நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 12 7

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 18, 2013 | , ,


கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க.

இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. 

ஆகவே பலர் கண்களுக்கு மருந்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால்,  சிலருக்கு கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளைவிடாமல், ஒருசில இயற்கை முறைகளையும் பின்பற்றலாம். 

• கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்து விடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.  

• நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.

• கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.  

• கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.

தலைவலி

இன்று சாதாரணமாக ஒரு பிரச்சனை என்றால் கூட பெரிய தலைவலியாய் இருக்கின்றது என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம், ஆக தலைவலி என்றாலே பிரச்சனை என்பது தெளிவாகிறது. சாதாரண மக்கள் கூட அடிக்கடி தலைவலி வருகிறது என்றால் கண் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு தலைவலி கண்ணோடு தொடர்புபடுத்தி பார்க்கும் அளவிற்கு பொதுமக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது என்றால் , அது முற்றிலும் உண்மையே.

உடல் உறுப்புக்களை இயங்க செய்யும் மூளையின் இருப்பிடம் தலை, அதிலும் கண், காது மூக்கு, வாய் , பல் ஆகியன மூளையின் அருகில் இருப்பதாலும் இவற்றுள் கண் நுட்பமான உறுப்பாக இருப்பதால் அதில் நோய் ஏற்பட்டாலும் கண் நரம்புகளுக்கு கண் தசைகளுக்கும் சோர்வு ஏற்பட்டாலும் தலைவலி ஏற்படும். சிலருக்கு, படிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும் தலைவலிப்பதாகக் கூறுவர், இதற்குண்டான காரணம் அறியாமலேயே தானாக மருந்து கடைகளில் ‘வலி நிவாரணி’ மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு பின்னாளில் பல்வேறு எதிர் விளைவுகளுக்கு ஆட்பட்டு துயரப்படுவோரும் உண்டு. 

கண் மருத்துவரிடம் சென்றால் கண்களை முழுமையாக பரிசோதித்து உகந்த கண்ணாடி போட்டுக் கொள்ள அறிவுறுத்துவார், உரிய கண்ணாடி அணிய ஆரம்பத்தில் சில நாட்களிலேயே ‘தலைவலி’க்கு விடை கிடைத்து விடும். அடிக்கடி தலைவலி வருவோரின் பார்வை நரம்பு, மூளை, நோயினால் தாக்கப்பட்டிருகின்றதா என்பதைக் கண்ணின் உட்பகுதியில் பரிசோதிக்கும் கருவியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கண்ணைத் தொடர்பு படுத்தும் மூளை நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அவர்களை கண் மருத்துவர்கள் நரம்பு மருத்துவத்திற்கு அனுப்புவார்கள் இங்கு எடுக்கப்படும் X-RAY, MRI SCAN, CT SCAN ,ஆகிய பரிசோதனைகள் மூலம் வியாதியை கண்டறிய முடியும் , இதனை அறுவை மருத்துவம் மூலம் மூளையிலுள்ள கட்டி, இரத்த கறை போன்றவற்றை அகற்றி விடுவார்கள். அதனால் கண் பார்வையை இழக்காமல் கண்களைப் பாதுகாக்கலாம், தலைவலியும் நீங்கிவிடும். 

ஒற்றைத்தலைவலி என்பது சிலருக்கு அடிக்கடி வரும் , அவ்வாறு வரும்போதெல்லாம் அவர்கள் மரணவேதனையுடன் அவஸ்தைப்படுவதை பார்க்கலாம். இதற்கு காரணம் கண் நரம்பில் ஏற்படும் கோளாறே காரணம் அளவுக்கு மீறி வேலை (பாரப்பது, எழுதுவது, படிப்பது) இவைகளை இதுபோன்ற தலைவலி வருபவர்கள் கண்மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்ல பலனளிக்கும் 

அச்சம் , அருவருப்பு ஆகிய காட்சிகளைப் பார்ப்பதும் ஒயாத அலைச்சல், மனக்கவலை (TENSION), ஆகியவைகளிலும் சிலருக்கு தலைவலி, கண் சிவப்பாக மாறுதல், பார்வை மங்கலாதல், ஆகியவைகள் ஏற்படலாம் , இது போன்ற சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு சிலருக்கு உணவு மாற்றம் , ஒவ்வாமை போன்றவைகளாலும் தலைவலி ஏற்படும், சிலருக்கு மலச்சிக்கல் காரணமாகவும் தலைவலி ஏற்படும், பல்வலி, இரத்த கொதிப்பு உள்ளவர்கட்கும் சில வேளைகளில் தலைவலி ஏற்படும். தலைவலி என்பது எந்தச் சூழலில் ஏற்பட்டாலும் அதனால் கண்பார்வை நரம்புகள் பாதிக்ககூடும். எனவே அடிக்கடி தலைவலியால் பாதிக்கப் படுபவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனையும், கண்ணாடி அணிய வேண்டியதிருப்பின் கண்ணாடியும் அணிவதன் மூலம் தலைவலியில் இருந்து பூர்ண விடுதலை பெறுவதுடன் கண்பார்வை பாதிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.

கண்கட்டி

குழந்தைகளுக்கு கண் இமைகளின் உட்புறத்தில் கொப்புளம், சிறுகட்டிகள் போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும்.சாதாரனமாக இந்த மாதிரிப் பிரச்சனைகள் சத்துக் குறைவு காரணமாக ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் இதுபோன்ற குறைபாடுகள் காச நோய்க்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். ஆகையால் இம்மாதிரிப் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது சாதாரண கட்டிதானே என்று இருந்து விடாமல் கண் மருத்துவரிடம் பரிசோதித்து காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.அடிக்கடி கண்கட்டி (அ) கண் இமைகளில் கொப்புளம் ஏற்படும் குந்தைகள் இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்கள் பழரசம் , மீன் எண்ணெய் போன்றவைகளை முடிந்த வரை பயன்படுத்த வேண்டும்.சில குழந்தைகளுக்கு “பூச்சி வெட்டு” கண்களில் ஏற்படும் இதனை மக்கள் புழுவெட்டு என்றழைப்பர். இக்குறைபாடுள்ளவர்களின் கண்களில் முடி உதிர்வுகளும், உதிர்ந்த இடத்தில் புழுக்களும் தோன்றக்கூடும்.அதிகமாக காணப்படுகினற இவர்களுக்கு இமைகளின் ரோமங்கள் உதிர்ந்தார் போல் காட்சியளிக்கும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் தொடரில் கண்நீர் அழுத்த நோய் பற்றியும் கண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய் பற்றியும் பார்க்க பின் தொடரலாம்
(தொடரும்)
அதிரைமன்சூர்

7 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

பளிச்சென்ற ஆலோசனைகள், கண்களைக் கசக்காமலே தெளிவாகத் தெரியும் உபதேசங்கள்

கலக்குறீரு மன்சூர் பாய்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

பயனுள்ள ஒளித்தகவல்கள்

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Ebrahim Ansari சொன்னது…

கண் தொடர்பாக மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்.

தம்பி மன்சூர் ! கலக்குறீங்க என்று சொல்ல வரவில்லை நல்லா விளக்குறீங்க. பாராட்டுக்கள்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

அன்பு நண்பா,

இவ்வளவு ஆழமாகவும் அருமையாகவும் எழுதும் அளவுக்கு நீ கண் மருத்துவ நூல்களைப் படித்தாயா? அல்லது கண் மருத்துவரிடம் பணியாற்றினாயா? எனக்கு வியப்பாக இருக்கின்றது. இத்தனை அறிவாற்றலையும் .எழுத்தாற்றலையும். ஓவியக்கலையையும், ஒரு சேர உனக்கு அல்லாஹ் வழங்கி விட்டான்; அல்ஹம்துலில்லாஹ்!

கண்படப் போகுது ஐயா மன்னவனே!

sabeer.abushahruk சொன்னது…

மன்சூர் பாயை இந்தப் பக்கமே கண்மாசியமா காணலையே, மூக்குக் கண்ணாடியை காணா கீணா ஆக்கிட்டாரா?

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

முகத்திரண்டு கண்ணுடையாருக்கெல்லாம் கைகண்ட பலன்தரும் கட்டுரை !

இதை அகத்தில் புகுத்தி முகத்தில் கண்ணாடி இன்றி ஜெகத்தில் நீடூழி வாழ்வோமாக!

S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்.

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

கலங்கிய கண்களை துளங்க வைக்கும் தொடர் !
கண்கள் பற்றியும் அதற்க்கு தொடர்புடைய இதர அங்கங்கள் பற்றியும் தரும் விளக்கம் கண்ணுடையார் எல்லோர்க்கும் பயன் விளக்கம்..

S.முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு