அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 25

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
அல்ஹம்துலில்லாஹ்..! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்த தொடர் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை கடந்த வாரம் ஊரில் இருக்கும்போது பெரும்பாலான நண்பர்கள் வாயிலாக அறிய முடிந்தது. மேலும் இதனைத் தொடர இது எனக்கு ஆர்வமூட்டுவதாகவும் அதே நேரத்தில் பொறுப்பும் கூடியுள்ளது என்பதை உணர்ந்து தொடர்கிறேன் இன்ஷா அல்லாஹ்! - மீண்டும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இந்த வாரம், இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கிய ஸஹாபி பெண்மணியாக போற்றப்பட்டவரும், நபித்தோழர்களில் முதன்மையானவர் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் அருமை மூத்த மகளாரும், ஒரு முஸ்லீம் பெண் ஒரு மகளாக, ஒரு மனைவியாக, ஒரு தாயாக எப்படி கண்ணியத்துடன் இறையச்சத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த ஒரு மகத்தான் நபித்தோழி தான் அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள். இந்த வீரத்தாயின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்களை நாம் பார்ப்போம், படிப்பினைகளைப் பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.

நம் முதல் கலீபா அபூபக்கர்(ரலி) அவர்களின் மூத்த மகளான அஸ்மா(ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே 18வது நபராக அஸ்மா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் முன்னணிப் படையில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்!

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இணை வைப்பாளர்களான குறைஷிகளின் உள்ளத்தில் கோபக்கனல் பொங்கி எழுந்ததும் - பிறகு எத்துணை பயங்கரமான கொடுமைகள் தலைவிரித்தாடின என்பதும் யாவரும் அறிந்ததே!

அஸ்மா (ரலி) அவர்களும்கூட அக்கொடுமைகளிலிருந்து தப்பித்திருக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கண்ணுற்ற சிறுவயதுப் பெண்ணாய் இருந்த அஸ்மா (ரலி) அவர்களின் உள்ளத்தில் ஈமான் மென்மேலும் உறுதிப்பட்டது. எவ்விதத் தளர்வோ தயக்கமோ அடைந்தார்களில்லை. 

மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் மேற்கொண்ட தருணத்தில் அஸ்மா(ரலி) அவர்களின் நபி(ஸல்) அவர்களுக்கு செய்த உதவி மிகவும் மகத்தானது என்பதை வரலாற்று ஏடுகளைப் புரட்டிப்பார்த்தால் புரியும்.  நபியவர்கள் அந்த ஹிஜ்ரத் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்! மிகவும் முக்கியமானவர்களுக்குத்தான் அதன் இரகசியம் தெரியும். அத்தகையவர்கள் மட்டுமே அதில் துணைபுரிய அனுமதிக்கப்பட்டார்கள்! அண்ணலாரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் அலீ (ரலி) அவர்களுக்குத் தெரியும்! அடுத்து,  சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா (ரலி) அவர்களுக்கும் அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும்! அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.! மக்கத்து குரைஷிகளிடமிருந்து தப்பித்து தெளர் குகையில் நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரலி) அவர்களும் தங்கியிருந்த அந்த சில நாட்களில் அவர்களுக்கு இரகசியமாக உணவு சமைத்து கொண்டு வந்தார்கள் அஸ்மா(ரலி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியதை அறிந்த மக்கத்து வில்லன் அபூஜகல் அஸ்மா(ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தான், “எங்கே உன் தந்தையும் முஹம்மதும்?” என்று கேட்டான். அதற்கு அந்த வீரத்தாய் அளித்த பதில் “எனக்குத் தெரியாது”. இஸ்லாமிய வரலாற்றில் கொடூரத்திற்கும் வில்லத்தனத்துக்கும் பெயர்போன அந்த அபூஜகல், அஸ்மா(ரலி) அவர்களை அதட்டினான், மிரட்டினான். ஒரு பெண் என்று பார்க்காமல் கண்ணத்தில் ஓங்கி அடித்துவிட்டுச் சென்றான். ஆத்திரத்தால் அறிவிழந்தவர்கள் இப்படித்தான் செய்வார்கள் ஆண்களிடம் தங்களின் ஜம்பம் பலிக்காவிட்டால் பாவம்! பெண்களைத்தான் அடிப்பார்கள்!

பொறுமைக் கடலான அஸ்மா (ரலி) அவர்கள் அந்த அற்பனின் அடியைத் தாங்கிக்கொண்டு தன் தந்தைக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனித்தார்கள். அந்தக் கோழைகளின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கிச் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை – தெளர் குகைக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் பாதைகளில் காலடிச் சுவடுகளை அழித்து விட்டு வருவார்கள். காரணம் காலடிச் சுவடுகளை வைத்து எதிரிகள் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்துவிடுவார்கள் என்பதால் தன்னுடைய சாதுர்யத்தை வெளிபடுத்தியுள்ளார் அந்த இளம் நபித்தோழி அஸ்மா(ரலி) அவர்கள்.

தெளர் மலையிலிருந்து நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தை தொடரும் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்! அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? அஸ்மா(ரலி) அவர்களுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது! உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.

இந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘ஷதாதுந் நிதாகைன்’  (இரு வாருடையவரே!) என்று அழைத்தார்கள்! அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா (ரலி) அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்!

அஸ்மா(ரலி) அவர்களின் புத்திசாலித்தனத்துக்கு மேலும் ஓர் உதாரணம் இதோ. நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்துக்கு தன்னுடை செல்வங்கள் அனைத்தையும் வாரி வாரி வழங்கியவர்களின் முதன்மையானவர் அபூபக்கர்(ரலி) அவர்கள். இவர்கள் செல்வத்தை அதிகமதிகம் செலவழிப்பதை அறிந்த அவர்களின் தந்தை அபூகுஹாஃபா (ரலி) (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) கவலையுற்றார். கண் பார்வையற்ற அந்த முதியவர் அபூகுஹாஃபா(ரலி) அவர்கள் தன் பேத்தி அஸ்மா(ரலி) அவர்களிடம் அபூபக்கர் உங்களை மற்றொரு துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். உங்களைத் தன்னந்தனியே விட்டு விட்டுச் சென்றது மட்டுமல்லாமல் தன்னுடைய பணம் முழுவதையும் - உங்களுக்குத் தராமல் கொண்டு சென்று விட்டாரே?”

“என் அன்புப் பாட்டனாரே! அப்படியல்ல” என்று பதிலளித்த அஸ்மா (ரலி) அவர்கள் முதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் பணம் வைத்துக் கொண்டிருந்த பையில் அவற்றைப் போட்டு அதனைப் பணப் பெட்டியில் வைத்து விட்டார்கள்.!  “இங்கு வந்து பாருங்களேன்!” என்று கூறி பாட்டனாரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்று அந்தப் பையில் வைத்து “இது என்னவென்று சொல்லுங்கள்” என்றார்கள்! அப்போது அபூகுஹாஃபா (ரலி) அவர்கள் மனம் நிம்மதி அடைந்து, ‘இதனை உங்களுக்காக விட்டுச் சென்றுள்ளாரெனில் நல்லதைத்தான் செய்துள்ளார்” என்று கூறினார்கள்.

ஆரம்பகால இஸ்லாமிய எழுச்சியிலும், வரலாற்று சிறப்புமிக்க, இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையான ஹிஜ்ரத் பயணத்தை நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட அந்த சமையத்திலும், இளம் வயதில் தம்முடைய புத்திக்கூர்மையால் அஸ்மா(ரலி) அவர்கள் தம்மால் முடிந்த உதவிகளை சாதூர்யமாக செய்தார்கள். காரணம் அவர்களுக்கு இருந்த அந்த இஸ்லாமிய உணர்வு. அல்லாஹ்வின் மார்க்கத்தின் மேல் இருந்த பற்று, நபி(ஸல்) அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும், ஏகத்துவம் வளரவேண்டும் என்ற வலுவான சிந்தனை இவைகளாகத்தான் இருக்க முடியுமே தவிர. இவ்வுலகில் தனக்கு செல்வம், அங்கீகாரம், மதிப்பு மரியாதை, அந்தஸ்து, பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை நாம் அஸ்மா (ரலி) அவர்களின் வாழ்விலிருந்து அறியலாம். 

நம்முடைய இளமை பருவம் இஸ்லாமிய வளர்ச்சிக்குச் சாதகமாக உள்ளதா? பாதகமாக உள்ளதா? 

நம்முடைய அறிவு, சிந்தனை, செயல் போன்றவற்றைக் கொஞ்சமாவது இஸ்லாமிய வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறோமா?

இஸ்லாத்திற்காக தன்னுடைய நுணுக்கமான அறிவை பயண்படுத்திய அஸ்மா(ரலி) போன்று இஸ்லாமிய வளர்சிக்காக தன்னுடைய அறிவை பயண்படுத்தும் ஒரு பெண்ணை நம் ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்க்க முடிகிறதா?

இரகசியத்தைப் பாதுகாத்து இஸ்லாமிய எதிரிகளிடம் நபி(ஸல்) அவர்களைக் காட்டிக்கொடுக்காமல் அடி வாங்கிய தைரியசாலி இஸ்லாமியப் பெண்ணாக வாழ்ந்தார்கள் அஸ்மா(ரலி) அவர்கள். இது போல் ஒரு ஈமானிய உணர்வுள்ள தைரியசாலிப் பெண்ணை நாம் காண முடியுமா?

நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் தொடர்ந்தது, ஆனால் அவர்களோடு அஸ்மா(ரலி) அவர்கள் செல்லவில்லை காரணம் அஸ்மா(ரலி) அவர்கள் தம் மாமி மகன் ஜுபைர்(ரலி) அவர்களை திருமணம் செய்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கு இணங்க தம் கணவரோடு அஸ்மா(ரலி) அவர்கள் மக்காவில் சிறிது காலம் தங்கினார்கள். அஸ்மா(ரலி) அவர்களின் மதீனா பயனம், பின்னர் அவர்கள் பட்ட துன்பங்கள், அத்துன்பங்களில் அவர்கள் இருந்த பொறுமை, தன் மகன் அப்துல்லாஹ் இப்னு ஜிபைர்(ரலி) அவர்களின் மரண சம்பவத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதம் இவற்றைப் பற்றி வரும் வாரத்தில் பார்க்கலாம்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்....
M.தாஜுதீன்

8 கருத்துகள்

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பற்றிய உருக்கமான சம்பவங்கள்!

கேள்விக்கு தகுதியானவர்கள் நம்மில் இருக்கார்களா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

அன்னார்களின் வழி நடக்க நாமும் மனவலிமையை பெறுவோமாக!

Ebrahim Ansari சொன்னது…

//ஒரு ஈமானிய உணர்வுள்ள தைரியசாலிப் பெண்ணை நாம் காண முடியுமா?//

கஷ்டம்தான். அல்லாஹ் காப்பானாக! இன்றைய பெண்கள் போகும் பாதை - வாழ்வு முறைகள்- ஆடம்பரம்- அடங்காமை- வீண் பேச்சு- புறம்- இத்யாதி இத்யாதி.

sabeer.abushahruk சொன்னது…

jazakallah Khair Thajudeen for very useful guidance.through the hadhees.

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா..

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் .
அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பற்றிய உருக்கமான சம்பவங்கள்!

கேள்விக்கு தகுதியானவர்கள் நம்மில் இருக்கார்களா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

அன்னார்களின் வழி நடக்க நாமும் மனவலிமையை பெறுவோமாக!

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!