Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம்.. 4

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2015 | ,

அதிரைநிருபர் வலைத்தளம் கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இணைந்து நடத்திய ஆசிரியர் தினம் 2015.

கடந்த  05-09-2015 அன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று விடுமுறை தினமாக இருந்ததால்   ஆசிரியர் தின நிகழ்ச்சியை பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழாவுடன் இணைத்து நேற்று 06-09-2015 ஞாயிறு அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.


இந்த சீர் மிகு விழாக்களை பள்ளியின் நிர்வாகத்துடன் இணைந்து சென்ற இரு ஆண்டுகளைப் போலவே அதிரைநிருபர்  வலைதளம் சீரும் சிறப்புடனும்  நளினத்துடனும் நாகரீகமாகவும் நடத்தியது.  

அன்று காலை ஒன்பது  மணிக்கு இந்தக் கோலாகல உற்சாகக் கூட்டத்துக்கு நேரம் குறிக்கப்பட்டது.  பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின்  முழுக் கட்டுப்பாட்டில் மாணவத் தங்கங்கள் ஒப்படைக்கபட்டு ஒழுங்காக அணிவகுத்து அமரவைக்கபட்டனர். நிகழ்ச்சியின் வெற்றிக்கு இந்த கட்டுப்பாடு கட்டியம் கூறியது. 


விழாவுக்கு  காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி. ஏ. மகபூப் அலி M.Sc; M.Ed; M. Phill அவர்கள்  தலைமை வகித்தார்.    கா. மு. கல்லூரியின் முதல்வர், முனைவர் ஹாஜி A.   ஜலால் M.Com; M.B.A.; Ph.D; அவர்கள் முன்னிலை வகித்தார்.  வாழ்த்துரை வழங்க கா. மு. கல்லூரியின் உதவி முதல்வர்  முனைவர் ஏ. எம். உதுமான் முகையதீன் M.Sc; M. Phil; B.Ed; PGDCA Ph.D  அவர்களும் அதிரைநிருபரின் மூத்த பதிவாளர் இப்ராஹீம் அன்சாரி  M. Com;  அவர்களும் கலந்துகொள்ள, சிறப்பு சொற்பொழிவாற்ற “நற்றமிழ் நாவரசி”  என்று மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பட்டம் வழங்கப்பட்ட திருச்சி காவேரி மகளிர் கலைக் கல்லூரியின் பேராசிரியை செல்வி நா. சாத்தம்மைப் பிரியா M.Sc; ( Ph. D)  அவர்களும் கலந்து கொண்டனர். வரவேற்புரையை பள்ளியின் தலைமை தமிழாசிரியர்  முனைவர் அஜிமுதீன் M.A. B.Ed. Ph.D,  அவர்களும் நன்றியுரையை  தமிழ்த்துறையில் பணியாற்றும் உமர் பாரூக் M.A .M. Phill, B.Ed; அவர்களும் ஆற்றினர். முனைவர் அஜிமுதீன் அவர்களின் இயல்பான நகைச்சுவை கலந்த தொகுப்புரைகள் சூழ்நிலையை கலகலப்பாக்கியதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். 

அதிரைநிருபரின் மூத்த பதிவாளர்  இப்ராஹீம் அன்சாரி அவர்கள் தனது வாழ்த்துரையில் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கு அதிரையின் அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களும் ஒத்துழைப்புத் தரவேண்டுமென்று கைதட்டல்களுக்கிடையே கோரிக்கை விடுத்தார். மரங்களை நடுவோருக்கு அவர்கள் மறைந்த பின்னும் நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்குமென்ற நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை மேற்கோள் காட்டி மாணவர்கள் NSS அமைப்பின் மூலம் காட்டுக் கருவைச் செடிகளை அழிக்கவும் சாலையோரங்களில் மரக் கன்றுகளை நட்டுப் பராமரிக்கவும் உதவிட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். .  

அவரைத் தொடர்ந்து சுருக்கமான வாழ்த்துரை வழங்கிய உதவி முதல்வர் உதுமான் முகையதீன் அவர்கள் , ஆசிரியப் பணியின் புனிதத்தை ஒரு சம்பவத்தின் மூலம் எடுத்துரைத்து விளக்கினார். 

அதன்பின் உரையாற்றிய கல்லூரி முதல்வர் எ. ஜலால் அவர்களும் மாணவர்களுக்கான சில ஒழுக்க நெறிகளையும் ஆசிரியப் பணியின் அருமையான தன்மைகளையும் விவரித்ததுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடக் காரணமாக இருந்த டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள் ஒரு கல்லூரிப் பேராசிரியராக தனது வாழ்வில் பயணித்ததால்  ஆசிரியர் தினத்தை கல்லூரிகளில்தான் முக்கியமாகக் கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டார்.  
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கல்லூரி முதல்வர் அவர்களால் கவுரவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பேராசிரியை செல்வி நா. சாத்தம்மைப் பிரியா அவர்கள் தனது சிறப்பு சொற்பொழிவைத் தொடங்கினார்கள். முதல் நாள் பெய்த மழையின் காரணமாக வெளியே இதமான காற்று உடலை வருடிக் கொண்டிருக்க சிறப்பு சொற்பொழிவாளரின் சொல்லாற்றல் நிறைந்த பண்பட்ட கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களையும் வருடின என்றுதான் சொல்லவேண்டும். சிந்தனைக்காக பல செய்திகளை எடுத்து வைத்து ஒருமணிநேரம் உரையாற்றிய பேராசிரியை அவர்கள் குறிப்பாக அதிராம்பட்டினம் பற்றிக் குறிப்பிட்டது சிறப்பாக இருந்தது. அதிராம்பட்டினம் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிக்கு இதுவரை தான் சென்றதில்லை என்றும் அதிரைக்கு வரும்போதே பண்பட்ட இஸ்லாமியர்களாக வாழும் அதிரை மக்களிடம் என்னபேசுவது என்று தெரியாமல் இருக்க சமூக நீதி, சுற்றுச் சூழல் போன்ற பேசுபொருள்களை வலியுறுத்தி அதிரையின் மக்கள் பேசுவது கேட்க, தனக்கு மிகவும் மகிழ்வாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்று விண்ணைப் பிளந்த கர ஒலிகளுக்கிடையே குறிப்பிட்டார்.    

அத்துடன் அதிரைநிருபர்  வலைதளத்தின் சார்பாக பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான ஹாஜா முகைதீன் சார்,  ஹனிபா சார், சண்முகம் சார், ராமச்சந்திரன் சார், ஷாகுல் ஹமீது சார் ,  ராஜேந்திரன் சார் , சீனிவாசன் சார், ஆகியோருக்கு அதிரைநிருபர் வலைத்தளத்தின் சார்பாக பழங்கள் அடங்கிய பழப்பையும் வழங்கி  இப்ராஹீம் அன்சாரி அவர்கள்  கவுரவித்தார். ஒய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் இயற்பியல் ஆசிரியர் , MLA என்று அழைக்கப்படும் லியாகத் அலி அவர்கள்,  தனது உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் திருச்சியிலிருந்து வந்து கலந்து கொண்டார்.  அவரை கவுரவிக்கும்போது அந்தப் பள்ளி வளாகத்தில் வங்கக் கடலின் அலைகளையும் அடக்கும் வண்ணம் எழுந்த கரவொலிகள் காதைப் பிளந்தன. உணர்ச்சிகள் அலை மோதின; கண்கள் பனித்தன. குரல்கள் தழுதழுத்தன.    

அனைவரும் பெருமைப்படத்தக்க வகையில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வேதியல் பாடப் பிரிவில் மாநிலத்திலேயே முதலாவதாகவும் மூன்றாவதாகவும் இடம் பிடித்த இரண்டு மாணவர்கள் நமது பள்ளியிலேயே படித்து நமது கல்லூரியிலும் படித்தவர்கள் எபதால் அவர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கபட்டார்கள்.

பள்ளியின் சார்பில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்திய மாணவர்கள் மற்றும் உடற் பயிற்சி ஆசிரியர் ஆகிய அனைவரும் மேடைக்கு அழைத்துப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். 

இதையடுத்து,  அதிரைநிருபர் வலைத்தளம் சார்பில் இந்த நிகழ்ச்சியின் நினைவுப் பரிசாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும்  தினமும் பயன்படுத்தத் தக்க ஒரு ஹாட் பேக் மற்றும் அதிரைநிருபர் வலைதளத்தின்  பதிவாளர் காதிர் முகைதீன் பள்ளியின் முன்னாள் மாணவர் அமெரிக்காவில் வாழும் இக்பால் எம். ஸாலிஹ் அவர்கள் எழுதி அதிரைநிருபர் பதிப்பகம் வெளியிட்ட  “நபி மணியும் நகைச்சுவையும்  “ என்ற கவின்மிகு நூலும் இந்த வருடத்தின் நினைவுப் பரிசாக ,   வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நினைவுப் பரிசுகளை இப்ராஹீம் அன்சாரி அவர்களும் நாவலர் நூர் முகமது அவர்களும் பகிர்ந்து இன்முகத்துடனும்  அன்புடனும்  வழங்கினாரகள். .

மாணவர்களுக்கு அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்   பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் அவர்களின் கரவொலி உற்சாகமாக வெளிப்பட்டது. உற்சாகமான அவர்களின் விசில் சப்தமும்  விண்ணைப் பிளந்தது.  

இந்நிகழ்ச்சியில் அதிரைநிருபரின் மரியாதைக் குரிய மூத்த  பதிவாளரும் பன்னூல் ஆசிரியருமான அறிஞர்   அதிரை அஹமது ,  அதிரை அன்வர், அதிரை அஹமது அமீன்,  ஆகியோருடன் அதிரையின் சக இணைய தளங்களான அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை, அதிரை நியூஸ் மற்றும் தினகரன், ஆகிய ஊடகங்களின் நிறுவனர்களும் நிருபர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும்,  ரெட்கிராஸ் மற்றும் அதிரை அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த  பல பிரமுகர்களும்  பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர்.  

அனைத்து ஊடக நண்பர்களுக்கும் பள்ளியின் இலக்கிய மன்றத்தின் சார்பில் கல்லூரி முதல்வர் அவர்களால் கவுரவிக்கப்பட்டது. 

நிகழ்ச்சிகளை அதிரை மீடியாமேஜிக் சகோதரர்கள் தங்கள் குழுவினருடன் வந்திருந்து காணொளியாகப்  பதிவு செய்தார்கள். அவர்களுக்கு அதிரைநிருபர் வலைத்தளம் தனது நன்றிகளை கூறிக் கொள்கிறது.

மொத்தத்தில் அன்று , மகிழ்ச்சிக் கடல் பொங்கி வழிந்ததோ  என்று வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நிறைவேறின. அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி ஆனந்தக் கூத்தாடியதைக் காண முடிந்தது.

அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

Iqbal M. Salih said...

'ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி என்பது, அந்நாட்டின் வகுப்பறைகளில்தான் உண்மையிலேயே உருவாக்கப்படுகின்றது' என்பதற்கொப்ப சிறந்த ஓர் ஆசிரியரின் பங்கு, பள்ளிப்பாடத்தை மட்டுமல்லாது, சமூகத்தில் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த மாணவர்களை உருவாக்குவதில் தலையாய பங்கு வகிக்கவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்ததற்காகவும் அத்தகைய ஆசிரியர்களைப் பெற்றதற்காகவும் எனக்குக் கற்றுத் தந்த ஆசான்களை மிக்க அன்புடனும் மரியாதையுடனும் இவ்வேளையில் நினைவு கூருகின்றேன்!

அதிரை.மெய்சா said...

ஆசிரியர் தினத்தை ஒவ்வொருவருடமும் சிறப்புடன் கொண்டாடி கல்வி பயிற்றுவிக்கும் ஆசானுக்கும் கல்வி பயிலும் மாணாக்களுக்கும் ஊக்கமளிக்கும் தாங்களின் சேவை பாராட்டப் படவேண்டியவை.

அதிரைக்காரன் said...

/முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிக்கு இதுவரை தான் சென்றதில்லை என்றும் அதிரைக்கு வரும்போதே பண்பட்ட இஸ்லாமியர்களாக வாழும் அதிரை மக்களிடம் என்னபேசுவது என்று தெரியாமல் இருக்க சமூக நீதி, சுற்றுச் சூழல் போன்ற பேசுபொருள்களை வலியுறுத்தி அதிரையின் மக்கள் பேசுவது கேட்க, தனக்கு மிகவும் மகிழ்வாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்று விண்ணைப் பிளந்த கர ஒலிகளுக்கிடையே குறிப்பிட்டார். //

அதிரையைப் பற்றிய மதிப்பீடுகளைத் தக்க வைக்க, பேராசிரியை சொன்னதுபோல் சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பு திட்டமே நமது அடுத்த ஐந்தாண்டு திட்டமாக இருந்தால் இன்ஷா அல்லாஹ் "பசுமை அதிரை 2020 " சாத்தியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு