ச்சன்டிகார்...
“தொடர்ச்சியானப் பனிப்பொழிவு காரணமாக இன்றும் போக்கு வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமான சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. இந்தப் பனிப்பொழிவுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்”
“தொடர்ச்சியானப் பனிப்பொழிவு காரணமாக இன்றும் போக்கு வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமான சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. இந்தப் பனிப்பொழிவுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்”
அந்தத் தொலைக்காட்சிச் செய்தி எனக்கு கவலை அளித்தது. “உங்க பாஸுக்கு ஃபோன் பண்ணி இன்னிக்குப் போக முடியாதுன்னு சொல்லிடுங்க” என்று மனைவியும் பிள்ளைகளும் தடுத்ததால் ஹெச் ஆருக்கு ஃபோன் பண்ணி காரணத்தைச் சொல்லி “பயணத்தைத் தள்ளிப் போட முடியுமா?” என்று கேட்க, அவர் எம் டி ஐக் கேட்டுச் சொல்வதாகச் சொல்ல, காத்திருந்த அந்த நேரத்தில் சீக்கிரமாக நடப்பைச் சொல்லி விடுகிறேன்.
ஷார்ஜாவில் உள்ள எங்கள் நிறுவனத்திற்காக வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்காக ச்சன்டிகாரில் உள்ள ஒரு ரெக்ர்யூட்மென்ட் ஏஜென்ஸியிடமிருந்து பயோடேட்டாக்கள் பெறப்பட்டு அவற்றிலிருந்து 40 பேர்களை தெரிந்தெடுத்து (ஷார்ட் லிஸ்ட்) நேர்முகத் தேர்வுக்காக நான் அடுத்த நாள் ச்சன்டிகாரில் இருக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்ட நிலையில்தான் டெல்லி மற்றும் ச்சன்டிகாரில் பனிப்பொழிவு தீவிரமடைந்து விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
சற்று நேரத்தில் அலைபேசியில் அழைத்த ஹெச் ஆர்., நேர்முகத்தேர்வை ஒத்திப்போட இயலாததற்கானக் காரணங்களை விளக்கி நான் போயே ஆக வேண்டிய நிர்பந்தத்தை எடுத்துச் சொன்னான். வேறு வழியின்றி புறப்படலானேன்.
அன்றிரவு ஏர் இன்டியா எக்ஸ்ப்ரெஸ்ஸில் துபையிலிருந்து கிளம்பி மறுநான் அதிகாலை டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும் எதிர்பார்த்த அதிர்ச்சி எந்த மாற்றமுமின்றி காத்திருந்தது. அதாவது, சன்டிகார் செல்லும் விமானச்சேவைகள் அத்தனையும் ரத்து செய்யப்பட்டிருந்தன. டெல்லி விமான நிலையத்திலிருந்து ச்சன்டிகாருக்கு ட்ரான்ஸிட் ஏற்பாடு செய்திருந்ததால் டெல்லியில் என்னை வரவேற்க யாரையும் ஏற்பாடு செய்திருக்கவில்லை. எனவே, அந்த அதிகாலை 3 மணிக்கு செய்வதறியாது தனித்து விடப்பட்டேன். இந்த இடத்தில் “தொடரும்” போடுமளவுக்கு அடுத்தது என்ன என்பதில் குழப்பமும் சற்று அச்சமும் நிலவியது. ஏற்கனவே ஒரு முறை தாஜ்மஹால் பார்ப்பதற்காக ஆக்ரா செல்ல டெல்லி வந்திருந்தாலும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து பார்த்ததும் பயம் கவ்விக் கொண்டது.
நான் மேகப் பொதிகளுக்குள் தனித்து விடப்பட்டதுபோலவும் என்னைச் சுற்றி எந்த சீவராசியும் இல்லாதது போலவும் பணிப்பொழிவு அடர்த்தியாக நிகழ்ந்து கொண்டிருந்தது. “சர் ஜி கஹான் ஜானா?” என்னும் குரல் மிக அருகில் கேட்டதால் திரும்பிப் பார்த்தேன். போர்வை போத்திக்கொண்டு வாயைச் சுற்றி ஊசியிலைக்காடுகளைப் போல மீசை தாடிகளால் ‘வைக்கோல் போரோ’ என்று எண்ணுமளவுக்கு உரோம அடர்த்தியோடும் தலையில் டர்பனோடும் ஒரு சர்தார்ஜி நின்று கொண்டிருந்தது மங்கலாகக் தெரிந்தது. “முஜேத்தோ ச்சன்டிகர் ஜானா ஹே பையா” என்றேன். “னா ஜா பாயகா. மோசம் கராப் ஹே. சுபே நவ் பஜேகே பாத் காடி பக்கட்கர் ஜாயியே” என்று சொன்னது தமிழில் சுருக்கமாக “மாட்டிக்கினியா?” என்று காதில் விழுந்தது. தொடர்ந்து “ஏம்ப்பா இங்கே அதுவரை தங்குவதற்கு அருகில் ஹோட்டல் உண்டா” என்று நான் ஹிந்தியில் புலம்ப அவர் 5 கிமீட்டருக்குள் ஒரு ‘அச்சா’ ஹோட்டல் இருப்பதாகச் சொல்லி அவர் வண்டியை நோக்கி என்னை அழைத்துச் சென்றார். அந்த காலச்சூழலுக்கும் அவர் அழைத்துச் சென்ற தோரணைக்கும் எனக்கென்னவோ நான் கடத்திச் செல்லப்படுவதுபோலவே உணர்ந்தேன். தோதாக, ஏர்ப்போர்டை விட்டு ஏறத்தாழ 500 மீட்டர் வரை நடந்தே அழைத்துச் சென்றவரிடம் “காடி கிதர் ஹே பாய்?’ என்று மூன்று முறை கேட்ட போதும் “இதரி ஹே” என்று இழுத்துச் சென்றவர் ஒரு வழியாக கார் என்று காட்டியது குட்டியானையைப் போன்ற ஒரு கச்சடா வாகனம்.
வேறு வழியில்லாமல் ஏறி அமர, காரை ஸ்டார்ட் செய்ததும் எஞ்சின் இயங்குவதற்கு முன்பே கார் ஸ்டீரியோ இயங்கத் துவங்கியது. பல்லே பல்லே என்று துவங்கிய அந்த பாங்க்டா பாடல் நான் என் பயணத்தை முடிக்கும்வரை ஓயாது என்பது அப்போது எனக்குத் தெரியாது.
அந்த த்ரில்லர் பயணம் துவங்கியது. 5 கிமீட்டரைக் கடக்கும் வரை நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். காரணம், எதிரே சாலையோ வேறு வாகனங்களோ எதுவுமே கண்களுக்குத் தெரியாத அளவுக்கும் பணிப் பொழிவு. இவர் வாகனத்தை ஞாயமான வேகத்தோடு செலுத்த நான் அரண்டு போய், “என்னய்யா எதிரே ஒன்னுமே தெரியலையே. இப்டி வேகமா ஒட்றே?” என்றதற்கு, “நான்லாம் இங்கேயே பிறந்து வளர்ந்து வருபவன் ஜி. என் கண்களைக் கட்டிவிட்டு ஓட்டச் சொன்னாலும் ‘கரீட்டா’ ஓட்டிடுவேன்.” என்று பீத்திக் கொண்டவரிடம், ‘அதுசரி உனக்கு முன்னால் திடீர்னு ஒரு வாகனம் தோன்றினால் என்ன செய்வாய்?” என்று நான் ச்செக் வைக்க, அவர் சொன்ன பதில் வாழ்க்கையின் எதார்த்தத்தை எனக்கு உணர்த்தியது. “மோதிட வேண்டியதுதான். வேறென்ன செய்ய முடியும்?”.
ஒருவழியாக ஹோட்டலை அடைந்து, விடிந்ததும் 9 மணிக்கு ச்சன்டிகார் செல்ல தனி வாகனமொன்று அமர்த்தித் தருமாறு கேட்டுக்கொண்டு படுக்கையில் விழுந்த போது நிசப்தமாக இருந்தாலும் அந்த பல்லே பல்லே மட்டும் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.
காலையில் ஒன்பது மணியைப்போல், பாங்டாவுக்கு வந்து வாடகை மற்றும் வாகனத்திற்கான பாங்டாவை செலுத்திவிட்டு பாங்டாவில் உட்கார்ந்து பாங்டாவை ஸ்டார்ட் செய்து பாங்டா நோக்கி பயணிக்கத் துவங்கினேன். உள்ளே பல்லே பல்லே என்னும் ஒரே ராகத்தில் வித்தியாசமான ட்டெம்போவோடு பாங்டா பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. நம்மூர் மாதிரி (ட்விட்டர் வச்சி, ச்சில்லு ஏத்தியிருக்கேன் காக்கா) ட்ரெபிள் கூட்டி பேஸ் குறைத்து சாகடிக்க, “ பாய் ஸாப், கானா பந்த் னஹி கரோகே?” என்றதற்கு,”நீந்து ஆஜாயகா பாய்” என்றதும் பயந்து பொத்திக்கிட்டு உட்கார்ந்தேன், பாட்டை நிறுத்தினால் தூங்கிடுவானாம்ல! 6 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ச்சன்டிகார் சமீபித்தது.
இன்ட்டரிவிவ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலை அனுகியதும் ஏற்பாட்டாளர் வந்து கார் கதவைத் திறந்து விட்டதும் குசல விசாரிப்புகளும் எனக்கு என்னை ஒரு தேர்தல் காலத்து வாக்காளன்போல காண்பித்தது. எதிர்பார்த்தபடி யாவரும் வந்திருந்ததால் ஒரே ஒரு காஃபியோடு நேர்காணலைத் துவங்கினேன். அறைக்குள் நான் மட்டுமே என் மடிக்கணினியோடு இருக்க உள்ளே வந்தவர்கள் வந்ததும் நேராக என் காலைத் தொட்டு வணங்க, நான் அதை கடுமையாக மறுத்து, உள்ளே வருமுன் ஒவ்வொருவரிடமும் காலைத் தொடக்கூடாது என்று சொல்லியே அனுப்பச் சொன்னேன்.
இன்டர்விவ் களேபரங்கள் எல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது. இன்னொரு பதிவு எழுதுமளவுக்கு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தேறின என்றாலும் 14 ஆட்களைத் தெரிந்தெடுத்து விட்டு இரவு 9 மணிக்கு வேலை முடிய ச்சன்டிகாரிலேயே தங்கி, இரவுச் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு நன்றாக உறங்கி மறுநாள் காலை, அதே பணிப்பொழிவு காரணமாக காரிலேயே டெல்லி வந்து, விமானம் பிடித்து ஷார்ஜா வந்த பிறகும் இரண்டு மூன்று நாட்களுக்கு “பல்லே பல்லே” என் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.
திரும்பி வந்த பிறகுதான் தெரிய வந்தது, ச்சன்டிகாருக்கு இந்தப் பக்கம் 2-3 மணி நேர பயண தொலைவில் குலுமனாலியும் அந்தப் பக்கம் 2-3 மணி நேர பயண தொலைவில் சிம்லாவும் இருப்பதாகவும் சீஸன் வேறு கலை கட்டியிருப்பதாகவும். அடச்சே, சரியாகப் ப்ளான் பண்ணாமப் போயிட்டமே. மேலும் இரண்டு நாட்கள் இருந்து இரண்டு பணிப் பிரதேசங்களையும் கன்டு வந்திருக்கலாமே என்று அங்கலாய்த்துக்கொண்டேன். இதுக்குத்தான் சொல்றாங்க, “எதையும் ப்ளான் பண்ணித்தான் பண்ணனும்; ப்ளான் பண்ணாம எதையுமே பண்ணக்க்கூடாது”என்று.
முஹம்மது யாசிர் எழுதியதல்ல
14 Responses So Far:
நல்லத்தான் போட்டு வுடுறிய பல்லே பல்லே பல்லே
டெல்லியில் இருந்து சண்டிகார் போற பாதைலே பாணிபட்டு (போர்)இருக்கே அதைப்பத்தி ஒன்னுமே சொல்லலே
ஊர்விட்டு ஊர்போவதிலும்நாடுவிட்டு நாடுபோவதிலும் நலஅனுபவம்பெறலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
தம்பி யசிர் உங்கள்
சன்டிகார் பயணக்கதை நல்ல சுவராசியமாக இருந்தது
இருதியில் ஒரு குழப்பம் முஹம்மது யாசிர் என்ற பெயருக்கு பக்கத்தில் எழுதியதல்ல என்பதின் அர்த்தம் புரியவில்லை
முஹம்மது யாசிர் இதை எழுதியதல்ல என்று அர்த்தமா
கட்டுரையில் கனரக வாடை அடிக்கிறது.
ஆனாலும் ரசித்துப் படிக்க ஒரு சிறந்த பதிவைத் தந்துள்ள மருமகனார் யாசிர் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
சண்டிகர், குளு மணாலி செல்வதற்கு ஏற்ற மாதங்கள் மார்ச் , ஏப்ரல் . ஏப்ரல கடைசி மே மாதம் டில்லி போகிறவர்கள் உடம்பு மேலே உப்பைத் தடவிக் கொண்டு போனால் நல்ல கருவாடாகத் திரும்பலாம்.
இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்பவர்கள் அல்லது முதன் முதலில் டில்லி செல்பவர்கள், ' என்ன பைத்தியக்காரத்தனம் இந்த ஊரை ஏன் தலை நகராக வைத்து இருக்கிறார்கள் ?' என்று சலித்துக் கொள்ள்ளலாம் . அவ்வளவு சூடு- தூசி.
மன்சூர்,
அதே அதே!
மன்சூர்,
இந்த "தேடல்" பதிவுகளின் வாயிலாக அதிரை நிருபரில் அதிகமதிகம் பதிவுகள் எழுதியவர்களின் தற்போதைய சுணக்கத்தைச் சுட்டிக்காட்டவும், இவர்களின் எழுத்தை மீண்டும் ரசிக்கவும் தோதாக இப்படி இவர்கள் பாணியில் எழுதி சொதப்பி உசுப்பேத்தி எழுதத் தூண்டுகிறோம்.
அந்த வரிசையில்:
ஹமீதின் எக்ஸ்கபேட்டர்
கிரவுனின் நாடு போகும் போக்கு
அப்த்குர்ரஹ்மானின் முதிர் நிலா
இப்ப யாசிரின் ச்சண்டிகார்
அல்லாஹ் இவர்கள் வக்தில் பரக்கத் ஏற்படுத்தி நேரம் வழங்க வேண்டும்.
(அப்புறம் ஒரு சேதி. கண்கள் இரண்டும் நிறைவடைந்ததும் வேறு பதிவு எழுத சுணங்கினால் "காதுகள் இரண்டும்" என்று எழுதி உங்களையும் கலாய்ப்போம். சாக்ரதை)
கல்லூரி சுற்றுலாவின்போது டெல்லி-சிம்லா வழியில் சண்டிகாரைக் கடந்து சென்றோம்.பஞ்சாப்&ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருந்தாலும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலிருக்கும் நகரம்.
சிம்லாவிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் பள்ளத்தாக்கை இரவில் காண்பது தனி பரவசம் போங்க. நட்சத்திரங்களை வானத்தில்தான் பார்த்திருப்போம். இந்தப்பள்ளத்தாக்கின் குக்கிராமங்களின் விளக்கொளிகள், நட்சத்திரங்ககைப்போன் மின்னும் அழகே தனி.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்குத் தடை இல்லாமல் இருந்தபோதுதான் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். :)
ஆறு வருடங்களுக்கு முன்பு என் மகனுக்கு ரோலேர் ஸ்கேட்டிங் பைனல்இங்கு சண்டிகாரில் நடந்ததால் நான் குடுமபத்துடன் அங்கு சென்றிருந்தேன் இங்கே பார்க்க வேண்டிய இடம் ராக் கார்டன் (அந்த முதல் போட்டோ)அடுத்து ரோஸ் கார்டன் .இங்கே எந்த தெருவிற்கும் தலைவர்கள் பெயர் கிடையாது எல்லாமே செக்டார் ஒன்னு செக்டார் இரண்டு என்றுதான் பெயர் உள்ளது
இந்தியாவில் இதுதான் பிளான் செய்து உருவாக்கிய சிட்டியாம் இந்த சிட்டிக்கு யாசிர் பிளான் இல்லாமல் போனது பரிதாபம் தான்
சபீர்
கவியன்பன் பானியிலே சொல்வதென்றால் எம்மிடம் சரக்கு நிறையவே இருக்கு
உண்மையிலேயே அடுத்த தொடர் காதுகல் இரண்டும் என்று நான் ப்லான் பன்னியது உனக்கு எப்படி தெரியும் சைத்தான் வந்து சொன்னானா
லுவா காப்பி சுவை தந்து ஆப்பிரிக்கா வரை காட்டிய யாசிர், சன்டிகருக்கு இதுவரை வராதது கவலை அளிக்கிறது. உடன் வந்து சேரவும்.
சகோ யாசிர் அவர்கள்தான் எழுதினார் போல் அச்சு அசல்,சீக்கிரம் வாங்க யாசிர் பிரதர்.
காக்கா....அப்படியே அல்ல என்னைவிட ஒரு படி மேலே போய் நல்லாவே எழுதியிருக்கீங்க.....நண்பர்களே சகோதர்களே...விரைவில் வருகின்றேன்...நன்றி உங்கள் அனைவரின் பாசத்திற்க்கு
Post a Comment