Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள் - மெளலானா முகமது ஜாபர் தானீசரி! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2014 | ,

தொடர் - 23
அம்பாலா !

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்த ஊர் பல வரலாற்றுச் சம்பவங்களுக்கு சொந்தமானது. இவற்றுள் சில வெறுப்புகளும் சில சிறப்புகளும் உள்ளன. அவற்றுள் ஒன்று , இஸ்லாமிய மெளலானாக்களையும் மார்க்க அறிஞர்களையும் அடக்க நினைத்த ஆங்கில அரசு அவர்கள் மேல் புனையப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டதுமாகும். அத்தகைய வழக்கால் பாதிக்கப் பட்ட ஒரு வீரத் தியாகியின் வரலாற்றின் பக்கங்களைப் பகிரும் முன்பு இந்த அம்பாலாவில் உள்ள சிறையைப் பற்றிய ஒரு சிறப்பை சொல்லிவிட மகிழ்வுடன் மனம் துடிக்கிறது. ஆம்! இந்தியாவில் எந்த சிறைக்கும் கிடைக்காத சிறப்பு இந்த சிறைக்குக் கிடைத்தது. தேசத்தந்தை- மகாத்மா காந்தியை ஒரு முஸ்லிம் போல் வேடமிட்டு தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு கொடூரமாக சுட்டுக் கொன்ற கோட்சேயை தூக்கிலிட்டு அவன் பிணத்தை தொங்கவிட்ட பெரும்பேறு இந்த அம்பாலா சிறைக்குத்தான் கிடைத்தது. 

சதி வழக்குகளும் அவதூறு வழக்குகளும் பொய்வழக்குகளும் புனையப்பட்ட வழக்குகளும் இன்றைய அரசியலில் மட்டும்தான் என்று இல்லை. அன்றைய அரசியலிலும் இருந்தன. அன்று இத்தகைய வழக்குகளை வெள்ளைக்காரன் போட்டான்; இன்று இந்த வழக்குகளை சொந்தக்காரன் போடுகிறான். ஆக, ஆட்சி அதிகாரம் இருந்தால் ஆணவம் பிடித்து அலையும் கூட்டம் அன்று மட்டுமல்ல இன்றும் இருக்கின்றன.

இந்திய சுதந்திர வரலாற்றில் "அம்பாலா சதி வழக்கு" என்ற ஆங்கிலேயரால் சதிவலை பின்னப்பட்ட வழக்கொன்று உண்டு. இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாவார்கள். இந்த மார்க்க அறிஞர்கள் லக்னோ, அலிகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி, மெளலானா யஹ்யா அலி, முகமது ஷாபி லாஹூரி ஆகியோர்களாவார்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி அவர்கள் எழுதி வைத்த நாட்குறிப்பின் ஏடுகள் நமது நரம்புகளைப் புடைக்கச் செய்யும் சில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. தம்முடைய சொந்த வார்த்தைகளால் மெளலானா அவர்கள் வடித்துத்தரும் வரலாற்றின் வடுக்களையும் அவர்கள் அனுபவித்த வலிகளையும் இன்று இங்கு பகிர்வோம்.

இதோ மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு நம்மோடு பேசுகிறது :-

“என் கை கால்களில் விலங்கிடப்பட்டேன். கழுத்தில் ஒரு கனத்த இரும்பு வளையம் மாட்டப்பட்டு , அதை ஒரு சங்கிலியால் பிணைத்து அதன் நுனியை ஒரு காக்கி உடை அணிந்த காவலன் தந்து கையால் பிடித்து இருந்தான். கால்நடைகள் போல நாங்கள் கட்டி இழுத்துவரப் பட்டோம். எனக்கு வலப்புறமும் இடப்புறமும் காவல்துறையின் உயர் அதிகாரியான பார்ஸனும் இன்னொருவனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கரங்களில் கைத்துப்பாக்கிகள்! நான் அசைந்தாலும் என்னைச் சுட்டு எனது உடம்பை சல்லடையாக்கும் சக்திபடைத்த கைத்துப்பாக்கிகள். அலிகாரில் எங்களை ஏற்றிக் கொண்டு டில்லி நோக்கிப் புறப்பட்ட அந்த காவல்துறை வேன் வழியில் எங்குமே நிறுத்தப்படவில்லை. எனக்கு உணவோ, குடிக்கத் தண்ணீரோ தரப்படவில்லை. சிறுநீர் கழிப்பதற்கும் அவர்கள் விடவில்லை. ஆனால் தொழுகை நேரம் வரும்போதெல்லாம் உடனிருந்த அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே “ தயம்மம்” செய்து கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே தொழுது எனது இறைவனை வணங்கிக் கொண்டேன். எனது இந்தச் செயலை யாரும் தடுக்க முற்படவில்லை. 

