நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டும் அருமை சகாவும் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜனவரி 19, 2014 | , , , , ,

சனவரி 1ம் தேதி 2014 - துபாய் மக்களுக்கு தூங்கி எழுந்த புத்தம் புது வருடம் காலை 11:30 மணியளவில் அலைபேசி அழைப்பு எங்கள் ஃபேக்டரியில் வேலை செய்யும் தமிழகத்தை சார்ந்த சகோதரர் விடுமுறை தினமாதலால் சொந்தங்களைச் சந்திக்க தேரா (ஜெபல் அலியிலிருந்து துபாய்) வந்த ஒருவருக்கு (வயது 50) நெஞ்சு வலி. அவரை துபாயில் எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்ற கேள்வியோடு அவரின் உறவினர் கேட்டார்.

சற்றே பதற்றமான என் பதிலோ "சட்டென்று அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள், வலி அதிகமென்றால் ஆம்புலன்ஸை அழையுங்கள்" என்று சொல்லி அழுத்தம் கொடுத்தேன். அவர்களோ அருகில் இருந்த பெல்ஹோல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே முதலுதவியைச் செய்த மருத்துவர் உடணடியாக அவருக்கு ஆஞ்சியோ கிராஃபி செய்யனும் என்று மருத்தவமனை (வியாபாரிகள்) அடுத்த கட்டமாக விலைப்பட்டியலை எடுத்து, இதற்கு இவ்வளவு அதற்கு இவ்வளவு என்று பேரம் மட்டுமல்ல இன்சூரன்ஸ் இதுக்கு அனுமதி அதுக்கு அனுமதியில்லை என்று கிட்டத்தட்ட பகல் மூன்று மணி வரை கடத்திக் கொண்டு இருந்தார்கள்.

நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட சகோதரரின் உறவினர்களும் அவர்களின் நண்பர்களும் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அனுமதி கேட்டால் பெல்ஹொல் மருத்துவமனைக் காரர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். அடுத்து அவர்களாகவே இன்னும் பிற இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் அவர்களும் இதேபோல் இவ்வளாவு செலவாகும், முதலில் அட்வான்ஸ் இவ்வளவு கட்டனும் என்ற பேரமும் தொடர்ந்திருக்கிறது.

மாலை ஐந்து அரை மணிக்கு அவரின் உறவினர்கள் எனக்கு மீண்டும் ஃபோன் செய்தனர் மேற்சொன்னவைகள் விளக்கிய பின்னர், உடணடியாக பெல்ஹொல் மருத்துவமனைக்குச் சென்றேன், அதற்குள் அவர்களாகவே ஈரானியன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற்று ஆம்புலன்ஸும் ரெடியாகி இருந்தது.

அங்கிருந்து அவரை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் ஈரானியன் மருத்துவமனைக்கு சென்றது. அவர்களின் ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் மற்றும் முதலுதவியின் தொடர்ச்சி ஆனதும். காத்திருந்தோம், அடுத்ததாக ஆஞ்சியோ கிராஃபி டெஸ்ட் உடணடியாக துவங்கியது அதில் அந்த சகோதரருக்கு மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் அதனை உடணடியாக செய்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினர்.

அதற்கிடையில் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, வீட்டாரும் எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்க இயலுமா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதுவே எங்கள் முயற்சியாகவும் இருந்தது. ஆனால் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த நிலையில் விமானப் பயணம் சரிப்பட்டு வராது, அதோடு அவருடைய ஹைபர் டென்சன் கொஞ்சம் கூட குறையவில்லை என்று மறுத்து விட்டனர். அப்படியே வலுக்கட்டாயமாக அனுப்ப முயன்றாலும் ஒருவாரம் கழித்துதான் முடியும் என்று சொல்லி விட்டனர்.

அன்றைய பொழுது கழிந்தது, அடுத்த நாள் காலை 06:00 மணிக்கு நேரில் சென்று பார்த்தேன் நன்றாக இருந்தார், வழக்கமான சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறார். ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன்.

சனவரி 2ம் தேதியும் அமைதியாகவே சென்றது, அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ். பொழுதும் நன்றாகவே கழிந்தது, அந்த சகோதரரின் குடும்பத்தினரும் ஊரில் நிம்மதியாயினர்.

சனவரி 3ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 11:00 மணிக்கு அவரின் உறவினரின் மொபைலில் அந்த சகோதரரோடு பேசிக் கொண்டேன். நலமுடன் தெளிவாக பேசிக் கொண்டு இருந்தார். மேலும் அங்கே மருத்துவமனையில் மீண்டும் பெல்ஹோல் மருத்துவமனையில் சொன்னதையேச் சொன்னார்கள், அதில் அதிக அவசரம் இருந்தது. உடணடியாக அதனைச் செய்தே ஆகவேண்டும் என்று சொன்னதால் பதற்றம் தொற்றியது. 

மாலை ஏழு அரையானது இன்சூரன்ஸ் அனுமதி கிடைக்க தாமதமானதால் முதலில் டெப்பாசிட் செய்யுங்கள் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டச் சொன்னார்கள். அவசரத் தேவையறிந்து அன்று விடுமுறையானதால் நானும் எனக்கு அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் இருந்ததால் என்னோட முதலாளிக்கு தகவல் தெரிவித்தேன்.

எட்டு மணிக்கு எங்கள் முதலாளியே நேரில் வந்து அந்த தொகையை தனது கார்டு மூலம் அவர்கள் கட்டச் சொன்ன தொகையை செலுத்தி விட்டு பதிக்கப்பட்ட சகோதரருக்கு ஆறுதல் சொல்லி விட்டுச் சென்றார்.

மருத்துவமனை கேட்ட தொகையை செலுத்தியதும், வேலைகள் வேகமெடுத்தது... இரவு 10:30 மணிக்கு மேல் ஆஞ்சியோ ப்ளாஸ்ட் செய்ய இருக்கிறோம் என்றனர். ஆஞ்சியோ பளாஸ்ட் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இன்னும் என்னவெல்லாம் என்று மேலும் விபரங்களை இரவு வெகு நேரமாக தேடியெடுத்து அறிய முற்பட்டேன்.

இரவு 11:15 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். அந்த சகோதரரின் சொந்தக்கார் "அஞ்சியோ ப்ளாஸ்ட் முடிந்து விட்டது  நல்லவிதமாக இருப்பதாக" அனுப்பியிருந்தார்.

அந்த எஸ் எம் எஸ்ஸை 15 நிமிடம் கழித்துதான் பார்க்க நேர்ந்தது, அதனப் பார்த்ததும் உடணடியாக அவருக்கு ஃபோன் செய்தேன், அவரோ சற்றே தளர்ந்திருந்தார், குரலில் அழுகையின் கசிவு தெரிந்தது. "மூன்று அடைப்பில் இரண்டைதான் சரி செய்து இருக்கின்றனர் இன்னும் ஒன்றைச் செய்ய இயலவில்லையாம், காரணம் இருதயத்தின் இயக்கத்தில் வேகம் குறைந்து விட்டது, அதோடு உள்ளிருக்கும் தசைகளில் தளர்ச்சி இருப்பதாலும் இரண்டு நாட்கள் கழித்துதான் செய்ய வேண்டும்" என்று மருத்துவர்கள் சொன்னதாகச் சொன்னார். எனக்கும் எதோ குழப்பமாக இருந்தது, இந்த சிகிச்சை முறையை ஒரே நேரத்தில்தானே செய்வார்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் அதற்கான தகுதியுடன் உடல் ஒத்துழைக்குமா என்று சரி பார்த்துதானே செய்திருக்கனும். அப்படியிருக்க ஏன் இந்த குளறுபடி என்ற அச்சமும் தொற்றிக் கொண்டது.

அதன் பின்னர் உறக்கமும் கலைந்தது, சிந்தனையோட்டம் சற்றே கவலையுடன் குழப்பத்தில் இருந்தேன். ஈரானியன் மருத்துவமனைக்கு ஃபோன் செய்தேன் டியூட்டி மருத்தவரிடம் பேசினேன் அவரும் மேற்சொன்னவையே அப்படியே விளக்கமாச் சொன்னார். அதோடு கொஞ்ச நேரத்தில் சரியாயிடும் என்றும் ஆறுதல் சொன்னார்.

நள்ளிரவு 12:50 மணியளவில் அதாவது சனவரி 4ம் தேதி மீண்டும் அந்த சகோதரரின் உறவினரின் அலைபேசி அழைப்பு "மாமா மவுத் ஆகிவிட்டார்கள்" என்ற குரலின் அழுகையை சமாதானப் படுத்த தடுமாறினேன் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்".

அடுத்த 15 நிமிடத்தில் நானும் அங்கே சென்று விட்டேன், அந்த அதிர்விலிருந்து மீளுவதற்கு தவித்துக் கொண்டிருந்தேன். அனுதாபமும் வருத்தமும் கலந்து எனது குரலை கோபத்தில் உயர்த்த வைத்து விட்டது சத்தம் கேட்டதும். ஓடிவந்தனர் மருத்துவர்கள், கூலாக "வருந்துகிறோம் சட்டென்று ஹார்ட் அட்டாக் வந்து விட்டது அதனால் இறந்து விட்டார்" என்று சொன்னதும் வல்லமை நிறைந்த அல்லாஹ் அந்த நேரத்தில் அதிமாகவே பொறுமையை கொடுத்து அருளினான். அதன் காரணமாக சாந்தமாகவே மேலும் நடக்க வேண்டியதை கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.

வீட்டாருக்கு (ஊருக்கு) தகவல் கொடுக்கும் பொறுப்பை அவரின் சொந்தக் காரர்கள் செய்தனர், அதோடு மார்க்கம் அனுமதித்ததையே ஊரிலிருக்கும் அவருடைய மனைவி மக்கள் பொருந்திக் கொண்டு இங்கே (துபாயிலேயே) நல்லடக்கம் செய்ய அனுமதித்தனர் (அல்ஹம்துலில்லாஹ்).

முறையாகச் செய்ய வேண்டிய அனைத்து காகிதச் சடங்குகளையும் முடித்தெடுக்க ஒன்றரை நாள் ஆனது,  சனவரி ஐந்தாம் தேதி அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அல்குஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது (அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தருள்வானாக). 

இந்தப் பதிவு எழுதக் காரணம், மருத்துமனை (வியாபாரிகள்) பேரமும் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் குதிரைச் சவாரியும் இன்னும் வேறு விஷயங்களையும் எழுதச் சொல்லி உசுப்பேத்தி விட்டிருக்கிறது.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அபூஇப்ராஹீம்

எச்சரிக்கை : புகைபிடிப்பதனால் ஏற்பட்ட விளைவுகளை கண்கூடாக கண்டதன் கண்ணீர் கசிவே இந்தப் பதிவு !

16 Responses So Far:

M.S.முஹம்மது தவ்பிக். #9790282378 சொன்னது…

My Heart is felting. .......May Almighty Allah give their family to endurance.Mr.AbuIbrahim kaka u have done with GREAT job.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இன்னாலில்லாஹி....
இதுபோன்று உயிருக்கு பேரம் பேசி காசு பார்க்கும் மருத்துவமனை வியாபாரிகள் மீது அரசாங்கம் தலையிட்டு அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

நான்கு மாதங்களுக்கு முன் என் அருமைத்தாயாரின் எண்ணப்பட்ட அந்த இறுதி நாட்களில் திருச்சி தில்லைநகர் (மருத்துவ கொள்ளை நகர்) அந்த பிரபல மருத்துவர் தனியே என்னிடமும், என் தந்தையிடமும் வார்த்தைப்பிரயோகத்தில் நடந்து கொண்ட விதம் உள்ளத்தில் மாறாத ரணத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

என் தாயாரின் மரணத்திற்குப்பின் சில நாட்கள் கழித்து அதே தில்லைநகரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் அந்த மருத்துவரைப்பற்றி விசாரித்தேன். அங்கு பணிபுரியும் ஒரு வயதான நபர் சொன்னது "அவரும், அவரின் மகனும் இந்த ஏரியாவில் இடங்களை வளைத்து,வளைத்து வாங்கிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனவும் சமீபத்தில் பலர் அவரிடம் காட்டி திருப்தியில்லாமல் வேறு டாக்டர்களை நாடிச்சென்று விட்டதாகவும்" சொன்னதை கேட்டு மீளாத்துயரடைந்தேன். அல்லாஹ்வின் தக்தீரை உலகில் எந்த கொம்பனுக்கும் மாற்றவோ,விமர்சிக்கவோ அருகதை இல்லை.

நாம் இங்கு விமர்சிப்பது கொள்ளையர்களாக மாறிவரும் மருத்துவ உலகத்தையே. ஒரு நண்பர் என்னிடம் சிம்பாளிக்காக இப்படி சொன்னார். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக) வீட்டில் யாருக்கேனும் சிறுநீரக கோளாறுகள் வந்துவிட்டால் அவ்வீட்டினருக்கு சொந்தமாக கப்பல் ஒன்று ஓட்டம் வேண்டும். அப்படி இருந்தாலொழிய மருத்துவ செலவுகளை எதிர்கொள்வது எவர்க்கும் கடினமானதாகிப்போகும் என்றார். 100% உண்மையும் கூட.

மருத்துவ உலகம் யாருக்காகவும் மனம் இறங்க வேண்டியதில்லை பணம் கறக்காமல் இருந்தாலே போதும்.

ஒரு நாள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை தங்கி பார்த்துவிட்டு வந்தால் போதும் உலக வீராப்பும்,பற்றும் எவர்க்கும் கொஞ்சமேனும் குறையாமல் இருக்கப்போவதில்லை.

மருத்துவமனைகளில் பெரும் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அங்கு பாசத்திற்கும், பணத்திற்கும் பெரும் மல்யுத்தமே நடந்துவிடுகிறது. அங்கு நோயாளிகளுக்காக பாசமும், மருத்துவமனை நிர்வாகத்திற்காக பணமும் கடும் போட்டியிடுகின்றன.

எங்களுக்கு ஆட்டுத்தலை வறுவலும் தேவையில்லை, ஆஸ்பத்திரி டோக்கனும் தேவையில்லை யா அல்லாஹ்! பெரிய,பெரிய நோய்நொடிகளில் பாதிக்கப்படாமல் எங்களை உலகில் எஞ்சிய காலங்களில் பாதுகாத்து தெளிவான முறையில் உன் திருகலிமாவை உச்சரித்த வண்ணம் இம்மண்ணுலகைவிட்டு விண்ணுலகம் வந்து சேர நல்லருள் புரிவாய் என் நாயனே! யா அல்லாஹ் குறைந்தளவேனும் மனிதாபிமானமும், ஈவிரக்கமும் உள்ள மருத்துவர்களை தரணியெங்கும் தந்தருள் யா ரப் !
மரணம் என்பது ஏதோ கிட்னி ஃபைலியர் ஆனவர்களுக்கும், கேன்சர் பேஸண்ட்டுக்கும், ஹார்ட் பேஸண்ட்டிற்கு மட்டும் உள்ள சமாச்சாரம் என்று எவரேனும் தப்புக்கணக்கு போட்டு துணியில் இன்னும் இரு நூறு ஆண்டுகள் வாழ முயற்சிக்க வேண்டாம். நீர் உலக பிரசித்திப்பெற்ற சிறப்பு மருத்துவராக இருந்த பொழுதிலும் உனக்கும் மரணம் ஒரு நாள் வந்தே தீருமடா........

தற்பொழுது தாயாரின் உடல் நிலைமையை கொஞ்சம் ஊரில் இருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரிடம் தாங்கள் எங்கள் தொலைபேசி மூலம் விளக்குங்களேன் என்று கேட்டுக்கொண்டதற்கு "அவர் ஃபைனாஸ் பண்ணுவார் என்றால் சொல்லுங்கள் அவரிடம் பேசுகிறேன்" என்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "கொள்ளையர்களாகும் இன்றைய மருத்துவர்கள்" மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்? என செய்வதறியாது வேதனைப்படவே முடிந்தது பஞ்சமில்லா பாசமுள்ள எனதருமைத்தாயாரின் உயிரை காக்க முடியாமல் போனது. ஆம் அவனிடமிருந்தே வந்துள்ளோம், அவனிடமே திரும்பிச்செல்ல வேண்டியுள்ளதல்லவா?

வேதனையான இவ்வுலக நிகழ்வுகளை எண்ணி வருந்தியவனாக....

மு.செ.மு. நெய்னா முகம்மது.

M.S.முஹம்மது தவ்பிக். #9790282378 சொன்னது…

Naina, you should trying to forgot all of past happens, still it was so hard but you have to...otherwise it will be harder for for.kindly accept my request da.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

Maplay, yes of course every one should forget the past but not the beloved ones like mother. Whatever happened in the past are very hard to forget simply and easily for me even it hurts me. How can we forget our beloved mother in our life da?

if I had forgotten/erased every thing from my mind whatever happened in the past, I wouldn't have made even single article or comment here. Ok stop it here now. Otherwise it will become like an article.

Thanks for your advice Thoufeeq.

Shameed சொன்னது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க துவாக்கள்


உலகம் முழுவதும் மருத்துவத்துறை நல்ல முனேற்றம் கண்ட்டுள்ளது அதன் கூடவே பணம் வசூல் செய்வதிலும் நல்ல முனேற்றம் !! கண்டுள்ளது மருத்துவத்துறை

Ebrahim Ansari சொன்னது…

எனது சொந்த அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

நான் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தைராயிடு, ஹைபர் டென்சன், கொலஸ்ட்ரால் ஆகிய நோய்களுக்கும் இந்த நோய்களின் சாச்சா மகனாகிய இனிப்புக்கும் மருந்து சாப்பிட்டு வருகிறேன்.

கம்பெனியின் மெடிகல் இன்சுரன்ஸ் வசதி இருந்ததால் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனையும் மருந்துகள் ஒரு சூட்கேஸ் நிறையவும் தொடர்ந்து வாங்கி டாக்டர் சொன்னபடி நடந்து வந்தாலும் திடீரென நடக்கும் பொது மூச்சுத் திணறல், மாடிப் படிகளில் ஏறும்போது ஒரு வித களைப்பு, எங்க அலுவலகத்தின் மாடிப்படிகள் இருபத்தி இரண்டு படிகள் மட்டுமே நாளடைவில் இந்த படிகளைக் கடக்க நான் மூன்று இடங்களில்நின்று நின்று போக வேண்டிய நிலை வந்தது. சர்க்கரை அளவு கட்டுப் பாட்டிலேயே இருந்தது. ஆனாலும் சில நேரங்களில் நெஞ்சின் ஓரத்தில்மெதுவாக வலி இருப்பதையும் உணர்ந்தேன்.

அடுத்த முறை என் எம் சி ஆஸ்பத்திரி ( அல் நஹ்தா) வில் சோதனைக்கு செல்லும்போது டாக்டரிடம் இவைகளைச் சொல்லி ஒரு ஆஞ்சியோ கிராம பார்க்கலாமா என்று கேட்டேன். எனது இன்சூரன்சில் இதற்கு புரவிஷன் இருந்தது. ஆனாலும் டாகடர் வேண்டாம் என்று பழைய மருந்துகளையே இன்னொரு பெட்டி எழுதினார்.

இதற்கிடையில் ஆப்ரிக்காவில் உள்ள அங்கோலா என்கிற நாட்டுக்கு பத்துநாள் பயணமாக சென்று வந்தேன். அங்கு சைட் விசிட் என்ற பெயரில் பயங்கர ட்ரில் எடுத்ததில் ஐந்தாவது மாடியில் நிற்கும்போது மயக்கம் வந்து கீழே விழுந்துவிட்டேன். மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடன் இருந்த கொரிய நாட்டு கிளையன்ட் முதல் உதவி செய்து என்னை ஆசுவாசப் படுத்திவிட்டு ஆஞ்சியோ கிராம எடுத்துப் பாருங்கள் என்று அறிவுரையும் தந்தார்.

துபாய்க்கு திரும்பி வந்த பிறகு நோன்பு வந்தது. நோன்பு பிடித்தேன் ஒன்றும் ஆகவில்லை. வித்தியாசமாக உணரவில்லை. நோன்புப் பெருநாள் விடுமுறை அறிவிக்கப் பட்டது. வந்தது வரட்டுமென்று ஐந்து நாட்கள் மேற்கொண்டு லீவு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தேன்.

நண்பர்கள் ஆலோசனைப்படி சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் மூலமாக அஞ்சியோ கிராம செய்து பார்த்ததில் எனக்கு இரண்டு அடைப்புகள் இருந்தன. அதன் சிடியை டாக்டர் போட்டுக் காட்டியதுடன் கைகளிலும் தந்துவிட்டு உடனே ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து கொள்வது நல்லது என்றார். அதற்கு தேவையான அளவுக்கு கையில் பணம் கொண்டு செல்லாததால் மூன்று நாட்களில் திரும்பி வருவதாக சொல்லிவிட்டு அதன்படி சென்று கடந்த டிசம்பரில் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து கொண்டேன்.

இதயத்தில் இரண்டு இடங்களிலும் இப்போது ஸ்டெட் என்கிற ஸ்ப்ரிங்க்க் வைக்கப்பட்டு நன்றாக இருக்கிறது.

கடந்த மாதம் அதே மருத்துவரிடம் சென்று ஒரு முழு உடல் சோதனை செய்துகொண்டேன். பர்பெக்டாக இருப்பதாகவும் உடலும் எட்டு கிலோ குறைந்து இருப்பதாகவும் கூறினார். ஆஞ்சியோ பிலாஸ்ட் சிகிச்சைக்குப் பிறகு மிகவும் சுகமான பீளிங்க்காக இருந்தது.

முக்கிய விஷயம் சர்க்கரை கட்டுப் பாடு- எளிய உடற் பயிற்சி- சுபுஹூக்கு எழுந்து நடந்து போவது/வருவதே போதுமானது. மற்றபடி புகை பகை. நமக்கு அந்தப் பிரச்னை எல்லாம் இல்லை.

துபாயில் உங்கள் கம்பெனி நண்பருக்கு சரியான் சிகிச்சை தரப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

எனது கருத்து உள்ளூரில் விலைபோகாத டாகடர் மாடுகளே துபாய் போன்ற வெளிநாட்டு சந்தைக்கு வருகின்றன. அரைகுறை அறிவு- இன்சூரன்ஸ் கொள்ளை- மருத்துவ வியாபாரத்துக்கு ஏழைகளின் உயிர்கள்
பகடைக்காயாக்கபடுகின்றன.

மறைந்த உங்கள் நண்பருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன் .

sabeer.abushahruk சொன்னது…

அவனிடமிருந்தே வந்தோம்;அவனிடமே மீளுவோம்

- உயிரோடுள்ள மருத்துவர்களுக்கும் சேர்த்தே சொன்னேன்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

மனிதாபிமான மில்லா மருத்துவர்கள்! :"தங்களுக்கு மரணமில்லை" என்று எண்ணுகிறார்களோ?:

அலாவுதீன்.S. சொன்னது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எத்தனை காலம் ஏமாற்றுவார்கள் மருத்துவ பகல் கொள்ளையர்கள்!

நீண்ட காலம் வாழ்ந்து விடலாம் என்ற கனவில் ,மனிதாபிமானம் இல்லாமல் கிடைத்த வரை லாபம் என்று உயிருடன் விளையாடிக் கொண்டு இருக்கும் மருத்துவ கொள்ளையர்கள் அனைவரையும் வல்ல அல்லாஹ் தண்டிக்க போதுமானவன்.

adiraimansoor சொன்னது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இப்ராஹீம் அன்சாரி காக்கா சொல்வது போன்று

உள்ளூரில் விலைபோகாத டாகடர் மாடுகளே துபாய் மற்றும் அரபு நாட்டு சந்தைக்கு வருகின்றன. அரைகுறை அறிவு- இன்சூரன்ஸ் கொள்ளை- மருத்துவ வியாபாரத்துக்கு ஏழைகளின் உயிர்கள்
பகடைக்காயாக்கபடுகின்றன.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

பிரார்த்தித்த, கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் !

இ.அ. காக்கா அவர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டது அவர்களின் தன்னம்பிக்கையும், அதோடு மருத்துவரின் ஆலோசனைகளை முறையாக பெற்றதையும் அழகுற எடுத்துரைத்தார்கள் ! அல்ஹம்துலில்லாஹ் !

காக்கா, நடந்தவைகள் அனைத்தும் இறைவனின் நாட்டமே... என்னுடைய ஆதங்கம் இதற்கு முன்னர் அந்த சகோதரருக்கு இதற்கு முன்னர் இரத்த அழுத்தமென்றோ, அல்லது வேறு காரணங்களுக்கொ மருந்துகள் சாப்பிட்டவர் இல்லை, அதோடு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சொன்னது புகை பிடித்ததன் பாதிப்பே சட்டென்ற அடைப்புகளும் மாரடைப்பும் என்ற தகவல்.

தாங்கள் குறிப்பிட்டிருந்த மருத்துவர்கள் தொழில் சார்ந்த தர்மம் என்ற நிலையை தடுமாற்றத்தில் விட்டது இவ்வகை நிலைக்கு எடுத்துச் சென்றதோ என்ற அச்சம் அதிகமிருந்தது.

சில சந்தர்ப்பங்களில் சோதனைக்கு எலிகள் இங்கே கிடைக்க வில்லையோ என்ற சந்தேகமும் எழ வைத்து விடுகிறது அவர்களின் சிகிச்சை முறையும், மருந்துகளை நம்மிடம் கொடுத்து / செலுத்தி அவர்கள் அதற்கு மாற்று மருந்து கொடுத்து / செலுத்தி அளிக்கும் முறையை இரண்டாவது முறை காண நேர்ந்தது.

வருந்தத் தக்கது !

எங்கிருந்தாலும் ஆரோக்கியம் அதிமுக்கியம் அனைத்து செல்வங்களை விட ! என்று ஏங்க வைக்கிறது இன்றையச் சூழல் !

Ebrahim Ansari சொன்னது…

//ஆரோக்கியம் அதிமுக்கியம்//

மூன்று விஷயங்கள் நம்மை விட்டுப் போன பிறகுதான் அவற்றின் அருமை நமக்குத் தெரியும்.

ஆரோக்கியம்
இளமை
நம்மைத் தேடி வந்த வாய்ப்புக்கள்.

என்று பேராசிரியர் அப்துல் காதர் அடிக்கடி சொல்வார்.

نتائج الاعداية بسوريا சொன்னது…

தெரிந்தே கெட்டதை நாடும் மனங்கள் திருந்த ஒரு மனம் நெருடும் பதிவு.

அபு ஆசிப்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//ஆரோக்கியம்,இளமை,தேடிவந்த வாய்ப்புகள்// மைத்துனர் இப்ராஹிம் அன்ஸாரி சொன்னது/ அதோடுஇதையும் சேர்க்கலாமே. பாட்டன் பூட்டன் தேடிவைத்த சொத்துக்கள்.இதனால் நாசமாய் போனவர்கள் ரெம்பப் பேரு .

N. Fath huddeen சொன்னது…

ஐந்து வருவதற்கு முன் ஐந்தை அற்புதமாக எண்ண வேண்டும் என நபி (ஸல்) சொன்னர்கள்.
1. முதுமை வருவதற்கு முன் இளமையை,
2. வறுமை வருவதற்கு முன் செல்வத்தை,
3. நோய் வருவதற்கு முன் உடல் நலனை,
4. வேலை வருவதற்கு முன் ஓய்வை,
5. மரணம் வருவதற்கு முன் வாழ்வை.

புகாரி

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு