குறுந்தொடர் - 1 / 3
கடந்த சில வருடங்களாக இட ஒதுக்கீடு என்ற சொற்றொடரை நிறையவே கேட்டு வருகிறோம். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) ஆனாலும் ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசு வேலை வாய்ப்புகளிலும், மேற்கல்வி பட்டறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடிவருகின்றன.
அரசும் ஓரளவு ஒதுக்கிக்கொடுத்தாலும் அது போதாது என்று உண்மையிலும் பெயரளவிலும் கூட இயக்கங்கள் போராடி வருகின்றன. அதேபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் அவர்களுக்கான இயக்கங்களும் கூடவே போராடி வருகின்றன. இதைப்பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.
முதலாவதாக இட ஒதுக்கீடு என்பது என்ன? அது ஏன் அவசியம்?
இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை சமுதாயத்தின் அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்து எழுச்சி பெறக்காரணமே இந்திய சமூக வாழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலவி வந்த ஒருவகை இன ஒதுக்கீடுதான். அதாவது, இட ஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்பி, போராடுவதற்கு காரணம் இன ஒதுக்கீடாகும்.
இந்தியாவில் ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும், வர்ணாசிரமகொள்கைகளும் மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை ஒதுக்கீடு செய்தன. செய்யவேண்டிய தொழில்களை இவைகள் இனவாரியாக ஒதுக்கீடு செய்தன. தலையில் தோன்றியவன், வயிற்றில் தோன்றியவன், காலில் தோன்றியவன் என்று பிறப்பில் இன ஒதுக்கீடு செய்தன.
தலையில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டவன் தரணி ஆளவும், காலில் தோன்றியவன் என்று கற்பிக்கப்பட்டவன் கக்கூஸ் அள்ளவும்தான் என்று கடவுளின் பெயராலேயே தொழில்களை இனங்களுக்கிடையில் ஒதுக்கீடு செய்தன.
ஒரே இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் ஆண்டான் அடிமை வர்க்க பேதம் கற்பிக்கப்பட்டு அதை மக்களும் ஏற்றுக்கொண்டு கைபொத்தி, மெய்பொத்தி, தலை ஆட்டி வாழ்ந்து வந்த காரணத்தால் இனி இது பொறுப்பதற்கில்லை என்ற உணர்வு பெற்றவர்கள் சமூக நீதி வேண்டும் என்று போராடியதன் காரணமாக ஆங்கில ஆட்சியிலேதான் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் வழங்கப்பட தொடங்கப்பட்டது.
ஆகவே ஆட்டிப்படைத்த ஆரிய மனுநீதி என்ற நஞ்சானது, மனிதனின் பிறப்பிலேயே கற்பித்த பேதம் என்கிற இன ஒதுக்கீடுதான் பேதங்களை மாற்றி சமூக நீதி வழங்குவதற்கும் ஓர் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் எழ காரணமானது.
மிக சுருக்கமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட- உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை எல்லா உரிமைகளையும் கால்மேல் கால்போட்டு அனுபவித்து வந்த மக்களையும் ஒரே நிகராக கருத முடியாது – இதுவரை மேடாக இருந்ததை சமமாக்க வேண்டுமானால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டாகவேண்டும் என்ற அடிப்படைதான் இட ஒதுக்கீடு.
கூனிக்குறுகி நின்றவனை கை கொடுத்து தூக்கிவிட்டு ஏணியில் ஏற்றி விடுவதுதான் இட ஒதுக்கீடு. ஆனாலும் சமூக நீதிக்கு தீர்வான இட ஒதுக்கீட்டை, தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக நினைக்கும் ஒரு சில சமூக விரோத மக்களைக் குறி வைத்துத்தான் இந்தக் கட்டுரையே எழுதப்படுகிறது!
அரபு நாடுகளின் பொருளாதார செழுமைக்குக் காரணம் எண்ணை வளம்; தென் ஆபிரிக்காவின் செழுமைக்குக் காரணம் தங்க வளம்; மலேசியாவின் செழுமைக்குக் காரணம் மண்ணின் வளம்; ஜப்பானின் செழுமைக்குக் காரணம் மனித மூளை வளம். ஐரோப்பிய நாடுகளின் செழுமைக்குக் காரணம் உலகைச் சுரண்டிய வளம்; ஆனால் இந்தியா, சீன நாட்டில் இருப்பதோ மனித வளம் மட்டுமே. இருக்கும் மனித வளத்தை பயன்பட வைத்து சீனா இன்று பொருளாதாரத்தில் கொடி கட்டி பறக்கிறது.
சீனாவுக்கு அடுத்த மனிதவளத்தை பெற்றிருக்கும் இந்தியா ஏன் பின்தங்கி இருக்கிறது? ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தங்கங்களை வாங்கி குவிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இருக்கும் இந்தியாவின் பெயரை ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் கண்ணில் விளக்கெண்ணெ ஊற்றித் தேடவேண்டி இருக்கிறது. காரணம் சீனா தனது மனிதவளத்தின் 89% சதவீதத்தை உற்பத்திக்கு (PRODUCTIVITY) பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மனிதவளம் வெறும் 22% தான். காரணம் எண்ணிக்கையில்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், மனிதவளத்தின் தரத்தில் எட்டாத தூரத்தில் இருக்கிறோம். QUANTITY மட்டும்தான் இருக்கிறது QUALITY இல்லை.
இப்படி தரமற்ற மனிதவளம் உருவாகிடக் காரணம் ஆரியர்கள்தான். அவர்களின் வர்ணாசிரமக் கொள்கைகள்தான். குறைந்த அளவு உள்ள ஒரு சமுதாயம் இருக்கும் வளங்களை எல்லாம் சுரண்டிக்கொண்டு அதிக அளவு இருந்த சமூகங்களை மேலே எழவிடாமல் தலையில் தட்டி அடக்கிவைத்ததுதான் காரணம்.
கல்வியை ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் கற்கவேண்டுமென்று கடவுளின் பெயரால் போதித்தார்கள். அரசராகவும், அமைச்சராகவும், ஆளும் வர்க்கமாகவும் ஆரியர்கள்தான் வரவேண்டுமென்று ஆண்டவன் கூறியிருப்பதாகப் புராணங்களை அவிழ்த்துவிட்டார்கள். அரியணைகளில் ஏறும் தகுதி அவர்களுக்கு மட்டுமே என்று ஆர்ப்பரித்தார்கள். ஆளும் பிரதிநிதிகளாகவும், ஆளுனர்களாகவும் அங்கவஸ்திரம் தரித்த துபாஷ்களாகவும், திவான்களாகவும் அவர்களுக்குள் அமர்த்திக்கொண்டார்கள். பல்லக்கில் அமரும் பவிசு தங்களுக்கே என்று பறித்துக்கொண்டார்கள்.
அரண்மனை சேவகர்கள், வீட்டு வேலைக்காரர்கள், துண்டு துணி துவைப்பவர்கள், கூட்டுபவர்கள், பெருக்குபவர்கள், மலம் அள்ளுபவர்கள், போர்வீரர்கள், விவசாயிகள் , பல்லக்கு தூக்கிகள் என்ற வேலைகளுக்கு பரமன் பாதத்திலே பிறந்த வர்க்கம் என்ற சூத்திரனை உருவாக்கி அடக்கி அறிவை பெருக்கவிடாமல் வைத்து இருந்ததால் மனிதவளத்தில் தரமற்ற நிலை ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் நிகழக்காரணமாயிற்று. அந்த விளைவுகளின் தொடர்ச்சிதான் இன்றுவரை இந்திய மனிதவளம் சீனாவோடு ஒப்பிடுகையில் தரமற்று இருப்பதற்கு காரணம்.
ஆனால் இன்றும் கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதிக்க சக்திகளிடமிருந்து எதிப்புக்குரல் எழுகிறது. ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது, நாம் கேட்பது, அரசால் தர முடிவது 12% தொழில், பதவிகளிலிருந்து மட்டுமே. காரணம் ஏற்கனவே 88% தொழில்கள், பதவிகள் தனியார்களுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. அரசிடம் இட ஒதுக்கீட்டுக்காக தர முடிவது இந்த வெறும் 12 சதவீதத்திலிருந்துதான். எல்லோரையும் திருப்தி படுத்தியாக வேண்டும்.
இந்த குறைந்த சதவீதத்தைக்கூட தரவிடாமல் ஆதிக்க சக்திகள் இட ஒதுக்கீடுக்கு எதிராக திரளுகின்றன. ஆகவேதான் தனியார் துறைகளிலும் அரசின் அளவுகோள்படி இட ஒதுக்கீடு தரவேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
குறுந்தொடர் - 2 / 3
நாகரிகம் வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் மேலை நாடுகளில் கூட சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு உண்டு. உதாரணமாக அமெரிக்காவில் பல ஆண்டுகளாய் அடிமைகளாய் ஒடுக்கப்பட்டு நடத்தப்பட்ட கருப்பினத்தவருக்கு இட ஒதுக்கீடு உண்டு.
நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் மத்திய மாநில அரசுகளில் ‘குரூப் ஒன்று சர்வீசுகள்’ என்ற பகுப்பு கோலோச்சும் அரசுப்பதவிகளாகும். இந்த பதவிகளில் மக்கள்தொகையின் இன சதவீதத்துக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையாக அமர்ந்து இருப்பவர்கள் யார்? தனியார் மற்றும் அரசுத்துறைகளில் துறைத்தலைவர்கள், இயக்குனர்கள்,முதன்மை செயலாளர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் இப்படி அதிகாரத்தை வைத்திருக்கிற பதவிகள் இன்றும் யாரிடம் இருக்கின்றன.
மேல்மட்ட சாதியினரிடமும், ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்கமாக இருந்தவர்களிடமும்தானே. அதாவது 75 சதவீத உயர் பதவிகள் மக்கள் தொகையில் 3 சதவீதமே இருக்கக்கூடிய உயர் சாதியினரிடம்தான் இன்றும் இருக்கிறது. சென்று பாருங்கள் தலைநகர் டில்லியில் மற்றும் மாநில தலைநகரங்களில் உண்மை தெரியும். அப்படியே மற்ற சாதியினர் இருந்தாலும் பார்பனீய மனப்பான்மை படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள். (பார்ப்பனர்கள் என்பது வேறு- பார்ப்பனீயம் என்பது வேறு)
இந்த நிலையில் அடித்தட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட, இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினருக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டுக்கு மேல்தட்டு மக்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்புவதுதான் பெரும் வேடிக்கை. சமுதாயத்தில் சமத்துவம்- பொருளாதாரத்தில் சமத்துவம்- வேலைவாய்ப்பில் சமத்துவம்-கல்வியில் சமத்துவம் போன்ற ஒரு மக்கள் அரசின் கோட்பாடுகளை ஒரு நலம்பேணு அரசு (WELFARE STATE) தனது மக்களுக்கு நடைமுறையில் தரவேண்டுமானால் நலிவுற்றோர்க்கு இட ஒதுக்கீடு அவசியம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்கள் 16 ன் படி State may discriminate the socially and educationally backward classes for public employments என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அரசுக்கு தனது மக்களில் சமூகரீதியாகவும், கல்வியறிவு ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ளவர்களை அரசின் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் பாகுபடுத்திக்கொள்ள அதிகாரம் உண்டு. இதை பாசிடிவ் டிஸ்கிரிமிநேஷன் (உடன்பாடான பாகுபாடு) என்று கூறுவார்கள்.
பலவருட போராட்டங்களுக்கு பிறகு மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1979 வருடம் மண்டல் கமிஷன் தங்களின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
அதன் பரிந்துரையின்படி இந்தியாவின் 27% (1931-census) உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளில் 27% க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதைக்கேட்டதும் கொந்தளித்த உயர் சாதியினரின் எதிர்ப்பால் முதுகெலும்பில்லாத அரசுகள் மண்டல் கமிஷன் தந்த அறிக்கையின் தலையில் கல்லைப்போட்டு அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தன. 1989- ல் அதை தோண்டி எடுத்த வி.பி.சிங் அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் தைரியமாக கொண்டுவந்தது.
பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அது பொதுப் பட்டியலை பாதிக்கும் எனக் கருதிய பொதுப்பட்டியலை சேர்ந்தோர், பாரதீய ஜனதா கட்சி என்கிற ஒரு பிற்போக்கு மதவாத உயர்சாதியினரின் சுட்டுவிரலுக்கு ஊழியம் செய்யும் தேசியக்கட்சியின் மறைமுக ஆதரவோடு கடுமையாக எதிர்த்தனர்.
ஒரு கல்லூரி மாணவனுக்கு தீ வைத்து அவன் இதனை எதிர்த்து இறந்தான் என்று நாடகமாடினர். வி. பி. சிங் என்ற சிங்கம் பதவி இழந்தது. இட ஒதுக்கீடு நீதிமன்றத்தில் வழக்கானது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகபட்சம் ஐம்பது சதவீதத்திற்குள்ளாக நாட்டின் மொத்த இட ஒதுக்கீட்டையும் அடக்கிவிடவேண்டும் என்றும் மீதமுள்ள ஐம்பது சதவீதம் பொதுப்போட்டிக்கு விடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஒரு உயர்ந்த நோக்கம், உயர்சாதியினரின் சகிப்புத்தன்மை இல்லாததாலும், ஆதிக்க சக்திகளாலும் இப்படி அடிக்கடி அல்லலுக்கு உள்ளானது.
பிறப்பிலே, குடிக்கும் தண்ணீரிலே, நடக்கும் தெருவிலே, அணியும் ஆடையிலே ,உணவருந்தும் விடுதிகளிலே, பயணிக்கும் பேருந்துகளிலே, படிக்கும் பள்ளிகளிலே, எல்லாம் பாகுபாடுகள் என்று காலம் காலமாக காட்டிவிட்டு திடீரென்று எல்லோரும் சமம் என்று அறிவித்தால் மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடுமா? மனமாற்றம் இல்லாமல் நிறைவேறிவிடுமா?
இட ஒதுக்கீடு மட்டும் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடுமா?
வெறும் வேலைவாய்ப்பும் , கல்வி வாய்ப்பும் மட்டும் அளித்ததால் சமுதாயம் திருந்திவிட்டதா? வன்கொடுமை சட்டம் அமுலில் இருக்கும்போது வன்கொடுமைகள் நடக்காமல் இருக்கிறதா? நாகரிகம் படைத்த சமுதாயம் என்று மார் தட்டிக்கொள்ளும் நாட்டில்தான் இன்றும் இப்போதும் கீழே பட்டியலிடப்படும் பாதகங்களும் நடைபெறுகின்றன.
- மனிதக்கழிவுகளை மனிதர்களே சுமக்கும் நிலை மாறவில்லை.
- தோட்டிகள் என்று ஒரு சமுதாயத்தை முத்திரைகுத்தி வைத்திருப்பது மாறவில்லை.
- தமிழ் நாட்டில் கீரிப்பட்டி , பாப்பாரப்பட்டி பஞ்சாயத்துகளில் தலித்துகள் தலைவர்களாக வர முட்டுக்கட்டை நீடிக்கிறது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னும் அவரால் சுதந்திர தின கொடியேற்ற முடியவில்லை.
- திண்ணியம் என்ற கிராமத்தில் சாதிக்கொடுமைகள் மனித மலத்தை வாயில் வைத்து திணித்து தண்டிக்கும் அளவு போய்விட்டது.
- உணவுவிடுதிகளில் இரட்டை குவளை முறை இன்னும் மாறவில்லை.
- உத்தபுரம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டோருக்கென எழுப்பப்பட்ட சுவர் இடிக்கப்பட்டதில் எண்ணற்ற பிரச்னைகள்.
- திருக்கோயிலூர் அருகே கற்பழிக்கப்பட்ட இருளர் இன மகளிருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசு அவர்களின் கற்புக்கு ஐந்து லட்சம் விலை வழங்கி வாய் அடைக்கப்பார்க்கிறது.
இப்படி இந்த பட்டியல் இன்னும் நீளும்.
ஆதிக்க சமுதாயம் நடத்தும் அடக்குமுறைகள் இன்னும் அடங்கவில்லை என்பதைத்தான் இவைகள் பறைசாற்றுகின்றன.
முதலாவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சமூக அந்தஸ்து சரிசமமாக கிடைக்கவேண்டும் என்று எண்ணினால் இடஒதுக்கீடு மட்டும் அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்துவிடாது என்பதையும், பொருளாதார வளர்ச்சி மட்டும் அவர்கள் விரும்பும் சமூக நிலை உயர்வை கொடுத்துவிடாது என்பதையும் திண்ணமாகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் உணரவேண்டும்.
எடுத்துக்காட்டாக:-
நாட்டின் உயர் பதவி என்று கருதப்படுகிற உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்க வந்த உயர் சாதி நீதிபதி ஒருவர் ஏற்கனவே அந்த நாற்காலியில் இருந்து ஒய்வு பெற்றுப்போனவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பூசாரிகளை வைத்து மாட்டு மூத்திரம் தெளித்து நாற்காலிக்கு பரிகார பூஜை நடத்திய பிறகே பதவி ஏற்றார் என்பது பத்திரிக்கை செய்தி.
ஜனாதிபதியாக கே.ஆர். நாராயணன் இருந்துவிட்டுப்போன பின்பு அதற்கு அடுத்துவந்தவரும் ஹோமம யாகம் நடத்தி தீட்டுக்கழித்துத்தான் ஜனாதிபதி மாளிகையில் பால் காய்ச்சினார்.
கேரளத்தில் A.K.ராமகிருஷ்ணன் என்ற தலித், தபால் தந்தி துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆக இருந்து ஒய்வு பெற்றார். அவரின் அறைக்கு கோமியம், பசுவின் சாணம் ஆகியவை தெளிக்கப்பட்டு தீட்டு கழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் இருந்த அலுவலகம் முழுவதும் அதே சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பாருங்கள். . (http://scstemployees.blogspot.com/2011/04/sc-officer-room-cleansed-by-cow-dung.html)
இப்போது - பல நாட்களாக மனதை அறுத்துக்கொண்டு இருக்கும் நான் எழுத நினைத்த விஷயத்துக்கு வருகிறேன்.
குறுந்தொடர் - 3/3 - நிறைவு
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் , இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினரும் கைகோர்த்து அரசியல் ரீதியாக இணைந்தால் ஆட்சிபொறுப்பும் அரசாலும் பொறுப்பும் அவர்களுக்கே வந்து சேரும் என்பது ஆக்கரீதியான உண்மை. ஆனால் துரதிஷ்டவசமாக இவ்விரு சமுதாயத்தில்தான் சமுதாயத்துக்குள்ளே பிளவுகளும்,கட்சிகளும்,இயக்கங்களும் அதிகமாகிவிட்டன. தலித் இனங்களின் மக்களுக்கும், இஸ்லாமியருக்கும் பொதுவானதும், கட்டுக்கோப்பானதுமான சக்திவாய்ந்த சங்க்பரிவார் அமைப்புபோன்ற எதிரிகள் இருக்க, அவர்களுக்கு வெண்சாமரம் வீசி, இந்த இன மக்கள் அடித்துக்கொள்வது தங்களின் சொந்த இனமக்களுடனே என்பது மிகவும் வேதனை தரும் நிலைமையாகும்.
விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், வன்னியர் சங்கம், பாட்டாளி இயக்கம், பூவை செங்குட்டுவன், பொன் குமார் தலைமயில் உள்ள சிறு சிறு இயக்கங்கள் என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டோருடைய அமைப்புகளும், விவசாய அணிகளும், மீனவர் அமைப்புகளும், முஸ்லிம் லீக், தேசியலீக், தமிழ்நாட்டு லீக், த.த.ஜ. , இ.த.ஜ. , த. மு.க. , ம.நே.ம.க , பாபுலர், எஸ். டி. பி. ஐ. என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், தலித் கிருத்துவ அமைப்பு, நாடார் கிருஸ்துவ அமைப்பு என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இதர சிறுபான்மை அமைப்புகளும் ஓர் அணியில் நின்றால் ஆண்டாண்டுகாலமாக ஆட்டிப்படைத்து வரும் ஆரிய விஷத்தை முறிக்கும் மருந்தாக அமையும். இந்த மாற்று அரசியல் புரட்சிதான் இதற்கு விடிவாக இருக்க முடியுமே தவிர நாலு அரசுப்பதவிகள் கிடைத்துவிட வழிவகுக்கும் இட ஒதுக்கீடு மட்டும் போதும் என்பது அழுகிற பிள்ளைக்கு ஐஸ் கிரீம் கொடுப்பதற்கு சமமானது. ஆதிக்க வர்க்கங்கள் பால் என்று காட்டுவது பால் அல்ல பாலிடால் என்று உணரவேண்டும். அதிகாரங்களை மீட்டெடுக்க அமைப்பும் குறிக்கோளும் ஆழமாக இருந்திட வேண்டும்.
தலித்துகள் அவர்களுக்கு சரிநிகர் சமூக அந்தஸ்தை தருகிற இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் பக்கம் திரண்டு வரவேண்டும் என்று நான் வெளிப்படையாக அழைப்பு விட விரும்புகிறேன்.
அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். பிறப்பிலேயே பேதம் கற்பித்த முந்தைய ஆரிய மனுதர்மம் சார்ந்த சமூக அமைப்புக்கும், இஸ்லாமிய இறைவேதம் வரையறுத்துச் சொல்கிற....
- அவனே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான் (4:1).
- உங்களை அன்னையரின் வயிற்றிலிருந்து படைத்தான்.காதும், கண்ணும், இதயமும் வழங்கினான் (16:78-83).
என்கிற திருகுர்-ஆன் வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர்ந்து ஆராயவேண்டும். இஸ்லாம் கூறுகிற ஐந்து கடமைகளின் அடிப்படையே சமத்துவமும், சகோதரத்துவமும் என்பதை தலித் சமுதாயத்தினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தலித்துகள் தானாக விளங்கிக்கொள்வார்களா?
இஸ்லாமிய இயக்கங்கள் என்று கூறிக்கொண்டு சகோதர யுத்தம் நடத்துகிறவர்கள் இஸ்லாத்தை வளர்ப்பதில் இனி தங்கள் சக்திகளை செலவிடவேண்டும். கிருஸ்துவ அமைப்புகளைப் பாருங்கள். மனிதன் துன்பப்படுகிற இடங்களான மருத்துவமனைகளையும், சிறைக்கூடங்களையும் தேர்ந்தெடுத்து நோக்கிச் சென்று தங்கள் மதத்தை பரப்புகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாமோ மாறுபட்ட இயக்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து வன்முறை ஏவுகிறோம்- வசைபாடும் சுவரொட்டிகளை ஒட்டுகிறோம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மார்க்க கடமையை மறந்தே போனோம்.
இஸ்லாமிய இயக்கங்களில் சிதறிக்கிடந்து தங்கள் சக்திகளை வீணர்களை புகழவும், அவர்களுக்காக கோஷம் போடவும், கொடிப்பிடிக்கவும், நம்மைத்தாக்கி நாமே வெட்டிக் கொள்ளவும், சுட்டுக்கொள்ளவும், துணிந்து நிற்கும் அருமை இளைஞர்களே! இந்த நல்ல காரியத்துக்கு ஒன்று திரளுங்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதில் அந்த சக்திகளை செலவழிப்போம்! மதமாற்றதடைச்சட்டம் என்பதெல்லாம் மண்ணோடு மக்கிப்போய் நெடுநாள் ஆகிவிட்டது.நம்மை ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிராக – அதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் கை கோர்ப்போம். இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும் அதுவும் காலத்தின் கட்டாயமான தேவையான நடவடிக்கையாக இருக்கும்.
அன்பார்ந்த விடுதலைச் சிறுத்தை, புதிய தமிழகம் மற்றும் கட்சிகளைச் சார்ந்த தலித் இன உண்மை தமிழ் சகோதரர்களே!
ஆண்டாண்டு காலமாக ஆரிய நச்சுப்பாம்புகளின் வர்ணாசிரம- வர்ணபேத- பிரித்தாள்கின்ற சூழ்ச்சிகளில் சிக்கி அடக்கப்பட்டு- ஒடுக்கப்ப்பட்டு- இடுப்பில் துண்டுகட்டி- பல்லக்குத்தூக்கிகளாக பழக்கப்பட்டுப்போன பழந்தமிழ் இனமே!
ஆலயம் கட்டினாலும் அதில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அடக்குமுறைக்கு ஆளான இனமே!
தனி வீதி, தனித்தெரு, தனிக்குவளை, தனிக்குளம் என்று தடுத்துவைக்கப்பட்ட தமிழினமே!
தொட்டால் பாவம்! எதிரில் வந்தால் தீட்டு ! காலிலே பிறந்தவன் என்றெல்லாம் பிரித்துவைக்கப்பட்ட இனமே!
உங்களை இஸ்லாம் அழைத்துக் கொண்டே இருந்தது. எங்களுடன் அரசியலில் கைகோர்க்க மட்டுமல்ல...
ஒரு தட்டில் நாம் அனைவரும் இருந்து உண்ணும் சமத்துவத்தை தர! உறவு முறை வைத்து அழைத்துக்கொள்ள! எங்கள் பெயரே உங்களுக்கும் சூட்டப்பட!
ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பவர்களை தொழுகைக்கு நீங்கள் அழைப்புவிட!அதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள! நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறைவனை தொழ! ஓர் குரலில் கலிமாவும் ஆமீனும் முழங்க!
வாருங்கள் கை கோர்ப்போம் சகோதரர்களே.!
உரசல் உறவுக்குள் அழைக்கிறது...
இபுராஹீம் அன்சாரி
காலச் சூழலுக்கேற்ப இது ஒரு மீள்பதிவு