Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேசியத் தினம் 45 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2016 | , , , , , , ,


ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!

இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்

இந்த ஒற்றுமை
நாற்பத்திஐந்து ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்

தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்

ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!

அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது

உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!

அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!

சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு

எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு

ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்

வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது

இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்

நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்

நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1

....ஈஷி பிலாதி... எமராத்தி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

26 Responses So Far:

Ebrahim Ansari said...

//படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது//

===============================================================

படித்தவருக்கும் கூட பெயருக்குப் பின்னால் எத்தனை பட்டம் இருந்தாலும் இந்த துபாய் பட்டத்தையும் இணைத்துக் கொண்டாலே

இருக்க இடம் கிடைத்தது
முடிக்கப் பெண் கிடைத்தது
சொந்தங்கள் சுற்றி வந்தது
சோற்றில் ஊற்றிக் கொள்ள நெய் கிடைத்தது
மார்கெட்டில் மீன் கிடைத்தது
சரளமாக சலாம் கிடைத்தது
சலாத்துக்கு பதிலும் கிடைத்தது
அழைக்குமுன்பே ஆட்டோ கிடைத்தது
ரியல் எஸ்டேட் புரோக்கரின் நட்பு கிடைத்தது
கண்டதும் பலருக்கு பிடரி அரிப்பெடுத்தது
முஹல்லா நிர்வாகம் வீடு தேடி வந்தது

நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1

....ஈஷி பிலாதி... எமராத்தி!

அதிரை.மெய்சா said...

அனைவரையும்
அரவணைத்து
அகம் மகிழ
வாழ்வளித்துக் கொண்டிருக்கும்
அமீரகத்தின் சிறப்பினை
அழகாக உனது
அடுக்குமொழி கவிவரியில்
எடுத்துரைத்துள்ளாய்
அருமை வாழ்த்துக்கள்..

//ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி//

ஆம் . நூறு சதவிகிதம் உண்மைதான் நண்பா .

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

அமீரகத்துக்குவிசாகிடைக்குமா?

ஆமினா said...

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை

//

அருமை

ZAKIR HUSSAIN said...

70 யின் தொடக்கத்தில் எனக்கு அறிமுகமான வார்த்தை "துபாய்'....இது ஏதொ பாய்மார்களுக்கு மட்டும் வெளிச்சம் காண்பித்த டார்ச் லை அல்ல என்று சொல்லி மாலவே பல வருடம் கடந்தது.

நான் ஸ்கூல் படிக்கும் போது முதல் பேட்ச்சில் துபாய் போய் வந்த எனது அண்ணன் , யாசிரின் வாப்பா போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது துபாயின் கட்டிடங்களும் , அவர்கள் அந்த பாலைவனத்தில் பட்ட கஷ்டங்களும் மட்டும் தெரிந்தது.

பிறகு சில அல்லக்கைகளுக்கு விசா கிடைத்தவுடன் 'ரோட்டில் சோறு சாப்பிடலாம், தலை சீவி முகத்துக்கு பவுடர் அடிக்கலாம் ..." போன்ற பொன்மொழிகள் உதிர்ந்தது.

கல்வி இல்லாமல் , வாழ்க்கையையும் சரியாக புரியாதவர்கள் துபாய் போய் வந்த பிறகு தெருவில் செய்த அலம்பல்கள் ஒர் 5 எபிசோட் எழுதலாம். இருப்பினும் பொருளாதார ரீதியாக ஊரில் மாற்றம் ஏற்பட துபாய் உதவியது.

crown said...

அஸ்ஸலாமுலைக்கும்.தூபாய் இந்த பாயில் படுத்துறங்கிய அனுபவம் இல்லையென்றாலும் எனக்குத்தெரிந்து பல குடும்பத்தின் நிம்மதி தூக்கத்து இந்த பாய் பெரிதும் உதவியது! பலர் வருமை நோய் நீக்கிய துபாய் எனும் மருந்து போற்றத்தக்கது!

crown said...

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!
-------------------------------------------------
மந்தியும்,தொந்தியும் கூட தந்தது!

crown said...

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு
-----------------------------------------------------
"கல்வெட்டில் பொறிக்கவேண்டிய உண்மை!

crown said...

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது
--------------------------------------------------
இந்த பை' பணம் தந்த பை! வைப்பை(wifi)"வரும் காலம் முதலே ஒய்ப்பை(wife) கூப்பிட்டு நம்முடன் வைக்க வைத்த துபை! ஒரு நிதிவைப்பு வைத்து கொள்ள வைத்த துபை!

crown said...

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1
---------------------------------------------------------
பண்பட்ட மனிதனாக வாழ்த்துவதுதான் நம் சிறந்த பண்பாடு!

N. Fath huddeen said...

//அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது//

//அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!//

நம்ம ஊர் மக்களுக்கு மிகவும் பொருந்தும் வரிகள்.

N. Fath huddeen said...

//தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்//

நின்றது யார்?
அவர்கள் என்றால் இடிக்கிறதே!

N. Fath huddeen said...

//நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.//

ஜோ! நீங்கள் முதல் முறை விசிட்டில் சென்று வந்த போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது: எந்த பக்கம் திரும்பினாலும் "அவூது பில்லாஹ்" சொல்ல வேண்டும் என்று சொன்னீர்கள்.

காரணம் சவுதியில் பல வருடங்கள் கழித்து விட்டு துபாய் சென்றதால்.

N. Fath huddeen said...

எது எப்படி இருப்பினும் நாம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
ஏனெனில், நம்மில் பலரின் வாழ்க்கை, வசதி, தரம் எல்லாம் உயர்ந்திருக்கு!
அல்ஹம்துலில்லாஹ்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜோ,

//நின்றது யார்?
அவர்கள் என்றால் இடிக்கிறதே!//

தோளோடு தோள் சேர நிற்பது ஜமாத் தொழுகைக்கான ஒழுங்கு, ஒற்றுமை!

அதே ஒழுங்கை, ஒற்றுமையை தொழுகைக்குப் பிறகும் அமீரகத்தின் ஏழு ஷேக்குகளும் கடைபிடிப்பதால் இந்த ஒருங்கிணைந்த உயர்வு சாத்தியப்படுகிறது என்பது என் கணிப்பு.

நின்றவர்கள்: ஏழு ஷேக்குகள்.

N. Fath huddeen said...

//என் கணிப்பு.//

இல்லை, ஜோ!

துபாய்-ஐ பொறுத்த வரை இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது: இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அடகு வைத்துவிட்டுதான் நாட்டின் பெரு வளர்ச்சி காணப்பட்டது என்று!

தொழுகையில் தோளோடு தோள் நின்றவர்கள் ஷெய்குகள் என்றால் நைட் கிளப்கள், கேளிக்கை விடுதிகள், மதுக்கடை, பார்கள் எவ்வாறு திறந்து விடப்பட்டது?

N. Fath huddeen said...

தொழுகையில் தோளோடு தோள் நின்றவர்கள் ஷெய்குகள் என்றால்

اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ

...நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்...(29:45)

என்ற விபரம் தெரியாதா?

N. Fath huddeen said...

ஜோ! தவறு இருப்பின் மன்னித்து எனைத் திருத்துக!

N. Fath huddeen said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஜோ,

அநாச்சாரங்களை அளவின்றி கட்டவிழ்த்துவிட்டும் சட்டப்படி அனுமதித்தும் ஆட்சி செய்யும் நாடுகள் துபையைப் போன்றதொரு பெருவளர்ச்சி காணவில்லை என்பதைத் தாங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நான் தோளோடு தோள் நின்று மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதாகச் சொல்லவில்லை; ஒற்றுமையிலும் அரசியல் ஒழுங்கிலும் சிறந்து விளங்குவதால் வெற்றி சாத்தியப்பட்டது என்றும் அதோடு மார்க்கத்திலும் பிடிப்பு இருந்தால் மேலும் மேலும் சிறக்கும் என்றே சொல்லியுள்ளேன்.

அமீரகத்தில் மார்க்கம் சரியாகப்பேணப்படுவதாய் நான் சொல்லவேயில்லை. அது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு!

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

sabeer.abushahruk said...

இப்றாகீம் அன்சாரி காக்கா அவர்கள், க்ரவ்ன், ஃபாரூக் மாமா, ஜாகிர், மெய்சா, சகோ ஆமீனா அவர்கள் மற்றும் ஜோ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாசிப்புக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

(தமிழக மழையில் கலங்கிப் போயிருப்பதால் விரிவான ஏற்புரைக்கு நேரமில்லை)

Ebrahim Ansari said...

ஆம் ! இன்றைய சென்னை மக்கள் சொந்த ஊரில் - சொந்தவீட்டில் அகதிகளாகிப் போனார்கள்.

அப்துல்மாலிக் said...

நம் குடும்பம், ஊர் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் முன்னர் பினாங், சிலோன்.. இப்போது வளைகுடா. ஆங்கில நாடுகளுக்கு சென்று உழைத்தவர்கள் கூட திரும்ப சம்பாதிப்பது இங்கேதான்...

ஈஷி பிலாதி எமராத்தி...

sheikdawoodmohamedfarook said...

நல்ல,நல்ல செய்திகளை தந்தஅதிரை நிருபர் ஏன்இப்படி கோமா நிலைக்கு சென்றுவிட்டது?

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு