Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 4 50

அதிரைநிருபர் பதிப்பகம் | January 02, 2014 | , ,

1)  வலைப்பூ வளர்ப்பு

இதைப்பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கும் என் மலேசிய நண்பனுக்கும் நீண்ட நாட்களாக உண்டு.  “படிக்கட்டுகள்” எழுத ஆரம்பித்ததிலிருந்தே அவன் தனது இயல்பான தீவிர நகைச்சுவையிலிருந்து சற்றே விலகி மிதமான, சற்றே மிதமான நகைச்சுவைக்கு மாறிவிட்டதால், இப்போது இதை எழுதச்சொன்னால் அவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்குமளவிற்கு சீரியஸாக எழுதிவிடுவானோ என்கிற பயத்தால் நானே கோதாவில் இறங்கி இருக்கிறேன்.  அவன் அளவிற்கு சிரிக்கவைத்தே வயிற்றுவலி வரவைக்க என்னால் இயலாது எனினும் கொஞ்சமாவது கிச்சுகிச்சு மூட்டமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.


இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்குள் நுழைவோம்.  நாட்குறிப்பேடு (diary) எழுதும் பழக்கம் எனக்குக் கொஞ்ச காலம் இருந்தது. எழுதப் படிக்கத் தெரியாத என் உறவுக்கார ‘அங்கிள்’ ஒருவருக்கு இலவசமாகக் கிடைத்த டையரி ஒன்றை ‘படிக்கிற புள்ள’யாகிய எனக்குத் தந்து புது பழக்கத்தை உருவாக்கி விட்டார் (இந்த நோட்டு உன் க்ளாஸுக்கு உள்ளதாப் பாரு).  ஏதோ ஒரு பள்ளி இறுதியாண்டுகளில் தொற்றிய அந்தப் பழக்கம் கல்லூரிக் காலங்களில் தீவிரம் அடைந்து, கல்யாணம் ஆகும்வரை விடாப்பிடியாகத் தொடர்ந்தது. ஒவ்வொரு  வருடத்தின் துவக்கத்திலும் ‘எனக்கு நல்வழி காட்டு இறைவா’ என்ற முதற்பக்க வேண்டுதலோடு சுறுசுறுப்பாகத் தொடங்கப்படும் என் குறிப்பேட்டில் முதல் தேதியிலிருந்து சில காலங்கள்வரை விழித்தது, உண்டது, உடுத்தியது, சென்றது, வந்தது என எல்லா விவரங்களும் எழுதப்பட்டிருக்கும்.  இத்தனை மணிக்கு இன்ன செய்தேன் என்றெல்லாம் மிகவும் பொறுப்பாக எழுதி வைக்கத் துவங்கி, நாட்பட நாட்பட அதுவே ஒரு சுமையாகிப் போய் காலப்போக்கில் ஒன்றுமே எழுதாமல் விடப்பட்டிருக்கும் பக்கங்களைப் பார்த்து நான் இருக்கேனா போய்ச் சேர்ந்துவிட்டேனா என்று கேட்குமளவுக்கு பக்கங்கள் தொடப்படாமலிருக்கும்.  பிந்தையக் காலங்களில் ஆங்காங்கே கவிதைகளாகக் கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் கற்றுக்குட்டி கவிதைகள். சாம்ப்பிலுக்கு ஒன்னு:

அன்பே
நாம் 
லவ் ஸர்க்யூட்டை
சரியாகத்தானே போட்டோம்
பிறகு ஏன்
உன்னைத் தொட்டால்
ஷாக் அடிக்கிறது?

இப்போது, இந்த நாட்குறிப்பேடு டிஜிட்டலில் வந்துவிட்டதுபோலும். ஆளாளுக்கு திறந்து வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாட்குறிப்பேடு வலைப்பூ (blog) என்றாகிப்போனது.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் என் டயரியை மூடி மேசையின் இழுவறக்குள் வைத்திருப்பேன்; ப்ளாகையோ திறந்து போட்டு வைத்திருப்பதால் யார் வேண்டுமானாலும் வாசித்துப் போகலாம்.  தத்தம் கருத்துகளையும் சொல்லிவிட்டுச் செல்லலாம் போன்ற உபரி வசதிகளோடு வலைப்பூக்கள் கலை கட்டுகின்றன. நல்ல ஆரோக்கியமான விஷயம்தான்.  ஆனால், என் குறிப்பேடுகளைப் போலவே பல நாட்கள் எந்தவித பதிவுகளும் பதியப்படாமல் பல வலைப்பூக்கள் வெறிச்சோடிப்போய்க் கிடக்கின்றன.  

“ஜாயிரு, இன்னிக்கு அந்த ப்ளாக் பார்க்கப் போகிறேன். துணைக்கு வாயேன், தனியாகப் போக பயமாயிருக்கு” என்று கேட்குமளவிற்கு இருண்டுபோய்க் கிடக்கின்றன. அவனோ “அங்கேயெல்லாம் போகாதடா பூச்சி வட்டை இருந்து கடிச்சிடப் போவுது” என்பான். ஏற்கனவே பதியப்பட்டு நாட்பட்டுப்போன பதிவுகளைச் சொடுக்கினால் தூசு கிளம்பி நெடி ஏறி தும்மல் வருமளவுக்கு பாழடைந்துபோய்க் கிடக்கின்றன.  கோவாலு துணைக்கு இல்லாமல் எந்த மாப்ளேயும் தனியாகப் போக முடியாத அளவுக்கு ஒட்டடையோடும் காலாவதியானப் பதிவுகளின் இடிபாடுகளுடனும் வெளவ்வால் அடைந்துபோய் கிடக்கின்றன பல ப்ளாக் கள்.  பழைய பேப்பர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று வெளியே ப்ரவ்சிங் செய்யும்போதே போர்ட் போட்டுவிடுவது நல்லது. ப்ளாகுக்குச் சொந்தக்காரர்களே வரதட்சணை பாக்கி வைத்துவிட்ட மாமியார் வீட்டைப்போல புறக்கணித்துவிடுவதால் அவர்கள் வலைப்பூ வாழாவெட்டி ரேஞ்சுக்குப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.  சில வலைப்பூக்கள், என்னுடையதையும் சேர்த்து, அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன் என்று பல வருடங்களாக அப்படி அப்படியே கிடக்கிறது.  சிமென்ட் செங்கல்லாம் இருந்தும் கட்டி முடிக்காமல் ஜல்லியடிக்கின்றன.

வலைப்பூக்களுக்குப் பெயர் வைப்பதில் எல்லோருமே தன் முழுத் திறமையையும் காட்டியிருப்பர்.  பிள்ளைக்குப் பேர் வைப்பதைவிட ப்ளாக்குக்குப் பேர் வைப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டதாகத் தோன்றும். தலைப்புக்குக்கீழே ஒரு கோஷம் இருக்கும். அதில் நச்சென்று சிலரும் நசநசவென்று சிலரும் பஞ்ச் டயலாக் ஸ்டைலில் எழுதி வைத்திருப்பர்.  ஆயினும் அந்த கோஷத்திற்கும் பதிவுகளுக்கும் குறைந்த பட்சம் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கும்.  கவிதை வலைப்பூக்களில் பெரும்பாலும் பூ, நிலா, மழை, பெண் இவையில்லாமல் கவிதையே இருக்காது.  இதையும் தாண்டி சிலர் தம் நிலையை உண்மையிலேயே அறியாது வித்தியாசமாக எழுதுகிறோம் என்கிற பேரில் டபுள் ஸ்ட்ராங்காக எழுதி விடுவதால் எனக்கும் என் சுற்றத்திற்கும் நட்புக்கும்கூட புரிவதில்லை.  தமிழ் எழுத்துகளை தெளித்து வைத்தால் அது மொழியாகாது; புரிந்தாலே தமிழ் என்பதை யாராவது இவர்களுக்கு எடுத்துச் சொன்னால் வாசிப்பவருக்கு தலையில் முடி மிஞ்சும். 

