நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆப்பரேஷன் Vs ஆப்பிள் சிடார் வினிகர் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஏப்ரல் 15, 2014 | , , , , ,

இப்படி தாங்க ஒரு சமயம் பிஸினஸ் விஷயமாக கென்யா நாட்டுக்கு போக வேண்டி இருந்தது. அடுதடுத்த வேலைகளைத் தொடர்ந்து அங்கே போயும் இறங்கியாச்சு, 10 நாட்கள் தங்க வேண்டியது இருந்தது. இவ்வளவு தூரம் போயிட்டோம் கென்யாவுல விலங்குகள் எல்லாம் நிறைய உண்டு எனவும் காட்டுப் பகுதிக்கு போனால் அங்காங்கே அலைந்து கொண்டு இருக்கும் என்றும் சில நண்பர்கள் கூற, சரி எப்படியாவது ஒரு நாள் அன்றைய சில வியாபார ரீதியான சந்திப்புகளை முடித்து விட்டு செல்லலாம் என்று நினைத்திருந்த மாத்திரம். அங்கு நடந்த பிரச்சனையான அதிபர் தேர்தலில் நீதிமன்றத்தால் தீர்ப்பு கொடுக்கப்பட்டு “கென்யாட்டா” (அந்நாட்டு அதிபருங்க) பதவி ஏற்கலாம் அறிவிப்பு வெளியாகியிருந்தது. 

நாடே விழாக்கோலம் பூண்டது விடுமுறை வாய்த்ததும் சரியான வாய்ப்புதான் என்று கருதி ஒரு டாக்ஸி டிரைவரை அணுகி “என்னாப்பா கொஞ்சம் நேஷனல் பூங்கா மற்றும் சில இடங்களுக்கு சென்று மிருகங்களை பார்த்து வரலாமா” என்று கேட்டேன். அவர் அதற்கு 350 அமெரிக்க டாலர் ஆகுமென்றார், நான் அவரிடம் நான் காரை விலைக்கு கேட்கவில்லை சுற்றிப் பார்க்க எவ்வளவு என்றுதான் கேட்டேன் என்றேன். மேலும் கீழும் பார்த்தவர் “நாங்களும் சுற்றி பார்க்கதான் சொன்னோம்” என்று கருப்பினத்திற்கே உரிய கடின குரலில் கூறினார்.

பின்னர் கொஞ்சம் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 300 டாலருக்கு இறங்கி வந்தார், புதிதாக வந்த நாட்டிற்கு ஒரு மாதிரியான ரேஞ்சுக்கு இருந்தவருடன் பயணிப்பது, கொஞ்சம் பயமாக இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காரில் “தவக்கல்து அலல்லாஹ்” என்று கூறி அமர்ந்து கொண்டேன்.


நாலு சக்கரம் மாட்டிய அந்த வாகனம் அதாங்க கார், கீயை போட்டு பத்து அடி அடித்த பிறகுதான் ‘ஸ்..ஸ்..ஸ்.. கட கட’ என்று ஸ்டார்ட் ஆனது. காரில் உட்காரும் முன்பு வரை நல்ல கண்டிசென்–ல உள்ள கார் என்று சொன்ன அந்த டிரைவர் முகத்தில் அசடு வழிந்து கொண்ட இன்னைக்குதான் சார் இப்படி என்று பார்வையில கூறினார். “ஒகே ஒகே திஸ் இஸ் ஆஃப்பிரிக்கா” என்று நினைத்தவனாக பயணத்தை தொடங்கினோம்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை ஆனால் அவர்களை வாட்டுவதோ வறுமை !

வழி நெடுக வல்லோனின் அருளான பசுமையாக போர்த்தி இருந்தது.. கார் ரேடியோவில் அதிரபர் பதவியேற்பை கருதி தேசிய பாடல்கள் ஒலித்த வண்ணமாக இருந்தது, வண்ணமயமான அந்த இயற்கை காட்சிகளைப் பார்த்தவாறே அடைய வேண்டிய இடத்தை அடைந்தோம், 


தேசிய விலங்கியல் பூங்காவின் தலைவாசல்


நான் தானுங்க இந்த படத்தில் “ஏம்பா வேறு இடம் கிடைக்கலையா” போட்டா எடுக்க என்று உடனே கேட்க-பிடாது. இங்கதான் விலங்குகள் நடமாட்டம் இல்லை அதான்.


காட்டுப் பன்றிகள் ஆங்காங்கே !


அரசியல் சீட்டுக்காக அல்ல உணவிற்காக தலை நீட்டும் ஒட்டக சிவிங்கி.


அனாதை யானைகளை வளர்க்கும் இடம் மனிதனின் பணத்தாசைக்காக கொல்லப்படும் யானைகளின் குழந்தைகள் இவை.


'யாரு சாட்சாத் நம்ம சிறுத்தையார் தான். வரதட்சனை வாங்கிய அதிரை மாப்பிள்ளை போல சோம்பலாகவும் / வெட்டி கம்பீரத்துடனும் படுத்து இருக்காப்ல'.

அப்பாடா இயற்கை தரும் தேனை அருந்த தயக்கமா என்ன? அல்லாஹ்-வை புகழ்ந்தவனாக எல்லா இடங்களையும் கண்ணிலும் சில இடங்களை கேமராவிலும் சேமித்துக் கொண்டு ஆசை தீர அனைத்தையும் பார்த்தேன், பல விதமான விலங்குகள் அதன் செயல்கள் இடங்களின் சிறப்புகள் எழுத ஆரம்பித்தால் தொடராக வரக்கூடும்.. ஆனால் நேரமின்மை காரணமாக ஒருசில மட்டும் மேற்கூறியவைகள்.

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது கடைசியாக நாங்கள் ஒட்டக சிவிங்கி மட்டும் வசிக்கும் இடத்திற்க்கு சென்றோம். ஒட்டக சிவிங்கிக்கு உணவு கொடுத்து விட்டு அருகில் இருக்கும் மரத்தடிக்கு சென்று அந்த மரத்தின் கிளைகளை ஒடித்தேன் அப்பொழுது அந்த கிளையின் ஒடிந்த பகுதி என் நக அடியில் குத்தியது, பெரிதாக இரத்தம் வரவில்லை, என்வே வலியும் அதிகம் இல்லை, துபாய்க்கும் திரும்பி விட்டேன்.

சில நாட்கள் கழித்து அந்த நகத்தை சுற்றிலும், அடியிலும் ஒருவித கருவேர்களுடன் தோல் தடித்து ஒரு வித வலியுடன் மரு போன்று கிளம்பியது. உலகத்தில என்னன்ன வீட்டு வைத்தியம் இருக்கின்றதோ அதுவும் மற்றும் மெடிக்கல் கவுண்டர் மருந்து வைத்தியமும் ஆசிட் உட்பட அனைத்தும் பயன்படுதியாச்சு… ஆனால் சிறிது குறைவதும் பிறகு அதிகமாவதும் என்று அக்கப் போர் காட்டிக் கொண்டு இருந்தது அந்த மரு.

என்னடா இது என்று நினைத்துக் கொண்டு தஞ்சாவூரில் இருந்த என் நண்பனை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னதும் அங்கே இருக்கும் தோல் டாக்டரிடம் சில மருந்துகளை வாங்கி அனுப்பினான். ‘ம்ம்ம்ஹும்’ போவதாக இல்லை. என்ன செய்வது யா அல்லாஹ்! என்று இங்கே சார்ஜாவில் இருக்கும் 30 வருட அனுபவமிக்க! பிரபல தோல் வைத்தியரிடன் சென்றேன், அவரும் பார்த்து விட்டு இது பெரிய பிரச்சனை சில மருந்துகள் தருகின்றேன் பாருங்கள் என்று கூறி நகத்தை சிறிது வெட்டி பரிசோதனைக்கு அனுப்பினார்.

அவர் தந்த மருந்தால் எந்த முன்னேற்றமும் இல்லை, சோதனைக்கு போய் வந்த நகத்திலும் எதோ ஒரு பாக்டீரியா உட்கார்ந்து கொண்டு இந்த ஆட்டம் போடுவதாக வந்தது. டாக்டர் இறுகிய முகத்துடன் என்னிடம் கூறினார். இது நீங்க ஆஃபிரிக்காவில் மரத்தை ஒடித்தபோத ஒட்டிக் கொண்ட பாக்டீரியாதான். இதனை 80% ஒழிக்க வேண்டுமென்றால் இரண்டும் ஆபரேஷன் முறைகள் உண்டு. ஒன்று விரலை உறையும் நிலைக்கு கொண்டு சென்று அதில் கொப்பளம் கிளம்ப வைத்து வெடித்து எடுக்கும் முறை. ஆனால் செலவு அதிகம் இன்சுரன்ஸ் கவரும் கிடையாது மற்றொன்று இரும்பு ராடில் மின்சாரத்தை பாய்ச்சி அதனைக் கொண்டும் தீச்சு எடுப்பது என்று அதற்காக ஒரு ஊசி போடுவோம் அதன் வலி உங்களுக்கு என்னமோ பிள்ளை பெத்த அனுபவம் உள்ளவர் போல (வார்த்தைகள் உதவி: கவிக்காக்கா) அந்த அளவிற்கு வலி இருக்கும் என்றார். அப்படி செய்தாலும் மீண்டும் வரலாம் என்று குடுகுடுப்பைகாரன் (வார்த்தை உதவி ஜாஹிர் காக்கா) ரேஞ்சில் பேசினார்.

பக்கத்தில் இருந்த என் துணைவருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.. இருந்தாலும் அல்லாஹ் துணையிருப்பான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நாள் கழித்து வருகின்றோம் என்று சொல்லி விட்டு அவர் ஏழு மாதத்திற்கு சாப்பிட வேண்டும் என்று எழுதிக் கொடுத்த மாத்திரைகளை ஒரு மாதத்திற்கு மட்டும் வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். அந்த மாத்திரைகள் ஈரலை பாதிக்கும் என்று வெளிப்படையாக சில நண்பர்கள் சொன்னதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தேன் அல்லாஹ்வின் நாட்டம் நான் அதனை சாப்பிடக்கூடாது என்று போல உடம்பில் ஒரு வித சிகப்பு வியர்க்குரு போன்றது கிளம்பி தடைச் செய்ய வைத்து விட்டது.

எந்தவித வைத்தியமும் பயன் தராமல் வளர்ந்து தடிக்கும் நகச்சதையை வெட்டி வெட்டி என் பொழுது கழிந்தது, இந்த வலது கை பெருவிரலில் இருந்த அந்த மருவினால் சில சமயம் வியாபார சந்திப்பில் கை குலுக்கவும் நான் தயங்கியதுண்டு.

இப்படியே போய்க் கொண்டு இருக்கும் போது 'கூகுள் மாமா'விடம் ஏதாவது சீண்டி பார்க்கலாமே என்று தடவிக் கொண்டு இருந்தேன். தேடும் வார்தை அடங்கிய 12 வது பக்கத்தில் ஸ்வீடனில் இருந்து ஒருத்தர் எழுதி இருந்தார்.

எனக்கு இந்த மாதிரி இருந்தது, எங்க பாட்டி தினமும் ”ஆப்பிள் சிடார் வினிகரில்” 20 நிமிடம் கை நனைத்து எடு கொஞ்ச நாளில் போய் விடும் என்றார் நானும் அதுபோல் செய்தேன் போய்விட்டது என்று எழுதியிருந்தார்.

என்னடா இது இடிபோல் எத்தனை அடி கொடுத்தாலும் ஆசிட் வைத்து பொசிக்கினாலும் இறங்காத இந்த மரு, இந்த 40 ரூபாய் வினிகரிலா போகப் போகின்றது என்று நம்பிக்கைக்கு ஏங்கியவனாக, ஆனாலும் நம் நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இதுவும் ஒன்றே என்று நினைத்து செய்துதான் பார்ப்போமே என்று சோம்பலுடனும் செய்து பார்த்தேன். என்ன ஆச்சரியம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் ஏற்பட்டு சரியாக பத்து தினங்களில் இருந்த இடத்தை விட்டு ஓடி விட்டது அந்த மரு. என் விரல் பழையபடி மெருகுடன் காட்சியளிக்கின்றது. இறைவனைப் புகழ்ந்தவனாக அல்ஹம்துலில்லாஹ் சொன்னேன். அவன் தானே கூகுள் மூலம் இந்த உதவியை வழங்கினான்.

இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால் ஒரு சில மலிவான மருந்துகள் வலுவான சில உடல் கோளாறுகளையும் நீக்கும் ஆனால் சில டாக்டர்கள் தெரிந்தும் பரிந்துரைப்பதில்லை. ஒரு கொசுறு தகவல், ஆப்பிள் சிடார் வினிகர் பல மருத்துவக் குணம் நிறைந்தது… கூகுளில் டைப் செய்து பாரூங்களேன்.

மீண்டும் சந்திப்போம்

முகமது யாசிர்

12 Responses So Far:

Ebrahim Ansari சொன்னது…

மருமகனார் யாசிர்!

இவ்வளவு நாள் ஒன்று பதிவுகள் எழுதவில்லையே என்று பலபேர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் அளிப்பது போல் நல்ல ஒரு பதிவை விழிப்புணர்வுடன் தந்து இருக்கிறீர்கள்.

இப்படித்தான்

நாம் துரும்பாக நினைக்கிற - அல்லது மதிப்பில்லாமல் நினைக்கிற பல சங்கதிகள் - ஆச்சரியப் படத்தக்க விதத்தில் பயனளிக்கும்.

நலம் பெற்றதில் மகிழ்ச்சி. தொடர்ந்த நலனுக்கு து ஆ.

sabeer.abushahruk சொன்னது…

உண்மையிலேயே ஓர் ஓசிப் பயணம் செய்த உணர்வைத் தந்தது நீங்கள் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டிப்போய் காட்டிய இடங்களை ரசித்தது.

இன்னும் நிறைய நாடுகளுக்குப்போய் வந்து எங்களுக்கும் சொல்லி சுற்றிக்காட்டவும்

வெனிகரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஏனோ அதை உபயோகப்படுத்துவதில் ஒரு தொடர்ச்சி அமையாமலேயே போகிறது.

அருமையானப் பதிவுக்கும் அற்புதமான மருத்துவ குணம் கொண்ட வெனிகரைக் குறித்தத் தகவலுக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad சொன்னது…

அருமைங்க யாசிர்... நல்லா எழுதியிருக்கீங்க... ஃபோட்டோ கமெண்ட்ஸும் நச்.... சூப்பர்...

Ahamed irshad சொன்னது…

வினிகர் பத்தின தெரியாத தகவலுக்கும் நன்றி....

sabeer.abushahruk சொன்னது…

//அப்படி செய்தாலும் மீண்டும் வரலாம் என்று குடுகுடுப்பைகாரன் (வார்த்தை உதவி ஜாஹிர் காக்கா) ரேஞ்சில் பேசினார்.//

ஸ்கூல் நாடகத்ல கொற வேஷம் போட்டாலும் போட்டான் இப்டி மேற்கோள் காட்றீங்லேப்பா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

ஆப்பிரிக்காவின் மகத்துவம் காட்டி அதோடு ஆப்பிள் சைடர் மருத்துவம் வரை எழுத்து அருமை!

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

Very fine article by Bro. Yasir after long intermission. Also there is a medicine to cleanse heart blocks in Apple Vinegar combined with extractions of Ginger, Garlic and lemon. If any one who suffering in heart blocks can take it as per the correct measure, then in shaa Allah the blocks will be removed as a magic.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

அருமையான பயணம்.
சூபரான அனுபவக் குறிப்பு.
ஆப்பில் சிடர் வினிகர் பொதுவாக நல்லது என் கேள்விப்பட்டு,சில வாரங்களாக அருந்தி வருகிறேன்.மாஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

விரலைச் சுத்தி இவ்வ்வ்வ்ளோ நடந்திருக்கு சுற்றி இருக்கிற எங்ககிட்டே ஒன்னு கூட சொல்லவே இல்லை... இந்த பதிவுக்கான ரகசியம் காக்கப்பட்டதோ ?

உங்க பாணியே தனிதான், உலகம் சுற்றும் வாலிபன் ! :)

எலாமே அருமை !

Yasir சொன்னது…

படித்துவிட்டு உற்சாகமூட்டும் கருத்துக்களை பதிந்த அன்சாரி மாமா, கவிக்காக்கா,சகோ.இர்ஷாத்,சகோ.ஜஹபர் சாதிக், சகோ.நெய்னா முகம்மது,இப்னு அப்துல் ரெஜாக்..மற்றும் எங்கள் வீட்டு பிள்ளை நெய்னா தம்பி காக்கா மற்ற அனைவருக்கும் நன்றிகளும் துவாக்களும்

Yasir சொன்னது…

மற்றவங்களெல்லாம் எங்கே பிரச்சாரத்திற்க்கு போய்ட்டாங்களா ??

Unknown சொன்னது…

ஓர் அழகிய மருத்துவ டிப்ஸ் உடன் கூடிய பயண அனுபவத்தை பகிர்ந்து
கொண்ட தம்பி யாசிருக்கு ஒரு சொட்டு .

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு