தொடர் பகுதி - ஒன்பது

பாலஸ்தீனமும் ஜெருசலமும் மீண்டும் முஸ்லிம்களின் வீரப்பிரதிநிதியான சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களால் கைப்பற்றப்பட்டு - அவரது ஆளுமையை ஏற்றுக்கொண்ட யூத கிருத்தவர்களையும் சமமாக ஜெருசலத்தில் வாழ அனுமதித்து - உயர் பதவிகளில் இருந்தவர்களை எல்லாம் பத்திரமாக அவரவர் சொத்துக்களுடன் அவரவர் ஊருக்கும் நாட்டுக்கும் அனுப்பி வைத்து - அநாதரவாக விடப்பட்ட சிலுவைப் போர் வீரர்களுக்கும் கருணையுடன் லெபனானில் இடம் ஒதுக்கித்தந்து வாழ வழிவகுத்துத்தந்த சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களை நல்லுலகமும் நன்றி கூறும் உலகமும் நாவினிக்கப் புகழ்ந்தது.
நன்றி கெட்டதனத்துக்கு நானிலத்துக்கே இன்றுவரை சரித்திரச் சான்றாகத் திகழ்ந்த சிலுவைப் போர் வீரர்கள் திமிரெடுத்துத் திரண்டு வந்து மூன்றாம் சிலுவைப் போர் ஏற்பட்ட நிகழ்வுகளைக் காணும் முன்பு, தான் வென்றெடுத்த பகுதிகளில் சலாஹுதீன் அவர்கள் எப்படி ஆட்சி நடத்தினார் என்பதையும் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி ஒரு உயர்வான மனிதராக நடந்து கொண்டு மார்க்கம் பேணிய மனிதராக வாழ்ந்தார் என்பதையும் ஒரு சுற்றுப் பார்த்துவிடலாம். ஏனென்றால் இன்னும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இந்த மாவீரரின் மரணப்பக்கத்தையும் சந்திக்க இருக்கிறோம்.
மிக்க மேலானவனான அல்லாஹ், மிகவும் குறுகிய காலத்தில் சலாஹுதீன் அவர்களை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றான். ஜெருசலம் மட்டுமல்ல கூடவே குர்திஸ்தான் என்று இன்று அழைக்கப்படும் ஈராக்கின் வாடாத வட பகுதியையும் லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை இணைத்து அகன்ற சிரியாவையும், எகிப்து, எமன், ஹிஜாஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ராஜ்யத்தை ஏற்படுத்தி அப்பகுதிகளில் நல்லாட்சி புரிந்தார். செங்கடலை சுற்றி உள்ள பகுதிகள் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ஒட்டு மொத்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமை அப்போது பாக்தாத்தில் இருந்தது. அங்கு ஒரு கலிபாவும் இருந்தார். ஆனாலும் அரசியல் உலகத்துக்கு சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களின் பெயரே இஸ்லாமிய ஆட்சிக்கு அடையாளமும் சான்றும் பகன்றுகொண்டிருந்தது .
சந்தேகமில்லாமல் அய்யூபி அவர்களின் இறைநம்பிக்கையும் அர்ப்பணிப்புமே நூறாண்டுகளுக்கும் மேலாக எதிரிகளின் பிடியிலிருந்த ஜெருசலத்தை சுதந்திரம் பெற வைத்தது. சலாஹுதீன் அவர்களின் தன்னலமற்ற நோக்கங்களை அல்லாஹ் அங்கீகரித்து அவர் பக்கம் நின்றான். மூலைக்கொருபக்கம் முடங்கிக் கிடந்த முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்தின் பேரில் இணைந்ததும், அரசியல் ரீதியாக நம்பிக்கை கொண்ட தலைவர்களும், அனுபவம் வாய்ந்த வீரர்களும் கண்டெடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட உண்மையான காரணத்தால்தான் இந்த மாபெரும் வெற்றி சாத்தியமானது . அல்லாஹ் தனது அருட்கொடையாக வழங்கிய சலாஹுதீன் அவர்களின் சீரிய தலைமை மட்டுமே முஸ்லீம்கள் முன்னோக்கி தொழுகை நடத்தும் முதல் மசூதியான அல் அக்ஸா மசூதியையும். நபி ஈஸா (அலை) பிறந்த பூமியையும் , பெருமானார் முகம்மத் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் என்னும் பயணத்தின் போது இறங்கிய இடமும் அடங்கிய ஜெருசலத்தை மீட்க வைத்த வரலாற்றுத் திருப்பத்தை வடிவமைத்துக் கொடுத்தது.
நாம் நினைவு கொள்வோம். ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் முதன்முதலில் ஜெருசலத்தில் தொழ நேர்ந்த போது சர்ச்சுக்கு உள்ளே தொழுதால் எதிர்காலத்தில் ஒரு உதாரணம் ஆகிவிடுமென்று சர்சுக்கு வெளியே நின்று தொழுதார் என்று பார்த்தோமல்லவா? அப்படி ஹஜரத் உமர் ( ரலி ) அவர்கள் தொழுத இடத்தில் அந்த நல்லெண்ண நினைவுக்காக ஒரு பள்ளியைக் கட்டினார்.
சலாஹுதீன் அவர்கள் தன்னுடைய ஆட்சி முழுக்க முழுக்க இஸ்லாமிய ஷரீயத்துடைய அடிப்படையிலான ஆட்சி என்று அறிவித்தார். ஹராம் ஹலால் பேணப்படவேண்டுமென்று கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்தார். வெட்ககரமானவைகளையும் வீணாக்கும் செயல்களையும் வெறுத்து ஒதுக்கினார். அதுவரை பண்டிகை தினங்களில் ஒயின் குடித்து நடனமாடிக் கொண்டிருந்த எகிப்து முதலிய நாடுகளின் அரசர்களின் நடனத்தையும் சில ஹராமான தடம்புரண்ட நடப்புகளையும் இரும்புக்கரங்களால் தடுத்து நிறுத்தினார்.
திருமறையை ஓதுவதை தினமும் கடைப் பிடித்த சலாஹுதீன் அவர்கள் உருக்கமான சில வாசகங்கள் அல்லது எச்சரிக்கைகள் ஓதப்படும்போது கதறிக் கண்ணீர் வடிப்பார் என்று அறிகிறோம். உலகின் ஒரு பகுதியை தனது சுட்டு விரலுக்குள் வைத்திருந்த ஒரு வெற்றி வீரர், அல்லாஹ்வின் வாசகங்களுக்கு முன்பாக அனைத்தையும் இழந்த ஒரு வெற்று மனிதராக அமர்ந்திருந்தார் .
ஐவேளைத் தொழுகையை ஜமாத்துடன் நேரம் தவறாமல் நிறைவேற்றினார். இமாம் வரத் தவறினால், அதற்கு ஈடான ஒருவரை முன்னிறுத்தி தொழுது கொள்வார். தனியாக தான் எங்கும் செல்ல நேரிட்டாலும் , ஜமாத்துடன்தான் தொழவேண்டுமென்பதற்காக பிரத்யோகமாக ஒருவரைத் தனது கூடவே வைத்து இருந்தார் என்று அறியும்போது மெய்சிலிர்க்கிறது. அத்துடன் முன் பின் சுன்னத்துகளையும் தஹஜ்ஜத் தொழுகையையும் கூட போர்க்காலங்களில் போர்க் களங்களில் கூட தொழுதுவந்ததை அவர் நிறுத்தவில்லை என்று அபு ஷமாஹ் என்கிற வரலாற்றாசிரியர் வடித்துத் தருகிறார்.
அதேபோல் சலாஹுதீன் அவர்கள் தொழுகையில் மட்டுமல்லாமல் மற்ற மார்க்கக்கடமைகளிலும் இறை அச்சம் உள்ளவராகவும் இருந்தார். அதுவே அவர் ஒரு சிறந்த முஸ்லீமாக இருந்ததற்கு காரணமாய் இருந்தது. ஜகாத்தை கணக்குப் பார்த்து கொடுக்காமல் இருந்ததில்லை. ஏழைகளுக்குப் பெருவாரியாக அள்ளி வழங்கினார். சில நாட்கள் தவறவிட்ட ரமலான் மாத நோன்பை தான் இறப்பெய்திய வருடம் ஜெருசலத்தில் நிறைவேற்றிவிட்டே கண்மூடினாரென்றால் நாம் அவரது இறையச்சத்தின் உச்சத்தை உணர்ந்துகொள்ளலாம். மருத்துவர்கள் இதுபற்றி எச்சரித்த போது கூட, இதனால் அல்லாஹ்வால் தனக்கு விதிக்கபட்ட உலகவாழ்வின் நாட்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றார். தான் இறந்து போன அந்த வருடம் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்ற நேரமும் அவருக்கு அமையவில்லை; ஒரு சக்கரவர்த்தியாக இருந்தாலும் பொருள் வசதியும் அமையவில்லை என்பதே உண்மை. உடல்நலமும் ஒத்துழைக்காததால் அடுத்த வருடம் நிறைவேற்றலாம் என்று நிய்யத் வைத்திருந்தார் . ஆனால் அவரது எண்ணத்தை இறப்பு முந்தி விட்டது.
இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு வியாக்கியானங்களைக் கூறி திசை திருப்பும் தத்துவவாதிகளையும், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக பேசும் பழமைவாதிகளையும் வெறுப்பார். அவர் ஆட்சிப்பகுதியில் அப்படி யாரும் பேசித் திரிவதை அறிந்தால் அவர்களை இரக்கம் பார்க்காமல் கொன்றுவிட ஆணையிட்டார். இன்றைய சமுதாயம் சந்திக்கும் பல்வேறு விவாதங்களையும் வியாக்கியானங்களையும் சந்திக்கும் சூழ்நிலையில் சலாஹுதீன் அவர்களைப் போல இப்போது இன்னொருவரை உருவாக்கி குழப்பவாதிகளை தலையில் தட்டி வைக்க இறைவன் உதவுவானா என்று ஏங்குகிறது இதயம்.
பூல் என்ற ஆசிரியரின் குறிப்புகளின்படி, சலாஹுதீன் அவர்கள் தன் மகன்களிடமும் கவர்னர்களிடமும், நீதியுடனும், நேர்மையுடனும், மக்களை சரியான வழியிலும், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்தும் நடக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தினார். ஒரு முறை தனது மகன் அஸ்-ஸாஹிரை நோக்கி,
“நான் உனக்கு அல்லாஹ் விடம் பயந்து கொள்வதற்கு துஆ செய்கிறேன், ஏனென்றால் அது தான் நல்ல செயல்களை திறப்பதற்கான சாவி.
அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிய உறசாகப்படுத்துகிறேன், ஏனென்றால் அது ஒன்றுதான் மறுமைக்கான வழி.
இரத்தம் சிந்தப் படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இரு, ஏனென்றால் ஒருமுறை இரத்தம் சிந்த ஆரம்பித்தால் அதை நிறுத்துவது கடினம்’ எனக் கூறியதாக குறிப்புகள் கூறுகின்றன.
அவர் இளமை முதல் சுயமாகக் கற்ற பாடங்கள் மற்றும் பெற்ற அனுபவங்களையே நடைமுறைப்படுத்தினார் மற்றவர்களுக்கும் சொன்னார். தமது இன மக்களாலேயே கொல்லப்பட வேண்டிய முயற்சிகளிலிருந்து இறைவனருளால் தான் தப்பித்தார். தனக்கு இந்த உலகில் இறைவனுக்காக் இறைவழியில் போரிட வேண்டிய வேலை இருக்கிறது என்றே இறைவன் தன்னை காப்பாற்றியதாகக் கூறுவார்.
ஒவ்வொரு பிரதேசமாக அலைந்து திரிந்து முஸ்லீம் ஆட்சியாளர்களை ஒன்றிணைத்தார். தன் பலம் கொண்ட மட்டும் எதிரிகளை எதிர்த்தார். இதுவே அல்லாஹ் அவரை மோசமான சூழ்நிலைகளிலிருந்து விடுவிக்கவும், சோதனைகளிலிருந்து சுலபத்தில் வெளியேற்றவும் போதுமான தைரியத்தைக் கொடுத்தது. இறைநம்பிக்கை அவரது இதயக் கோட்டையாக இருந்தது. தனக்கு முன் நேர்மையான வழியில் நடந்த கலீஃபாக் களின் சுவடுகளை தொடர்ந்தார். அவர்கள் எப்படி வீரர்களை அல்லாஹ்வுக்கு பயப்படும் படி கட்டளையிட்டார்களோ அதே முறையில் நடந்துகொள்ளும்படி கட்டளை இட்டார்.
அல் கதி இப்னு ஷத்தாத், என்கிற வரலாற்றாசிரியர் சலாஹுத்தீன் அவர்கள் ஜெருசலத்தை வெல்ல காட்டிய தீவிரம் பற்றிப் பலபடப் பேசுகிறார். இதற்காக பல நாட்கள் தனது குடும்பத்தைக் கூடப் பிரிந்து தனது இனிமையான வாழ்நாட்களை இந்தப் புனிதப் பணிக்காக போரிடுவதற்காக அர்ப்பணித்தார். தன்னுடைய படை வீரர்களை வெள்ளிக் கிழமைகளில் கூட போரிச் சொன்னதுடன் கூடவே இறைவணக்கத்திலும் நேரம் தவறாமல் ஈடுபடச் சொன்னார். வெற்றி என்பது தன்னால் மட்டுமல்ல தனது படை வீரர்களில் யாராவது ஒருவருடைய து ஆவை இறைவன் செவி மடுத்து அவரது அமலை அங்கீகரித்ததாலேயே கிடைத்து இருக்கலாமென்று அகந்தையின்றிப் பெருந்தன்மையாகப் பேசினார்.
இஸ்லாத்திற்கு புறம்பான விஷயங்களை தடை செய்தார். முஹர்ரம் 10 ஆம் நாள் அஷுரா என்று அறிவித்து அந்நாளில் மக்கள் வேலைகளை விட்டுவிட்டு விடுமுறை அறிவித்துக் கொண்டு , வியாபார நிறுவனங்களை மூடிவிட்டு வீதிகளில் அடித்துக் கொண்டு அழுது புரண்டு துக்க நாளாக கொண்டாடுவதை தைரியமாகத் தடை செய்தார்.
அந்நாட்களில் புனித மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள் ஜித்தா நகரில் நுழைவதற்கு வரி செலுத்த வேண்டும் என்று மக்காவின் இளவரசர் ஒரு சட்டம் வைத்திருந்தார். சலாஹுதீன் அவர்கள் அந்த ரொக்க வரியை நீக்கி அதற்கு ஈடாக இளவரசருக்கு எட்டாயிரம் அர்திப்கள் ( ஒரு அர்திப்= 84 கிலோ) கோதுமையை நுழைவு வரியாக செலுத்தினார். அந்த கோதுமை மக்கா நகர் மக்களின் பசி நீக்கும் உணவுப் பொருளாக பகிர்ந்தளிக்கப்பட பயன்பட்டது. இதனால் பணமாக இளவரசரிடம் குவியாமல் உணவுப் பொருளாகி மக்களுக்குப் பங்கிட வழி வகுத்துத் தந்தது. இவ்வாறு சிறு செயல்களானாலும் அதில் பொதுமக்களுக்கு நலம்தரும் வழிவகைகள் வரும்படி பார்த்துக் கொண்டார் சலாஹுதீன் அய்யூபி.
சலாஹுதீன் அவர்கள் கட்டிடக் கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கெய்ரோவின் பிரம்மாண்டமான சுவர் இடிந்துபோய் வாயைப் பிளந்துகொண்டு யாரும் இலகுவாக நகருக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று வரக்கூடிய அளவுக்கு இருந்தது. அந்த சுவற்றை 29.302 கி. மீ. பரப்பளவில் மொத்த கெய்ரோவையும் உள்ளடக்கிய வண்ணம் சுற்றுச் சுவர் கட்டினார். எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கல –அத்- அல் ஜபல் (மலை அரண்மனை) என்ற அரண்மனையையும் கட்ட ஆரம்பித்தார். ஆனாலும் தொடர்ந்து போரில் ஈடுபட்டிருந்ததால் முழுப் பணிகளையும் முடிக்கவில்லை. இது எகிப்திய கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருந்தது. சினாய் பகுதியில் சூயஸ் நகரின் வடகிழக்கில் 57 கி. மீ. தொலைவில் கலா –அத்- சினா என்ற இன்னொரு அரண்மனையைக் கட்டினார். கிஸா, அர் ருதாஹ் தீவுகளை நைல் நதியின் ஆழ, அகலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தார். கெய்ரோவில் புகழ் பெற்ற மர்ஸ்தான் மருத்துவமனையைக் கட்டினார்.
கல்வியை வளர்ப்பதில் ஆர்வமாய் இருந்தார். சிறு பிள்ளைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு குர்ஆன் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். ஆரம்பக் கல்வி முடித்த இளைஞர்களை அடுத்தடுத்த நாடுகளுக்கு சென்றேனும் உயர் கல்வி கற்க உதவி செய்தார். இவர் காலத்தில் கெய்ரோவில் அம்ர் இப்னு அல் அஸ், அல் அஸர், அல் அக்மார், அல் ஹகிம் பியம்ரில்லாஹ், அல் ஹுஸ்ஸைன் மசூதிகளும், அலெக்ஸாண்டிரியாவில் அல் அத்தரின் மசூதியும் கட்டப்பட்டன.
டமாஸ்கஸ் நகரம் உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் மத போதனையாளர்களுக்கும், பயில்பவருக்கும் பாலமாக இருந்தது. எகிப்திலும், திரிபோலியிலும் அமைந்த தார் அல் ஹிக்மா கல்விச்சாலை , எண்ணற்ற மாணவர்களைக் கொண்டதாக இருந்தது. சலாஹுதீன் அவர்கள் மதக் கல்வி போதனைகளை அஸ் ஸியுஃபியாஹ் பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டினார். அதற்காக 32 நிறுவனங்களின் மூலமாக வருமானம் வரச் செய்தார்.
அவரின் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. வருமானத்தை ஜிஹாத், கட்டிடங்கள் நிர்மாணம், கோட்டைகள், அரண்மனைகள், அணைக்கட்டுகள், கல்வி, மருத்துவமனை என்று பல துறைகளில் முன்னேற்றத்திற்கு செலவிட்டார். விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கினார். வணிகத்தில் கவனம் செலுத்தி எகிப்தை கிழக்கும், மேற்கும் இணைக்கச் செய்தார். வெனிஸ், பிசா போன்ற பல ஐரோப்பிய நகரங்களை வியாபார ரீதியாக எகிப்தின் முக்கிய நகரங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்தார். வெனிஸ் வியாபாரிகள், அலெக்ஸாண்டிரியாவில் அமைத்த அல்- ஐக்- மார்கெட் என்ற வணிக வளாகம் அந்நாளில் மிகவும் புகழ் பெற்றது. அந்த வணிக வளாகத்தில் எகிப்து மற்றும் சிரியாவின் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன. திரிபோலியில் காகித தொழிற்சாலை அமைத்தது சலாஹுத்தீனின் நவீன சிந்தனையின் சாதனை . பின்னர் சிலுவைப் போராளிகள் இதை ஐரோப்பாவுக்கு மாற்றிக்கொண்டனர்.
அவருடைய முக்கியமான கடற்படைத் தளங்கள் எகிப்தில் இருந்தன. அலெக்ஸாண்டிரியா, டமெய்டா ஆகியவை முக்கிய துறைமுகங்களாக இருந்தன. நைல் நதியின் துறைமுகங்களான அல் ஃபுஸ்தத், குஸ் போன்றவைகளில் போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு எந்நேரமும் எதிரிகளை எதிர்கொள்ளவும் தாக்குதலுக்கும் தயாராய் இருந்தன.
நீதிக்கு முன் ஆண்டியும் அரசனும் சமமென்று சொல்லும் நிகழ்வு அவரது சொந்த வாழ்வில் நடந்தது. நேர்மை எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார். உமர் –அல்- கல்லதி என்ற ஒரு வியாபாரி, சலாஹுதீன் அவர்கள் சுன்குர் என்ற தனது அடிமை ஒருவனை தன்னிடமிருந்து அபகரித்துக் கொண்டதாக வழக்கு தொடர்ந்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளை நம் கண்முன்னால் கண்டு வருகிறோம். ஒரு அரசரின் மீதே அடிமையை அபகரித்ததாக வழக்கு! ஆனாலும் வழக்குக்கு வாய்தா கேட்காமல் சலாஹுதீன் அவர்கள் பொறுமையாக வழக்கை எதிர் கொண்டு தான் நிரபராதி என்று நிரூபித்தார். இறுதியில் வழக்குத்தொடர்ந்த அந்த வியாபாரிக்கு தனது வழக்கப்படி மன்னித்துப் பரிசும் கொடுத்தார்.
இப்படிப் போய்கொண்டிருந்த சலாஹுதீன் அவர்களின் நல்லாட்சியின் புகழ் வானத்தின் மீது போர் மேகங்கள் சூழ்ந்தன. அந்த மேகத்துக்கு வரலாறு சூட்டியுள்ள பெயர் மூன்றாம் சிலுவைப் போர்.
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில் முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் ; நன்றி மறந்தவர்க்கும் நன்மை புரிந்தவர்க்கும் முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும் என்று சொல்வார்களே அதே போல் நன்றி மறந்தவர்களோடு பிரிவு வரத் தொடங்கியது. போர் தொடங்கியது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
இபுராஹீம் அன்சாரி