Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 32 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 12, 2014 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தங்களுடைய வாழ்நாட்களில் பெருமை பாராட்டாதவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களின் மூலம் அறிந்து அதிலிருந்து நாம் என்ன படிப்பினை பெறவேண்டும் என்பது பற்றி பார்த்தோம். இந்த வாரம் உத்தம நபி(ஸல்) அவர்களும் சத்திய சஹாபாக்களும் எவ்வாறு பகைமை பாராட்டாமல் வாழ்ந்தார்கள் என்பதை சில சம்பவங்களின் மூலம் அறிந்து பயன் பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.

பகைமை பாராட்ட வேண்டாம் !

இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் கண்கூடாக காணக்கூடிய நிகழ்வுகளில் சில சம்பவங்களை முதலில் பார்க்கலாம். அதிகாலையில் வீட்டில் நல்ல குணத்தோடு ஒன்றாகப் பழகி பேசிக்கொண்டிருக்கும் சகோதரர்கள், அதே நாள் இரவில் எதிரிகளாக மாறி விடுகிறார்கள். இதுபோல் நீண்ட நாட்கள் நண்பர்களாக இருப்பவர்கள் ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் மறுநாள் பகைவர்களாக மாறுகிறார்கள். பெற்று, வளர்த்து, படிக்க, வைத்து, மனுசனாக்கி, நல்ல மனைவியையும் மனம் முடித்துக் கொடுத்த தன் பெற்றோர்களை ஒரு சின்ன வார்த்தைக்காக நீண்ட நாள் பகைவர்களாக ஆக்கிக் கொண்ட பிள்ளைகள் ஏராளம் ஏராளம். 

இப்படி நட்பும் பகைமையும் நிறைய பேர்களை ஆட்கொண்டிருப்பதை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறான செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெருளாதார ஏற்றத்தாழ்வுகளினால், குடும்பம் அந்தஸ்த்து, தெரு ஊர், மொழி, மார்க்க மஸாயில்கள், அரசியல், இயக்கங்கள் என்று அற்பமானவைகளுக்காக பகைமைகொள்வது மிகவும் சர்வ சாதாரணமாக நாம் கண்டு வரும் காட்சி.

மேலும் இன்றைய கால கட்டத்தில், நட்பு பாராட்டுவதை மிஞ்சி விட்டது பகைமை பாராட்டுவது. காரணம் நவீன மீடியா யுகத்தில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் அதற்கு கரணமாகி விடுகிறது. நம்முடைய உறவுகளை பற்றியோ அல்லது நாம் நேசிக்கும் ஒருவரை பற்றியோ அல்லது நாம் அறியாத ஒருவர் பற்றியோ ஏதேனும் தகவல் நமக்கு வந்தால் அந்த தகவல் உண்மையோ / பொய்யோ ஆனால் அந்த செய்தியால் விளையக்கூடிய கெட்ட எண்ணங்களை நம்மை அறிந்தோ அறியாமலோ அந்த நபர்கள் மீது கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தி வெறுக்க வைத்து விடுவதோடு அல்லாமல் அவைகளை பிறரிடம் பரப்பி அதனால் ஏற்படும் ஓர் ஆனந்த கானவையே விரும்புகிறார்கள். இது தான் எதார்த்தத்தில் நடைபெறுகிறது. நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இது போன்ற சினச் சின்ன பகைமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தை எப்படி எல்லாம் அனுகினார்கள் என்பதை பார்க்கலாம்.

நபித்தோழர்களும் மனிதர்கள்தானே, இஸ்லாத்தைத் தழுவிய பிறகும் அவர்களுக்கும் கோபம் சில சந்தர்ப்பதங்களில் ஏற்பட்டது, மனக் கசப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள அவ்வாறு செய்தது தவறு என்று உணர்ந்ததும், முன்னர் அவர்களிடம் இருந்த நெருக்கத்தைவிட பல மடங்கு நட்பு அதிகமானது. அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் இஸ்லாத்திற்கு செய்த பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. உடலாலும், பொருளாலும், குடும்பத்தாலும் எண்ணற்ற உதவிகள் செய்து தியாகம் செய்தவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் காலகட்டத்தில் உமர் (ரலி) அவர்களை அபூபக்கர்(ரலி) அவர்கள் கோபமாக பேசிவிடுகிறார்கள் அவர்கள் இருவருக்கும் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டது, இருவரும் பிரிந்து சென்று விடுகிறார்கள். வீட்டிற்கு சென்ற அபூபக்கர்(ரலி) அவர்கள் தான் தவறு செய்துவிட்டோம் என்று உணர்ந்து உடனே உமர்(ரலி) அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். கதவைத் திறந்த உமர்(ரலி), அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்தவுடன் கதவை வேகமாக சடார் என்று மூடிவிடுகிறார். இதனைக் கண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள் மிகவும் மன வேதனை அடைந்து தன்னுடைய தோழருக்கு அநீதி இழைத்துவிட்டோமே, அவர் என்னை மன்னிக்க மறுக்கிறாரே என்ற மன பாரத்தோடு நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். நடந்த சம்பவத்தை எடுத்துச் சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் உமர்(ரலி) அவர்களும் சிந்திக்க ஆரம்பித்தார்கள் “என்னை சந்திக்க வந்த என் தோழரைப் பார்த்தவுடன் நான் கதவை அப்படி வேகமாக மூடி இருக்கக் கூடாது” என்று உணர்ந்தார்கள். உடன் அபூபக்கர்(ரலி) அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள், அங்கே அபூபக்கர்(ரலி) அவர்கள் இல்லை. உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் நடந்த சம்பவத்தைச் சொல்லி மன்னிப்புக் கேடகச் சொல்லலாம் என்று வந்தார்கள். அங்கே அபூபக்கர்(ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள், உமர்(ரலி) அவர்களைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் முகம் சிவக்க ஆரம்பித்தது. எல்லோரும் அமர்ந்திருந்த அந்த சபையில் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் “நான் இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன காலகட்டத்தில் இந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் தங்களின் சொத்தாலும், உடலாலும் பொருளாதாரத்தாலும் உதவி செய்து என்னை உண்மைப் படுத்தினார். எனக்காக என்னுடைய தோழர் அபூபக்கரை மன்னிக்க மாட்டீர்களா?” என்றார்கள். 

இதனை செவியுற்ற உமர்(ரலி) அவர்கள் உடனே எழுந்து அபூபக்கர்(ரலி) அவர்களிடம் சென்று கட்டி அணைத்தார்கள், நடந்த சம்பவங்களுக்காக இருவரும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு அபூபக்கர்(ரலி) அவர்களை முஸ்லீம்கள் யாரும் தவறாக பேசவில்லை, தவறாக நடத்தவில்லை என்று வரலாறுகளில் பார்க்கிறோம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், அபூபக்கர்(ரலி) அவர்கள் நடந்த கசப்பான இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்காமல் தான் மரணிக்கும்போது உமர்(ரலி) அவர்களை கலிபாவாக நியமித்துச் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதருடைய ஒரு வார்த்தை சுப்ஹானல்லாஹ் எப்படி எல்லாம் அந்த தோழர்களை மாற்றியுள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இன்னொரு சம்பவம், பிலால்(ரலி) அவர்களை அபூதர் அல் கிப்பார்(ரலி) அவர்கள் “கருப்பியின் மகனே” என்று பிலால்(ரலி) அவர்கள் பேசிவிடுகிறார்கள். இதனால் மிகவும் மன வேதனையுற்றார்கள் கண்ணியத்திற்குரிய பிலால்(ரலி) அவர்கள். நடந்த சம்பவம் பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிகிறார்கள். அபூதர்(ரலி) அவர்களை அழைத்து “நீங்கள் இன்னும் அறியாமை காலத்தில் இருக்கிறீர்கள்” என்று கண்டித்தார்கள். இதன் பிறகு பிலால்(ரலி) அவர்களை எங்கெல்லாம் அபூதர்(ரலி) அவர்கள் பார்த்தாலும் மண்ணில் தன் ஒரு கண்ணத்தை வைத்து “உங்கள் காலை வைத்து மிதியுங்கள்” என்று பிலால்(ரலி) அவர்களை பார்த்து சொல்லுவார்களாம். பிலால்(ரலி) அவர்கள் அபூதர்(ரலி) அவர்களை தூக்கிவிட்டு “அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பானாக” என்று சொல்லி தன்னிடம் கோபம் இல்லை என்பதை பிலால்(ரலி) அவர்கள் நிரூபித்தார்கள் என்று வரலாற்றில் வாசிக்கும் போது கண்கள் கலங்காமல் இருக்க முடியாது.

அபூபக்கர்(ரலி) அவர்களுக்கும் ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு சொத்து தொடர்பாக ஒரு சின்ன மனக்கசப்பு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் சொத்து அரசாங்கத்திற்கு தான் சொந்தம், உறவினர்களுக்கு இல்லை என்பது தொடர்பான விவகாரம். அபூபக்கர்(ரலி) அவர்கள் மார்க்கத்தை நிலை நாட்டினார்கள். கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களின் மரண நேரத்தில் சந்திக்க சென்றார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு சொன்னார்கள் “என்னுடைய சொத்துக்கள், செயல்கள் எல்லாம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி மட்டுமே உள்ளது. நபி(ஸல்) அவர்களின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சொத்தை தரவில்லை, நபி(ஸல்) அப்படி சொல்லி இருக்காவிட்டால் நான் உங்களுக்கு அத்தனை சொத்தையும் தந்திருப்பேன்” என்று ஃபாத்திமா(ரலி) அவர்கள் திருப்தி அடையும் வரை தன்னுடைய விளக்கத்தை சொல்லி, அவர்களிடம் இருந்த மன கசப்பை எடுக்க செய்தார்கள் கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள். இதன் பிறகு தான் ஃபாத்திமா(ரலி) அவர்கள் மரணித்தார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கலாம்.

இப்படி ஏராளமான சம்பவங்களை நாம் காணலாம். நமக்கு முன்மாதிரி சமுதாயம் இஸ்லாம் அவர்களுக்கு வருவதற்கு முன்னரே பரம்பரை பகையை வைத்து பழிவாங்கும் குணம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். அவர்களை மாற்றி அமைத்தது குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளும். ஆனால் இன்று நாம் எப்படி உள்ளோம் என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்,

இஸ்லாம் வருவதற்கு முன்பு அறியாமை காலத்து மக்கள் எப்படி பகைமையை நிரந்தரமாக்கி ஒவ்வொருவரும் தலைமுறை தலைமுறையாக பழிதீர்க்கும் வேலையை செய்தார்களோ. அது போல் இன்றும் அற்ப பொருளாதாரத்திற்காக, பதவிக்காக, சமூக அந்தஸ்த்திற்காக, கேடுகேட்ட இயக்க மற்றும் அரசியல் தலைவர்களுக்காக ஒருவருக்கு ஒருவர் ஏசி பேசி பகைமைத் தீயை மூட்டி வருகிறோமே இதுதான் இஸ்லாமியர்களின் வழித்தடமா?

பகைமைபடும் நேரத்தில் நாம் என்றைக்காவது நட்பு நேரத்தில் நடைப்பெற்ற சம்பவங்களை என்றைக்காவது சிந்தித்து நம்முடைய பகைமை குணத்தை குறைக்க முயற்சி செய்திருப்போமா?

அற்ப அரசியல் ஆதாயத்திற்காக இறைநிராகரிப்பாளர்களின் தவறுகளை மறந்து அவர்களோடு கைக்கோர்த்து, தன்னோடு கருத்து முரண்பாடுகள் அல்லது தன்னை எதிர்த்த ஒரே காரணத்திற்காக ஓரிரைக் கொள்கையை ஏற்றவர்களை வீழ்த்த அரசியல் கூட்டணி அமைத்து செயல்படுகிறோமே, இது தான் குர்ஆன், சுன்னா வழிக் கொள்கையா?

அழகிய நடைமுறையால், பொறுமை, மன்னிப்பு, இறைநம்பிக்கை இவைகளைக் கொண்டு கோடிக்கணக்கனான இறை நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் நல்ல மனமாற்றத்தை அல்லாஹ்வின் உதவி கொண்டு நபி(ஸல்) அவர்களால் ஏற்படுத்திக் காட்டியது போன்று, இன்று எத்தனை சமுதாய தலைவர்கள் தான் சார்ந்த சமுதாய சகோதரனை மன்னித்து தன்னுடைய நன்னடத்தை, நற்குணங்கள், நல்ல செயல்பாடுகள் மூலம் தம்மை தவறாக புரிந்து கொண்டவர்களை நல்வழிப்படுத்த முயன்றுள்ளார்கள் என்ற ஏக்கம் எழுதுகிறது. மேலும் அவ்வாறு நாம் காண்பதும் மிக மிக அரிது.

அல்லாஹ் தன் அருள்மறைக் குர் ஆனில் கூறுகிறான்.

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். திருக்குர்ஆன் 3:134. 

அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும். திருக்குர் ஆன் 3:162. 

நம்முடைய வாழ்வில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், கோபம் கொள்ளாமல் பகைமை பாராட்டாமல் அல்லாஹ் நேசிக்கும் நல்லடியார்களாக வாழ நாம் முயற்சிக்க வேண்டும். இதற்கு வல்லவன் ரஹ்மான் நல்லருள் புரிவானாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

9 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

சூழ்னிலைகேற்ற கருத்துக்கள்.குரான் ஹதீஸ் ஒளியில் படிப்பினைகள்.எல்லா இயக்கங்கலும்,தனி மனிதர்களும் மற்றவர்களை தூற்றாமல்,விட்டுக் கொடுத்து செயல் பட்டால் இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே.

Ebrahim Ansari said...

சூழ்நிலைக்கேற்ற பதிவு. அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக!

இறைவனை வணங்குவது இறைவனால் மனிதனுக்கு விதிக்கப் பட்ட கடமை. அதை நிறைவேற்றுவது தனி மனிதனுக்கும் இறைவனுக்கும் இருக்கும் தனிப்பட்ட தொடர்பு. அதை ஏற்பதும் ஏற்காததும் இறைவனின் பொறுப்பு. இறைவன் படைத்த மனிதர்களை முக்கியமாக நம்பிக்கையாளர்களை தரம் பிரிக்கும் தகுதி எந்த தனிமனிதனுக்கும் தனி இயக்கத்துக்கும்தான் சொந்தம் என்று யாரும் ஐ. எஸ். ஐ. முத்திரை குத்த முடியாது.
நமது செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் நாமே பொறுப்பு. அதன் நன்மை தீமைகளை அல்விட்டுத் தருவது இறைவனின் தனிப்பட்ட சிறப்பு.

சமுதாயத்தின் நல் வழிக்காக அதிகமதிகம் து ஆச செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

//நம்முடைய வாழ்வில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், கோபம் கொள்ளாமல் பகைமை பாராட்டாமல் அல்லாஹ் நேசிக்கும் நல்லடியார்களாக வாழ நாம் முயற்சிக்க வேண்டும். இதற்கு வல்லவன் ரஹ்மான் நல்லருள் புரிவானாக.//

முக்கிய வரிகள்.

இந்தப் பக்குவத்தைத்தான் தரும்படி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். கோபம் - வீம்பு- பழிக்குப்பழி- சுடுசொல் - கருத்து மாறுபாடுக்காக அலைபேசியில் அழைத்துத் திட்டுவது போன்ற செயல்களில் இருந்து அல்லாஹ் அனைவரையும் காப்பானாக!

sabeer.abushahruk said...

சமயோசிதமானப் பதிவு. மக்கள் தெளிவடையட்டும்.

sheikdawoodmohamedfarook said...

காலத்திற்க்கு ஏற்ற கருத்துள்ள பதிவு! இதைபடித்தாவது மனிதன் என்பவன் மனிதனாகட்டும்!

Yasir said...

அல்லாஹூ அக்பர் --- நேரத்திற்க்கெற்ற பதிவு...அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக....நன்றி சகோ.தாஜூதீன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.சூழ்னிலைகேற்ற கருத்துக்கள்.குரான் ஹதீஸ் ஒளியில் படிப்பினைகள்.எல்லா இயக்கங்கலும்,தனி மனிதர்களும் மற்றவர்களை தூற்றாமல்,விட்டுக் கொடுத்து செயல் பட்டால் இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல தொகுப்பு

பிடிக்காதவர்களை பழி வாங்க எந்த சாக்கடையிலும் விழ முடியும் என்பதற்கு சரியான உதாரணங்கள்!

Unknown said...

Assalamu Alaikkum

Dear Thajudeen

Good thoughts in the light of Quran and Hadees highlighting stories of Sahabaas on how they dealt with misunderstandings and established harmony and brotherhood. Actually those brutal characters of generation to generation egotistic fights vanished due to the arrival of practicing Islam.
Jazakkallah khairan

Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி..

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு