Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சீனி சக்கரை சித்தப்பா! சீட்டிலே எழுதி நக்கப்பா! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2015 | , , , ,

தவி ஏற்ற பதினாறு மாதங்களில் இருபத்தொன்பதாவது தடவையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு . நரேந்திர மோடி, இந்த முறை இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கே போய் அவர் நாட்டுக்காகப் பணியாற்றும் பல்வேறு திட்டங்களுக்கிடையிளும் பல்வேறு உலகத்தலைவர்களை சந்திக்கும் பணிகளுக்கிடையிலும் இந்தியாவை எங்கோ எடுத்துச் செல்லும் என்று அவராலும் அவரது துதிபாடிகளாலும் சொல்லப்படும் டிஜிடல் இந்தியா என்கிற திட்டத்தையும் அறிவித்து இருக்கிறார். 

இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியிலேயே அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன என்று முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுவது வேறு விஷயம். இருந்தாலும் இந்த டிஜிடல் இந்தியா பற்றி நமது பார்வையை சற்று செலுத்துவோம். 


டிஜிடல் இந்தியா என்றால் என்ன?

இணையதள வசதிகளைப் பயன்படுத்துவதில் நாட்டின் நகரங்களை விட, கிராமங்கள் பின்தங்கியுள்ளன. இந்த நிலையை மாற்றி , குக்கிராமங்களில் வசிக்கும் மக்களும் இணைய வசதியை பயன்படுத்தும் வகையிலும், நாட்டை இணைய மயமாக்கும், டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை, கடந்தாண்டு சுதந்திர தின உரையின் போது, பிரதமர் மோடி கரகோஷங்களுக்கிடையில் அறிவித்தார். இத்திட்டத்தின் படி 2019ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராமங்களில் அகன்ற அலைவரிசை ( Broad Band ) வசதி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளை மொபைல் போனில் கொண்டு வருதல் அனைத்து அரசு சேவைகளையும் கணினி மயமாக்குதல் போன்றவையே டிஜிட்டல் இந்தியா திட்டமும். 

சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்த 2.5 லட்சம் கிராமங்களில் அகன்ற அலைவரிசை என்ற இலக்கு அமேரிக்கா சென்றதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி. இ. ஓ. சத்யா நாதெள்ளா அறிவித்த படி ஐந்து இலட்சமாக இரட்டை இலக்காக உருவெடுத்துவிட்டது. ( தி இந்து தமிழ் 28/09/2015) . 

பிரதமர் அறிவித்ததாக இருந்தாலும் திரு. சத்யா நாதெள்ளா அறிவித்ததாக இருந்தாலும் அவைகள் அறிவிப்புகள்தான் என்பதை நாம் முதலில் மனதில் நங்கூரம் போட்டு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்னரும் கூட , அதாவது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அறிவிப்புகள் வந்துவிட்டன. ஆனால் அவை பஞ்சாகப் பறந்து போன திசைகள்தான் தெரியவில்லை. 

மேக் இன் இந்தியா என்று ஒரு திட்டம் சொன்னார்; ஆனால் ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளிலிருந்து பலகோடி ரூபாய்களுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டார். மின்சாரம் இல்லாத மாநிலங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத தொழிற்சாலைகள் என்று ஆயிரம் தடைகள் இருக்கும் இந்த நாட்டில் மேக் இன் இந்தியா என்ற திட்டம் சரித்திர கால அரசர்கள் கட்டிய சத்திரங்களில் சாய்ந்து படுத்துக் கிடக்கிறது. 

தூய்மை இந்தியா என்று ஒரு திட்டம் அறிவித்தார் . அன்று ஒரு நாள் துடைப்பக்கட்டையை எடுத்துக் குப்பைகளைக் கூட்டியதோடு சரி. பிரதமர் துடைப்பத்தை எடுத்தது போதாது என்று சச்சின் தெண்டுல்கர், ஷாருக் கான் , சல்மான் கான், கமலஹாசன் போன்றவர்களையும் மார்கழிமாத பஜனை கோஷ்டி போல துடைப்பத்தை எடுக்க வைத்தார். அன்று ஒருநாள் மட்டுமே இந்தியாவில் சில பகுதிகள் சுத்தமாக இருந்தன. இன்று அந்த இடங்களில் நாய்கள் கூட குட்டி போட மறுத்து ஓடி ஒளிகின்றன. 

இதே போல் வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்ட இந்த பிரதமர் வாரம் ஒரு திட்டத்தை வாயளவில் சொல்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஜன் தன் திட்டம், முத்ரா வங்கித் திட்டம், கிருஷி சின்ஜ்சாய் யோஜனா என்று பல்வேறு திட்டங்கள். இந்தத் திட்டங்கள் எல்லாம் இதுவரை செயல்பாட்டுக்கு வந்து இருந்தால் ஒரு கணிசமான அளவுக்கு வறுமை விரண்டோடி இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் வரை திருவண்ணாமலையில் தனது இரண்டு ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்த நவீன நல்லதங்காள்களின் கதைகளுக்கு இன்னும் விடிவில்லையே.

இப்போது புதிதாக வந்திருக்கிறது இந்த டிஜிடல் இந்தியா திட்டம். இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டங்கள் மூச்சை விட்டதுபோல் மூச்சை விட்டுவிடுமென்று பல அரசியல் நோக்கர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். 

உலகத்தோடு ஒட்டல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் – என்றார் திருவள்ளுவர். வளர்ந்து வரும் உலகோடு நாமும் பலவகையிலும் வளரவேண்டும் என்று நினைப்பதிலும் திட்டமிடுவதிலும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆனால் அதை விளம்பரத்துக்காகவும் வாய் அலங்காரத்துக்காகவும் அறிவித்து விட்டு மறந்து விடுவதும் – எந்தத்திட்டத்தை அரசு அறிவித்தாலும் அப்படி அறிவிக்கப்படும் திட்டத்தைவிட அவசியமான திட்டமும் செயல்பாடும் வேறு எதுவுமே இல்லையா என்று சிந்திப்பதும் நமது கடமை. அரிசி வாங்கும் பணத்தில் பானை வாங்கவேண்டுமா என்பதே நமது கேள்வி. 

டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிவிப்பு என்றால் அதை விட அவசியமான தேவைகள் நாட்டில் இல்லையா என்பதே நமது கேள்வி. நிர்வாக இயல் படித்தவர்களுக்கு (PRIORITY) முன்னுரிமை என்றால் என்னவென்று தெரியும். நம்மிடம் இருக்கும் மூலவளங்களை ( RESOURCES) வைத்து நாட்டுக்கோ அல்லது நமது நிர்வாகத்திலுள்ள நிறுவனத்துக்கோ எந்தப் பணியைச் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதே இந்த முன்னுரிமைத் தத்துவம். பொருளாதார ஒதுக்கீட்டுத் தத்துவங்களிலும் இந்தக் கோட்பாடு கவனிக்கப்பட வேண்டியதாகும். அந்த அடிப்படையில், நமது கேள்வி இன்று இந்தியா இருக்கும் நிலையில் டிஜிடல் இந்தியா போன்ற திட்டங்கள் இங்கு அத்தனை அவசியமா? அவசரமா? 

முதலாவதாக, இந்த நாட்டின் மக்கள் தொகை 120 கோடி. இந்த 120 கோடி மக்களில் 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள் என்று அரசின் புள்ளி விபரங்களே அடிக்கோடிட்டு ஆர்ப்பரித்து சொல்கின்றன. அதாவது, நாட்டில் கால்வாசிப் பேர்களுக்கு உண்ண உணவில்லை ; உடுக்க உடை இல்லை; படுக்க – இருக்க இடம் இல்லை;. அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் ஆடிக்காற்றில் இலவம் பஞ்சு பறப்பது போல் பறக்கிறார்கள். வயிற்றுக்குச் சோறிட வக்குவகை இல்லாத அரசு- வறுமைக் கோட்டின் ஆதிக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கத் திட்டங்களைத் தீட்டாத அரசு அகன்ற அலைவரிசையை மக்களுக்கு வழங்குவதில் அர்த்தம் இருக்கிறதா என்று அறிவாய்ந்தோர் சிந்திக்க வேண்டும். கணினிப் பயிற்சிகளின் வளர்ச்சி கஞ்சிக்கு வழி வகுத்துவிடுமா?

இரண்டாவதாக, குக்கிராமங்களில் வசிக்கும் விவசாயிக்கும் இணைய தள வசதி என்று கூறுகிறார். சிரிப்பு அடக்க இயலவில்லை. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு விவசாயத்தின் ஆதாரமான நீர் கிடைக்கவில்லை. மாநிலத்துக்கு மாநிலம் நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வம்புகள்; வழக்குகள். இன்று 29/09/2015 அன்று காவிரி டெல்டாப் பகுதிகளில் இரயில், பஸ் மறியல். காரணம், நடவு முடிந்த பயிருக்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரைத் தரவில்லை; மத்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து காவிரி நீரைப் பெற்றுத்தரவில்லை என்பதே. சம்பாப் பயிருக்கு தண்ணீர்தான் அவசரத் தேவை . Google , Yahoo இணைப்புகள் பயிரை வளர்த்துவிடுமா?. 

நதி நீர் இணைப்புத் திட்டங்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே பிரச்சார மேடைகளில் பேசப்படும் தலைப்பாகிவிட்டன. ஆறுகளும் குளங்களும் ஏரிகளும் ஒன்று ஆக்கிரமிப்புக்கு ஆளாகிவிட்டன அல்லது தூர்வாரப்படாமல் புதர்மண்டிப் போய்விட்டன. மழை பொய்த்துவிடுகிறது; பெய்யும் மழை நீரை சேமிக்க திட்டமில்லாமல் கடலில் ஓடிக் கலக்கின்றன. நீர் மேலாண்மைத்திட்டங்கள் இல்லை; நீர் மாசுபடுவதைத தடுக்கும் திட்டங்கள் இல்லை; நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. நீர்நிலைகளின் அருகில் போய் லேப் டாப்பை வைத்து மைரோ சாப்ட் விண்டோவை இயங்கவிட்டால் எல்லா இன்றியமையாத தேவைகளும் நிறைவேறிவிடுமா? 

நெஞ்சில் உரமின்றி நித்தம் தடுமாறும் விவசாயிகளுக்கு பயிர்களுக்கு இடுவதற்கான உரமும் பற்றாக்குறையாக இருக்கிறது. உரத்துக்கான மான்யம் நிறுத்தப்பட்டு விலை உயர்ந்துவிட்டது; 

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கான நகைக்கடனுக்கான வட்டி 0.33 பைசாவாக இருந்தது. அந்த வட்டிவீதத்தை ரூ 1.30 பைசாவாக ஆக்கி, விவசாயிகளின் நிதிநிலைகளின் மீது சுனாமியை ஏவிவிட்டுள்ளது இந்த வளர்ச்சியின் நாயகனின் அரசு. இதன் காரணமாக விவசாயிகள் வங்கிக் கடன்களை திருப்பி செலுத்த இயலாமல் அவர்களின் நிலங்கள் மட்டுமல்ல காளை மாடுகள் கூட ஜப்தி செய்யப்படுகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்கிற கத்தி அவர்களின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டே இருக்கிறது. பயிரிடும் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு பயிரிடும் நிலங்களின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

நாட்டில் 58% தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பியே இருக்கும் நிலையில் அந்தத் தொழிலுக்குத் தேவையான ஆக்கமில்லாமல் விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முப்போகம் விளைந்த பூமிகள் இன்று தரிசாகப் போடப்பட்டுக் கிடப்பதுதான் நாட்டை ஆண்டவர்கள் இந்த நாட்டுக்குத் தந்த பரிசாக இருக்கிறது. 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் பேசும்போது மகாராஷ்ட்ராவில் உள்ள விவசாயி என்னுடன் Whatts App – ல் பேசலாம் என்று கூறி இருக்கிறார். இந்தக் கூற்று நம்மை வயிற்று வலி வந்தாலும் பரவாஇல்லை என்று விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்தியாவிலேயே விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாநிலம்தானே மகாராஷ்டிரா. விஷம் வாங்கக்கூட காசில்லாமல் கிணற்றில் விழும் விவசாயி இடம் போய் விண்டோ – 7 , 10 என்று கதை அளக்க இயலுமா? 

விவசாயிகளை இப்படி டிஜிட்டல் கிச்சு கிச்சு மூட்டி தொல்லை செய்ய பிரதமர் அமெரிக்காவிலிருந்து விரும்ப வேண்டுமா? பாவம். மகராஷ்ட்ர விவசாயிகள். இப்போதுதான் தாங்கள் பயிரிட்ட வெங்காயப் பயிர்கள் வெள்ளத்தால் அழுகிப் போன சோகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அண்மையில் வெங்காய விலை வானளவு உயர்ந்தது என்பது பிரதமருக்குத் தெரியாதா? 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் அதற்கு முன் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடம் என்கிற லட்சியம் நிறைவேறி இருக்கிறதா அல்லது ஏட்டளவில் இருக்கிறதா என்று பாருங்கள் பிரதமரே! ஆனா ஆவன்னா படிக்கவே வக்கற்ற மக்களுக்கு அன்ராயிடும் ஆப்பிளும் தேவை இல்லை பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் மருந்து மாத்திரைதான் இப்போது மக்களின் தேவை . காகிதத்தில் பொதிக்கப்பட்ட டேப்லேட்கள்தான் மக்களின் நோய் தீர்க்கத் தேவையே தவிர இணைய தள டேப்லேட் அல்ல. 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான்.ஆனால் அதற்குமுன் மீத்தேன் வாயுத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டோம் என்ற செய்தியைத் தாருங்கள் பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை முழுமையாக திரும்பப் பெற்றோம் என்றும் மீண்டும் அந்த சட்டம் அறிமுகபடுத்தப்படாது என்றும் அறிவிப்புச் செய்யுங்கள் பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் அதற்குமுன் ரேஷன் கடைகளில் அரிசி கிடைக்கிறதா மண்ணெண்ணெய் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள் பிரதமரே! 

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். அதன் மூலம் நாட்டின் உள்ளே நுழையக்காத்து இருக்கும் அந்நிய முதலீடு உண்மையிலேயே அந்நியர் முதலீடுதானா என்று பாருங்கள் பிரதமரே! காரணம் இதுவரை வந்த முதலீட்டில் 35% முதலீடு மொரிஷியஸ் நாட்டிலிருந்து வந்திருக்கிறது என்று உங்கள் அரசின் நிதி அமைச்சகம் தகவல் தருகிறது. மொரிசியஸ் நாட்டு மக்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யக் கூடிய அளவு வளம் படைத்தவர்களா என்பதை மனதில் கைவைத்து நாட்டுக்குச் சொல்லுங்கள் பிரதமரே! டுபாக்கூர் குஜராத்திகளின் கம்பெனிகள் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்கப் பயன்படும் ஒரு கருவிதானே மொரிசியஸ் நாடு? கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று தேர்தலுக்கு முன் நீங்கள் அறிவித்தது இதுதானா பிரதமரே!

டிஜிட்டல் இந்தியாத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைதான். ஆனால் அதற்கு முன் நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த வளர்ச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் பிரதமரே! வறுமையைப் போக்குங்கள் பிரதமரே! 

ஒருவேளை , வயிற்றுப் பசிக்கு சோறிடத் தகுதி இல்லாத – குடிக்க தண்ணீர் தரத் தகுதி இல்லாத- அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தகுதி இல்லாத விவசாயிகளுக்கு வாழ வழி ஏற்படுத்தித்தர தகுதி இல்லாத டிஜிட்டல் இந்தியாத் திட்டம்தான் முக்கியத் தேவை என்று பிரதமர் கருதுவாரானால் அடுத்த தேர்தலுக்குப் பிறகு தான் ஒற்றையாய் வசிப்பதற்கு குஜராத்தில் ஆள் அரவமற்ற ஒரு கிராமத்தில் இப்போதே ஒரு வீட்டைப் பார்த்து வைத்துக் கொள்ளட்டும். அத்துடன் இதுவரை அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத அலங்காரத் திட்டங்களை ஒரு சீட்டில் வரிசைப்படுத்தி எழுதி நாட்டு மக்கள் அனைவரும் நக்கிக் கொள்ளட்டும்.

இப்ராஹீம் அன்சாரி

24 Responses So Far:

Ebrahim Ansari said...

தலைப்பு உபயம் தளபதி மு. க. ஸ்டாலின்.

sheikdawoodmohamedfarook said...

நாட்டின் அரசியல்போக்கையும் மோடியின் டிஜிட்டால் குறளிவித்தை ,மகுடிவித்தை ஏமாற்று தந்திரத்தையும்படம்பிடித்துக்காட்டும் விளக்கமானஆக்கம். ஆரம்பபள்ளிமாணவனும்,கடைநிலைகிராம வாசியும் படித்து எளிதில் நாட்டின்நிலையை அறிந்துகொள்ளும் விதம்எழுதிய பாணி வரவேற்க்க தக்கது. இதுபோன்றஆக்கங்கள் தொடர்ந்தால்நல்லது.

sheikdawoodmohamedfarook said...

//தனது இரண்டுஆண்குசந்தைகளையும் கிணற்றில் வீசிதானும் குதித்த நவீன நல்லதங்காள்// எங்கள் ஆட்சியில் ''விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை! நிலத்தடிதண்ணீரும் இல்லை!'' என்று பொய்பிரச்சாரம் செய்கிறீர்களே? . இரண்டுபிள்ளையும்தாயும்விழுந்து செத்துமிதக்கும் அளவுக்கு கிணற்றில் தண்ணீர் நிறைந்து இருப்பது எங்கள் ஆட்சியில் தானே ? இதுஎங்கள்சாதனைஇல்லையா?"என்று கேட்க்கிறார் ஒருகாவிகட்சிகாரர்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

நல்ல அரசியல் விமர்சகரின் மேடைப் பேச்சைக் கேட்ட திருப்தியும் கூடவே பிரதமர் மீதான வெறுப்பும் ஏற்பட்டது, ஒரே மூச்சில் உங்கள் கட்டுரையை வாசித்து முடித்தபோது.

எல்லாவற்றையும் விளக்கிவிட்டு 'தேவைதான் தேவைதான்' என்று சாட்டையால் அடித்தது சினிமா க்ளைமாக்ஸுக்கு ஒப்பாக இருந்தது.

நிறைவாக நக்கிக்கொள்ளச் சொன்னதில் நையாண்டியைவிட சமூக அக்கறையும், தவற்றைக் கண்டு பொங்கி எழும் போக்கும் தங்கள் மீதான மரியாதையைக் கூட்டுகிறது.

கைதட்டவேண்டும்போல் இருக்கிறது!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

இப்டி இருக்குமோ?

எல்லாத்துக்கும் வீதிக்கு வந்து போராட்றாய்ங்களே... டிஜிட்டல் ஆக்கிட்டா வீட்லேயே உத்காட்ர்ந்து நெட்டில் லைக்கோ எதிர்ப்போ காட்டிட்டு அடங்கிடுவாய்ங்க...

அதனால அல்லாத்துக்கும் 4ஜி பார்ஸே...ல்?

sabeer.abushahruk said...

வளர்ச்சிப் பாதையில் மோடி அரசு!

பாரத மாதாவுக்கொரு 'ஜே' சொல்லி
பார்ப்பனப் புத்தகம்
பகவத் கீதையை
தேசிய நூலாக்கு.
மூன்று சதவிகித
ஆரியக் கொள்கைகளை
எண்பது சதவிகித
இந்துக் கொள்கையென
புரட்டுக் கணக்குப் போடு.

தேசியக் கொடியை விட்டுவைக்காதே
பட்டை சாயலில்
மட்டும் போதாது
அசோகச் சக்கரத்தை
அகற்றி விட்டு
நடுவிலொரு
நாமத்தைப் போட்டு
நாட்டின் மதிப்பைக் கூட்டு.

தேசியப் பறவையின்
இறக்கையில்
வேல் ஒன்றைக் குத்தி
வல்லரசு இந்தியா என
வாய்ப் பந்தல் போடு.

தனிப் பெரும்பானமை திமிரோடு
தயிர்சாதத்தை
தேசிய உணவாக்கி
குருதிச் சூட்டைக்
குறைக்க வைத்து
அடிமைத்தனத்தை அதிகரி.

உள்ளத்தில் அழுக்கான
கருக்களை அழிக்காமல்
தெருக்களைச் சுத்தம் செய்ய
பொதுசனத்திடம்
கொடு ஒரு துடைப்பம்;
பாரத் ரத்னா
பட்டுக்குஞ்சத்தைக்
கட்சிக்காரனுக்குக் கட்டு.

ஏசுவின் இடத்தில்
வாஜ்பேயை வை;
கிறிஸ்துமஸ் தினத்தில்
வாஜ்பேயைக் கொண்டாடி
மதச்சார்பின்மையைப்
பறைசாற்று.

தேசத்தந்தையைப்
படுகொலை செய்தவனை
தேசபக்தனாக அறிவிப்புச் செய்.

காந்தியைக் கொன்றவனுக்குக்
கோவில் கட்ட வேண்டுமன்றோ?
மற்றுமொரு மசூதிக்குள்
கோட்ஸே சிலையை வை.

மேல்சபையிலும் கீழ்சபையிலும்
உன்னாட்களே நிரம்பி வழிய
ஓட்டெடுப்பு என்றொரு
கண்துடைப்பு செய்து
ஒப்புதல் ஒப்பேற்றி
கரசேவைகளை
தேசத் தொண்டாக
சட்டத்திருத்தம் செய்.

'இந்து என்பதொரு மதமல்ல
இந்துத்துவா மதக்கொள்கையல்ல'
வாய்ஜாலம் செய்
'வீடு திரும்புதல்'
என்ற பித்தலாட்டத்தில்
நாடு முழுவதும்
கூட்டம் கூட்டமாக
மதமாற்றம் செய்.

மாற்றி எடுத்த கையோடு
சாதிச்சான்றிதழ் ஒன்று
சரிகட்டி - உன்
சீழ்ப்பிடித்த
சித்தாந்தத்தைக் கொண்டு
செருப்பால் அடி.

சர்வசகல நேரமும்
ஏதாவது ஒரு ரூபத்தில்
எல்லா ஊடகங்களிலும்
விவாதங்கள் நடத்து.

மாறுபட்ட வேடங்களில்
உன்னாட்களையே நடிக்கவிட்டு
கேளிக்கைகளில் மயங்கும்
கோமாளி மக்களை
கதாகாலாட்சேபம் செய்தே
கட்டுக்குள் வை.

கங்கையைத் தூய்மையாக்க
கோடிகளை ஒதுக்கு
கணக்குவழக்கு கேட்டால்
கேடிகளால் அடக்கு.
காசு ஒதுக்கியும்
பேசி மயக்கியும்
கைப்பற்றிய பதவி...

மக்கள் சுனாமி ஒன்று
மறுமலர்ச்சி காணும்வரை
கானலை நீர் எனப் பசப்பு;
வளர்ச்சிப்பாதையில்
மேற்கொண்டு அறிவிப்புகள் செய்,
இன்னும் உண்டு
ஏராள நாட்கள்
உன் ஆட்சி அதிகாரத்தில்!

- சபீர்

Unknown said...

இபுறாஹீம் அன்சாரி காக்கா

பம்மாத்து பேர்வழியின் முகமூடியை இன்னொரு முறை கிழித்துள்ளீர்கள், அந்த 110 விதியை மட்டும் இன்னும் விட்டு வைத்திருப்பது ஏனோ? இரண்டு அறிவிப்புகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிடமே!

ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, கொஞ்சம் காலம் ரெஸ்ட் எடுத்து திரும்பினால் சாட்டை வேகமாக சுழலும் என்பது மீண்டும் நிதர்சனமாகியுள்ளது. (நீங்க ராகுலுக்கு இன்னும் மேலே...)

Unknown said...

Assalamu Alaikkum,
High on will
But no skill

Ebrahim Ansari said...

தம்பி சபீர் , தம்பி அஹமது அமீன் வ அலைக்குமுஸ் சலாம்.

அதிரை நிருபரின் ஆஸ்தானக் கவியின் கவிதை கட்டுரைக்கு வலு சேர்க்கிறது.

தம்பி அதிரை அமீன். ஒரு சமூக அக்கரையுள்ள உள்ளத்துக்குச் சொந்தக்காரர். நீங்கள் ஒருமுறை சந்தித்த போது கேட்டீர்கள் " எங்கே வரத்துக் குறைவாக இருக்கிறதே " என்று. இதோ வந்துவிட்டேன். நீங்கள் கேட்டபடி 110 - ம் அலசப்படும் இன்ஷா அல்லாஹ்.

மரியாதைக்குரிய மச்சான் அவர்களுக்கும் உங்களது தொடர்ந்த ஆர்வமூட்டலுக்கும் நன்றி.

500 ரயில் நிலையங்களில் WIFI வசதி என்பதும் இந்த டிஜிட்டல் இந்தியாத் திட்டத்தின் ஒரு அம்சம். பிஜேபி ஆட்சியில் ரயில்கள் தடம் புரள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது. போதுமான ரயில்கள் இல்லாமல்- அவற்றில் இடம் கிடைக்காமல் மக்கள் படும் அவதியை முதலில் போக்குங்கள் என்றே நாம் கோரிக்கை வைக்க முடியும்.

எங்கள் கம்பன் எக்ஸ்பிரசை கடலில் வீசிவிட்டு, எங்களின் வாழ்வாதரத்துக்கு வழிவகுக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு எங்களது ஊரின் ரயில் பாதைகளை விதவைகளாக்கிவிட்டு எங்களுக்கு WIFI எதற்கு? மோடி சொல்லும் அகன்ற அலைவரிசை எல்லாம் ஏற்கனவே எங்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போது அகலவேண்டியது பிஜேபின் மனம்தான்.

அதுசரி - முகநூலில் இருந்து இப்படி ஒரு குரல் காதில் விழுகிறது.

500 ரயில் நிலையங்களுக்கு WIFI வசதி தருவது இருக்கட்டும்

WHAT ABOUT YOUR ONE AND ONLY WIFE?

Ebrahim Ansari said...

தம்பி அபு இப்ராஹீம்

அலைபேசி அழைப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி அதிரை அமீன் அவர்களின் அன்புக்கட்டளைக்கிணங்க 110 விதிகள் பற்றிய விளக்கமும் விமர்சனம் சீனி சக்கரை சித்தப்பா சீட்டிலே எழுதி நக்கப்பா – எபிசோட் எண் இரண்டு என்ற தலைப்பில் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

Shameed said...

(டிஜிட்) டல்இந்தியா

Shameed said...

இனி எல்லாபயலும் ரயில்வே ஸ்டேஷன சுத்தி நின்னுகிட்டு மொபைலை நோண்டிக்கிட்டு ஒரு வேலையும் பார்க்கமாட்டன் அப்புறம் பாருங்க (டிஜி)டல்இந்தியாவை

sheikdawoodmohamedfarook said...

//சீனிசக்கரை சித்தப்பா சீட்டில்எழுதி நக்கப்பா//வாராவாராம்வரும்//சீனிபோல்இனிக்கும்செய்தி. இனி A.N.னில் சனிதோரும் அரசியல்காலில்சலங்கை கட்டிகாலோடுகால் பின்ன ஆடும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//அத்துடன் இதுவரை அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத அலங்காரத் திட்டங்களை ஒரு சீட்டில் வரிசைப்படுத்தி எழுதி நாட்டு மக்கள் அனைவரும் நக்கிக் கொள்ளட்டும்.//
wonderful

Unknown said...

மோடிக்கு நாக்கு என்ற ஒன்று இருந்தால், பிடுங்கிக்கொள்ளட்டும்!

அட, இருக்குதாமா?!

அப்ப சரி, பிடுங்கட்டும். அவரால் முடியாவிட்டால், உதவி செய்ய யாராவது உண்டா?

அப்பத்தானே, குஜராத்தியோ, கடிபோலி இந்தியோ வாய் கிழிய வராது, வாக்குறுதிகளாக.

அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய்வருவதுதான் 'பிரதமர்' என்ற வார்த்தைக்கு அர்த்தமென்றால், Bermuda Triangle என்று ஓர் இடமுண்டு. அங்கு பிரதமரின் அடுத்த பயணம் அமையட்டும். என்ன நான் சொல்றது? சரிதானே?

Ebrahim Ansari said...

காக்கா ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாக்கு இருக்குதாம். ஆனால் அதைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு சூடு சொரணை மானம் இல்லையாம்.

Ebrahim Ansari said...

தம்பி இப்னு அ.ர

ஜசக்கல்லாஹ்.

Your One Stop Pre-Post Press Printing Solutions Destination said...

நச்சுண்டு அரஞ்சாப்ல கட்டுரை...இந்த நக்கி பசங்களுக்கு எப்ப முடிவு காலம் வரப்போகுதோ...நல்ல அலசல் மாமா

N. Fath huddeen said...

//Bermuda Triangle என்று ஓர் இடமுண்டு. அங்கு பிரதமரின் அடுத்த பயணம் அமையட்டும்.//
அங்கே அடிக்கடி கப்பல்களும் விமானங்களும் காணாமல் போவுது!
இவர்ர விமானம் காணாமல் போனால் யார் பொறுப்பு?

Ebrahim Ansari said...

//இவர்ர விமானம் காணாமல் போனால் யார் பொறுப்பு?//

போகட்டுமே புள்ளையா குட்டியா பொண்டாட்டியா?

Your one stop................... மாமா என்று அழைத்திருக்கிறீர்கள். யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் நன்றி.

Unknown said...

'ஒன்வே ட்ரிப்' - அதனால்தான் Bermuda Triangle.

Yasir said...

//Your one stop................... மாமா என்று அழைத்திருக்கிறீர்கள். யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் நன்றி./// நானேதான் மாமா ;)

Ebrahim Ansari said...

அன்பின் மருமகனார் யாசிர்

நினைத்தேன் வந்தீர்கள் நூறு வயது கேட்டேன் தந்தீர்கள் ஆசை மனது.

உங்களைத்தான் நான் நினைத்தேன். இருந்தாலும் ஒரு கன்பார்ம். நலம்தானே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு