதும் செய்யாது நாம் தான் அரசுக்கு எதாவது (பிச்சை)போடவேண்டும்)

Shameed said...

சொல்லிக்கொவது ..

சொல்லிக்கொள்வது என்று படிக்கவும்

sabeer.abushahruk said...

அது ஆச்சு அம்பூட்டு காலம். அதைப்பற்றி சித்த லேட்டா எழுதறேன். அதுவரை...

அகலப் பாதை!

நல்ல பிள்ளையென
நீண்டு
பூமி துளைத்து
சிலதும்
'சவலைப்பிள்ளையென
சோனியாய்த் தொங்கிக்கொண்டு
சிலதும்
விழுதுகள்....
ஆலமர நிழலில்
ஆளமர முடியாமல்
சிமென்ட் பெஞ்சில்
பறவை எச்சங்கள்...
நினைவில் மிச்சங்கள்!

மேல்திசையின் ஒளிப்பொட்டும்
மெல்லிய இறைச்சலும்
கொஞ்சம் கொஞ்சமாக
விட்டம் வளர்த்தும்
சப்தம் கூட்டியும்
நிலையம் வந்து...
பெட்டி படுக்கையோடு
வாப்பாவை ஏற்றிகொண்டு
கீழ்திசை நோக்கி
கருப்புச் சதுரம்
கடுகென குறைந்து
மறைந்த பொழுதுகள்...
மறையாது நினைவுகள்!

அதே
கீழ்திசையிலிருந்து
அடைமழை காலத்து
பிறை நிலவென
மெல்லத் தோன்றி
கருப்பு தேவதை
மூச்சிறைக்க
நிலையம் வந்து
வெளிநாட்டுப் பொருட்களோடு
வாப்பாவை இறக்கிச் சென்ற
அதிகாலை...
ஆனந்தத்தில்
அழுத பொழுதுகள்!

தனக்கான உணவு
தானிழுக்கும்
வண்டிக்கடியில்
வைத்திருப்பதறியாது
வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.
மின் கம்பத்தின்
கட்டுப்பாட்டில்
உணவை அசைபோட
மனதோ நினைவுகளை...!

க்ளைடாஸ்கோப்பும்
கித்தாச் செருப்பும்
செஸ் போர்டும்
சாக்லேட்டும் அடங்கிய
பெட்டியை சுமந்த
கூலியும்
தர்காமுன் ஃபாத்திஹாவும்
பகிர்ந்தளித்த இனாமும்
நினைவுச்சின்னங்களின்
சுவர் கிறுக்கல்களாக
நினைவில் மிஞ்ச

அத்தனை இருப்புப் பாதைகளும்
தொடர்பறுந்து போய்விட
அடுத்த பட்ஜட்டின்
அகலப் பாதை
திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டுக்காக
கைம்பெண்ணாய் காத்திருக்கிறது
எங்கள் ஊர்
ரயில் நிலையம்!

sabeer.abushahruk said...

மேலே உள்ளதை வெளியிட்ட "திண்ணை டாட் காமுக்கு" நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.

அபூபக்கர்-அமேஜான் said...

மூச்சிரைத்த தொடர்வண்டி இனிமேலும் கனவிலாவது வருமா !?

மூச்சிரைத்த தொடர்வண்டி ஏற்கனவே பாதி கானாபோய்விட்டது இப்போ முழுசாகவே கானாபோய்விட்டது.இனிமேல் கனவிலோ, நினைவிலோ காண முடியாது.கட்சி சார்பாகவோ, இயக்கங்கள் சார்பாகவோ எதுவும் பாகுபடியின்றி அதிரை மக்கள் ஒன்று கூடி இதற்கு முடிவு எடுத்தால் தான் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.அதிரை மக்கள் ஒன்று கூடி ஒற்றுமையை காட்டாதவரைக்கும் எந்த விசயமும் நடக்காது. ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி மின்சாரம், அகல ரயில் பாதைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.மற்றோர் ஊரில் போய் ரயிலுக்காக பயணம் செய்வது முதியோர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.இதை மத்திய,மாநில அரசாங்கம் கண்டுக்கொள்வதில்லை அதிரை நகரை கண்டுக்கொள்ளாமல் இருங்கள் என்ற எண்ணம் வைத்துயிருக்கிறார்கள் போல் தெறுகிறது.மின்சாரத்துறைக்கு இடம் குடுத்தால் போல் ரயில்வே துறைக்கும் இடம் குடுத்தால் தான் அதிரைக்கு தொடர்வண்டி விடுவார்கள் போல தெறுகிறது. இதற்கு பல முறை முயற்சி செய்தால் நிச்சயமாக இறைவன் நாட்டப்படி ஒரு நல்ல முடிவு கிடைக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

KALAM SHAICK ABDUL KADER said...

கடலலைகள் பாடும்
இரயிலடியின் காற்றினிசையில்
நினைவலைகளின் நாடாக்களை
நித்தம் சுழற்றும் எல்லாரும்

மீண்டும் வராதா அக்காலம்
மீண்டு வராதா இரயில் கோலம்
வேண்டுகின்றோம் வேதனையில்
தூண்டுகின்றோம் தொடர்ந்து....


அந்தக் காலம்:

பாங்கோசையுடன் வழியனுப்பும்
பாங்கினைக் கண்டோம்
ஹஜ்ஜுப் பயணிகளாய்
பாவங்கழுவி வருவோரை
ஆரத்தழுவி “துஆ” வேண்டுவோம்

ஃபஜரின் பாங்கோசை
படுக்கையை விட்டெழுப்பும்;
பஞ்சாயத் போர்டு சங்கொலி
பள்ளிக்கு ஓத அனுப்பும்;
புகைவண்டியின் வருகையோசை
புறப்படவைக்கும் பள்ளிக்கூடம்

தேர்வுக்குத் தயாராக
தேர்ந்தெடுக்கும் இரயிலடியும்;
மனப்பாடம் செய்யும் ஒலியலைகள்
வனப்போடுச் சுற்றி வரும்
உப்பளத்தின் முகடும்;
இப்பொழுதும் என் நினைவலையில்...

மனப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி
கடற்காற்றினைக் கலப்பின்றி
உடலுக்குள் உள்வாங்கும்
நடைப்பயிற்சியும் நாளும்....

அத்துணைச் சுகமான
அந்த இரயிலடி எங்கே?
இத்துணை வருடமாய்
“இத்தா”வில் இருப்பதால்
அந்த கருப்பு தேவதை
எந்த நாளில் இனியும்
மணக்கோலம் காண்பாள்?

வயதானோர்க்கு வசதியான
பயணமும் வாராதா?
இடியாப்பம் இறைச்சி
மடியில் வைத்து உண்ண;
இடித்துக் கொள்ளாத
இருக்கையும்;
படித்துக் கொண்டே
பயணிக்க படுக்கையும்;
ஒளுவும்; தொழுகையும்
ஒழுங்காய் நிறைவேற்றவும்;
தாலாட்டுப் பாடலாய்
“தட தட தட “ ஓசையும்
குறைவான செலவில்
குடும்பமே பயணிக்கவும்
நிறைவேறுமா ஆசையும்???

இக்காலத்தில்
கடலும் மறந்து போச்சு;உப்பளத்
திடலும் மறந்து போச்சு
உடலும் பெருத்துப் போச்சு
உடலுக்கு நடைப்பயிற்சியும் என்னாச்சு?
”இரயிலடி என்றால் என்ன?”
இனிவரும் சந்ததிகளின் அறியாமையாச்சு

அஃதொரு கனாக்காலம்!!

இரவின் முழுத் தூக்கமும்
இரயிலின் நீண்ட ஓட்டத்தில்
ஃபஜ்ரின் நேரத்தில்
பளிச்சென கதிரவன் உதயத்தில்
படுக்கையை விட்டெழுந்தால்
அதிராம்பட்டினம் இரயில் நிலையம்
அதிர்ந்திடும் எண்ண ஓட்டம்
அதிரையில் நிற்கும் இரயிலின் ஓட்டம்
குதிரை வண்டியில் குதூகலமாய்
வீட்டை நோக்கியே ஓடும் மனமும்
தேட்டமாய்ப் பார்க்கின்றேன்
எங்கோப் போனது இரயில் பயணம்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இனிவராது என்று அஞ்சலி செலுத்துவதை விட நிச்சயம் அதை அடைந்தே தீருவோமென்ற இலக்கில் ஒன்றுபட்ட நெருக்குதல்கள்,போராட்டங்களே தீர்வாக அமையும்.

அந்த ரயில் சார்ந்த அனைத்து ஊர்களும் ஒன்றுபடுவது விரைவான பலனைத் தரும்.

கவிஞர்களின் கண்ணீரால் கனவுகளும் கம்பனாக உருப்பெற உறுதி கொள்வோம்.

ZAKIR HUSSAIN said...

//தேர்வுக்குத் தயாராக
தேர்ந்தெடுக்கும் இரயிலடியும்;//

//இடியாப்பம் இறைச்சி
மடியில் வைத்து உண்ண;
இடித்துக் கொள்ளாத
இருக்கையும்;//


//ஃபஜ்ரின் நேரத்தில்
பளிச்சென கதிரவன் உதயத்தில்
படுக்கையை விட்டெழுந்தால்
அதிராம்பட்டினம் இரயில் நிலையம்
அதிர்ந்திடும் எண்ண ஓட்டம்
அதிரையில் நிற்கும் இரயிலின் ஓட்டம்//

இந்த வார்த்தைகள் போதும் என்னை ஊருக்கு வரவழைக்க...

--------------------
நம் ஊர்காரர்கள் புகார் கொடுக்கும்போது குறைந்தது ஒரு 5 , 6 ரயில்வே மேல் அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் சேர்ந்தார்ப்போல் புகார் தர வேண்டும் [ cc To ] அப்போதுதான் அந்த புகாருக்கு சம்பந்தப்பட்ட துறையில் கொஞ்சமாவது முக்கியத்துவம் இருக்கும்.

KALAM SHAICK ABDUL KADER said...

//இந்த வார்த்தைகள் போதும் என்னை ஊருக்கு வரவழைக்க...//

மண்வாசனை
உடலில்; உணர்வில்
மண்ணைப் பற்றிய யோசனை
மூளையின் மூலையில்

அதிரைக்கு அப்பால்
அக்கரையில்உள்ளோம்
அதிரையின்பால்
அக்கறையில் உள்ளோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரைக்கு அப்பால்
அக்கரையில்உள்ளோம்
அதிரையின்பால்
அக்கறையில் உள்ளோம் //

ஆஹா !

அத்தனையும் முத்திரை(கள்)!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு