அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முந்தைய பதிவில் உத்தம நபியின் உன்னத சஹாபியப் பெண் தோழியர்களில் மிக முக்கியமானவர்களாகிய அஸ்மா(ரலி) அவர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் கண்டோம். அதில் தொகுக்கப்பட்டச் சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினைப் பெற்றோம். இந்தப் பதிவிலும் நபித்தோழியர்களில் நீண்ட காலம் வாழ்ந்து மரணித்த அதே அஸ்மா(ரலி) அவர்களின் வாழ்வில் மேலும் கூடுதல் சம்பவங்களைப் பற்றிப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், புத்திக்கூர்மையுள்ள அஸ்மா(ரலி) அவர்களின் சாதுர்யத்தால் மக்காவில் எந்த கயவர்களின் கண்ணிலும் தென்படாமல், நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் ஏனைய தோழர்களும் மதீனாவுக்கு வந்தடைந்து விட்டார்கள்.
அஸ்மா (ரலி) அவர்களின் கணவர் ஜுபைர்(ரலி) அவர்கள் இளைஞராக இருக்கும்போதே தூய இஸ்லாத்தை ஏற்றவர். இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக வசதி வாய்ப்புள்ள தன்னுடைய குடும்பத்தவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள், முதல் ஹிஜ்ரத் (அபிசீனியா) பயணத்தில் பங்கெடுத்த அந்த சொற்பமானவர்களில் ஜுபைர்(ரலி) அவர்களும் ஒருவர். பணக்கார குடும்பத்தில் பிறந்த ஜுபைர்(ரலி) ஏழை முஸ்லீமான அவர்களையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தது மக்கத்துச் செல்வந்தர் அபூபக்கர்(ரலி) அவர்களின் மூத்த மகளார் அஸ்மா(ரலி) அவர்களுக்கு.
சிறிது காலம் கடந்து நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும், அஸ்மா(ரலி) அவர்களும் குடும்பத்தவர்களும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். செல்வந்தர் வீட்டு ஏழை கணவருடன், மக்கமா நகரின் தன் குடும்பத்துக்கு உள்ள அத்தனை சொத்துக்களையும் துறந்து இந்த தூய இஸ்லாத்திற்காக தான் வாழ்ந்த அந்த மக்கா நகரத்தை விட்டு தியாகம் செய்து வந்த தியாகிகளில் அஸ்மா(ரலி) அவர்களும் ஒருவர். இது மட்டுமல்ல இந்தத் தியாகி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை கருவுற்றிருந்த நிலையில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அன்றைய காலகட்டத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்தவர்ர்களுக்கு தெரிந்திருக்கும் மக்காவிலிருது மதீனாவுக்கு பயணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது. இன்றோ வாகனப் போக்குவரத்து வசதிகள் உள்ளது. ஆனால் அன்றோ மலைகளும், பாறை கற்களும் (ஹர்ரா போன்ற பகுதிகள்) உள்ள அந்தக் கடின பாதைகளில் இந்த கர்பினித்தாய் அஸ்மா(ரலி) அவர்கள் நடந்து அல்லாஹ்வுக்காக தியாகம் செய்து ஹிஜ்ரத் செய்துள்ளார்கள் என்றால், உண்மையில் அந்த நிறைமாத கர்ப்பினித்தாய் அஸ்மா(ரலி) அவர்களின் அந்த ஹிஜ்ரத் பயணத்தை, இன்று ஓர் உடல் வலிமையுள்ள எந்த ஒரு ஆண் மகனாலும் நிகழ்த்த முடியாது அல்லாஹ் நாடினால் மட்டுமே முடியும்.
மதினாவில் குஃபா பள்ளியை அடைந்தவுடன் அஸ்மா(ரலி) அவர்களுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது. பத்து மாதம் சுமந்த குழந்தை மட்டுமல்ல, ஹிஜ்ரத் செய்த அந்த 11 நாட்கள், மலைகளையும், கற்களையும், வெயிலையும், பகலையும், இரவையும் கடந்து, நிம்மதியையும், தூக்கத்தையும் தியாகம் செய்து நாடுவிட்டு நாடு வந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பாதுகாத்து சுமந்த குழந்தையல்லவா அந்தக் குழந்தை, அருமை நபியின் ஆருயிர் தோழர் அபூபக்கர்(ரலி) அவர்களின் பேரப்பிள்ளையல்லவா அந்தக் குழந்தை. அந்தத் தியாகத்தாய் அஸ்மா(ரலி) அவர்கள் அந்த மகனை நபி(ஸல்) அவர்களிடம் தூக்கிச் சென்று பெயர் வைக்க சொன்னார்கள். மனிதருள் புனிதர் நபி (ஸல்) அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஆனந்தத்துடன் குழந்தையைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘அப்துல்லாஹ்’ என்று பெயர் சூட்டினார்கள்.
மதீனா பேரிச்சப்பழத்தினை தன் வாயில் மென்று, தன் உமிழ் நீருடன் கலந்த சிறிய பேரிச்சப்பழத்தை அந்த குழந்தை அப்துல்லாஹ் அவர்களுக்கு ஊட்டினார்கள் பூமான் நபி(ஸல்) அவர்கள். பிறகு குழந்தைக்காக நற்பாக்கியம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் தான் முதன் முதலில் ஹிஜ்ரத்துக்கு பிறகு மதீனாவில் பிறந்த முஸ்லீம் குழந்தை, மேலும் முதலாவதாக மதீனாவில் பிறந்த முஹாஜிர் குழந்தை, முதலாவது நபி(ஸல்) அவர்களால் பெயர் சூட்டப்பட்ட குழந்தை, முதலாவது மதீனாவில் நபி(ஸல்) அவர்களின் மடியில் இருந்த குழந்தை, முதலாவது நபி(ஸல்) அவர்களால் பிறந்தவுடன் பேரீத்தம்பழம் ஊட்டப்பட்ட குழந்தை என்ற பெயருக்கு சொந்தக்காரராக நம் அஸ்மா(ரலி) அவர்களின் அருமை மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) என்று வரலாற்றில் அறியப்படுகிறார். இந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் சிறுவயதிலிருந்தே மார்க்கப்பற்றுள்ளவராக வளர்க்கப்பட்டார்கள்.
அந்த தியாகத் தாய்க்கு மதினாவில் வறுமை வாட்டியது. நபி(ஸல்) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களுக்கு ஒரு பேரித்தம்பழ தோட்டம் ஒன்றை கொடுத்தார்கள். அது மதீனாவிலிருந்து சுமார் ஒன்பது மைல் தொலைவில் இருந்தது. தினமும் அங்கு சென்று பேரீச்சங் கொட்டைகளைப் பொறுக்கி, ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு தன் கணவருக்கு உதவி செய்தவர்களாக இருந்தார்கள் அஸ்மா(ரலி) அவர்கள். கணவன் படும் கஷ்டத்தில் தானும் பங்கெடுத்து தானும் குடும்பத்திற்காக தியாகம் செய்ய தகுதி படைத்தவர் என்பதை நிருபித்த பெண்மணி அஸ்மா(ரலி) அவர்கள். அஸ்மா (ரலி) அவர்கள் துன்பங்கள் எதிர்ப்பட்ட அத்தனை சந்தர்ப்பங்களிலும் கொஞ்சமும் பொறுமையை கைவிட்டார்களில்லை! பதறிப் பரிதவிக்கவில்லை! நிராசை அடைந்து விதியை நொந்து கொள்ளவில்லை! விளைவு? அத்தகைய பொறுமைக்கான பலன் கைமேல் கிடைத்தது! ஆம்! அஸ்மா (ரலி) அவர்களை வளமான வாழ்வு தேடி வந்தது! அவர்கள் செல்வந்தர் ஆனார்கள்! அவர் மீதும் அவரின் கணவர் மீதும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கொட்டின. ஜுபைர் (ரலி) அவர்களுக்கு வியாபாராத்தில் நிறைய இலாபம் கிடைத்தது. இறைவன் அவர்களின் வாழ்கையை வளப்படுத்தினான்!
அஸ்மா (ரலி) அவர்களின் குடும்பம் எண்ணற்ற கஷ்ட - நஷ்டங்களையும் துன்ப துயரங்களையும் பொறுமையோடு தாங்கி வந்த பிறகு இப்போது பொருளாதாரத்தில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனில் அது எப்படிச் சாத்தியமாயிற்று? தவறான வழி சம்பாத்தியமா? இல்லை! அவர்களின் கணவர் ஜுபைர் (ரலி) அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்களின் உயிர்த் தோழர் மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய இரத்த பந்தமுடைய - புனிதமான உறவு முறையுடைய குடும்பத்தைச் சார்ந்தவனும் ஆவேன்” என்று மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டு, பணம் வசூலித்துப் பணக்காரர் ஆனாரா? இல்லவே இல்லை! நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்! நபித் தோழர்களில் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் போன்றவர்கள் எப்படி வியாபாரம் செய்து இலட்சாதிபதி ஆனார்களோ அப்படித்தான் ஜுபைர் (ரலி) அவர்களும் சம்பாதித்தார்கள்!
முஸ்லிம்கள் வாழ்ந்த வாழ்க்கையின் இலக்கணம் இதுதான். அவர்களின் வாழ்கையை கடின உழைப்பும் முயற்சியும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இறையச்சமும் நீதி தவறாத் நெஞ்சுரமும் அதற்குத் தூய்மையையும் புனிதத் தன்மையையும் வழங்கிக் கொண்டிருக்கும்.
இதன் காரணமாகத்தான் ஜுபைர் (ரலி) - அஸ்மா (ரலி) தம்பதிகளிடத்தில் ஆணவமோ அகங்காரமோ பிறரை இழிவாய் கருதும் மனநிலையோ எள்ளவும் காணப்படவில்லை! மரியாதைக்குரிய அஸ்மா (ரலி) அவர்கள் ஏழ்மையின்போது கடைப்பிடித்த பொறுமையையும் எளிமையையும் இப்போதும் கடைப்பிடித்தார்கள்! முரட்டு ஆடைகளை அணிபவராகவும் காய்ந்த ரொட்டிகளை உண்பவராகவும்தான் இருந்தார்கள்!
தர்மம் செய்வதில் அஸ்மா(ரலி) அவர்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை வரலாற்றில் அறியலாம், அஸ்மா (ரலி) அவர்கள் தயாள குணமும் தாராள மனப்பான்மையும் பெற்றிருந்தார்கள். அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து ஏழை எளியவருக்கு ஈந்து மகிழும் நிலையை அடைந்தார்கள். தன்னிடம் ஏதாவது ஒரு பொருள் அதிகம் இருந்தால் அதனை அன்றைய தினமே தர்மம் செய்துவிடுவார்கள்.
வறுமைப்பட்ட கணவருக்கு வாழ்க்கைப்பட்டோமே, இப்போது ஏழ்மையோடு எதிர்நீச்சல் போடவேண்டியதுள்ளதே| என்று மனம் வெதும்பி விதியை நொந்து கொண்டிருக்கும் பெண்மணிகளுக்கு கண்மணி அஸ்மா (ரலி) அவர்கள் வரலாறு மிகப்பெரும் படிப்பினை.
அஸ்மா(ரலி) அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம் தாயாரைச் சந்திப்பதில் அஸ்மா (ரலி) அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சிதான்! ஆர்வமிகுதியால் அவருடைய உள்ளம் துடிக்கின்றது. விழிகளில் பிரகாசம் மின்னிட இதழ்களில் புன்னகை மலர்ந்திட கரங்கள் கட்டித் தழுவத் துடிக்கின்றன. ஆனால் தன்னுடைய தாய் இணை வைப்பாளர், அவர் கொண்டு வந்திருக்கும் அன்பளிப்பை வாங்கலாமா என்பதை அறிந்துக்கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு அனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்.
அஸ்மா (ரலி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் நல்லதொரு படிப்பினை இருக்கின்றது. கொள்கையில் மாறுபட்டிருக்கும் நம்முடைய உறவினர்களை விட்டு, கொள்கை மாறுபாட்டிற்காக மட்டும் நம்முடைய தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்வது தவறாகும். அதுவும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்க வேண்டிய பொறுப்புடைய முஸ்லிம்கள் அப்படிச் செய்வது அறவே கூடாது. இரத்த பந்தமுடைய அனைத்து உறவினர்க்கும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கத்தான் வேண்டும்.
ஆனால் நம்முடைய கொள்கைக்கு யார் கேடு விளைவிக்க முற்படுகின்றார்களோ, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்த முயல்கின்றார்களோ அத்தகையவர்களுடன் மட்டும்; அவர்கள் எவ்வளவுதான் நெருக்கமானவர்களாய் இருப்பினும் நட்பு ரீதியிலான தொடர்பை நீடிக்கச் செய்ய நமக்கு உரிமை இல்லை! இந்தத் தெளிவான கோட்பாட்டை அஸ்மா (ரலி)யின் வரலாறு நமக்கு வழங்குகின்றது!
நபித்தோழர்களின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற போர்களில் அஸ்மா(ரலி) அவர்கள், ஜுபைர் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களும் போர்களில் கலந்து கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். அன்றைய காலகட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்ற நேரம். போரின் உச்சக்கட்டம், மரணம் தன்னை நெருங்கி வருகிற இந்த சூழலில் 100 வயதுடைய கண் தெரியாத தன் தாயாரிடம் செல்கிறார்கள்.
போரின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதையும் எதிர்ப்பட்டுள்ள நிலைமைகளையும் விவரித்துவிட்டு, இப்போது என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!
மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ :-
“அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்க முடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்க முடியும்! எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் - இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!”
அன்னை அஸ்மா (ரலி) அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரில் இறங்குவதெனில், அது மரணத்தை வலிந்து அழைப்பதற்கு சமமாகும் என்பதையும் - தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!
அவருடைய மகனார் எப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்? அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) போன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்...!
தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்! அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.
“என் அன்புத் தாயே, நம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!”
“மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!”
உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு – “என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!”
இதன் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தம் தாயாருக்கு அந்தப் போரின் காரணங்களை விவரித்தார். மேலும் அந்த போர் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை விளக்கினார். இறுதியில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு தம் அன்னையை வேண்டிக் கொண்டபோது அந்த வீரத்தாய் கூறினார்.
“மகனே, இன்ஷா அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!”
இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா (ரலி) அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.
“மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு!” என்று அறிவுறுத்தினார்கள்!
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!
அல்லாஹ்வுக்காக வீரமரணம் அடைந்த தன்னுடைய அருமை மகனின் இழப்பை பொருந்திக்கொண்ட அந்த தியாகத் தாய் அஸ்மா(ரலி) அவர்கள், சில நாட்களில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நம்மில் எத்தனை பேருக்கு இந்த தியாகத் தாயின் வரலாறு தெரியும்?
நம்மில் எத்தனை பேர் இந்த தியாகத் தாயின் பெயரை நம் பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறோம்?
கர்பினியாக இருந்த அந்த தாய் அஸ்மா(ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் ஈமானில் உறுதியாக இருந்துள்ளார்கள். ஆனால் இன்றைய தாய்மார்கள் அஸ்மா(ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்களில் 1 % கஷ்டமேனும் பட்டிருப்பார்களா? இவர்களுடைய ஈமான் என்ன நிலையில் உள்ளது?
தன் கணவன் முஸ்லீம் ஆனால் வறுமையில் உள்ளார், தானும் முஸ்லீம் அவருடைய வறுமையில் தானும் பங்கெடுத்தார்களே அஸ்மா(ரலி). அந்த தியாகப் பெண்மணியை போன்று கணவன்மார்களின் வறுமையில் பங்கெடுக்கும் நம் பெண்கள் எத்தனை பேர்?
தள்ளாத வயதிலும் தன்னுடைய மகன் தீனுக்காக உழைக்க வேண்டும், தீனுக்காக உயிர் விட வேண்டும் எண்ணினார்கள் அஸ்மா(ரலி). இது போல் இருக்கும் இன்றைய தாய்மார்கள் எத்தனை பேர்?
வசதியான தந்தைக்கு பிறந்த அஸ்மா(ரலி) அவர்கள் தன் சொத்தை பிறந்த பூமியிலேயே விட்டுவிட்டு, கர்பினியாக ஹிஜ்ரத் செய்து, மதீனாவில் வறுமையில் கணவனோடு வாழ்ந்து, அவருக்கு உறுதுனையாக இருந்து, மகனை ஈமான் உள்ளவராக வளர்த்து, தீனுக்காக போராடி தன் மகனை வீர மரணமடைய உணர்வூட்டி, நீண்ட நாட்கள் வாழ்ந்து மரணித்த இந்த தியாகத் தாயின் வாழ்விலிருந்து நமக்கு நிறைய படிப்பினை உள்ளது.
யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்
8 Responses So Far:
உருக்கமட்டுமல்ல... உயர்வான பெண்மையின் தன்மையை அழகுற உலகிற்கு காட்டாக விட்டுச் சென்ற உன்னதமான சஹாபியப் பெண் அஸ்மா(ரலி) அவர்கள் !
இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் இனி எப்படி நீங்கள் இருக்கப் போகிறீர்கள் என்று ஆயிரம் கேள்விகளை எழுப்பும் சிந்தனைச் சுரப்பியை எழுப்பியிருக்கிறது இந்தப் பதிவு !
''பிழைக்கத்தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டிட்டு இப்படி கருஷமணிக்கு இடைமணி இல்லாமே இருக்குறேனே!'' என்று அழுதகண்ணீரும் சிந்திய மூக்குமாய் இருக்கும் இன்றைய இஸ்லாமிய பெண்களுக்கு அஸ்மா[ரலி] அவர்களின்வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும்.
Pathevukkunanre....
//கொள்கையில் மாறுபட்டிருக்கும் நம்முடைய உறவினர்களை விட்டு, கொள்கை மாறுபாட்டிற்காக மட்டும் நம்முடைய தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்வது தவறாகும். அதுவும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்க வேண்டிய பொறுப்புடைய முஸ்லிம்கள் அப்படிச் செய்வது அறவே கூடாது. இரத்த பந்தமுடைய அனைத்து உறவினர்க்கும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கத்தான் வேண்டும்.//
இத்தனை அருமையான கருத்துரைகள் ஒரு பக்கம் உரைக்கப் பட்டுக் கொண்டு இருந்தாலும் சமுதாயம் பிளவுகளை சந்தித்து வருவதே வேதனை. இந்தப் பிளவை மார்க்க அறிஞர்கள் முன்னின்று நடத்துவது வேதனையிலும் வேதனை.
அருமையான வரலாறு. வாழ்த்துக்கள் தம்பி.
உருக்கமான படிப்பினை வரலாறு
நன்றி!
நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்; ஈமானை சுய பரிசோதனை செய்யத் தூண்டும் தியாக வரலாறு; பரிந்துரை செய்யத் தகுந்த வாழ்க்கை நெறி என்று அவர்கள் வாழ்வைப் பின்பற்றி நம்மை வாழச் சொல்லும் தொடர்
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் தாஜுதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.
ஜஸக்கல்லாஹ் ஹைரா..
சகோதரர். தாஜூதீன் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அஸ்மா(ரலி) அவர்கள் பற்றிய படிப்பினை நிறைந்த வரலாறு. ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Post a Comment