திருட்டு விசிடியைப்போல சில ப்ளாக்’கள் பிறர் படைப்பைத் திருடி கீழே தம் பெயரைப் போட்டுப் பதிந்து வைத்துள்ளனர். பல பெண்களின் தளங்கள் பழக்க தோஷத்தால் ஆலங்கரிக்கப்பட்டு படு ஷோக்காக இருக்கும்.  தலைப்பூவைப்போல அழகாக தலைப்பு வைத்தாலும் வலைப்பூ வாசிக்க வருபவர்களுக்கு ஒரு களைப்பு வராமல் சுவாரஸ்யமாக வைத்திருத்தல் அவசியம்.

தத்தம் வலைப்பூக்களைக் கொண்டு வாட்ப்போர் போல சதாவும் பிரச்னைகளை கிளப்புவது தற்கால வலைப்பூக்களின் மற்றும் சமூக வலைதளங்களின் வாடிக்கையாகி விட்டது.  எதற்கெடுத்தாலும் பிற தளங்களைக் குறை சொல்வது, தன்னிச்சையாக இயங்கும் வலைஞர்களை வம்புக்கிழுப்பது, எந்த ஒரு சமூகச் செயல்பாடுகளிலும் தமக்கு என்றொரு நிலைபாடு இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏனோதானோவென்று பதிவுகளை வெளியிடுவது போன்றவற்றால் ஊடகவியலைப் பற்றி ஒரு அடிப்படை ஞாயதர்மம்கூட அறியாமல் இருப்பது வேதனைக்குரியது.  தவிர, வெளியிடப்படும் வாழ்வியல், உளவியல் மற்றும் தத்துவப் பதிவுகள் வாழ்க்கையை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய ஒப்பாரி வைக்கச் சொல்வதாக இருக்கக் கூடாது. 

O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O

02) விபரீதம் – ஒரு மாதிரி உரையாடல்

-அஸ்ஸலாமு அலைக்கும் 

-வ அலைக்குமுஸ்ஸலாம். செளக்கியமா? பார்த்து நாளாச்சு?

-நல்லாருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க? உங்களத்தான் பார்க்க முடியல

-என்ன பண்றது நாம் எல்லோருமே பொழப்புக்காகத்தானே பிரிஞ்சி கிடக்கோம். ம்..அப்புறம்?

-உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். எப்ப வீட்டுக்கு வர?

-என்ன விஷயம்?

-இல்ல நம்ம தவ்ஹீது பள்ளி கட்டுமான விஷயமாப் பேசனும்.

-அல்லாஹ்வோட பள்ளின்னு சொல்லுங்களேன்.

-அல்லாஹ்வோடதுதான். ஆனா, தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி காண்கிறோம்

-பொதுவாக அல்லாஹ்வோட பள்ளியென்று சொல்வீர்களேயானால் நான் இன்ஷா அல்லாஹ் ஒரு கணிசமானத் தொகைத் தருகிறேன். தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி என்று முழங்கினால், எல்லோரையும் போல ஒரு குறைந்த பட்ச தொகையையே நான் தர விரும்புவேன்.

-நாம் பிரியவில்லையே? அவர்கள்தானே பிரித்து வெளியே அனுப்பி விட்டார்கள். எங்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்று அறிவிப்புப் பலகையே வைக்கிறார்களே?

-நீங்கள் பழங்கதை பேசுகிறீர்கள். இப்ப அப்படியெல்லாம் இல்லை. வேறு ஊர்களைப்பற்றி அவ்வளவாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நம்ம ஊர்ல இல்லே.  யாரும் எந்தப் பள்ளியிலும் தொழலாம்.

-அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்….

-நிறுத்துங்கள்.  அல்லாஹ் குர் ஆனில் என்ன சொல்கிறான் என்று எனக்கு விளக்காமாகத் தெரிவதற்கு முன்பிருந்தே பெற்றோர் வளர்ப்பில் நான் ஒழுக்கமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளேன்.  இப்பவும் ஒரு பொது மேடையில் ஏறி தைரியமாக என்னால் அரைகூவ இயலும், “என் மேல் குற்றம் பிடிப்பவர், குறை சொல்பவர் யாரும் உள்ளனரா?” என்று. உங்கள் நிலை என்ன? பள்ளிக்குப் படிக்க அனுப்பினால் மட்டம் போட்டு படம் பார்க்கச் சென்றீர்கள், ஓத அனுப்பினால் ஒளிந்து கொண்டீர்கள், மீசை வருமுன் பீடி சிகரெட், கழிசடைகளோடு சேர்ந்துகொண்டு கள்ளு சாராயம், கல்யாணம் கட்டிக்கொடுத்தபின்பும் கண்டவளோடும் தொடுப்பு, இப்படித்தானே பகிரங்கமாக நீங்கள் என் கண்முன் வாழ்ந்து காட்டினீர்கள். மூத்தவரை மதிப்பதில்லை. ஒரு வக்த் தொழுவதில்லை; நோன்பு நேரத்திலும் குடிபோதை, ஒரு நல்ல செயல்? நல் வார்த்தை? ம்ஹூம்.  இப்படி வாழ்ந்த உங்களுக்கு நினைவிருக்கா நான் எப்படி வாழ்ந்தேன் என்பது? 

-ஒரு காலத்தில் தப்பு செய்தவர் திருந்தக் கூடாதா?

-திருந்தலாம். கண்டிப்பாகத் திருந்த வேண்டும்.  ஆனால், திருந்திய பிறகு, உங்கள் கண்களுக்கு முன்னாலேயே ஓர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருபவனுக்கு தவ்ஹீது என்னும் கட்டுக்குள் உபதேசம் செய்ய முயல்வதைவிட உங்களிடம் பண பலமும் உடல் பலமும் இருந்தபோது உங்களைச் சுற்றி கூடவே ஒரு கழிசடைக் கூட்டம் இருந்ததே, அவர்களையும் வழி கேட்டில் அழைத்துச் சென்றீர்களே அவர்களிடம் போங்கள்; உபதேசியுங்கள், நீங்கள் எட்டிய நேர்வழிக்கு அழைத்து வாருங்கள். நாம் யாவரும் சகோதரர்களே. நமக்குள் மார்க்க விஷயத்தில் மாற்றுக் கருத்துகள் ஏற்படும்போது கண்ணியமாக உரையாடுங்கள்.  நக்கலோடும் குத்தலோடும் எல்லாம் தெரியும் என்னும் இருமாப்போடும் ஏனையோரை முட்டாள்கள் என்று தீர்மாணித்து உரையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நல்ல அழகிய முறையில் மனிதர்களை அனுகி புரியும்படி இலகுவாக மார்க்கத்தை எத்தி வையுங்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக, நம் சகோதரர்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தாலே நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.  போய் வாருங்கள்.

~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~

3) குறி சொல்லவா குறி!

எல்லா உறவுகளும்
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
காற்புள்ளியோடு கலங்கியோ
அரைப்புள்ளியோடு தயங்கியோ
கேள்விக்குறியேந்தி
உம் வீட்டு வாசல் 
வந்து நின்றால்

ஆச்சர்யக்குறிகளில் பிணைத்துவைத்து
ஆணியடிக்காமல்
முறைத்து
முற்றுப்புள்ளியிடுமுன்
அவர்கள் கேள்விக்குறிக்கு
திருப்தியான
விடையளித்து விடைபெறவும்

மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்

வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில் 
பெருக்கல் குறிகள் வாய்த்தன

கழித்தல் குறிகளால்
காயப்படுத்துமுன்
வகுத்தல் குறிகளுக்குளிட்டுப்
பகுத்துப்பாருங்கள் 

இன்பம் 
ஈவு எனப் பொங்க
மீதியாக மிஞ்சும்
நிறைவான நிம்மதி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

50 Responses So Far:

Ebrahim Ansari said...

//எதற்கெடுத்தாலும் பிற தளங்களைக் குறை சொல்வது, தன்னிச்சையாக இயங்கும் வலைஞர்களை வம்புக்கிழுப்பது, எந்த ஒரு சமூகச் செயல்பாடுகளிலும் தமக்கு என்றொரு நிலைபாடு இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏனோதானோவென்று பதிவுகளை வெளியிடுவது போன்றவற்றால் ஊடகவியலைப் பற்றி ஒரு அடிப்படை ஞாயதர்மம்கூட அறியாமல் இருப்பது வேதனைக்குரியது. தவிர, வெளியிடப்படும் வாழ்வியல், உளவியல் மற்றும் தத்துவப் பதிவுகள் வாழ்க்கையை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய ஒப்பாரி வைக்கச் சொல்வதாக இருக்கக் கூடாது. //

காலத்தே பெய்துள்ள கருத்து மழை.

Ebrahim Ansari said...

//எல்லாவற்றிற்கும் மேலாக, நம் சகோதரர்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தாலே நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். போய் வாருங்கள்.//

எல்லா பிரச்னைகளுக்கும் பொருந்தும் நல்லெண்ண வார்த்தைகள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்கா, உங்களுக்குள் புதைந்துகிடந்த முத்தான நல்ல கருத்துக்களையும், பழக்கவழக்கங்களையும் எழுத்தென்னும் எக்ஸ்கவேசன் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்.

ஊரில் ஒரு புறம் கலியாண வைபவங்கள் உலகக்குதூகலங்களை வரவழைத்திருந்தாலும் மறுபுறம் சொந்தபந்தங்களின் திடீர்த்திடீர் மரணங்கள் மறுமை வாழ்வுக்கு மறக்காமல் தயார் செய்து கொள் என்று வாயின்றி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது.

புரிந்தவர்கள் புத்திமதி பெற்றுக்கொள்கின்றனர். புரியாதவர்கள் வியாக்கியானம் படிக்கின்றனர்.

காலம் காசின்றி சொல்லித்தரும் இந்த பாடம்
சிலருக்கு பிரத்யேக டியூசன் வைத்து சொல்லிக்கொடுத்தும் புரிவதில்லை.

அரியர் வைத்து எழுத இங்கு அவகாசமேதுமில்லை.

Ebrahim Ansari said...

//மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்

வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில்
பெருக்கல் குறிகள் வாய்த்தன

கழித்தல் குறிகளால்
காயப்படுத்துமுன்
வகுத்தல் குறிகளுக்குளிட்டுப்
பகுத்துப்பாருங்கள்

இன்பம்
ஈவு எனப் பொங்க
மீதியாக மிஞ்சும்
நிறைவான நிம்மதி!//

வாவ்!

குற்றாலம் அருவியிலே குளித்தது போல இருக்குது.

//வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில்
பெருக்கல் குறிகள் வாய்த்தன//

வழி நெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகள் - அதனால் பெருக்கல் குறிகள் ! அற்புதம் ! அருமை! ஆனந்தம்!

Yasir said...

நிறைவான பதிவு....நச் -ன்ற கவிதை......பள்ளிக்கு பணம் கேட்கும்போது நீங்க கேட்ட ஒரு சில வற்றைத்தவிர மற்ற வார்த்தைகளை நானும் கேட்டேன் :):)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தமிழ் எழுத்துகளை தெளித்து வைத்தால் அது மொழியாகாது; புரிந்தாலே தமிழ் என்பதை யாராவது இவர்களுக்கு எடுத்துச் சொன்னால் வாசிப்பவருக்கு தலையில் முடி மிஞ்சும். //

தெளிப்பதோடு அல்லாமல் குதறியும் வைத்தால் ! ரணகளம் தான் !

என்னமோ சொல்ல வர்ரீங்க... ஏதோதோ புரிஞ்சுக்கிறாங்க.... ! எடக்குமொடக்கா புலம்பவும் செய்றாங்க !

:)

எம்.எஸ்.எம்(n):

//காலம் காசின்றி சொல்லித்தரும் இந்த பாடம் சிலருக்கு பிரத்யேக டியூசன் வைத்து சொல்லிக்கொடுத்தும் புரிவதில்லை.

அரியர் வைத்து எழுத இங்கு அவகாசமேதுமில்லை.//

என்ன மேட்டரு !?

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

Nice short article on blogging.

Actually the blog of a person or a group will reflect their true characters and personalities.

//தத்தம் வலைப்பூக்களைக் கொண்டு வாட்ப்போர் போல சதாவும் பிரச்னைகளை கிளப்புவது தற்கால வலைப்பூக்களின் மற்றும் சமூக வலைதளங்களின் வாடிக்கையாகி விட்டது. எதற்கெடுத்தாலும் பிற தளங்களைக் குறை சொல்வது, தன்னிச்சையாக இயங்கும் வலைஞர்களை வம்புக்கிழுப்பது, எந்த ஒரு சமூகச் செயல்பாடுகளிலும் தமக்கு என்றொரு நிலைபாடு இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏனோதானோவென்று பதிவுகளை வெளியிடுவது போன்றவற்றால் ஊடகவியலைப் பற்றி ஒரு அடிப்படை ஞாயதர்மம்கூட அறியாமல் இருப்பது வேதனைக்குரியது. தவிர, வெளியிடப்படும் வாழ்வியல், உளவியல் மற்றும் தத்துவப் பதிவுகள் வாழ்க்கையை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய ஒப்பாரி வைக்கச் சொல்வதாக இருக்கக் கூடாது. //

Actually the above mentioned defects are reflection of the bloggers' own characters and personality traits in the real world. True characters(good or bad) cannot be hidden for long.

Moreover, due to the fear and shyness, people in real world would not reveal their true character, but will reflect their true characters in their writings behind the doors (mostly we see them in public toilets doors and walls, and toilet door like blogs and comments too).

Regular monitoring of our town blogs and the comments of our community members helps understanding the nature, characters and tendencies of people.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Unknown said...

//விபரீதம் – ஒரு மாதிரி உரையாடல்//

A reflection of so many people's genuine concerns who opt unity and harmony over political games(kind of power play) played in the name of the religion.

Jazakkallah khair brother.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அன்பிற்குரிய காக்கா,

மூன்று இத்தியாதிகளிலும் உயிர் நாடியைப் பிடித்து பதம் பார்த்து விமரிசித்தமைக்கு மிக்க நன்றி.

இன்று, நேற்று இன்று நாளையை எதிர்பார்த்திருந்த வாசகர்களின் யானைப்பசிக்கு சோளப்பொறியாக இதைப் பதிந்திருக்கிறார்கள் அ.நி.

தேறுமா என்று தெரியவில்லை.


****

அன்பிற்குரிய எம் எஸ் எம்,

வாழ்க்கையின் அர்த்தமே "இதோ இப்படித்தான் வாழ்ந்தேன்" என்று சொல்லுமளவுக்கு வாழ்தலே என்பது என் அபிப்ராயம். துன்பங்களும் துயரங்களும் என்னோடு இருக்க மகிழ்வான தருணங்களையும் வித்தியாசமான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதே படிப்பினை தரும், அல்லவா?

//அரியர் வைத்து எழுத இங்கு அவகாசமேதுமில்லை.//

வாழ்வியல் தாத்பரியத்தின் குணாதிசியங்களில் முக்கியமான ஒன்று. சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்

Unknown said...

வலைப்பூக்களின் வருகையையும் அதில் உள்ள குறைகளையும் சபீர் காக்கா தனக்கே உள்ள பாணியில் நாசூக்காக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்..

அதே வலைப்பூக்களில் பின்னூட்டம் என்று இருப்பதையும் அதை கையாளும் விதத்தினையும் அடுத்த எபிசோடில் விளக்குவீர்கள் என நம்புகிறேன்..

காரணம்.. கட்டுரையை விட அதன் பினூட்டம் பல விடயங்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது..

ஆனால் சமீபகாலங்களில் இடப்படும் பின்னூட்டங்கள் பலரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்ததை நானும் பின்னூட்டமிட இயலாத சகோக்களும் கண்டு வேதனை அடைந்துள்ளோம்.

நம் மனதில் நினைப்பதையெல்லாம் எழுத்துக்களால் வடித்துவிடமுடியாது. அதற்கென்று நாகரீகம் உள்ளது. அதனை சிலர் மீறிவிடுகின்றனர்.

அவ்வாறு வரும் பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தல் என்ற ஒன்று உள்ளதை ஏன் வலைதளங்கள்/வலைப்பூக்கள் மறந்துவிடுகின்றன? பிறரை அல்லது பிற சமூகத்தினரை குறை சொல்வதை பார்த்து/படித்து குதூகளிப்பதில் அப்படி என்ன ஆனந்தம்?

இதனை கருத்துச் சுதந்திரம் என்றால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இது வேறு கட்டுரைக்கு ஏற்ற பின்னூட்டமாக இருந்தாலும்.. இதுவும் இக்கட்டுரைக்கு பொருந்தும் எனபதேலேயே இங்கே இடுகிறேன்.



M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தினக்குறிப்பு to வலைப்பூ ரொம்ப சுவராஸ்யம்.!

உரையாடலாய் ஒற்றுமைக்கு நல்லுபதேசம்.!!

கவியால் நொக்கத்து வைத்து சொன்ன நிம்மதி தேவை, அருமை!!!

sabeer.abushahruk said...

தம்பி யாசிர்,
கா.மு.பள்ளியின் மாண்புடை மாணவர் வரிசையில் இடம்பெறுவது என் பள்ளிப்பிராயத்தின் பால்யக் கனவு. இருப்பினும் ஒரே ஒரு பாடத்தில் மட்டுமே முதல் இடம் கிடைத்ததால் அந்தப் பட்டியலில் இடம் பெற இயலவில்லை. ஆனால், நீங்கள் 10 மற்றும் 12 ஆகிய இரண்டு தேர்வுகளிலும் முதல் இடம் பிடித்தவர். உங்களுக்கு ‘எப்படி படிக்க வேண்டும்’ என்று ரேங்க்கே எடுக்காதவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எனக்கு அந்தச் சகோதரர் இஸ்லாத்தைப் பற்றி சொல்ல முனைந்தது. எனவே, சற்று காட்டமாகவே பதில் சொல்ல வேண்டியதாயிற்று. இங்கு குறிப்பிட்டவை அவற்றில் மிதமானவை மட்டுமே.
மற்றுமொரு வேதனையான சம்பவமும் எனக்கு நிகழ்ந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் ஊரில் இருந்தபோது வரயிருந்த நோன்பில் கஞ்சி காய்ச்சுவதற்கான அறிவிப்பை தவ்ஹீது பள்ளியில் ஜும் ஆ தொழுகையின்போது அறிவித்தார்கள். தொழுகைக்குப்பிறகு கமிட்டியை அனுகி என் பெயரையும் பதியச் சொல்லிவிட்டு வீட்டில் வந்து பணத்தை வாங்கிக்கச் சொல்லிவிட்டு வந்தேன். இதை கவனித்துக் கொண்டிருந்த தவ்ஹீது என்று தம்மை தனிமைப்படுத்தி வைத்திருந்த என் நண்பர் என்னிடம் வந்து, “கமிட்டி சரியில்லை. கொடுக்காதீர்கள்” என்னும் தலைப்பில் நிறையப் பேசினார். நான் அவரிடம், “நட்பு வேறு. என் விருப்பம் வேறு” என்பதைச் சொல்லி நான் கமிட்டிக்கல்ல நோன்பாளிகளுக்காகக் கொடுக்கிறேன் என்று சொன்னேன். முதலில், அவர் என்னைக் கண்டுகொண்ட விதம் எப்படி தெரியுமா?
“நீங்களா? இங்கேயெல்லாம் வரமாட்டீங்களே”.


அபு இபு,
மொழியின் அவசியமே அதைக் கொண்டு பரஸ்பரம் புரிதல் ஏற்படுத்தத்தான். ஆனால், ஏனோ தெரியவில்லை, சிலர் தன்னுடைய திறமையைப் பறைசாற்றுவதாக எண்ணி மொழியைக் கடினமாக்கி விடுகின்றனர். நினைவிருக்கிறதா? எளிமையாக உரையாடியவர்களே உலகில் எல்லாத் துறைகளிலும் கொடியோச்சுகிறார்கள்?

sabeer.abushahruk said...

Dear brother B. Ahamed Ameen,

Assalamu alaikkum varah...

I am very much pleased to see your feed backs on my write ups. It now has become a habit of anxiety to expect your view on issues that I write about. And I’ve also noticed that your angle on social issues do resemble mine on many aspects. May be that’s why we attract each other through our social welfare intensions which are parallel most of the times.

It is only my personal misery that you ain’t writing these days and now has slowly allowed a gap to form, which will further affect interest in writing.
Therefore, please do come up with positive piece of writing on whatever the issues you find fit to talk about.

Take care.

Ebrahim Ansari said...

//இன்று, நேற்று இன்று நாளையை எதிர்பார்த்திருந்த வாசகர்களின் யானைப்பசிக்கு சோளப்பொறியாக இதைப் பதிந்திருக்கிறார்கள் அ.நி.//

தம்பி!

இந்த சோளப் பொறியை சாப்பிட்டே யானை ஏப்பமும் விட்டுவிட்டது என்று தொடர்ந்து வரும் பின்நூட்டங்களிலேயே தெரியுமே.

நொறுக்குத்தீனி அல்ல நொறுக்கும் தீனி. அதிலும் அந்தக் கவிதை அடடா....மூன்றிலும் நான் தரும் முதல் மார்க் அதற்குத்தான்.

sabeer.abushahruk said...

தம்பி ஜாஃபர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
(கீழேயுள்ள நீண்ட விளக்கத்தை வாசிக்க நேரமில்லையெனில், சுருக்கமாக: “எதிர்வாதங்கள் மட்டுறுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை; அநாகரிக, கீழ்த்தரமான கருத்துகள் மட்டுறுத்தப்பட வேண்டியவையே”)

நேரமிருந்தால் முழுதும் வாசியுங்கள்.
தங்கள் ஆதங்கமே நம்மில் பலரின் கவலையும்கூட. ஆயினும் நாம் அனைவரும் குறைந்தபட்ச மனக்கட்டுப்பாடுடைய மனிதர்களே. நம்மில் பலரைப் போல ஆசை, கோபம், விருப்பு, வெறுப்பு போன்ற அபரிதமான குணாதிசியங்களைக் கொண்ட சாதாரண, மிகச் சாதாரண மனிதர்களே நாம்.

தவிர, ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தைக் காட்டக் கற்றவர்களுமல்லர். அழகிய பொறுமையை எல்லா நிலையிலும் கடைபிடிக்கத் தகுந்த சாதுக்களும் அல்லர். இந்த எதார்த்தமான காரணத்தினாலேயே நமக்கு நாமே ஏசியும் பேசியும் கொள்கிறோம். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தை எந்தப் பதிவின் பின்னூட்டங்களைக் கருத்தில் கொண்டு எழுதியிருக்கிறீர்கள் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது என்ற காரணத்தில் சொல்கிறேன், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் என்னால்கூட பொறுமை காக்க முடியாமல் போனது என்பதே உண்மை. காரணம், நேரடியான துவேஷம், ஒரு குறிப்பிட்டத் தெருவைச் சுட்டி கிண்டல் போன்றவை எனக்கு என்றைக்குமே ஏற்புடையதல்ல. அந்தப் பின்னூட்டங்களை வரிசைக்கிரமமாக வாசித்தீர்களேயானால் என் பின்னூட்டக் கருத்துகள் பிற பின்னூட்டங்களின் போக்குக்கேற்ப மாறுவதைக் காணலாம். பிடித்த முயலுக்கு மூணு கால் என்பது கூடாது. தவற்றைச் சுட்டிக்காட்டினால் ஒன்று ஏற்கனும் அல்லது விவாதிக்கனும்.

தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளுமளவுக்கான மொழியாடல், பொதுவில் சொல்ல கூசக்கூடிய அநாகரிகமான சொற்றொடர்கள், அர்த்தம் விளங்காத/பூடகமான விளக்கங்கள் போன்றவை யாரையும் வெறுப்பேத்தும். அவற்றை அப்படியே செரித்துக் கொள்ள கற்றவன் அல்லன் நான். பதில் சொல்வதால் திருத்திவிடலாம் என்கிற நம்பிக்கைக் குறைவு எனினும் அதை மறுக்காவிட்டால் அதுதான் சரி என்று வாசகர்கள் கருதும் ஆபத்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட வேண்டும்தான், ஆனால் சில சரத்களுக்கு உட்பட்டு என்பதே என் நிலைபாடு. ஒரு பதிவின் கருத்திற்கு மாற்றுக் கருத்து பதிந்தால் அவை மட்டுறுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிர் வாதம் செய்யத் தகுதியானவற்றைக் கண்டு அஞ்சியோடுபவர் யாரும் பதிவுகள் எழுதுவது தவறு. என்ன ஒன்று என்றால், எல்லா விவாதங்களும் நாகரிகமான முறையில் மரியாதைக் குறைவின்றி இருக்க வேண்டும். அப்படி இல்லாதவை “மட்டுறுத்தப்பட்டே ஆக வேண்டும்” இதில் மாற்றுக் கருத்தில்லை.
இன்னொன்று, சம்பளத்திற்கு வேலை செய்வது போலல்ல சமூக வலைப்பூக்கள் நடத்துவது. நீங்கள் அறியாததல்ல. என்னைவிட பல வருடங்கள் அனுபவம் மிக்க திறமைசாலியான தாங்கள் அறிவீர்கள் எத்தனை சிரத்தையோடு நேரம் ஒதுக்கிச் செய்ய வேண்டியிருக்கிறது என்று. ஒரு சமுதாய அக்கறையில்தான் வலைப்பூக்கள்/தளங்கள் நடத்தப்படுகின்றன. அதே அக்கறையில் கொஞ்சமாவது வாசகர்களுக்கும் இருக்க வேண்டும். அத்தகைய அக்கறையில் எப்போதெல்லாம் அநாகரிகமான பின்னூட்டங்கள் இடப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றைச் சுட்டிக்காட்டி நீக்கச் சொல்வது நம் கடமையும் கூட; இல்லையா தம்பி. (குறிப்பிட்ட பதிவில் நான் அ.நி.யை அப்படிக் கேட்டுக்கொண்ட பின்னூட்டத்தையும் நீங்கள் காணலாம்).
இருக்கட்டும். பதிவைப்பற்றி ஒன்றும் விமரிசிக்கவில்லையே, நல்லால்லயா இல்லை வாசிக்கவே இல்லையா? J

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இத்தியாதி1. இப்படி என்னையெல்லாம் போட்டு கலாய்சிடிங்க! அருமை! நான் வெறுமையாய் என் பிளாக்கை வைத்திருக்க உண்மை காரணம் முன்பு சொல்லியிருக்கிறேன். மறுபடியும் நாம் பேசிக்கொள்ளும் போது சொல்கிறேன். இத்தியாதி2.இப்படியும் சில வியாதி பிடித்தவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய?சில நேரம் காட்டம் அவசியம் தான்.

crown said...

எல்லா உறவுகளும்
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
காற்புள்ளியோடு கலங்கியோ
அரைப்புள்ளியோடு தயங்கியோ
கேள்விக்குறியேந்தி
உம் வீட்டு வாசல்
வந்து நின்றால்

ஆச்சர்யக்குறிகளில் பிணைத்துவைத்து
ஆணியடிக்காமல்
முறைத்து
முற்றுப்புள்ளியிடுமுன்
அவர்கள் கேள்விக்குறிக்கு
திருப்தியான
விடையளித்து விடைபெறவும்
-----------------------------------------------------------------------------
இதைத்தான் "பெரும்புள்ளி" என சொல்லப்படுவது!"தற்குறி" உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தின் நெறியை முறிக்கும் மூடர்கள்.குள்ள உள்ளம் கொண்டவர்கள்.ஆனால்"அவர்கள் கேள்விக்குறிக்கு
திருப்தியான
விடையளித்து விடைபெறவும்."செய்யும் பெரும் புள்ளிகள் இந்த கலங்கமெல்லாம் துடைத்த தூய வெண் புள்ளிகள்.இலக்கணத்துடன், இயல்பான குறியீடுகளுடன் இலக்கியம் படைக்கும் ஆற்றல் என்
கவியரசனுக்கே வாய்க்க பெற்ற வரம். அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்
--------------------------------------------------------------------
சமத்துவம், சகோரத்துவம்,அதன் மகத்துவம் சொல்லவந்த மந்திரம் இந்த வரிகள்.அருமை! ஊருக்கெல்லாம் பந்திவைத்ததுபோல் இருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்! திருப்தியாய் வயிறும்,உணர்வும் நிறைந்தது.

Shameed said...

கவிதையா இருந்தாலும் கட்டுரையா இருந்தாலும் பின்னுட்டமா இருந்தாலும் இப்படி தூள் கேளப்புரியலே

crown said...

வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில்
பெருக்கல் குறிகள் வாய்த்தன
---------------------------------------------------------------------------
வழியில் கிடக்கும் கருங்கள் காலை பதம் பார்க்காமல், கூட்டல் எனும் தூய்மை செய்து அகற்றினால் அதனுடன் பெருக்கப்படும் நன்மை நம்மை வந்து சேருவதுபோல் "வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில்
பெருக்கல் குறிகள் வாய்த்தன/"இந்த சூத்திரமும் நமக்கு சொல்லும் நெறி! வெற்றியெனும் குறி!

crown said...

கழித்தல் குறிகளால்
காயப்படுத்துமுன்
வகுத்தல் குறிகளுக்குளிட்டுப்
பகுத்துப்பாருங்கள்

இன்பம்
ஈவு எனப் பொங்க
மீதியாக மிஞ்சும்
நிறைவான நிம்மதி!
-------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இப்படி வாழ்கை கணக்கை வகுத்துகொண்டால், நன்மையும் சேரும், நிம்மதியும் சேரும். அருமையான "சமூகவியல்"சித்தரிக்கும் சித்திரம் இந்த கவிதை! நம் குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் வைக்க தகுதி வாய்ந்த அருமையான் ஆக்கம்! இதேயே நிரந்தர தாரக மந்திரமாக அ. நி-எப்பொழுதும் பார்க்கும் வண்ணம் வைக்க நான் வழிமொழிகிறேன். மேதை இ.அ.காக்கா போன்றோர்களின் கருத்து என்ன??? மேலும் குறைந்த பட்சம் 'எல்லா தெரு சங்கங்களிலும்"இதன் விளக்கத்துடன்(விளக்கம்=அஹமது சாட்சா,ஜெமில் காக்கா,கவியரசு,காதர் வாத்தியார், மேதை அ.இ.காக்கா இவர்களில் ஒருவரோ கூட்டு குழுவோ)பரிசீலிக்கப்படுமா? பொதுவில் எல்லோருக்குமான கவிதை இது. நல்லொழுக்கம் , சமூக சுயவொழுக்கம் போதிக்கும் நல்ல ஆக்கம். வாழ்த்துக்கள்.

Unknown said...

வ.. அலைக்கு முஸ்ஸலாம்

என் பின்னூட்டத்தில் ஸலாம் கூற மறாந்தமைக்கு மாப்பு...

விளக்கத்திற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..

கட்டுரையை படிக்காமலோ அல்லது பிடிக்காமலோ பின்னூட்டமிடவில்லை காக்கா..படித்து முதல் வரியிலேயே என் ஆதரவை தெரிவித்துவிட்டுத்தான் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்..

கட்டுரையை படிக்காமலேயே பின்னூட்டமிட...ஹி..ஹி.. நான் அந்த லிஸ்ட் அல்ல...!!

நமதூரின் தளங்களுக்கென்று வாரத்தின் இரு நாட்களை ஒதுக்கிவைத்துள்ளேன்(24 மணி நேரத்தையும் அல்ல) அப்படித்தான் இன்று அ.நியை வலம் வந்தேன்.

அதன்படி இன்னொரு கட்டுரையையும் அதன் பின்னூட்டத்தையும் படித்து, அதில் பதிவிற்கு தொடர்பில்லாத இத்தனை பின்னூட்டங்களா? என்று மனம் நொந்து, நானும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிடக் கூடாது என்றுதான் என் கருத்தை அங்கு வைக்காமல் இங்கு வைத்தேன்..

மேலும் அவசியமற்று சில பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு என்னைத்தானே மாட்டிக்கொண்டும், அதற்கு பதில் அளித்துக் கொண்டும் என் நேரத்தை இரையாக்க மாட்டேன். தேவையான பின்னூட்டத்தை மட்டும் இடுவேன். அதன்படிதான் இப்பதிவின் பின்னூட்டமும்.

அதேபோல ஏதேனும் பதிவுகளோ.. அல்லது கருத்துக்களோ என் மனதை ஏதேனும் செய்தால் (நெகிழ்ச்சி,மகிழ்ச்சி,கோபம்,ஆதங்கம்) இவற்றிற்கு நிச்சயம் பின்னூட்டமிடுவேன்.

அதனால்தான் கட்டுரையாளர்/கவிஞராக இப்பதிவின் உரிமையாளருக்கு, சில உரிமையான என் கருத்துக்களை வைத்தேன்.

நான் உங்கள் கருத்துக்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை.. அவ்வாறு நீங்கள் புரிந்துகொண்டால் மன்னிக்கவும். அப்பதிவின் 80 சதவீத பின்னூட்டங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

குறிப்பு: எனக்கும் என் நிறுவனத்தில் 2013/14 (நியூ இயர் ஹி ஹி கொண்டாட்டம் அல்ல) இன்வென்டரி வேலை இருப்பதால் இதற்கு மேல் இக்கட்டுரைக்கு தொடர்பில்லாத நம் கருத்துக்களை இங்கே விவாதிக்காமல் தேவையெனில், தனி மடலில் தொடரலாம்.

crown said...

Shameed சொன்னது…

கவிதையா இருந்தாலும் கட்டுரையா இருந்தாலும் பின்னுட்டமா இருந்தாலும் இப்படி தூள் கேளப்புரியலே
----------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நலமா? நல்ல சொன்னீங்க இவர்(கவியரசு சபீர்காக்கா) நமக்கு கிடைத்த "பொக்கிஷம்". எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!

Unknown said...

இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன்..

உண்மையில் தன்னார்வலர்களின் கஷ்டங்களை பிறரை விட அதிகம் உணர்ந்தவன்.நான்.. எனக்குத் தெரியும் சேவையாக தளம் நடத்துவதும் அதன் கஷ்டங்களும்..

அதில் இதுபோன்ற மேடு பள்ளங்களை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. சரியாகும் இன்ஷா அல்லாஹ்.. எல்லாம் சரியாகும்.

உங்கள் கருத்தில் உங்கள் வேதனை எனக்குப் புரிந்தது.

Unknown said...

//ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் என்னால்கூட பொறுமை காக்க முடியாமல் போனது என்பதே உண்மை. காரணம், நேரடியான துவேஷம், ஒரு குறிப்பிட்டத் தெருவைச் சுட்டி கிண்டல் போன்றவை எனக்கு என்றைக்குமே ஏற்புடையதல்ல. அந்தப் பின்னூட்டங்களை வரிசைக்கிரமமாக வாசித்தீர்களேயானால் என் பின்னூட்டக் கருத்துகள் பிற பின்னூட்டங்களின் போக்குக்கேற்ப மாறுவதைக் காணலாம். //

இது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது காக்கா..(தூங்குபவர்களை எழுப்பிவிடலாம்.. நடிப்பவர்களை.... ?)

அதனால்தான் என் ஆதங்கமும் அவ்வாறான பின்னூட்டங்களுக்கு பதில் இடுவதை விட மட்டுறுத்துனரை தொடர்பு கொண்டு இவ்வாறான பின்னூட்டங்களை நீக்கம் செய்யக் கோரலாம். இதனால் வீண் டென்ஷன் குறையும்.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவுன்,

//குள்ள உள்ளம் கொண்டவர்கள்// இதற்குமுன் இப்படி ஒரு வர்ணனையைத் தமிழில் யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. குள்ள உள்ளம் எப்போதும் கள்ள உள்ளம்தான் இல்லையா?

//ஊருக்கெல்லாம் பந்திவைத்ததுபோல் இருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்! திருப்தியாய் வயிறும்,உணர்வும் நிறைந்தது.//

இந்த குசேலனின் அவல்கூடத் தங்களுக்குப் பெரிய விருந்துதான். பசித்தவருக்குப் பரிமாறும்போதுதான் உணவின் உண்மையான ருசி உணரப்படுகிறது. உண்ட களைப்பு நீங்கு முன் ருசியை மெச்சுவது எல்லோருக்கும் தோன்றாது.

நீங்கள்தொடர்ந்து வாசிப்பீர்கள் என்றால் நான் எழுத்தையே பிரதானத் தொழிலாக மேற்கொள்ளவும் தயார். ஏனெனில், நீங்கள் விமர்சனம் என்னும் பெயரில் ஊட்டச் சத்தை ட்டானிக்காகத்தருகிறீர்கள்.

//நிரந்தர தாரக மந்திரமாக அ. நி-எப்பொழுதும் பார்க்கும் வண்ணம் வைக்க நான் வழிமொழிகிறேன்// தங்களின் இத்தகைய அங்கீகாரத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டவன், கிரவுன்.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

ரத்திணச் சுருக்கமான தங்களின் விமரிசனத்தில் என்மீதான அன்பைக் காண்கிறேன், நன்றி.

ஹமீது,

நீஙக இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், எனக்கு முகநூலில் இப்படி ஒரு வாழ்த்தை நம் அன்பிற்குரிய ஒருவர் எழுதிச் சென்றுள்ளார்.

//அடேய் முட்டாளே,
தூங்குரவனை எழுப்பி விடலாம். இது போன்ற விதண்டா வாதிகளிடம் பேசி என்னத்தை சாதிக்கப் போகிறாய்.
தன்னைத் தானே உயர்ந்தவன் என்று இறுமாப்புடன் இருப்பவனுக்கு என்னதான் எடுத்துரைத்தாலும் மண்டையில் ஏறாது.
உன்னுடைய பொன்னான நேரத்தை வீணாக்காதே
வஸ்ஸலாம்.

யாரென்று விளங்குகிறதா?

sabeer.abushahruk said...

தம்பி ஜாஃபர்,

புரிதலுக்கு நன்றி.

//அதனால்தான் என் ஆதங்கமும் அவ்வாறான பின்னூட்டங்களுக்கு பதில் இடுவதை விட மட்டுறுத்துனரை தொடர்பு கொண்டு இவ்வாறான பின்னூட்டங்களை நீக்கம் செய்யக் கோரலாம். இதனால் வீண் டென்ஷன் குறையும்.//

இதையும் நான் செய்திருப்பதை அந்தப் பதிவிற்கான என் பின்னூட்டங்களில் பார்க்கவில்லையா?

போகட்டும். அனுபவமிக்க தங்களின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அ.நிக்கு சிபாரிசு செய்கிறேன்.

தவிர, அந்தத் தேன்குரலில் கவியன்பனின் பாடல்கள் பாடும்போதெல்லாம் மறவாமல் எனக்கு ஒரு தொடுப்பை அனுப்பி வையுங்களேன். நெஞ்சை வருடும் உங்கள் கூட்டணியின் பாடல்களை கேட்காமல் தவறவிட விரும்பவில்லை.

நன்றி தம்பி.

Shameed said...

crown சொன்னது…
Shameed சொன்னது…

கவிதையா இருந்தாலும் கட்டுரையா இருந்தாலும் பின்னுட்டமா இருந்தாலும் இப்படி தூள் கேளப்புரியலே
----------------------------------------------------------------------------------------------
//அஸ்ஸலாமு அலைக்கும். நலமா? நல்ல சொன்னீங்க இவர்(கவியரசு சபீர்காக்கா) நமக்கு கிடைத்த "பொக்கிஷம்". எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!//



வலைக்கும் முஸ்ஸலாம் நாங்கள் இங்கு நலமே அங்கு உங்கள் அனைவரின் நலம் சிறக்க துவா


எங்கே உங்களை அடிக்கடி அ .நி .பக்கம் காண முடியவில்லையோ!

கவிதையேனும் தூண்டில் போட்டால் மட்டுமே crown எனும் மீன் மாட்டுகின்றது

adiraimansoor said...

///மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்

வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில்
பெருக்கல் குறிகள் வாய்த்தன

கழித்தல் குறிகளால்
காயப்படுத்துமுன்
வகுத்தல் குறிகளுக்குளிட்டுப்
பகுத்துப்பாருங்கள்

இன்பம்
ஈவு எனப் பொங்க
மீதியாக மிஞ்சும்
நிறைவான நிம்மதி!//

சபீர் அற்புதமான தொகுப்பு
படித்து வரும்போதே பின்னூட்டமாக எழுதவேண்டிய கருத்துக்களும் என் மனதில் உதித்தன மற்றவர்களின் பின்னுட்டத்தையும் படித்துவிட்டு நாமும் பின்னுட்டமிடலாம் என்று பார்த்தால் உண்மையிலையே என் மனதில் உதித்த கருத்துக்களை இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களும் கொட்டிய குற்றால அருவியில் குளித்துள்ளார்கள். நான் குளித்தது உன் வார்த்தை என்ற அருவியில், நான் குளித்தது உன் வார்த்தை என்ற அருவியில், சரியான குளிரும் சாரலும் என்னை வாட்டி எடுத்துவிட்டது அதிரை நிருபரில் வலம் வருபவர்களைத்தவிற வேறு யாருக்கும் இந்த அருவியில் குளிக்க பாக்கியமில்லை

கூட்டல் கழித்தல் பெருக்கள் குறியீடுகளை வைத்து ஒருமனிதன் அவனுடைய எண்ணங்களை எப்படி கையாலவேண்டும் என்பதை மிக தெள்ளத்தெளிவாக விளக்கி இருப்பது ரொம்பவே பிடித்திருக்கு

adiraimansoor said...

இத்தியாதி இத்தியாதி என்றால் என்ன சபீர்
ஏற்கனவே அடிக்கடி கேட்ட வார்த்தைகள்தான் அதுவும் தவ்ஹீதின் எழுச்சின் போது கேட்ட வார்த்தைகள் அர்த்தம் புரிந்திருந்தது ஆனால் இப்பொழுது மறந்துவிட்டது
காதரிடம் கேட்டேன் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை

adiraimansoor said...

/////மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்/////

ஒவ்வொருத்தரும் இதை கடை பிடித்தாலே
அமைதி நம்மை தேடிவரும்
எனக்கும்தான் சொல்லிக்கொள்கின்றேன்

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய மன்சூர்,

இத்தியாதி என்றால் "இவை முதலானவை" என்பது நேரடியான பொருள்.

இன்னும் குழப்புகிறதா?

ஆங்கிலத்தில் etc.etc. என்பார்களே அதன் மொழியாக்கம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தத் தொடர் பதிவின் முதல் வெர்ஷனில் பார்த்துக் கொள்ளவும்:

http://adirainirubar.blogspot.ae/2013/10/blog-post_3939.html

ரசித்து வாசித்ததோடு மட்டுமல்லாது உற்சாகமூட்டும் விதமான பின்னூட்டத்திற்கும் நன்றி. காதரை எங்கே காணோம்?

அதிரை.மெய்சா said...

கால சூழலுக்கேற்ற பதிவு. அறிய வேண்டிய அனைத்து செய்திகளையும் ஒரு சேரக் கலந்து கோக்டல் ஜூஸாக்கி அனைவரையும் பருக வைத்துள்ளாய்.

அதுபோல் குறி கூட குறி வைத்து சொல்லிய விதம் அருமை.

வாழ்த்துக்கள் நட்பே.!

அதிரைக்காரன் said...

பின்னூட்டம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டார்களோ என்னவோ பொதுவில் எழுதப்படும் பதிவுகளில் சிலரது பின்னூட்டங்கள், பீன்னூட்டங்களாக உள்ளன. :(

தகவல், கருத்து, செய்தி, அலசல், விவாதம், கருத்துப்பரிமாற்றம் ஆகிய பல்வேறு கோணங்களில் ஒரு பதிவு இருக்கும். ஆனால் கருத்திடுபவர்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் மேற்படி செயல்படும்போது பதிவு எழுதியவருக்கும் பின்னோட்டம் ஏற்படுமளவிற்கு உணர்ச்சிப் பிழம்புகளாகி விடுகின்றனர்.

பொதுவில் உரையாடும் நாககரிகம் பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களிடம் இல்லை என்பது என் அனுபவம்.

அதிரைக்காரன் said...

ஆகா ஓஹோ சூப்பர். (இது மு.சொ :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பே.............! (இ.மு.சொ)க்கு ! :)

sabeer.abushahruk said...

மெய்சாவுக்கு ஒரு சலாம். உன் வழக்கமான வரவிற்கும் சுருக்கமானக் கருத்திற்கும் நன்றி.

அப்பால, அதிரைக்காரர் அவர்களுக்கு நான் சொல்லிக்கிறது என்னன்னா, எல்லோரும் நாம் எதிர்பார்ப்பதைப்போல் இருப்பதும் இல்லை. எல்லாவற்றிலும் நாம் நினைப்பது மட்டுமே சரியாக அமைவதுவும் இல்லை. நமக்கு சரி எனப்படுவது நாலு பேருக்கு தவறாகத் தோன்றினால் நம் நிலைபாட்டை விளக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

கேட்டா கேட்கட்டும் கேட்காட்டா போகட்டும். நாம் கோவிச்சுக்காம நம்ம கடமையச் செய்வோம்.

என்ன நாஞ்சொல்றது?

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer Ahmed AbuShahruk,

Thanks for valuing my feedbacks and welcoming my points of views. Writing seems to be my passion too. But due to the workloads, not able to write in full swing. Have a lot of concepts to share with the world, have been writing seeds of thoughts. Soon, I would post very useful concept here in Adirai Nirubar. InshaAllah.

"Adirai Nirubar is one of the rare forums where a variety of intellectually matured concepts shared, discussed and contribution of reader's comments are highly valued. It is highly recommended to those who are in thirst for knowledge and ideas, to regularly visit this forum

Jazakkallah khairan brothers.

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

// It is highly recommended to those who are in thirst for knowledge and ideas, to regularly visit this forum //

Wa alaikkumussalam dear brother B. Ahamed Ameen,

Thanks for your honest comment.

அதிரைக்காரன் said...

நீங்க சொன்னா சரியாத்தான் ஈக்கிம்;)

சபை கண்ணியமற்ற கருத்துக்களைக் காணும்போது ஒன்று நாமும் அதுபோல் இறங்க வேண்டும் அல்லது அங்கிருந்து விலகவேண்டும். நான் எடுத்தது இந்த இரண்டாம் நிலைப்பாடு. இதனை எதிர்கொள்ள திறன்/திரானி இன்றி ஒதுங்குவதாகக் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இதுக்குமேல நான் என்னா சொல்றது?

sabeer.abushahruk said...

ப்ளாக் அன்ட் வொய்ட் தம்பி (நான் ப்ரொஃபைலைச் சொல்கிறேன்),

முள்ளை முள்ளால் எடுப்பது புராதண, புகழ்பெற்ற, எதார்த்தமான, நடைமுறைக்குச் சாத்தியப்பட்ட ஒரு குணப்படுத்தும் முறை.

கண்ணியமற்றக் கருத்துகளை எதிர் கொண்டது உண்மைதான், ஆனால், அதே முறையில் அல்ல மிஸ்டர்.

அதே முறைதான் எனில் அவற்றை இங்கே சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம்.

இதுக்கு மேலே சொல்ல ஒன்னும் இல்லீங்கோ.

Aboobakkar, Can. said...

Aboobakkar, Can. சொன்னது…
/புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரபகுதி முழுவதும் வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறுகள் உண்டு. ஆனால் கடல் கரைத்தெருவில் எங்குமே ஆழ்துளை கிணறு கிடையாது அதற்க்கு காரணம் அங்கு எங்கு போர் போட்டாலும் உப்பு தண்ணீர்தான் வரும் அப்படிப்பட்ட பகுதிக்கு பைப் போட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அது நியாமே !!//

அருமையான கவுண்ட்டர். நானும் இதை முழுக்க முழுக்க வழிமொழிகிறேன்.

சகோ ....சபீர் மற்றும் ஸாமித் ஆகியோருக்கு சதாம் நகரிலும் பாத்திமா நகரிலும் மனைகள் நிறைய உள்ளன 100 அடியில் நல்லதண்ணி கிடைக்கும் . you are most welcome .......


// தண்ணீர் பிரச்னையைக் காட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யவும் ஒரு வழி கிடைத்திருப்பதை பாத்திமா நகரிலும் எஸ் ஏ எம் நகரிலும் இடம் கிடைக்கிறது அங்கு நீர் கிடைக்கிறது என்கிற இலவச விளம்பரத்திலும் புரிந்து கொள்ள வைத்தமைக்கு பாராட்டுக்கள். சில நேரம் பூனைக் குட்டி இப்படித்தான் வெளிவரும்.//

//அதே நேரம் ஊரைக் காலி செய்துவிட்டு இந்தப் பக்கம் பாத்திமா நகரின் மனை வாங்கிக் கொண்டு அகதிகள் போல் வாருங்கள் என்று சொல்வது//

//ஓ தமிழ் நாட்டு மக்களே. காவிரியை ஏன் கேட்கிறீர்கள்? எல்லோரும் காவிரி ஓடும் கர்நாடகாவுக்கு புலம் பெயர்ந்து வந்து விடுங்கள்//

//சாவன்னா காக்கா அவர்களை கருப்பு ஆடுகள் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்//

//உங்களை போன்றோரை பூனை என்று சொல்லி பூனையை கேவலப்படுத்தி இருக்க கூடாது
வேறு ஒரு பெயரைத்தான் சொல்லி இருக்கணும்//

//சாவன்னா காக்கா சிலரின் கருத்திலிருந்து தெரிவது என்ன வென்றால்...கடற்க்கரை தெருவிற்க்கு ஒற்றனாக யாரோ செயல்பட்டு இருக்கின்றார் என்பது...நான் வேற திறந்த வெளியில்லம் 1988-ல் பாத்ரூம் போயிருந்தேனே அதையும் கருத்தாக சொல்லிடப்போறாக//

//நீங்க ரொம்ப குழம்பி போயிட்டீங்க நல்ல தூங்கி முலிங்க அப்போத்தான் உங்களுக்கு ஆட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் தெரியும்!!//

//ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் வந்து வாசிக்கும் தளம் இது. இதில் ஏன் இப்படி தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறீர்கள்? //

sabeer.abushahruk said...

...இத்துடன் இந்த செய்திகள் முடிவடைந்தன.

(எமது அடுத்தப் பதிவைப் படித்தால் அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து கிடைக்கும்.)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
...இத்துடன் இந்த செய்திகள் முடிவடைந்தன.

//(எமது அடுத்தப் பதிவைப் படித்தால் அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து கிடைக்கும்.)//



பதிவு 1 ண்ணில் இருந்து தொடங்கி 50 வரை படித்தால் மனதுக்கு அமைதியும் அருமருந்தும் நிச்சயம் கிடைக்கும்


அதிரைக்காரன் said...

கண்ணாடி காக்கா (நானுன் ப்ரொஃபைலத்தான் சொன்னேன்).

நீங்கள் கண்ணியமற்ற கருத்துகளை பயன்படுத்தவில்லை; ஆனால் சிலர் பயன்படுத்தியபோது கண்டித்திருக்கலாம். தனிப்பட்ட முறையிலேனும். (செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)

சொல்றத சொல்லிப்புட்டேன்.

இப்படிக்கு,
ப்ளாக் தம்பி ;)

crown said...

அதிரைக்காரன் சொன்னது…

கண்ணாடி காக்கா (நானுன் ப்ரொஃபைலத்தான் சொன்னேன்).

நீங்கள் கண்ணியமற்ற கருத்துகளை பயன்படுத்தவில்லை; ஆனால் சிலர் பயன்படுத்தியபோது கண்டித்திருக்கலாம். தனிப்பட்ட முறையிலேனும். (செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)

சொல்றத சொல்லிப்புட்டேன்.

இப்படிக்கு,
ப்ளாக் தம்பி ;)
------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். கெட்ட கல்ச்ச இந்த பிளாக்!(பிளாக் நடத்துறவன் என்பது தானே இந்த பிளாக்கின் சுருக்கமான விளக்கம்)?. நலமாடா?

அப்துல்மாலிக் said...

ஏன் பிளாக்குகளெல்லாம் BLACK ஆகிப்போனது இந்த FB, Twitter வரவால் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு காலத்தில் 200 க்கும் மேல் கமெண்ட் வாங்கிய பிளாக்குகளெல்லாம் இப்போ 5 ஐ தாண்ட மாட்டேங்குது. மக்களெல்லாம் ரத்தின சுருக்கமாக ரெண்டு வரியிலே எழுதி புரியவைக்க முயற்சி செய்றாங்க.. உலகமே சுருங்கும்போது எழுத்துக்களும் கருத்துக்களும் சுருங்கினால் ஏற்றுக்கொள்ளதான் வேணும்.

அதிரைக்காரன் said...

தஸ்தகீர். நா(ன்) நலம்டா கல்சோ.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு