Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கூட்டணிக் கொட்டகைகள்! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , , ,

மர்ம முடிச்சுகளைக் கொண்டு
கட்டுப்போட்டு
மந்திர வார்த்தைகளால்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

சவாரி செய்ய வாய்ப்பில்லாமல்
திராவிடக் கட்சிகள்
சண்டிக்குதிரைகளாகிவிட...
ஆளும் பாரம்பர்யக் கட்சி
உட்கட்சி கோஷ்டிகளுடன்கூட
கூட்டணி அமைக்க இயலவில்லை

மசூதி இடிப்பிற்கும்
மாற்று மத அழிப்பிற்கும்
பேர்போனக் கட்சியுடன்
போதைக் கதாநாயகன் சேர
சரக்கிற்கு ஊறுகாயாய்
சாட்டையில்லா பம்பரமும்
மரத்தை வெட்டிப் பறித்த மாம்பழமும்

தேசிய நெடுஞ்சாலையின்
மரங்களைப் பார்த்து
மருத்துவருக்குக் கை பரபரக்க;
இனி 'இவரின்' நடைப்பயணம்
டெல்லி நோக்கி நீளும்

ஓரிடத்தில் ஒடுங்கிக்கொண்ட
உடன்பிறப்பும்
ஒதுக்கிய இடத்தில் ஒட்டிக் கொண்ட
அண்ணன்மாரும் - இனி
தொழக்கூட
தோளோடு தோள் நிற்பதரிது

கூட்டணி கூத்தில்
குருடாய்ப் போனது
குருஜியின் நேர்-பார்வை !

எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு அரசியலும்
செய்கின்றனர்

பொதுவுடைமை பேசியோரும்
பெட்டிக்கடை கட்சிகளும்
சொற்ப வருமாணத்திற்கே
கடையைச் சாத்துவர்

தொகுதிப் பங்கீட்டுப்
பேச்சுவார்த்தைகளில்தான்
எத்தனைச் சுற்றுகள்!
பங்குச் சந்தையின்
இலாபக் கணக்கைப்போல

கூட்டணி தர்மப்படி
பெற்றோரைத் தவிற
யாவற்றிலும் சமரசம் என்றாகி
கொள்கைக்காரர்கள்
கொள்ளைக்காரர்களாகின்றனர்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
எழுத்துகளைக் கொண்டல்ல
எண்களைக் கொண்டே
நிரப்பப் படுகின்றன

ஆட்சியில் பங்கு -நுட்ப
அரசியல் பாங்கு;
வெளியிலிருந்து ஆதரவு - சுயம்
செழிப்பதற்கானக் காப்பீடு

குதிரைப் பேரங்களில்
லகான்களாகப் பணப்பெட்டிகளும்
ஆதரவுக் கடிதம் என்னும்
கள்ளச் சாவியும் கலைகட்டும்

கூட்டு யாரோடு யார் வைத்தாலும்
வேட்டு அவருக்கு அவரே வைப்பார்
ஓட்டு எண்ணிக்கை போட்டுடைக்கும்
நாட்டு மக்கள் குட்டு வைத்ததை

ஊர்க்கோடி சாமான்யனும்
நூருகோடியில் உரையாட - இந்தத்
திருவிழாக்காலம் விட்டுச்செல்வதோ
தீர்விலா கோலம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

20 Responses So Far:

Ebrahim Ansari said...

//கூட்டணி தர்மப்படி
பெற்றோரைத் தவிற
யாவற்றிலும் சமரசம் என்றாகி
கொள்கைக்காரர்கள்
கொள்ளைக்காரர்களாகின்றனர்//

" நச் "

Ebrahim Ansari said...

நடக்கும் என்பார் நடக்காது
****************************************
"// வாழ்க்கையின் யதார்த்தத்தை நச்சென்று சொல்லும் பழைய திரைப்பட பாடல் ஒன்று இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும், தமிழ் சமுதாயத்தில் இருந்து மறையாது.

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்’ என்ற பாடல்தான் அது. அந்த பாடல் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட கூட்டணிகளுக்கு அப்படியே பொருந்திவிட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்தமுறை கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம்பெறுவது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லப்பட்டது. பேச்சுவார்த்தைகளும் பல கட்டங்களில் நடந்தது. ஆனால், கூட்டணியில் அந்த கட்சிகள் இடம்பெறவில்லை.

. அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தங்களின் தோழமை கட்சியாக இருந்த தி.மு.க.வுடன், உறுதியாக கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் தரப்பில் முழு நம்பிக்கையோடு இருந்தனர். நடக்கும் என்றார்கள். ஆனால், தி.மு.க. என்ற ரெயில், காங்கிரஸ் என்ற பெட்டியை இணைக்காமல் தனியாக கழட்டிவிட்டு பயணத்தைத் தொடங்கிவிட்டது.

கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது, அது நடக்கும் என்றார்கள். ஆனால், அது நடக்கவில்லை, கம்யூனிஸ்டு கட்சிகள் தனியாக போடியிடுவதற்காக வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.

. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வலுவே இல்லையே, அந்த கட்சியுடன் யார் கூட்டணிவைக்கப்போகிறார்கள்? தமிழ்நாட்டில் நடக்காது என்று ஆள் ஆளுக்கு சொன்னார்கள். விஜயகாந்த் வருவாரா?, அவர் கேட்கும் தொகுதிகளையெல்லாம் கொடுக்கமுடியுமா?, தி.மு.க.வோடுதான் கூட்டணி அமைப்பார்? என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால்கூட்டணியை உறுதிசெய்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேட்கும் தொகுதிகளில் பிரச்சினை வரும், அவரோடு கூட்டணி சமரசமாக நடக்காது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், அவர் சுமுகமாக பேசி நடத்திக்காட்டிவிட்டார்.

. பா.ம.க. கடைசிவரை வருவார்களா, வரமாட்டார்களா? என்ற நிலையே இருந்தது. ஆனால், அவர்களும் வந்துவிட்டனர். இதுபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கும் தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில் பிரச்சினை, அவர்கள் சேர்வது நடக்காது என்று எண்ணிய நிலையில், நடக்கும் என்ற வகையில், அவர்களும் சேர்ந்துவிட்டனர்.

மொத்தத்தில், தேர்தலுக்கு முன்பே அனைத்து கட்சிகளிலும் நடக்கும் என்று நினைத்தவற்றை நடக்காமலும், நடக்காதென்றவறை நடக்கும் என்று ஆக்கிவிட்டது. தேர்தல் முடிவுகளிலும் அப்படி ஆகவும் போகிறது"….//.

தினத்தந்தி தலையங்கத்தில் இருந்து....

மோடி பிரதமர் ஆவார் இது நடக்கும் என்பார்
ஆனால் அது நடக்காது.

மாற்று அணி ஆட்சிக்கு வருவது நடக்கா தென்பார்
ஆனால் அது நடந்துவிடும்.

முகநூலில் எஸ்.என்.சிக்கந்தர்

Ebrahim Ansari said...

முஸ்லிம்களின் தோல்வி வரலாறு !....2009 ல், 43 முஸ்லிம்கள் தோற்ற வரலாறு !! 800 ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற சோகம் !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2009 பாராளுமன்றத்தேர்தலில், நமது ஒற்றுமையின்மை மற்றும் ஒரே தொகுதியில் பல முஸ்லிம்கள் போட்டியிட்டது போன்ற காரணங்களால், முக்கிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட 43 முஸ்லிம்கள், எம்.பி. வாய்ப்புக்களை பறிகொடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 838 ஓட்டுக்கள் குறைவாகப் பெற்ற காரணத்தினால் 'முஹம்மத் ரியாஸ்' என்ற முஸ்லிம் வேட்பாளர் தோற்றுப் போனார்.

தற்போது, ராகவன் என்பவர் கோழிக்கோடு எம்.பி.யாக உள்ளார்.

ராகவன் பெற்ற ஓட்டுக்கள் 3, 42, 309

முஹம்மத் ரியாஸ் பெற்ற ஓட்டு 3, 41, 471

838 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஒரு முஸ்லிம் தோற்ற இத்தொகுதியில், வேறொரு முஸ்லிம் 5,000 ஓட்டுக்களைப் பிரித்தார் என்பதே அவரது சாதனையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்

2009 தேர்தல் முடிவுகள் சம்மந்தமாக, 8 மாநிலங்களை ஆய்வு செய்த நாம், ஒற்றுமையின்மை காரணமாக 43 முஸ்லிம்கள் தோல்வியடைந்த விபரங்களை சேகரித்துள்ளோம்.

கேரளாவில் 1
ஆந்திராவில் 3
கர்நாடகத்தில் 3
பீகாரில் 8
குஜராத்தில் 5
ஜார்கண்டில் 2
மகாராஷ்டிரத்தில் 2
ராஜஸ்தானில் 2
உத்தரப் பிரதேசத்தில் 17

ஆக மொத்தம் 43 தொகுதிகளில் முஸ்லிம்களின் தோல்வி......

நன்றி : MARUPPU

sheikdawoodmohamedfarook said...

//காவிகட்சி யுடன் கருப்புக்கட்சிகளின் கூட்டணி//' தந்தைபெரியார் பேணிவளர்த்தசுயமரியாதைகொள்கையை அவர் பிள்ளைகள்காவிகட்சியிடம் நல்ல விலைக்கே விற்று விட்டார்கள்''நம் பல்லக்கை திராவிடன் நன்றாகவே சுமப்பான்'' என்று ஆரியனுக்கு தெரியும்.

ZAKIR HUSSAIN said...

நசீபு = தலை எழுத்து.....

இல்லை , இது தானாக எழுதிக்கொண்டது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கெட்ட கூட்டணி பற்றி சிறப்பான குட்டுக்கவிதை.
அதில் இது ஹைலைட் வரிகள்
//எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு அரசியலும்
செய்கின்றனர்//

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நசீபு = தலை எழுத்து.....

இல்லை , இது தானாக எழுதிக்கொண்டது.//

'தலை'ங்க எழுதுனதா ? தலையில எழுதுனதா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஓரிடத்தில் ஒடுங்கிக்கொண்ட
உடன்பிறப்பும்
ஒதுக்கிய இடத்தில் ஒட்டிக் கொண்ட
அண்ணன்மாரும் - இனி
தொழக்கூட
தோளோடு தோள் நிற்பதரிது//

:(

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உடண்பாடு, பங்கீடு என்று முடிவும் ஆகிவிட்டது...

இன்னும் வரிந்து கட்டிக் கொண்டு யாரை யார் வாரிவிடுவது என்ற '(ஃ)போட்டோ' போட்டி !

sheikdawoodmohamedfarook said...

//நசிபு தலைஎழுத்து//இல்லை இது தானாக எழுதிக்கொண்டது/ இல்லை எழுதிக்கொள்ளுங்கள் என்றுநம் தலையைநாமே கொடுத்தால்எழுதுவதோடு ஓவியமும் வரைவார்கள்.

Yasir said...

//எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு அரசியலும்
செய்கின்றனர்// --- ஆமாம் காக்கா இதுலாம் அரசியல்ல சர்வ சாதரணம்-ண்டு விளக்கம் வேற...அக்கு வேறு ஆணி வேறா போட்டு தாக்கியிருக்கீங்க

சு.சாமி ஒரு வார்த்தையை உதிர்திருக்கின்றார்....கேடி அலையால இங்கே உள்ள குப்பைக் குளங்களும் கரையேறி விடும் என்று....இந்த மானங்கெட்டவனுக்களும் கேட்டுக்கிட்டு ச்சும்மா இருக்கானுவ

sheikdawoodmohamedfarook said...

//இனி தொழக்கூடதோளோடு தோள் நிற்ப்பதரிது// ஆட்டுத்தோல்போர்த்தி நிற்ப்பதுமா அரிது ?

Shameed said...

//ஓரிடத்தில் ஒடுங்கிக்கொண்ட
உடன்பிறப்பும்
ஒதுக்கிய இடத்தில் ஒட்டிக் கொண்ட
அண்ணன்மாரும் - இனி
தொழக்கூட
தோளோடு தோள் நிற்பதரிது//

இவங்கதான் ஈமான் பலமா உள்ள முஸ்லிம்கள் என்று சொல்லித்திரிகின்றார்கள் வெட்கம் இல்லாமல்

Shameed said...

// எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு அரசியலும்
செய்கின்றனர்//

எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு (அரசியலும்)பல அசிங்கங்களை
செய்கின்றனர்

sabeer.abushahruk said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் துர்நாற்றம் கொஞ்சம் தூக்கலா இருப்பதை மறுப்பதற்கில்லை.

கருத்திட்ட அணைவருக்கும், சீஸனை அனுசரிச்சி, கருத்துக்கு 500 ரூவா அன்ச்சேனே கெட்ச்சிதா?

Ebrahim Ansari said...

500/= எனக்குக் கிடைக்கலே. காவல்துறை மூலம் கொடுத்துவிட்டால் கிடைக்கும். மற்றபடி அனுப்பினால் பிடிக்கிறார்கள். எடுக்கிறார்கள். ஊரே பயந்து போய் கிடக்கு.

வேட்பாளர்களே இப்போதுதான் அறிவிக்கப் பட்டு இருக்கிறார்கள். இன்னும் அறிவிக்கப்பட வேண்டி இருக்கின்றனர். அதற்கு முன்பே அவசரமாக ஆஸ்பத்திரிக்கு 50,005/= கொண்டு போனாலும் பிடிக்கிறார்கள். ஆனால் வரவேண்டியவர்களுக்கு வர வேண்டிய முறைகளில் வந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு விஷயம் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. பாரதீய ஜனதா கூட்டணியில் இருக்கும் தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, பிஜேபி, மதிமுக , கொங்குநாடு கட்சி, பச்ச முத்து கட்சி ஆகிய யாருமே ஒட்டுமொத்தக் கூட்டணியின் சார்பில் ஒரே ஒரு பெண் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.

தேமுதிக சார்பில் நாமக்கல்லில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர் உடல் நிலை சரியில்லை என்று கழற்றிக் கொண்டார்.

நாகபட்டினம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பலிகடா தேடிக் கொண்டு இருக்கிறார்கள். கிடைத்த கிடா அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாம். இது ஒரு ரிசர்வ் தொகுதி.


crown said...

மர்ம முடிச்சுகளைக் கொண்டு
கட்டுப்போட்டு
மந்திர வார்த்தைகளால்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது------------
-----------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.
உடன்பாடு ,உடன் படு எனும் எச்சரிக்கையுடனும், நடந்துள்ளது!இதில் உடன்பட்டதில் ,அரசியல் சோரம் நடந்துள்ளது!

crown said...

சவாரி செய்ய வாய்ப்பில்லாமல்
திராவிடக் கட்சிகள்
சண்டிக்குதிரைகளாகிவிட...
ஆளும் பாரம்பர்யக் கட்சி
உட்கட்சி கோஷ்டிகளுடன்கூட
கூட்டணி அமைக்க இயலவில்லை
----------------------------------------------------------------------------
இதில் ஒரு தலைமைக்கு குடும்ப பிரட்சனையும்,மற்றொருதலைமைக்கு குடும்பமே இல்லாத பிரட்சனையும் ஆட்டிபடைக்குது!ஆளும் கட்சியில் எல்லாரும் தலைவர்கள்.தொண்டர்கள் இல்லை!

crown said...

கவிதை சிறப்பு ஆனாலும் மற்ற அரசியல் வாதிகளை விமர்ச்சித்து எழுத எத்தனித்த மனம் , நம்மவர்கள் பற்றி எழுத பற்றிக்கொண்டுவருகிறது! வேதனை, வெட்கம் மேற்கொண்டு எழுத மனம் வலிக்கிறது. அல்லாஹ் தான் காப்பாற்றனும் நம் சமூகத்தை!யாஅல்லாஹ்!எதிரிகளிடமிருந்தும், நம் சமுதாய தலைவர்கள்???இடமிருந்தும் எம் சமுதாயத்தை காப்பாற்றுவாயாக!ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு