அமாவாசை கொழுக்கட்டை எப்போதும் கிடைக்காது என்று கூறுவார்கள். கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் சாயம், அண்மையில் நடைபெற்று முடிந்திருக்கிற சில பாராளுமன்ற மற்றும் மாநிலசட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெளுக்கத் தொடங்கிவிட்டது என்று தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன. வருஷம் பூரா கொழுக்கட்டை சாப்பிடலாம் மக்களும் அவித்துப் போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று எண்ணியவர்களின் எண்ணங்களில் மக்கள் இடிகளை இறக்கி இருக்கிறார்கள்.
பத்தாண்டு ஆண்டுகள் , ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஒரு மாற்றாக பாரதீய ஜனதா கட்சியின் மாய்மால வார்த்தை ஜாலங்களை நம்பி வாக்களித்த மக்களுடைய மனநிலையில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு எடுத்துக்காட்டாகும்.
மத்தியில் மார்தட்டி ஆட்சியமைத்த பாரதீய ஜனதாவுக்கு அதன் ஆட்சியின் தேன் நிலவுக் காலம் தீர்வதற்கு முன்பே மக்கள் உச்சதலையில் கொட்டத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சாட்சியம் பகர்கின்றன.
ஒன்றல்ல இரண்டல்ல ஒன்பது மாநிலங்களில் இந்த இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. அவற்றுள் வண்ணமிகு வளர்ச்சியின் நாயகன் என்று போற்றப்பட்டு முன்னிறுத்தப்பட்ட பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தும் ஒன்றாகும். அங்கே விழுந்த அடி அகில இந்தியாவிலும் ஒலித்து இருக்கிறது.
ஒன்பது மாநிலங்களிலும் மொத்தமாக 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்கள் பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டன. இடைத்தேர்தல்கள் நடைபெற்ற 33 சட்டபேரவைத் தொகுதிகளில் 26 தொகுதிகள் கடந்த தேர்தல்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்த தொகுதிகள். அவற்றில் 13 தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ளத் தகுதி இல்லாமல் பாரதீய ஜனதா தோற்று இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு கிடைத்த சாட்டையடிதான் அரசியல் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. மீண்டும் குஜராத் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர இப்படி ஒரு அரிச்சுவடியை மாற்றி எழுத ஆரம்பித்திருக்கிறதா என்பதே நமக்கு முன் உள்ள கேள்வி. அப்படியானால் குஜராத் முன் மாதிரி குஜராத் முன்மாதிரி என்று முழங்கபட்டதற்கு அர்த்தம் என்ன என்று நம்மை ஆழ யோசிக்க வைத்துள்ளது. குஜராத்தில் இந்த இடைத்தேர்தல் பாரதீய ஜனதாவுக்கு ஒரு ஆப்பசைத்த குரங்கு கதையை மற்றும் கதியை நினைவூட்டி இருக்கிறது. எப்படி என்றால் இப்போது குஜராத்தில் நடத்தப்பட்ட இடைத் தேர்தல் அந்த மாநில தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தலாகும்.
நரேந்திர மோடி உட்பட ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் , பாராளுமன்றத் தேர்தலுக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் திணிக்கப்பட்டு நடத்தப்பட்டன. இந்த ஒன்பது தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் பாரதீய ஜனதாவுக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டு இருக்கிறது. இப்போது உள்ளதும் போச்சடா நொள்ளக் கண்ணா என்ற நிலையில் குஜராத்தில் பாரதீய ஜனதா விழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறது. இத்தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்களும் அந்தக் கட்சியைக் குப்புறத் தள்ளி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நாம் குறிப்பிட விரும்புவது என்னவென்றால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து பல சாதனைகளை செய்தவர் என்று போற்றப்பட்டவர் – அதே மாயையில் இந்தியாவுக்குப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது தாறுமாறாக வளர்ந்திருந்த தாடியை ட்ரிம் செய்து- காஸ்ட்யூமை கதரிலிருந்து ரேமேண்ட்சுக்கு மாற்றி கண்டபடி வெற்றி முழக்கம் செய்தவருக்கு அவரது சொந்த மாநில மக்கள் தொடர்ந்து துணையாக இருப்பதுதானே முறை? ஆனால் குஜராத்தில் இது நேர்மாறாகி விட்டது. தன்னிடம் இருந்த தொகுதிகளையே எதிர்க் கட்சிகளிடம் தாரைவார்த்துவிட்டு , போர்க்களத்தில் ஆயுதங்களை இழக்கத் தொடங்கிய நிலையில் இன்று நரேந்திரமோடியின் நிலை ஆகிவிட்டது. இது ஜனநாயகத்தின் மறு பக்கம் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டது. ஜனநாயகத்தின் முன் அகம்பாவம், ஆணவம் ஆகியன செல்லாதவை என்பதை அகிலத்துக்கு அறிவித்துவிட்டன இந்த முடிவுகள்.
வடோதரா பாராளுமன்றத்துகுட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் பாரதீய ஜனதா தோல்விக்கு கீம்சு? சொல்லி இருக்கிறது (கீம்சு = குஜராத்தியில் ஹவ் ஆர் யு? ). அதே வடோதரா தொகுதியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்தாலும் முன்பு பெற்றதைவிட சுமார் இரண்டு இலட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றே வெற்றி பெற்று இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது பெரிய சறுக்கல்தான். வீழ்ச்சி விரைவில் என்று சாட்சி சொல்லும் சறுக்கல் இது.
அடுத்து இராஜஸ்தான் மாநிலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கழுவித் துடைக்கப்பட்ட கட்சியாக இன்று போய் நாளை வா! என்று சொல்லப்பட்ட நிலையில்தான் நின்றது. அனைத்துத் தொகுதிகளையும் பாரதீய ஜனதா கைப்பற்றி சரித்திரம் படைத்தது. ஆனால் இப்போது அங்கு தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரஸ் இடம் பாரதீய ஜனதா இழந்துவிட்டது. காங்கிரஸ் மீண்டும் துளிர்விடத் தொடங்கிவிட்டது என்பதற்கு இது ஒரு அடையாளம்.
இந்த இடைத் தேர்தலுக்கு முன்னால் கூட அதுவும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களில் ஏற்கனவே உத்தரகண்ட், பிகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்கொண்ட இடைத்தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, இப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கத் தொடங்கி இருப்பது ஆட்டம் போட்ட மனிதருக்கும் ஆரவாரம் செய்பவருக்கும் கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் ஜனநாயகம் தருவது சவுக்கடியும் சாட்டையடியும்தான் என்பதை பிஜேபி உணரத் தொடங்க வேண்டும்.
அஸ்ஸாமில் பிஜேபி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் முதல் முதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினரைப் பெற்று வலது காலை எடுத்து வைத்து அந்த மாநில சட்டமன்றத்தில் பிஜேபி நுழைந்து இருக்கிறது என்பவை பிஜேபிக்கு தாகத்தில் கிடைத்த ஒரு குவளைத் தண்ணீர்தான் . அவை ஒன்றும் பிஜேபின் பசியை நீக்கிவிடாது.
அடுத்து மிக முக்கியமாக, இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாரதீய ஜனதா ஆப்பு அசைத்ததால்தான் அதாவது சட்ட மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு போட்டி இட்டு வென்றதால்தான் பதினோரு தொகுதிகளிளும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் பாராளுமன்றத் தேர்தலில் மொத்தம் எழுபத்தி ஒரு தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று இருந்தது. அங்கு காங்கிரசும் ஆளும் சமாஜ்வாடிக் கட்சியும் சரித்திரம் காணாத தோல்வியைத் தழுவின. ஆனால் இப்போது காற்று திசை மாறிவிட்டது. காலம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் போட ஆரம்பித்துவிட்டது.
தான் ராஜினாமா செய்த பதினோரு தொகுதிகளில் மூன்றே மூன்று தொகுதிகளில்தான் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் , சரித்திரம் காணாத தோல்வியை சந்தித்த சமாஜ்வாடிக் கட்சி மீதி உள்ள எட்டு இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று விழுந்ததிலிருந்து எழுந்து நிற்கிறது. சமாஜ்வாடி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணம் சிதறாத முஸ்லிம் ஓட்டுக்களும் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தாததும் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும் பெருமளவில் பாரதீய ஜனதா மீது மக்கள் வைத்த நம்பிக்கை பொய்த்துப் போனதுதான் முதல் காரணம்.
முசாபர் நகர் கலவரத்தினால் அனுபவமற்ற முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராகக் கட்சிக்குள் எழுந்திருக்கும் எதிர்ப்புகள் இனிமேல் அடங்கிவிடும் என்பது மட்டுமல்ல, முசாபர்நகர் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் சமாஜவாதி கட்சியின் மீது ஏற்பட்டிருந்த அவநம்பிக்கையும் இப்போது சுத்தமாக துடைத்துப் போடப்பட்டுவிட்டது என்பதையும் இந்த முடிவுகள் காட்டுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாத நிலையில், சிறுபான்மை சமுதாய வாக்குகள் சிதறாமல் சமாஜ்வாடி கட்சிக்குக் கிடைத்திருப்பதும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது.
இடைத் தேர்தல்களில் மக்கள் ஆளும் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற வரட்டுத்தத்துவம் உ.பி யில் வெளிப்பட்டு இருக்கிறது என்று பாரதீய ஜனதா கட்சி ஒரு விவாதத்தை வைக்கிறது. ஆனால் இதே விவாதத்தை தான் ஆளும் இராஜஸ்தானுக்கு ஏன் வைக்க மறுக்கிறது என்று அரசியல் அறிந்தவர்கள் கேட்கிறார்கள். பதில் சொல்ல எந்த சவுண்ட் ராஜனும் இல்லை.
பாரதீய ஜனதாவின் இந்த தொடர்ந்த தோல்விக்குக் காரணங்களாக நாம் காண்பவை :-
மக்களின் மத்தியில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்தான். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைந்துவிடும் ; மோடி பிரதமரானால் ஒரு பெரும் மாயம் நிகழ்ந்துவிடும் என்றெல்லாம் மக்கள் நினைத்தார்கள். பிஜேபிக்கு வாக்களித்தார்கள்.
மக்கள் இவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்துக் குளிப்பாட்டி வைத்தார்கள் . இவர்களோ மிகக் குறுகிய கால ஆட்சியிலேயே வாலை ஆட்டிக்கொண்டு வந்த வழி ஓட எத்தனித்தார்கள்.
எந்த மாயமும் நிகழவில்லை. இரயில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது; எரிபொருள் கொள்கையில் எவ்வித மாற்றமுமில்லை; மக்களைப் பிரித்தாள சம்ஸ்கிருத வாரம் என்ற செத்துப் போன மொழிக்கு சிகை அலங்காரம் செய்ய முயன்றார்கள்; ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று மாற்றி அறிவித்தார்கள்; இந்தி பேசாத மாநிலங்களின் பல்கலைக் கழகங்களில் கூட இந்தியில் போதிக்க வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பினார்கள்; மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்தியில்தான் இருக்குமென்று அறிவித்தார்கள்; ஐ. நா. சபையில் கூட பிரதமர் இந்தியில் தான் உரையாற்றுவார் என்று அறிவித்தார்கள்; பிரதமருடன் மாணவர்கள் சந்திப்பில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு பிரதமர் இந்தியில் பதில் அளித்ததை தொலைக் காட்சியில் ஒளிபரப்பினார்கள் ; அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இல்லாமல் அமைச்சரவை அமைத்தார்கள்; கவர்னர்களை சாதாரண கான்ஸ்டபிள்கள் போல் இடமாற்றம் செய்து உள்நோக்கோடு அவர்களை இம்சை செய்தார்கள்; லவ் ஜிகாத்’, மதரஸாக்கள் - பயங்கரவாதப் பள்ளிகள் என்றெல்லாம் விஷத்தைக் கக்கும் வகையில். பாஜகவின் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது மக்களிடையே பாஜக மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை; ஈழத் தமிழர் பிரச்னை போன்ற வாக்குறுதிகளைக் காப்பாற்ற முதல் அடி கூட எடுத்து வைக்கவில்லை ஆகிய காரணங்களால் “ இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் “ என்று மக்கள் மனமாறத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதன் அடையாளம்தான் பாரதீய ஜனதாவின் தொடர் தோல்விகள்.
அடுத்து மராட்டியம் மற்றும் ஹரியானாவில் இடைத் தேர்தல்கள் அல்ல முழு மாநில சட்ட மன்றத் தேர்தல்களே நடைபெற இருக்கின்றன. தனது தவறுகளிலிருந்து பிஜேபி பாடம் கற்றுக் கொள்ள முயன்றால் மட்டுமே இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு ஆஹா ! இல்லாவிட்டால் சுவாஹா! தான்.
பெரிய வெற்றியின் கொண்டாட்டத்துக்குப் பிறகு இப்போது பிஜேபி பெற்றுவரும் தோல்விகளைப் பார்க்கும்போது ஒரு பழைய புலம்பல் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
“பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ ! – அது
பாதியிலே நின்னு போச்சே – ஏலேலோ !
பூமாலை வாடலையே ஏலேலோ !
போட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ !
இப்ராஹீம் அன்சாரி
13 Responses So Far:
அஸ்ஸலாமுஅலைக்கும்!BY ELECTION RESULTSஎன்றஆங்கிலசொல்BY ELECTION RESUTS என்றுகாணப்படுகிறது.தயவுசெய்துதிருத்தவும்.
''வருஷம்பூராவும்மக்கள்கொழுக்கட்டைஅவித்துபோடுவார்கள்''நன்றாக மென்றுமென்றுசாப்பிடலாம்என்றுமோடிகண்டகனவுக்குதேர்தல்முடிவு கொடுத்ததுஒருஅடி! கொழுக்கட்டை அவித்து போடும் மக்கள் ''அரைவேக்காடு'' பேர்வழிகள் என்று தப்பு கணிப்பு செய்த மோடிக்கு மக்கள் கொடுத்தது 'திருநெல்வேலிஹல்வா!' ஆட்சிக்குவந்ததும்மக்களின்தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒதுக்கிதள்ளிவிட்டு தன் சுய இச்சைகளையே நிறைவு செய்யமுயன்றமோடிக்குஇடைதேர்தல்முடிவுஒருபாடம்மட்டுமல்லஅபாய அறிவிப்பும்கூட. பிழைக்கதெரிந்தபிள்ளைக்குமல்லிகை பூ நஞ்சல்ல!
கடந்தவாரம்சலசலப்புகலகலப்புசலங்கைஒலிஏதும்இல்லாமல் வழக்கதிற்க்குமாறுபட்டு டல்லாக ஓடிய' பாலஸ்த்தீன கட்டுரையை ஒப்பிடும்போது இந்தக்கட்டுரையில்'' காலில் சலங்கைகட்டி காலோடு கால் பிண்ணி ஆடும்'ஓசை காதில்படும்போதுநெஞ்சிலும்காதிலும் தேனருவிதிரைஎழும்பிகாதில் பாய்கிறது. கட்டுரையில் வாசகனை கட்டிப்போடும் வித்தைகளை கெட்டியாக கட்டிபிடித்துக் கொள்ளவும். இதுஒருவேண்டுகோலேயன்றி கட்டளைஅல்ல!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காக்கா,
இடைத்தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு பீதியைக் கிளப்பியிருக்கும். மோடியின் மேடைப்பேச்சு, சாதுர்யமான, கவர்ச்சியான அறிவுப்புகள், ஊடக ஆதரவு போன்றவையோடு காங்ரஸ்ஸின் கையாலாகாதத் தன்மையுமே பிஜேபிக்கு அவர்களே கனவில்கூட கண்டிராத வெற்றியைத் தந்தது. இன்னும் அந்த மயக்கம் தீரல.
இப்ப அலார்ட்டாகிடுவாய்ங்க.
செம கட்டுரை. ஃபாரூக் மாமா பூடகமாகச் சொல்வதுபோல் "இப்றாகீம் அன்சாரி காக்கா"வின் கட்டுரையை வாசித்த முழு திருப்தி.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!
அன்புள்ள மச்சான் அவர்களுக்கு,
//டல்லாக ஓடிய' பாலஸ்த்தீன கட்டுரையை ஒப்பிடும்போது //
பாலஸ்தீனம் வேறு அரசியல்
இந்தக் கட்டுரை இந்திய அரசியல்.
அதை நாம் எழுதிவிட்டு சுவைகூட்டுவதற்காக இரண்டு மூணு தக்காளிகளைப் பிசைந்துவிட வேண்டும். அதை தவறு என்று பெரியவர்கள் சொல்வதால் ஆணம் கடுத்துக் கிடந்தாலும் கிடக்கட்டுமேன்று விட்டுவிட்டேன்.
இது இந்திய அரசியல் கொஞ்சம் புகுந்து விளையாடலாம். ஒருவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நம்பியே நிறைவில் பாட்டெல்லாம் எழுதி இருக்கிறேன்.
இதற்கும் ஆட்சேபனைகள் வந்தால் அடுத்தது வேப்பங்கொட்டை சாம்பார்தான்.
தம்பி சபீர் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
நல்ல "பிடி" கொழுக்கட்டை
நல்ல அலசல் ...காவிகளுக்கு வயித்துல கலக்கல் ..ஆக்கம் ஜொலிக்கின்றது...நன்றி மாமா
வேஷ்டி அவிழ்ந்து விழுகிறது, இனி தொங்கும் நிலை சீக்கிரமே ஏற்படும்...
செழிப்பான அலசல் ! நல்ல காரம்...
சரியான அலசல்.
மோடியின் அமெரிக்க வருகையை பல சீக்கிய அமைப்புக்கள் எதிர்க்கின்றன.போராட்டம் செய்ய உள்ளன.
மோடியே ஓடிப் போ!அமெரிக்காவில் கொதிப்பு!!
http://peacetrain1.blogspot.com/2014/09/blog-post_23.html
Post a Comment