டில்லியின் உயர் அதிகாரியின் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். அங்கிருந்த ஒரு இருண்ட சுரங்க அறையில் அடைக்கப்பட்டேன். மறுநாள் டில்லியில் இருந்து முதலில் கர்நாளுக்கும் அதன்பின் அம்பாலாவுக்கும் என்னைக் கொண்டு சென்றனர். அம்பாலாவில் தூக்கு மரம் ஊன்றி நடப்பட்டிருந்த அறையில் உண்ண உணவின்றி அடைக்கப்பட்டேன். பின்னர் , அளவு குறைந்த உணவு தரப்பட்டேன். இதே நிலையில் 1863 டிசம்பர் முதல் 1864 ஏப்ரல் வரை ஐந்து மாதங்கள் அடைக்கப்பட்டுக் கிடந்தேன். அப்போது நான் அடைக்கபப்ட்டதாக அல்ல புதைக்கப்பட்டதாகவே உணர்ந்தேன்.

இடையில் புனித ரமலான் மாதம் வந்தது. நான் நோன்பு பிடிக்கத் தொடங்கினேன். அந்த நிலையில் என்னைத் தனி அறையில் வைத்து நாங்கள் செய்த சதியின் திட்டங்கள் என்ன – அதில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று விசாரித்தார்கள். நான் உண்மைகளைச் சொன்னால் விலங்குகளைக் கழற்றி விடுவித்துவிடுவதாக ஆசை காட்டினார்கள். நான் வாய் திறக்காவிட்டால் தூக்கில் இடுவோமென்று மிரட்டினார்கள். நான் எதற்கும் வாய் திறக்கவில்லை. 

இந்த நிலையில் பார்ஸன் என்கிற உயர் அதிகாரி என்னை அடித்தான். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என் மீது விழுந்த அடிகள் உலகில் மற்ற எவர் மீதும் விழுந்து இருக்குமா என்பது கேள்விக்குறி. இந்த மாதிரி சோதனையான நேரங்களில் அவற்றைத் தாங்கும் வல்லமையை வழங்கும்படி எனது இறைவனிடம் துஆச் செய்து கொள்வேன். அவ்வளவு அடிகளையும் நோன்பு பிடித்துக் கொண்டே தாங்கிக் கொள்ளும் வல்லமையை அந்த வல்லவன் வழங்கினான். நோன்பு திறப்பதற்கு மரங்களின் இலைகளைக் கூடப் பறித்துத் தின்னும் நிலமைகளெல்லாம் ஏற்பட்டன. 

நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட போது நீதிபதி என்னை நோக்கி, "நீ உனது மார்க்க அறிவை தெளிவாக ஓதிப் படித்து இருக்கிறாய். எனது கண்களுக்கு அறிவாளியாகவும் கல்வியாளராகவும் தென்படுகிறாய். ஆனாலும் உனது அறிவையும் ஆற்றலையும் ஆங்கில அரசுக்கு எதிராக இயங்க பயன்படுத்தினாய். இந்த அரசின் எதிரிகள் என்று கருதப் படுபவர்களுக்கு பணமும் படையும் உணவும் கிடைப்பதற்கு உதவி செய்து அவர்களுக்கு ஊக்கமூட்டினாய். பலமுறை விசாரித்தும் அதன் உண்மை விபரங்களை வெளியிடவும் மறுத்துவிட்டு உண்மைகளை ஒப்புக் கொண்டு ஒத்துழைப்பும் தரவில்லை. ஆகவே,
  • உனக்கு தூக்கு தண்டனை வழங்குகிறேன் ; 
  • உனது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன் ;
  • உனது உடல் கூட உனது சொந்தக்காரர்களிடம் தரப்படாமல் இறுதிக் காரியங்கள் செய்யவும் உத்தரவிடுகிறேன்"

என்று கடுமையானதும் கொடுமையானதுமான தீர்ப்பை வழங்கினார். 

நீதிமன்றத்தில் கூடி இருந்த எனது உறவினர்களும் நண்பர்களும் இந்த தீர்ப்பைக் கேட்டு கதறி அழுதனர். ஆனால் எனக்கோ, எனது இறைவன் எனது நாட்டுக்காக நான் செய்யும் தியாகத்துக்குப் பரிசாக தனது சொர்க்கத்தின் கதவைத் திறந்ததாகவே உணர்ந்தேன். அந்த சொர்க்கம் எனது கண்முன் நிழலாடியது. அதனால் எனது மனம் மகிழ்ந்ததை உணர்ந்தேன். 

எனக்கு மரண தண்டனை வழங்கப் பட்டதற்குப் பிறகு சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், “அழவேண்டிய நீ ஆனந்தப்படுகிறாயே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு நான் ‘ஷஹாதத்’ என்கிற உயிர்த் தியாகம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைக்கிறது என்ற நிலைமை என்னை மகிழ்ச் செய்துவிட்டது என்று பதில் அளித்தேன். 

தூக்கில் இடப்படும் நாளை, நானும் எனது நண்பர்களும் எதிர்பார்த்து இருந்த இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி மாரடைப்பால் மாண்டு போனான் என்கிற செய்தியையும் என்னை கடுமையாகவும் கொடுமையாகவும் அடித்து சித்ரவதை செய்த பார்ஸன் என்கிற அதிகாரிக்கு பைத்தியம் பிடித்ததாகவும் கேள்விப்பட்டோம். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்த பெரியவன். 

அப்போது அல்லாஹ் இன்னொரு மாற்றத்தை எங்கள் வாழ்வில் ஏற்படுத்தினான். 1844ஆம் வருடம் செப்டம்பர் 16 ஆம் தேதி அம்பாலா சிறைகூடத்தின் தலைவர், நாங்கள் அடைபட்டுக் கிடந்த அறைக்கு வந்து, “நீங்கள் தூக்கு தண்டனையை வரவேற்று மகிழ்கிறீர்கள். அது உங்களின் இறைவனின் பரிசு என்று எண்ணுகிறீர்கள். உங்களை அப்படிப்பட்ட மகிழும் நிலையில் வைக்க இந்த அரசு விரும்பவில்லை ஆகவே உங்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது” என்று சொன்னான். இறைவன் தரும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் எங்களிடம் இருந்ததால் இதையும் ஏற்றுக் கொண்டோம். பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடினோம். 

அத்தோடு எங்களை அந்தமான் தீவில் இருந்த செல்லுலார் சிறைக்கு இட மாற்றம் செய்தார்கள். அந்த சிறைச்சாலையின் சட்டப்படி எங்களின் தாடி, மீசை மற்றும் தலை முடிகள் மழித்து சிரைக்கப்பட்டன. அப்போதுதான் எங்களுக்கு முதன்முதலில் கண்ணீர் வந்தது. எங்களில் மெளலானா யஹ்யா அலி அவர்கள் துண்டிக்கப்பட்டு தரையில் வீசப்பட்ட தாடியின் முடிகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு இந்த நாட்டின் சுதந்திரத்துக்கான அல்லாஹ்வின் பாதை என்று நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையின் வழியில் நீயும் பிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டாயா? என்று கேட்டு கண்ணீர் வடித்துக் கதறினார். “

இப்படி நம்மிடம் பேசிய மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு அவர்களின் தியாகத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நம்மை நினைக்கச் சொல்லி நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறது. 

நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தை அல்லாஹ்வின் பாதையின் போராடும் தூய போராட்டமாகவே மார்க்கம் படித்த அறிஞர்கள் கருதினார்கள் என்பதை மெளலானா தானீசரி அவர்களின் வரலாறு அவரது வார்த்தைகளிலேயே நமக்குச் சொல்கிறது. 

இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடர் விரைவில் நிறைவுறும்.

இபுராஹீம் அன்சாரி
==================================================================
எழுத உதவியவை:- 
வேலூர் அல்-பாகியாத் நூற்றாண்டு விழா மலர். 
பேராசிரியர் மு அப்துல் சமது அவர்களின் “தியாகத்தின் நிறம் பச்சை.”

14 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இவ்வளவு காலம் துவேச உணர்வுகளால் மறைக்கப்பட்ட பெரும் தியாகி மெளலானா முகமது ஜாபர் தானீசரி அவர்களை அறிந்து கொண்டது உங்கள் மூலமே!
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா

இப்னு அப்துல் ரஜாக் said...

அவர்களின் தியாகத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நம்மை நினைக்கச் சொல்லி நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறது.

sheikdawoodmohamedfarook said...

சிறைகள் என்றாலே அதுதேசதியாகிகளைவதைத் த கொடுமையின் கூடாரமென்றும் கைதிகளின் முடியையும் தாடியேயும் சிரைத்து பார்பர் ஷாப் தொழிலையும் செய்து பாவமூட்டைகளை தோளில்சுமந்த இடமாகவே நாம்அறிந்தோம். கங்கைநீராலும்கழுவ முடியாதஅந்தப்பாவத்தை மகாத்மா காந்தி அவர்களை சுட்டுக்கொண் ட கொடியவன் கோட்சேயை தூக்கிலிட்டுக் கொன்ற புண்ணியம் தேடிதன்பாவத்தை கழுவியது.

ZAKIR HUSSAIN said...

மரணதண்டனையும் , ஆயுள் தண்டனையும் தன் நிலையை ஒன்றும் செய்யாது என்று நிதானமாக இருக்கும் தன்மை மிகச்சிலருக்கே இருக்கும்.

இஸ்லாமியர்களின் தியாகத்தை இந்த அளவு மறைத்து எழுதும் திறமை பிரிட்டிஷ்காரனை விட இந்திய வரலாற்றை மக்களுக்கு எடுத்துச்சென்றஆட்களுக்கே உண்டு.

புத்தகமாய் வெளியே வந்த பிறகு எந்த வித காரணமும் இல்லாமல் முஸ்லீம்களை வெறுக்க வேண்டும் என்ற எல்லா கட்சி // இயக்க அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டிய புத்தகம்.

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

தெரிந்தோ தெரியாமலோ சரியான நேரத்தில் இந்த அத்தியாயம் பதிவாகி இருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப் பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று வழங்கப்பட்டு அவர்களும் நீண்ட வருடங்கள் சிறையில் வாடுவதால் அவர்களை விடுவிக்க வேண்டுமென்ற கருத்தில் தமிழக அரசும் மத்திய அரசும் வழக்குப் போர்கள் நடத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில் ,

நேற்று இந்த வழக்கின் முக்கிய தீர்ப்பை நீதி மன்றம் வழங்கப் போகிறது என்று எல்லோரும் எதிர் பார்த்த நேரத்தில் மீண்டும் ஒரு ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்கிற தீர்ப்பு வந்துள்ள நேரத்தில் இந்த அத்தியாயம் வந்துள்ளது.

மரணதண்டனையை சொர்க்கத்தின் திறவுகோல் என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்ட இந்த அத்தியாயத்தின் கதாநாயகர்களுக்கும் - அப்படி அவர்கள் மனம் மகிழ்கின்ற மனநிலை படைத்திருந்த காரணத்துக்காகவே அவர்களின் மரண தண்டனையை, சிறைத்தண்டனையாக எவ்வித முறையீடும் இல்லாமல் மாற்றிய அரசின் தன்மைக்கும் இன்று நாம் காணும் காட்சிகளுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள்?

தூக்குமேடைகளை பஞ்சு மெத்தைகளாகக் கருதும் மனநிலை கொண்ட தியாகமே ! உன் பெயர்தான் இஸ்லாமா?

Ebrahim Ansari said...

Brother Zakir

//புத்தகமாய் வெளியே வந்த பிறகு எந்த வித காரணமும் இல்லாமல் முஸ்லீம்களை வெறுக்க வேண்டும் என்ற எல்லா கட்சி // இயக்க அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டிய புத்தகம்.//

இன்ஷா அல்லாஹ் து ஆ செய்யவும்.

Unknown said...

காக்கா

எங்கிருந்து இவ்வளவு ஆழப்பொதிந்து கிடக்கும் நன் முத்துக்களை அள்ளி தெளிக்கின்றீர்கள் ? உண்மையின் வரலாறு தொடரட்டும்.

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிரப்பமான ஈமானையும் தர
இறைஞ்சுகின்றேன்.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

அன்பான கருத்திட்ட தம்பி மு செ மு ஜகபர் சாதிக் அவர்களுக்கும் உணர்வு பூர்வமான கருத்தைத்தந்த சகோதரர் இப்னு அர அவர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பி அப்துல் காதர் அவர்களின் கருத்தைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கிருந்து இவற்றை எடுத்துள்ளேன் என்பதை நிறைவில் குறிப்பிட்டுள்ளேன். தொடர் நிறைவுறும்போது இன்னும் குறிப்பிட மறந்தவைகளை இன்ஷா அல்லாஹ் குறிப்பிடுவேன்.

நலமாய் இருக்கிறீர்களா?

ஜசாக் அல்லாஹ் ஹைரன் .

adiraimansoor said...

///எனக்கு மரண தண்டனை வழங்கப் பட்டதற்குப் பிறகு சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், “அழவேண்டிய நீ ஆனந்தப்படுகிறாயே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு நான் ‘ஷஹாதத்’ என்கிற உயிர்த் தியாகம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைக்கிறது என்ற நிலைமை என்னை மகிழ்ச் செய்துவிட்டது என்று பதில் அளித்தேன்////
இதை படித்தவுடன் உடல் சிலிர்க்கின்றது

காக்க இப்படிபட்ட தண்டனையுடன் மவுத்தாகும்போது இதை ஷஹீத் என்று குறிப்பிட முடியுமா

ஒரு நாட்டுக்காக போராட்டு மரணிக்கின்றவன் ஷஹீதா அல்லது ஆர் எஸ் எஸ் காரனை எதிர்த்து போரிட்டு மரணிக்கின்றவன் ஷஹீதா

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர் அவர்களுக்கு,

நாட்டின் சுதந்திரத்துக்கான ஒரு புனிதப் பணியில் குற்றவாளி ஆக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப் படுபவர்களை ஷஹீத் என்று குரிப்பிடலாமென்றே மேலோட்டமாக நான் கருதுகிறேன். ஆழ்ந்த மார்க்க அறிவுள்ளவர்கள் இதைப் பற்றி விளக்கம் தந்தால் நாம் அனைவரும் விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் ஒன்று அந்த வார்த்தை மெளலானா அவர்களின் நாட்குறிப்பில் அவர்களால் எழுதப் பட்ட வார்த்தையே. ஒரு மார்க்கம் படித்த அறிஞர் அந்த வார்த்தையை விபரமில்லாமல் பயன்படுத்தி இருப்பாரா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

யாராவது விளக்கினால் நலமாக இருக்கும்.

adiraimansoor said...

நான் இது நாள் வரை கேள்விபட்டது இஸ்லாத்த்திற்க்காக போராடி உயிர் நீத்தவர்களைத்தான் ஷஹீது என்று கேள்வி பட்டிருக்கின்றேன்

நம்முடைய காலத்தில் பழனி பாபா போன்றவர்கள்தான் ஷஹீதானவர்கள் என்று கருதுகின்றேன்

இந்தியா விடுதலை வாங்காமலே இருந்திருக்கலாம்
முன்னாடி ஆங்கிலேயர்கள் நாட்டை சுரண்டினார்கள் இப்பொழுது இந்தியர்களே சொந்த நாட்டை சுரன்டுகின்றனர் ஆனால் ஆங்கிலேயர்களிடம் மனிதாபிமானம் இருந்தது சுதந்திரம் என்ற பெயரால் இந்தியமக்கள் ஏமாற்றபடுகின்றனர் எதிலும் உண்மையில்லை எல்லாவற்றிலும் ஏமாற்றம் ஒவ்வொருத்தன் ஒவ்வொருத்தனை அடித்து சாப்பிட பார்க்கும் சுழலில் இருக்கின்றோம் எங்கே சுதந்திரம்

சுதந்திரம் என்றால் என்ன என்பது குழப்பமாகத்தான் இருக்கின்றது சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் கொஞ்சம் நிம்மதியாவது இருந்திருக்கும்

சுதந்திரத்துக்கு பாடு பட்டவர்களை நான் குறை சொல்லவில்லை அவரகள் பாடுபட்டதுடைய நோகம் முழுமையாக நிறைவு பெறவில்லை என்பதை சொல்லவருகின்றேன் இப்பொழுது

அவர்கள் செய்தது பூமலை
ஆனால் அந்த பூமாலையோ குரங்களின் கையில் அல்லவா மாட்டிக்கொண்டது

இப்னு அப்துல் ரஜாக் said...

//சுதந்திரம் என்றால் என்ன என்பது குழப்பமாகத்தான் இருக்கின்றது சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் கொஞ்சம் நிம்மதியாவது இருந்திருக்கும்//

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.இன்னொரு முறை இந்தியா அடிமைப்பட்டால் சந்தோஷமே.காவிகளிடம் அடிமையாய் இருப்பதைவிட,ஆங்கிலேயன் எவ்வளவோ மேல்.

Ebrahim Ansari said...

சுதந்திரம் என்பது பிறப்புரிமை.

சுதந்திர இந்தியாவில் உண்மையான சுதந்திரமற்று இருப்பவர்கள் தலித்துகளும் முஸ்லிம்களுமே.

சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் அனைவருமே சமூக நீதி சுதந்திர இந்தியாவில் மலரும் என்ற எண்ணத்திலேயே தீவிரமாக ஈடுபட்டார்கள். ஆனால் நடந்தது என்ன?

சுதந்திரப் போராட்ட காலத்தில் அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்ற சங்க பரிவார அமைப்புகள் சுதந்திரம் கிடைத்ததும் ஆளுமை அதிகாரம் ஆகியவற்றை மட்டும் சுவைக்க வந்து விட்டன.

உண்மையில் போராடியவர்கள் ஒதுக்கப்பட்டோம். உதாரணமாக இந்தியாவில் உயர் தொழில் நுட்பக் கல்லூரிகளிகளில் பேராசியர் பணிகள் மொத்தம் நானூறு . இதில் முன்னூற்று எண்பது பேர்கள் ஒரே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது.

ஆகவே சுதந்திரப் போராட்டத்தில் நாம் ஈடுபட்ட நோக்கம் சமூக நீதி வேண்டுமென்றும கிடைக்குமென்றும் நம்பியே. . ஆனால் மரம் வைத்து தண்ணீர் ஊற்றுபவன் ஒருவன், அதன் பலனை அனுபவிப்பவன் இன்னொருவன் என்கிற கதையில்தான் இப்போதும் நடை பெறுகிறது.

இப்போது அதைவிட ஒரு படி மேலாக உங்களுக்கு இங்கு இடமில்லை என்றும் கருத்துக்கள் கசிய ஆரம்பித்துவிட்டன.

இன்னும் வரக்கூடாதவர்கள் வரக்கூடாத இடத்துக்கு வந்துவிட்டால் இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவைப் படும்.

Yasir said...

புல்லரிக்க வைத்த வரலாற்று சம்பவங்கள்....மறைக்கப்பட்ட வரலாறு உங்களால் வாரி இறைக்கப்ப்ட்டு எங்கெளுக்கெல்லாம் எளிதாக அறியப்படுகின்றது .அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா மாமா

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு