மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்!

வானம் வரைப் புகழ் வாய்த்தாலும்
வாழும் நிலை மிகத் தாழ்ந்தாலும்
மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்
மனத்தில் கொள் ஒரு கேடயமாய்

காதல் கண்ணி எவர் விரித்தாலும்
காந்தக் கண்ணில் அவர் சிரித்தாலும்
கவனம்; கழுத்தைத் தூக்கி லிடும்
சுவனப் பாதையைச் சறுக்கி விடும்

உடுத்தும் உடை மதில் சுவராகும்
உறுத்தும் வகை அதில் இடராகும்
மயக்கும் உடல் மறைக்கா விடில்
மொய்க்கும் கண்கள்; மானம் கெடும்

பிறப்பில் இலர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
பிழைப்பில் பலர் மேலோர் கீழோர்
ஈனப் பிழைப்பு இனத்துக் கிழிவு
மானம் கெடா வாழ்வே பொழிவு

இரந்து பிழைப்போர் பிறப்பே பிழை
ஈயா திருப்போர் இருப்பும் பிழை
இரண்டு நிலையும் இனத்தின் குறை
இருண்ட வாழ்வே இவர்தம் நிலை

உள்ளத் தூய்மை உறவை வலுக்கும்
உள்ளும் யாவும் உயர்வை வகுக்கும்
உள்ளொன்று வைத்துப் புற மொன்றானால்
உலகம் வெறுக்கும் மானம் போகும்

பேசும் பேச்சில் கண்ணியம் காக்க
பழகும் பழக்கம் புண்ணியம் சேர்க்க
சொல்லையும் செயலையும் சுத்தமாய் வை
வெள்ளையும் வெளிச்சமும் விடியலே, மெய்

மானம் போயின் மரித்தல் மேலாம்
மானங் கெட்டால் பூமிக்குப் பாரம்
உடலை மண்ணில் புதைத்தப் பிறகும்
உலகம் பேசும் வாழ்ந்த வாழ்வை

வாதம் செய் சற்று வாயையடக்கி
இளித்தல் இரத்தல் இல்லை என்றாகு
வெட்கத் தளங்களை வெளிச்சப் படுத்தா
வேட்டியோ சட்டையோ ஒழுங்காய் உடுத்து

மயிரொன்று நீத்தால் உயிரன்றே நீக்கும்
மான்களில் உயர்ந்த கவரிமான் சாதி
மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்
மானிடா இன்றே வாழ்க்கையில் சாதி

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

25 கருத்துகள்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

மனம் எனும் வாழ்க்கையில்
மானம் எனும் போர் வாள்
உங்கள் கவிதை

அதிரை.மெய்சா சொன்னது…

மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்....அருமையான தலைப்பெடுத்து அழகான ஒரு கவி சொல்லியிருக்கிறாய். அருமை...அருமை...

/மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்/
*மனதினில் குத்தும் கூர் ஆயுதமாம்*

/மானம் போயின் மரித்தல் மேலாம்/
*மனம் உணர்ந்து நடக்க நல் வரிகள்*

/உள்ளத் தூய்மை உறவை வலுக்கும்/
*உறவையும் நட்பையும் யோசிக்க வைக்கும்*

/பிறப்பில் இலர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்/
*பிறவியின் காரணம் அறியார் அறிய*

sheikdawoodmohamedfarook சொன்னது…

மானம்!மூன்றெழுத்துச்சொல்!கண்ணகியின் கையில்சிலம்பெடுத்து தன் மணாளனின்மானத்தைகாக்க மதுரை மா நகரையேசாம்பலாக்கிய சொல்!ஆனால் இன்றோஅது பணத்துக்கும்புகழுக்கும் அரசியல் நாற்காலிகளுக்கும்பலிபீடம்ஏறியும் திரௌபதை போல்துகிலுரித்து தூர வீசப்பட்டுக் கொண்டிருக்கும்இக்காலத்தில்மீதமுள்ள மானத்தை ஆசை-புகழ் என்னும் வைரசிலிருந்து காப்பாற்ற இது போன்ற கவிதைகள் வழி குளுகோஸ் பாட்டால்போடலாம்.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்" என்னும் இந்த தலைப்பைத் தந்து எழுதச் சொன்னது நண்பன் இக்பால் ஸாலிஹ். உள்ளத்தை உசுப்பி உணர்வூட்டிய தலைப்புத் தந்த இக்பாலுக்கு நன்றி!

தம்பி இப்னு அப்துர்ரஸாக், நண்பன் மெய்சா மற்றும் ஃபாருக் மாமா:

தாங்கள் அனைவரின் கருத்திற்கும் நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//உடுத்தும் உடை மதில் சுவராகும்
உறுத்தும் வகை அதில் இடராகும்
மயக்கும் உடல் மறைக்கா விடில்
மொய்க்கும் கண்கள்; மானம் கெடும்//

//பேசும் பேச்சில் கண்ணியம் காக்க
பழகும் பழக்கம் புண்ணியம் சேர்க்க
சொல்லையும் செயலையும் சுத்தமாய் வை
வெள்ளையும் வெளிச்சமும் விடியலே, மெய்//

எதைச் சொல்லி ஒவ்வொன்றாய் பிரித்தாய்ந்து வர்ணிக்க...!

நான் கிரவ்ன் அல்ல
அந்த கிரவ்ன் இன்னும் இங்கு வரல...
வரட்டும், வருவான்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா உங்கள் கவிதைகள் அனைத்தும் முத்துக்கள்... அதில் ~தெருக்கள் அதிரையின் கருக்கள்~ வரிசையில் இந்த கவிதையும் தரம் நிறுத்தி... pin-செய்ய வேண்டிய ஒன்று இதுவும் !

Ebrahim Ansari சொன்னது…

// இரந்து பிழைப்போர் பிறப்பே பிழை
ஈயா திருப்போர் இருப்பும் பிழை
இரண்டு நிலையும் இனத்தின் குறை
இருண்ட வாழ்வே இவர்தம் நிலை//

கவித! கவித!

கவிதை எழுத நினைப்போர்கள் கற்கவேண்டிய கவிதை . இந்தக் கவிதையில் இதயத்தை வருடும் வரிகள் இவைகள்.

யாரங்கே!
இந்தக் கவிஞருக்கு நூறு பொற்காசுகளும் அதிரைக் கம்பன் என்ற பட்டமும் வழங்க உத்தரவிடுகிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அபு இபு / இப்றாஹீம் அன்சாரி காக்கா,

தங்கள் கருத்திற்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். நலம், நலமாய் இருக்க வல்ல அல்லாஹ்வின் அருள் என்றும் நிலவட்டும்!இன்னும் மனதில் .....அந்த இனிய சந்திப்பு!(இளம் கருப்பு) மின்னல் ஒன்று நடந்து வந்து இரும்பில் செய்த பூவாய் இரு'கை கொண்டு அனைத்து அன்னை தரும் அனைத்து அன்பில் குறையா ஆரத்தழுவல்!என்றும் இதயம் விட்டு நழுவாமல்.....அல்ஹம்துலில்லாஹ்!

crown சொன்னது…

வானம் வரைப் புகழ் வாய்த்தாலும்
வாழும் நிலை மிகத் தாழ்ந்தாலும்
மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்
மனத்தில் கொள் ஒரு கேடயமாய்
---------------------------------------------------------------------------
இதுவரை இல்லை என்றாலும் இனியேனும் இந்த ஆய்தம் அடைய ஆயத்தம் செய்து கொண்டால் அல்லாஹ்வின் அருள் கேடயமாய் அமையும்.

crown சொன்னது…

காதல் கண்ணி எவர் விரித்தாலும்
காந்தக் கண்ணில் அவர் சிரித்தாலும்
கவனம்; கழுத்தைத் தூக்கி லிடும்
சுவனப் பாதையைச் சறுக்கி விடும்
----------------------------------------------------------------------
காதல் இந்த கன்னி வெடி வெடித்தால் காயம் பட்டு வாழ்கை கன்னிவிடும்!எனவே கவனம் கொண்டு பெண்ணியம் பேனி கண்ணியம் காத்து அல்லாஹ்விடம் புண்ணியம் தேடிகொள்ளவும்!

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

உடுத்தும் உடை மதில் சுவராகும்
உறுத்தும் வகை அதில் இடராகும்
மயக்கும் உடல் மறைக்கா விடில்
மொய்க்கும் கண்கள்; மானம் கெடும்
--------------------------------------------------------------------------
உடுத்தும் உடை படுத்தும் பாட்டை! பாட்டாய் கவிஞர் சொல்லி எச்சரித்துள்ளார்.உடை உடையினால் வரும் தீங்கை உடை! பிறர்கான கடைவிரிக்கா உடை!தறி! சகோதரி

crown சொன்னது…

பிறப்பில் இலர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
பிழைப்பில் பலர் மேலோர் கீழோர்
ஈனப் பிழைப்பு இனத்துக் கிழிவு
மானம் கெடா வாழ்வே பொழிவு
------------------------------------------------------------------
ஈனப் பிழைப்பு இனத்துக் கிழிவு!இது பிச்சை எடுத்து வாழும் பேருக்கு உள்ளத்தை 'தைய்க்கும்' வார்தைத்தைதான் இந்த கிழிவு!மேலும் மானம் காக்கும் ஆடைக்கு இந்த உவமானம் சாலப்பொருந்தும்!கவிஞரின் கற்பனைத்திறன்!மெச்ச தக்கது!அருமை!

crown சொன்னது…

இரந்து பிழைப்போர் பிறப்பே பிழை
ஈயா திருப்போர் இருப்பும் பிழை
இரண்டு நிலையும் இனத்தின் குறை
இருண்ட வாழ்வே இவர்தம் நிலை
-------------------------------------------------------------------
என்னை ஈர்த்த இந்த வரிகள்!இ.ஆ காக்காவை கவர்ந்தது ஆச்சரியமல்ல!மாச்சரியம் செய்யும் வார்தைகள்!ஒவ்வொருவரின் வியாபார இடத்தில் வைக்க வேண்டிய வாசகம்!

crown சொன்னது…

உள்ளத் தூய்மை உறவை வலுக்கும்
உள்ளும் யாவும் உயர்வை வகுக்கும்
உள்ளொன்று வைத்துப் புற மொன்றானால்
உலகம் வெறுக்கும் மானம் போகும்
-----------------------------------------------------------------------------------------
இந்த வார்தைகளில் உண்மை உள்ளது!சொல் ஒவ்வொன்றும் சுள் என பொய்யை குத்தும்!

crown சொன்னது…

பேசும் பேச்சில் கண்ணியம் காக்க
பழகும் பழக்கம் புண்ணியம் சேர்க்க
சொல்லையும் செயலையும் சுத்தமாய் வை
வெள்ளையும் வெளிச்சமும் விடியலே, மெய்
--------------------------------------------------------------------------
உள்ள கதவை திறந்து வைத்தால் உண்மை வெளிச்சம் வரும்! பின் பொய்மை மெல்ல அழிந்து போகும் !மெய்யெங்கும் மெய்யே தங்கும் செய்யும் செயல் நன்மை சேர்க்கும்!

crown சொன்னது…

மானம் போயின் மரித்தல் மேலாம்
மானங் கெட்டால் பூமிக்குப் பாரம்
உடலை மண்ணில் புதைத்தப் பிறகும்
உலகம் பேசும் வாழ்ந்த வாழ்வை

வாதம் செய் சற்று வாயையடக்கி
இளித்தல் இரத்தல் இல்லை என்றாகு
வெட்கத் தளங்களை வெளிச்சப் படுத்தா
வேட்டியோ சட்டையோ ஒழுங்காய் உடுத்து

மயிரொன்று நீத்தால் உயிரன்றே நீக்கும்
மான்களில் உயர்ந்த கவரிமான் சாதி
மானம் ஒன்றே உயர் ஆயுதமாய்
மானிடா இன்றே வாழ்க்கையில் சாதி
----------------------------------------------------------------------
அபு.இபு காக்கா! வார்த்தைகள் இப்படி இருப்"பின்"குத்த வேண்டிய இடத்தில் குத்தும்!தைக்கவேண்டியதை தைக்கும்.குந்த வேண்டிய இதயத்தில் குந்தும்!"பின்"னால் வரும் கேடை தடுக்கும் முன்"முனை(ப்பு) இந்த ஊசி!இதை எல்லோரும் வாசித்து "பின்"பற்றினால் பயன் உண்டாகும்!
வழக்கம் போல் சமுதாய நலன் பயக்கும் கவிதை தந்த கவிஞருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நலன்களையும் அருளட்டும் ஆமின்!

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

நற்பண்புப் பாதையில்
நடந்திட வைக்கும்
அற்புதக் கவிதையில்
அகமும் மகிழ்ந்தது!

sabeer.abushahruk சொன்னது…

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவுன்,

அந்த சந்திப்பு என்னில் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை.

கனவைப் போலவே இருக்கிறது அந்தச் சொற்ப நேர சந்திப்பு. உங்களைப் பார்த்த மன திருப்தி, உரையாடிய பிறகு இதுநாள்வரை ஒரு சுமையாகவே என்னை அழுத்தி வருகிறது.

மற்றுமொரு சந்திப்பு வாய்க்கும்போது நிறைய பேச வேண்டியிருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.

(3,4,9,10 தேதிகளில் ஊரில் இருப்பேன். சந்திக்க முயல்வேன்.)

sabeer.abushahruk சொன்னது…

//காதல்:

இந்த கன்னி வெடி
வெடித்தால்
காயம் பட்டு வாழ்கை
கன்னிவிடும்!
எனவே
கவனம் கொண்டு
பெண்ணியம் பேனி
கண்ணியம் காத்து - அல்லாஹ்விடம் புண்ணியம் தேடிகொள்ளவும்! //

உங்கள் கருத்துரைகளின் தமிழ் மணத்திற்கு ஒரு சோறு பதமாக மேலே!

நன்றி க்ரவ்ன்!

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய கவியன்பன்,

'நச்'சென்ற பாராட்டு 'இச்'சிட்டதுபோல் மகிழ்வளிக்கிறது.

நன்றி!

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

வ அலைக்கும் ஸலாம்

கவிவேந்தர், சபீர் அவர்கள் சொல்லுகின்ற கருத்துகளாலும், சொல்லாடல்களாலும், பல்லோரின் கவனத்தைக் கவி வனையும் ஆற்றலென்னும் காந்த சக்தியால் ஈர்க்கும் வல்லவர் ஆவார்.

Yasir சொன்னது…

மாஷா அல்லாஹ்... இக்கவியில் பயன்படுத்த பட்டிருக்கும் சொற்க்களும் அது தரும் பொருளும் அப்பப்பா வர்ணிக்க வார்த்தைகள் இல்லை....கருமேகம் சூழ்ந்து மழைக்கு முன் அடிக்கும் குளிர்ந்த காற்றை இஞ்சி டீ குடித்து கொண்டு அனுபவிக்கும் இன்பம் இக்கவிதையை படிக்கும்போது....நன்றி காக்கா

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

Great poem on the importance of dignity.
Dignity and chastity are vital for human without that human become animal.

Jazakallaah khair

B. Ahamed Ameen from Adirai.