Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 25 18

அதிரைநிருபர் பதிப்பகம் | January 16, 2014 | , , , , , ,


தெருவெங்கும்  சுவரொட்டிகள் ஓட்டப்  பட்டுக் கொண்டிருந்தன. விதவிதமான நிறங்களில் ; வெவ்வேறு அளவுகளில்.   விஷயம் வேறொன்றுமல்ல. நாட்டில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்று கூடி வரப் போகும் பாராளுமன்றத் தேர்தல் பற்றி ஒரு ஒருமித்த முடிவு எடுக்கப் போகின்றனவாம். அதற்கான அழைப்புச் சுவரொட்டிகள்  தான் அவ்விதம் ஓட்டப்  பட்டவை. ( அதிர வேண்டாம் - கற்பனையே)

அந்த சுவரொட்டிகளைப் பார்த்த ஆவ்மீனும் மொம்மீனும் பேசிய உரையாடல் இதோ .   

ஆவ்மீன் :  என்ன மொம்மீன் ஊர் பூரா ஒரே சுவரொட்டியா இருக்கு?

மொம்மீன்: ஆமா! எலெக்ஷன் வறுதுலே. அதுக்காக எல்லா குரூப்பும் ஒண்ணு கூடிப் பேசப் போகுதுங்களாம். 

ஆவ்மீன் : ஒரே இடத்துலே நடக்குற ஒரு கூட்டத்துக்கு மொத்தமா ஒரு நோட்டீஸ் அடிச்சா பத்தாதா? இப்புடி ஆளுக்கு ஆள் தனித்தனியா நோட்டீஸ் ஒட்டி  ஊர் செவத்தை எல்லாம் வீணாக்கனுமா? 

மொம்மீன்: சரிதான் என்னா நடக்குதுன்னு வேடிக்கை பாக்கலாம். 

இவர்கள் பேசிக் கொண்டபடியே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு கல்யாணமண்டபத்தில் கூட்டம் ஆரம்பமானது. அனைத்து முஸ்லிம்களின் இயக்கங்களில் இருந்தும் தாடிகளை ட்ரிம் செய்துகொண்டு பிரதிநிதிகள் வந்து இருந்தார்கள். பலவித விவாதங்கள் நடந்தன. ஆனாலும் பொதுவான விவாதத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் சமுதாய ஒற்றுமை. ஆனால் பேசப்பட்ட செய்திகளும் பரிமாறிக் கொள்ளப்பட்ட வார்த்தைகளும் வாசகங்களும்  அதற்கு நேர்மாறானவை; பரிமாறப் பட்ட வார்த்தைகள் தணிக்கைக்கு உட்பட்டவை.  சம்சாவும் தேநீரும் மட்டும் அனைவராலும் ஒற்றுமையாக உள்ளே தள்ளப்பட்டு ஒற்றுமையாக ஒரு ஏப்பத்துடன் கூட்டம் கலைந்தது. 

ஆரம்பமாக , தமிழக அரசியல் வானில் இருக்கும் பல்வேறுபட்ட இஸ்லாமிய இயக்கங்கள் பற்றி வேதனையுடன் ஒரே ஒரு கருத்தை சுட்டிக் காட்டிக் குறிப்பிட விரும்புகிறோம்.  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முஸ்லிம்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு வருகின்றார்கள். 

* கேரளாவில்  முஸ்லிம்கள் ஒன்றுபட்டதால் 20 -க்கும் அதிகமான M.L A மற்றும் ஆறு மந்திரிகள் கிடைத்தார்கள்.

* உ.பி மாநில முஸ்லிம்கள் ஒன்றுபட்டதால் சமூக ரீதியாக பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அரசியலில் ஆட்சியமைப்பில் முஸ்லிம்கள் ஒரு அலட்சியப் படுத்த முடியாத சக்தியாக விளங்குகிறார்கள். 

* மேற்கு வங்காள முஸ்லிம்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதால் மதரசா வாரியத்திற்கு தனி மந்திரி உள்பட பல்வேறு சலுகைகள்.

* தற்போது கர்நாடகாவிலும் B J P ஆட்சியை அகற்ற முஸ்லிம்களின் வாக்கு ஒட்டுமொத்தமாகவும் ஒற்றுமையாகவும் பிஜேபிக்கு எதிராக  காங்கிரசுக்கு விழுந்ததே காரணம்.

ஆனால் நமது  தமிழகத்தில் காயிதே மில்லத் காலத்திற்கு பிறகு படிப்படியாக பிரிந்து தற்போது சுமார் 24 இயக்கங்களாக பிளவுபட்டு நிற்கின்றது தமிழக முஸ்லிம் சமுதாயம். இந்தப்  பிளவின் காரணமாக சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் மார்க்கரீதியாக பல்வேறு விதங்களில் பின்தங்கி உள்ளோம். தலைவர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தியாகம் செய்துவிட்டு சமூதாய மேம்பாடு கருதி ஒன்றுபடவேண்டும். இல்லேயேல் அடுத்த தலைமுறையின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும் என்பது உறுதி. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமூதாய தலைவர்களுக்கு மன மாற்றத்தை             தந்தருள்வனாக என்று துஆச் செய்தவர்களாக இந்தப் பதிவை வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்கிறோம். 

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மவுலானா அபுல் கலாம் ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவே பத்து ஆண்டு காலம் இருந்தார். முதல் பிரதமராகும் வாய்ப்பும் அவருக்கே இருந்தது. ஆனால் பாகிஸ்தான் பிரிக்கப் பட்டதால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போனது. அரசியல் நிர்ணய  சபையிலும் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை புறந்தள்ளிட இயலாது.  ஆங்கிலேயர் ஆட்சியில் அமைந்த சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு முப்பத்தேழு இடங்கள் இருந்தன. சுதந்திரம் பெற்ற பிறகு அமைந்த சட்ட மன்றங்களிலும் முஸ்லிம்கள் கணிசமான இடங்களைப் பெற்று ஆட்சி அதிகாரங்களில் அங்கம் வகித்தார்கள். கண்ணியத்தின் காவலராம் காயிதே மில்லத்தின் தலைமையில் இந்தியாவில் முஸ்லிம் லீக் நடை போட்டு வந்த நடை வீறு நடையும் வெற்றி நடையுமாகும். 

சென்னை இராஜதானி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சி. இருபத்தி ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குழு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து இருந்தது. சிறந்த எதிர்க் கட்சித் தலைவராக அவர்கள் பணியாற்றி வந்தார்கள்.  

தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்த   1967 தேர்தலிலும் முஸ்லிம்கள் முக்கிய பங்கு வகித்தனர்.  இன்று நாம் பார்க்கிறோம் இரண்டு மூன்று சீட்டுக்களைப் பெற நமது முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் புரங்களிலும் தோட்டங்களிலும் அங்கு இருக்கும் பந்தலுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டும் பூங்கொத்துக்களை கரங்களில் தாங்கிக் கொண்டும் ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால்   இந்த இயக்கத் தலைவர்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறோம்.  

1967 தேர்தலில் முஸ்லிம்களை மதித்த அண்ணா  அன்று இருந்த மொத்த தொகுதிகளின் பட்டியலை சென்னை புதுப் பேட்டையில் இருந்த காயிதே மில்லத் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி இஸ்மாயில் சாகிப் அவர்களுக்கு வேண்டிய தொகுதிகளை முதலில் டிக் செய்து வாங்கிவரச் செய்து அதன் பிறகுதான் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் என்பது வரலாறு. காயிதே மில்லத் அவர்கள் பனிரெண்டு தொகுதிகளை டிக் செய்து கொடுத்தார்கள். ஆனால் அண்ணா ஏற்க மறுத்தார். முஸ்லிம் லீக் குறைந்தது பதினைந்து இடங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆனால் காயிதே மில்லத் பனிரெண்டுமட்டுமே போதுமென்று கூறி பனிரெண்டு தொகுதிகளிலும் நின்று அனைத்திலும் முஸ்லிம் லீக் வெற்றி வாகை சூடியது. 

அன்று முஸ்லிம்களுக்கு அரசியலில் தனி கவுரவம் இருந்தது . அதனால் இவ்விதமெல்லாம் மதிக்கப் பட்டார்கள். இன்றோ முஸ்லிம்கள் சாப்பிடும் நண்டு அவர்களின் வயிற்றில் மட்டுமல்ல குணத்திலும் புகுந்துவிட்டது. ஒரு சிற்றோடையாக ஓடிக்  கொண்டிருந்த சமுதாயம் இன்று பல்வேறு இயக்கங்களாக உருவெடுத்து சமுதாயத்தின் கரங்களில் இருந்து ஒற்றுமை எனும் கயிற்றை கத்தி கொண்டு அறுத்து துண்டு துண்டாக்கி விட்டது. 

ஒரே இறை வேதத்தை கொண்ட இஸ்லாத்தில்  நூற்றுகணக்கான ஜமாத்கள்-. இயக்கங்கள்-. பிரிவுகள்-. மற்றும் பிரிவினைகள். ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம். கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீணடித்துக் கொண்டு இருக்கின்றது. 

உலகமெங்கும் இறைவனின் மார்க்க்கமான இஸ்லாத்தை நோக்கி மனிதக்கூட்டம் இணைந்து கொண்டிருக்கும் இந்தவேளையில் - இந்த வளர்ச்சியைப் பார்த்து மகிழும் நிலையில் நாம் வாழும் தமிழகத்தில் நமது நிலை என்ன என்று பார்த்தோமானால் கண்ணீர் விட்டு கதற வேண்டிய நிலயில் இருக்கிறோம் என்பதை எந்த நடுனிலையாளரும் மறுக்க இயலாது. 

புதிய இயக்கங்கள் தோன்றியதன் மூலம் ஒரு புத்துணர்வு தோன்றியதையும் ஒரு மறுமலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். அதே நேரம் இந்த கருத்துக்களை முன்னெடுத்து சென்றவர்களின் சுயனலப்போக்கும்,  பேராசையும், தான் என்ற ஆணவமும், சுயவிளம்பர  தம்பட்டங்களும், முன்வரிசை தலைவர்களின் பதவி ஆசையும், மிக குறுகிய காலத்தில் வெட்டவெளிச்சமாகி நீ பெரியவனா நான் பெரியவனா என்று இயக்கங்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி போட்டி இயக்கங்களாகி நமது முக்கிய நோக்கங்களை சிதைத்து, இன்று நமது போட்டியாளர்கள் நாம் போடும் சண்டையை பார்த்து எள்ளி நகையாடும் நிலைமைக்கு தள்ளிவிட்ட்து. தலைவர்கள் என்று கொண்டாடப்பட்டவர்களின் தன்னலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் பிரிந்து செல்லும் இயக்க சொந்தங்களை இணைத்துவைக்கும் தகுதியை இழந்து நின்றனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலையை தொங்கப்போட்டார்கள். கோபப்பட்டார்கள். இதனால் சிந்திக்கும் திறனற்ற சில தேர்ந்தெடுத்த இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்டுவித்தார்கள்..

சுயநல தலைவர்களின் பின் சென்ற இந்த சிறிய சமுதாயத்தின் முதுகெலும்பாகத்  திகழ வேண்டிய இளைஞர்கள் திக்காலுக்கு திக்கால்  பிரிந்து நின்று மார்க்கம் போதித்த முறைகளுக்கு மாறாக ஒருவரை ஒருவர் மனம் புண்பட பேசுவதும் , ஏசுவதும்  ஊடகஙகளில் வசை பாடிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்ட்து. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நமக்குள் போட்டுக் கொள்ளும் சண்டை நாகரிகத்தை உலகுக்குக் கற்றுக் கொடுத்த இஸ்லாமிய முறையில் உள்ளவைதானா என்று சந்தேகம் எழுகிறது. நமது சொந்தங்களை நாம் அழைக்கும் பெயர்களை கேட்டால் வெட்கித்  தலை குனியவேண்டி வரும் . “மாமா கட்சி” , “ பொய்யன் ஜமாத்” “ டவுச்ர் ஜமாத்” “ அண்ணண் ஜமாத்” “ வாத்யார் கட்சி” “ ஹஜரத் கட்சி” என்றும் “ போடா, வாடா என்றும், அயோக்கியப் பயலே! மூத்திர சந்துக்கு வா உன் முழங்காலை உடைக்கிறேன்  என்றும் சொல்லக்கூசும் வார்தைகளால் பொதுத்தளங்களில் அர்ச்சனை செய்துகொள்கிறோம்.

மாற்று மதத்தினவர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்பு, அறம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பையும் கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மை தழுவினார்கள். இன்றோ சந்தி சிரிக்கிறது நமது சகோதரத்துவம்.! எதிரிகள் எள்ளி நகையாடுகின்றனர்!. இதற்கு நாமே இடம் கொடுத்து விட்டோம்! இப்படி நாம் கொடுத்த இடம் நம்மை பிரித்து ஆளும் சூழ்ச்சி உடைய அரசியல் கட்சிகளுக்கு            இளக்காரமாகி விட்டது . இதனால் நியாயமான நமது அடிப்படை உரிமைகளுக்காக அடிக்கடி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். 

ஐம்பது குடும்பங்கள் இருக்கும் ஒரு சிறிய ஊரில் கூட ஒரே பள்ளியில் நாம் ஒன்று சேர்ந்து தொழமுடியாமல் போனோம். நூற்றண்டுகளாக ஊர் நடுவே இருந்துவரும் பள்ளிவாசல்களில் ஒன்று சேர்ந்து தொழ முடியாமல் ஊருக்கு வெளியே ஓலைக்குடிசைபோட்டு தொழுது வருகிறோம் .குடும்பங்களில்  வாப்பா ஒரு இயக்கம், தம்பி மறு இயக்கம், மகன் வேறொரு இயக்கம் என்று பிரிந்து பெருநாள்களைக்கூட ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு ஜமாத் ஒரே நாளில் கொண்டாடி கட்டி தழுவி சலாம் கூறும் பண்பு கூட பாழ்பட்டுப்போனது. பிறை கண்டால் பெருநாள் என்பது எல்லாம் பழங்கதை. இயக்கங்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தால்தான் அன்று பெருநாள் என்பது புதுக்கதை. திருமணங்களில் ஊர் ஒன்று கூடி வாழ்த்த முடியவில்லை.. ஒன்றாக பழகிய நண்பர்கள் இந்த பாகுபாட்டால் ஒரே ஊரில் முகம் திருப்பிப்போகும் மூமின்களாக (?) காட்சி தருகின்றனர். சிற்றூர் , பேரூர் எங்குமே இன்னிலை. யாரும் மறுக்கமுடியாத நிலை- இன்றைய அவல நிலை. ஒரே மரத்தில் ஒன்பது கொடிகள் பறக்கின்றன. அதனால் அந்த மரமும் பட்டுப்போகிறது. நமது மார்க்கமும் எள்ளி நகையாடப்படுகிறது. 

இதனால் ஊடகங்களில் திரைப்படங்களில் நமது சமுதாயமும் நமது வேதமும் இழிவு படுத்தப்பட்டு உலகின்  முன் நாம் ஒட்டுமொத்த தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறோம். இன்றைக்கு இருபத்து நான்கு  இயக்கங்களாக பிரிந்திருந்து நாம் சாதித்து இருப்பதை ஒரே இயக்கமாக நின்றால் எவ்வளவு விஸ்வரூபம் எடுக்க முடியும் என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.  

அரசியல் களத்தில் பொது எதிரிகளை வீழ்த்த வேண்டிய நாம் அந்த எதிரிகளின் கூடாரத்தை  முட்டு கொடுத்து தாங்கும் அவலனிலைக்கும் ஆளானோம். பொதுதேர்தல்களில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக பேரம் பேசும் தகுதியை ஒற்றுமையின்மையினால் இழந்து அவர்கள் போட்டதை பெற்று பெருமை பேசினோம். நம சொந்தங்களை நாமே தோற்கடித்து வாழ்த்து சுவரொட்டி ஒட்டும் அளவு நமது வன்மம் காட்டிக்கொண்டோம். நமது ஆதிக்கத்தில் இருந்த சென்னை துறைமுகத்தில் முஸ்லிம் தோழன் தோற்க நாமே  காரணம் ஆனோம். சேப்பாக்கத்தில் நமது இளம் மைந்தன் தோற்கவும்  நாமே காரணம் ஆனோம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும்  வாணியம்பாடியில் நாம்  தோற்கவும் நாமே  காரணம் ஆனோம். நமக்குள் வாக்குகளை பிரித்துக்கொண்டு முத்துப்பேட்டையிலும், மேட்டுப்பாளையத்திலும் பேரூராட்சி மற்றும் நகர மன்றங்களை இழந்தோம்.  

திருவிடச்சேரியில், அதிராம்பட்டினத்தில், மதுக்கூரில் , தஞ்சாவூரில்  நம்மை நோக்கி ஆயுதங்களால் தாக்கியும்  துப்பாக்கியால் சுட்டும்  உயிர்பலி கொண்ட வழக்கு நீதிமன்றத்தில் என்பது தலைகுனிய வேண்டிய வெட்ககேடு. இதையா இஸ்லாம் சொல்லித்தந்தது? இதற்கா இரசூலுல்லா கண்ணீர் சிந்தி, ரத்தம் சிந்தினார்கள்? இந்த செயல்களில் பெயருக்குகூட  மனித நேயமும் தென்படவில்லை- முஸ்லிம்களை முஸ்லிம்கள் காயப்படுத்தாமல் கண்ணியப்படுத்தும் தவ்ஹீதும் இல்லை. 

எப்போது நமக்குள் ஒற்றுமை அவசியமோ அப்போது நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம். இன்று இந்தியாவில் நடப்பது என்ன?  

இன்று இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும் நடக்கும் கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. முஸ்லிம்கள்  என்றால் காவிகள் தாக்குவதும் , இஸ்லாமிய பெண்களை தேடித் பிடித்து காதல் வலையில் வீழ்த்தி  கற்பழிப்பதும், கொலை செய்வதும் பல பகுதிகளில் திட்டமிட்டு நடை பெறுகின்றன. மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் இதற்காக ஒரு கூட்டமே செயல்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் அடுத்தவரோடு வீட்டை இட்டு ஓடிப போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அலட்சியப் படுத்திவிட இயலாது. முஸ்லிம் பெண்களின் கருப்பையில்  பிறமதத்தவாரின் கருவை வளர்க்க வேண்டுமென்று கூட்டம் போட்டுப் பேசி வருகின்றனர்.  இவைகள் திட்டமிடப் பட்ட சதிகள் என்பதை பிரிந்து கிடக்கும் இந்த சமுதாயம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்;  அறிந்துகொள்ள வேண்டும். இப்படி முஸ்லிம்களுக்கு எதிராக இதற்கு முன் பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக கர்நாடகாவில் முன்பு பிரிந்த எடியூரப்பா மீண்டும் பிஜேபியில் இணைந்து இருக்கிறார். ஆனால் நாம் தினம் ஒரு இயக்கம் கண்டு வருகிறோம். 

பாராண்ட முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாக குஜராத்திலே கொலை செய்யப் பட்டார்கள். அஸ்ஸாமிலும்  முசாபர் நகரிலும் அடித்து விரட்டப் பட்டு சாக்கடை ஓரத்திலே அகதிகளாக வாழ்கிறார்கள். முஸ்லிம்களுக்கான தனிச்சட்டத்தை அடித்து                  நொறுக்குவோம் என்று பிஜேபி ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறது. இராமர் கோயில் கட்டுவது எங்களின் உயிர் மூச்சு என்று அதன் தேர்தல் அறிக்கை கூறுகிறது. காஷ்மீரத்தின் தனி அந்தஸ்து பறிக்கப் படும் என்று கர்ஜனைகள் கேட்கின்றன.  இப்படிப் பட்ட அநீதிகளை அரங்கேற்ற நரேந்திர மோடி என்ற அரக்க எண்ணம் கொண்ட அனுபவம் நிறைந்த அரசியல்வாதியை அடுத்த பிரதமராக்க கங்கணமும் கச்சையும் கட்டி இறங்கி இருக்கிறார்கள்.  விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு முஸ்லிம் சிறுவன் தொண்டையில் துப்பாக்கியால் சுடப் படுகிறான். எவ்விதக் காரணமும் இன்றி சந்தேகத்தில் கைது செய்யப்பட எண்ணற்ற முஸ்லிம்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஆண்டுகள் பலவாய் அடைத்துவைக்கப் பட்டு இருக்கிறார்கள். 

அரசின் தரப்பிலோ சட்டங்கள் அனைவருக்கும் சமம்  என்பது வாயளவிலேயே பேணப் படுகின்றன. காவல்துறையில் நமது புகார்கள் ஏற்கப்படுவதில்லை.  காவிப் போர்வை போர்த்தியே சட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுகின்றன. அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆர் எஸ் எஸ் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கின்றனர்.  அதற்காக நம்மிடம் அமைய வேண்டிய அம்சம் ஒற்றுமையாகும். நமது தலைக்கு மேல் காவிக் கத்தி தொங்கிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் உட்பட்ட சிறுபான்மையினரை அழிப்பதற்கான ஆபத்தான வியூகம் வரையப் பட்டு இருக்கிறது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதனால் இந்தியாவின் சட்டத்தையும் ,காவிகளையும் நம்பாமல் சட்டங்களில் உரிய மாற்றம் வரும்படியான அமைப்பில் அங்கம் பெற நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

நாம் அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் மற்றும்  சகோதரிகள் என்றும் நினைத்துக் கொண்டு நமக்குள் இருக்கும் சுயநல , நீயா நானா ஆகிய போட்டிகளை மறந்துவிட்டு கரம்  கோர்க்க வேண்டிய காலத்தின் கட்டாயம் இப்போது வரும் தேர்தலில் அவசியத்திலும் அத்தியாவசியமாகிவிட்டது.  அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்தான் ,   காவிக் கொடியை கையில் ஏந்தி நம்மை  நோக்கி அழிக்கும் மனப்பான்மையுடன் அடி எடுத்து வைக்க   பெரும்பான்மை மக்களை தயாராக்கும் கொடிய உள்ளம்  படைத்தவர்கள் செல்வாக்குப் பெறத்தொடங்கி இருக்கும் நேரத்தில்  இந்தியாவில் வாழும்  நமது இஸ்லாமிய மக்களை காப்பாற்றமுடியும். 

இறைவன் தனது திருமறையில் வழிகாட்டி  இருப்பதன் தமிழாக்கத்தைச் சொல்லி இந்த அத்தியாயத்தை நிறைவு செய்வோம். அல்- ஹுஜுராத்   அத்தியாயம்: 49 வசனங்கள் : 10 முதல்  12.

இறை நம்பிக்கையாளர்கள் , ஒருவர் மற்றவருக்கு சகோதரர்கள் ஆவார்கள். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளை சீர்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை மழை பொழியக் கூடும். (திருமறை தமிழாக்கம் IFT)

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.( திருமறை தமிழாக்கம்  P.J.) 

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். ( திருமறை தமிழாக்கம்  P.J.) 

தேர்தலை சந்திக்க காவிக் கூட்டம் தயாராகி விட்டது. தேர்தலை எதிர்கொள்ள இந்த சமுதாயம் என்ன செய்யப் போகிறது? என்ன செய்கிறது? என்ன செய்யலாம்? என்பதை இனித் தொடர்ந்து காணலாம். இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

18 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தலைப்பு செய்தி பார்க்க மனம் குளிர்ச்சியாக இருக்கு!

கட்சிகளும் இயக்ககங்களும் உதட்டளவில் மட்டுமே ஒற்றுமை பேசி வருகின்றன. ஆனால் உள்ளத்திலோ தன் கட்சி, தன் இயக்கம், தன் பலம் என்பதே நோக்கமாக இருக்கின்றன.

அவசரப்பட்டு கொள்கையே இல்லாமல் வழிய போய் ஆதரிப்பதும், காளான்களை பற்றி முழுக்க அறியாமல் இணைவதுமே சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

யா அல்லாஹ் இவர்கள் உள்ளத்திலும் ஒற்றுமையை கொடு!

sabeer.abushahruk said...

தலைப்புச் செய்தி உண்மையிலேயே உண்மைதானோ என்று விறுவிறு என்று படித்தால்... தொடர்ந்து வேதனையோடு வாசிக்கவே முடிந்தது.

நல்ல அறிவுரை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காஸ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதானே... ஒத்துமென்னாலே... கூட்டம் கலைஞ்சுடுமே !

ஆளுக்கு ஒரு திசையில இருக்கியலோ ?

யாரையுமே கானோமே !?

adiraimansoor said...

காக்கா உங்களுடைய மனக்குமுரலை அப்படியே அள்ளி கொட்டி விட்டீர்கள் ஒரு உண்மையான முஸ்லீமின் மனக்குமுரல் இப்படித்தான் இருக்க வேண்டும் இந்த உணர்வு இல்லாதவனை முஸ்லீமாக கருதமுடியாது உண்மையிலையே ஜடம்தான்

இவர்களுக்கு புத்தி வந்துடும்னு நினைக்கின்றீர்கள் போலும் இஸ்லாமியர்கள் ஒன்றாகிவிடுவார்களா என்ற நப்பாசையில் நல்ல காட்டு காட்டுன்னு காட்டிட்டிய இந்த பதிவு
யோக்கிய தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

சமுதாயத்திற்கு ஏதோ நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு தினமும் ஒரு இயக்கம் கண்டு நம் சமுதாயத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் இவர்களால் சகோதரத்துவம் மண்ணோடு மண்ணாகிவிட்டது

தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் என்று சொல்வார்கள் நம் சமுதாயத்தில் மைக் பிடித்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது நிதர்சனம்

தமிழகத்தில் இப்படி பட்ட அவல நிலையை நினைத்து மனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

நம் சமுதாயத்தை அழிவில் கொண்டுபோய் தள்ளுவதை அறியாத இந்த தலைவர்களுக்கு நாம் கோஷம்போட்டு கொடிபிடித்ததை நினைத்து மனம் வேதனை அடைகின்றது

இஸ்லாமியருக்கு இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு தலைமையில்லாத காரணத்தினால் ஒருதலமை வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் கொடி பிடித்தோம்.

அந்தகொடி இத்தனை அல்ப தலைவர்களை நம் சமுதயத்திற்கு தரும் என்பதை கிஞ்சிற்றும் நினைத்ததில்லை

சமுதாயத்திற்கு நல்லது செய்கின்றார்களோ இவர்கள் வரவால் சமுதாயத்திற்கு மிஞ்சியது பிரிவினைதான் கூறு போட்டுவிட்டார்கள் இனி என்ன இருக்குது மிச்சம்

வேண்டாப்பா நீ ஆணியே புடுங்க வேண்டாம் எல்லொரும் கட்சியை கலைத்துவிட்டு கீழே இறங்கு நம் சமுதாயத்திற்கு அது போதும்

Unknown said...

Assalamu Alaikkum

Respected brothers,

Your detailed article shows that pulse of our muslim community's unity is really in weak and pathetic condition. If an individual's or a groups's ego is playing and dominating, then there are more possibilities of disaster than harmony and unity.

May Allah help establishing unity among us.

Jazakkallah khairan.

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர் அவர்கள் இங்கு எழுதப் பட்டிருப்பதன் ஆதங்கத்தை உணர்ந்து நீண்ட பின்நூட்டம்மிட்டிருப்பதற்கு எங்கள் சார்பில் நன்றி.

அன்பின் தம்பிகள் அமீன் ஜகபர் சாதிக் மற்றும் நெறியாளர் அவர்களுக்கும் நன்றி.
தம்பி சபீர் அவர்களின் அன்பான கருத்துக்கும் நன்றி.
மற்றவர்கள் எங்கே ? ஒரே அச்சமாக இருக்கிறது. ஆளுக்கொரு இயக்கம் ஆரம்பிக்கப் போய்விட்டார்களா?
தாங்காது. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் சமுதாயம் தாங்காது.

Ebrahim Ansari said...

அன்பின் நண்பர்களே!

இந்தப் பதிவில் சுட்டிக் காட்டபப்ட்டிருக்கும் திருமறையின் வசனங்களின் மொழி பெயர்ப்பு தம்பி ஜமாலுதீன் ( அதிரைக் காரன் )அவர்கள் முகநூலில் பதிவு செய்ததாகும்.

இவற்றுள் வசனம் பத்து மட்டும் ஐ. எப். டி. யின் மொழி பெயர்ப்பில் உள்ளதை எடுத்துப் போட்டு இருக்கிறோம்.

தம்பி ஜமாலுதீன் அவர்களுக்கு நன்றி.

sheikdawoodmohamedfarook said...

ஒற்றுமை வேண்டி அறைகூவல் விடும் பயனுள்ள ஆக்கம்! ஆனால் அது விழலுக்கு பாய்ச்சிய நீரெனப்போகும். ஒற்றுமை கூட்டத்திற்கு அழைத்து சுவற்றில்ஒட்டிய போஸ்டர் சுவற்றோடு ஒட்டிக்கொண்டிருக்கும் காலம்வரைகூட நம்மிடையே ஒற்றுமை ஒட்டிக்கொண்டிருக்காது . சுவையான சம்சாவும் சூடான டீயும் நாக்கிலும் உதட்டிலும் இன்னும் பிசுபிசுப்பா ஓட்டிகிட்டு இருக்குதுங்கோ! அடுத்த ஒற்றுமை கூட்டம் எப்போ? அந்த சம்சா திங்க மனசா இருக்கு!

sabeer.abushahruk said...

என்னத்தெ சொல்றது கச்க்காஸ்,

எந்த மொழியையும் எல்லோராலும் ஒரே மாதிரியாகப் அட்சரம் பிசகாமல் மொழி பெயர்த்துவிட முடியாது. அவரவர்களின் பார்வை, இரண்டு மொழிகளின்மீதும் அவரவர்க்கான ஞானம் ஆகியவற்றால் அரபி மூலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும்போது அமையும் ஒவ்வொரு வித்தியாசத்திற்கும் ஒவ்வொரு புது இயக்கம் என்றல்லவா ஆகிவிட்டது?

ஆனால் இவர்களுக்கு அடிப்படையில் ஆறாமறிவில் குறைபாடு இருக்கிறது என்பதே என் துணிபு. காரணம், இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் இப்படிப்பட்ட இயக்கங்கள் இருப்பின் அது அம்மக்களுக்கு சமூக மேம்பாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது; அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.

ஆனால், இந்தியா போன்ற மதச்சார்பற்ற(?) அரசியல் அமைப்புள்ள நாட்டில் மைனாரிட்டி சமூகமாக இருக்கும் முஸ்லிம்கள் இப்படி இயக்க மயக்கத்தில் கிறங்கி உறங்கினால் நம் சமுதாயம் மேலும் மேலும் நசுக்கப்பட்டே வீழும்.

இந்த அடிப்படை அறிவு இயக்கத் தலைவர்களுக்கு இல்லை என்று நான் நம்பமாட்டேன். ஆனால் சுயநலம், பிடிவாதம், வெறுப்பு, தலைகனம் என்கிற சுமைகள் அழுத்துகின்றன.

(போற போக்கைப் பார்த்தால் "தல தளபதி" ரசிகர்களைவிட கேவலமாகப் போய்விடப்போகிறார்கள் தீவிர இயக்கத் தொண்டர்கள்)

sabeer.abushahruk said...

இனி, பெருநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினையினால் அரசாங்கம் குறிக்கிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

"ஒரு பெருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுவது மாற்றுமதத்தினருக்கு தொந்தரவாக இருப்பதால், ஒரே நாள் என்று தீர்மானிக்கும்வரை பெருநாளுக்குத் தடை"

- இது எப்டி இருக்கு?

Ebrahim Ansari said...

//"ஒரு பெருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுவது மாற்றுமதத்தினருக்கு தொந்தரவாக இருப்பதால், ஒரே நாள் என்று தீர்மானிக்கும்வரை பெருநாளுக்குத் தடை" //

எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் வரவேண்டுமென்று சொல்பவர்கள் சொன்னாலும் சொல்லலாம் கவித தம்பி.

Unknown said...

Assalamu Alaikkum

Creating just another group in order for attacking others' egos by satisfying their own egos is similar to spreading the fire from existing disasterous fire. Fire of ego is getting larger and larger and true service motive is buried inside the fire and becomes ashes.

May God Almighty save us from the hell fire.

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அஹமது அமீன்!

வ அலைக்குமுஸ் ஸலாம்.

" நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை இங்கே யார் இருப்பார் அதுவும் புரியலே - அட
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே"

Ebrahim Ansari said...

இந்திய சுதந்திரத்துக்கு முன்பே தோன்றி - சுதந்திரம் பெற்ற பின்பும் இந்தியாவில் தேவை என்று வளர்க்கப்பட்ட தாய்ச் சபை என்று போற்றப் படக் கூடிய முஸ்லிம் லீக் நாளடைவில் கேரளத்தைதவிர மற்ற இடங்களில் துவண்டு தொய்ந்து போனதும் இன்றைய முஸ்லிம்களின் அரசியல் நிலை பாழ்பட்டுப் போனதற்கும் - ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் காரணம் என கூறத் தோன்றுகிறது.

தமிழகத்தை பொருத்தவரை காயிதே மில்லத் அவர்களுடைய மறைவுக்குப் பிறகு வந்த தலைமைகள் சமுதாயத்துக்கென்று இருக்கக் கூடிய கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை.

பேராசிரியர் காதர் முகைதீனும் அப்துல் ரகுமான் அவர்களும் இன்னும் சில முஸ்லிம் லீக் தலைவர்களும் இன்றைய இளைஞர்களின் அரசியல் வேகத்துக்கும் விவேகத்துக்கும் ஈடுகொடுக்கிற அளவில் கட்சியின் நடைமுறைகளை செயல்படுத்தவில்லை. அவர்களுடைய செயல்பாடுகள் எல்லாம் உப்பில்லாக் கஞ்சியில் பச்சைத் தண்ணீரை ஊற்றிக் குடித்தது போல் இருந்ததே தவிர - மற்ற இயக்கங்கள் செய்வது போல ஒரு பிரச்னைக்காக போராட்டம்- மாநாடு - முழக்கம் என்று எந்த ஈடுபாடும் இல்லை. இந்த நீர்த்துப் போன நிலைமைகளை மற்ற இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தின.

தாய்ச்சபை என்கிற முஸ்லிம் லீக் இவற்றை வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யவில்லை. தனது செயற்குழுக் கூட்டங்களுக்கு அழைப்பாளர்கள் அனைவரின் கையிலும் கண்டிப்பாக வாக்கிங்க் ஸ்டிக் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள். உடலை சிலிர்த்துக் கொண்டு இயக்கப் பணியாற்றும் இளைஞர்களை முஸ்லிம் லீக் கண்டு கொள்ளவில்லை அரவணைக்கவில்லை.

இன்றைய சமுதாய ஒற்றுமையின்மையை கண்டு கொள்ளாமல் விட்டதில் முஸ்லிம் லீகுக்குப் பங்குண்டு.

adiraimansoor said...

///தாய்ச்சபை என்கிற முஸ்லிம் லீக் இவற்றை வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யவில்லை. தனது செயற்குழுக் கூட்டங்களுக்கு அழைப்பாளர்கள் அனைவரின் கையிலும் கண்டிப்பாக வாக்கிங்க் ஸ்டிக் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள். ////

காக்கா செமக்காமடியுடன்கூடிய உண்மை நிலவரம்
அந்த வாக்கிங் ஸ்டிக்கினால் மீனுக்கு விலை கேட்டாதால் வளர்ந்த காலான்கள்தான் இதர கட்சிகள்

adiraimansoor said...

///இந்த அடிப்படை அறிவு இயக்கத் தலைவர்களுக்கு இல்லை என்று நான் நம்பமாட்டேன். ஆனால் சுயநலம், பிடிவாதம், வெறுப்பு, தலைகனம் என்கிற சுமைகள் அழுத்துகின்றன.///

சபீர் சொல்வது முற்றிலும் மறுக்க முடியாத உண்மைகள் அவர்களுடைய சுய நலத்திற்கு நம் சமுதாயத்தை பலி கொடுத்துவிட்டார்கள்

Ebrahim Ansari said...

//அந்த வாக்கிங் ஸ்டிக்கினால் மீனுக்கு விலை கேட்டாதால் வளர்ந்த காலான்கள்தான் இதர கட்சிகள்//

Thambi Mansoor.

Comedy kku Comedy.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஒற்றுமையைப் பற்றி பேசி காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது.
வல்ல அல்லாஹ்வையும், மறுமையையும் உண்மையாக நம்பாதவரை ஒற்றுமை ???

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு